வாட்டும் நோயினால்
வருத்தத்தில் அவன்-
இறுகிய முகமும்
குன்றிய உள்ளமுமாய்...
நலம் விசாரிக்க
வலம் வந்த மருத்துவர்
இவன் இருக்கும் இடம்
வந்து நின்றார்-
வெளிர் உடையும்
பளீர் சிரிப்புமாய்...
'கலக்கம் விலக்கிடு
காலத்தே குணமாவாய்!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்
பழகச் சலிப்பதேன் ?
படுத்தே இருந்தால்
அடுத்துநீ எழுந்து நடப்பது
எப்போதாம்?' கேட்டார்
புன்னகை பூத்தபடி.
தொடர்ந்தார் கனிவாய்:
'மலர்ச்சியுடன் மருந்துகளை
உட் கொள்வாய்,
உற்சாகமாய் இருந்திட்டாலே
தேறிடலாம் விரைவாய்!'
நம்பிக்கை ஊற்றினிலிருந்து
நன்னீர் வழங்கிய
திருப்தியுடன்
திரும்பி நடந்தார்.
'மிடுக்காக வந்து
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,
பட்டால் அன்றோ புரியும்
வலியின் ஆழமும்-
கதிகலங்கி நிற்குமென்
உள்மனதின் கோலமும்!'
தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற
தெளிவில்லாமல வென்னீரென்றே
நினைத்துச் சலிக்கின்றான்.
சொன்னவரும் மனிதர்தான்
அவருக்கும் இருக்கக்கூடும்
ஆயிரம் உபாதை என்பதனை
ஏனோ மறக்கின்றான்.
**
வாழ்வோடு வலியும்
காலத்தோடு கவலையும்
கலந்ததுதான் மானுடம் என்பது
இறைவனின் கணக்கு.
இதில் எவருக்குத்தான்
தரப்படுகிறது விதிவிலக்கு?
ஆறுதலாய் சொல்லப்படும்
வார்த்தைகள் கூட சிலருக்கு
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
வேல்களாய்த் தோன்றுவது
வேதனையான விந்தை!
துயரின் எல்லை என்பது
தாங்கிடும் அவரவர்
மனவலிமையைப்
பொறுத்ததே!
ஆயினும் கூட...
பாவம்பாவம் எனப்
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
உற்றார் பலர் உத்தமராகிறார்.
விரக்தியை விடச் சொல்லுபவர்
வேதனை புரியாதவராகிறார்!
சோதனை மேல் சோதனையென
சோர்ந்திருப்பவனின் சோகத்தை
மென்மேலும் சூடேற்றுபவர்
மனிதருள் மாணிக்கமாகிறார்.
மனதைரியத்துடன் இருக்கும்படி
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ
அடுத்தவர் அல்லல்
அறிய இயலாத
அற்பப் பதராகிறார்!
அக்கறையை அனுபவத்தை
ஆக்கப் பூர்வமாய்
நோக்கத் தெரியாமல்-
அன்பை ஆறுதலை
இனம் புரிந்து
ஏற்கத் தெரியாமல்..
நேசத்துடன் பாசங்கலந்து
நீட்டப்படும் பூங்கொத்தில்
முட்களைத் தேடியபடி-
இருக்கத்தான் செய்கிறார்
சிலர்..
அத்தகு
இடம் அறிந்து
மெளனிகளாகத்
தெரியாமலேதான்
பலர்..!
*** *** ***
படம்: இணையத்திலிருந்து..
*17 ஏப்ரல் 2003, திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்’ என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த மற்றொரு கவிதை.
23 ஜூலை 2009 ‘விந்தை உலகம்’ என்ற தலைப்பில் வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.
*“ஈடு செய்ய முடியாத இழப்பினைச் சந்தித்தவருக்கும் மீண்டு வரப் போராடும் உடல்நலக் குறைவோடு வருந்துவோருக்கும் மட்டும், என்றைக்கும் ஆறுதலை பன்னீர் புஷபங்களான வார்த்தைகளால் மட்டுமே தந்துவிட முடியாது. ஆனால் அவர்தம் மனக்காயங்களைக் காலம் ஆற்றிட, உடல் நலம் பெற்றுத் தேறிட நம் உள்ளார்த்தமான பிரார்த்தனைப் பூக்கள் நிச்சயம் கை கொடுத்திடும்.”