நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஜூலை, 2026

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் - ராஜேஷ் வைரபாண்டியனின் "அறல்" சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்

 

னித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன.

ஆனந்த விகடனில் வெளியான சமயத்தில் பரவலாகக் கவனத்தை ஈர்த்தக் கதை 'சின்னக்கிளி குட்டியப்பன்'. வளர்ப்பு தாய்மையின் உணர்வுப் போராட்டங்களை ஆழமாகச் சித்தரிக்கிறது.

செவ்வாய், 2 ஜூன், 2026

பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

ன்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.


108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. எதைக் குறிப்பிடுவது, எதைத் தவிர்ப்பது எனும் திகைப்பை ஏற்படுத்தும் கவிதைகள்.

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...

திங்கள், 23 டிசம்பர், 2024

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை - சாந்தி மாரியப்பனின் "நிரம்பும் வெளியின் ருசி"

  

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை 

வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு. 

திங்கள், 8 மே, 2023

தேரி - ராஜேஷ் வைரபாண்டியனின் நாவல் - ஒரு பார்வை - கீற்று மின்னிதழில்..

தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.  

காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை,  சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு,  நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!

வெள்ளி, 24 ஜூலை, 2020

க. அம்சப்ரியாவின் ‘தனிமையில் அலையும் தனிமை’ - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)

ரு மேகத்தைப் போலத் தனிமையில் அலைந்தேன்” வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் எழுதிய இந்த ஆங்கிலக் கவிதை புகழ் பெற்றதும், மிக விரும்பப் பட்டதும் ஆகும். தனித்த மேகம், மலைகள் மற்றும் பெருவெளிகளின் மேல், வானத்தில் மிதப்பதைப் போலத் தான் தனித்து நடப்பதாகச் சொல்லியிருப்பார். ஜான் கீட்ஸ் ‘தனிமைக்கு’ என்ற கவிதையில் மகிழ்ச்சியற்ற நகர வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு,

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நிலாரசிகனின் 'கடலில் வசிக்கும் பறவை' - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)

பரிமிதமான ஆற்றலைக் கொண்ட, எந்தவொரு திட்டமிடலும் இல்லாத கலை.” இது கவிதையின் பிரவாகத்தைப் பற்றியப் பேச்சு வருகையில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி தனது ‘ஸ்கைலார்க்’ (வானம்பாடி) கவிதையையே எடுத்துக்காட்டாகக் கொண்டு குறிப்பிட்டது. ஷெல்லியின் இக்கூற்று நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் “கடலில் வசிக்கும் பறவை” நூலில் இருக்கும் 60 கவிதைகளுக்கும் பொருந்தும். ஒருவர் தனது ஆன்மாவின் அடி ஆழத்தை உணர்ந்தால் மட்டுமே இத்தகுக் கவிதைகளை வடிக்க இயலும்.

வியாழன், 21 மே, 2020

க. அம்சப்ரியாவின் “வகுப்பறையே ஒரு வரம்தான்.. ” - மதிப்புரை.. ‘புத்தகம் பேசுது’ இதழில்..


வழிநடத்தும் ஒளிவிளக்கு..

சிரியர் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நேரம், கொடுக்கும் சுதந்திரம், மாணவர்கள் ஆசிரியர் மேல் வைக்கும் நம்பிக்கை, அன்பினால் உருவாகும் மதிப்பு இவை ஒன்று கூடும் இடத்தில் உன்னதமான ஆசிரியர்களையும் சிறந்த மாணவர்களையும் இந்தச் சமுதாயம் கண்டடைகிறது. மாணவர்களின் வாழ்கையை மாற்றி அமைக்கும் சக்தி, குறிப்பாகத் திசை மாறிச் செல்லும் சிறுவர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களைக் கொண்டு வந்து, தாமாக அவர்கள் ஒருபோதும் கண்டு பிடித்திடச் சாத்தியப்படாத சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஆசிரியருக்கு உண்டு. மாணவர்கள் பாடங்களைக் கற்றுத் தேர்வதில் மட்டுமின்றி, சமுதாயத்தை நேர் கொள்ளச் சிறந்த பண்புகளையும் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே ஆசிரியரின் பணி முழுமையடைகிறது. அக்கறையுடன் இதை மனதில் நிறுத்தி செயல்படும், 19 ஆண்டுகளாகத் தமிழ் துறையில் பணியாற்றும் ஒரு ஆசிரியரே, இந்நூலின் ஆசிரியர் என்பது கவனத்திற்குரிய சிறப்பம்சம்.

மாணவர்கள் தமது திறமைகளில் நம்பிக்கை வைத்து, தமக்கும் சமுதாயத்துக்கும் அந்தத் திறமை பயன்படும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ளவும் உயர்த்திக் கொள்ளவும் வழி காட்டுகிறார் ஆசிரியர் க.அம்சப்ரியா. எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை விட எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். “எங்கெல்லாம் கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைகிறதோ,

செவ்வாய், 14 ஜனவரி, 2020

க.அம்சப்ரியாவின் ‘கல்வி 100 சிந்தனைகள்' - மதிப்புரை.. ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில்..


கவிஞரும் தமிழ் ஆசிரியருமான க. அம்சப்ரியா அவர்களின் நூல் குறித்த மதிப்புரை இந்த வாரக் கல்கி பொங்கல் சிறப்பிதழில்..


நம்பிக்கை விதைகள்

மனிதர்கள் மனிதநேயத்துடன் மனிதர்களாக வாழ்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் மதங்களையும் சாதிகளையும் தாண்டிய சகோதரத்துவம் நிலவவும் கல்வி எத்துணை அவசியமானதென்பதை அறிவோம். ஆசிரியர்களின் அக்கறை, பெற்றோரின் பொறுப்பு, மாணவர்களின் மனநிலை இவை மூன்றும் சரியான கோணத்தில் அணுகப்பட்டால் மட்டுமே கல்விக் கூடங்கள் சிறந்த குடிமகன்களை நாட்டுக்கு அளிக்க முடியும்.

தமிழாசிரியரும் கவிஞருமான க. அம்சப்ரியா, அத்தகையக் கல்வி எத்தகு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர், மாணவர், ஆசிரியர், புத்தகம், கல்வி, வகுப்பறை மற்றும் சமுதாயம் ஆகிய தலைப்புகளின் கீழ் சிந்தனை விதைகளாகத் தூவியிருக்கிறார், நிச்சயம் அவை பெரும் விருட்சங்களாக உயர்ந்து பரிமளிக்கும் என்கிற நம்பிக்கையுடன். 19 வருட தனது ஆசிரியப் பணியில் அவர் கண்டு உணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக இச்சிந்தனைகள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

பெரும்பாலும் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதை அர்த்தமுள்ளதாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அறிவுரைகளை விடவும் கனிவான பேச்சினால் மட்டுமே குழந்தைகளை நெருங்க முடியும் என்பதை மனதில் பதிய வைக்கிறார். 'குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிகிற பெற்றோர்களால் ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளை வளர்ப்பது கடினம்' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாணவர்களுக்கு மற்றுமொரு பெற்றோராய் இருந்து அக்கறையுடனும் பொறுப்புடனும் வழிநடத்தும் 'ஆசிரியரைப் புறக்கணிக்கும் சமுதாயம் தனது தலைமுறையை மட்டுமல்ல. அடுத்தடுத்த தலைமுறையையும் இழப்பிற்குள்ளாக்குகிறது.' என எச்சரிக்கிறார். திகைக்க வைக்கும் அளவில் மாணவர்கள் மத்தியிலும் குற்றங்கள் மலிந்து வரும் இந்நாளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றினால் மட்டுமே மாணவர்கள் மனதில் இடம் பெற்று அவர்களை வழிநடத்துவதில் வெற்றி பெற முடியும் எனக் காட்டுகிறார்: 'எழுத்துகளாகவும் கருத்துகளாகவும் மாணவர் மனதில் நுழைபவரே ஆசிரியர்', 'ஒரு மாணவரை நல்வழிப்படுத்த ஆசிரியரின் கருணை மிக்க ஒரு சொல்', 'எத்தனை மாணவர்களைச் சமுதாயத்திற்கான பொறுப்புள்ளவர்களாக மாற்றினோம் என்பது ஆசிரியரின் வாழ்க்கை'! 

அதே நேரம் மாணவர்கள் ஆசிரியரை தம் வாழ்வின் வழிகாட்டியாக நம்பத் துவங்கினாலே வாழ்க்கை ஒளிமயமாகும் எனப் புரிய வைக்கிறார். புத்தகங்களை நேசிக்க, புத்தகங்கள் வழியே பயணித்துப் புதிய உலகைக் காணக் கற்றுத் தருகிறார். 

மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களால் பள்ளிக்குச் சேரும் புகழைக் குறிவைத்து இயங்கும் கல்வியாளர்களைச் சிந்திக்க வைக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதல்ல'.  நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை சரியா என விவாதித்து வரும் நிலையில் அதற்கான விளக்கங்களைத் தெளிவாக முன் வைத்திருக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதில்ல', 'மனிதர்களைப் பக்குவப்படுத்துவதே கல்வி'!

சிறந்த பெற்றோரை, மாணவரை, ஆசிரியரை அடையாளம் காட்டுவதோடு அவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வைக்கிறார் ஆசிரியர். ஒரு கையேட்டின் வடிவில் அனைத்துத் தரப்பினரையும் சிந்திக்க வைக்கும் தொகுப்பாகச் சுடர் விடுகிறது ‘கல்வி 100 சிந்தனைகள்’.  ஒவ்வொரு சிந்தனைக்கும் மாணவச் செல்வங்கள் வரைந்த நூறு ஓவியங்களைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
*

[முழுமையான கட்டுரையைப் பகிர்ந்து உள்ளேன்.]

கல்வி 100 சிந்தனைகள் - க. அம்சப்ரியா;
பக்கங்கள்: 120; விலை: 110/- ; வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை - 11; தொலைபேசி எண்: 94446 40986

நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அம்ருதா பதிப்பக அரங்கில் இந்நூலை வாங்கிப் பயனுறலாம்.


நன்றி கல்கி!
***

சனி, 3 ஆகஸ்ட், 2019

காலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’ - கீற்று மின்னிதழில்..

யற்கையாக மனதில் பொங்கி எழும் உணர்வுகளுக்கு அணைபோட முடியாது. செயற்கையான வார்த்தைகளால் அத்தகு உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. இயல்பான பிரவாகமாக அமைந்த பொம்பூர் குமரேசனின் கவிதைகள் கிராமத்து வாழ்வை, ஒரு விவசாயக் குடும்பத்தின் பின்னணியை, அவர்களின் கள்ளங்கபடமற்ற சந்தோஷங்கள், அதை உடனே பறித்துக் கொள்ளும் யதார்த்த வாழ்வின் சோகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் கண் முன் கொண்டு வருகின்றன. 

சங்கராபரணி நதியைப் போற்றும் கவிதையில் ஆரம்பித்து நதி அன்னைக்கு நாம் செய்யும் துரோகத்தில் முடிகிற இத்தொகுப்பு,  நதியைப் போலவே தெளிந்த நீரோட்டமாக, ஆரவாரம் இன்றி அதே நேரம் ஆழமான பாடுபொருட்களோடு சீராக ஓடுகிறது.

“...எங்கள் பிறப்பும்
சங்கராபரணிதான்
எங்கள் இறப்பும்
சங்கராபரணிதான்.

...எங்கள் 
செத்த வயல்களில்
பச்சை இரத்தம் 
பாய்ச்சியவள்.

புதன், 4 அக்டோபர், 2017

சிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..

விதைகளைத் தன் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன்.  அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

னிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம். 
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.

வியாழன், 5 ஜனவரி, 2017

கல்கியில்.. ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ - ஒரு பார்வை


வாழ்தலை வரமாக்கும் அனுபவங்கள்

நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுந்து அடங்கும் கேள்வி. விடை தேடுபவர் சிலர். தம் சிந்தனைக்கு எட்டிய வகையில் ஒரு பதிலைக் கண்டு திருப்தி அடைந்து விடுபவர் பலர். ஆசிரியரின் பார்வையில் விரிகிற உலகம் வெகு இயல்பாக இந்தத் தேடலைப் பூர்த்தி செய்கிறது. ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்றே தன்னை அழைத்துக் கொள்ளும் ஈரோடு கதிர் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடும் அன்றாட நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களையும் தன் ஆழ்ந்த அவதானிப்பால் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். ..

8 ஜனவரி 2017 இதழில்.. 

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது..

ழுத்தாளர் பாவண்ணனின் ‘யானை சவாரி’ சிறுவர் பாடல் தொகுதியிலிருந்து மேலும் ஒரு பாடல், நான் எடுத்த படங்களுடன்.

ஆனந்தச் சிறுமி
கால்முளைத்த குட்டிப் பெண்ணை
தடுக்க முடியவில்லை
காலை முதல் இரவு வரைக்கும்
ஏகப்பட்ட தொல்லை

திண்ணைப் பக்கம் போவதுபோல
அடியெடுத்து வைக்கிறாள்
திசையை மாற்றி அடுத்த கணமே
அடுப்புப் பக்கம் நிற்கிறாள்

வெள்ளி, 5 ஜூன், 2015

தன் திசையில் வெகுதூரம்.. - நவீன விருட்சத்தில்..

'காலங்களைக் கடந்து வருபவன்' சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு - ஒரு பார்வை 

விதைகளின் நோக்கம் வாழ்வின் அழகியலை, தத்துவங்களை, உண்மைகளைத் தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக, கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன.

புதன், 25 மார்ச், 2015

இதிகாசக் கடமை - ‘சக்கர வியூகம்’ புத்தக விமர்சனம் - கல்கியில்..

இந்த வார கல்கி இதழில்..

ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’ சிறுகதைத் தொகுப்புக்கான எனது நூல் விமர்சனம்..

பக்கம் 39_ல் :

திங்கள், 17 நவம்பர், 2014

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. - ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’



ருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை.  அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.

பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை  எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

கற்பனைப் பேரலை - “மீன்கள் துள்ளும் நிசி” நிலா ரசிகனின் கவிதைத் தொகுப்பு - என் பார்வையில்.. - நன்றி கீற்று!

இயற்கை தரும் ஆச்சரியங்கள் எத்தனைக்கு எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது வாழ்க்கையும். இதை உணரும் உள்ளத்திலிருந்து பிறக்கிற கவிதைகளில் தென்படும் நேர்மை, நித்தம் உதிக்கும் சூரியனுக்கு ஒப்பானது. பிரபஞ்சத்தை இயக்குவது ஒரே சக்தி. செடி, மரம், பறவை, மீன், விலங்கு, மலை, கடல், வனம், அருவி, ஆறு, மனிதன், சூரியன், நிலவு, விண்மீன், கோள்  எல்லாவற்றுக்கும் பின்னாலிருக்கும் சக்தி ஒன்றே.  நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் இயற்கைக்குப் பின்னாலிருக்கும் விதிகள் யாவும் இந்த ஒரு மகா சக்தியின் பல வடிவங்களே. இந்த உண்மையில் வியந்து தன்னைத் தொலைக்கிற கவிஞன் இன்னும் ஆழமாக இயற்கையை அவதானிக்கவும் நேசிக்கவும் தொடங்குகிறான். அவற்றின் ஒவ்வொரு அசைவையும் தன் எண்ணங்களோடும் வாழ்வோடும் தொடர்புடையதாக்கியும் கொள்கிறான்.

வியாழன், 21 நவம்பர், 2013

நோயல்ல.. குறைபாடே..! - "ஆட்டிசம் சில புரிதல்கள்" புத்தக விமர்சனம் - கல்கியில்..

யெஸ் பாலபாரதியின் "ஆட்டிசம் சில புரிதல்கள்" நூல் குறித்த எனது விமர்சனம் 24 நவம்பர் 2013 கல்கியில்..
 நன்றி கல்கி!
சற்றே விரிவாகப் பார்ப்போம் இங்கே...

டப்பு ஆண்டில் 88-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள நம் நாட்டில் பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலே நிலவுகிறது.

‘மனநிலை பாதிப்பு வேறு, ஆட்டிசம் வேறு என்கிற தெளிவுகூட நம்மவர்கள் மத்தியில் இல்லை’ என வருத்தபடுகிற, எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நூலாசிரியர் யெஸ். பாலபாரதி, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அவர்தம் பெற்றோர்கள் நலன் கருதி விரிவாக அலசியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே “ஆட்டிசம் சில புரிதல்கள்”!

பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரிவரப் பயன்படுத்த முடியாததால் இயல்பான நடவடிக்கைகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்டிசம், ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல எனத் தெளிவு படுத்துகிறது நூல். ஐந்து வயதை எட்டினால்தான் இக்குறைப்பாட்டை அடையாளம் காணவே முடியும் என்று சொன்ன அதே மருத்துவ உலகம் விரைவாக அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரமாக பாதிப்பைக் கண்டு கொள்கிறோமோ அத்தனை சீக்கிரத்தில் சரியான பயிற்சிகளைத் தொடங்குவதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு, முற்றிலுமாகவே ஒழுங்குபடுத்திடும் வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

ம்மைச் சுற்றியிருக்கும் எந்த குழந்தையானாலும் அவர்களிடம் ஆட்டிசம் இருக்கிறதா என அடையாளம் காண்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறோம். இதை நூலின் முக்கிய நோக்கமாகவே கருதி, இருபது வழிகளையும் படங்களுடன் வாசிப்பவர் மனதில் நிறுத்துகிறது நூல். அவற்றில் சில: ஒதுங்கி இருப்பது; பொருத்தமின்றி பொருட்களைப் பற்றுவது; கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது; மற்ற குழந்தைகளுடன் பழக ஆர்வம் காட்டாமை; தொடப்படுவதை, அணைக்கப்படுவதை விரும்பாமலிருப்பது; அச்சம் ஆபத்தை உணராதிருப்பது; ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது; சில செயல்களைச் சரியாகச் செய்தாலும் சமூகப் புரிதலற்று இருப்பது; மாற்றங்களை அசெளகரியமாய் உணருவது; வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாதிருப்பது; தேவைகளை உணர்த்தப் பெரியவர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுவது; அதீதப் பதட்டம்; காரணமற்ற அழுகை, சிரிப்பு; குதிப்பது, கைகளைத் தட்டுவது; வலியை உணராதிருப்பது, சுழலும் பொருட்களை இரசிப்பது, அதிலேயே ஆழ்ந்து போவது; சுட்டுவிரலால் சுட்டிக்காட்டத் தெரியாதது; பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பாராமல், காது கேளாதது போலிருப்பது போன்றன.

ஆட்டிசத்தின் வரலாறு, ஸ்பெக்ட்ரம் டிஸார்டர், எது சரி எது தவறு, சென்சரி பிரச்சனைகள், சிகிச்சை முறைகள், குழந்தைகளைக் கையாளும் முறை, பெற்றோர்/கவனிப்போரின் பங்கு, பத்தியங்கள்,ஒவ்வாமைகள் எனப் பல தகவல்களை ஆங்கில நூல்களிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆய்வு செய்து மட்டுமேயன்றி நேரடியாக மருத்துவர்களையும், தெரபிஸ்டுகளையும், பாதிப்புக்குள்ளான பெற்றோரையும் சந்தித்துப் பேசி அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் தயாரித்திருக்கிறார் யெஸ்.பாலபாரதி கட்டுரைகளை.

ங்கள் குழந்தைகள் குறித்து பெருமையடையுங்கள், நாட்கள் ஓடுவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள், தேவையற்ற குற்றவுணர்வைத் தவிர்த்திடுங்கள், உங்களை நீங்களே நம்புங்கள், வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற ஆலோசனைகள் உட்பட ஜீன் அவிரம் (Jene Aviram) எனும் மேலை நாட்டவர், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோருக்குத் தந்திருக்கும் பத்துகட்டளைகளையும் தமிழில் தந்திருப்பது  நம்பிக்கையை விதைக்கிறது. அத்துடன் நின்றிடாமல், தங்கள் குழந்தையின் எதிர்காலம்  குறித்துக் கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கிற பெற்றோரின் நிலை குறித்து சங்கடப்படுகிற ஆசிரியர்  அப்படி சோர்ந்து போகத் தேவையில்லை என்பதற்காக ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டாலும் உலகின் பார்வைத் தம் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றிச் சொல்லி மேலும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

இந்நூல், தங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானதையே உணராமலிருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்கேனும் மட்டுமின்றி, சாதாரணக் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆட்டிசக் குழந்தைகளைப் புரிந்து கொள்ள, ஒதுக்காமல் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய, அவர்களது உரிமைக்காக வாதிட..,  துணை நிற்குமானால் உள்ளபடி மகிழ்வேன் என்கிறார் நூலாசிரியர்.
*

ஆட்டிசம் சில புரிதல்கள்
பக்கங்கள்:80 விலை.ரூ.50
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் (அனைத்து கிளைகளிலும்).

தொலைபேசி எண்கள்: 044 24332424, 24332924, 24339024.
**

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை


சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் அத்தியாவசியமாகிறது? சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், உலகுக்குத் தன்னை நிரூபிக்கவும்தானா?  ‘இல்லை’ என்கிறார் மோகன் குமார்.  எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, மாற்றங்களுக்குத் தயாராகி, சவால்களைச் சந்தித்து, நினைத்தும் பார்த்திராத சிகரங்களைத் தொட்டு, நாமே அமைக்கும் புதிய பாதையில் நம் வாழ்க்கைப் பயணம் சீராக ஓடத் தொடங்குவதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கும் திருப்திக்காவுமே என்கிறார் இந்நூலின் மூலமாக.

‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’

வெள்ளி, 29 மார்ச், 2013

சாமியாட்டம் - யெஸ். பாலபாரதியின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை - கீற்றினில்..


படைப்பிலக்கியம் என்பது அந்தந்த காலக்கட்டத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகின்றன. ஏற்கனவே சமூகத்தில் ஊறிப்போன கோட்பாடுகளிலிருந்து விலகாமல் அவற்றைச் சார்ந்தும் ஆதரித்துமாய் படைக்கப்படுகிறவை ஒரு வகை. களையப்பட வேண்டிய நெறிமுறைகளை, தவறான நம்பிக்கைகளை, திருத்திக் கொள்ள வேண்டிய வழக்கங்களை அக்கறையுடனும், அங்கதம் கலந்தும் சுட்டிக்காட்டுபவை ஒரு வகை. இரண்டாவது வகையில் வெற்றி கண்டிருக்கிறது யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு.   மற்றுமொரு செய்தியாக நாம் கடக்க நேர்ந்த நிகழ்வுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக சீர்க்கேடுகளையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் சித்தரிக்கிற கதைகள் மனதில் வலியையும், நம் இயலாமை குறித்த குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin