புதன், 29 ஆகஸ்ட், 2012

70+

யார் தூரிகை செய்த ஓவியம்?
***


குமுதம் ஜங்ஷனில் எட்டு வருடங்களுக்கு முன் தனது 60+_ல் 50+_ல் இருப்பவர்களுக்காக இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்:
இப்போது 70+_லும் எந்தக் கலையையும் கற்றிட, அதில் ஆர்வத்துடன் ஈடுபட வயது ஒரு தடையல்ல என நிரூபித்திருக்கிறார். பள்ளி வயதில் கூட வரைதலில் அதிக நாட்டமோ ஆர்வமோ இல்லாதிருந்தவருக்குத் திடுமெனத் தூரிகை பிடிக்கும் ஆசை வர அரை வருடத்தில் கற்றுத் தேர்ந்து தீட்டிய ஓவியங்களில் ஒன்றே நீங்கள் முதலில் பார்த்த படம்.

பெரியவர்களிடம் கற்றிடவும் போற்றிடவும் எப்போதும் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கின்றன! திருமதி லோகா சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
***




சனி, 25 ஆகஸ்ட், 2012

அவர்களின் கதைகள் - நவீன விருட்சத்தில்..



அவர்களின் கதைகள்

கதகதப்புக்காக மூட்டியத்
தீயைச் சுற்றிக்
கிழிந்த கம்பளிகள்
பழைய சாக்குகளுக்குள்
தமைக் குறுக்கிக்
குழுமியிருந்தனர்
கதை பேச.

அவர்களுக்காகவே அவர்கள்
புனைந்து கொண்ட கதைகளில்
அவர்களுக்கு மட்டுமே
திறப்பதாகக்
கருவூலக் குகைகள்..
தற்காலிகமாகவேனும்
வறுமையை மறக்க.

அவர்களைத் தவிர எவராலும்
விடுவிக்க முடியாத புதிர்களை
ஆலோசித்து உருவாக்கிப்
பெருமிதத்துடன்
சிரித்துக் கொண்டார்கள்..
ஏளனங்களை மறக்க.

அவர்களால் மட்டுமே
அழிக்க முடிகிற அரக்கர்களையும்
அவர்களை மட்டுமே
நேசிக்கிற தேவதைகளையும்
உலவ விட்டார்கள்..
ஒடுக்கப்படுவதையும்
ஒதுக்கப்படுவதையும் மறக்க.

மீளாத் துயருடன்
நாளும்
அக்கதைகளைக் கேட்டபடி
அவர்களுக்காகவே
மின்னிக் கொண்டிருந்தன..

ஆதிக்கவாதிகளால்
நலிந்து அழிந்து போன
அவர்களது உறவுகள்,
வானத்தில் நட்சந்திரங்களாக.
***
24 ஆகஸ்ட் 2012 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படம்: பெங்களூர் சித்ரகலா பரீஷத் ஓவியக் கண்காட்சி ஒன்றில் எடுத்தது - http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/7849016246/in/photostream



ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தினகரன் வசந்தத்தில்..- தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.
பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!
***

  • இதே இதழில் வெளியாகியுள்ள, புகைப்படக்கலைஞர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுடனான எனது நேர்காணல் முந்தைய பதிவாக இங்கே.

  • இரண்டும் ஒரே இதழில் இடம் பெற்றுள்ள காரணத்தால், PiT குறித்த கட்டுரையை எனது இன்னொரு பெயரில் வெளியிட்டுள்ளார்கள்.
***

ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - 'தினகரன் வசந்தம்' போட்டோகிராபி ஸ்பெஷலில்.. திரு. நடராஜன் கல்பட்டு

பெரியவர் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான எனது நேர்காணல் இன்றைய தினகரன் வசந்தம் இதழில்.., நன்றி வசந்தம்!

எட்டுவார முயற்சியில் எடுத்த படம்:

இவரது புகைப்பட அனுபவங்கள் தற்போது பாடப் பதிவுகளாக, ‘Legend Talks' எனும் கெளரவத்துடன் தொடராக ‘தமிழில் புகைப்படக்கலை-PiT' தளத்தில் வெளியாகி வருகின்றன. புகைப்பட ஆர்வலர்களுக்கு முன் உதாரணமாகத் திகழும் அவருக்கு நம் வணக்கங்கள்!
***


இதே இதழில் வெளியாகியுள்ள எனது இன்னொரு கட்டுரையை வாசிக்க:
தமிழில் புகைப்படக்கலை (PiT) - உலக ஒளிப்பட தினத்தில்..
***

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சிவ தரிசனம் (பெங்களூரு) - கல்கி தீபம் இதழில்..

பெங்களூர் சிவன் கோவில் பற்றிய எனது கட்டுரை, எடுத்த படங்களள் நான்குடன் ஆகஸ்ட் 20 கல்கி தீபம் இதழில் மூன்று பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது.

நன்றி கல்கி தீபம்!

முன்னர் பார்த்திராதவர் மேலும் படங்களைக் காண ஆரம்பத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இணைப்பின் வழியே சென்றிடலாம்.
***

புதன், 15 ஆகஸ்ட், 2012

அரிசி மணிகளால் தேசியக் கொடி - சுதந்திர தின வாழ்த்துகளுடன்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!


தானிய மணிகளால் அலங்காரமாக உருவான தேசியக் கொடி! சென்ற ஜனவரி லால்பாக் கண்காட்சியில் படமாக்கியது.

இந்த சுதந்திர தின மலர்கண்காட்சியை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குறைந்த செலவில் எளிமையாக சென்ற வியாழனில் இருந்து எட்டு நாட்களுக்கு மட்டும் கொண்டாடுவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இந்த முறை நான் செல்லவில்லை. சென்ற முறை எடுத்த இப்படத்தைக் கபினி அணை நிரம்பி வரும் நல்ல செய்தி கிடைத்திருக்கும் வேளையில் பகிருகிறேன். அணை திறக்கப்பட்டு காவேரி அன்னை பொங்கிப் பிரவாகமாக ஓடி வர, பஞ்சம் நீங்கி விவசாயிகள் வாழ்வு மேம்படட்டும்! தானியங்கள் கொழிக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!
***

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தூறல் : 7 - பயணிகள் கவனத்திற்கு..

பயணிகள் கவனத்திற்கு:

படம் நன்றி: CVR

மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கே செல்லவும் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்தால்தான் இரயில் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஓரிரு வாரங்களுக்கு முன் என்றால் வெயிட்டிங் லிஸ்டில் கிடைத்து, பயணத்துக்கு முந்தைய நாள் உறுதியானால் அதிர்ஷ்டம். இல்லையெனில் கேன்ஸல் செய்துவிட்டு தத்கல் டிக்கெட்டுக்கு முயற்சி செய்வது கடைசி வழி, அதிலும் பேரதிர்ஷ்டம் கூட வரவேண்டும். இப்படியாக இயங்கும் இரயில்வே இலாபத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பயணிகளுக்கான வசதிகளைத் தருவதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது?

சமீபமாக பலரும் இது பற்றி தத்தமது அனுபவங்களை எழுதியபடியேதான் இருக்கிறார்கள். சிலவாரங்களுக்கு முன் பிரபல வார இதழில் ஒருவர் இரயிலில் வழங்கப்பட்ட உணவின் சுகாதாரக் குறைவையும் பட்டினியாகப் பயணித்ததையும் பகிர்ந்திருந்தார். தாங்கள் நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கும் காண்ட்ராக்டர்களே இந்த அவப் பெயருக்குக் காரணம் என்றும், வேறு ஆட்களை மாற்றினாலும் அப்போதும் பிரச்சனை தொடருவதாகவும் இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் பதில் விளக்கமும் அளித்திருந்தார்.

இதே பதில்கள்தான் ஏசி கோச்களில் வழங்கப்படும் போர்வை பரமாரிப்புக்கும் சொல்லப்பட்டு வருகிறது. என் அனுபவத்தில் காயாத ஈரமான போர்வைகளைப் பலமுறை பெற நேர்ந்திருக்கிறது. குளிருக்கு இதமாகக் கூடவே பயணித்த கரப்புகளைக் கண்டதுண்டு. ஓடியாடும் எலிகளைக் கண்டு கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டதுண்டு. குறிப்பிட்டு சொல்லும் ஒரு அனுபவமாக..,

ஊரிலிருந்து வருகையில் இரயிலுக்கு கிளம்பும் சற்றுமுன் அப்போதுதான் போடப்படும் சூடான அல்வாவே வாங்கி வரப்படும். இரண்டு வருடம் முன் இப்படிச் சுடச்சுட இருந்த அல்வாவை உள்ளே வைத்து செகண்ட் ஏசி கோச்சின் சீட்டுக்கு அடியில் தள்ளிய டிராவல் பேக் மறுநாள் காலையில் போர்ட்டர் தலையில் ஏறிய போது எலுமிச்சை அளவுக்கு அதில் ஓட்டை. எட்டிப் பார்த்து சிரித்தது பொத்தலில் இருந்து டவல்! அல்வாவின் வாசம் எலியை இரவு முழுக்க வேலை வாங்கியதோடு விருந்தும் படைத்து விட்டிருந்தது. எலிக்குப் பயந்து திருநெல்வேலி அல்வா இல்லாமல் ஊரை விட்டுக் கிளம்ப முடியுமா? கிளம்பினால் பெங்களூர் நண்பர்கள் சும்மாதான் விடுவார்களா:)? ஒருநாள் முன்னதாகவே போட்ட அல்வாவை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது. நல்லவேளை ஆளைப் பதம் பார்க்காமல் பண்டத்தோடு விட்டது எலி! ஆனால் இப்போது படையாய் கிளம்பித் தாக்க வந்திருக்கின்றன மூட்டைப் பூச்சிகள்.

சென்ற வாரம் தூத்துக்குடி-பெங்களூர் வண்டியில் கோவில்பட்டியிலிருந்து தன் 9 வயது மகளுடன் செகண்ட் ஏசியில் பயணித்த என் தங்கைக்கு நேர்ந்த அனுபவம். இரவு படுத்து ஒருசில மணிகளில் மகள் துள்ளி எழுந்து ஏதோ கடிப்பதாகச் சொல்ல, வீட்டிலிருந்து கொண்டு சென்று அவளுக்குப் போர்த்தியிருந்த க்வில்டிலும், விரிந்திருந்த இரயில்வே போர்வையிலும் சுமார் 50-க்கும் மேலான மூட்டைப் பூச்சிகள்!!! ‘உதறி விரிந்த போது சுத்தமாகதானே இருந்தது’ என மீண்டும் கவனமாக ஆராய்ந்ததில் ஓரத்திலிருக்கும் மடிப்புகளிலிருந்து அவை வெளிவந்து கொண்டிருப்பதைக் காண முடிந்திருக்கிறது. அவளையும் விட்டு வைக்கவில்லை. போர்வைகளை மூட்டையாக ஒதுக்கி விட்டு இரவு முழுவதும் தூங்காமல் உட்கார்ந்தே பயணித்து ஊர்வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

கோடிகள் புரளும் உணவு மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தங்களை, ஒழுங்கான முறையில் செயல்படுத்தக் கூடியவர்களை அடையாளம் கண்டு ஒப்படைப்பது இரயில்வேயின் முக்கிய பணிகளுள் ஒன்றில்லையா?

அதீதம் கார்னர்: ஒலிப்பேழை

அதீதம் இணைய இதழின் புதிய பகுதியான ஒலிப்பேழையில் முதல் வெளியீடு ‘தூளியில் துஞ்சும் நிலாவோ?’. R. வேணுகோபால் அவர்களின் அழகான வரிகளுக்குத் தன் இனிய குரலால் சிறப்பு சேர்த்திருக்கிறார் தோழி ஷைலஜா நாரயணன். அருமையாக ஒலிப்பதிவு செய்தவர் ஐயப்பன் கிருஷ்ணன். இங்கே பகிரும்போது படங்கள் மட்டும் எனது பங்களிப்பாக:)!

தூளியில் துஞ்சும் நிலாவோ?












தூளியில் துஞ்சும் நிலாவோ?- எங்கள்
தோளிலே சாய்கிற பூவோ?
வாசம் நிரம்ப மகிழ்ந்தே-இங்கு
வந்ததோர் முல்லை அரும்போ?

சித்தம் மகிழ வரம்போல்- வந்தே
ரத்தினம் வீசும் ஒளியோ?
பாலோடு தேனும் கலந்தே- நெஞ்சில்
பல்சுவை தந்த அமிழ்தோ?

கொள்ளிடம் காவிரி நீரோ? – என்றும்
துள்ளி நடையிடும் ஆறோ?
கார்த்திகை தீப ஒளியோ?– எழில்
வார்த்ததோர் பொன்னின் சிலையோ?

ஆழிமழைதன் முகிலோ?- மெல்ல
ஆரத்தழுவும் துகிலோ?
ஊற்றெடுத்தோடும் குளிர்நீர்- தன்னில்
உல்லாச அன்னமும் நீயோ?

முத்துடன் வைரம் பதித்தே-செய்த
பத்தரைப் பொற்சரம் தானோ?
தாமரைப்பூவிதழ் மீதே- நின்று
தாண்டவமாடும் பொன்வண்டோ?

கொஞ்சிடும் பைங்கிளிதானோ?-மண்ணில்
கொட்டிடும் தண்மழைதானோ?
முச்சங்கம் கண்ட தமிழோ?- வெள்ளை
முத்துப்பதித்த சிமிழோ?

வற்றாத கங்கையைப் போலே-இங்கு
வந்ததோர் ஜீவ நதியோ?
தென்றல் உலாவிடும் சோலை-தன்னில்
தேனிசை பாடுங்குயிலோ?

ஞாயிறும் திங்களும் நீயோ?- தெய்வம்
நல்கியதோர் வரம் நீயோ?
வள்ளுவன் வாய்மொழி தானோ?-எங்கள்
தெள்ளுதமிழ் மொழித்தேனோ?

நான்மாடக்கூடலில் ஆளும்-தேவி
மீனாட்சி குங்குமம் நீயோ?
மாடத்து வெள்ளைப்புறாவோ?-பெய்யும்
மார்கழி முன்பனி தானோ?

அன்றலர்ந்த கொடிமுல்லை- போலே
நின்றுசிரிக்கின்ற பூவோ?
தென்பொதிகைதன்னில் வீசும்-குளிர்
இன்பச்சாறல்துளி நீயோ?

ஆழ்வார் திருமொழி போலே- நெஞ்சை
அள்ளிடும் பாசுரம் நீயோ?
நால்வர் திருமுறை போலே-வந்த
நல்ல தேவாரமும் நீயோ?

வாராது வந்த மழைபோல்-எங்கள்
வானில் படர்ந்த முகிலோ?
தெய்வத்திருவுரு கொண்டே-எம்மைத்
தேற்றிட இங்குவந்தாயோ?
***

கேட்டு மகிழுங்கள்.

உங்கள் குரலும் ஒலிப்பேழையில் இடம் பெற விருப்பமெனில், சொந்த அல்லது பிடித்தமான பாடலோ, கதை, கட்டுரையோ பதிவு செய்து mp3 / wav ஆக அனுப்ப வேண்டிய முகவரி: articlesatheetham@gmail.com [வீடியோவாகக் கூட அனுப்பலாம். ஒலி மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.]

வீடு திரும்பலின் நூறாவது வானவில்:

பலரும் அறிந்ததே. ஏழுவித விசயங்களை வானவில்லாகக் கோர்த்து வாரம் ஒன்றென வழங்கி வருகிறார் வீடு திரும்பல் வலைப்பூவில் மோகன் குமார். சென்ற வாரம் நூறாவது வானவில்லில் நண்பர்கள் ஏழுபேரின் படைப்புகளை இடம்பெறச் செய்திருந்தார். அதில் ஒன்றாக, நான் எடுத்ததிலேயே எனக்குப் பிடித்தமான படம் எது என்றும் அது குறித்து சிலவரிகளில் சொல்லுமாறும் கேட்டுப் பெற்று வெளியிட்டுருந்தார். நன்றி மோகன் குமார்! அதை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

ஒளிப்படம் ஒரு மொழி. இரசிக்கும் அழகினையும் இனிக்கும் நினைவுகளையும் எடுத்து இயம்புவது தாண்டி ஒரு விடயத்தை.. ஒரு நிகழ்வை.. அதன் இடத்தோடும் காலத்தோடும் பதிந்து, வரும் சந்ததியருக்கான சரித்திர ஆவணம் ஆகும் சக்தி வாய்ந்தது. ஒரு சிறந்தபடம் பல கதை சொல்லும். குறிப்பாகப் பொது இடங்களில் இயல்பு நிலையில் படமாக்கப்படுகிற மனிதர்கள் (street photography) அந்தந்த காலக்கட்டத்தின் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அவற்றின் நிறைகுறைகளை வெளிப்படுத்துவதோடு, தம்மையும் அறியாமல் சரித்திரத்தில் இடம் பெற்று விடுகிறார்கள். கீழ்வரும் படம் அந்த வகையில் ஒன்றாக, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்களுக்கு மத்தியில் இன்னொரு முறை பார்க்கத் தேவையின்றி மனதில் பதிந்து விடும் இரகமாக எனக்கும் இன்னும் பலருக்கும் (சொன்னார்கள்)”.

***
கருப்புவெள்ளையில் மட்டுமே பகிர்ந்து வந்த இப்படத்தை முதன்முறையாக வண்ணத்திலும் பகிருகிறேன் இங்கு:
காலஓட்டத்தில் காணாது போன அரிக்கேன் விளக்கை காலத்தை இழுத்துப் பிடித்து வாழ்பவர் விடாமல் உபயோகித்து வருவது, லாந்தர் எண்ணெயைத் துடைக்கப்பயனாகும் துணியை அதிலேயே முடிந்து வைத்திருப்பது, அருகிலுக்கும் கம்பத்தில் பறந்து விடாமலிருக்க இறுக முடிச்சிட்டு வைக்கப்பட்டத் துவாலை, வெள்ளை வேட்டி அழுக்காகி விடக் கூடாதென துண்டை விரிப்பாக்கி அமர்ந்திருக்கும் விதம், சோடிச் செருப்புகள், கைத்தடி.. இப்படிக் கவனிக்கவும் கதை சொல்லவும் எவ்வளவோ இருக்கின்றன. இவரைப் படமாக்கிய அனுபவம் முன்னர் வாசித்திராதவர்களுக்காக இங்கே: மேகங்களுக்குப் பின்னால்..

குங்குமம் தோழி

இம்மாதக் குங்குமம் தோழியில் வெளியான எனது பேட்டியை, இதழுக்கான விளம்பரங்களில் முன்னிலைப்படுத்திய விதத்தில் நல்ல தோழியாக நட்பு பாராட்டி உற்சாகம் தந்திருக்கிறாள் குங்குமம் தோழி!

தினகரன் இணையதளத்திலும், நாளிதழிலும்..

தமிழ்முரசில்..

நன்றி தோழி:)!

படத்துளி:
தேடல் உள்ள உயிர்களுக்கே தினம் பசியெடுக்கும்..

***

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
***





சனி, 11 ஆகஸ்ட், 2012

ஆரஞ்சுக் கொண்டாட்டம் - ஆகஸ்ட் 2012 PiT போட்டி

டேங்கரின் டேங்கோ. அழுத்தமான ஆரஞ்சு. இதுதான் 2012 கொண்டாடிக் கொண்டிருக்கும் வண்ணம். பளிச் என ஒளிரும் இந்நிறம் ‘உலகின் பொருளாதாரச் சிக்கல்கள் சரியாகி மக்களின் வாழ்வு மேம்பட வழிவகுத்து, நல்ல விஷயங்களை நோக்கி உற்சாகமாக நம்மை நகர்த்தும்’ என்பது இதைத் தேர்ந்தெடுத்த வல்லுநர்களின் கருத்து. வண்ணத்துக்கும் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? கேள்வி எழும்பினாலும் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும் விஷயத்தை நாமும் கொண்டாடி விடுவோமே:)!

இம்மாதத் தலைப்பு: ஆரஞ்சு (இளஞ்சிகப்பு)

கொண்டாடலாம் வாங்க!

கவனிக்க வேண்டியவை: சிகப்பை ஏற்கனவே சீரும் சிறப்புமாகக் கொண்டாடியாயிற்று. (அப்போது நான் பகிர்ந்த 24 படங்கள் இங்கே). எனவே இப்போது வண்ணம் சிகப்பை நோக்கிச் சாய்ந்திடாமல் ஆரஞ்சுக்கு.. இளஞ்சிகப்புக்கு.. முக்கியத்துவம் கொடுக்கட்டும். பிரதானமாக ஈர்க்கும் கருப்பொருள் அல்லது வண்ணம் ஆரஞ்சாக அமையட்டும். அருமையாய் படமாக்கிட ஐநூறு பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் PiT தளத்தில் பாடங்களுக்கா பஞ்சமில்லை. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அழகழகான ஆரஞ்சுடன் வாருங்கள்! படங்களை அனுப்பக் கடைசித்தேதி: 20 ஆகஸ்ட் 2012.

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

#1


#2


#3


#4


#5


#6


#7



#8


படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2012.

நாட்டாமையாக நானிருக்கும் இப்போட்டியின் அறிவிப்புப் பதிவு, PiT உறுப்பினர்களின் மேலும் சில அழகான ஆரஞ்சுப் படங்களுடன் இங்கே.

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

அறிவிப்பான ஆறு நாட்களில் அணிவகுக்க ஆரம்பித்து விட்ட முப்பதுக்கும் மேலான ஆரஞ்சுப் படங்கள் இங்கே. நேரமிருக்கையில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து உற்சாகம் கொடுங்கள். அடுத்த பத்து நாட்களுக்குள் உங்கள் படங்களை அனுப்பி வைத்திடுங்கள்!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin