புதன், 31 ஆகஸ்ட், 2011

மகா கணபதிவினை தீர்க்கும் விநாயகர் அருள்
அனைவருக்கும் கிட்டட்டும்!

சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!
***

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..- ( Bangalore Lalbagh Flower Show )

#1 தலைநகர் தில்லியின் தாமரைக் கோவில்# 2 லால்பாக் குன்றின் மேல் கெம்பகெளடா மண்டபம்

இன்றுடன் முடிவடைகிறது பத்துநாட்களாக நடைபெறும் லால்பாக் சுதந்திர தின மலர்கண்காட்சி. ஒவ்வொரு கண்காட்சியின் போதும் லால்பாக் கண்ணாடி மாளிகையின் பிரதான மலர் கட்டமைப்பே மக்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருப்பது வழக்கம். இம்முறை அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியிருக்கிறது தோட்டக்கலைத் துறை.

வெண்மை என்பது அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம். தில்லியின் தாமரைக் கோவில் பளிங்கினால் ஆனதென்றால் அதன் பிரதியாக 22 அடிகள் உயர்ந்து, 36 அடிகள் விரிந்து மலர்ந்த இக்கோவில் 200 தேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்திலும் உழைப்பிலும், இரண்டு இலட்சம் சம்பங்கி மலர்கள், 75 ஆயிரம் வெள்ளை ரோஜாக்கள், 10 ஆயிரம் நந்தியாவட்டைகள் கொண்டு உருவாகியுள்ளது.# 3 சம்பங்கி, விரியும் இதழ்களிலும்..
ரோஜாக்கள், கூம்பாக உயரும் இதழ்களிலும்..


# 4 உள்ளம் கொள்ளை கொள்ளும் வெள்ளை ரோஜாக்கள்
உங்கள் கண்களுக்கு விருந்தாக..


# 5 நட்சத்திரங்களாகச் சிதறிச் சிரித்தபடி
நலம் விசாரிக்கும் நந்தியாவட்டைகள்..
இவை தாமரை இதழ்களின் உட்புற அலங்காரத்துக்குப் பயன்படுத்தப் பட்டிருப்பதை அடுத்து வரும் படத்தில் கவனியுங்கள்.

# 6 அமைதிக்கான செய்தியை
அடைகாத்து நிற்கிறது வெண்கமல இதழ்# 7 ஒன்றே குலம் ஒருவனே தேவன்
சக மனிதரிடம் காட்டும் அன்பே உண்மையான மதம்.
கடவுள் விரும்புவதும் அதையே.

# 8. அமைதியும் சமாதானமும் 
உலகெங்கும் நிலவட்டும்!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அறிவிப்பு: கண்காட்சியின் மீதப் படங்களைப் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். பெங்களூரு சிவாலயா படங்களும் இன்னும் பகிரப் படாமல் உள்ளன. தொடரும் கழுத்து மற்றும் கைவலி காரணமாக தட்டச்சுவதிலும், படங்களை வலையேற்றுவதிலும் சிரமம் உள்ளது. மருத்துவரோ மருந்துச் சீட்டில் தெளிவாக எழுதி நீட்டி விட்டார் முதலில் என் மடிக் கணினிக்கு முழு ஓய்வு தரச் சொல்லி:)! எனவே சிலகால இடைவெளிக்குப் பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!

***

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

‘அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்’ பெங்களூருவில்..-தமிழ் மொழி சார்பாக மதுமிதா பங்கேற்பு

சென்ற வருடம் சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையும், பெங்களூரில் திருவள்ளுவரின் சிலையும் நிறுவப்பட்டதைப் பாராட்டும் வண்ணமாக 13 ஆகஸ்ட் 2010 அன்று கன்னட மற்றும் கலாச்சாரத் துறை அகில இந்திய மொழி நல்லிணக்க நாளைக் கொண்டாடியது. பெருமளவில் அண்டை மாநிலங்களிலிருந்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலந்து கொண்ட அவ்விழா பேசப்பட்ட இலக்கிய நிகழ்வாக அமைந்து போனது.

இலக்கியத்தின் மூலமாகவும் நாட்டு மக்களை இணைத்திட முடியுமென்கிற நம்பிக்கை தந்த மகிழ்ச்சியில் மீண்டும் நேற்று 13 ஆகஸ்ட் 2011 பெங்களூருவின் “கன்னட பாவன நயனா” அரங்கில் ‘அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்’ அனுசரிக்கப் பட்டது.

#1 விருந்தாளிகளை வரவேற்கிறது கெம்பகெளடா மண்டபத் தூண்:
[நிகழ்வு அரங்கிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.]

‘கலாச்சாரப் பரிமாற்றக் கருத்தரங்கு’ காலையிலும், ‘பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பு’ இடைவேளைக்குப் பிறகும் நடைபெற்றன.

தமிழ் மொழி சார்பாக கவிஞர் மதுமிதா கலந்து கொண்டு உரையாற்றினார்.

#2 மதுமிதா


மொழியும் இலக்கியமும் குறித்து அவர் முன் வைத்த கருத்துக்களின் சுருக்கம்:

எல்லரிகி நமஸ்காரா. மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொள்ள மொழி மிகச் சிறந்த சாதனம். இலக்கியம் என்பது ஆரம்பத்தில் மனிதர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பாடல்கள் உருவில் இருந்தன. வேதங்களையும், இதிகாசங்களையும் போன்று தாலாட்டு, விழாக்கால பாடல்கள் போன்றவையும் எழுத்து வடிவில் இல்லாது, செவி வழியாகத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்தான்.

இன்று அவற்றில் பல எழுத்துவடிவம் பெற்று விட்டன. சதகங்கள் என்றால் 100 பாடல்களைக்கொண்ட தொகுப்புகள். இலக்கியத்தில் இவை தனிவகை. பத்து பத்தாக நூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பு பதிற்றுப்பத்து. அகநானூறு, புறநானூறு 400 பாடல்களைக் கொண்டவை. ஐங்குறுநூறு 500 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணையிலும் நூறு நூறு பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது. பிற மொழிகளிலும் சதக இலக்கியங்கள் பரவலாக இருக்கின்றன.

சுதந்திர போராட்ட காலத்தில் தேச விடுதலை இயக்கப் பாடல்களை அளித்தவர் சுப்ரமணிய பாரதியார். இது இதற்கு முன்பு இல்லாத தனிவகை இலக்கியம். உரைநடை எழுச்சி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்தது. புதினம், சிறுகதை, கட்டுரை என அதன் வளர்ச்சி முன்னேறியது. பாரதியார், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களைத் தொடர்ந்து இன்றுவரையிலும் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் தமிழுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சரித்திரநாவல்கள் தனிவகையைச் சேர்ந்தவை. நெடுங்கதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும், மரபுக் கவிதைகளும், பின் வந்த புதுக்கவிதைகளும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றன.

ஆண் எழுத்தாளர்களைப் போன்று பெண் எழுத்தாளர்களும் இன்று வரை சிறப்பாக எழுதிவருகிறார்கள். திருநங்கைகளின் வரிசையில் பார்த்தால் லிவிங் ஸ்மைல் வித்யாவும் தனது சரிதையைத் தமிழில் கொடுத்துள்ளார். அதை டாக்டர் தமிழ்செல்வி கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளை நான் பெரிதும் மதிக்கிறேன். பல மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற மொழியறியாத தமிழுக்கு கொண்டு சேர்க்கும் சீரிய பணியை அவர்கள் செய்கிறார்கள்.

பிற மொழிகளில் எழுத்தாளர்களுக்கு சிறந்த மரியாதை கொடுக்கிறார்கள். குறிப்பாக கன்னடத்தில் டாக்டர் தமிழ்ச்செல்விக்குக் கிடைத்த கெளரவம் மறக்க இயலாதது. நானும் அவரும் இணைந்து அக்கமகாதேவியின் வசனங்களை இரண்டு வருட உழைப்பில் தமிழில் கொண்டு வந்தோம்.

இங்கே இதற்கு முன்பு வெவ்வேறு மொழிகளில் பேசிய அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது என்பதே இன்றைய சிறப்பாகக் கருதுகிறேன்.தெரியாத மொழி பேசும் மக்கள் சேர்ந்திருக்கிறோம் என்னும் நினைவை மறந்து இந்த ஒருங்கிணைந்த நாளில் மன ஆழத்திலிருந்து மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர முடிந்தது. சென்ற வருடம் இதே அகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சர்வக்ஞர், திருவள்ளுவர் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் போன்று இன்று இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலும் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தன்யவாதுகலு.


அவர் உரையாற்றி முடித்ததும் தமிழ் அறிந்த திரு. ராமதாஸ் அவர்கள் கன்னடத்தில் அதை மொழிபெயர்க்க, கூட்டத்தில் பலத்த கரவொலி. தொடர்ந்து திரு. நடராஜன் அவர்கள் அதே உரையை ஆங்கிலத்தில் தர மீண்டும் கரவொலி.

#3 விழாத் தலைவர் திரு ராமதாஸுடன்


#4 அரங்க வாயிலில்
[முதல் 3 படங்களும் நான் எடுத்தவை. நான்காவதில் மதுமிதாவுடன் நான்.]

இடைவேளையில் எதிர்ப்பட்டவரெல்லாம் அவரைப் பாராட்டியபோது தமிழுக்கும், ஏன் நமக்கும் கிடைத்த பெருமையாகவே மனம் மகிழ்வாக உணர்ந்தது. என்னால் சிறிது நேரமே அங்கிருக்க முடிந்தது. மதியம் அவர் வாசித்த கவிதைக்கும் சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

நாடு அறுபத்து நான்காவது சுதந்திர தினத்தைக் காணவிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற நல்லிணக்க விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கட்டும்!

ஆழி சேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல், திசை வேறானாலும் மதம் வேறானாலும் மொழி வேறானாலும் இசைந்தால் நம் அனைவரின் சுரமும் ஒன்றாகாதோ? ஆகும்!

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
***

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

விட்டு விடுதலை - திண்ணையில்..சுமக்கிற பிரியங்களை
இறக்கி வைப்பது
இறுதி நொடியில் கூட
இயலுமா தெரியவில்லை.
பிரிகிற ஆன்மா
பேரொளியில் சேரத்
தடையாகுமதுவே
புரியாமலுமில்லை.

காலத்திற்கேற்ப
ஆசைகள் மாறுவதும்
தலைமுறைகள் தாண்டிப்
பாசங்கள் தொடர்வதும்
புகழ்பொருள் மீதான நாட்டங்கள்
போதையாகுவதுமே
சாஸ்வதமாக

மீளும் விருப்பற்று
இறுக்கும் சங்கிலிகளுக்குள்
இருப்பினைப் பத்திரமாக்கி

விட்டு விடுதலை ஆகாமலே
விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.
***

17 ஜூலை 2010 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

சனி, 6 ஆகஸ்ட், 2011

‘சோகம்’ இனி இல்லை.. வானமே எல்லை..- ஆகஸ்ட் PiT போட்டி

இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :( என அறிவித்த நடுவர் நாதஸ் அழகாய்ச் சொல்லி விட்டார்:

“வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராகச் செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம். உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்.”


போட்டியில் கலந்து கொள்ள காமிராவைக் கையிலெடுக்க இருப்பவருக்காக சில மாதிரிப் படங்கள் இங்கே:

#1 தள்ளாத வயதில்.. தனிமைத் துயரில்..?


#2 விரக்தி தவழும் புன்னகை?

சோகமென்றாலே வயதானவர்கள்தானா என்று கேட்கவோ, கேட்காமலே ஒரு முடிவு கட்டவோ செய்து விடாதீர்கள். வாழ்வின் விளிம்பில் ஒரு வித சோகத்தை, விரக்தியைப் பரப்புகிற மாதிரியாக அமைந்து போன படங்கள் இவை. உடல்மொழியால் உணர்வை உணர்த்துகின்றன.

ஆனால் உணர்வை வெளிப்படுத்தும் சக்தி கண்களுக்கே அதிகம் என்பதை நம்மாலே மறுக்க முடியுமா? கீழுள்ள படத்தில், உச்சிச் சூரியனின் கதிரும் நிழலும் சூழ்ந்த இடத்தில், உட்கார்ந்திருக்கும் இந்த விற்பனையாளரின் கண்களில் காலையிலிருந்து பொரி போணியாகாத கவலை எப்படித் தெரிகிறது பாருங்கள்:

#3 கவலை தேக்கிய கண்கள்

#4 இந்தக் கண்களை நேருக்கு நேர் நம்மால் சந்திக்க முடிகிறதா?
#5 காட்டு ராஜாவைக் கட்டிப் போட்டால் அதன் கண்களில் உற்சாகமா வழியும்:(?#6 பரிதவிப்பில் இன்னொரு ராஜா


இதுபோல பலவிலங்குகள், குறிப்பா நாய்கள், மாடுகள் தனிமையில் சோகமாகப் பார்த்தபடி இருக்கும். ஐந்தறிவு விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கிறதே.

இப்போது இலையுதிர்காலம். இந்தத் தலைப்பு அறிவிப்பான நாளில் காரில் சென்று கொண்டிருக்கும் போது பல இடங்களில் ஒற்றை இலை கூட இல்லாத மரங்களைப் பார்த்தேன். அது கூட ஒரு சோகம்தான். நெடுஞ்சாலை என்பதால் நிறுத்தி எடுக்க முடியவில்லை. ஆனால் என்னென்ன அழகான கோணங்களில் எடுக்கலாம் என மனது மட்டும் கணக்குப் போட்டது. அப்படியான படத்தைக் கொடுத்து விட்டு ‘நீங்க சொன்னீங்கன்னு எடுத்தனே. பத்துக்குள்ள வரலியே’ என்று கேட்கக் கூடாது:))! கட்டிடப் பின்னணியில்லாமல் வெண்மேகம் சூழ்ந்த வானோ, நிர்மலமான நீல ஆகாயமோ மட்டுமே பின்னணியா வருமாறு லோ ஆங்கிளில் எடுத்தா நல்லாருக்கும். லைட்டிங்கும் அந்த மூடை கொண்டு வருமாறு அமைய வேண்டும்.

இது ஒரு உதாரணத்துக்குதான். வானமே எல்லை என உங்க கற்பனையைத் தட்டி விடுங்கள். சோகத்தை எப்படிப் படமெடுக்க என சோர்வாகி விடாதீர்கள். நம்மில் எத்தனை பேருக்கு சோகப்பாடல்கள் கேட்கப் பிடிக்கும்? மனதுக்கு அவை இதம் தருவதாயும் உணருகிறோம். பாருங்கள், மொட்டை மரம் சோகமாகத் தெரிந்தாலும், இன்னும் சில நாட்களில் துளிர்த்துத் தளிர்விட்டுப் பூத்துக் குலுங்கிடும். அது போலதான். எந்த உணர்வும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை. நடுவர் சொன்ன அதே பாயின்டுக்கு வந்து விட்டேனா? முடித்துக் கொள்கிறேன்:)! இதுவரை வந்த படங்களோடு உங்கள் படங்களையும் சேர்க்க PiT ஆவலாகக் காத்திருக்கிறது!

*இந்தப் பதிவு பிட் குழுமத்தினர் கருவாயன் மற்றும் ஜீவ்ஸ் ஆகியோரின் கீழ்வரும் சிறப்பான மாதிரிப் படங்களை சேர்த்துக் கொண்டு..PiT தளத்திலும்: ஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள் http://photography-in-tamil.blogspot.com/2011/08/blog-post.html

புதன், 3 ஆகஸ்ட், 2011

அரும்புகள் - கல்கி 70வது ஆண்டு மலரில்..அரும்புகள்

என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து 
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞ்சு மீன்களும்.

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் 
காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது

பிள்ளைப் பிறை நிலா.
**
70வது ஆண்டு மலராக மலர்ந்துள்ள
7 ஆகஸ்ட் 2011 கல்கி இதழில்..
நன்றி கல்கி!
***

படம்: இணையத்திலிருந்து..

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

361 டிகிரி - காலாண்டு சிற்றிதழ் - ஒரு அறிமுகம்


361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், கனமான அட்டை ரோஹிணி மணியின் சித்திரங்களுடன், ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் நேர்த்தியான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.

அந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:

மலை
மரணச் சடங்கில் அமர்ந்திருக்கும்
என்னைப் போல்
மெளனமாக இருக்கிறது சரி.
உள்ளே
அவ்வளவு கனமாக இருக்கிறது.
மலர்
ஏன் மெளனமாக
இருக்கிறது. உள்ளே
அவ்வளவு
கனமாக இருக்கிறது போலும்.


மேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..

..எழுதிக்கொண்டிருக்கும் எனது
வரிகளுக்கிடையே
மாண்டுபோன அத்தனை எழுத்துக்களும்
தனக்கான இடங்களில் தோன்றிக்கொள்ள

நான் இப்போது
வெற்றுக் கட்டங்களை நிரப்புபவனாகிறேன்.
....
....

எனது தாளில் இப்போது
இங்கொன்றும் அங்கொன்றுமாகச்
சில
எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

அவற்றைக் கூட்டி
ஒரு சில வாக்கியங்களை அமைக்கும்
சாத்தியம் மட்டுமே
கைக்கொண்டவன்
என்னத்தைக் கூறிவிட முடியும்
உங்களிடம்?


ன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:

..நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின்
நிர்மூலங்கள்
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்
இலவ மனம்.
சுற்றத்தாரைப் பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது
ஒற்றைப் பனை..


காலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.

எதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.

சிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:

...ஒரு வாழ்வைப்போலவே
ஒரு பறவையையும்
எதிர்கொள்ளவோ
வரவேற்கவோ
விசாரித்து விருந்தோம்பிக் கொண்டாடவோ
நமக்குத் தெரிவதேயில்லை...

வெறும் நிழலாய்க்
கடந்து சென்றுவிடுகிறது அது

பெயரில்லை
ஊரில்லை
அதற்கோர் கூடுமில்லை.


நேசமித்திரனின் ‘மற்றும்-ஃ’ :

சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...

பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள்
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்...


ம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..

.. ஆரத் தழுவமுடியாத
பெரும் மழையை
அள்ளிக் கொண்டோடுவது எப்படி
என் சிற்றோடையே

அண்ணாந்து வியக்கும்
பெரிய வெளியைப்
பறந்து தீர்ப்பது எப்படி
என் சிறிய பறவையே..


பட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.

ரு இலை அசைவதை
மரத்தைக் கடப்பவர்கள் யாரும்
தலை உயர்த்திப் பார்ப்பது இல்லை.


அற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு!...’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.

...அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்.

ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை... ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”

உண்மைதான், இல்லையா? ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து...

...அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”

அருமை!

மிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்தர இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பலாம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்குச் சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com

ஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
***

முதல் இதழ் கிடைக்குமிடங்கள்:
New BookLands, T.nagar,chennai 17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)
Discovery book palace,K.K.Nagar,Chennai. (Contact Vediappan- 9940446650)

விலை: ரூ.20

31 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில், நன்றி திண்ணை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin