கதைகள் சுகானுபவம். வாசிக்கும் போது காட்சிகளையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நாமே கற்பனை செய்து கொள்வது சுவாரஸ்யம் என்றால், சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும் விழுந்து விடுவோம்.
ஆரம்பப்பள்ளிக் காலத்தில் எங்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற வயதான ஓட்டுநர் பளபளக்கும் வழுக்கைத் தலையும், முறுக்கி விட்ட பெரிய வெள்ளை மீசையுடனுமாய் இருப்பார். அவரை மீசைக்கார தாத்தா என்றே அழைப்போம். கடைசி நபர் காருக்கு வந்து சேரும் வரை மற்றவருக்கு மந்திர தந்திரக் கதைகளை தினம் சொல்லுவார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ரேஞ்சுக்கு ஒரு தலைப்பு. அதேபோல அவர் போடும் விடுகதைகள் எவையும் இரண்டு வரியில் இருக்காது. ஒரு பத்து வரிப் பாடலாய் கவிதையாய் இருக்கும். எவற்றையும் இவர் படித்தறிந்திருக்க வாய்ப்பில்லை. சொந்தக் கற்பனையாகவோ செவிவழிக் கதைகளாகவோதான் இருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் அவரிடம் குடியிருந்த தமிழுக்கும் திறமைக்கும் இப்போது வைக்கிறேன் ஒரு வணக்கம்.
ஹி. நான் கூட ஒரு நல்ல கதை சொல்லியாய் 'இருந்தேன்'. பதின்ம வயதில் என் தம்பி தங்கைகள், ஊரிலிருந்து வரும் அத்தைகள் மற்றும் சித்தி, சித்தப்பா குழந்தைகள் எல்லோருக்கும் நான் கதை சொல்லிக் கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம். குறிப்பாக சாக்லேட் ஹவுஸ் என ஒரு அட்வென்ச்சரஸ் கதை சொல்லுவேன். கேட்கும் 'அத்தனை' பேரையும் கதையில் ஒரு கதாபாத்திரமாக்கி விடுவேன். கண் இமைக்காமல் வாய் மூடாமல் கேட்பார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் அடிக்கடி அதை நினைவுகூர்ந்து மகிழ்வதுண்டு. நான்கு வருடம் முன்னே தம்பிக்கு திருமணமான புதிதில் அவன் மனைவி நான் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடீரென ‘அக்கா எனக்கும் அந்த சாக்லேட் ஹவுஸ் கதை சொல்றீங்களா?’ எனக் கேட்டதுதான் ஹைலைட்:))! மகனுக்கு ஏழெட்டு வயது வரை கதை சொல்லுவேன். ஆர்வமாகக் கேட்பான் என்றாலும் அந்த அளவுக்கு ஈர்த்த மாதிரித் தெரியவில்லை! ஒரே ஒரு கதாபாத்திரமாக அவனை மட்டும் உள்ளே கூட்டிச் சென்றது அத்தனை சுவாரஸ்யப் படுத்தவில்லையோ என்னவோ:)!
'எல்லாம் சரி. இப்போது எப்பூடி' எனக் கேட்டால் முத்துச்சரத்தில் சிறுகதைகளின் எண்ணிக்கை 'அப்பூடியொன்றும் தெரியவில்லையே' என்கின்றது. கதையாய் சொல்ல வேண்டியவற்றையும் கூட கவிதையாய் சொல்லி முடித்துவிடவே விழைகிறது மனம். இந்த சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு கதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறேன்.
அடுத்து வாசிப்பு என வருகையில் பகிர்ந்திடும் அளவுக்கு அது அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் ஆதிமூலக்கிருஷ்ணனின் வலைப்பூவுக்காக அளித்த பேட்டியில் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?' எனும் கேள்விக்குப் பதிலாகச் சொல்லியிருந்தவற்றையே இங்கு சற்று விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். ஆறேழு வயதிருக்கையில் விடுமுறைக்காக என்னையும் அண்ணனையும் தூத்துக்குடியிலிருந்த அத்தையின் வீட்டுக்கு அப்பா பஸ் ஏற்றி விட்டு அது கிளம்பும் சமயத்தில் சர்ப்ரைசாகக் கொடுத்த பைண்டு செய்யப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான் முதல் வாசிப்பின்பம். மூன்று பன்றிக்குட்டிகளையும், ஏழுசித்திரக் குள்ளர்களையும் பின்வந்த காலங்களில் வெவ்வேறு பதிப்பகங்களின் வாயிலாகச் சந்திக்க நேர்ந்ததென்றாலும் அந்த முதல் வாசிப்பின் படங்கள் அகலவில்லை கண்களிலிருந்து.
அப்பா நெல்லை ஊசிக்கோபுரத்தின் எதிர்வரிசையிலிருக்கும் டயோசீசன் புக் செண்டர் அழைத்துச் சென்று சிறுவர் புத்தகங்கள் வாங்கித் தருவார்கள். எழுபதுகளில் வெளிவந்த சிறுவர் மலர்களில் அம்புலிமாமா,ரத்னபாலா, பாலமித்ரா,சம்பக், பூந்தளிர், அணில் மற்றும் கல்கி நிறுவனத்தின் கோகுலம். கோகுலத்தின் முதல் இதழ் வெளிவந்த போது அப்பா என்னை அழைத்துக் கையில் தந்த நாள் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் எனது ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனது. இருப்பினும் கூட்டுக் குடும்பத்தில் சின்ன பெரியப்பாவினால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும், வார மாதப் பத்திரிகைகளும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது. இதிலே பாலமித்ரா, ரத்னபாலாவில் என் கருத்துக்கள் வாசகர் கடிதங்களாய் வெளிவந்துள்ளன. சன்மானமாக ரூ.2 அல்லது 5 அனுப்புவார்கள்! அப்புறம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் எங்களை சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் அழகுத் தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் எளிமையான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன.
இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, அவரது குதிரை கேசரி-நாய் வாலி மற்றும் அவர் வளர்த்த பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. ஒருநாள் கண் விழிக்காத ப்ரெளன் நிற நாய்க்குட்டியைத் தடவிக் கொடுத்தபடியே தம்பி எங்களது முகத்தைப் பார்த்திருக்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொல்ல, அரைமணிக்கும் மேலாக அத்தனையும் ‘ஊஹூம்’ ஆகிக் கொண்டிருந்தன. அப்போது அங்கு திடுமெனப் பிரவேசித்த சின்ன அத்தை பிரச்சனையைக் கேட்டுவிட்டு சட்டென ‘ரெக்ஸ்’ என்றார்கள். “ஹோ” எனும் பெருங்கூச்சலுடன் ஒருமனதாகப் பெயர் அங்கீகரிக்கப்பட்டு பெயர்சூட்டும் வைபவம் இனிதே நடந்தேறியது. அப்படியாக இருந்தது காமிக்ஸின் தாக்கமும், அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நேசமும்.
எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் ஒன்று, இந்தக் கதைகளில் வரும் வசனம் எதையாவது ஒருவர் சொல்ல மற்றவர் 'யார் எந்தக் கதையில் பேசியது' என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். நேரம் போவது தெரியாமல் உற்சாகமாய் விளையாடுவோம். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள் என்பதற்கு மேற்படி நாமகரண சம்பவமே அத்தாட்சி.
சமீபத்தில் பதிவுலக நண்பர் ஜீவ்ஸ் தனது வார இறுதிகளை காமிக்ஸ் படித்துக் கழிப்பதாகக் கூறினார். சுமார் 150 காமிக்ஸ்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவற்றிலே மூழ்கித் திளைக்கிறாராம். அ.கொ.தி.க-வை சுவாரஸ்யமாய் வாசித்துக் கொண்டிப்பதாய் சொன்னபோது ‘அவையெல்லாம் இன்னுமா வெளிவருகின்றன’ எனக் கேட்டேன். 'எல்லாமே அந்தக்காலத்தில் வந்தவற்றின் மறுபதிப்புகளே. வேண்டுமா உங்களுக்கும்?’ என்றார். இப்போது வாசித்தால் அதே த்ரில் கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே.
பிறகு எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், இரத்தம் ஒரே நிறம், கனவுத் தொழிற்சாலை, காகிதச் சங்கிலிகள்; ஸ்டெல்லா புரூஸின் அது ஒரு நிலாக்காலம், ஒருமுறைதான் பூக்கும்; பாலகுமாரனின் 'ஆரம்பக்கால' நாவல்களாகிய இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது போன்றவை. சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் கதைகளும் அப்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையுமே வாசித்திருக்கிறேன் எனினும் சிலவற்றைத் தவிர மற்றவை அதிகம் என்னை ஈர்க்கவில்லை. ஹைஸ்கூலில் இருக்கும்போது கமல்-ரஜனிக்கு இருந்தது போலவே சிவசங்கரி-இந்துமதிக்கு தீவிர ரசிகைகள் இருந்தார்கள். தலைப்பு நினைவில் இல்லை, ஒரு தொடர்கதையை வாரம் ஒருவராய் மாற்றி மாற்றி எழுதினார்கள். அந்த சமயம் வெளியான இளைமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் படங்களில் யார் நடிப்பு பெஸ்ட் என்பது போல, இந்தக் கதையிலும் யார் எழுத்து பெஸ்ட் எனும் விவாதம் அனல் பறந்தது தொடர் முடியும் வரை. ஆனால் அதென்னெவோ விதிவிலக்காக சுஜாதா மட்டும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்.
தொன்னூறுகளிலிருந்து வாசிப்பென்பது வாரப்பத்திரிகைகளுடன் மட்டுமென்றாகி விட்டது. தற்போது எஸ்.ரா, நாஞ்சில்நாடன் ஆகியோர் எழுத்துக்கள் பிடித்தவையாய் உள்ளன. அடுத்த மாதத்துடன் பதிவுலகம் வந்து இரு வருடங்கள் நிறையப் போகின்றன. வலையுலகம் வந்த பின்னரே மறுபடி வாசிக்கும் ஆர்வம் துளிர்த்துள்ளது. சமீபத்தில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’.
முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்தும் முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல். பொன்னியின் செல்வனை அவ்வாறே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. ஒவ்வொருவர் அதை சிலாகித்துச் சொல்லுகையில் வாசித்துவிட வேண்டுமெனும் ஆசை பிறந்து வாங்கி வைத்ததுள்ளேன். சீக்கிரம் ஆரம்பித்து முடிப்பேன் என நம்புகிறேன்.
தொடர அழைத்த முகுந்த் அம்மாவுக்கும், தன் பதிவின் பின்னூட்டத்தில் கேட்டுக் கொண்ட அமைதிச்சாரலுக்கும் நன்றிகள். தொடர விருப்பமானவர்கள் தொடருங்களேன். ***