மேடைப்படங்கள் எடுப்பது சற்றே சிரமமானது. பெரிய நிகழ்வுகளில் மேடை முன்னே நடக்கும் அனுமதி இருக்காது. மிக அருகில் சென்று எடுக்க இயலாது. இருந்து இடத்திலிருந்து எடுக்கையில் முன் வரிசையில் இருப்பவர் தலைகள் ஃப்ரேமுக்குள்ளே வரக் கூடாது. இரவுக் காட்சிகளாக இருப்பின் பாயிண்ட் & ஷுட்(P&S) காமிராவில் அத்தனை பிரமாதமான ரிசல்ட் கிடைக்குமென எதிர்பார்க்க இயலாது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்கிற பரிசோதனை முயற்சிகள், தவறுகளில் கிடைக்கும் பாடங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன. எடுத்த படங்கள் சில வேளைகளில் சரிவராது போனால் கூட, . “அடடா இது நமக்கு சரிப்படாது” என சோர்ந்து ஒதுங்கிப் போகாமல் தவறுகளை ஆராய்ந்து திருத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பட்டி மன்றம்:
பேச்சுக்கலையை தமிழ்நாட்டில் வளர்ப்பவை அரசியல் மேடைகளா பட்டிமன்றங்களா என ஒரு பட்டிமன்றமே நடத்தி விடலாம். 1987-ல் என நினைக்கிறேன். தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பு தமிழகம் எங்கும் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றங்கள் அறிமுகமாயின. ஆரம்பக் காலத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் வெகுவிரைவில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்புகளில் (எனக்கு) ஈர்ப்பு இல்லாததாலும், சிலநேரங்களில் ஓரணியில் இருக்க நேர்ந்து விட்ட காரணத்துக்காக விடாப்பிடியாக தவறான கருத்துக்களை வலியுறுத்துவது(விதண்டா வாதம்?) போன்ற தோற்றங்களைத் தந்ததாலும் நாட்டம் குறைந்து பட்டிமன்றங்களைப் பார்ப்பதேயில்லை நான். இதனால் இக்கால பேச்சாளர்கள் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை.
அப்புறமாக வந்த விஜய் டிவியின் ‘நீயா நானா’ கலந்துரையாடல் புதுமையாகவும் அருமையாகவும் தோன்றியது. தொடக்க ஜோர் அதிலும் கொஞ்ச கொஞ்சமாய் தேய்ந்து போனது. உறவு சார்ந்த தலைப்புகளில் குடும்ப நபர்களுக்குள்ளே பகையை உண்டு பண்ணும் அளவுக்கு நிகழ்ச்சிகள் செல்ல, கலந்து கொள்பவர்களும் ‘என்ன பேசுகிறோம்’ எனும் விவஸ்தையின்றி எதையெதையோ பேசுவது கண்டு ஏற்பட்ட அயர்ச்சியில் அதையும் நிறுத்தி விட்டேன். எப்போதேனும் தாம் கலந்து கொள்வதாக பதிவர்கள் அறிவிக்கையில் மட்டும் பார்க்கிறேன் இப்போது:)!
கடந்த வருடம் ஜூலை இரண்டாவது ஞாயிறு மாலை, பெங்களூர் செளடையா அரங்கில் சன் டிவியின் ‘கல்யாண மாலை’ பட்டிமன்றமும் படப்பிடிப்பும் நடக்கவிருப்பதாகவும் வர விருப்பமா எனக் கேட்டும் அழைப்பு விடுத்தார் தோழி ஷைலஜா. மல்லேஷ்வரத்தில் வயலின் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த அரங்கு என் இல்லத்திலிருந்து அதிக தொலைவில் இல்லை என்பதால் மட்டுமின்றி, நேரில் பட்டிமன்றம் பார்த்ததில்லை என்கிற ஆர்வத்தாலும் நண்பர்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.
அவ்வப்போது பெங்களூரில் இலக்கியக் கூட்டம் நடத்தும் ஐவரில் ஒருவர் (ஷக்தி ப்ரபா) தனக்குப் பிறந்தநாள் எனப் பின் வாங்கிவிட, திருமால் மற்றும் ஜீவ்ஸ் உள்ளிட்ட நால்வர் ‘பேரணி’(?) சரியான நேரத்தில் அரங்க வாயிலில் ஆஜர் ஆனது! மூன்றாம் வரிசையில் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டது.
கூட்டணியின் இரண்டு புகைப்படக்காரர்களும் தத்தமது காமிராக்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தோம். லென்சுகளை அடிக்கடி கழற்றி மாற்றிப் போட்டு, ஜூம் செய்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தார் வல்லுநர். சலங்கை ஒலி கமல், ஜெயப்ரதா எடுத்த படங்களைப் பார்த்து தன்னுடைய காமிராவை ஒளித்து வைத்தது போலன்றி, அசராமல் என் சோனி W80-யில் சுட்டுத் தள்ளினேன். பின்னே, தன்னம்பிக்கையே என் தாரக மந்திரம் அல்லவா:)? காமிராவின் அதிக பட்ச ஜூம்(zoom) ஒத்துழைத்த அளவுக்குக் கிடைத்த படங்களே இங்கே. எப்படி வந்துள்ளன என்பதை உங்கள் கருத்துக்கே விடுகிறேன்.
வொயிட் பாலன்ஸும் காமிராவின் இன்னபிற வசதிகளும்:
ஒளிக்கு ஏற்ப white balance-யை மாற்ற வேண்டும் என்பதை இப்போது SLR-ல் மறக்காமல் கவனிக்கும் எனக்கு P&S[Point and shoot]-ல் அந்த வசதி உண்டு எனும் அடிப்படை கூடத் தெரியாது இருந்திருக்கிறது அப்போது! அதை சொல்லித் தந்தார் வல்லுநர். வரவேற்புரை, குத்துவிளக்கேற்றும் வைபவம் என ஆரம்பத்தில் எடுத்தவற்றை விட வொயிட் பாலன்ஸ் அட்ஜஸ்ட் செய்தபின் எடுத்த படங்கள் கூடுதல் தெளிவாக இருந்தன.
இதை நீங்களே P & S-ல் பரிசோதித்துப் பார்க்கலாம். சாதாரணமாக auto mode-ல் வைத்து எடுப்பதற்கும் Program mode-க்கு மாறிக் கொண்டு வீடியோ வெளிச்சத்துக்கு ஏற்ப [use under incandescent light or video lights எனும் குறிப்போடு குண்டு பல்பு படம் போட்டிருக்கும் கவனியுங்கள்.] செட் செய்து எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் கிடைப்பதை. படங்கள் துல்லியமான விவரங்களுடன் கிடைக்கும். அது போல வெள்ளை ஒளி [white fluorescent light], சூரிய வெளிச்சமெனில் அதற்கேற்ப white balance-யை மாற்றிடுங்கள்.
நமது பதிவர்கள் பலரும் தொடர்ந்து ஏதேனும் நிகழ்வுகளுக்கு சென்று படமெடுத்து பதிந்தபடியே இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கேனும் இக்குறிப்பு பயனாகலாம்.
தவிரவும், எப்போதுமே நமது காமிராவில் தரப்பட்டுள்ள பலதரப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். வேகக் காட்சிகளுக்கு Action or Sports, குறைந்த ஒளியில் Night மற்றும் ISO, இயற்கை காட்சிகளின் வண்ணங்களை எடுப்பாகக் காட்ட Landscape, பொருட்களை வெகு அருகாமையில் எடுக்க macro இப்படியாக..
இனி பட்டிமன்ற மேடைக்கு செல்வோமா?
குடும்பமா.. பணியிடமா..:
அன்றைய தலைப்பு, இன்றைய வாழ்வில் சவாலாக இருப்பது குடும்பமா பணியா என்பதே. காலத்துக்கேற்ற தலைப்புதான். குடும்பம்தான் என்று வாதிட முறையே மென்பொருள், பத்திரிகை மற்றும் அக்கவுண்ட்ஸ் துறைகளைச் சார்ந்த மூவர். பணியிடம்தான் என்று வாதிட மென்பொருள், அரசுப்பணி மற்றும் வ்ங்கித் துறை சார்ந்த மூவர்.
1. ஆரம்பமாகிறது பட்டிமன்றம்
2. குடும்பம்-சவாலே சமாளி
சிரிக்கிற யுவதியை வல்லுநர் எப்படி அழகாய் படம் பிடித்துப் பதிந்துள்ளார் என நீங்களே பாருங்கள்: http://www.flickr.com/photos/iyappan/4960758285/in/photostream
ஃப்ளிக்கர் தளம் சிலருக்கு எளிதாகத் திறப்பதில்லை ஆதலால் படம் இங்கேயும்:
படம்#ஜீவ்ஸ்அசந்து மறந்து இதற்கான பாராட்டை என் கணக்கில் யாரும் டெபாசிட் செய்து விடக் கூடாதென்பதால் வித்தியாசப்படுத்த சிறிய அளவில் பதிந்துள்ளேன்:)!
இந்த அளவுக்கு விருப்பத்துக்கு ஏற்றவாறு வொயிட் பாலன்ஸ் அளவுகளை பாயிண்ட் அண்ட் ஷூட்டுகளில் மாற்ற இயலாதுதான். அதே நேரம், ஒரே மேடையின் ஒரே சமயப் படங்களில் காணக் கிடைத்த ஒளி வேறுபாடு வொயிட் பாலன்ஸின் அவசியத்தை உங்களுக்கு உணர்த்தும். எனது காமிராவில் நான் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்திருந்தால் படங்கள் இப்போது உள்ளதைவிடவும் அதிகமாய் மஞ்சள் பூசிக் குளித்திருந்திருக்கும்.
3. பணியிடமே பயங்கர சவால்
4. நடுவராக பாரதி பாஸ்கர்
பட்டிமன்றங்கள் பார்த்ததில்லை என்று சொன்னேனே. ஆக, பிரபல பேச்சாளரான பாரதி பாஸ்கரை டிவியில் அன்றி அங்குதான் முதன் முறை பார்த்தேன். பேச்சையும் கேட்டேன். வாதங்களுக்கு ஏற்ப மிகச் சரளமாகவும் மென்மையானதொரு ஆளுமையுடனும் நகைச்சுவை மிளிரப் பேசி வியக்க வைத்தார். மொத்தத்தில் இருபக்கத்தினருமே வீண் தர்க்கங்கள் ஏதுமின்றி ரசிக்கத்தக்க நியாயமான பதில்களைத் தந்து அவரவர் கருத்துக்களை அழுத்தமாகப் பேசி முடித்தது சிறப்பு.
கல்யாண மாலை பல ஊர்களிலும் நடத்தி வரும் பட்டிமன்றங்களில் அந்தந்த ஊரைச் சேர்ந்த பேச்சாளர்களையும், புதியவர்களையும் ஊக்கம் தந்து மேடையேற்றி வருவதாகவும் தெரிய வந்தது. பெங்களூரிலிருந்து இரண்டு கட்சிக்கும் ஒவ்வொருவரைத் தேர்வு செய்து தர ஷைலஜாவின் உதவி நாடப்பட, அவர் நம் பதிவர்களை முன் நிறுத்த விரும்ப, குடும்பச் சுமையால் அம்பியும், பணிச் சுமையால் ஜீவ்ஸும் தேர்வுக்கு சென்னை செல்ல இயலாமல் வாய்ப்பைத் தவற விட்டு ஷைலஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். நாமும் பதிவர்களை ‘உலகெங்கும்’ [அதிர அதிர சொல்லிக்கணும்] ஒளிபரப்பாகும் நிகழ்வு மேடையில் காணும் வாய்ப்பினை இழந்தோம்!
பார்வையாளர் கூட்டத்திலிருந்த எங்களை பளிச்சுன்னு படமெடுத்து பத்து வார ஒளிபரப்பிலும் தோன்றச் செய்த கேமிரா மேனை நான் பளிச்சுன்னு புடிச்ச படம்:)!
5. தொழில் பக்தி
செய்யும் தொழிலே தெய்வம்
சொல்லாமல் சொல்லுகிறது
காமிராவை அலங்கரிக்கும் பூச்சரம்.
சொல்லாமல் சொல்லுகிறது
காமிராவை அலங்கரிக்கும் பூச்சரம்.
பட்டிமன்றத்தின் முடிவில் நடுவர் அளித்த தீர்ப்பு இருக்கட்டும் ஒரு பக்கம். உங்கள் பார்வையில், இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?
[இசை, நடனம்- மேடைப்படங்கள். அடுத்த பாகத்தில் அல்லது இரண்டு பாகங்களாக விரைவில்..:)]
*** ***