‘
ஒரு அரசு அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் அது அவர்களின் கடமை. இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது’ எனக் கேட்கலாம். பல அரசு அலுவலகங்கள் பொதுமக்களை அலட்சியப் படுத்துபவர்களாக, பிரச்சனையுடன் செல்லுபவர்களை அலைக்கழிப்பவர்களாக இருந்து வருகையில் மாற்றாக ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சுமார் கடந்த பத்துப் பனிரெண்டு வருடங்களாகவே BSNL-லின் சேவை நான் இருக்கும் பகுதியில் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக லான்ட் லைன் தொலைபேசி அவுட் ஆஃப் ஆர்டர் ஆனது விரல் விட்டு எண்ணும்படி மூன்று நான்கு தடவைகளே. புகார் பதிவு செய்தால் மறுநாள் காலை பத்துமணிக்குள் சரி செய்துவிட்டு, அழைத்து உறுதிப் படுத்தியும் கொள்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் பெருமழையினால் குடியிருப்பின் அருகே கேபிள்கள் பாதிக்கப்பட்டபோது சரி செய்ய நாலைந்து தினங்கள் ஆகுமோ என்றே மக்கள் நினைத்திருக்க வேகவேகமாக செயல்பட்டு ஒன்றரை நாட்களில் சரி செய்து முடித்தார்கள். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயம் வேறு.
இவர்களின் இன்முக சேவை. நாலைந்து வருடங்களுக்கு முன்னால் மீட்டர் எகிறுவது போல தவறாக எங்களுக்கு பில் வர, லோகல் அலுவலகத்தினர் தலைமை அலுவலகத்தை அணுகச் சொன்னார்கள். அங்கே காத்திருந்தபோது இதே போன்ற பிரச்சனையுடன் வந்திருந்த ஒருவர் கட்டிடமே கிடுகிடுக்கக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அதிகாரியோ அவரை ஆசுவாசப்படுத்தி ஆவன செய்யப்படுமென மிக அமைதியாகப் பதிலளித்தது ஆச்சரியத்தையே தந்தது. நான் கொண்டு சென்றிருந்த பிரச்சனையையும் சுமுகமாகத் தீர்த்து வைத்தார்கள்.
இங்கு போலவே வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களை தோற்கடிக்கும் விதமாகவே செயல்படுகிறது எங்கள் பகுதி பி எஸ் என் எல். இணைய இணைப்புத் திட்டத்தில் மாற்றம் வேண்டி சில தடவைகள் சென்ற போது இந்த மேசையிலிருந்து அந்த மேசைக்கும், ஒன்றாம் மாடியிலிருந்து நாலாவது மாடிக்கும் அனுப்பினாலும், பேப்பர்களை சமர்ப்பித்து இரண்டுநாள் கழித்து நிலவரம் அறியப் போனால் ‘மேடம் ப்ளீஸ், இது ரெண்டாவது மாடிக்குச் செல்ல வேண்டிய பேப்பர், சாரி’ என எரிச்சலூட்டினாலும் கூட அந்த பணிவான ‘சாரி, ப்ளீஸ்’ சிரமங்களை மறக்கச் செய்து விடுகிறது. வருத்தம் தெரிவிப்பதோடு நின்றிடாமல் கூடவே வந்திருந்து வேலையை உடனடியாக முடிக்க உதவித் தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி அனைவரின் சேவையுமே மெச்சத் தகு வகையில் உள்ளது.
15 வருடங்களுக்கு முன் பெங்களூரின் ஒரு பகுதியிலிருந்து இந்தப்பகுதிக்கு மாறுகையில், ஃபோனை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டி இதே பி எஸ் என் எல்லை அணுகிய போது. அதிகாரி ஏறெடுத்துக் கூட பாராமல் அலட்சியமாக லெட்டரை டேபிளில் வைத்து விட்டுப் போகுமாறு சொன்னது மறக்கவில்லை. அப்போது வேறொரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இப்போதும் கட்டிடம்தான் 4 மாடிக்கு உயர்ந்து நிற்கிறதே தவிர, உட்கார்ந்தால் எங்கே விழுந்து விடுவோமோ என ஆட்டம் காண்பிக்கும் ஆதிகால வயர் சேர்கள், ஸ்டீல் மேசைகள், தூசுபடிந்த ஃபைல்கள் நிரம்பிய ஸ்டீல் ஷெல்ஃப்கள், பெயிண்ட் போன ஸ்டீல் பீரோக்கள் எனத் தோற்றத்தில் எந்த மாறுபாடும் இல்லை மேசைக்கு மேசை கணினி முளைத்திருப்பதைத் தவிர. ஆனால் தங்கள் சிறப்பான செயல்பாட்டினாலும், வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை இன்முகமாக அணுகுகின்ற பண்பினாலும், அதிகாரி முதல் வயர்களை சரிபார்க்க வரும் அடிப்படை ஊழியர் வரை எவரும் எந்த சேவைக்கும் ‘எதை’யும் எதிர்பார்க்காத நேர்மையினாலும் மக்கள் மனதில் நெம்பர் 1 ஆக நிற்கிறது பி எஸ் என் எல். இதில் உங்களுக்கு வேறுவிதமான அனுபவங்களோ மாற்றுக்கருத்தோ இருப்பின் மன்னிக்க. இருக்கவும் கூடும். ஆனால் இது என் அனுபவத்தில் கண்டது. என் அனுபவம் மட்டுமேதானா என்றும் எண்ணி, பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் நண்பர்கள் சிலரிடம் விசாரித்ததில் அவர்களும் இதே பாராட்டினை வழங்கினார்கள்!
நினைத்தால் அடுத்த அரைமணியில் அலைபேசி இணைப்பு எனப் போட்டிகள் பெருகி விட்ட ஒன்றையே இதற்குக் காரணமாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் ஃபோனைப் போட்டால் வீட்டுக்கே வந்து கொரியர் வாங்கிச் செல்லும் வசதிகள் பெருகி விட்ட நிலையில் தபால் அலுவலகங்களும் அப்படி நடக்க வேண்டுமே.
மேற்சொன்ன ஆதிகால அலுவலகத் தோற்றத்துடனே இருந்து வந்த எங்கள் பகுதி தபால் அலுவலகம் திடுமென மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு வங்கியைப் போல் பளபள கண்ணாடி கவுன்டர்கள், வாடிக்கையாளர் காத்திருக்க அழகான இருக்கைகள், ஊழியர்களுக்குப் புத்தம்புது கணினிகள் எனத் தன் கெட் அப்பை மாற்றிய போது மக்கள் எல்லோருமே ‘அட’ என வியந்தார்கள். மகிழ்ந்தார்கள். ஆனால் கெட் அப்புதான் மாறியதே தவிர செட் அப் மாறவில்லை:(. அதே ஊழியர்களே தொடர்ந்த நிலையில் கணினியை இயக்க சரியான பயிற்சி தரப்பட்ட மாதிரித் தெரியவில்லை.
கால்கடுக்க நின்று மின்சார, தொலபேசிக் கட்டணங்கள் கட்டிய, ரெயில்வே டிக்கெட் எடுத்த காலமெல்லாம் போன ஜென்மம் போலாகி இப்போது நுனியில் வேலைகளை முடிக்கப் பழகிவிட்ட மக்கள் அதே வசதியை அனைத்து இடங்களிலும் எதிர்பார்ப்பதைத் தவறாகச் சொல்லவும் முடியாது. இங்கே ஊழியர்கள் ‘தடவித் தடவி’ ஒவ்வொருவருக்காக மனி ஆர்டர், பார்சல் என்ட்ரி போடும் வேகத்தைப் பார்க்கையில் வரிசையில் நிற்பவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். நீண்ட வரிசைகள் ஆமை வேகத்தில்தான் நகரும். சில சிற்றிதழ்களுக்கு இணையம் மூலமாக சந்தா கட்டும் வசதியில்லாதிருக்க, அதற்காக சென்ற போது கவனித்ததே இது. ஏதேனும் விவரங்கள் சந்தேகங்கள் கேட்கிற பொதுஜனங்கள், ஏறெடுத்துப் பாராமல் ஊழியர்கள் வீசும் பதில்களைதான் பெறுகின்றார்கள். இதெல்லாம் கூடப் போகிறதெனச் சகித்துக் கொள்ளலாம்.
ஏழை எளியவருக்கும் சரி, வங்கிகளை விட அதிக வட்டி தருவதிலும் சரி, பாதுகாப்பான முதலீடு என்ற வகையிலும் சரி, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுவதை மறுப்பதற்கில்லை. வருந்தி உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை வட்டிக்கு ஆசைப்பட்டுச் ‘சீட்டு’ப் போட்டு ஏமாந்து நிலைகுலைந்து போகும் அடித்தட்டுப் பெண்களுக்கு நான் காட்டும் வழி தபால் நிலைய சேமிப்புதான். என் ஆலோசனையில் அப்படி இணைந்து மாதாமாதம் பணம் சேர்த்து வரும் (ரெகரிங் டெபாசிட்) ஒரு பெண் சில காரணங்களால் சென்ற மாதம் சரியான நேரத்தில் கட்ட முடியாது போய் விட்டது. சரி அதற்கான அபராதம் 40, 50ரூபாய் இருக்கும் போல என நினைத்து கட்டவேண்டிய இருமாதத் தொகையோடு கூட ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அபராதமோ 8 ரூபாய். 4 ரூபாய் மட்டுமே சில்லறையாய் பஸ்ஸுக்கென வைத்திருந்தது இருந்திருக்கிறது. ரொம்ப தொலைவில் இருந்து வருவதைச் சொல்லி இந்த முறை மன்னிக்குமாறு நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்கவும் நோட்டை அவள் முகத்தில் விசிறியடித்த அலுவலக ஊழியர் “எப்படியாவது மாற்றிக்கிட்டு வா” எனச் சொல்ல இவளும் அங்கிருந்த பலரிடம் ஓடியாடி சில்லறை கேட்பதை வேடிக்கை பார்த்திருக்கிறார் ஊழியர். எவரேனும் சும்மாவேனும் நான்கு ரூபாய் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் அப்படிக் கேட்க இப்பெண்மணிக்கு சுயகெளரவம் தடுத்திருக்கும் இல்லையா?
வெளியில் போய் கடையில் எதையாவது வாங்கிச் சில்லறை மாற்றும் வசதியும் மனமும் இன்றி மறுபடி ஊழியரிடமே வந்து கெஞ்சியிருக்கிறார். அடுக்கிய ஐம்பது, இருபது, பத்துகள் மற்றும் சில்லறைகள் அடங்கிய டிராயரை கண்ணில் படும்படியாக விரியத் திறந்து வைத்துக் கொண்டே, அவளது சேமிப்புப் புத்தகத்தினுள் இருந்த ‘பே இன் ஸ்லிப்’பைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு “போ..போ.. எப்போ 8 ரூவாய் சில்லறையா கொண்டு வர முடியுதோ, அப்போ வந்துக் கட்டு” என அனுப்பி விட்டிருக்கிறார் அந்த “பெண்” ஊழியர்.
பிற இடங்களில் எப்படி எனத் தெரியாது. ஒரு ஊழியரின், ஒரு அலுவலகத்தின் செயல்பாட்டினை வைத்து ஒட்டு மொத்த தபால் சேவையையும் குறை சொல்லவும் கூடாது. அதனால்தான் தலைப்பில் “
ஒரு” தபால் அலுவலகத்தின் எனக் குறிப்பிட்டுள்ளேன். இன்றைக்கும் வேகாத வெயிலிலும், மழைநீர் வழுக்கும் சாலைகளிலும் சைக்கிளை மிதித்து வந்து தபால் பட்டுவாடா செய்கிற தபால்காரர்கள் மதிப்பிற்குரியவர்களே.நான் சொல்ல வருவதெல்லாம், வாடிக்கையாளர்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதே. 'நான்கு ரூபாய் சில்லறைக்கு நூறு ரூபாயை எல்லோரும் நீட்டினால் நாங்கள் என்ன செய்வோம்' என நியாயம் பேசுவார்களேயானால் அதைச் சொல்ல ஒரு முறை இல்லையா? மனம் வைத்திருந்தால் விதிவிலக்காக உதவியிருக்கலாம். சரி, முடியாதா? அந்த மனிதாபிமானம் இல்லையா? பணிவாகவேனும் மறுத்திருக்கலாம்.
எப்போது மாறுவார்கள்? வாடிக்கையாளர் சேவை என்றால் என்னவென யார் எப்போது இவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள்? ஏற்கனவே சென்றமாதம்
வடக்குவாசல் இதழில் வெளியான எனது பெங்களூர் குறித்த கட்டுரையில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் இவர்களது சேவை என பி எஸ் என் எல்-லைப் பாராட்டி ஒரு பத்தி எழுத இருந்தேன். அக்கட்டுரை நீளமாகி விட்டபடியால் தவிர்க்க நேர்ந்து விட்டது. இப்போது இந்தத் தபால் ஊழியரின் செயல் BSNL-யைப் பாராட்டியே தீர வேண்டுமென்கிற உந்துதலைத் தந்து விட்டது.
பாராட்டுகளுடன், முகப்புத்தகத்தில் கண்ட BSNL-லின் வித்தியாசமான விளம்பரம் ஒன்றையும் இங்கு பகிந்து கொள்கிறேன்:
***