சனி, 30 ஜூலை, 2011

மேகமே மேகமே.. - நான் பார்க்கும் ஆகாயம்

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண் மேகங்கள் என்றும் பேரழகு.

நினைவுக்கு வந்த பாடல் வரிகளுடன் படங்கள் எட்டு இங்கே:

1. “போவோமா.. ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..”

***

2. “ஓடும் மேகங்களே.. ஒரு சொல் கேளீரோ..”

***

3. “வெண்மேகம் விண்ணில் நின்று.. .. பன்னீர் தூவும்..”
இயந்திரப் பறவையின்
இறக்கைத் தடங்கள்.
***

4. “மேகம் மேகம்.. போகும் தூரம்..
MAGIC JOURNEY!!!”
***


ஏற்கனவே பகிர்ந்தவை ஆயிற்றே என நான் விடப் போனாலும் ‘மேகமே.. மேகமே..’ எனத் தலைப்பிட்டு “எங்களைச் சேர்க்காவிட்டால் எப்படி?” எனத் தாமாக வலையேறிப் பதிவில் இடம் பிடித்துக் கொண்டன 5,6,7 :))! முதல் நான்கும் கடைசியும் முத்துச்சரத்தில் இதுவரை கோர்க்காதவையே:)!

5. “மழை தருமோ...... இம் மேகம்”
***

6. “மேகமே.. மேகமே.. பால்நிலா.. காயுதே”
***

7. “வானம் எனக்கொரு போதிமரம்..”
***

நாளும் நமக்கது சேதி தரும்:

8. “கீழ்வானிலே.. ஒளி தான் தோன்றுதே..”


என் ஃப்ளிக்கர் தளத்தில் ‘நான் பார்க்கும் ஆகாயம்’ தொகுப்பாக இங்கே.
***

புதன், 27 ஜூலை, 2011

செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ - ஒரு பார்வை - திண்ணையில்..


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”. தலைப்பே சற்று அதிர்வைத் தருகிறது இல்லையா? ஞாபகம் அற்றுப் போவது எவருக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது. மூப்பினால் ஆகலாம். ஏதேனும் அழுத்தத்தால் ஆகலாம். பிணியினால் நேரலாம். எப்படியேனும் நாம் வாழ்ந்த வாழ்வு, சந்தித்த மனிதர்கள், நித்தம் கடந்த நிமிடங்கள் என எல்லாமே முற்றிலுமாய் அற்றுப் போகும் ஒரு நாள் வந்தே தீரும். அது எப்படி அமையும்? சர்வ சாதாரணமாகச் சொல்லியதாலேயே தலைப்புக் கவிதை கனம் கூடிப் போய். வாழ்வோடு, சமகால நிகழ்வுகளையும் பதிய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்த அற்புதமான இத்தலைப்பை, நியாயப் படுத்தியிருக்கின்றன தொகுப்பின் 52 கவிதைகளும்.


எழுத்து என்பதே அதுதானே. சிலர் கதைகளாக, கட்டுரைகளாக தமது அடையாளங்களை, தாம் பார்த்த சமூகத்தின் போக்குகளை, எதிர்கொண்ட மானுடர் ஏற்படுத்திய உணர்வுகளை ஆவணப்படுத்திச் செல்லுகிறார்கள். இங்கு செல்வராஜ் ஜெகதீசனுக்கு அது கவிதைகளில் கைகூடி வந்திருக்கிறது வெகு சுலபமாக.


செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் 2008-ல் திண்ணை இணைய தளத்தில் எனக்கு அறிமுகமாயின. தொடர்ந்து நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களிலும் கல்கி, யுகமாயினி, அகநாழிகை, நவீன விருட்சம் போன்ற பல பத்திரிகைகளிலும் பரவலாக எழுதி வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர் அபுதாபியில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.


2008, 2009 என அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அந்தரங்கம்’,‘இன்ன பிறவும்’ என முதலிரண்டு தொகுப்புகளை வெளியிட்டுக் கவிஞரை சிறப்பித்திருக்கிறது அகரம் பதிப்பகம். இது மூன்றாவது. அகநாழிகை வெளியீடு. முன்னுரை மொழிந்திருப்பவர் கவிஞர் கல்யாண்ஜி என்பதுவே போதும் கவிதைகளுக்குக் கட்டியங் கூற.


தொகுப்பிலுள்ள பல கவிதைகள் நான் ஏற்கனவே இணைய இதழ்களிலும், அவரது வலைப்பக்கத்திலும் வாசித்திருந்தாலும் ஒருசேர வாசிக்கையில் அன்றாடங்களைப் பற்றியதான அவரது அவதானிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மறுமுறை” கவிதையில்,

‘நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.



நடைபாதை சித்திரம்” ஒன்றை நம்முள் விரிய வைத்துத் தன் வேதனையைப் பகிருகிறார். ஒரு சாண் வயிற்றுக்காக ஓயாமல் உழைக்கும் கடைநிலை ஊழியரின் வாழ்க்கைப் போராட்டத்தை, ஓடிக்குறைக்க இயலும் தன் வளர்ந்த வயிற்றுடன் ஒப்பிட்டு சமூக இடைவெளியைக் காட்டுகிறார் “வயிறு” கவிதையில். உடல் உழைப்புக்கு உரிய நியாயம் கிடைக்காத உலகமல்லவா இது? எதிர் கேள்வி கேட்காத “கிடை ஆடுகள்” மானுடருக்கு எத்தனை ருசியானவை என மனதை உதற வைக்கிறார். “விளம்பரங்களில்” வகுபட்டுப் பின்னமாகிக் கொண்டிருக்கும் பொழுதுகளைச் சாடுகிறார். “முன் முடிவுகளற்று இருப்பது” குறித்து முழுமூச்சாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.


குழந்தைகளைக் கொண்டாடுகிறார் சில கவிதைகளில். “பெரிய ரப்பர்” ரசிக்க வைக்கிறது. “நண்பர்கள் வட்டம்” கேட்கிற கேள்வி சுய பரிசோதனைக்கு உதவுகிறது. புலால் கடையிலிருந்து “பின் தொடரும் நிழல்” வன் கொடுமையை வாழ்வில் இயல்பானதாக எடுத்துக் கொண்டு விட்ட மனிதரைச் சாடுகிறது.


சிறுகவிதைகளில் ஒன்று,

பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.


‘பறத்தல்’தனை வாழ்தல் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகின்றது எனக்கு. இவர் போல வாழ்வாதாரத்துக்காக ஊரையும் உறவுகளையும் விட்டுப் பிரிந்தவர் தனிமையில் உணரும் வெறுமையை ஆதங்கத்துடன் பேசுவதாகப் படுகிறது. அப்படித் தோன்றக் காரணிகளாக பிரிவின் துயரைப் பேசுகின்றன “ரயில் கவிதைகள்.” தவிரவும் “விமான நிலைய வரவேற்பொன்றில்” ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்ப்பட்டவனிடம் தனையே பொருத்திப் பார்க்கிறாறோ கவிஞர்? அவனை நோக்கித் தவழவிட்டப் புன்னகையைப் பற்றி,

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு’
.


இதுவும் கடந்து போகும்” துவண்டு நிற்போருக்கும், துரோகத்தை பார்த்தோருக்கும், துயரில் தத்தளிப்போருக்கும் உலகெங்கும் பரவலாக வழங்கப்படும் ஆறுதல் மொழி. ஆனால்..,

இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை


என்பது அனுபவித்தவருக்கே புரியுமென்பதாக அமைந்து போன பேருண்மை.


தையும்” எனும் இரண்டாவது கவிதையில்..,

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்களேன்
ஏனைய பிற யாவற்றையும் போல


என கேட்டிருப்பது அவசியமில்லாத தவிப்பாக..! ஏனெனில் தொகுப்பை முடிக்கும் போது நன்றாக உணர முடிகின்றது, கால் நனைக்கும் ஓயாத கடலலைகள் பாதங்களுக்கடியிலிருக்கும் மணலோடு நமையும் இழுப்பது போல், தீராத வாழ்வலைகளால் நமை உள்வாங்கும் கவிதைகளை. ஆயினும் அத்யாவசியமானதாகிறது இக்கவிதை,

இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்


எனும் முந்தைய தன்னடக்க வரிகளால். அவையே ஆழ்கடலினின்று ஆகச் சிறந்த ஒரு நன்முத்தைக் கரை ஒதுக்கிச் சென்று விட்டுள்ளன இத்தொகுப்பாக. பத்திரமாகக் கொண்டு சேர்ப்பித்தச் சிப்பியாக அகநாழிகை பதிப்பகம். கவிஞருக்கும் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
***

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.50
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
புத்தகத்துக்கு அணுகவும் : பொன்.வாசுதேவன் (அகநாழிகை) - 999 454 1010
இணையத்தில் வாங்கிட: [https://www.nhm.in/shop/100-00-0000-081-8.html]
*** ***

24 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

அன்பின் வரிகள் - வடக்கு வாசலில்..



காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று.
காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று கழன்று
கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.
***

படம்: இணையத்திலிருந்து..

ஜூலை 2011 வடக்கு வாசல் பத்திரிகையில்,
நன்றி வடக்கு வாசல்!


அட்டைப்படத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் இசைவிழா மற்றும் வடக்குவாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கே செல்லலாம்.

வியாழன், 21 ஜூலை, 2011

மயிலே மயிலே

கணினியில் பழைய தொகுப்புகளில் படம் ஏதோ தேடுகையில் வந்து மாட்டின ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என சில மயில் படங்கள். 2006-ஆம் ஆண்டு பெங்களூரு பனர்கட்டா தேசியப் பூங்காவில் எடுத்த படங்கள் முதல் மூன்றும். ஆண்டவனின் படைப்புகளில் அசர வைக்கும் பறவை.

#1. மயிலா, இது ஒயில்!


#2. பீடு நடை



#3. ஒய்யாரத்தில்..


பனர்கட்டா பூங்காவுக்கு சென்றும் வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது வெள்ளை மயிலும் இருந்தது. தோகைவிரித்தாடிய அம்மயிலை அசையும் படமாக எடுத்ததில் நிழற்படமெடுக்க விட்டுப் போயிற்று. இப்போது வெள்ளை மயில் இருக்கிறதா தெரியவில்லை. பச்சை வண்ண மயில் நிச்சயம் இருக்கும். ‘மயிலே மயிலே இறகு போடு’ எனக் கேட்காமல் ‘எனக்காகத் தோகை விரித்தாடு’ எனக் கேட்டு நிழற்படமாகக் காட்சிப் படுத்திட ஆசை:)!


#4. மனங்கவருது
மயில்கழுத்தின் வண்ணம்
வியக்க வைக்குது முதுகிலே
இறைவன் தீட்டிய சித்திரம்
இரண்டு வருடம் முன் திருச்செந்தூரில் எடுத்த படம். முருகன் பக்தர்களைக் காணப் புறப்படும் வரை புல் தரையில் மேய்ந்து கொண்டிருந்தார் மயிலார்.

தேசியப் பறவைக்கு லால்பாக் மலர்கண்காட்சியில் அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம்.

#5 . ‘இதோஓஓஒ.. பாரு. இதுதான் மயிலு..’
மனிதர்கள் வேட்டையாடுவதாலும், உகந்த வாழ்வி்டங்கள் குறைந்து வருவதாலும் பச்சை மயில் இனம் அழியும் அபாயம் இருப்பதாக IUCN, the International Union for Conservation of Nature அறிவித்திருப்பது வருத்தமான செய்தி. நிழற்படங்களிலும், இப்படிப் பொம்மைகளாகவுமே வரும் சந்ததிக்கு காட்டுமாறு ஆகிவிடக் கூடாது மயில் இனமும்.
***

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தாய் மனசு - திண்ணையில்..

ம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.”

“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”

கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று.

“என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ காக்ராவாமே. அது வாங்கணுமாம்.”

“அதுங்க அப்படித்தான் கண்ணக் கசக்கும். அடம் பண்ணும். எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டம். குடும்ப நெலம புரிய வேண்டாமா? மொதல்ல எதுக்கு இப்ப புதுத் துணி. பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குதானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ண போட்டுக்கச் சொல்லு.”

“வாஸ்தவந்தாம்மா. ஆனா புதுசு கட்டின மாதிரியாகுமா?”

“ஆமா பிசாத்து நீ முன்னூறு ரூவாய்ல வாங்குற புதுச விட மூவாயிர ரூபா ட்ரெஸ்ஸை போட கசக்குதாமா ஒம் பொண்ணுக்கு?”

‘தினம் தினம் மிஞ்சின பிரியாணியும், கறி சோறும் இங்கே கொட்டிக் கொடுத்தாலும், வீட்டில ஒரு வா கஞ்சி வச்சுச் சூடா உறிஞ்சுக் குடிக்கிறதுதாம்மா தேவாமிர்தம்’ நினைத்ததைச் சொல்ல முடியாமல் கமலம் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன். பொட்டைப் பசங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்து வைக்காதே. இன்னிக்கு கஷ்டந்தெரியாம அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேட்கிற மாதிரியேதான் கட்டிக்கிட்டுப் போனபிறகும் இருக்கும்ங்க” பின்னாடியே வந்து சமாதானம் பண்ணுகிற மாதிரி சொல்லிச் சென்றாள் கோதை.

ரண்டு நாட்கள் சென்றிருக்கும். துணிகளை ஒவ்வொன்றாக வாஷிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்த கமலம், வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். நேராக மதிய தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த கோதையின் முன் வந்து நோட்டுக்களை நீட்டினாள்.

“சாரோட சட்டைப் பையில இருந்துச்சும்மா. சலவைக்குக் கூடையில போடும் போதே பாத்து போடுங்கம்மா.”

அசடு வழிய நோட்டுக்களை வாங்கிக் கொண்ட கோதை “நல்ல வேளையா பார்த்தே. மிஷினில் போட்டிருந்தியானா ஆயிரம் ரூவாயும் அரோகரான்னு போயிருக்கும்” என நெளிந்தாள்.

அடுத்த ஒரு மணியில் பம்பரமாய் சுழன்று அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு கமலம் கிளம்புகையில் கோதை அழைத்தாள்.

“இந்தா பிடி முன்னூறு ரூவா. அன்னிக்குக் கேட்டியே..”

“பொண்ணுக்கு துணி வாங்கவா? வேண்டாம்மா. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல வேலைக்காரம்மா லீவு போட்டிருச்சு. நாலஞ்சு நாள் அங்கே செய்யறதா ஒத்துட்டிருக்கேன். கணிசமா தருவாங்க. அதுல சமாளிச்சுப்பேன்.”

“அன்னிக்கு எடக்கு முடக்கா ஏதோ சொல்லிட்டேன்னு ராணியம்மாக்குக் கோவமோ?”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனாப் பாருங்க. இந்த வெள்ளி வந்தா பொண்ணுக்கு பன்னெண்டு முடியுது. அறியா வயசு. ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே. அடம் வளரும்னு நீங்க பாக்கறீங்க. அது கண்ணுல தண்ணி வரப் படாதுன்னு இந்த தாய் மனசு பாக்குது. ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே. போகுது விடுங்க. நாலுநாளு கூடுதலா கஷ்டப்பட்டது, எம்புள்ள கண்ணு மலர்ந்து சிரிக்கயில மறஞ்சு போகும். நீங்க சொன்னாப்ல மாசம் பிறந்தா கைக்கு வர கொஞ்சங் காசாவது உங்க பக்கம் நிக்கட்டும். வரேம்மா.”

‘கடனா இல்லே. அன்பளிப்பாதான் கொடுக்க வந்தேன்’ சொல்லும் திராணி அற்று நின்றிருந்தாள் கோதை.

***

படம் நன்றி: இணையம்

10 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

புதன், 13 ஜூலை, 2011

துளசி கோபாலின் ‘என் செல்ல செல்வங்கள்’ - ஒரு பார்வை - அதீதத்தில்..

ன் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் இது அதையும் தாண்டி அன்பைப் பற்றி அதிகம் பேசுவதாய் உள்ளது. சுமார் முப்பது ஆண்டு கால வாழ்க்கையை அலசியபடியே நகரும் பயணம் எங்கினும் அன்பு காட்டிய செல்லங்களுடன்.. அன்பைப் பொழிந்த மனிதர்களும் வருகிறார்கள். குறிப்பாக முதல் ஒன்பது அத்தியாயங்களில்.

புத்தகத்தினுள் செல்லும் முன் ஆசிரியரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பத்திரிகை எழுத்தாளர்கள் இன்னுமொரு வட்டத்தை அடைய விரும்பி இணையத்தை தஞ்சம் அடைந்து வருவது ஒரு பக்கம் எனில் இவர் இணையத்தில் எழுத ஆரம்பித்துத் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்று இணையத்தில் பகிர்ந்தவற்றையே புத்தகங்களாக்கிக் கொண்டு வருகிறார். கூடவே பல பத்திரிகைகளின் மூலமாக வாசகர் வட்டம் விரிந்து கொண்டே செல்கிறது.

இது இவரது முதல் புத்தகம். பேச்சுவழக்கிலான எழுத்து வாசிக்கும் எவருக்கும் ஒரு தோழியின் பகிர்வைப் போன்றதான நெருக்கத்தைத் தருவதாக உள்ளது. இந்தப் புத்தகத்தின் கடைசி சில அத்தியாயங்கள் இணையத்தில் பகிரப்படும் போது அவற்றுடனே நானும் பயணித்திருக்கிறேன். கோகியின் புகைப்படங்களுக்கு முதன்மையான ரசிகையாக இருந்திருக்கிறேன். அறியாத முந்தைய பாகங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு முழுமையான வாழ்க்கைக் குறிப்பை.. அனுபவக் கதையை.. வாசித்து முடிக்கையில் ஏற்பட்ட கலவையான உணர்வுகளில், தவிப்பும் நெகிழ்வும் ஆசிரியரின் சோகத்துக்கு ஆறுதல் வேண்டி நின்றன.

அத்தியாயங்கள் 1-9:

சின்னவயதில் ஒருசில மணிநேரமே அன்புகாட்ட வாய்த்த மஞ்சள் நிற மணிவாத்துக்கள்; திருமணத்துக்குப் பின் சிலநாள் மட்டுமே கூட இருந்த நாய்க்குட்டிகள் டைகர், ஜிம்மி; ஆறாவதாகக் குடிபோன வீட்டில் ச்சிண்ட்டு, தத்தி சிட்டுக்குருவிகள் ( “எங்க தலைமேலே உக்காந்து ரெண்டு ரூமுக்கும் சவாரி... கூண்டு எல்லாம் இல்லே”); பேருந்து நிலையத்தில் கணவருக்குக் காத்திருக்கையில் காலை நக்கி அரைவாலை ‘விசுக் விசுக்’ என ஆட்டி அடைக்கலமான ச்சிண்ட்டு.

கேரளா, புனே என வசித்து, ஃபிஜித் தீவுகளுக்கு நாடுவிட்டுச் சென்ற காலக்கட்டம் வரையிலான வாழ்வை அற்புதமாகப் பதிந்திருக்கிறார். அதிலும் ச்சிண்ட்டுவுடன் வசித்த குடியிருப்பில், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் ‘பாரத விலாஸ்’ போல என இவர் காட்டியிருக்கும் வாழ்க்கைச் சித்திரம் இன்றைய காலகட்டத்தில் நாம் இழந்து போன சில சமூக உறவுகளை ஏக்கத்துடன் நினைக்க வைக்கின்றன.

கூடவே நமது பாரத விலாஸ் காலத்து நண்பர்களில் தொடர்பு விட்டுப்போனவர்கள், அவர்தம் பிள்ளைகள் இப்போது எங்கு எப்படி இருப்பார்கள் எனும் எண்ணங்களும், முன்னுரையில் மதுமிதா பகிர்ந்திருப்பது போல அவரவர் வாழ்வில் வந்த வளர்ப்புப் பிராணிகளின் நினைப்பும் வந்து போகின்றன.

எங்கிட்டே இது ஒரு கஷ்டம். எப்பவும் பேசுற விஷயத்தை விட்டுட்டு அப்படியே போயிருவேன்’ என்கிறார் ஓரிடத்தில். முதலில் நமக்கும் அப்படியான ஒரு உணர்வு ஏற்பட்டாலும், இப்படி அங்கும் இங்கும் நினைவுக் குதிரைகளைத் தட்டி விட்டு, தட்டி விட்டு மீட்டெடுத்த விஷயங்கள் யாவும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியமான விவரங்களாகவே புத்தகத்தை சுவாரஸ்யப்படுத்தியிருப்பது வாசிக்க வாசிக்கத் தானாகப் புரிய வருகிறது.

அத்தியாயங்கள் 10-11:

சிஃபிக் சமுத்திரத்தில் இருக்கும் ஃபிஜித் தீவுகளில் வசித்த ஆறு வருடங்களை இந்த இரண்டு அத்தியாயங்களில் அடக்கி விட்டுள்ளார், விரிவாக அடுத்து வெளியிட்ட புத்தகத்தில் சொல்ல இருந்ததாலோ என்னவோ..!

பக்கத்து வீட்டில் காவல்காரனாக மட்டுமே பார்க்கப்பட்டு, ‘ஃப்ரெண்ட்லியானவன் இல்லை’ என வளர்த்தவர்களாலேயே பழிக்கப்பட்டு, கர்ஜிக்கும் சிங்கமென எப்போதும் கட்டியே போடப்பட்டிருந்த ராக்கி, இவரது அன்பான பார்வையிலே கட்டுண்டு கன்றுக்குட்டியானதைப் பார்க்கையில் அதிசயமாகவும், கடவுள் இவருக்கும் பிராணிகளுக்கும் நடுவே ஒரு அலைவரிசையை வரமாகவே அளித்தாரோ என்றும் நினைக்கத் வைக்கிறது.

அவரேதான் சொல்லுகிறாரே நூலின் ‘என்னுரை’யில் தான் “போன ஜென்மத்தில்... மானா இல்லை யானையா.. சரி.. ஏதோ ஒரு விலங்கினம். இல்லாவிடில் இந்த உயிர்கள் மீது இப்படி ஒரு பிணைப்பு ஏற்படுவானேன்? பூர்வ ஜென்ம பந்தம்” என்று.

மகள் பிறக்க அவளின் மழலையை ரசிக்கச் சுற்றிச் சுற்றி வந்த செல்லங்களுக்குக் கணக்கில்லை என்றாலும் அவளுடனேயே சேர்ந்து வளர்ந்த நூரி எனும் நாய்க்குட்டியை நல்லபடியாக விரும்பிக் கேட்ட நண்பர் வீட்டுக்குத் தத்துக் கொடுத்து விட்டு நியூசிலாந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அத்தியாயங்கள் 12-23:

க்கத்து வீட்டுக்காரர்கள் காலிசெய்து போகையில் மறந்து விட்டுப்போன பூனை பிளாக்கி, கற்பகம் எனும் நாமகரணத்துடன் ‘கப்பு’வாக இவர் மடியிலும் மனதிலும் ஏறிக் கொண்டாள். ‘கப்பு, தி ராயல்’.

அடுத்தடுத்து வந்து சேர்ந்த பூனைகளாக உயர் நாகரீக மிடுக்கு நிறைந்த மிடில் ஏஜ்ட் ஷிவா; கணவர் கோபாலின் செல்லமாகிப் போனதாலும், அடைக்கலம் ஆன புதிதில் கராஜில் அவரது காரின் மேல் பாலக் கிருஷ்ணன் போலத் தினம் தினம் பாதத் தடம் விட்டதாலும் கோபாலக் கிருஷ்ணன் ஆகி சகபதிவர்களால் ‘கோகி’ என அன்பு பாராட்டப்பட்ட ஜி கே; இவர்களுடன் இன்னும் எத்தனை எத்தனை பேர்.

அணையா அடுப்புடன் வந்தவருக்கெல்லாம் சாப்பாடு எனக் கேள்விப்பட்டிருப்போம். ‘துளசி விலாஸ்’ அணையா அன்புடன் வாசல் வந்து நின்ற அத்தனை பூனைகள், ஹெட்ஜ் ஹாக் கூட்டம், நாய்கள் என எல்லோருக்கும் உணவளித்திருக்கிறது.

பிராணிகள் வளர்ப்புக்கு அந்நாட்டில் இருந்த முக்கியத்துவம், அக்கறையான மருத்துவ வசதிகள், உணவு வகைகள் இவற்றுடன் விடுதி வசதிகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கூடவே ஒவ்வொரு செல்லங்களின் தனிப்பட்ட சிறப்புக் குணாதிசயங்களையும்.

கோகியை விடுதியில் விடக் கவலைப்படும் போது, பல வருடம் முன் இவருக்கு ஆபரேஷன் ஆகியிருந்த சமயம் ச்சிண்ட்டுவை அதீத அக்கறையுடன் கவனித்துக் கொண்ட பூனா குடியிருப்பினர் நம்மை அறியாமலே நினைவுக்கு வந்து செல்கின்றனர்.

கப்புவும் கோகியும் இவர்களது வாழ்க்கையை எப்படி நிறைவாக்கினாக்கினார்கள், அதே நேரம் எப்படி நீங்காத பிரிவுத் துயரையும் தந்து மறைந்தார்கள் என்பதை வாசித்தால் மட்டுமே உணர முடியும். கப்புவுடனான தினசரி கொயட் டைம் நெகிழ்வு. இவர் கப்புவுக்கு எப்படியோ அப்படியே அதுவும் இவருக்கு அன்னையாக சகோதரியாக எல்லாமுமாக. செல்லங்கள் குறித்து ‘ஒரு முடிவு’ எடுக்க வேண்டிய சூழல்களில் சந்தித்த மனப் போராட்டங்கள் கசிய வைக்கின்றன.

இருபதாம் அத்தியாயத்தின் இறுதியில் பிரிய கப்புவின் மறைவுக்குப் பின் மனம் கனத்து சொல்லுகிறார் “வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்”.

அதே போல ‘என்னுரை’யில் “கப்புவின் மறைவுக்குப் பின் அப்போதைய கடைசிப் பகுதியை (இணையத்தில்) எழுதியதற்கு, நிறைய நண்பர்கள் அவரவர் செல்லங்களின் இழப்பின் வலியைச் சொல்ல நாங்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி அமைதியானோம். இழப்பின் வலி எல்லோருக்கும் ஒன்றல்லவா?

பதினைந்து வருடப் பந்தம் கப்புவுடன் என்றால் கோகியுடன் எட்டு வருடம். கோகியின் இழப்பு வலிக்கு ஒரு துளி ஆறுதலை அந்நேரத்தில் நானும் தந்திருக்கிறேன். மீண்டும் இப்போது இவ் விமர்சனம் மூலமாக..!

ந்த இடத்திலும் எதற்காகவும் எதையும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்து. தன்னுடைய ஆரம்பப் பொருளாதரமாகட்டும், செல்லங்களால் வீட்டில் ஏற்பட்ட பூசல்களாகட்டும், செல்லங்கள் குறித்து பலமுறை ‘ஒரு முடிவு’ எடுக்க நேர்ந்த சூழல்களாகட்டும். நேர்மையான பதிவுகள்.

கணவரிடம் ஒவ்வொரு முறையும் தான் போராடியதாகப் பல இடங்களில் குறிப்பிடுபவர் ‘எங்க இவரு’-வின் உள்ளார்ந்த ஆதரவின்றி இத்தனை செல்லச் செல்வங்களை அடைந்திருக்க முடியாது என்பதையும் ஒத்துக் கொள்கிறார் ஓரிடத்தில் பெருந்தன்மையாக ஏதோ நமக்குத் தெரியாததைச் சொல்வதைப் போல:)!

மனிதர்களுக்கே உரிய எரிச்சல் சுபாவம் பிரச்சனைகளின் போது தலை தூக்கியிருந்தாலும் கருணை உள்ளத்திலும் இரக்க சுபாவத்திலும் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல ‘இவங்க அவரு’ [சரி சரி, ஒத்துக் கொள்கிறேன். அதையும் 'இவங்க’ பகிர்வுகள்தான் புரிய வைக்கிறது என்பதை..:) ] !

செல்வச் செல்லங்களிடம் தாம் காட்டிய அன்பைப் பன்மடங்காக அவற்றிடமிருந்து திரும்பப் பெற்றதாக உணரும் இத்தம்பதியர், பெற்ற அன்பை நெஞ்சம் நிறைய சுமந்து பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கி வருவதாலேயே சேருகிறது இவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

எந்த ஊருக்கு, நாட்டுக்குச் சென்றாலும் பதிவர்களை தேடிச் சென்று சந்திப்பது; பயணம் எங்கினும் சந்திக்கும் எளிய மனிதர்கள் அத்தனை பேரின் பெயரையும் விவரங்களையும் அக்கறையுடன் கேட்டறிந்து அவற்றைத் தன் பதிவுகளில் அன்புடன் நினைவு கூர்ந்திடுவது; புதிதாகப் பதிவு எழுத வருபவரை உற்சாகமாக வரவேற்பது; ஐம்பது நூறாவது பதிவினை எட்டிப் பரவசமடைபவரைத் தன் போல ஆயிரம் பதிவு தாண்டிட உளமார ஆசிர்வதிப்பது; பதிவரின் குடும்பத்து நல்லதுகளில் தம்பதி சமேதராக வாழ்த்துவது, வருத்தங்களில் பங்கேற்பது என அன்பால் இவர் எழுப்பியிருக்கும் கோட்டை மிகப் பிரமாண்டமானது. பிரமிப்புக்குரியது.

வாயில்லா ஜீவன்களாகட்டும். மானுடராகட்டும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்.

உதாரணமாக இத்தம்பதியினர், அன்பே சிவமென..!
***

விலை ரூ:80. பக்கங்கள்: 152. வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.


13 ஜூலை அதீதம் இதழில்.., நன்றி அதீதம்!

திங்கள், 11 ஜூலை, 2011

படத்திற்குள் படம் -Get Set CLICK - ஜூலை போட்டி சுவாரஸ்யம்

பிரதானமாக ஒரு படத்தைக் கொடுத்து, அதில் தெரிகிற ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துப் படமாக்கிக் கொண்டு வாருங்கள் என அறிவித்து, இம்மாதப் போட்டியை சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார் புது நடுவர் ஆன்டன் க்ரூஸ்.

போட்டி அறிவிப்பு இங்கே. அந்த பிரதானப் படம் நான் எடுத்த ஒன்று என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. முன்னொரு சமயம் பிட் அறிவித்திருந்த ‘முகங்கள்’ எனும் தலைப்புக்காகவே எடுத்த படம். இளைக்க இளைக்க ஓடிவந்த இடது பக்க நாய் சற்று ஆட்டம் கண்டிருக்க, திருப்தியின்றி போட்டிக்குக் கொடுக்கவில்லை. இங்கும் தரவில்லை. ஃப்ளிக்கரில் பதிந்த வைத்தது நடுவர் கண்களில் மாட்ட இம்மாதப் போட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ படமாகத் தேர்வு செய்து விட்டுள்ளார்:)!


1. Get Set CLICK

இந்தப் படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது பாருங்கள். நாய், பெல்ட், காலணிகள், சோளம் சாப்பிட்டபடி செல்லும் பெரியவர், சோள ‘வண்டி’, பலூன், விற்பனையாளர், வீதி, கட்டிடம், இளம் யுவதி, சுறுசுறுப்பான இளைஞர்கள், மரங்கள், பின்னால் பேசிச் சிரித்தபடி வரும் நண்பர்கள்...! இப்படியாகப் இந்தப் படத்தில் இருக்கிற ஏதாவது ஒரு விஷயம் நீங்கள் போட்டிக்கு அனுப்புகிற படத்தில் இருக்கவேண்டும். சுவாரஸ்யம்தானே?

சரி மாதிரிக்கு சில படங்கள் என் ஆல்பத்தில் இருந்து பார்வைக்கு...

#பெரியவர்

2. தனிமை
வானுயர்ந்த சோலையிலே..
ஒத்தையடிப் பாதையிலே..
உள்ளம் ஏதோ தேடலிலே..
***

#கீழ்வரும் படத்தில் பெரியவருடன் காலணிகளும் போட்டிக்குப் பொருத்தமாக..

3. முதுமை
வழக்கொழிந்து வருவது
அரிக்கேன் விளக்குகள் மட்டும்தானா?

# நாய்கள்

4. கருப்பழகன்
சிந்தனையில்


5. பூங்காவில் பூக்குட்டி
அனாதரவாய் அன்புக்கு ஏங்கி

#பலூன்கள்

6. லூன்


7. பிஞ்சு விரல்கள் பிடியிலே
மஞ்சள் நிற பலூன்

8. மேலே மேலே போகப் போக..
கண்கள் விரியுது பரவசமாக..


8. ஏக்கம்
தலைப்பு என்னவோ பொருத்தமாகதான் உள்ளது. ஆனால் பையனுக்கு ஏக்கம் பலூன் மேல் இல்லை. ‘அப்பா எப்பக் கெளம்புவாரு. எப்ப வூடு போய் சாப்புடலாம்’னு. ஆயிரக் கணக்கில் மக்கள் கூட்டம் அலைமோதிய லால்பாக் மலர்கண்காட்சி தினத்தில் இருள் சூழ ஆரம்பித்த வேளையில் எடுத்தபடம். வெளிச்சத்தைக் கூட்டிப் பதிந்துள்ளேன்.

#மரங்கள்

9.ஞாயிறு மதியம்
மரத்தடித் தூக்கம்


10. பரந்து விரிந்து..
என் கண்ணளவில் நாற்பது அடிக்கும் மேல் பரந்து விரிந்த மரம் இது. முந்தைய மரத்தின் முன் நின்று 18mm focal length-லும் முழுசா frame-க்குள்ளே கொண்டு வர முடியவில்லை.

11.ஊருக்குள்ள இருந்தா வெட்டிப்புடுவாங்கன்னு
நீருக்குள்ள நிம்மதியா..

#கட்டிடங்கள்
12. Twin Domes


13. Twin Towers

#வீதிகள்
14. ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்களுடன் வீதி
எதையோ கொறித்தபடி நடக்கும் இளம்யுவதி

15. BALANCE
சுமை எத்தனை சேர்ந்தாலும்
சமநிலையில் செல்லத் தெரிந்தவனுக்கு
சாலை கம்பளமாக விரியும்..
பயணம் (பிடித்த) சவாலாக அமையும்..


16. கோடு போட்டா ரோடு


17. எல்லோரும் வீதியைக் காட்டுனா வீதியைப் போடுபவரையேக் காட்டலாம்னு..



#இளைஞர்கள், நண்பர்கள்

18. சோளம் சுவைக்கையிலே

# விற்பனையாளர்கள்

‘படத்துல பலூன் விற்கிறவரு, சோள வண்டி தெரிவதாலே அவர்களை மட்டும்தான் காட்டணுமா?’ என்றால் இல்லை. எந்த விற்பனையாளரையும் காட்டலாம் நீங்கள்.

19. அரை ஆழாக்கு அஞ்சு ரூவா


20. சுடச் சுடச் சுண்டல்


21. கொளுத்தும் கோடைக்குக் குளுகுளு பழங்கள்


22. உறுதி
உச்சி வெயிலில்
உற்றுப் பார்த்திருக்கும் விழிகளில்
உறுதி தெரிகிறது
விற்று விடும் அத்தனையும் என்று.
***

23. நாள் தொடங்குகிறது நம்பிக்கையுடன்..


24. உழைக்கும் கைகளே
வண்டி வாங்க வசதி இல்லாவிட்டாலும்
மண்ணிலே இடம் இருக்கு
உழைப்புக் கசக்காதவருக்கு.
***

மாதிரிக்கு 23 படங்கள் தந்திருக்கிறேன். ஒருபடம் தர உங்களாலே முடியாதா என்ன? இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. முடிந்தவரை புதுப்படமாக போட்டிக்கென எடுத்து அனுப்பப் பாருங்கள். சிறந்த பயிற்சியாகவும் அமையும். இதுவரை போட்டிக்கு அணிவகுத்திருக்கும் படங்கள் இங்கே. வலப்பக்க மேல் மூலையிலும் நிரந்தரமாக ஒரு இணைப்பு உங்கள் வசதிக்காக.

பகிர்வு:
நீல உடையில் நிலாப்பாட்டி
வாழ்க்கையிலே பார்த்தோமானாலே பேக் ரவுண்ட் மட்டும் நல்லா இருந்தா போதாம, நம்மளயும் தனிப்பட்ட முறையில அழுத்தம் திருத்தமா நிரூபிக்க.. அடையாளப்படுத்திக்க.. வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அதே கதிதான் படங்களுக்கும்.

ஓலை வேஞ்ச கூரைக்குள்ளே ஆங்காங்கே நட்சத்திரங்களா எட்டிப் பார்க்கும் சூரியன். இங்கே அதுக்குக் கூட வழியில்லாம அடர்ந்த கிளை இலைகள். தள்ளிக் காய்ஞ்சுட்டிருந்த வெயிலுகிட்டே வெளிச்சத்தைக் கடன் கேட்டுக் கெஞ்சிக்கிட்டிருந்த மரத்தடி.இப்படி நிழல் சூழ்ந்த இடத்துல ஆட்டோ மோடில் வைத்து எடுத்திருந்தா...

ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்த நிலவுக் கதையுடன் DSLR-ன் aperture mode பயன்பாட்டைப் பற்றி நான் கற்றறிந்தவற்றைக் குறிப்புகளாகப் படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன் PiT தளத்தில். விருப்பமானவர்கள் வாசித்திடலாம்:


புதன், 6 ஜூலை, 2011

கடன் அன்பை வளர்க்கும் - திண்ணையில்..


‘வேறு எந்தக் கடனும்
இப்போது இல்லை.’
புதுக் கடனுக்கு
விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர்
கேட்கும் முன்னரே சொன்னான்.
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை
பெருமையுடன் முன் வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ
பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்..
முன் தினம் கடற்கரையில்
கடலை வாங்க
சில்லறை இல்லாத போது
தன் குட்டிப் பையைக்
குலுக்கித்தேடி

எடுத்துத்தந்த
இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***

படம் நன்றி: இணையம்

3 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

திங்கள், 4 ஜூலை, 2011

இரவில் சூரியன் - கீற்றினில்..


பூதாகாரமாகத் தோன்றும்
எல்லாப் பிரச்சனைகளும்
கையோடு ஆறுதல் பரிசாக
அழகிய பூ ஒன்றை
ஏந்தியே வருகின்றன.

*

இடர்களைப் பொருட்படுத்தாமல்
இலக்கை நோக்கிப் பயணிப்பவனுக்கு
பகலில் நிலவும் இரவில் சூரியனும்
விழித்தே கிடக்கின்றன.

*

படம் நன்றி: இணையம்

28 ஜூன் 2011 கீற்று இணைய இதழில்.., நன்றி கீற்று.

வெள்ளி, 1 ஜூலை, 2011

புதுப் பொலிவுடன் ‘அதீதம்’- லென்ஸ் கார்னரில் எனது படம்

எல்லாம் வல்ல..

நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க

கையிலை நாதனின் விஸ்வரூப தரிசனம். எங்கே எடுத்தது எனும் விவரங்களுடனும் மேலும் படங்களுடனும் பிறிதொரு சமயம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் மலர்ந்திருக்கும் 1 ஜூலை 2011 அதீதம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்!



‘சுவைபடச் சொல்

சுவைபடச் சொல்லப்பட்டவற்றைத் திறம்படத் தொகுத்து புதிய வடிவமைப்பில் இப்போது அதீதம்.

கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் என இலக்கியத்துடன் ஹெல்த் கார்னர், அரசியல் கார்னர், லென்ஸ் கார்னர், தொடராக ஜென் கதைகள், வலையோசை, கடைசிப் பக்கம் என வித்தியாசப் படுத்தியிருக்கிறார்கள்.

அதீதம் இதழுக்காக புதிய லோகோவை வடிவமைக்கவும் வாசகர்களையே அழைத்துள்ளார்கள். பரிசும் உண்டு.

உங்கள் படைப்புகளை atheetham.articles@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்ப ஆரம்பியுங்கள். அதற்கான விதிமுறைகளை அறிவிப்பு பகுதியில் வாசித்து அறிந்திடுங்கள்.

ஒவ்வொரு படைப்புக்கும் அங்கேயே பின்னூட்டம் இடும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதற்கென அத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

படைப்பாளிகள் வாசகர்களின் பங்கேற்பை வரவேற்கும் அதீதம் கூடிய விரைவில் மாதமிருமுறையாக செயல்பட உள்ளதாகவும் தெரிகிறது. வாழ்த்துக்கள் அதீதம்!

***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin