ஞாயிறு, 21 ஜூன், 2009

தான் என்னும் எண்ணம்தனை விட்டுத்தான் பார்ப்போமே!

*'தான்' என்னும் எண்ணத்தைதான் 'ஈகோ' என ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இருக்க வேண்டியதுதான் அளவோடு ஈகோ, ஏளனமாய் எவரேனும் இகழுகையில் வீறு கொண்டு எழுந்து முன்னேற்றப் பாதையில் முடுக்கி விடும் மந்திரசக்தியாய்.., மற்றவர் போல் ‘தன்’னாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்கிற வைராக்கியத்தைத் தூண்டும் கருவியாய்!

*ஆனால் அந்த ‘தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

*வாருங்களேன், ஈகோ நம் இரத்தத்தோடு கலந்து நினைவோடு இழைந்து இருந்தால்தான் கெளரவம் என்கிற சிந்தனையும், இன்றைய என்றைய வாழ்வியல் சூழலுக்கும் 'தாம் தாம்' எனக் குதிக்கும் இந்தத் ‘தான்’ சரி வருமா என்றும் சில கோணங்களில் அலசிப் பார்ப்போம்.

*எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

*'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என நக்கீரன் சொன்ன போது சிவனே அதை 'சிவனே' என ஏற்றுக் கொள்ள மறுத்து, சீறிப் பாய்ந்தாரே, இந்த மானிடப் பிறவிகள் எம்மாத்திரம், என்கிறீர்களா ? அது காவியம். நாம் தீட்டுவதோ வாழ்க்கை எனும் ஓவியம். 'தான்' எனும் எண்ணத்தால் வண்ணங்கள் தவறானால்... ஓவியம்தான் உயிர் பெறுமா?

*பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

*நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சரி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் 'நமக்கு சரி நிகரா?' என்ற கோபம் தவிர்த்துக் கொஞ்சம் நினைக்கலாம்.. 'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' என.

*நாம் பார்த்து பணியில் சேர்ந்தவரே ஆனாலும், 'நமக்கே படிப்பு சொல்ல வந்து விட்டாரா? ' என்ற எண்ணம் தவிர்த்து 'நம்மிடத்தில் பணி செய்த அனுபவமே பேசுகிறது' எனப் பெருமையும் பெருந்தன்மையும் ஒருங்கிணைய அவர்தம் அறிவுரையை 'ஏற்பது இகழ்ச்சி' அன்று. பாடம் சொல்ல பகவானே நேரில் வர நாம் யாரும் 'அர்ச்சுனர்' அன்று.

*'ஐயா,ஐயா' என அடிமை போலக் கையைக் கட்டி நிற்பவரிடம் சேவகம் பெற்ற காலமும், 'யெஸ் சர், யெஸ் சர்' என 'டை'யைக் கட்டியவர், தவறோ சரியோ எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிய காலமும், இந்தக் கணினி உலகில் பழங்கதைகள்!

*வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

*சுயமாக நம்மைப் புடம் போட்டுக் கொள்ள இறைவன் அனுப்பிய தூதர்களாய்ச் சொன்னவரை எடுத்துக் கொண்டால் சொர்க்கம் நம் கையில். இது தெளிவானவருக்குக் கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம். தெளிவற்றவருக்கோ, நடுவில் தெரியும் துளைதான் பிரதானம்!

*தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

*நாம் இன்னாரின் மனைவி/கணவன், மகள்/மகன், இன்னாரின் மருமகள்/மருமகன், சகோதரி/சகோதரன் என எந்த உறவின் அடிப்படையிலும் எழுந்து நிற்பது அல்ல 'தகுதி'. நமது படிப்பு-பணம்; பதவி-புகழ்; அழகு-அந்தஸ்து நிர்ணயிப்பது அல்ல 'தகுதி'. இவை யாவும் வெறும் அடையாளங்களே!

*அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

*சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!
*** *** *** *** ***


[July 10, 2003 திண்ணை இணைய இதழில் "தான் எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் பெற.." என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை.]


[இன்றைய யூத்ஃபுல் விகடன் Good...Blogs பரிந்துரையில் இப்பதிவு:

நன்றி விகடன்!]

புதன், 10 ஜூன், 2009

முதுமை [June 09-PiT]

'முதுமை'யைப் பிரதிபலிக்கும் எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம் படங்கள் என்கிறது இம்மாதப் PiT போட்டி அறிவிப்பு. அவரவருக்குப் பிடித்ததை சொல்லிச் சொல்லுங்கள், கடைசியில் எதை நான் போட்டிக்குக் கொடுத்தாலும்...:)!
வடித்தவர் மறைந்தாலும்
மறையாத வடிவழகு!முதுமையால் பழமையானாலும்
பழமைக்கு சேருகிறது பெருமை!

சிற்பக்கலைக்கு சிகரமாய்த் திகழும்
மாமல்லபுரக் கோபுரம்
பலநூற்றாண்டைக் கடந்து கம்பீரமாய் நிற்கின்றப்
புராதனச் சின்னம்சிற்பங்கள் பேசுதடி...
சிதிலமடைந்தாலும்
தாய்மையின் சிறப்பினைச்
சிந்திக்க வைக்குதடி!
எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
எல்லோரும் ஏறிச் சென்றிட தன்னைத் தேய்த்துக் கொண்ட படிக்கட்டு!


தடுப்புக்கு அந்தப்பக்கம்
தள்ளாத முதியவர் தனக்கென கேட்டிட எதுவுமின்றி-
எல்லோரையும் வாழவைத்த பின்னும் எவர்நலனோ வேண்டி-
ஏறிப்போய்க் கொண்டிருக்கிறார் கோமதீஸ்வரரருள் நாடி!

***

புதன், 3 ஜூன், 2009

பொட்டலம்

ழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த குழம்பைக் கிண்டுவதில் மும்முரமானாள் சீதா.

"என்னா இன்னிக்கு எவங்கிட்டே மாட்டுனே? ஆம்புளப் புள்ளன்னா கொஞ்சமாவது அடாவடியா நிக்கத் தெரியணுமடா! வெளையாடப் போற இடத்தில இப்படியா தெனசரி அடி வாங்கிட்டு வருவே?"

வழக்கமாய் வந்ததும் வராததுமாய் பையை ஒரு மூலையில் வீசி விட்டு தன் காலை கட்டியபடி அன்றைய நிகழ்வுகளை சந்தோஷமானதோ சங்கடமானதோ ஓடி வந்து சொல்லும் பிள்ளை, குரல் கொடுத்து பத்து நிமிடமாகியும் வராததால் அடுப்பை அணைத்து விட்டு தடுப்புக்கு அந்தப் பக்கம் வந்தாள் சீதா.

ஒரே அறையைக் கொண்ட வீடுதான். ஒரு தட்டியால் மறைக்கப் பட்ட அடுப்படி. மீதியிருந்த பத்தடிக்கு பத்தடிதான் அவர்கள் அடைந்து வாழும் கொட்டடி.

நாலாவது படிக்கும் அஜீத் நாலு நாளுக்கு ஒருமுறை ‘இன்னிக்கு சுந்தரு தள்ளி விட்டதில பேந்துடுச்சு முட்டி, கைலாசு குட்டியதில புடைச்சிருச்சு தலை, முகுந்து கிள்ளியதில கன்னிப் போச்சு கையி..’ன்னு ஏதாவது ஒரு புராணம் வைத்திருப்பான்.

ஆனால் இன்று கால்களை மடக்கி இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் தலையைப் புதைத்து, வித்தியாசமாய் சுவரில் சாய்ந்திருந்தவனிடமிருந்து விட்டு விட்டு வந்த கேவல் ஏனோ வயிற்றைப் புரட்டியது. பக்கம் வந்து அவன் முகத்தைத் தொட்டு தூக்க முயன்றவள் அதிர்ந்து போனாள் அப்போதுதான் அந்தக் கோலத்தைக் கவனித்தவளாய். அவனது கேசம் மிகக் கேவலமாக அலட்சியமாக வெட்டப்பட்டு அலங்கோலமாகக் காட்சி அளித்தது.

"யாருடா? யாருன்னு சொல்லுடா! எவண்டா இப்படிச் செய்தது?"

“கேட்காதே எதுவும் கேட்காதே ம்ம்ம்ம் போ”

அவள் கையை அஜீத் வெறுப்பாய் தள்ளி விட பதட்டம் அதிகமாயிற்று. அவன் அருகே மடிந்து அமர்ந்தாள்.

"சொல்லுப்பா ராசா என் செல்லம் என்னான்னு ஆத்தாட்ட சொல்லுப்பா"

"இப்ப சொல்லி என்னாகணும். சொன்னனே நாலு நாளா காசு கொடும்மா முடி வெட்டிக்கணும் டீச்சரு திட்டுதுன்னு. நெதமும் கேட்டனே, காதுல போட்டுக்கலியே நீயி.."

"என்ன செய்யறது ராசா ஒனக்குதான் நம்ம நெலம தெரியுமில்ல. முழுசா பதினஞ்சு ரூவா கீழ வைக்கணும். அந்தக் காசு இருந்தாத்தான ஒன் வயித்துக்கு சோறாக்க முடியும். அதான் வாரக் கடசி வரட்டும் எப்படியாச்சும் ஏற்பாடு செய்யறேன்னனே..."

"அதுக்குள்ளார இன்னிக்கு க்ளாஸில அத்தினிபேரு முன்னாடியும் டீச்சரு கோவமா கத்திரிய எடுத்து 'கருக்கு புருக்கு'ன்னு வெட்டிட்டாங்கம்மா. எல்லாப் பசங்களும் எப்படிச் சிரிச்சாங்க தெரியுமா?"

அப்படியே அவள் மடியில் சரிந்தான் அஜீத்.

"வெளங்குவாளா அந்தப் பாதகத்தி? மனுஷிதானா அவ? புள்ளயப் பெத்தவதானே அவளும்" பொங்கிய கோபத்தில் சீதாவிடமிருந்து சரமாரியாக வந்து விழுந்தன வசவுகள்.

"என்னத் தவிர எல்லாரும் சொன்ன நாளுல வெட்டிகிட்டு வந்துட்டாங்களேம்மா. உன்னால ஏம்மா காசு கொடுக்க முடியல? டீச்சரு அவங்க பையிலருந்து கண்ணாடிய எடுத்து அதுல பாக்கச் சொல்லி சிரிச்சாங்கம்மா. வூடு வர்ற வரைக்கி பசங்கல்லாம் பின்னாடியே கேலி செஞ்சுட்டே வந்தாங்கம்மா. இனிமே நான் ஸ்கூலுக்கே போலம்மா".

"அய்யோ ராசா என்னக் கொல்லாத. நா வச்சுக்கிட்டா இல்லேன்னேன். உங்கப்பாரு படுத்துற பாடத்தான் நீயே பாக்குறியே. நீ நல்லாப் படிச்சு பெரியாளா வருணுமின்னுதான கடனவுடன வாங்கி இந்த இஸ்கோலில சேத்தேன். அப்படியெல்லாம் சொல்லப்படாது. பார்பரண்ணே கையக் காலப் புடிச்சு நாளக்கே எப்படியாச்சும் முடிய அழகாக்கிப் புடுவோம். நீ வந்து இப்ப சாப்பிடுவியாம்".

"ஒண்ணும் வேணாம் போம்மா. பார்பருமாமா சும்மவே என்ன எப்பவும் வெளக்கண்ண வெளக்கண்ணன்னு கிண்டலடிப்பாரு. இப்ப சொல்லிச் சொல்லிச் சிரிப்பாரு" விக்கி விக்கி அழுதபடி அவள் மடியிலிருந்து இறங்கி சுவரைப் பார்க்கத் திரும்பிப் படுத்துக் கொண்டான் அஜீத். அவன் கேசத்தை கோத முயன்ற அவள் கையை மறுபடி தட்டி விட்டான். சரி விட்டுத்தான் பிடிப்போமென பேசாதாகி விட்டாள் சீதா.

வனுக்குதான் எத்தனை அழகான கருகருவென்ற மென்மையான கேசம்! நித்தம் தேங்காய் எண்ணெய் தடவி இடது பக்கம் நேர்கோடாக வகிடெடுத்து சீவி விட்டால், தன்னிச்சையாக அவன் கன்னம் தடவி நெட்டி முறிப்பாள். "இத்தன எண்ணெய் வைக்காதேம்மா, பசங்க 'வருது பாரு விளக்கெண்ணெய்ம்பாங்க'" என அவன் சிணுங்கினாலும் கேட்க மாட்டாள்.

ஆளும் அத்தனை அழகு. இவனை நிறைமாதமாய் வயிற்றில் சுமந்திருந்த போது அதிசயமாய் கொட்டகையில் படம் பார்க்கக் கூட்டிப் போயிருந்தான் புருஷன் பழநி. அப்போதுதான் புகழேணியில் ஏறத் தொடங்கியிருந்த நடிகர் அஜீத்தை முதல் முதலாய் வெள்ளித் திரையில் கண்டு மகிழ்ந்த இருவரும் அப்போதே தீர்மானித்து விட்டார்கள் பையன் பிறந்தால் ‘அஜீத்’ என பெயர் வைக்க வேண்டுமென. ஓரளவு நிறமாகவும் பிறந்து விட வானத்தில் மிதக்காத குறைதான் இருவருக்கும்.

பார்த்துப் பார்த்துதான் அவன் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தாள் சீதா. கொத்து வேலைக்குப் போகும் கணவனின் சம்பளம் கைக்கு வந்தால்தான் உண்டு. பாதி நாட்கள் குடியில் தொலைத்து விட்டுத்தான் வருவான். அதற்காகவெல்லாம் கவலைப் பட்டதே இல்லை அவள். 'என் காலில் நின்று காப்பாற்றுவேன் என் பிள்ளையை' என வைராக்கியமாய் துப்புறவுத் தொளிலாளி வேலை பார்த்து வந்தாள் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்.

மூன்றாவது வரை வருமானத்துக்கேற்றபடி அரசுப் பள்ளியில் படிக்கவைத்து வந்தவள், அவளது அண்ணன் தனது மகனை அவர்கள் ஏரியா மக்களில் சற்றே வசதியானவர் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியில் சேர்த்ததைப் பார்த்து, அந்தச் சிறுவன் சின்னச் சின்னதாய் ஆங்கில வாக்கியங்கள் பேசுவதைக் கேட்டு அசந்து, ஆசைத் தொற்றிக் கொள்ள, வேலை பார்த்து வந்த குடியிருப்பில் சில நல்ல மனிதர்களிடம் உதவி, கடன் எல்லாம் பெற்று இந்தப் பள்ளியில் சேர்தது விட்டிருந்தாள்.

ஆனால் சேர்த்த பிறகுதான் தெரிந்தது செலவு ஒரே தடவையோடு முடியாதென்பது. காலணியிலிருந்து தலைக் கேசம் வரை எப்போதும் எதிலும் இருக்க வேண்டும் ஒழுங்கு. இதெல்லாம் முற்றிலும் புதிதாக இருந்தாலும் உருண்டு புரண்டு எல்லாவற்றிற்கும் எப்பாடு பட்டாவது பணத்தைப் புரட்டி விடுவாள். இந்த வாரம்தான் இப்படி சற்றே அசந்து விட்டாள். இல்லையில்லை அவள் வரையில் மாபெரும் தவறினை செய்து விட்டாள்.

திங்கட்கிழமை "அம்மா முடி ரொம்ப வளர்ந்துட்டுன்னு டீச்சர் நறுக்குன்னு தலயில கொட்டினாங்கம்மா. ரெண்டு நாளுக்குள்ள வெட்டியிருக்கணுமாம்’ அவன் சொன்ன போது அலட்சியப் படுத்தாமல் 'சரி கண்ணு' என்று அக்கறையாகக் கேட்டுக் கொண்டவள் அன்று முழுக்க அதே நினைவாகத்தான் இருந்தாள்.

ஒரு வீட்டில் வேலைக்காரப் பெண்மணி வராது போக ‘யாரையாவது பார்த்து அனுப்பி வை சீதா’ என இவள் வீடு வீடாகக் குப்பைகளைச் சேகரிக்க சென்ற போது அந்த வீட்டுக்காரப் பெண்மணி சொல்ல ‘நானே வர்றேம்மா’ என குடியிருப்பு நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மீறி சாப்பாட்டு இடைவேளை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பம்மிப் பம்மி நுழைந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கிக் கொடுத்த போது கையில் வாங்கிய ஐம்பது ரூபாய் மனதை அத்தனை லேசாக்கி விட்டிருந்தது.

ஆனால், அன்று மாலை திரும்பி வரும் வழியில் தற்செயலாகச் சந்தித்த மோகனா இவளையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சிக் கடைக்குச் சென்று சேலைக்கு சீட்டுக் கட்டுகையில், பாழாய்ப் போன மனது அங்கு தொங்கிக் கொண்டிருந்த பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் தன்னைப் பறி கொடுக்க, முடிந்து வைத்த ஐம்பது ரூபாயை அங்கேயே முதல் சீட்டுத் தொகையாய் இழந்ததுதான் சோகம்.

குற்ற உணர்வில் குன்றிப் போனவளாய் பிரமை பிடித்த மாதிரி மகனுக்கருகிலேயே அவள் அமர்ந்திருக்க வந்து சேர்ந்தான் பழநி தள்ளாட்டத்துடன் வழக்கம் போல ஃபுல் லோடு ஏற்றிக் கொண்டு. கையில் பக்கோடா பொட்டலம். தண்ணி அடிக்கையில் தொட்டுக் கொள்ள வாங்கிச் சாப்பிடும் பஜ்ஜி, பக்கோடோ, போண்டா எதுவானாலும் அதில் கொஞ்சத்தை மகனுக்கு எடுத்து வரும் பாசக்காரத் தந்தை.

"இந்தா புள்ளக்கிக்கு கொடு. எனக்குந் தட்டப் போடு"

அவன் நீட்டிய பொட்டலத்தை வாங்கி சுவரில் ஓங்கி வீசினாள் ஆத்திரமாய். நாலாப் பக்கமும் சிதறி ஓடின பக்கோடா உருண்டைகள்.

என்றைக்கு இல்லாத திருநாளாய் இவளுக்கு ஏன் இந்த ஆத்திரம் என புரியாமல் விழித்தவனுக்கு அழுது அழுது தூங்கி போயிருந்த மகனை எழுப்பி அமர வைத்து, “பாருய்யா பாரு. உம்புள்ளய வாத்திச்சி என்ன பண்ணி வச்சிருக்கு பாரு” எனக் குமுறலுடன் காட்டி நடந்ததைச் சொல்ல, கோபமானான் பழநியும்.

“வர்றேண்டா நாளைக்கே ஒன் இஸ்கோலுக்கு. அந்த வாத்திச்சிய இழுத்துப் போட்டு அடிச்சு உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன் பாருடா செல்லம்.”

“அய்யோ அதெல்லாம் வேண்டாய்யா. புள்ள அங்கப் படிக்கணுமய்யா. நீ பாட்டுக்கு ஏடாகூடாம ஏதுஞ்செஞ்சிடாத. நல்லா நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுப்புட்டு வருவோம். நம்ம மாதிரியான ஏழபாழைங்க கஸ்டம் புரியாத பிறவிங்க. பொட்டச்சி நா மட்டும் போனா மதிக்க மாட்டாளுக. நீயும் கூட வர்றே அக்காங்...”

அப்போதுதான் விழித்து அரைத் தூக்கத்தில் இருந்த அஜீத்துக்கு அப்பாவும் அம்மாவும் பேசுவதன் அர்த்தம் மெல்ல மெல்ல புரிபட பதறி, “வேணாம் வேணாம், ஒண்ணுங் கேக்க வேணாம். அப்புறம் பசங்க ஆரும் என்னய எந்த ஆட்டத்துக்கும் சேத்துக்க மாட்டாங்க. இனிமேட்டு பழய ஸ்கூலுக்கு வேணாப் போறேன். இங்க வேணவே வாணாம். நீங்களும் போகவேப் படாது” வெறி பிடித்தவன் போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் அஜீத்.

சுதாகரித்துக் கொண்ட சீதா “சரி ராசா. இப்ப சாப்புட வா” என்று கூப்பிட்டுப் பார்த்தாள். அவனோ “எனக்குப் பசிக்கல போ” என்றான்.

"சரி நீ இங்கிட்டே இரு. அப்பாவுக்கு சோத்தைப் போட்டுட்டு ஒனக்கு பிசைஞ்சு எடுத்தாந்து வாயில தாரேன்".

ஏதோ பேச முயன்ற பழநியையும் கண்ணால் சாடை காட்டி சாப்பிட அழைத்துச் சென்றாள்.

அவமானத்தால் உள்ளம் குறுகிப் போயிருந்த மகனின் உணர்வுகள் அவளுக்குப் புரியாமல் இல்லை. பள்ளிக்குச் சென்று முறையிடுவதால் எந்த நியாயமும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதும் தெரிந்தே இருந்தது. அம்பலம் ஏறாது ஏழை சொல் என்பதை விடவும் அந்த முயற்சி மகனை எந்த அளவுக்குக் கலவரப் படுத்தும் என்கிற கவலையே பிரதானமாகத் தோன்றியது. 'பேசாமல் அரசுப் பள்ளியிலேயே தொடர விட்டிருந்திருக்கலாமோ' என்கிற எண்ணம் வேறு படுத்தியது.

இதே பள்ளியில் படித்து கால் செண்டரில் கை நிறைய சம்பளம் வாங்கும் தன் சித்தி மகன் கைபேசியில் ‘தஸ்ஸு புஸ்ஸூ’ன்னு ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுகையிலும், ‘அக்கா பைக் வாங்கிட்டேன்’ எனப் போன வாரம் வந்து காண்பித்த போதும், அவன் முகத்தில் தன் மகனை இருத்தி, தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.

"ஏன்யா, நீ மட்டும் பொறுப்பா இருந்தா இந்த நெலம வேணுமாய்யா நமக்கு" எனப் புலம்பியபடியே உணவைப் பரிமாறினாள் சீதா. சாப்பாட்டைப் பார்த்ததும் சகலதும் மறந்து போனது பழநிக்கு.

ரு கிண்ணத்தில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றிப் பிசைந்து எடுத்துக் கொண்டு, மகனை நோக்கி வந்த சீதா அப்படியே நின்று விட்டாள். கையில் கத்திரிக்கப் பட்ட கேசத்தை வைத்துக் கொண்டு சொட்டுச் சொட்டாக அதன் மேலே விழுந்த தன் கண்ணீர்த் துளிகளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான் அஜீத்.

கிண்ணத்தை ஒரு பக்கமாக வைத்து விட்டு "இதயுமா அள்ளிட்டு வந்தே" என்றாள்.

வகுப்புத் தரையில் விழுந்த கேசத்தைக் கையால் கூட்டி எடுத்து, டீச்சர் அவனது காலி சாப்பாட்டு டப்பாவில் போடச் செய்ததை தேம்பலுடன் அவன் சொல்லி முடிக்கையில் அவள் கண்களும் கொதித்துக் குளமாயின.

அங்குமிங்கும் திரும்பியள் பழநி பக்கோடா வாங்கி வந்த கிழிக்கப்பட்ட செய்தித்தாள் கண்ணில் படவும் அதை விரைந்து சென்று எடுத்தாள். எண்ணெயில் ஊறிப் போயிருந்த அந்தத் தாளில் அவன் கையிலிருந்த முடிக் கற்றைகளை வாங்கிப் பொட்டலாமாக மடித்தாள்.

வேகமாக வீட்டுக்கு வெளியில் வந்தவள் தெருவின் எதிர்முனையிலிருந்த குப்பைத் தொட்டியை நோக்கிச் சென்றாள். மகனின் ஆசிரியையாக அதை நினைத்துக் கொண்டு ஆவேசமாக அதன் மேல் விசிறி எறிந்தாள் பொட்டலத்தை, மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையும் குற்ற உணர்வையும் எண்ணி நொந்தபடி.

கவனித்திருந்தாலும் கூட அவள் வாசித்தறிய வாய்ப்பே இல்லைதான் சுருட்டி எறியப்பட்ட அந்தப் பொட்டலத் தாளில் இருந்த செய்தியை: 'நகரின் மிகப் பிரபலமான பள்ளியில் நகம் வெட்டி வரவில்லை என ஒரு மாணவனைச் சற்று கடுமையாகக் கடிந்து கொண்ட குற்றத்துக்காக பெற்றோர்கள் திரண்டு வந்து கொடுத்த புகாரின் பெயரில் ஆசிரியர் இரண்டு மாத காலம் சஸ்பென்ட்.'


*** *** ***

[உரையாடல் சிறுகதைப் போட்டி விவரங்கள் இங்கே.]


இக்கதையில் வரும் சம்பவம் மிகைப்படுத்தப் பட்டதோ என்று ஒருசிலருக்குத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. இங்கு வலையேற்றிய பிறகு 13 ஜூன் 2009, டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த செய்தியின் சுட்டி இது.


இங்கு வலையேற்றிய பின்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin