வினோத்குமார் சுக்லா கவிதைகள்
ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா:
2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் பெயர் பெற்றவர். அன்றாட வாழ்வின் சிக்கல்களை துணிச்சலான குரலில் இணக்கமாகவும் நீடித்தும் பதிவு செய்து தனித்துவமாக விளங்கியவர். நேற்று, 22 மார்ச் 2025 அன்று, இவருக்கு 59_ஆவது ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி இலக்கியத்தில் இந்த கௌரவத்தை பெறும் 12_ஆவது எழுத்தாளர் இவர்.
பல இலக்கிய விருதுகளை பெற்ற இவர் ‘தீவார் மே ஏக் கிடுகீ ரஹதி தி’ (சுவரில் இருந்த ஒரு சன்னல்) நாவலுக்காக, 1999_ஆண்டின் சிறந்த இந்தி படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் எனும் இடத்தில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது எழுத்துகளில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் அனுபவங்கள், சமூகத்தைக் குறித்த அவதானிப்புகள் ஆகியன கருப் பொருளாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் இவரது எழுத்துகள் உண்மையாகப் பிரதிபலிப்பதாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இதையே தற்போது பாரதீய ஞானபீட அமைப்பு செய்தியாளர்களுக்கான அறிவிப்பிலும் குறிப்பிட்டுள்ளது: ‘இவரது எழுத்துகள் அவற்றின் எளிமை, உணர்வுப்பூர்வம், தனித்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர் பெற்றவை. நவீன இந்தி இலக்கியத்தில் சோதனை ஆய்வுகளை மேற்கொண்டு, புகழ் பெற்றவை.”
**
1.
ஒருவர் தனது சொந்த வீட்டினை தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்
ஒருவர் தனது சொந்த வீட்டினை
தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் தனது வீட்டினைப் பார்ப்பதற்கு
ஏழு கடல்களையும் தாண்ட வேண்டும்,
நிராதரவான நிலையிலும்
கடக்க இயலாத தொலைவாயினும்