புதன், 27 ஜனவரி, 2010

பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010 - ( Bangalore Lalbagh Flower Show )

பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் வருடம் தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் மலர் கண்காட்சி பரபரப்பானது. இவ்வருடமும் 20ஆம்தேதி ஆரம்பித்து, கடந்த ஒருவாரமாக எட்டு லட்சம் பார்வையாளர்களை எதிர்கொண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த வருடத்தின் சிறப்பாக பலவண்ண ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட சுமார் 25 அடி உயர காவேரி மாதாவும், 40 அடிக்கு எழும்பி நின்ற குதுப்மினாரும், எண்ணத்தில் தேச ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அத்தனை சமயத்தினரின் பண்டிகைகளையும் சித்தரிக்கும் மலர் காட்சிகளும் அமைந்திருந்தன.

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் ப்ரெளசரில் 'view' க்ளிக் செய்து அதில் zoom-zoom in செய்து காணக் கேட்டுக் கொள்கிறேன்.]


அன்னை காவேரி

வளம் பெருக வரம் தரும் தாயே
நீ வரும்வழி பார்த்துக் காத்திருக்கும்..

எங்களையும் திரும்பிப் பார்த்திடுவாயே!
***

குதுப்மினார்
லட்சத்து இருபதாயிரம் ரோஜாக்களால் கோபுரத்தை வடிவமைத்த பூ அலங்கார வல்லுநர் காளிதாஸுக்கு பாராட்டுக்கள். [இன்னும் அருகாமையில் ரசிக்க விரும்பினால் படத்தைச் சுட்டுங்கள்!]
***

ஒவ்வொரு தூணிலும் மெகா பூப்பந்து

***



‘மிலே சுர் மேரா துமாரா’

உன் சுரமும் என் சுரமும் சேர்ந்தால் நம் சுரமாகுமே
‘மிலே சுர் மேரா துமாரா’அனைவரும் அறிந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடல். நேற்று ஜூம் டிவியில் அவர்களும் டைம்ஸ் க்ரூப்பும் சேர்ந்து தயாரித்த இதன் புதிய ரீமிக்ஸினை அடிக்கடி ஒளிபரப்பினார்கள். பாடல் காட்சியைக் காண விரும்புவோருக்கு சர்வேசனின் பகிர்வு இங்கே!


“இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்!
திசைவேறானாலும்..
ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல்..
இசை..நம் இசை”


இசை மட்டும்தானா


இசைந்தால் பண்டிகைகளும்.. அன்பைக் கூடிப் பகிர்வதால் கொண்டாட்டங்களும்.. கூட நமதாகும்!


கிறுஸ்துமஸ்
***

ரம்ஜான்
***

புத்த பூர்ணிமா
***

தசரா
***

ஹோலி
***

வரலெட்சுமி
***




பூப்பூவா பூத்திருக்கு

மெத்து மெத்து மலர்கள் மொத்த மொத்தமாய்..


எண்ணம் நிறைக்கும் வண்ணங்களில்..


கண்ணைப் பறிக்கும் நிறங்களில்..


அழகாய் அணிவகுத்து..


க்ளாஸ் ஹவுஸ்
கண்டு களித்தோரும் காணச் செல்வோரும்..
குடியரசு தினத்தன்றே சென்றிருந்தேன். கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா? கோணம் பார்த்து வாகாய் பிடித்து க்ளிக்கிடப் போகையில் கையைத் தட்டி விடும் நெரிசல், காட்சிக்கு குறுக்கே வரும் நபர்கள், நகரச் சொல்லி அவசரப் படுத்தும் காவலர்கள் கெடுபிடி இவற்றிற்கிடையே இவ்வளவுதாங்க முடிந்தது.

அனைத்துப் படங்களும் க்ளாஸ் ஹவுஸ் உள்ளே மட்டுமே எடுக்கப் பட்டவை. தவிரவும் தோட்டம் எங்கிலும் காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த பல்வேறுரக பூச்செடிகள் மிதமான வெயிலிலும் இதமான காற்றிலும் வருகிறவர்களைப் பார்த்து சளைக்காமல் மலர்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டேயிருந்தன. அவற்றைப் பின் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

*** *** ***



நன்றி விகடன்!


  • இப்பதிவின் தொடர்ச்சியாக, பாகம் இரண்டாக நான் பதிந்த ‘மலரோடு மலராக!

திங்கள், 25 ஜனவரி, 2010

சிறுகதைக்கு ஒரு படம் [ஜனவரி 2010 PiT போட்டிக்கு]

என்ன தலைப்பு வரப் போகிறது எனக் காத்திருக்கையில் புதுமையாய் வந்தது அறிவிப்பு. சர்வேசனின் நச் சிறுகதைப் போட்டியில் முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து அதற்குப் படம் போடச் சொல்லி விட்டார்கள். சவாலை வெல்லும் அளவுக்கு காட்சிகள் கிடைக்காததால் சமாளித்து விட்டிருக்கிறேன்! பொருத்தமாய் இல்லாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்:)!

ஒவ்வொரு கதையிலிருந்தும் எடுக்கப்பட்ட சில வரிகளுடன் படங்கள்..


அதி பிரதாபனின்நறுமணதேவதை’:

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!






முரளிக்கண்ணனின்சட்டை’:

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான். இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா






சதங்காவின்நெல்லிமரம்:

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம்.


வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள்.



[ஒரு நெல்லிக்கனி கூட இல்லை மரத்தில். சந்தேகமாகவே பார்த்து நின்ற என்னிடம் அது நெல்லிமரம்தான் எனக் கையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்தார்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள்:)!]




நிலாரசிகனின்அப்பா சொன்ன நரிக்கதை’:

சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்.







பின்னோக்கியின் 'வெள்ளை உருவத்தில் வில்லன்':

பயத்தில் “ரம்யா, கீதா” என்று கத்தினாள் “இங்கதாம்மா விளையாடிக்கிட்டு இருக்கோம்” என்ற பதில் கேட்டு கமலாவுக்கு சற்று பதற்றம் குறைந்தது.







ராம்குமார் அமுதனின்கடைசி இரவு’:

முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு


கடைசிப் படம் போட்டிக்கு.




அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது 2009..வெற்றிப் பதக்கங்கள் இரண்டு..மகிழ்வும் நெகிழ்வும்..!

இரண்டு விருதுகள்! இரண்டு பதங்கங்கள்! இரட்டை சந்தோஷம்!

சமூக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கம்
‘இவர்களும் நண்பர்களே..’ பதிவுக்கு!


காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம்‘LAND MARK - July PiT மெகா போட்டிக்கு..’ பதிவுக்கு!



நன்றி தமிழ்மணம்! நன்றி நண்பர்களே!

ம் படைப்புகளை உலகம் அறியத் திரட்டித் தருவதோடு நின்று விடாமல் வருட முடிவில் போட்டியும் நடத்தி விருதுகள் வழங்கி வரும் தமிழ்மணத்தின் மகத்தான சேவைக்கு வணக்கங்கள்! இந்த வருடமும் திருவிழா போல நடந்து முடிந்த போட்டியின் முடிவுகள் இங்கே!

வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

ஏனைய பிரிவுகளில் பரிசு பெற்ற மற்றவருக்கும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

மூகம் பிரிவில் நான் பெற்றிருக்கும் முதல் இடம் சற்றும் எதிரே பாராதது. அப்பதிவில் சொல்லப்பட்டவை பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்றே போட்டிக்குப் பரிந்துரைத்திருந்தேன்.

ஒருவர் எழுதியதை வாசிக்கையில் அது சம்பந்தமாக மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர் பதிய.. இன்னும் பலர் தொடர.. என்பது வலையுலகில் நிலவும் ஆரோக்கியமான சூழல். தொடர் பதிவுகளின் நோக்கமும் கூட அதுவேதான், அழைப்பாக வருகையில் பலவற்றை என் வரையில் பகிர்ந்திட குறிப்பாக எதுவுமில்லாத பட்சத்தில் அன்புடன் நான் மறுத்து விட்டிருந்தாலும்.

சர்வேசனின் ‘உதவும் கரங்கள்-ஒரு விசிட்’ பதிவினைத் தொடர்ந்து நான் வெளிப்படுத்த விளைந்த எண்ணங்களே இப்பதிவு. அவருக்கு என் நன்றிகள். அவரது பதிவையும், என்னைத் தொடர்ந்து ஜீவன், ரம்யா ஆகியோர் எழுதிய பதிவுகளையும் நான் அங்கே தந்திருந்த சுட்டிகளின் மூலமாகப் பலரும் வாசிக்க வாய்த்திருக்குமேயானால் அதுவே மிகுந்த மனநிறைவு!

ஹி..! பெரிய வல்லுநராக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஈட்டித் தரும் அங்கீகாரம் என்பதற்கான அத்தாட்சி காட்சிப் படைப்பில் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த விருதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! PiT குழுவினருக்கே இதை சமர்ப்பிக்கிறேன்.

பதிவுலகம் நுழைந்ததில் இருந்து ஒரு மாதம் கூடத் தவறாமல் PiT போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன் இதுவரையில். நான்கு முறை முதல் சுற்றுக்குள் வந்துள்ளேன். பரிசு மட்டுமே இலக்கு என்றில்லாமல் ‘பங்களிப்பே சிறப்பு’ எனும் மனோபாவத்துடன் முடிந்தவரை எல்லாப் போட்டிகளிலும் எல்லோரும் கலந்து கொள்வோம். நிச்சயம் அது நம் திறமைகளை வெளிக் கொண்டு வரும்.

PiT குழு மாதாமாதம் விதம்விதமாய் தலைப்பைக் கொடுத்து, புகைப்படத் துறையின் மீதான நம் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து போட்டிகளை நடந்தி வருகிறது. வல்லுநரோ கத்துக்குட்டியோ எவராயினும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பொறுமையாக அறிவுரைகளும் வழங்குகிறது. வாழ்க அவர்களது சேவை!

'Land Mark' தலைப்பைக் கொடுத்த நபர் குழுவிலே யாருங்க? உங்களுக்கு தனியாக ஒரு சிறப்பு நன்றி:)!

என்ன, ஒரு சின்ன மனக்குறை. முன்னரெல்லாம் போட்டித் தலைப்பு வெளியான சில நாளில் தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும். முடிவுத் தேதி நெருங்க நெருங்க திருவிழாதான். ஆனால் இப்போது படங்களை நேரடியாக சமர்ப்பித்திடும் வசதி வந்த பின் இதற்கெனப் பதிவிடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து விட்டது.நண்பர் கிரி, ‘நீங்கள் ஒருவர்தான் இத்தனை ஆர்வத்துடன் பதிவிடுகிறீர்கள்’ என்பார். ஆனால் முன் எப்போதையும் விட கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை 50 முதல் 70 வரை என இப்போது அதிகரித்தே இருக்கிறது. அதுவும் கடைசி மணி நேரத்தில் 30 பேர் படங்களை வந்து இணைப்பது அட்டகாசமாக இருக்கும். இவர்கள் எல்லோரிடத்திலும் நான் வைக்கும் வேண்டுகோள் பதிவாகவும் படங்களைத் தாருங்கள் என்பதே. இது பார்க்கும் இன்னும் பல பேரை ஆர்வத்துடன் கேமிராவைத் தூக்க வைக்கும்.

டந்த நான்கு நாட்களாக குமரகத்தின் தாஜ் ரிசார்ட்டில் ஓய்வுக்காக சென்றிருந்த இடத்தில், அறிவிப்பு வெளியான அன்று வலைப்பதிவுகள் திறக்கவேயில்லை. வெற்றி பெற்றிருந்த அந்தந்த எனது பதிவுகளில் நண்பர்கள் வாழ்த்தி இட்டிருந்த பின்னூட்டங்கள் வாயிலாகவே விருதுகள் கிடைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தாங்களே பரிசு பெற்ற சந்தோஷத்துடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களாகவும், மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும் குறுஞ்செய்திகளும் நெகிழ வைத்தன. ‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சிட்டாங்க..’ போன்றதான பின்னூட்டங்கள் இன்னும் நெகிழ்வு.

சில மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், ஏற்பட்ட சில பக்கவிளைவுகளால் உடல்நலக் குறைவு, இன்னும் தொடரும் மருந்துகள் என மனதும் உடலும் சற்றே சோர்ந்திருந்த வேளையில் சமீபகாலமாகத் தொடர்ந்து கிடைத்து வரும் சில அங்கீகாரங்கள் நிஜமாகவே என்னை உற்சாகப் படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அதிலும் தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

ப்போதுமே அதிக எண்ணிக்கையில் பதிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக அதிகம் எழுதவுமில்லை. வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள் பலவற்றிற்கு தொடர்ந்து செல்லவும் இயலவில்லை. இப்போது தேறி தெம்பாகி வரும் வேளையில் ‘எழுது இன்னும்’ என இழுத்துப் பிடித்து தந்துள்ளீர்கள் ஒன்றிற்கு இரண்டாகப் பதக்கங்கள்!

தனிமடலில் வாழ்த்தும் போதே ‘போக வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது’ என அக்கறையுடன் நினைவுறுத்தும் உங்கள் போன்ற நட்புகள் கூடவே வருகையில்.. என்ன சொல்ல.. எப்படி சொல்ல? எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி!

புதன், 6 ஜனவரி, 2010

தினமணி.. இளமை விகடன்.. தமிழ்மணம் விருது.. கிழக்குவாசல் உதயம்








புத்தாண்டின் முதல் தினத்தில் நா. மணிகண்டன் பதிவுலகம் பற்றி தினமணி நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், பெண் பதிவர்களின் பங்கினைப் பற்றிய பாராட்டில் எனக்கும் ஒரு சின்ன இடம்..'வலையுலகப் படைப்பாளி'களுக்கு உற்சாகம் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுரையை முழுவதுமாய் வாசிக்க இங்கே அல்லது இங்கே செல்லுங்கள் பதிவர்களே!

நன்றி தினமணி! பதிவர்கள் சார்பில் நன்றிகள் நா.மணிகண்டன்!








யூத்ஃபுல் விகடனில் கடந்த வருடத்திய எனது தொடர் பங்களிப்பினைப் பாராட்டி அன்பளிப்பாக 3 மின்புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார்கள். யூத்ஃபுல் விகடன் குழுவினருக்கு நன்றிகள்!






தமிழ்மணம் விருது 2009 முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி விட்டன. கடந்த வருடம் போல இந்த வருடமும் இரண்டு பிரிவுகளில் என் பதிவுகள் முதல் சுற்றுவரை முன்னேறியதுவே தருகிறது மகிழ்ச்சியை.

பிரிவு:காட்சிப் படைப்பு(ஓவியம், ஒளிப்படம்,குறும்படங்கள்):

LAND MARK - July PiT மெகா போட்டிக்கு..


பிரிவு:அரசியல் சமூக விமர்சனங்கள்:

இவர்களும் நண்பர்களே..


வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இறுதிக் கட்ட பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பு இங்கே.

அவரவர் வாக்குகளை வீணாக்கி விடாமல் விருப்பமான இடுகைகளுக்கு அளித்திடுவோம் 12 ஜனவரிக்கு முன்னே.



மிகுந்த சிரத்தையோடு போட்டியை நடத்தி வரும் தமிழ்மணத்துக்கு நம் நன்றிகள்!









‘கிழக்கு வாசல் உதயம்’ திருச்சி மண்ணிலிருந்து திரு. உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.









பத்திரிகையைப் பற்றி பெங்களூர் வாசகர்களாகிய ஷைலஜா, ஜீவ்ஸ், திருமால் இவர்களுடன் நானுமாக நடத்திய கலந்துரையாடல் இம்மாத இதழில்:

('க்ளிக்' செய்து காணக)



மேலுள்ளவை தவிர்த்து ஒரு பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவித்தால் ஷைலஜாவின் மூலமாக அக்கருத்துக்கள் ஆசிரியரிடம் எடுத்துச் செல்லப்படும்.

பத்திரிகை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆண்டுச் சந்தா ரூ 180-யை ‘உத்தமசோழன்’ என்ற பெயருக்கு மணியார்டர் (அ) டி.டி.யாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
உத்தமசோழன்,
ஆசிரியர்-‘கிழக்கு வாசல் உதயம்’
525, சத்யா இல்லம், மடப்புரம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்-614 715.



இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin