வெள்ளி, 25 நவம்பர், 2011

நாளை நமதே... - பள்ளி மேடை

முதல் முதலில் ஏறிய பள்ளி மேடை நெல்லை சங்கீத சபாவில் ‘நர்சரி’ (எல்கேஜி) வகுப்புப் படிக்கும் போது. குறி சொல்லும் பாடல் ஒன்று. எனக்குப் பெரிய வேலையில்லை. ‘தேமே’ எனக் கையை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்:)! ஆனாலும் பாருங்க, மேடைப்பயம் துளியேனும் இருக்கா என.

#

அடுத்து இரண்டாம் வகுப்பில் இருக்கையில் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ. பள்ளிக்கு விடுமுறை. ஆனால் நடனத்தில் சேர்ந்திருந்த சிறுமியர் நாங்கள் மட்டும் 5ஆம் வகுப்பு வரைக்கான சின்ன (லயோலா) கான்வென்டிலிருந்து ‘பெர்ரிய’(இக்னேஷியஸ்) கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதே ஒரு பிக்னிக் போலிருந்தது. அங்கே இரண்டு முறை ஒத்திகை முடிந்ததும் எல்லோருக்கும் மேக் அப் போட்டு விட்டார்கள். பிறகு அருகிலிருந்த வ.உ.சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நடனம் தொடங்கும் முன் வந்து அப்பா என்னை எடுத்த படமே இது:

#

நான்தான் ராதை என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். ‘தேமே’ லெவலில் இருந்துக் கொஞ்சம் கையைக் காலை ஆட்டத் தெரிந்ததால் ராதையின் தோழிகளுள் ஒருவராக ஸைடில் ஆடும் கூட்டத்தில் இருந்தேன். படத்துக்கு நல்லாயிருக்குமே எனக் கிருஷ்ணருடன் நிற்க வைத்து எடுக்கப்பட்டது!

ந்தாம் வகுப்பில் கொஞ்சம் முன்னேற்றம். க்ரூப் டான்ஸில் முதல் வரிசையில். சந்தோஷமாக இருந்தது ‘நல்லா ஆடுறோம் போலயே’ என்று(உண்மைக் காரணம் இரண்டு வருடம் கழித்துப் புரிந்தது). “லல்லி, லில்லி, ஜிம்மி, ஜிக்கி, லூசி, ரோஸி, ராணி’ என நாய்க்குட்டிகளை அழைக்கும் பாடலின் இந்த முதல்வரி மட்டுமே இப்போது நினைவில் உள்ளது. அதன் பின் அப்பாடலை வாழ்நாளில் கேட்டதேயில்லை. நடனத்துக்காகப் பத்து பேருக்கும் ஒரே மாதிரி மஞ்சளில் பெரிய பெரிய பூக்கள் போட்ட கவுன் தைத்திருந்தார்கள். 20 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள்.

அதே வருடம் நான் நடித்த நாடகம் திருவிளையாடல். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பையும் ரோஸ், லில்லி, லோட்டஸ், ஜாஸ்மின் என நான்கு க்ரூப்களாகப் பிரித்திருப்பார்கள். போட்டிகள் எல்லாமே இந்த க்ரூப்புகளுக்குள்ளேயேதான் நடக்கும். நான்காம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை ஒவ்வொரு க்ரூப்பும் ஓரணியாய் திரளும். அந்த வருடம் நாடகப் போட்டி.

ரோஸ் அணியின் தேர்வு ‘திருவிளையாடல்’. ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் மலையேறும் முருகனாக எனக்கு வேடம். ஜிலுஜிலு பட்டுடை அணிந்த முருகனை அப்படியே ரீப்ளேஸ் செய்யணும் காவி உடையணிந்த முருகன். மலைமேல் ஏறிவிட்ட என்னை சமாதனப்படுத்த முடியாமல் தோற்று ஒளவை போனதும், பார்வதி வந்து “உன்னை மட்டுமா சோதித்தார். ஈசன் என்னையே சோதித்தார்” என தாட்சாயிணி கதையைக் கூறி மனதை மாற்றுவதாய் நாடகம் முடியும். “மூத்த பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை எனக் காட்டி விட்டீர்கள்” என்பதை ஒத்திகையின் போது ஈனஸ்வரத்தில் முனகினால் யாருக்குதான் கோபம் வராது?

ட்ராயிங் ‘மிஸ்’தான் டைரக்டர். சும்மவே கண்டிப்பு. சொல்லிச் சொல்லிச் சலித்து ஒருநாள் “இன்று நீ சரியாக பேசவில்லையென்றால் இவள்தான் முருகன்” என பி செக்‌ஷன் செளமினியைக் கூட்டி வந்து விட்டார். சீனியர் அக்காக்கள் எல்லோரும் தனியே அழைத்துச் சென்று ‘நல்லா செய். சத்தமா சொல்லு. இல்லேன்னா நீ அவுட்டு. ட்ராமாவுல இல்லே”ன்னு பயங்காட்டி உற்சாகப்படுத்த, வந்தது வீரம். விட்ட சவுண்டில் முதல் டேக்கில் ஓக்கே சொல்லி விட்டார் டைரக்டர் மிஸ். அலெக்ஸாண்டர் நாடகம் முதல் பரிசும், நாங்கள் இரண்டாவதாயும் வந்தோம் என்றாலும் என் இந்தக் கேரக்டரை சீனியர் அக்காக்கள் மறக்கவே இல்லை. பின்னாளில் எனக்குப் பிரசவம் பார்த்த டாக்டரின் மகள் அப்போது 10ஆம் வகுப்பில் இருந்தார். பிரசவத்துக்கு அம்மா வீடு வந்து நான் செக் அப்புக்காக டாக்டர் அறையில் நுழைந்த போது தன் அம்மாவுடன் இளம் மருத்துவராக அமர்ந்திருந்தவர் “அடடே நீயா, வா முருகா வா” என்றார்!

தே போல மறக்க முடியாத நடனமாக ஆறாம் வகுப்பில் ஆடிய நாளை நமதே படத்தின் ஃப்ளாஷ் பேக் பாடலாகிய ‘அன்பு மலர்களே’ பாடல். அதில் கடைக்குட்டி பாடுவதாக இரண்டு வரி குழந்தைக் குரலில் வரும். ஆரஞ்சில் வெள்ளைக் கட்டம் போட்ட பெல்பாட்டம் வாங்கப்பட்டது. அதில் இருந்த கஃப் கை நான் பையனாகத் தோன்ற வேண்டுமென்பதால் ரப்பர் பேண்ட் போட்டு அமுக்கப் பட்டது. குழந்தைகளாக நாங்க ஒரு மூணுபேர், அப்பா அம்மாவாக ஆடிய சீனியர் அக்காக்களுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு படத்தில் வருவது போலவே சுற்றிச் சுற்றி ஆடினோம். சும்மா எனது அந்த ரெண்டு வரி குழந்தைக்குரல் வாயசைப்புக்கு நல்ல கைதட்டல். வருடங்கள் கடந்து என் மகனுக்கு ஆறேழு வயதாக இருக்கையில் பெங்களூர் டு சென்னை லால்பாக் சேர்காரில் போய்க் கொண்டிருந்தேன். ‘ஹலோ நாளை நமதே, என்னைத் தெரியுதா?” என்றார் எதிர் சீட்டிலிருந்து ஒரு சீனியர் அக்கா.

அப்புறம் ஏழாம் வகுப்பில் மியூசிக் மட்டுமே இருக்கிற வெல்கம் டான்ஸில் இரண்டு முறை முதல் வரிசையில் நிற்க வைத்த போதுதான் புரிந்தது, குட்டையாய் இருப்பவரை முன்னால் போடுவார்களென:)! அதே வருடம் ஒரு ஹிந்தி மற்றும் மலையாளப்பாட்டுக்கும் ஆடினேன். பிறகு நடனத்தில் சேரும் விருப்பம் போய் விட்டது. ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் நழுவி விடலானேன்.

ல்லூரியில் மேடை அனுபவம் கவியரங்கங்களாயின. (தமிழாசிரியைகள் மாறிமாறி ஒவ்வொரு வருடமும் தரமுயன்ற நாடக வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்தேன்). சுற்றுலாவுக்கு அனுப்பத் தயங்கும் அம்மா எந்த இண்டர் காலேஜ் போட்டி நிகழ்வுகளுக்கும் அனுப்பத் தயங்கியதில்லை. சதக் அப்துல்லா கல்லூரி கவியரங்கம், சேவியர்ஸ் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகள் நடத்திய ஆன் தி ஸ்பாட் கதை, கவிதை போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. பெரும்பாலும் சமூகம் சார்ந்தவைகளாகவே எழுதி வந்தேன்.

ஒருமுறை எங்கள் கல்லூரியில் அடுத்த நிகழ்ச்சி தயாராகச் சற்றுத் தாமதமாகவே முதல் பரிசு பெற்ற என் சிறுகதையைக் கையில் கொடுத்துத் திடுமென மைக் முன் தள்ளி விட்டு விட்டார் தமிழாசிரியை, இடைப்பட்ட நேரத்தை நிரப்ப. வேறு வழியின்றி சுதாகரித்துக் கொண்டு கதையை வாசிக்க ஆரம்பித்ததும் சளசளவென அளவளாவிக் கொண்டிருந்த அரங்கு அப்படியே ஊசி விழுந்தால் கேட்கும் அமைதிக்கு வந்து விட்டிருந்தது. இலங்கை வானொலியில் சிறுகதைகளைக் கேட்டு ரசித்த அனுபவமே அப்போது கை கொடுத்தது.

டிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்று. முக்கியமாகச் சொல்ல வந்த இயக்கம் பற்றிப் பார்ப்போம். மீண்டும் பள்ளிப் பருவத்துக்கு வருகிறேன். வீட்டில் என்னுடைய கொரியோகிராஃபிக்கு தங்கைகள் ஆடிய நடனங்கள் (முற்றத்து ‘மணவட’ மற்றும் பாட்டாலையிலிருந்த தாத்தாவின் தேக்குக் கட்டிலே மேடை) எப்போதும் விருந்தினரால் பாராட்டப்பட்டது அன்பினால் மட்டுமே எனப் புரிய வராத வயது அது.

ஆறாம் வகுப்பில் அதே வருடம் நான் ஆடிய ‘அன்பு மலர்களே’ பாடலையே இன்டர் வகுப்புப் போட்டிக்கு எடுத்துக் கொண்டோம். நடன அமைப்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள் தோழியர் என் மேடை அனுபவத்தால். குடும்பப் பாட்டாக இல்லாமல் நடுவில் ஒரு பெண் ஆட இரண்டு பக்கமும் மூன்று மூன்று பேர் ஆடும் குழுநடனமென முடிவாயிற்று. ஓபனிங் சீன். நடுவில் ஆடும் சிறுமி குனிந்து அமர்ந்திருக்க, மற்றவர் சுற்றி அமர்ந்து மொட்டு போல மூடியிருக்க “அன்பு மலர்களே” ஒலிக்கையில் மொட்டு விரிந்து, பாடியபடியே நாயகி வெளியே வரவேண்டும்.

நிச்சயம் இந்தக் காட்சிக்கு நல்ல கைதட்டல் கிடைக்குமென்றெல்லாம் பேசிக் கொண்டோம். ஒத்திகைக்கும் ஆர்வமாக ஒத்துழைத்தார்கள். பள்ளிக்கு எதிர் வரிசையில் இருந்த தோழியின் வீட்டுக்குக் கும்பலாகப் போய் தினம் ரெகார்ட் ப்ளேயர் எடுப்பதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையாயிற்று. நிகழ்ச்சிக்கு முன் தினம் மாலை வகுப்புத்தோழியின் அக்காவைக் கருத்துக்காக அழைத்திருந்தோம். அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.

த்தோடு என் கொரியோக்ராஃபி ஆசைக்கு வைத்தேன் முற்றுப்புள்ளி (எந்த விஷயத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து முயன்றிடும் உந்ததல் இருக்கும் என்பதை இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது). முதல் காட்சியும் நீக்கப்பட்டது. “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”ன்னு இருந்தது ஏழாம் வகுப்பில் தேடி வந்த டைரக்டர் போஸ்ட்.

ரோஸ், ஜாஸ்மின் ஓரணியாக; லில்லி, லோடஸ் ஓரணியாகப் பிரிந்து இன்டர் க்ரூப் போட்டி. தமிழ் பாடத்தில் வந்த குமண வள்ளல் நாடகத்தையே இரண்டு க்ரூப்பும் போட வேண்டும். பாடத்தின் நீட்சியான க்ளைமேக்ஸையும் நாடகத்தில் சேர்க்க வேண்டும். தன்னிடம் நாட்டைக் கொடுத்து விட்டு காடு சென்ற விட்ட வள்ளலைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்கணும் தம்பி (இதில் தகவல் பிழை இருந்தால் பொறுத்தருள்க, இப்படிதான் ஞாபகம்). சின்ன நோட்டுப் புத்தகத்துக்கு இரண்டு பக்கம் வருமாறு மாங்கு மாங்கென வசனம் எழுதியிருந்தேன் தம்பிக்கும் அண்ணனுக்குமான வசனங்களை.

#
இதுல வசந்தலக்ஷ்மி, சித்ரா, லதா, ஜாக்குலின் எல்லாரும் இருக்காங்க.
மேலிருந்து இரண்டாவது வரிசையில்
இடமிருந்து இரண்டாவதாக நானும்..


குமணராக நடித்தத் தோழி லதா ஒத்திகையின் போது செய்த பிகு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்குப் பிடிக்காத ஜாக்குலின் ஒத்திகை ஸ்பாட்டில் இருந்தால் நடிக்க மாட்டேன் எனச் சொல்ல, எல்லோருக்கும் காஸ்ட்யூம் ஏற்பாடு செய்திருந்த ஜாக்குலின் வெளிநடப்புச் செய்ய, கண்ணை கட்டி விட்டது எனக்கு.

நாடக நாளும் வந்தது. ஆடிட்டோரியத்தில் 7-ஏ பிள்ளைகள் மட்டும் ஒரு மாலையில் கூடியிருக்க, க்ளாஸ் டீச்சர் ‘கோதை ஆண்டாள் மிஸ்’ஸுடன், சி செக்‌ஷன் மிஸ் நடுவராக வந்திருந்தார். நீண்ட வசனக் கடைசிக் காட்சியுடன் எங்கள் நாடகம் முடியக் கிளம்பிய கைத்தட்டல் நிம்மதியைத் தந்தது.. அதில் எண்பத்து இரண்டே முக்கால் சதவிகிதச் சத்தம் எங்கள் க்ருப் பிள்ளைகள் எழுப்பியது எனத் தெரிந்திருந்தாலும்.

லோட்டஸ் - லில்லி கூட்டணி நாடகத்தை ஆரம்பித்தது. க்ளைமேக்ஸும் வந்தது. குட்டை வசந்த லக்ஷ்மிதான் குமணர். தம்பியாக நடித்த நெடுநெடு உயரச் சித்ரா பட்டுத் துணி தரையில் புரள “அண்ணாஆஆஆ...” என ஓடி வந்து குமணரின் காலில் விழுந்தார். தொட்டுத் தூக்கிய வள்ளல் உணர்ச்சி பொங்கத் “தம்பீஈஈஈ..” எனத் தழுவிக் கொண்டார். சுபம். கைதட்டல் ஆடிட்டோரியத்தின் கூரையைப் பிளந்தது. திரும்பிப் பார்த்தால் எங்கள் ரோஸ் - ஜாஸ்மின் க்ரூப் பிள்ளைகள்தான் தம்மை மறந்து வாயெல்லாம் பல்லாக அதிக உற்சாகத்துடன் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

53 கருத்துகள்:

 1. நாளை என்ன நேத்தும் உங்களூது தான் போல :)) இன்றும் உங்களுது தான் .. கலக்குறீங்க..

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் பதிவு மேடம்.விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டே படிச்சேன் நிறைய இடங்களை.
  பாகம் 2 எப்ப மேடம்?அது ஒண்ணுமில்லை அடுத்தவங்க பல்பு வாங்கினதெல்லாம் படிக்க ஜாலியா இருக்கும்.அதான் கேட்டேன் ஹி...ஹி...

  அனுபவங்களை சுவாரசியமா எழுதறது ஒரு திறமை.நீங்க அப்படி ரசனையா நகைச்சுவை கலந்து எழுதி இருக்கீங்க.பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. உங்களது இளவயது அனுபவங்கள் எங்களுக்கே அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கும் போது உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் பெற்றோருக்கும் எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கும் இந்த அனுபவங்கள்... தொடர்ந்து இந்த அனுபவங்களை எழுதுங்கள்.. அதை ஒரு நல்ல நூலாக படிக்க விழைகிறேன்...

  பதிலளிநீக்கு
 4. அட தை ஒரு சூப்பர் தொடரா அமைக்கலாம் போல இருக்கே.:)

  நல்லாவெ சிரமப் பட்டிருக்கீங்க,.:)
  இதுதான் மேகிங் ஆஃப் அ கதை ஆசிரியர். சிரித்துச் சிரித்து தாவு தீர்ந்தது போங்க. ஸச் அ குட் நரெட்டர் பா நீங்க ராமலக்ஷ்மி.
  நல்ல பதிவு.
  என் பெண்ணைக் 'குறத்தி வாடி என் குப்பி 'நாட்டியத்துக்காக ஆட்டிவச்ச அம்மா''என்ற பேர் எனக்குக் கிடைச்சாச்சு!!

  பதிலளிநீக்கு
 5. க்ரூப் ஃபோட்டோவில் கீழிருந்து மூன்றாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவது இருப்பவர்தானே க்ரேட் ராமலக்ஷ்மி....

  பதிலளிநீக்கு
 6. wow!!ungalin pakirvugal annaithum nandraga irrunthathu..1 nimidam namma schooluku sendruvandha anupavamm kiddaithathu.thodarratumm ungal pakirvugal:)

  பதிலளிநீக்கு
 7. நான் சாக்ரட்டீஸ் நாடகத்தில் நடித்தது நினைவில் வந்தது. இனிமையான நாட்கள். சாக்ரடீஸ் நான் இல்லை, சாக்ரடீஸுக்கு விஷம் கொடுக்கும் காவலனாய் நானு.
  தனிப் பதிவு எழுத நல்ல டாப்பிக் இது ;)

  பதிலளிநீக்கு
 8. அடாடா... சின்ன வயசு ஞாபகங்களை அசை போடறது தனி சுகம்தான்... சொல்றதுக்கு நிறைய வெச்சிருக்கீங்க போல.. சிரிச்சுக்கிட்டே தொடர்ந்து படிக்கக் காத்திருக்கோம்...

  பதிலளிநீக்கு
 9. // “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”//
  அப்பவே நம்ப ஆரம்பிச்சுட்டாங்க,இப்ப கேட்கணுமா?
  உங்களுக்கு என்னுடைய செம கைதட்டல்கள்..

  பதிலளிநீக்கு
 10. //அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.//

  லொள்ளு சீனியர் :-))))

  சுவாரஸ்யமான அனுபவங்கள்.. என்றும் உங்களுதே :-))

  பதிலளிநீக்கு
 11. கலக்கல் போஸ்ட். எல்லாருக்கும் அவங்க அவங்க பள்ளி கல்லூரி நாளெல்லாம் நியாபகம் வரும். க்ரூப் படத்தில் நீங்க யாருன்னு சொல்லுங்க!

  அந்த தாமரைப் பூ மாதிரி மலரும் கொரியோக்ரஃபி அருமை. :D உங்க சீனியர் அக்காக்கு கற்பனை வளம் கம்மி :))

  பதிலளிநீக்கு
 12. கலக்கல் போஸ்ட். எல்லாருக்கும் அவங்க அவங்க பள்ளி கல்லூரி நாளெல்லாம் நியாபகம் வரும். க்ரூப் படத்தில் நீங்க யாருன்னு சொல்லுங்க!

  அந்த தாமரைப் பூ மாதிரி மலரும் கொரியோக்ரஃபி அருமை. :D உங்க சீனியர் அக்காக்கு கற்பனை வளம் கம்மி :))

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் கான்வெண்டில் படிக்கும் ஆண்டுகளில் நானும் மாணவியாக இல்லாமல் போனேனே....நீங்கள் பள்ளிக்குள் நுழையும் போது நான் ஃபேர்வெல் பாடலோடு வெளியே வந்து விட்டேன்

  லொயலாவிலிருந்து கான்வெண்ட் போனது பிக்னிக் போவது போலிருந்தது என்ற வரிகள் அருமையான உணர்வு வெளிப்பாடு...

  அட...மாணவியாகத்தான் ரசிக்க முடியவில்லை அத்தையாக வீட்டிலிருந்தும் ரசிகையாக இல்லாதபடி ,புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்ற பாடலோடு வெளியேறினேன்...
  உங்கள் நாடக அனுபவம் எனக்கே புதிதாக அமைந்திருப்பது வேடிக்கையான வருத்தம்

  பதிலளிநீக்கு
 14. அருமையான பதிவு...வரிக்கு வரி ஹாஸ்யம் இழையோடியது...வாழ்த்துக்கள்.

  முதல் படத்தில் தேமே அருமை...”

  என் கையை நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ “
  அடுத்த படத்தில்...”இந்தக் கண்ணன் என் கண்ணனல்ல “என்ற முக பாவம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. எந்த விஷயத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து முயன்றிடும் உந்ததல் இருக்கும்

  அது என்னவோ உண்மைதான் .

  கணினி கீபோர்டில் நர்த்தனம் செய்யும் ஆர்வம் நிறைந்த உங்களை மேடையில் விட்டால் தேமே தான்

  பதிலளிநீக்கு
 16. நாளை என்ன நேத்தும் உங்களூது தான் போல :)) இன்றும் உங்களுது தான் .. கலக்குறீங்க..//

  முத்துலெட்சுமின்னு பின்னூட்டத்தை ரிப்பீட்டிக்கறேன்.

  கோர்வையா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க

  பதிலளிநீக்கு
 17. அழகான அருமையான அசத்தலான ஆச்சர்யமான பதிவு. பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 18. முத்தக்காஆஆஆஆ....அனுபவம் சூப்பர் !

  பதிலளிநீக்கு
 19. /*“இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா*/
  :-) நல்ல அனுபவங்கள். எவ்வளவு நல்லா நினைவு வச்சிருக்கீங்க... நானும் ஒவ்வொரு க்ளாசா யோசிக்க பார்க்கிறேன் ஒரு பனித்திரை தான் தெரியுது ...

  பதிலளிநீக்கு
 20. சிறுவயது அனுபவங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 21. அப்படி என்ன வயசாயிடுச்சுன்னு மலரும் நினைவுகள் ஆர்ம்பிச்சு இருக்கீங்க? :-)))

  பதிலளிநீக்கு
 22. //இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க//

  :))))))))))))))

  பதிலளிநீக்கு
 23. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //நாளை என்ன நேத்தும் உங்களூது தான் போல :)) இன்றும் உங்களுது தான் .. கலக்குறீங்க..//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 24. raji said...
  //சூப்பர் பதிவு மேடம்.விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டே படிச்சேன் நிறைய இடங்களை.
  பாகம் 2 எப்ப மேடம்?அது ஒண்ணுமில்லை அடுத்தவங்க பல்பு வாங்கினதெல்லாம் படிக்க ஜாலியா இருக்கும்.அதான் கேட்டேன் ஹி...ஹி...

  அனுபவங்களை சுவாரசியமா எழுதறது ஒரு திறமை.நீங்க அப்படி ரசனையா நகைச்சுவை கலந்து எழுதி இருக்கீங்க.பகிர்விற்கு நன்றி//

  பல்பு வாங்கிய அதை இந்தப் பாகத்துடன் முடிந்தது:)! ரசித்தமைக்கு நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 25. குமரி எஸ். நீலகண்டன் said...
  //உங்களது இளவயது அனுபவங்கள் எங்களுக்கே அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கும் போது உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் பெற்றோருக்கும் எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கும் இந்த அனுபவங்கள்... தொடர்ந்து இந்த அனுபவங்களை எழுதுங்கள்.. அதை ஒரு நல்ல நூலாக படிக்க விழைகிறேன்...//

  தொடர்ந்து எழுதும்படி சுவாரஸ்யங்கள் நிறைந்ததா தெரியவில்லை. இருப்பினும் இதை எழுதுகையில் மீட்கப்பட்ட சில நினைவுகளைப் பகிர்ந்திடும் எண்ணம் உள்ளது:)! மிக்க நன்றி.

  //க்ரூப் ஃபோட்டோவில் கீழிருந்து மூன்றாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவது...//

  அதுதான் வள்ளலின் தம்பி சித்ரா:)! குரு கோதையாண்டாள் அவர்களின் காலடியில் அமர்ந்திருப்பது வசந்த லக்ஷ்மி. நான் எங்கே என்பதைப் பதிவில் சேர்த்து விட்டேன் இப்போது:)!

  பதிலளிநீக்கு
 26. வல்லிசிம்ஹன் said...
  //அட தை ஒரு சூப்பர் தொடரா அமைக்கலாம் போல இருக்கே.:)//

  முன்னர் கூட ‘ஆரம்பப்பள்ளி நினைவுகள்’ என ஒரு தொடர் ஓடியதே வல்லிம்மா:)! ஆனால் மேடை அனுபவங்கள் என இல்லை. ஆரம்பிக்கலாம்தான்.

  //நல்லாவெ சிரமப் பட்டிருக்கீங்க,.:)
  இதுதான் மேகிங் ஆஃப் அ கதை ஆசிரியர். சிரித்துச் சிரித்து தாவு தீர்ந்தது போங்க. ஸச் அ குட் நரெட்டர் பா நீங்க ராமலக்ஷ்மி.
  நல்ல பதிவு.
  என் பெண்ணைக் 'குறத்தி வாடி என் குப்பி 'நாட்டியத்துக்காக ஆட்டிவச்ச அம்மா''என்ற பேர் எனக்குக் கிடைச்சாச்சு!!//

  ரசித்தமைக்கு நன்றி வல்லிம்மா:)! என் தங்கைகள் நான் ஆட்டி வச்ச பாடல்களைப் பற்றி இப்பவும் ‘எப்படியெல்லாம் மானத்த வாங்கிருக்கே’ என்றே சண்டைக்கு வருவார்கள்:)!

  பதிலளிநீக்கு
 27. kalps said...
  //wow!!ungalin pakirvugal annaithum nandraga irrunthathu..1 nimidam namma schooluku sendruvandha anupavamm kiddaithathu.thodarratumm ungal pakirvugal:)//

  நன்றி, முதல் வருகைக்கும்:)!

  பதிலளிநீக்கு
 28. SurveySan said...
  //நான் சாக்ரட்டீஸ் நாடகத்தில் நடித்தது நினைவில் வந்தது. இனிமையான நாட்கள். சாக்ரடீஸ் நான் இல்லை, சாக்ரடீஸுக்கு விஷம் கொடுக்கும் காவலனாய் நானு.
  தனிப் பதிவு எழுத நல்ல டாப்பிக் இது ;)//

  நன்றி, காத்திருக்கிறேன் உங்கள் பதிவுக்கு:)!

  பதிலளிநீக்கு
 29. கணேஷ் said...
  //அடாடா... சின்ன வயசு ஞாபகங்களை அசை போடறது தனி சுகம்தான்... சொல்றதுக்கு நிறைய வெச்சிருக்கீங்க போல.. சிரிச்சுக்கிட்டே தொடர்ந்து படிக்கக் காத்திருக்கோம்...//

  தொடர்ந்தது தலைப்பையொட்டிய பகிர்வுகளை:)! ரசித்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. asiya omar said...
  ****// “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”//
  அப்பவே நம்ப ஆரம்பிச்சுட்டாங்க,இப்ப கேட்கணுமா?
  உங்களுக்கு என்னுடைய செம கைதட்டல்கள்../****

  நன்றி ஆசியா:)!

  பதிலளிநீக்கு
 31. மோகன் குமார் said...
  //Very humourous, Enjoyed this post fully :)) Pl. continue.//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 32. அமைதிச்சாரல் said...
  ***//அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.//

  லொள்ளு சீனியர் :-))))

  சுவாரஸ்யமான அனுபவங்கள்.. என்றும் உங்களுதே :-))//***

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 33. Shakthiprabha said...
  //கலக்கல் போஸ்ட். எல்லாருக்கும் அவங்க அவங்க பள்ளி கல்லூரி நாளெல்லாம் நியாபகம் வரும். க்ரூப் படத்தில் நீங்க யாருன்னு சொல்லுங்க!

  அந்த தாமரைப் பூ மாதிரி மலரும் கொரியோக்ரஃபி அருமை. :D உங்க சீனியர் அக்காக்கு கற்பனை வளம் கம்மி :))//

  அட, அன்பு மலர் ஐடியாவுக்கு காலங்கடந்தேனும் ஒரு பாராட்டு!! மகிழ்ச்சி. படத்தில் எங்கே இருக்கிறேன் எனப் பதிவிலேயே சேர்த்து விட்டேன் இப்போது. நன்றி ஷக்தி:)!

  பதிலளிநீக்கு
 34. KSGOA said...
  //ரொம்ப நல்லா இருக்குங்க.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. goma said...

  //நீங்கள் கான்வெண்டில் படிக்கும் ஆண்டுகளில் நானும் மாணவியாக இல்லாமல் போனேனே....நீங்கள் பள்ளிக்குள் நுழையும் போது நான் ஃபேர்வெல் பாடலோடு வெளியே வந்து விட்டேன்

  லொயலாவிலிருந்து கான்வெண்ட் போனது பிக்னிக் போவது போலிருந்தது என்ற வரிகள் அருமையான உணர்வு வெளிப்பாடு...


  அருமையான பதிவு...வரிக்கு வரி ஹாஸ்யம் இழையோடியது...வாழ்த்துக்கள்.//

  விரிவாக ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி. ஆம் வீட்டில் மேடை நிகழ்ச்சிகள் கூட ஐந்தாம் வகுப்புக்குக் காலக் கட்டத்தில்தான்:)!

  பதிலளிநீக்கு
 36. புதுகைத் தென்றல் said...
  ***//நாளை என்ன நேத்தும் உங்களூது தான் போல :)) இன்றும் உங்களுது தான் .. கலக்குறீங்க..//

  முத்துலெட்சுமின்னு பின்னூட்டத்தை ரிப்பீட்டிக்கறேன்.

  கோர்வையா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க//

  மிக்க நன்றி தென்றல்:)!

  பதிலளிநீக்கு
 37. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //அழகான அருமையான அசத்தலான ஆச்சர்யமான பதிவு. பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள். நன்றிகள்.//

  நன்றி vgk சார்.

  பதிலளிநீக்கு
 38. ஹேமா said...
  //முத்தக்காஆஆஆஆ....அனுபவம் சூப்பர் !//

  நன்றி ஹேமா:)!

  பதிலளிநீக்கு
 39. Kanchana Radhakrishnan said...
  //சூப்பர் பதிவு.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 40. அமுதா said...
  ****/*“இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா*/

  :-) நல்ல அனுபவங்கள். எவ்வளவு நல்லா நினைவு வச்சிருக்கீங்க... நானும் ஒவ்வொரு க்ளாசா யோசிக்க பார்க்கிறேன் ஒரு பனித்திரை தான் தெரியுது .../****

  இதற்காக யோசித்த வேளையில் பனித்திரை விலகி நிறைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன அமுதா:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 41. மாதேவி said...
  //சிறுவயது அனுபவங்கள் சுவாரஸ்யம்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 42. Vasudevan Tirumurti said...
  //அப்படி என்ன வயசாயிடுச்சுன்னு மலரும் நினைவுகள் ஆர்ம்பிச்சு இருக்கீங்க? :-)))//

  வருகைக்கு நன்றி திவா சார்:)!

  பதிலளிநீக்கு
 43. ஈரோடு கதிர் said...
  ***//இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க//

  :))))//***

  நன்றி கதிர்:)!

  பதிலளிநீக்கு
 44. அன்புடன் அருணா said...
  //அடடே கலக்குறீங்க!//

  நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 45. நான் உட்கார்ந்திருப்பவர்களையும் ஒரு வரிசையாக கணக்கிட்டுத்தான் மூன்றாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவதென உங்களை அடையாளப் படுத்தி குறிப்பிட்டிருந்தேன்.. நீங்கள் இரண்டாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவதென்பது உட்கார்ந்திருக்கும் நபரைக் குறிப்பிடுகிறீர்களோவென எனக்கு சந்தேகம்... ஆனாலும் மூன்றாவது வரிசையில் நிற்கும் இரண்டாவது குழந்தைதான் நீங்களென இன்னும் உறுதியாக நம்புகிறேன். எனக்கு தலை சுற்றுகிறது... நான் உங்களைக் குழப்பி விட்டேனா...

  பதிலளிநீக்கு
 46. @ நீலகண்டன்,

  ‘மேலிருந்து’ என்பதையும் பதிவில் இப்போது சேர்த்து விட்டேன். பெஞ்சு மேல் நிற்பவர்களில் இடமிருந்து இரண்டாவது:)!

  பதிலளிநீக்கு
 47. நடிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்று. முக்கியமாகச் சொல்ல வந்த இயக்கம் பற்றிப் பார்ப்போம். மீண்டும் பள்ளிப் பருவத்துக்கு வருகிறேன். வீட்டில் என்னுடைய கொரியோகிராஃபிக்கு தங்கைகள் ஆடிய நடனங்கள் (முற்றத்து ‘மணவட’ மற்றும் பாட்டாலையிலிருந்த தாத்தாவின் தேக்குக் கட்டிலே மேடை) எப்போதும் விருந்தினரால் பாராட்டப்பட்டது அன்பினால் மட்டுமே எனப் புரிய வராத வயது அது.//

  இதை படிக்கு போது நாங்கள்(தம்பி, த்ங்கைகள், தோழிகளுடன்) வீட்டில்
  நாடகங்கள், நடனங்கள் என்று நாங்களே தயார் செய்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.

  அன்பினால் பாராட்டப்பட்டது தான் நிச்சியம். அப்பா தான் என் முதல் ரசிகர் .
  ’ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா ?’ பாட்டுக்கு பாலையா மாதிரி நடித்துப் பாடும் போது கண்களின் ஒரத்தில் கண்ணீர் மல்க உடல் குலுங்க குலுங்க சிரிப்பார்கள் .

  கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் பூவிலங்கு மாட்டுற கல்யாணம் என்ற பாட்டுக்கும் நான் ஆடுவதைப் பார்த்து சிரித்து பாராட்டுவார்கள். உங்கள் பதிவு என் அப்பாவையும் என் பழைய சிறுமி பருவத்தையும் நினைக்க வைத்து விட்டது ராமலக்ஷ்மி.

  அருமையான பதிவு. சிறு வயது ராமலக்ஷ்மி படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 48. கோமதி அரசு said...

  உங்கள் நினைவலைகளில் நானும் மகிழ்ந்தேன் கோமதிம்மா:)! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 49. சிறு வயதிலிருந்தே கலைத்துறையில் கலக்கி இருக்கிறீர்கள். இந்தப் பதிவுகளுக்குப் பிறகுதான் நான் உங்கள் தளம் வரை ஆரம்பித்தேன் போலும்.

  சுவாரஸ்ய அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin