கட்டுரை/நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை/நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூன், 2019

நூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36

ன் குடும்பப் பின்னணியை இதுகாலமும் வெளிப்படுத்தாமல் தவிர்த்தே வந்திருக்கிறேன். நினைவலைகள் எனும் பகுப்பின் கீழ், கூட்டுக் குடும்பமாக நாங்கள் வளர்ந்த விதத்தைப் பற்றி மட்டும் ‘திண்ணை நினைவுகள்’ போன்ற சில பதிவுகளில் சொன்னதுண்டு. 

திரு. ஏ. ஆர். சண்முகம் அவர்கள்
தாத்தா திரு. எம். சோமசுந்தரம் அவர்கள்

பெரிய தாத்தா திரு. ஏ. ஆர். சண்முகம் அவர்கள் (தாத்தாவின் தாய்மாமா)
, என் தாத்தா (அப்பாவின் அப்பா) திரு எம். சோமசுந்தரம் அவர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டு உயர்ந்த ‘லயன் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனம் இவ்வருடம் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் வேளையில் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் பதிவு, எப்போதும் போலவே உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும்.. தூறல்: 36_ல்!



திருநெல்வேலியில் தற்போது ‘லயன் பஸ் சர்வீஸ்’ ஆக இயங்கி வரும் ‘லயன் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனம் குறித்து சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு சங்கம் தனது இதழுக்காகத் தயாரித்த குறிப்பு இணையத்தில் வெளியாக, அடுத்த சில தினங்களில் நெல்லை-தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்களால் உலகெங்கிலும் பகிரப்பட்டு வைரலாக வலம் வந்தது மக்கள் கொண்டிருக்கும் அபிமானத்தைக் காட்டியுள்ளது. பல ஊர்களில் நாடுகளில் வசிக்கும் எனது பள்ளி, கல்லூரி தோழியர், தங்கையரின் தோழியர் எங்களுக்கே இதை கடந்த சில தினங்களில் பலமுறை வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்கள்.

உலகை வலம் வந்த செய்திக் குறிப்புகள் (படங்கள் நான் இணைத்துள்ளேன்):

யன் ஆட்டோமொபைல் சர்வீஸ் கம்பெனி, திரு ஏஆர் சண்முகம்  அவர்களால் எட்டு நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஒரு பேருந்துடன் 1919 ம் வருடம் திருநெல்வேலி ஜங்ஷனில் ஆரம்பிக்கப்பட்டது. அதுமுதல் அவருடன் பணியாற்றி வந்த அவரது மருமகன் திரு எம் சோமசுந்தரம் அவர்கள் 1930 ல் அவரது பங்குதாரர் ஆனார்.

கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் கிளைகளுடன் இயங்கி வந்த இந்நிறுவனம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 21 வழித்தடங்களில் 53 பஸ்களை தினம் 5,900 மைல்கள் இயக்கி வந்தது.

அகில இந்திய விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 ல் அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் அமல்படுத்திய பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு.

தொழிலாளர்கள் நலனைப் பேணுவதற்காக 1960களிலேயே நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் லயன் மோட்டார் தொழிலாளர்கள்  சங்கம் உருவாக்கப்பட்டது.

நிர்வாகம் பத்து வருட பணி நிறைவு செய்த தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் HMT கைக்கடிகாரம் பரிசளித்து கெளரவப்படுத்தி வந்தது.

தொழிலில் அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி அரசின் நன்மதிப்பை பெற்ற இதன் பங்குதாரர்கள், வருமானவரித்துறையின் அதிக வரி செலுத்துவோர் பட்டியலிலும் தவறாது இடம் பெற்று வந்தனர்.

தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு  பெருமளவில் நிதி வழங்கி வந்ததோடு கல்வி, சமூக, ஆன்மீக பணிகளிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தனர்.

திரு ஏஆர் சண்முகம் அவர்கள் நெல்லை மதிதா இந்துக் கல்லூரி கல்விச் சங்கம், கோ-ஆப்பரேட்டிவ் அர்பன் பேங்க், ரோட்டரி கழகம், டிஸ்ட்ரிக்ட் கிளப், சிவசைலம் அத்திரி ஆசிரமம், சாலை குமாரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக கமிட்டி ஆகியவற்றில் தலைவராகவும், சௌத் இந்தியா பேங்க் - ல் இயக்குனராகவும்  திறம்பட செயலாற்றியுள்ளார்.

திரு எம் சோமசுந்தரம் அவர்கள், பெருமாள்புரம் வீட்டுவசதி சங்கம், ஸ்கவுட் மாஸ்டர்,  ரோட்டரி கழகம்,  ப்ரீமேசன்ஸ் லாட்ஜ், நெல்லை சங்கீத சபா, திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றில் பல முக்கியப்  பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட், சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இயக்குனராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.



திரு எம்ஜிஆர் சிறுசேமிப்புத் துறை தலைவராக 1967 ல் பதவி வகித்த போது மாவட்ட சிறுசேமிப்பு பிரச்சாரக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு திறம்படச் செயலாற்றியுள்ளார்.

தற்சமயம் மூன்றாம் தலைமுறையினரால் நடத்தப்படும் இந்நிறுவனம் 11 வழித்தடங்களில் 17 பேருந்துகளுடன் தினம் 5000 கிலோமீட்டர் இயக்கப்பட்டு சுமார் 12,000 பயணிகளுக்கு சேவையை வழங்கி வருகிறது. 

நிறுவனர்களின் ஆசியோடு நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் இதன் பின்னணியில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பினையும், பொது மக்களின் ஆதரவையும் இந்நிறுவனத்தினர் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

தைத் தொடர்ந்து மக்களால் பகிரப் பட்டிருந்த அடுத்தக் குறிப்பு...

திருநெல்வேலி - தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கி வருகிற பேருந்து  பற்றி..


LION BUS SERVICE


படத்தில் சக்கரத்துக்கு இடப்பக்கம் பெரிய பெரியப்பா திரு முத்துவேல் அவர்கள்
சக்கரத்துக்கு வலப்பக்கம் அப்பாவின் மாமா திரு. கோமதிநாயகம் அவர்கள்
அவருக்கு அடுத்து சின்னப் பெரியப்பா திரு சுப்பிரமணியம் அவர்கள்


ந்த நிறுவனமானது வெற்றிகரமாக 100 வது ஆண்டில் தடம் பதிக்கிறது. 



லாபத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மக்களுக்காக பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்தை வடிவமைத்துள்ளது இந் நிறுவனம்.

சாதாரண பேருந்துகளில் 55+2 இருக்கைகள் இருக்கும். இப்பேருந்தில் 50+2 இருக்கைகள் மட்டுமே.



மேலும் இப்பேருந்தின் சிறப்பம்சம் திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இடை நில்லா பேருந்து. 

பயணிகள் சவுகரியமாக பயணிக்க இருக்கைகள் அனைத்தும் கூடுதல் டிகிரி சாய்வு கோணத்தில் அமைக்கபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி

AIR SUSPENSION
FREE WIFI
MOBILE CHARGER
NEWS MAGAZINES
VOICE ANNONCEMENT( பேருந்து நிறுத்துமிடம் அறிய)

WEIGHING SCALE (எடை பார்க்கும் கருவி)

MORE LEG ROOM (கால் நீட்டி மடக்க அதிக இடவசதி இதன் காரணமாக இருக்கைகள் குறைவு)

CCTV 

ANTILOCK BRAKING SYSTEM 

AUTOMATIC DOOR  (தானாக திறந்துமூடும் கதவுகள்)
என சகல வசதிகளுடன் வடிவமைக்கபட்ட பேருந்து.”
----

(மேற்கண்ட பேருந்தினைப் பல கோணங்களிலும் படமாக்கித் தொகுப்பாக வாட்ஸ் அப்பில் வலம் வரச் செய்ததும் 
நிறுவனத்தின் மேல் அபிமானம் கொண்ட ஒரு பயணியே.) 

து போன்ற பதிவுகளில் பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிந்துள்ளார்கள்.



FB - Fans of Tirunelveli குழுமத்தில் ஒரு பகிர்வு:



அரை நூற்றாண்டு வயதைக் கடந்த பலரும் தம் அந்நாளைய நினைவுகளை அனுபவங்களை வாழ்த்துகளோடு அனுப்பியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு இரண்டு:
FB_யில்..

WhatsApp_ல்..
* “னது உளங்கனிந்த வாழ்த்துக்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னர் நம் ஊர்களின் சாலை வசதி எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் மிகச் சரியாகத் திட்டமிட்டு அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் முழுமைக்கும் பேருந்து சேவை புரிந்து வந்துள்ளனர்.திருநெல்வேலி தலைமையிடமாக வைத்து, கோவில்பட்டி, தூத்துக்குடியில் Shed அமைத்து அனைத்து தாலுகாக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, காடல்குடி, இலட்சுமிபுரம், இராமச்சந்திரபுரம், பூதலாபுரம், சிவகிரி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், ஸ்ரீவி, மாசார் பட்டி, குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், சிவகளை , ஏரல், சாத்தான்குளம்,கடலையூர், கழுகுமலை என பரந்து விரிந்து தனது சேவையை ஆற்றி வந்துள்ளனர். இதில் கேள்விப்படாத ஊர்களெல்லாம் உள்ளது. அந்த ஊர்களில் Night Halt Bus உண்டு. அருகருகே அமைந்த ஊர்களாகத் தான் இருக்கும். எ. கா - க காடல்குடி, இலட்சுமிபுரம், இராமச்சந்திரபுரம் பூதலாபுரம் போன்ற ஊர்கள் ஒரே area .அவர்களின் திட்டமிடல் நேர்த்தியாக இருந்துள்ளது.அரை நூற்றாண்டு வயதாகும் எனக்குத் தெரிந்த குறைந்த விசயங்கள் இவை. என்னிலும் மூத்தவர்கள் இதை விட அதிகமான செய்திகள் தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் எனக்குத் தெரிந்த ,அனுபவித்த விசயங்களை பகிர்ந்துள்ளேன். _ லயன் பஸ் கம்பெனி இன்னும் பல்லாண்டு தனது சேவையை சிறப்பாகத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.🙏🙏🙏”

---


1982_ஆம் ஆண்டில் பேருந்தை நிறுத்தி இறக்கையில் அடிபட்ட புறாவுக்கு முதலுதவி செய்து பறக்க விட்டதாக, கண்டக்டரைப் பாராட்டி எழுதியிருந்தார் FB_யில் மற்றொருவர். என் சித்தப்பாவின் மூலம் அறிந்த இன்னொரு தகவல், பல பத்தாண்டுகளுக்கு முன், பிரசவ வலி எடுத்த பெண்ணை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுகப்பிரசவம் ஆன கதை. அந்த வீட்டினர் பேருந்தின் படத்தைத் தங்கள் வீட்டில் மாட்டி வைத்திருந்தார்கள் என்பது கூடுதல் செய்தி.


***
க்கள் சேவையில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினருடன் அந்நாளைய மந்திரிகளும் நல்ல உறவு முறையில் இருந்திருக்கிறார்கள். கீழ்வரும் படங்கள் முதலமைச்சர்கள் அந்தந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி வந்த போது எடுக்கப்பட்டப் படங்கள்:


முன்னாள் முதலமைச்சர்களுடன்.. 

#1
முன்னாள் முதலமைச்சர் திரு இராஜாஜி அவர்களுடன்..

இரண்டாம் வரிசையில் பின் இருக்கையில் தாத்தாவும்
வலப்பக்கப் பின் இருக்கையில் பெரிய தாத்தாவும்

#2
1963_ல் இந்தியா-சைனா போரின் போது போர் நிவாரண நிதிக்காக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரிடம் என் பெரியப்பா, அத்தைகள் மற்றும் அக்கா ஒரு பவுன் தங்கக் காசு வழங்குகிறார்கள்:

#3
சிவசைலத்தில் ஒரு அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் திரு பக்த்வசலம் அவர்களுடன்..
நடுவில் அமைச்சர். இடப்பக்கம் தாத்தாக்கள் இருவரும்.
வலப்பக்கக் கடைசியில் என் ஆச்சி ராமலக்ஷ்மி அவர்கள்.

#4
முன்னாள் முதலமைச்சர் திரு அண்ணாதுரை அவர்களுடன்...
தாத்தாக்கள் இருவரும்..

#5
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களுடன்..
மாலை அணிவித்து வரவேற்கிறார் அப்பாவின் மாமா திரு பொன்னுச்சாமி அவர்கள்..
இடப்பக்கம் புன்சிரிப்புடன்  தாத்தா


கலைஞருடன் தாத்தா அமர்ந்திருக்க
அருகே நிற்பது அப்பா திரு சண்முகம் அவர்கள்

#6
முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி,ஆர் அவர்களுடன்.. தாத்தா..


திரு MGR மற்றும் தாத்தா நடுவில் அமர்ந்திருக்க தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள் இருபுறமும் கால்மேல் கால் போட்டு வீற்றிருக்கார்கள்.  அந்நாளில் தலைவர்களுக்கு இருந்த புரிதலையும், அதிகாரிகளுக்கு இருந்த சுதந்திரத்தையும் பார்க்கையில் பின்னாளில் தமிழகத்துக்குள் நுழைந்த காலில் விழும் கலாச்சாரம் நினைவுக்கு வந்து போகிறது இந்தப் படத்தைக் காணுகையில்..



#7
முன்னாள் முதலமைச்சர்கள் அறுவருடன் இருக்கும் படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக கீழ்வரும் படங்கள். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தாத்தா 1983_ல் காலமாகி விட்டிருந்தார்கள். மேலும் கடைசி சில வருடங்கள் அதிக வெளியுலகத் தொடர்புகள் இன்றி ஓய்வில் இருந்தார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் நிறுவனத்துடன் ஏதோ ஒரு வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும்..



திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில்.. ‘ராஜா’ திரைப் படத்தில்.., லயன் ஆட்டோமோபைல்ஸ் பேருந்திலிருந்து இறங்கும் காட்சி...


***
ரின் முக்கிய மனிதர்கள் பலரும் தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கும் வந்து செல்வார்கள்.  ‘பாலஸ் டி வேல்ஸ்’ திரையரங்கை நடத்தி வந்த வகையில் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் வந்ததுண்டு. ஜெமினி பிக்ஸர்ஸ் தயாரித்த படங்கள் அங்கே மட்டுமே திரையிடப்பட்டதால் ஆனந்த விகடன் திரு வாசன் குடும்பத்தினர் மற்றும் அவரது மகன் திரு பாலன் ஆகியோரும் வந்திருக்கிறார்கள். தியேட்டர் பற்றி என் சித்தப்பா திரு வடிவேல் முருகன் அவர்கள் தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்று: ஜெமினியும் நாங்களும் 


தன் அலுவலக அறையில்
தாத்தா திரு சோமசுந்தரம் அவர்கள்

பதவியேற்கும் மாவட்ட கலெக்டர்கள் தாத்தாவை வந்து முதலில் சந்தித்துச் செல்வார்கள்களாம். எனக்கு விவரம் தெரிந்த வயதில் நீதிபதிகள் மற்றும் கலெக்டர் குடும்பத்தோடு வந்து பார்த்திருக்கிறேன். கலெக்டர் கொடியேற்றும் குடியரசு தின, சுதந்திர தின விழாக்களுக்கு தாத்தாவுடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்திருப்போம். அவ்வளவே நினைவில் உள்ளது. மற்றபடி இது போன்ற விவரங்கள், முதலமைச்சர்களுடனான புகைப்படங்கள் ஆகியன தாத்தாவின் காலத்துக்குப் பிறகே அத்தைகள், அம்மா, பெரியம்மா, சித்தப்பா ஆகியோர் கூறியே எங்களுக்குத் தெரியும்.



அதாவது, ஊரில் முக்கிய நபராக இருந்தாலும் பேரக்குழந்தைகள் நாங்கள் அவரைப் பாசமான தாத்தாவாக மட்டுமே அறிந்திருந்தோம். உழைப்பால் உயர்ந்த மனிதரான தாத்தாவிடம் எந்தவொரு தீய பழக்கமும் கிடையாது. தர்ம சிந்தனை, தன்னடக்கம், பொறுமை நிறைந்தவர். அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்ட பண்புகள் பல. எதிலும் ஒழுங்கு, நேர்த்தி, பெரியவர்களை மட்டுமின்றி எளியவர்களையும் மதித்தல், எந்த ஒரு பொருளையும் பத்திரமாகப் பயன்படுத்துதல், பாதுகாத்தல் (அடிக்கடி இதை என் சிறுவயதில் வலியுறுத்தியிருக்கிறார்கள்). 

ஒரு நிறுவனம் அதை வளர்த்து விட்டவர்களுக்குச் செய்யும் மரியாதை அதைத் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை நிலை நாட்டுவதுதாம். அந்த வகையில் லயன் நிறுவனம் நூற்றாண்டைத் தொட்டிருப்பது முன்னோரின் ஆசியும், முன்னெடுத்துச் செல்லும் மூன்றாம் தலைமுறையினரின் உத்வேகமுமே. மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான சேவை தொடரட்டுமாக!
**
இந்தப் பதிவின் Facebook  பகிர்வில் ‘இங்கே
 வாழ்த்தியிருப்பவர்களுக்கும் நன்றி
***

ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருக்கார்த்திகை தீபங்களும்.. பண்டிகை நினைவுகளும்..

#1
ஓம் அருணாச்சலேஸ்வராய நமக!

வ்வொரு பண்டிகைக்குப் பின்னும் புராணக் கதைகளும், காரணங்களும்  கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார வழக்கங்களும், மரபுகளும் உள்ளன. முந்தைய தலைமுறையினரை போல அவற்றை மிகச் சரியாக இன்று நாம் பின்பற்ற முடிவதில்லைதான். ஆனாலும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடங்களில் முடிந்தவரை சிலவற்றையாவது பின் பற்றி வருவது ஆறுதலான ஒன்றே.

#a
ஒரு திருகார்த்திகை அன்று.. 
வீட்டு ‘மணவட’ முன்பு..
ல்லாப் பண்டிகைகளும் சிறுவயது நினைவுகள் இல்லாமல் கடந்து போவதில்லை. திருக்கார்த்திகைக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போதே

சனி, 23 செப்டம்பர், 2017

ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்..

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண ஹனுமன்
ழிவழியாய் மக்கள் வருடந்தோறும் கொண்டாடும் நவராத்திரியில் கொலு வைப்பதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி எனத் தேவியரைப் போற்றும் இறை வழிப்பாட்டைத் தாண்டியும் சில முக்கியக் காரணங்கள் இந்தக் கலாச்சாரத்திற்கு இருந்திருக்கிறது.

ஒன்று, கல்வி. கொலு அலங்காரங்கள், பொம்மைகள் அடுக்குதல் என்பதில் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஈடுபடுவார்கள். முக்கியமாகக் குழந்தைகள் குதூகலத்துடன் தங்களால் இயன்றதைச் செய்வார்கள். அவர்களுக்கு கொலுப் பொம்மைகளின் மூலமாகவே நமது இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், கலாச்சாரங்கள், பொது அறிவு எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் பண்டிகையாக அமைகின்றன நவராத்திரி கொலுக்கள். அவரவர் வீட்டுப் பொம்மைகள் மட்டுமின்றி செல்லுமிடங்களில் காணும் பொம்மைகளைப் பற்றி கேட்டறிந்து அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவின.

#2
தசாவதாரம்
அடுத்து,

வியாழன், 14 பிப்ரவரி, 2013

உப்புத் தாத்தா

#1 
உப்பு உப்போய்... கோலப்பொடி! உப்பு உப்போய்... கோலப்பொடி” எனக் குரல் கொடுத்தபடி வெள்ளிக்கிழமைகளில் இருமுடி கட்டிய மாதிரி தலையில் இரண்டையும் சுமந்து வருகிற பழனித் தாத்தாவை நெல்லை வீதிகளில் உங்களில் யாரேனும் பார்த்திருக்கவும் கூடும். சிறு வியாபாரிகளுக்கும் அவர்களிடம் வாடிக்கையாய் வாங்குகிற வீட்டினருக்கும் ஒரு காலத்தில் இருந்த பந்தங்கள் நகர வாழ்வில் காண அரிதானதென்றால் சிறுநகரங்களிலும் வந்துவிட்டுள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகளால்  இந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

செவ்வாய், 20 மார்ச், 2012

கூடு இங்கே குருவி எங்கே..

ல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் இன்று எங்கே போயின? நம்புங்கள் அவற்றை நான் கண்ணால் கண்டு ஆயிற்று ஆண்டுகள் பல.

sparrow nest
இந்தக் கூடு நான் பார்த்து வளர்ந்த சிட்டுக் குருவிகள் கட்டியதில்லை. தங்கை வீட்டு மாடித்தோட்டத்தில் புள்ளிச் சில்லைகள் கட்டிய ஒன்று. 

சின்ன வயதில் எங்கள் வீட்டின் உள் முற்றத்துத் தூண்கள் இரண்டுக்கு நடுவே சின்னப் பரண் அமைத்திருந்தார்கள் குருவிகளுக்காக. வைக்கோல்களைக் கொண்டு வந்து அழகாகப் பரத்தி அப்பரணைத் தங்கள் கூடாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. தாய்க்குருவியும் குஞ்சுகளும் குதூகலமாக எழுப்பும் சத்தம் முற்றத்தையும் மனதையும் நிறைக்கும். அம்மாக் குருவி இரைதேடச் சென்றிருக்கும் சமயம் தூணுக்கு அருகே எங்கள் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி,  தூணின் மேல்பகுதியை வளைத்துப் பிடித்துக் கொண்டு குஞ்சுகளை எட்டிப் பார்த்து ‘ஹலோ ஹாய்’ சொல்வது பிள்ளைகள் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை சிறகு முளைக்காத சின்னஞ்சிறு குஞ்சொன்று பரணிலிருந்து விழுந்து விட அந்தப் பட்டுக் குஞ்சினை செய்தித்தாளில் எடுத்து மீண்டும் தாத்தா கூட்டில் விட்டது நினைவில் நிற்கிறது. 

கதை கேட்டுச் சும்மா சும்மா நச்சரிக்கும் சின்னக் குழந்தைகளைக் கலாட்டா செய்ய, வயதில் பெரிய குழந்தைகள் வழிவழியாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு: பாயாசம் பருக ஆசைப்பட்ட குருவிகள் ஒரு பாட்டியிடம் போய் உதவி கேட்டனவாம். “சரி நீங்கள் எனக்கு நெல்மணிகளைக் கொண்டு வந்து தாருங்கள். அவற்றைத் திருத்தி அரிசி எடுத்து வெல்லப் பாயாசம் செய்து தருகிறேன்” என்றாராம் பாட்டி. அருகே ஒரு வீட்டு முற்றத்திலேயே நெல் அவித்துக் காய வைத்திருந்தார்களாம். அந்த வீட்டுக்கு முதலில் ஒரு குருவி வந்துச்சாம். ஒரு நெல்லைத் தூக்குச்சாம். ஒருவரும் விரட்டவில்லை என்றதும் தைரியமா ரெண்டு குருவி வந்துச்சாம் ரெண்டு நெல்லைத் தூக்குச்சாம். அப்புறம் மூணு குருவி வந்துச்சாம் மூணு நெல்லை...! நாலு குருவி... நாலு நெல்லை...!! கண் அகலக் கேட்டபடி இருக்கிற குழந்தைகள் அஞ்சு நெல்லைத் தூக்க அஞ்சு குருவி வருகிற போது முழுசா முழிச்சுக்கிட்டு முகம் சிவக்க அடிக்க வருவார்கள்:)! 

இன்று நமக்கு உணவு வேண்டுமே என விட்டு வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச வயல்களால் நெல் இருக்கு. உலகம் எனும் கூடு இருக்கு. குருவிதான் இல்லை:(! மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும். வனங்களை அழித்தபடி வாழும் நகரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தபடி உருவாக்கிக் கொண்டிருக்கும் கான்க்ரீட் காடுகளைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்வதாக முடிவே கட்டி விட்டோமா? 

என் அம்மா வீட்டுக்கு அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அலைபேசிக் கோபுரம் அமைக்க அந்த வீட்டினர் அனுமதி அளித்து அதற்காக ஒரு தொகையை வாடகையாகப் பெற்று வந்தனர். அப்போது வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. இது மனிதரின் உடல் நலனுக்கும் தீங்குதான். குடியிருப்புப் பகுதியில் இருக்கக் கூடாதென யாரும் புகார் செய்தார்களா அல்லது வேறு காரணமா தெரியவில்லை, இரண்டு வருடங்கள் முன் அந்தக் கோபுரம் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது. கோபுரத்திலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளே அவற்றை அதுகாலமும் நெருங்க விடாமல் செய்திருக்கின்றன.

**
 
இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

அழிந்து கொண்டிருக்கும் இவ்வினத்தைக் காத்து ஆரோக்கிய உலகினை அடுத்த தலைமுறைக்கு வழங்க 2010-லிருந்து மார்ச் 20ஆம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பதிவுலக நண்பர்கள் பலரும் இதுகுறித்து இன்று இட்டிருக்கும் பதிவுகள்: 1. குருவிகளின் தாகம் தணிக்கக் கோருகிறார் எங்கள் ப்ளாக், ஷோபனா. 2. அப்பாவிக் குருவிகளை அரவணைக்க அழைக்கிறார் எல்லாம் புகழும் இறைவனுக்கே, ஸாதிகா. சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன எனும் விபரங்களைச் சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட முயன்றிடும் இயற்கை ஆர்வலர் சங்கத்தைப் பற்றியத் தகவல்களும் தந்துள்ளார். 3. ‘பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை’ என வருந்துகிற எண்ணிய முடிதல் வேண்டும், ஷைலஜா சிட்டுக்குருவி குறித்து அழகான கவிதை ஒன்றையும் படைத்துள்ளார். 4. ‘மண்ணில் உயர்ந்த புள்ளின் இனமது!’ என அக்கக்கூக் குருவியைக் கொண்டாடுகிறார் நித்திலம், பவள சங்கரி 5. காணாமல் போன சிட்டுக்குருவிகளைத் திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆறுதலான செய்தியைத் தந்திருக்கிறார் மண், மரம், மழை, மனிதன் திரு. வின்சென்ட். 6. அழகுக் குருவிகளைக் காணவில்லையே என ஆதங்கத்துடன் காரணங்களை அலசுகிறார் மனதோடு மட்டும், கெளசல்யா. 7. நினைவுகளில் மூழ்கிச் சிட்டுக்குருவிகளைத் தேடுகிற திருமதி பக்கங்கள் கோமதி அரசு அவர்கள் ‘உன்னை மீண்டும் கண்டால் குழந்தையை போலக் குதூகலிப்பேன். அந்த நாள் மீண்டும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என்கிறார். 8. ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ எனத் தம் வருத்தத்தை அமைதிச்சாரலின் கவிதை நேரத்தில் வந்து தெரிவிக்கின்றன குருவிகள். 9. தங்கள் வீடே குருவிகளின் கூடு என்பதை மகிழ்வுடன் பகிரும் வேர்களைத் தேடி.. முனைவர். இரா. குணசீலன் . ‘குருவிகளும் வாழட்டுமே.. உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு..’ என்று கேட்கிறார். 10. அழகழகான குருவிகளின் படங்களுடன் அவை குறித்தத் தகவல்களையும் அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் மணிராஜ் இராஜராஜேஸ்வரி.
***

வெள்ளி, 25 நவம்பர், 2011

நாளை நமதே... - பள்ளி மேடை

முதல் முதலில் ஏறிய பள்ளி மேடை நெல்லை சங்கீத சபாவில் ‘நர்சரி’ (எல்கேஜி) வகுப்புப் படிக்கும் போது. குறி சொல்லும் பாடல் ஒன்று. எனக்குப் பெரிய வேலையில்லை. ‘தேமே’ எனக் கையை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்:)! ஆனாலும் பாருங்க, மேடைப்பயம் துளியேனும் இருக்கா என.

#

அடுத்து இரண்டாம் வகுப்பில் இருக்கையில் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ. பள்ளிக்கு விடுமுறை. ஆனால் நடனத்தில் சேர்ந்திருந்த சிறுமியர் நாங்கள் மட்டும் 5ஆம் வகுப்பு வரைக்கான சின்ன (லயோலா) கான்வென்டிலிருந்து ‘பெர்ரிய’(இக்னேஷியஸ்) கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதே ஒரு பிக்னிக் போலிருந்தது. அங்கே இரண்டு முறை ஒத்திகை முடிந்ததும் எல்லோருக்கும் மேக் அப் போட்டு விட்டார்கள். பிறகு அருகிலிருந்த வ.உ.சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நடனம் தொடங்கும் முன் வந்து அப்பா என்னை எடுத்த படமே இது:

#

நான்தான் ராதை என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். ‘தேமே’ லெவலில் இருந்துக் கொஞ்சம் கையைக் காலை ஆட்டத் தெரிந்ததால் ராதையின் தோழிகளுள் ஒருவராக ஸைடில் ஆடும் கூட்டத்தில் இருந்தேன். படத்துக்கு நல்லாயிருக்குமே எனக் கிருஷ்ணருடன் நிற்க வைத்து எடுக்கப்பட்டது!

ந்தாம் வகுப்பில் கொஞ்சம் முன்னேற்றம். க்ரூப் டான்ஸில் முதல் வரிசையில். சந்தோஷமாக இருந்தது ‘நல்லா ஆடுறோம் போலயே’ என்று(உண்மைக் காரணம் இரண்டு வருடம் கழித்துப் புரிந்தது). “லல்லி, லில்லி, ஜிம்மி, ஜிக்கி, லூசி, ரோஸி, ராணி’ என நாய்க்குட்டிகளை அழைக்கும் பாடலின் இந்த முதல்வரி மட்டுமே இப்போது நினைவில் உள்ளது. அதன் பின் அப்பாடலை வாழ்நாளில் கேட்டதேயில்லை. நடனத்துக்காகப் பத்து பேருக்கும் ஒரே மாதிரி மஞ்சளில் பெரிய பெரிய பூக்கள் போட்ட கவுன் தைத்திருந்தார்கள். 20 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள்.

அதே வருடம் நான் நடித்த நாடகம் திருவிளையாடல். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பையும் ரோஸ், லில்லி, லோட்டஸ், ஜாஸ்மின் என நான்கு க்ரூப்களாகப் பிரித்திருப்பார்கள். போட்டிகள் எல்லாமே இந்த க்ரூப்புகளுக்குள்ளேயேதான் நடக்கும். நான்காம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை ஒவ்வொரு க்ரூப்பும் ஓரணியாய் திரளும். அந்த வருடம் நாடகப் போட்டி.

ரோஸ் அணியின் தேர்வு ‘திருவிளையாடல்’. ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் மலையேறும் முருகனாக எனக்கு வேடம். ஜிலுஜிலு பட்டுடை அணிந்த முருகனை அப்படியே ரீப்ளேஸ் செய்யணும் காவி உடையணிந்த முருகன். மலைமேல் ஏறிவிட்ட என்னை சமாதனப்படுத்த முடியாமல் தோற்று ஒளவை போனதும், பார்வதி வந்து “உன்னை மட்டுமா சோதித்தார். ஈசன் என்னையே சோதித்தார்” என தாட்சாயிணி கதையைக் கூறி மனதை மாற்றுவதாய் நாடகம் முடியும். “மூத்த பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை எனக் காட்டி விட்டீர்கள்” என்பதை ஒத்திகையின் போது ஈனஸ்வரத்தில் முனகினால் யாருக்குதான் கோபம் வராது?

ட்ராயிங் ‘மிஸ்’தான் டைரக்டர். சும்மவே கண்டிப்பு. சொல்லிச் சொல்லிச் சலித்து ஒருநாள் “இன்று நீ சரியாக பேசவில்லையென்றால் இவள்தான் முருகன்” என பி செக்‌ஷன் செளமினியைக் கூட்டி வந்து விட்டார். சீனியர் அக்காக்கள் எல்லோரும் தனியே அழைத்துச் சென்று ‘நல்லா செய். சத்தமா சொல்லு. இல்லேன்னா நீ அவுட்டு. ட்ராமாவுல இல்லே”ன்னு பயங்காட்டி உற்சாகப்படுத்த, வந்தது வீரம். விட்ட சவுண்டில் முதல் டேக்கில் ஓக்கே சொல்லி விட்டார் டைரக்டர் மிஸ். அலெக்ஸாண்டர் நாடகம் முதல் பரிசும், நாங்கள் இரண்டாவதாயும் வந்தோம் என்றாலும் என் இந்தக் கேரக்டரை சீனியர் அக்காக்கள் மறக்கவே இல்லை. பின்னாளில் எனக்குப் பிரசவம் பார்த்த டாக்டரின் மகள் அப்போது 10ஆம் வகுப்பில் இருந்தார். பிரசவத்துக்கு அம்மா வீடு வந்து நான் செக் அப்புக்காக டாக்டர் அறையில் நுழைந்த போது தன் அம்மாவுடன் இளம் மருத்துவராக அமர்ந்திருந்தவர் “அடடே நீயா, வா முருகா வா” என்றார்!

தே போல மறக்க முடியாத நடனமாக ஆறாம் வகுப்பில் ஆடிய நாளை நமதே படத்தின் ஃப்ளாஷ் பேக் பாடலாகிய ‘அன்பு மலர்களே’ பாடல். அதில் கடைக்குட்டி பாடுவதாக இரண்டு வரி குழந்தைக் குரலில் வரும். ஆரஞ்சில் வெள்ளைக் கட்டம் போட்ட பெல்பாட்டம் வாங்கப்பட்டது. அதில் இருந்த கஃப் கை நான் பையனாகத் தோன்ற வேண்டுமென்பதால் ரப்பர் பேண்ட் போட்டு அமுக்கப் பட்டது. குழந்தைகளாக நாங்க ஒரு மூணுபேர், அப்பா அம்மாவாக ஆடிய சீனியர் அக்காக்களுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு படத்தில் வருவது போலவே சுற்றிச் சுற்றி ஆடினோம். சும்மா எனது அந்த ரெண்டு வரி குழந்தைக்குரல் வாயசைப்புக்கு நல்ல கைதட்டல். வருடங்கள் கடந்து என் மகனுக்கு ஆறேழு வயதாக இருக்கையில் பெங்களூர் டு சென்னை லால்பாக் சேர்காரில் போய்க் கொண்டிருந்தேன். ‘ஹலோ நாளை நமதே, என்னைத் தெரியுதா?” என்றார் எதிர் சீட்டிலிருந்து ஒரு சீனியர் அக்கா.

அப்புறம் ஏழாம் வகுப்பில் மியூசிக் மட்டுமே இருக்கிற வெல்கம் டான்ஸில் இரண்டு முறை முதல் வரிசையில் நிற்க வைத்த போதுதான் புரிந்தது, குட்டையாய் இருப்பவரை முன்னால் போடுவார்களென:)! அதே வருடம் ஒரு ஹிந்தி மற்றும் மலையாளப்பாட்டுக்கும் ஆடினேன். பிறகு நடனத்தில் சேரும் விருப்பம் போய் விட்டது. ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் நழுவி விடலானேன்.

ல்லூரியில் மேடை அனுபவம் கவியரங்கங்களாயின. (தமிழாசிரியைகள் மாறிமாறி ஒவ்வொரு வருடமும் தரமுயன்ற நாடக வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்தேன்). சுற்றுலாவுக்கு அனுப்பத் தயங்கும் அம்மா எந்த இண்டர் காலேஜ் போட்டி நிகழ்வுகளுக்கும் அனுப்பத் தயங்கியதில்லை. சதக் அப்துல்லா கல்லூரி கவியரங்கம், சேவியர்ஸ் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகள் நடத்திய ஆன் தி ஸ்பாட் கதை, கவிதை போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. பெரும்பாலும் சமூகம் சார்ந்தவைகளாகவே எழுதி வந்தேன்.

ஒருமுறை எங்கள் கல்லூரியில் அடுத்த நிகழ்ச்சி தயாராகச் சற்றுத் தாமதமாகவே முதல் பரிசு பெற்ற என் சிறுகதையைக் கையில் கொடுத்துத் திடுமென மைக் முன் தள்ளி விட்டு விட்டார் தமிழாசிரியை, இடைப்பட்ட நேரத்தை நிரப்ப. வேறு வழியின்றி சுதாகரித்துக் கொண்டு கதையை வாசிக்க ஆரம்பித்ததும் சளசளவென அளவளாவிக் கொண்டிருந்த அரங்கு அப்படியே ஊசி விழுந்தால் கேட்கும் அமைதிக்கு வந்து விட்டிருந்தது. இலங்கை வானொலியில் சிறுகதைகளைக் கேட்டு ரசித்த அனுபவமே அப்போது கை கொடுத்தது.

டிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்று. முக்கியமாகச் சொல்ல வந்த இயக்கம் பற்றிப் பார்ப்போம். மீண்டும் பள்ளிப் பருவத்துக்கு வருகிறேன். வீட்டில் என்னுடைய கொரியோகிராஃபிக்கு தங்கைகள் ஆடிய நடனங்கள் (முற்றத்து ‘மணவட’ மற்றும் பாட்டாலையிலிருந்த தாத்தாவின் தேக்குக் கட்டிலே மேடை) எப்போதும் விருந்தினரால் பாராட்டப்பட்டது அன்பினால் மட்டுமே எனப் புரிய வராத வயது அது.

ஆறாம் வகுப்பில் அதே வருடம் நான் ஆடிய ‘அன்பு மலர்களே’ பாடலையே இன்டர் வகுப்புப் போட்டிக்கு எடுத்துக் கொண்டோம். நடன அமைப்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள் தோழியர் என் மேடை அனுபவத்தால். குடும்பப் பாட்டாக இல்லாமல் நடுவில் ஒரு பெண் ஆட இரண்டு பக்கமும் மூன்று மூன்று பேர் ஆடும் குழுநடனமென முடிவாயிற்று. ஓபனிங் சீன். நடுவில் ஆடும் சிறுமி குனிந்து அமர்ந்திருக்க, மற்றவர் சுற்றி அமர்ந்து மொட்டு போல மூடியிருக்க “அன்பு மலர்களே” ஒலிக்கையில் மொட்டு விரிந்து, பாடியபடியே நாயகி வெளியே வரவேண்டும்.

நிச்சயம் இந்தக் காட்சிக்கு நல்ல கைதட்டல் கிடைக்குமென்றெல்லாம் பேசிக் கொண்டோம். ஒத்திகைக்கும் ஆர்வமாக ஒத்துழைத்தார்கள். பள்ளிக்கு எதிர் வரிசையில் இருந்த தோழியின் வீட்டுக்குக் கும்பலாகப் போய் தினம் ரெகார்ட் ப்ளேயர் எடுப்பதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையாயிற்று. நிகழ்ச்சிக்கு முன் தினம் மாலை வகுப்புத்தோழியின் அக்காவைக் கருத்துக்காக அழைத்திருந்தோம். அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.

த்தோடு என் கொரியோக்ராஃபி ஆசைக்கு வைத்தேன் முற்றுப்புள்ளி (எந்த விஷயத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து முயன்றிடும் உந்ததல் இருக்கும் என்பதை இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது). முதல் காட்சியும் நீக்கப்பட்டது. “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”ன்னு இருந்தது ஏழாம் வகுப்பில் தேடி வந்த டைரக்டர் போஸ்ட்.

ரோஸ், ஜாஸ்மின் ஓரணியாக; லில்லி, லோடஸ் ஓரணியாகப் பிரிந்து இன்டர் க்ரூப் போட்டி. தமிழ் பாடத்தில் வந்த குமண வள்ளல் நாடகத்தையே இரண்டு க்ரூப்பும் போட வேண்டும். பாடத்தின் நீட்சியான க்ளைமேக்ஸையும் நாடகத்தில் சேர்க்க வேண்டும். தன்னிடம் நாட்டைக் கொடுத்து விட்டு காடு சென்ற விட்ட வள்ளலைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்கணும் தம்பி (இதில் தகவல் பிழை இருந்தால் பொறுத்தருள்க, இப்படிதான் ஞாபகம்). சின்ன நோட்டுப் புத்தகத்துக்கு இரண்டு பக்கம் வருமாறு மாங்கு மாங்கென வசனம் எழுதியிருந்தேன் தம்பிக்கும் அண்ணனுக்குமான வசனங்களை.

#
இதுல வசந்தலக்ஷ்மி, சித்ரா, லதா, ஜாக்குலின் எல்லாரும் இருக்காங்க.
மேலிருந்து இரண்டாவது வரிசையில்
இடமிருந்து இரண்டாவதாக நானும்..


குமணராக நடித்தத் தோழி லதா ஒத்திகையின் போது செய்த பிகு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்குப் பிடிக்காத ஜாக்குலின் ஒத்திகை ஸ்பாட்டில் இருந்தால் நடிக்க மாட்டேன் எனச் சொல்ல, எல்லோருக்கும் காஸ்ட்யூம் ஏற்பாடு செய்திருந்த ஜாக்குலின் வெளிநடப்புச் செய்ய, கண்ணை கட்டி விட்டது எனக்கு.

நாடக நாளும் வந்தது. ஆடிட்டோரியத்தில் 7-ஏ பிள்ளைகள் மட்டும் ஒரு மாலையில் கூடியிருக்க, க்ளாஸ் டீச்சர் ‘கோதை ஆண்டாள் மிஸ்’ஸுடன், சி செக்‌ஷன் மிஸ் நடுவராக வந்திருந்தார். நீண்ட வசனக் கடைசிக் காட்சியுடன் எங்கள் நாடகம் முடியக் கிளம்பிய கைத்தட்டல் நிம்மதியைத் தந்தது.. அதில் எண்பத்து இரண்டே முக்கால் சதவிகிதச் சத்தம் எங்கள் க்ருப் பிள்ளைகள் எழுப்பியது எனத் தெரிந்திருந்தாலும்.

லோட்டஸ் - லில்லி கூட்டணி நாடகத்தை ஆரம்பித்தது. க்ளைமேக்ஸும் வந்தது. குட்டை வசந்த லக்ஷ்மிதான் குமணர். தம்பியாக நடித்த நெடுநெடு உயரச் சித்ரா பட்டுத் துணி தரையில் புரள “அண்ணாஆஆஆ...” என ஓடி வந்து குமணரின் காலில் விழுந்தார். தொட்டுத் தூக்கிய வள்ளல் உணர்ச்சி பொங்கத் “தம்பீஈஈஈ..” எனத் தழுவிக் கொண்டார். சுபம். கைதட்டல் ஆடிட்டோரியத்தின் கூரையைப் பிளந்தது. திரும்பிப் பார்த்தால் எங்கள் ரோஸ் - ஜாஸ்மின் க்ரூப் பிள்ளைகள்தான் தம்மை மறந்து வாயெல்லாம் பல்லாக அதிக உற்சாகத்துடன் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

திங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.

சென்ற மாதம் போலன்றி சற்று முந்நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன். அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.

1. சித்திரைப் பெண்


அடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:)! பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில், நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:

2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..


3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்போகும்..

சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.

கடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.

சிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌துவே. ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண்ணிய‌க் கண‌க்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)!

மனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்?

நிலாச் சோறு நினைவுகள்:

சின்ன வயதில் நாங்கள் வசித்த திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திருக்கும். [படம்:4]

பெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.

சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.

ஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாடல்களைக் கசிய விடுவாள்.  நேர் எதிரே பரந்து விரிந்து நிற்கும் (பிள்ளையார் கோவில்) அரச மரத்திலிருந்து எண்ணற்றப் பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.
4. கூரைப்படி
இதோ இந்தக் கூரைப் படிகளில் (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!

அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.

பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.

நானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.

து ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

இனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்!

அப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)!

*** *** ***

வெள்ளி, 31 டிசம்பர், 2010

தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்.. - 2010_ல் முத்துச்சரம்

ஆய கலைகள் அறுபத்து நான்கு. எழுத்து, புகைப்படம், ஓவியம், நடனம், இசை, சமையல் என எந்தக் கலையானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தோமானால் அதைவிடச் சிறந்த தியானம் வேறில்லை என்றே தோன்றும். ஆழ்கடலின் அடிதொட்டு வந்தாலும் கையுக்குள் கிடைப்பது ஒரு முத்தாகவே இருக்கும். தேர்ச்சி பெற்று விட்டோம் என எண்ணி விட்டால் தேங்கி நின்று விடுவோம். முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா:)?

எனக்கும்... ஒரு மயக்கம்...’ எனும் தனது 199-வது பதிவில் தோழி கவிநயா நடனக் கலை மீதும் எழுத்தின் மீதும் தனக்கிருக்கும் மயக்கத்தை அழகாய் சொல்லியதோடு தொடர்பதிவாக அதை எடுத்துச் செல்ல வேண்டுகோளும் வைத்திருக்கிறார் இங்கே.

நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர், தனது 200-வது பதிவினைக் கடந்து விட்டுள்ளார் சமீபத்தில். இன்று போல் என்றும் அழகிய தமிழில் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து தந்து கொண்டேயிருக்க அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

அடுத்து நம்ம விஜி "2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ பற்றி தொடருமாறு அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார் இங்கே.

இருவரின் அழைப்புக்கும் ஏற்றவகையில் பகிர்ந்திட என்னிடம் எண்ணங்கள் இருக்கவே இந்தப் பதிவு, பேனாவையும் காமிராவையும் சார்ந்த கலைகளை முன் நிறுத்தி..:)!

எழுத்து:
எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன். பள்ளிப் பருவத்தில் அதாவது ஏழு எட்டாவது வகுப்புகளிலிருந்து, ஊரிலிருக்கும் அத்தைகளுக்கும், பெரியம்மா சித்திகளுக்கும், கோடை விடுமுறையில் தோழிகளுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதுவதுண்டு. எழுதிய கடிதங்களை பலமுறை நானே ரசித்து வாசித்த பின்னரே கோந்தின் பக்கம் விரல்கள் செல்லும்.

பள்ளி இறுதி, மற்றும் கல்லூரி காலத்தைய ஆண்டுமலர்கள் கவிதைகள், கதைகள் எழுத வைத்தன. அந்தச் சமயம் ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகை அறிமுகமாக திருமணத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் மும்பையிலிருந்தும் அதில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தப் பத்திரிகை நின்று போக பிறகு வேறு பத்திரிகைகளுக்கு முயன்றுபார்க்கும் ஆவல் ஏற்படவில்லை.

இந்நிலையில் ‘முரசு’ எழுத்துரு தட்டச்சில் தமிழ் எனும் புரட்சியைக் கணினியில் கொண்டு வந்தது. 2003-ல் திண்ணை இணைய இதழை கோமா அவர்கள் அறிமுகப் படுத்த, இணையத்தில் பத்திரிகை.. அதில் நம் எழுத்து.. என்பது பரவசம் தந்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பின் முரசு எழுத்துரு தந்த பிரச்சனையால் அதுவும் அப்படியே நின்று போனது. அப்போதுதான் அகலத் திறந்தன பதிவுலகக் கதவுகள். நெல்லை சிவாவின் மின்மினி வலைப்பூவே முதல் அறிமுகம். [நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று செம்மொழிப் பூங்கா பற்றி பதிவிட்டுள்ளார், பாருங்கள்!] நானானி அவர்களின் வலைப்பூவில் இ-கலப்பைக் கொண்டு பின்னூட்டமிடத் தொடங்கியதே முதல் பதிவுலகப் பிரவேசம்.

அப்புறமாக அதுவரை எழுதியவற்றை எல்லாம் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கோர்க்கத் தொடங்கிய முத்துச்சரத்தை இன்னமும் கோர்த்துக் கொண்டே.. இருக்கிறேன் தீராத ஆர்வத்துடன்.. மாறாத மயக்கத்துடன்..! நன்றி கவிநயா:)!

இப்போது விஜியின் அழைப்புக்குச் செல்கிறேன்!

2010 சிறப்பான வருடமாகவே தொடங்கியது என் எழுத்துக்கு, 'சமூகம்' பிரிவில் தமிழ்மணம் தந்த தங்கப் பதக்க விருதுடன். 'உயிரோசை' இணைய இதழில் முதன் முறையாக என் படைப்பு வெளியாகி, தொடர்ந்து இதுவரை கட்டுரை கவிதைகள் என 8 படைப்புகள் வந்ததில் மகிழ்ச்சி. யூத்ஃபுல் விகடனில் இவ்வருடம் 10 படைப்புகள். வார்ப்பு(10), வல்லமை(9), திண்ணை(11) இணைய இதழ்கள் தொடர்ந்து தந்து வரும் ஊக்கம் குறிப்பிடத் தக்கது. அகநாழிகை, வடக்குவாசல், புன்னகை பத்திரிகைகளில் வந்தன கவிதைகள். அனைத்து ஆசிரியருக்கும் என் நன்றிகள்.

ஒருமுறையே ஆயினும், தமிழ்மணம் வரிசைப்படுத்தி வரும் முன்னணி இருபது வலைப்பூக்களில் பத்தாவது இடம் கிடைத்ததில் தனி மகிழ்ச்சி.

நூறாவது இடுகை
யைத் தொட்டேன் இவ்வருடம்.

தேவதை மற்றும் கலைமகளில் கடந்த வருடம் வலைப்பூ அறிமுகமானது போல இந்த வருடம் ‘ லேடீஸ் ஸ்பெஷல்’ சிறப்பான அங்கீகாரம் தந்தது முத்துச்சரத்துக்கு எனது கட்டுரையையும் வெளியிட்டு.

பத்திரிகை உலகத்தில் பரவலாகப் பல இதழ்களில் தடம் பதிக்க முடிந்ததை என்னளவில் இவ்வருட சாதனையாகக் கருதுகிறேன். தேவதை, ஆனந்த விகடனில் கவிதைகள், தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள், கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களில் சிறுகதைகள். இப்படியாக என் எழுத்துப் பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்து விட்டுள்ளது 2010.

இவ்வருட கவிதைகளில் பிடித்தமானவை: யார் அந்தச் சிறுவன்?; ஒற்றைப் பேனாவின் மை ; அகநாழிகை கவிதைகள்; ஆயிரமாயிரம் கேள்விகள்; ஒரு நதியின் பயணம் போன்றவை. சிறுகதைகளில் ‘வயலோடு உறவாடி..’. கட்டுரைகளில் உலகம் உய்ய.. ; தாயுமானவராய்..; செல்வக் களஞ்சியங்கள்; மேகங்களுக்குப் பின்னால்.. ஆகியன.

சொல்ல விழையும் கருத்துக்களைப் பத்து பதினைந்து வரிகளில் வெளிப்படுத்திவிட்டு நகரும் செளகரியமாகக் கவிதைகளை நான் கருதியதால், அவையும் ஓரளவுக்குக் கை கொடுத்ததால், கட்டுரை மற்றும் சிறுகதைகள் மேல் அதிக ஆர்வம் ஏற்படாமலே இருந்தது. இந்த வருடம் அதில் மாற்றம் வந்திருக்கிறது. காரணம் பதிவுலக நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தித் தந்த ஆலோசனைகளே. ஏற்று நடந்ததில் கை மேல் பலனாய் பத்திரிகைகளில் படைப்புகள். அவர்களுக்கும் கூடவே ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

2011_ல் சிறுகதைகள் மேல் இன்னும் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுவே என் புதுவருட நிலைப்பாடாக உள்ளது. இவ்விரண்டு எண்ணங்களையுமே செயல் படுத்த உதவும் வகையில் அருமையான ஆலோசனைகளுடன் அமைந்திருந்தது, ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் கருத்துக்கள். அவற்றை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் பரிசல்காரன் இங்கே. காணொளியும் விரைவில் இணையத்தில் வருமென எதிர்பார்க்கப் படுகிறது.
*** *** ***

புகைப்படங்கள்:
பதினேழு வயதில் முதலில் கையில் பிடித்தது யாஷிகா-D. அப்பா மட்டுமின்றி அவரது சகோதர சகோதரிகளும் புகைப்படக்கலை வல்லுநர்கள். ஆர்வலர்கள். ஆக இயல்பாக வந்து விட்டிருந்தது எனக்கும் அண்ணனுக்கும் பதின்ம வயதில் இதன் மேலான ஆர்வம். அண்ணனும் நானுமாக அப்பாவின் யாஷிகா-டியில் படமெடுக்கப் படித்துக் கொண்டோம். [எங்களுக்கு முறையே ஒன்பது பத்து வயதாக இருக்கையில் அப்பா காலமாகி விட்டிருந்தார்.] ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிரா. இப்போது எப்படி டிஜிட்டல் கேமிராவில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உள்ளதோ, அது போன்றதானதொரு வசதி அதில் உண்டு.அண்ணனுக்கு ஃப்லிம் ரோலை வீட்டிலேயே கழுவி ப்ரிண்ட் போடுவதிலும் ஆர்வம் இருந்தது. எனக்கு நாட்டம் இல்லை. சின்னதாக ஒரு ஸ்டூடியோ செட் செய்திருந்தார். என் சின்னத் தங்கைதான் அவருக்கு அஸிஸ்டெண்ட். ஆரம்பத்தில் ப்ரிண்ட் போட்டவை பழுப்பு நிறத்தில் வந்தன. பின் சற்று முன்னேற்றம் வந்தது.

பள்ளி இறுதியில் [1982] நான் மும்பைக்கு சுற்றுலா செல்லுகையில் எடுத்துச் செல்ல எளிதாக இருக்குமென அண்ணன் சிபாரிசு செய்ய க்ளிக்-4 காமிரா வாங்கித் தந்தார் தாத்தா. இந்த இரண்டு காமிராவிலுமே நான் அடிக்கடி செய்த தவறு ஒரு படம் எடுத்ததும் அடுத்த படத்துக்கு ஃப்லிம் சுருளை கொண்டு செல்ல மறந்து விடுவது. 12 படங்கள் எடுக்க முடிகிற 120 ஃப்லிம் சுருள் விலை அப்போது பன்னிரெண்டரை ரூபாய்கள். அதில் இப்படித் தப்பு விட்டே நாலு படங்களின் கதை கந்தலாகி விடும்:(!

கல்லூரியில் இருக்கும் சமயத்தில்தான் கலர் படங்களுக்கான 35mm கேமிரா மற்றும் 36mm ஃபிலிம் சந்தைக்கு வர ஆரம்பித்திருந்தன. அம்மா பச்சை கொடி காட்ட ஹாட் ஷாட்-ல் கவனமாக ஆட்டோ வைண்டிங் ரிவைண்டிங் வசதியிருந்த காமிராவை தேர்வு செய்தேன். [ஆம், ஆலோசனை கேட்க என்னோடு காமிராவை கையில் எடுத்த அண்ணனும் இல்லாது போனார்.]

அப்போதெல்லாம் மனிதர்களைத் தவிர வேறெதையும் படம் எடுத்ததே இல்லை! ஃப்லிம் சுருள், பிரிண்ட் செலவு எல்லாம் ‘எதற்கு போட்டு இவற்றை எடுப்பானேன்?’ என்கிற மனோபாவமே பலரையும் போல எனக்கும் இருந்தது!

பள்ளி, கல்லூரியில் எடுத்தவற்றை நண்பருக்கும், உறவினர் மற்றும் அவர்தம் குழந்தைகளை எடுக்கும் படங்களை அவரவருக்கும் உடனுக்குடன் ப்ரிண்ட் எடுத்து அனுப்பி வைக்கிற வழக்கமும் அப்போதிருந்தே உண்டு. இந்த விஷயத்தில் நான் என் அப்பாவைப் போலவே என அடிக்கடி புகழ்வார் என் பெரியம்மா, அம்மாவின் அக்கா.

சமீபத்தில் என் பள்ளி, கல்லூரிகாலத் தோழி என் புகைப்படப் பதிவுகளைப் பார்த்து விட்டு ரொம்ப ஆர்வமாக யாஷிகா-டி, க்ளிக்-4, ஹாட் ஷாட் இவற்றை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளனவா அவை என்று குசலம் விசாரித்தார். யாஷிகா-டியை அப்பாவின் நினைவாகவும் antique piece ஆகவும் பார்வைக்கு வைத்திந்த தங்கை சமீபத்தில் என் வசம் தந்து விட்டாள். செல்ஃப் டைமர் உபயோகித்து பல படங்களை அதில் பள்ளி காலத்தில் எடுத்திருக்கிறேன். மறக்காமல் சிலாகித்தார் அதையும் என் தோழி.

90-களில் கணவர் நைகான் 70W வாங்கித் தந்தார். 2000_களின் தொடக்கத்தில் சோனி TRV140E வீடியோ கேமிரா கைக்கு வர ஸ்டில் படங்கள் எடுப்பது வெகுவாகு குறைந்து எங்கு சென்றாலும் வீடியோவாகவே எடுத்தபடி இருந்தேன். வந்தது டிஜிட்டல் புரட்சியும். நைகான்3700 முதல் டிஜிட்டல். இயற்கை காட்சிகள் கோவில்கள் என எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தது இதிலிருந்துதான். இந்த சமயத்தில் கனமான வீடியோ காமிராக்கள் போய் கையடக்க வீடியோ கேமிராக்கள் வந்தன. கணவர் வற்புறுத்தியும் வாங்க மறுத்து விட்டேன். முக்கிய காரணம் எடுத்தவற்றை மறுபடி போட்டுப் பார்க்க நேரம், பொறுமை எவருக்கும் இல்லை.[பிற்காலத்தில் வரலாம்:)!]மகனும் பள்ளிப் படிப்பைப் முடிக்க, பள்ளி விழாக்களுக்கான பயன்பாடும் இராது என்ற நிலையில் அதிக பிக்ஸல்,க்ளாரிட்டி வேண்டி சோனிW80 வாங்கிக் கொண்டேன்.

2008 மே, பதிவுலகம் வந்த மாதத்திலிருந்து பிட் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொள்ள PiT உதவியது. உதவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆர்வம் தணியாது பார்த்துக் கொள்கிறது. நண்பர் பலரும் இந்த சமயத்தில் SLR-க்கு மாறும் நேரம் வந்து விட்டது என அடிக்கடி சொல்லியபடி இருந்தாலும் அதன் பயன்பாடு குறித்த தயக்கத்தால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சென்ற மாதம் எங்கள் மணநாள் அன்று ‘பழகு’ என வாங்கிக் கையில் திணித்து விட்டார் கணவர்.

நைகான்-D5000 18-55mm பேஸிக் லென்ஸ்+ 55-200mm லென்ஸ், ட்ரைபாட் சகிதம் களமிறங்கியிருக்கும் எனக்கு, பால பாடங்கள் புரிபடவே சிலநாட்கள் ஆயிற்று. முதலில் ‘ஒளி.. ஒரு துவக்கமாய்’ என ஒரே ஒரு விளக்குப் படத்தை ஃப்ளிக்கரில் போட்டுவிட்டு பேசாதிருந்து விட்டேன். 'விளக்குப் பூஜையிலிருந்து இன்னுமா கேமிராவை எடுக்கவில்லை:)?’ என அக்கறையுடன் ஒரு மென் அதட்டல் போட்டார் கருவாயன் என்ற சுரேஷ்பாபு. [இத்தகு நட்புகளே பதிவுலகில் நமக்குக் கிடைத்த வரம்.]

அவர் கேட்டதில் தப்பில்லை. ரெண்டு நாளைக்குக் காமிராவைக் கையில் வைத்து உருட்டி உருட்டிப் பார்த்து விட்டு, அப்பெச்சர்,ஐ எஸ் ஓ, ஷட்டர் ஸ்பீட் எனத் தூக்கத்திலும் உளறி விட்டு, பையில் போட்டு ஜாலியாக மூடி வைத்து விட்டிருந்தேன். இவர் இப்படிக் கேட்டதும் வந்தது வேகம். காட்சிப் படுத்தினேன் அடுத்தநாள்காலை அதிகாலை வானின் மேகத்தை விரிந்த 18mm-ல்.

கடந்த பிட் பதிவின் அந்த மேக ஊர்வலம் இங்கும் ஃப்ளிக்கரிலும் நல்ல பாராட்டைப் பெற்றுத் தர, நம்பிக்கை பிறக்க, தொடர்ந்து இப்போது அதில் படங்கள் எடுக்கப் பழகி வருகிறேன். இருவாரம் முன்னே ஜீவ்ஸ் தலைமையிலான கப்பன் பார்க் புகைப்பட ஆர்வலர் சந்திப்பில் நான் கேட்ட ஒண்ணும் ஒண்ணும் எத்தனை மாதிரியான கேள்விகள் எல்லாவற்றிற்கும் சிரித்துவிட்டு ஆனால் பொறுமையாக பதில் தந்தார்கள் வந்திருந்த அத்தனை பேரும்.

ஆக, 2011_ல் காமிரா பயணத்தின் இலட்சியம் வேறென்னவாக இருந்திட இயலும்? SLR-ன் பயன்பாடுகளை முடிந்தவ்ரை கற்றுத் தேர்ந்திட வேண்டும் என்பதுதான்:)!

மற்றபடி 2010 புகைபடப் பயணமும் தமிழ்மண விருதுடனேயேதான் ஆரம்பித்தது ஜனவரியில். இரண்டு முறைகள் ஃப்ளிக்கரின் ‘இந்தவார சிறந்த படம்’ ஆகத் தேர்வாயின என் படங்கள். குமரகம் புகைப்படங்கள்;தண்ணி காட்டறேன்; லால்பாக் மலர் கண்காட்சி; மலரோடு மலராக; மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.. போன்ற பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிக்கப் பட்டன.

வழிப்பாட்டுத் தலங்கள்; இறையும் கலையும்-நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள் ஆகியன இந்திய சிற்பக்கலையின் அருமையையும், சொந்த ஊரின் பெருமையையும் இற்றைப் படுத்த கிடைத்த வாய்ப்பாக அமைந்து மிகுந்த மனநிறைவைத் தந்தன.

என் மூன்றாம் கண்கள்:)!
இதில் க்ளிக்-4 மட்டும் மிஸ்ஸிங். படத்தை எடுத்தது லேட்டஸ்ட் நைகான் D5000-ல்.

எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்த அழைப்புகளுக்காக கவிநயா, விஜி இருவருக்கும் என் நன்றிகள். விருப்பமானவர் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். விரிவான விவரங்களுக்கும், [நான் அப்படியே பின்பற்றாவிட்டாலும்:)] விதிமுறைகளுக்கும் அவர்களது பதிவுகளைப் பாருங்களேன்.


மிக நீண்ட பதிவாகி விட்டது. கொட்டாவி வந்திருந்தால் விரல்களால் இரண்டுமுறை சொடுக்குப் போட்டு விரட்டி விட்டு மேலே கவனமாக வாசிக்கவும்:)!

தமிழ்மணம் விருது 2010-ன்
1]காட்சிப் படைப்புகள் பிரிவில் ‘ஏரிக்கரை பூங்காற்றே..’[கேமிரா வடித்தது];
2]நூல் விமர்சனம் பிரிவில் ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்-என் பார்வையில்..’[பேனா வடித்தது];
3]பயண அனுபவங்கள்,ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் ‘மேகங்களுக்குப் பின்னால்..’[கேமிரா பேனா இரண்டும் கலந்து செய்த கலவை:)]
இவை முதல் சுற்றில் வெற்றி பெற வாக்களித்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்களோடு வாசகர்களும் கலந்து கொள்ளலாம் இங்கே. புதியவர்கள் தமிழ்மணத்தில் கணக்கு திறந்து பிறகு வாக்களிக்க வேண்டும். ஜனவரி நான்கு கடைசி தினம்!

முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் அத்தனை நண்பருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்! வெற்றி நோக்கிப் பயணப்படுவோம். யாருக்குக் கிட்டினாலும் நமக்கேயானதாய் மகிழ்வோம்.


இருதினம் முன் என் பிறந்த தினத்தன்று சுவரொட்டியில் வாழ்த்திய தமிழ் பிரியனுக்கும், பதிவிட்டு வாழ்த்திய நானானி அவர்களுக்கும், கவிதையால் மகிழ்வித்த திகழுக்கும் அப்பதிவுகளிலும் முகநூலிலும் வாழ்த்தியிருந்த நண்பர் யாவருக்கும், தமிழ்வாசல் குழுமத்தில் மடலிட்டு வாழ்த்துக்களை ஆசிகளை வாங்கித் தந்த எல் கே, மற்றும் அலைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பியும் வாழ்த்திய அத்தனை தோழமைகளின் அன்புக்கும் நெகிழ்வான நன்றிகள். வெகு சிலரைத் தவிர எவரையும் நேரில் சந்தித்ததில்லை. ஆயினும் நெடுநாள் பழகிய உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன இணைய நட்புகள்.



புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
என் அன்பான வாழ்த்துக்கள்!
***

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கட்டிப் போட்டக் கதைகள்

தைகள் சுகானுபவம். வாசிக்கும் போது காட்சிகளையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நாமே கற்பனை செய்து கொள்வது சுவாரஸ்யம் என்றால், சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும் விழுந்து விடுவோம். 

ஆரம்பப்பள்ளிக் காலத்தில் எங்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற வயதான ஓட்டுநர் பளபளக்கும் வழுக்கைத் தலையும், முறுக்கி விட்ட பெரிய வெள்ளை மீசையுடனுமாய் இருப்பார். அவரை மீசைக்கார தாத்தா என்றே அழைப்போம். கடைசி நபர் காருக்கு வந்து சேரும் வரை மற்றவருக்கு மந்திர தந்திரக் கதைகளை தினம் சொல்லுவார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ரேஞ்சுக்கு ஒரு தலைப்பு. அதேபோல அவர் போடும் விடுகதைகள் எவையும் இரண்டு வரியில் இருக்காது. ஒரு பத்து வரிப் பாடலாய் கவிதையாய் இருக்கும். எவற்றையும் இவர் படித்தறிந்திருக்க வாய்ப்பில்லை. சொந்தக் கற்பனையாகவோ செவிவழிக் கதைகளாகவோதான் இருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் அவரிடம் குடியிருந்த தமிழுக்கும் திறமைக்கும் இப்போது வைக்கிறேன் ஒரு வணக்கம். 

ஹி. நான் கூட ஒரு நல்ல கதை சொல்லியாய் 'இருந்தேன்'. பதின்ம வயதில் என் தம்பி தங்கைகள், ஊரிலிருந்து வரும் அத்தைகள் மற்றும் சித்தி, சித்தப்பா குழந்தைகள் எல்லோருக்கும் நான் கதை சொல்லிக் கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம். குறிப்பாக சாக்லேட் ஹவுஸ் என ஒரு அட்வென்ச்சரஸ் கதை சொல்லுவேன். கேட்கும் 'அத்தனை' பேரையும் கதையில் ஒரு கதாபாத்திரமாக்கி விடுவேன். கண் இமைக்காமல் வாய் மூடாமல் கேட்பார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் அடிக்கடி அதை நினைவுகூர்ந்து மகிழ்வதுண்டு. நான்கு வருடம் முன்னே தம்பிக்கு திருமணமான புதிதில் அவன் மனைவி நான் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடீரென ‘அக்கா எனக்கும் அந்த சாக்லேட் ஹவுஸ் கதை சொல்றீங்களா?’ எனக் கேட்டதுதான் ஹைலைட்:))! மகனுக்கு ஏழெட்டு வயது வரை கதை சொல்லுவேன். ஆர்வமாகக் கேட்பான் என்றாலும் அந்த அளவுக்கு ஈர்த்த மாதிரித் தெரியவில்லை! ஒரே ஒரு கதாபாத்திரமாக அவனை மட்டும் உள்ளே கூட்டிச் சென்றது அத்தனை சுவாரஸ்யப் படுத்தவில்லையோ என்னவோ:)! 

'எல்லாம் சரி. இப்போது எப்பூடி' எனக் கேட்டால் முத்துச்சரத்தில் சிறுகதைகளின் எண்ணிக்கை 'அப்பூடியொன்றும் தெரியவில்லையே' என்கின்றது. கதையாய் சொல்ல வேண்டியவற்றையும் கூட கவிதையாய் சொல்லி முடித்துவிடவே விழைகிறது மனம். இந்த சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு கதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறேன். 

அடுத்து வாசிப்பு என வருகையில் பகிர்ந்திடும் அளவுக்கு அது அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் ஆதிமூலக்கிருஷ்ணனின் வலைப்பூவுக்காக அளித்த பேட்டியில் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?' எனும் கேள்விக்குப் பதிலாகச் சொல்லியிருந்தவற்றையே இங்கு சற்று விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன். 

தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். ஆறேழு வயதிருக்கையில் விடுமுறைக்காக என்னையும் அண்ணனையும் தூத்துக்குடியிலிருந்த அத்தையின் வீட்டுக்கு அப்பா பஸ் ஏற்றி விட்டு அது கிளம்பும் சமயத்தில் சர்ப்ரைசாகக் கொடுத்த பைண்டு செய்யப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான் முதல் வாசிப்பின்பம். மூன்று பன்றிக்குட்டிகளையும், ஏழுசித்திரக் குள்ளர்களையும் பின்வந்த காலங்களில் வெவ்வேறு பதிப்பகங்களின் வாயிலாகச் சந்திக்க நேர்ந்ததென்றாலும் அந்த முதல் வாசிப்பின் படங்கள் அகலவில்லை கண்களிலிருந்து. அப்பா நெல்லை ஊசிக்கோபுரத்தின் எதிர்வரிசையிலிருக்கும் டயோசீசன் புக் செண்டர் அழைத்துச் சென்று சிறுவர் புத்தகங்கள் வாங்கித் தருவார்கள். எழுபதுகளில் வெளிவந்த சிறுவர் மலர்களில் அம்புலிமாமா,ரத்னபாலா, பாலமித்ரா,சம்பக், பூந்தளிர், அணில் மற்றும் கல்கி நிறுவனத்தின் கோகுலம். கோகுலத்தின் முதல் இதழ் வெளிவந்த போது அப்பா என்னை அழைத்துக் கையில் தந்த நாள் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் எனது ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனது. இருப்பினும் கூட்டுக் குடும்பத்தில் சின்ன பெரியப்பாவினால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும், வார மாதப் பத்திரிகைகளும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது. இதிலே பாலமித்ரா, ரத்னபாலாவில் என் கருத்துக்கள் வாசகர் கடிதங்களாய் வெளிவந்துள்ளன. சன்மானமாக ரூ.2 அல்லது 5 அனுப்புவார்கள்! அப்புறம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் எங்களை சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் அழகுத் தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் எளிமையான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன. 

இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, அவரது குதிரை கேசரி-நாய் வாலி மற்றும் அவர் வளர்த்த பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. ஒருநாள் கண் விழிக்காத ப்ரெளன் நிற நாய்க்குட்டியைத் தடவிக் கொடுத்தபடியே தம்பி எங்களது முகத்தைப் பார்த்திருக்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொல்ல, அரைமணிக்கும் மேலாக அத்தனையும் ‘ஊஹூம்’ ஆகிக் கொண்டிருந்தன. அப்போது அங்கு திடுமெனப் பிரவேசித்த சின்ன அத்தை பிரச்சனையைக் கேட்டுவிட்டு சட்டென ‘ரெக்ஸ்’ என்றார்கள். “ஹோ” எனும் பெருங்கூச்சலுடன் ஒருமனதாகப் பெயர் அங்கீகரிக்கப்பட்டு பெயர்சூட்டும் வைபவம் இனிதே நடந்தேறியது. அப்படியாக இருந்தது காமிக்ஸின் தாக்கமும், அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நேசமும். 

எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் ஒன்று, இந்தக் கதைகளில் வரும் வசனம் எதையாவது ஒருவர் சொல்ல மற்றவர் 'யார் எந்தக் கதையில் பேசியது' என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். நேரம் போவது தெரியாமல் உற்சாகமாய் விளையாடுவோம். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள் என்பதற்கு மேற்படி நாமகரண சம்பவமே அத்தாட்சி. சமீபத்தில் பதிவுலக நண்பர் ஜீவ்ஸ் தனது வார இறுதிகளை காமிக்ஸ் படித்துக் கழிப்பதாகக் கூறினார். சுமார் 150 காமிக்ஸ்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவற்றிலே மூழ்கித் திளைக்கிறாராம். அ.கொ.தி.க-வை சுவாரஸ்யமாய் வாசித்துக் கொண்டிப்பதாய் சொன்னபோது ‘அவையெல்லாம் இன்னுமா வெளிவருகின்றன’ எனக் கேட்டேன். 'எல்லாமே அந்தக்காலத்தில் வந்தவற்றின் மறுபதிப்புகளே. வேண்டுமா உங்களுக்கும்?’ என்றார். இப்போது வாசித்தால் அதே த்ரில் கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே. 

பிறகு எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், இரத்தம் ஒரே நிறம், கனவுத் தொழிற்சாலை, காகிதச் சங்கிலிகள்; ஸ்டெல்லா புரூஸின் அது ஒரு நிலாக்காலம், ஒருமுறைதான் பூக்கும்; பாலகுமாரனின் 'ஆரம்பக்கால' நாவல்களாகிய இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது போன்றவை. சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் கதைகளும் அப்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையுமே வாசித்திருக்கிறேன் எனினும் சிலவற்றைத் தவிர மற்றவை அதிகம் என்னை ஈர்க்கவில்லை. ஹைஸ்கூலில் இருக்கும்போது கமல்-ரஜனிக்கு இருந்தது போலவே சிவசங்கரி-இந்துமதிக்கு தீவிர ரசிகைகள் இருந்தார்கள். தலைப்பு நினைவில் இல்லை, ஒரு தொடர்கதையை வாரம் ஒருவராய் மாற்றி மாற்றி எழுதினார்கள். அந்த சமயம் வெளியான இளைமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் படங்களில் யார் நடிப்பு பெஸ்ட் என்பது போல, இந்தக் கதையிலும் யார் எழுத்து பெஸ்ட் எனும் விவாதம் அனல் பறந்தது தொடர் முடியும் வரை. ஆனால் அதென்னெவோ விதிவிலக்காக சுஜாதா மட்டும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார். 

தொன்னூறுகளிலிருந்து வாசிப்பென்பது வாரப்பத்திரிகைகளுடன் மட்டுமென்றாகி விட்டது. தற்போது எஸ்.ரா, நாஞ்சில்நாடன் ஆகியோர் எழுத்துக்கள் பிடித்தவையாய் உள்ளன. அடுத்த மாதத்துடன் பதிவுலகம் வந்து இரு வருடங்கள் நிறையப் போகின்றன. வலையுலகம் வந்த பின்னரே மறுபடி வாசிக்கும் ஆர்வம் துளிர்த்துள்ளது. சமீபத்தில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’. முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்தும் முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல். பொன்னியின் செல்வனை அவ்வாறே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. ஒவ்வொருவர் அதை சிலாகித்துச் சொல்லுகையில் வாசித்துவிட வேண்டுமெனும் ஆசை பிறந்து வாங்கி வைத்ததுள்ளேன். சீக்கிரம் ஆரம்பித்து முடிப்பேன் என நம்புகிறேன். தொடர அழைத்த முகுந்த் அம்மாவுக்கும், தன் பதிவின் பின்னூட்டத்தில் கேட்டுக் கொண்ட அமைதிச்சாரலுக்கும் நன்றிகள். தொடர விருப்பமானவர்கள் தொடருங்களேன். 
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin