பெற்றதும் பெற்றவளே 'தான் இனிப் பிழைக்க மாட்டோம்' என்ற எண்ணத்தில், பெற்ற பூவை பூமிக்குள் புதைத்து விட்டுப் பின் மனம் பதைத்து ஊர் மக்களிடம் சென்று சொல்ல, திரண்டு வந்து அவர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறாள் இந்தச் சிசு. பெற்ற தாய் கை விட்டாலும் பூமித் தாய் கை விடவில்லை. அதனாலேயே "பூமிகா" என அன்புடன் அவர்களால் பெயரிடப் பட்டிருக்கிறாள். தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.
இது ஒரு செய்தியாக படத்துடன் போன மாதம் குமுதம் வார இதழில் வெளியாகி இருந்தது. இதே போல 2003-ல் பெங்களூரின் பிரபல மருத்துவமனையொன்றில் பால்மணம் மாறாத பச்சிளம் சிசுவைக் கையாடி.. மயக்க மருந்து கொடுத்து.. சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் விற்க முனைந்தாகச் செய்தி ஒன்றைப் படித்தப் பாதிப்பில் செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:
கண்ணே கலைமானே
பெற்றவள் கை
மாற்றியா விட்டாள்?
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடி-கிளியே
கேள்விக் குறியாக நீ!
***
நோட்டுக்களாலே தொட்டில் கட்டி
நோட்டமிட்டு உனைக் கவர்ந்து
நோகாமல் கையாள
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!
***
தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் தடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பலிடம்
தத்தளித்திடும் தளிரே உண்மையிலே
தத்து அளித்திடவா
தரப் பட்டாய் நீ ?
***
கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!
***
கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?
***
மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!
***
காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்தாய் ஒரு வழியாய்
நிம்மதி நெஞ்சோடு
நிறைவாய் ஒரு வாக்கியம்
இனியேனும் இனிதாக
வாழ்வாங்கு வாழ்க நீ!
*** *** ***இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்!
முதல் படம் நன்றி: 6 ஜுலை 2008 குமுதம் வார இதழ்
இரண்டாவது படம் நன்றி: 29 ஜூலை 2003 டைம்ஸ் ஆஃப் இண்டியா [செய்தியுடன் வந்தது]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுகோள்: பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!
கேள்வி: அரசுத் தொட்டில் முறை தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா?
ஆசை: முறை தவறுவதால் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் வறுமை மற்றும் பல காரணங்களால் வளர்க்க வழிவகை அறியாதவர்களுக்கும் உதவும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரார்த்தனை: அரசுத் தொட்டில்களில் இட நேருகின்ற அவலங்கள் யாவும் மறைந்து அதற்கான அவசியமே இல்லாது போகும் பொற்காலம் பிறந்திட வேண்டும் என விரும்பும் பதிவர் ஆர்.செல்வக்குமாரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விழிப்புணர்வு: 28 Aug 2008 அன்று இரவு Times Now சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் சுட்டியை பதிவர் சஞ்சய் மறுமொழியில் தந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் [பிரார்த்தனையை ஒரு பக்கம் நாம் தொடர்ந்தாலும்] தற்போதைய நடைமுறைத் தேவைக்காகவே எனது அந்த வேண்டுகோளும் ஆசையும் என்பது விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் பலவித சொந்தக் காரணங்களால் வளர்க்க இயலாது எனக் கருதுபவர்கள் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவர்கள் தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் சட்டப்படி ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.