* தினமணி கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* தினமணி கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை


த்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள்.

தெரிந்து விட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக் கொண்டையாக முடிந்தபடியே எழுந்தவள் வீதிக்கு வந்தாள். “சீனு ராசா ஓடியாப்பா” உரத்தக் குரலில் அழைத்தாள். “கருப்பி வந்துட்டாளா பாட்டி? டேய் வாங்கடா” சீனு நண்பர்களையும் அழைக்க, கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் “ஹோ” எனப் பெருங்கூச்சலுடன் மட்டையும் கையுமாக ஓடி வந்தார்கள்.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இன்னொரு வசந்தா - (இன்றைய) தினமணி கதிர் சிறுகதை

சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

“அலாரம் வச்சு மூணரைக்கெல்லாம் எந்திச்சுக்கறேன். சரியா நாலு மணிக்கு ஏஜண்ட் வாசலில் சைக்கிள் பெல் அடிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவார். ஒருநாள் லீவு போட்டதில்லையே? என்ன தப்பு சார் செஞ்சேன்?” கலக்கத்துடன் பையன் கேட்கவும் அதிர்ச்சியின் அளவு எகிறியது.

“ஆமா உன்ன மாதிரிச் சின்னப் பசங்க பேப்பரு போட்டா போலிசுல புடிச்சுடுவாங்க தெரியுமா? படிக்கற வயசுல எதுக்கு இந்த வேல? என்ன கஷ்டம் வீட்டுல? சரி நீ போ. நான் பேசிக்கறேன் ஒன் மொதலாளிகிட்டயே” என்றார் கடுமையாகவே.

“படிப்புச் செலவுக்கு ஆகுமின்னுதான் இந்த வேலயச் செய்றேன் சார். ஒம்பதாவதுல இருக்கேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்j எங்க மொதலாளி ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர எதுவுஞ் சொல்லிடாதீங்க. பரிச்சைக்கு லீவுல்லாம் கொடுக்கேன்னுருக்கார். யூனிஃபார்ம் கூட எடுத்துக் கொடுத்தார்.”

‘சோழியன் குடுமி சும்மவா ஆடும். கையில காசு பொழங்க ஆரம்பிச்சதும் எந்தப் படிப்புக்காக வேலையில சேந்தியோ அதயே தொலச்சுட்டு நிக்கப் போறடா பாவி’ மனதில் ஓடியதைச் சொல்ல முடியாமல் நிற்கையில், “உங்களுக்கு என்ன ஆகணும்னு எங்கிட்டயே சொல்லுங்க. நடுவால மொதலாளி எதுக்கு? இன்னும் அர மணி முன்ன தரணுமா?” குரல் கரகரக்கக் கண்ணீர் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.

தர்ம சங்கடமாய்ப் போயிற்று. இப்போதைக்குச் சமாதானமாகப் பேசி அனுப்பி விட்டால் போதுமென முடிவெடுத்தவராய் “டைமுக்கு வைக்கற சரிப்பா. கதவுக் கம்பியில சொருகி வைக்கணும். தூக்கி எறியப்புடாது. ஆனாலும் நீ புதுசா இருக்கதால பணத்தை அவர்ட்டதான் கொடுப்பேன்னு சொல்லிடு.” என்றார் தீர்மானமாய், சின்ன மீனை அனுப்பிப் பெரிய மீனை பிடித்துத் தாளித்து விடும் எண்ணத்தில்.

“அதான் ரசீது பொஸ்தம் கொண்டாந்திருக்கனே” வாதாடிப் பார்த்தான். ‘இந்த மனுசனிடம் பருப்பு வேகாது’ எனப் புரிந்த கொண்டானோ என்னவோ, சில நொடிகளில் கண்களைத் துடைத்துக் கொண்டு சந்தேகமாகப் பார்த்தபடியே வெளியேறினான்.

“காசைக் கொடுத்து அனுப்பிருக்கலாமே? இப்ப அந்தாளு வந்து தாம்தூம்னு குதிக்கவா? நானே காவேரி வரலியேங்கற டென்ஷன்ல இருக்கேன். இது வேறப் புதுத் தலவலி.” சிடுசிடுத்தாள் சொர்ணம்.

வள் கவலை அவளுக்கு. நேற்று எதிர்பாராத விருந்தினர்கள் இரவு உணவுக்கு வந்து விட, சேர்ந்து போனப் பாத்திரங்கள் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. முன்னெல்லாம் இவரது கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து, பொதுநல விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையைப் பெருமையாகக் கருதி வந்த சொர்ணம் இப்போது தலைகீழாக மாறி விட்டிருந்தாள்.

வயதின் இயலாமை ஆட்டுவிப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. மூட்டெலும்புத் தேய்மானம். இரத்த அழுத்தம். போதாக்குறைக்கு சர்க்கரை நோயும். சிலவருடம் முன்னர் வரை எந்த வேலைக்கும் ஆள் எதிர்பார்த்து வாழ்ந்தவள் இல்லை. அப்போதெல்லாம் முடிந்த அளவு கூட இவரால் இப்போது உதவ முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வியாதிகள் ஓய்வு கால போனஸாக வந்து சேர சின்னச் சின்ன வேலைகளையே செய்து கொடுக்க முடிகிறது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய சூழலில் இருவருமே.

மகனும் மகளும் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தார்கள். வருந்தி வருந்தி அழைக்கவே செய்தார்கள். ஆறுமாதங்களுக்குத் திட்டமிட்டுச் சென்றால் ’நம்மூரைப் போலாகுமா’ என மூன்றே மாதங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விடுவதே நடந்தது. நிரந்தரமாய் போய்த் தங்குவது நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. வயது காலத்தில் தனியாக வாழுகையில் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளக் கூடாதென்பதில் சொர்ணம் தெளிவாக இருந்தாள். இந்த வயதில் தன்னலமே நல்லதென்றாள். போனமாதம் நடந்த சம்பவம் இந்தத் தீர்மானத்தை மேலும் தீவிரமாக்கியிருக்க வேண்டும்.

வீட்டெதிர் விளக்குக் கம்பத்தின் கீழ் மாலையில் கீரைக்கடை பரப்பும் கங்கம்மா, ஒரு நாள் முன்னிரவில் “நாளக்கி பரிச்ச இருக்கு. போகாதம்மா” எனப் பரிதாபமாக மகன் கூவக் கூவ காதில் வாங்காமல் வியாபாரத்துக்கு அவனை நிற்க வைத்து விட்டு சீரியல் பார்க்கச் செல்ல,, மறுநாள் அவளை ஒருபிடி பிடித்து விட்டார் சபாபதி. அவமானம் தாங்காதவளாய் ”எம்புள்ள மேல எனக்கில்லாத அக்கறதான் ஒமக்குப் பொத்துக்கிட்டு வருதோ?” சீறியதோடு அன்றிலிருந்து இவரைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளலானாள். சொர்ணத்தையும் தன் கடைப்பக்கம் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். இப்போது மார்க்கெட் வரை போய் கீரைவாங்க வேண்டிவந்தது கூட வருத்தமாய் இல்லை. “தேவையா இது நமக்கு”எனத் தினம் தினம் சொர்ணம் சொல்லிக் காட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. இதே சொர்ணம் எப்படியெல்லாம் பக்கபலமாக முரட்டு ஆசாமிகளிடம் கூட மல்லுக்கு நின்றிருக்கிறாள் ஒருகாலத்தில்.

சிலர் அடாவடியாகப் பேசுவார்கள். சில ஏழைப் பெற்றோர் “என்ன சார் செய்வது? படிப்பு ஏறல. எங்களுக்கும் சொல்லித் தரத் தெரியல. அப்படியே விட்டாலும் பசங்க வீணாகிடுவாங்களேன்னு வேலைக்கு விட்டுட்டோம்”எனக் காரணம் சொல்வார்கள். அப்போது ஆயிரங்களைக் கொட்டி ட்யூஷனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற சாராருக்கும், ஏழைகளுக்குச் சரியான கல்வி மறுக்கப்படுகிற அவலத்துக்குமான இடைவெளி மனதைப் பிறாண்டும்.

பெரிய அங்காடி முதல் சிறிய கீரைக்கடை வரை குடும்ப வியாபாரத்துக்குக் கல்லாவில் அமர்ந்து உதவும், பழகும் குழந்தைகளைப் பார்க்கிறார்தான். அது படிப்பைப் பாதிக்காமல் நடந்தால் பரவாயில்லை. அதிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த பேப்பர் ஏஜண்ட் போல மற்றவர் பிள்ளைகளைத் தம் சுயநலத்துக்குப் பலி கொடுப்பவரை மன்னிக்கவே முடிந்ததில்லை அவரால், தன் பெற்றோர் உட்பட.

த்தாம் வகுப்பில் இவர் நுழைந்த முதல் நாளன்று மாலை. டிரைவர் ஆறுமுகம் தன் தங்கை காமாட்சியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் வீட்டு வேலைக்கென. காமாட்சியின் கணவர் ஒருமாதம் முன்னர் தவறி விட்டதாகவும், பெண்ணின் படிப்புக்காக இங்கே அழைத்து வந்து, தன் பக்கத்து வீட்டிலேயே குடி வைத்திருப்பதாகவும் சொன்னார். காமாட்சியின் பின்னால் நின்றிருந்தது அன்று புது அட்மிஷனாக இவரது வகுப்பிலே சேர்ந்திருந்த வசந்தாதான். முதல் நாளே தன் பேச்சாலும் அறிவாலும் ஆசிரியர்களைக் கவர்ந்து விட்டிருந்தவள். அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவளே. பிறகு ஒருபோதும் வந்ததில்லை, அம்மா கூப்பிட்டு அனுப்பும் வரை.

ஆனால் ஆறுமுகத்தின் மகன் ரங்கன் அடிக்கடி வருவான். வசந்தா இவர் வகுப்பில் என்றால் ரங்கன் சின்னக்கா வகுப்பில் இருந்தான். ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாத நல்ல கல்வி முறை இருந்தது அந்தக் காலத்தில். இவரை விட இரண்டு வயது பெரியவனாயினும் நெருங்கிய விளையாட்டுத் தோழன். வசந்தாவைத் திட்டிக் கொண்டேயிருப்பான். “இவ நல்லாப் படிக்கறதப் பார்த்து எப்பவும் எனக்கு வீட்டுல திட்டு விழுது. நான் பாஸாகிறது பத்தாதாம். அவளப் போல க்ளாசுல மொதலா வரணுமாம். எங்கழுத்த அறுக்கதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கா” என அங்கலாய்ப்பான். போதாதற்கு அவள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தது இன்னும் வெறுப்பை ஏற்றியது.

கோடை விடுமுறைக்கு பெரியக்கா வயிற்றில் மூன்று மாத மசக்கையும் கையில் இரண்டு வயது மகளுமாக வந்திருந்தாள். கூடவே ஆஸ்த்மா தொந்திரவு வேறு. அம்மா சாதுர்யமாகக் கேட்டாள், “ஏன் காமாட்சி. ரங்கன் வர்ற மாதிரி வசந்தாவும் நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கட்டுமே. இப்பப் பெரிய லீவுதான? சின்னவ கூட விளையாடட்டும். குட்டிப்பாப்பாவும் வசந்தாவைப் பாத்தா ஒட்டிக்குவா.”

காமாட்சி தலையைத் தலையை ஆட்டினாலும் அழைத்து வரவில்லை. அப்புறம் அம்மா நேராக விஷயத்துக்கு வந்து விட்டாள். ஒரு வாரத்தில் ஊருக்குக் கிளம்பவிருந்த அக்காவுடன் வசந்தா போய் ஒரு மாதம் உதவியாக இருந்து வரட்டுமென. காமாட்சியால் மறுக்க முடியவில்லை. மறுநாள் வசந்தா குழந்தையோடு பழக வீட்டுக்கு வந்தாள். அம்மா சின்னக்காவின் துணிமணிகளைக் கொடுத்ததோடு புதிதாகவும் ரெண்டு மூணு செட் எடுத்திருந்தாள். கூடவே பளபளவென ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் வாங்கிக் கொடுத்தாள்.

“படிக்கிற பொண்ணாச்சே. அதுவும் சின்னப் பொண்ணு” என ஆட்சேபித்த அப்பாவை“நம்ம பொண்ணுங்க இந்த வயசுல வீட்டு வேல செஞ்சதில்லையா? சின்னவ பாப்பாவப் பாத்துக்கறதில்லையா? அது போலதான? ஸ்கூல் திறக்குமுன்னே நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்” என்று மடக்கினாள். நாத்தனாருக்குத் திருமணமென அக்கா போயே ஆக வேண்டியிருந்த சூழலில் அப்பாவால் தடுக்க முடியவில்லை.

வசந்தா ரொம்ப சமர்த்தாகப் பாப்பாவைப் கவனித்துக் கொள்வதாகவும் அதைவிட அருமையாகப் பாட்டு, பாடமெல்லாம் சொல்லித் தருவதாகவும் அக்கா எழுதிய கடிதத்தைக் காமாட்சியிடம் காட்டிப் புகழ்ந்தாள் அம்மா. பதினோராம் வகுப்பு ஆரம்பமாக சிலநாட்களே இருக்க வசந்தாவை அழைத்து வர அம்மா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரித் தெரியாது போக காமாட்சி வாய் விட்டேக் கேட்டு விட்டாள். அந்நேரம் ரங்கன் வசந்தாவிடம் தோற்றுவிடக் கூடாதென முயன்று படித்து பியுசி பாஸ் ஆகியிருந்தான், அம்மா அழகாகக் காய் நகர்த்த வசதியாக.

ங்கனைப் பட்டதாரியாக்கி, வேலை வாங்கித் தந்து, ஐந்து பவுன் நகையோடு வசந்தாவை அவனுக்குக் கட்டி வைப்பதாகவும் அதுவரை வசந்தா அக்காவுடனே இருக்கட்டுமென்றும் அம்மா சொல்ல “அவ அப்பாக்கு அப்படியொரு ஆசம்மா பொண்ணப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுமின்னு. புண்ணியவான் போய்ச் சேந்துட்டாரு. புகுந்த வூட்டு சனம் பொட்டைப்புள்ளக்கி எதுக்குப் படிப்புன்னு சொல்லப் போய்தான் அண்ணன அண்டிப் பொழைக்க இங்க வந்தேன். இந்த வருச கவர்மெண்டு பரிச்சயாச்சும் முடிச்சிரட்டுமேம்மா” தயங்கித் தயங்கிக் காமாட்சி சொன்னாள். அப்போதெல்லாம் பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி!

“என்னைக்கானாலும் ரங்கனைக் கட்டிக்கிட்டுச் சோறாக்கத்தானே போறா? ரங்கனுக்கு நல்ல வேலை அமைஞ்சா இவ எதிர்காலந்தானே செழிப்பா இருக்கப் போது? நல்லா யோசிச்சு ஆறுமுகத்துட்டேயும் பேசிட்டுச் சொல்லு.”

ஆறுமுகத்துக்குக் கசக்குமா என்ன? தங்கை மனதை மாற்றினார். அப்பா ரங்கனைப் படிக்க வைப்பதில் பாவம் தீர்ந்து விடுமென எண்ணி விட்டார் போலும். ரங்கனுக்குக் கொஞ்சம் தன்மானம் அடிவாங்கின மாதிரி தோன்றினாலும் கல்லூரி ஆசை கை கூடியதில் ரோஷம் ஓடி ஒளிந்தது. பி.காம் முடித்த கையோடு வங்கி வேலையும் கிடைத்தது. அம்மா சொன்ன வாக்கு மாறாமல் பத்துக்குப் பதினைந்து பவுனாக நகை போட்டுக் கோவிலில் கல்யாணம் முடித்து, வீட்டுத் தோட்டத்திலே பந்தல் போட்டு ஊரைக் கூட்டிச் சாப்பாடு போட்டாள். திருமணத்துக்கு முன் தினம் வரை பெரியக்காவின் குழந்தைகள் இரண்டும் வசந்தா ஊட்டினால்தான் சாப்பிட்டன.

ஊர் மெச்சிய கல்யாண விருந்திலே வருத்தமாகக் கை நனைத்த ஜீவனாக அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியர். பதினோராம் வகுப்புப் பரீட்சையில் மாநிலத்தில் முதலாவதாய் வந்து, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தருவாள் வசந்தா எனப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர். ‘பெரிய கலெக்டராய் வருவாள்’ என வாய்க்கு வாய் பாராட்டியவர். இவரிடம் முணுமுணுப்பாகத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுத் தளர்வாக வெளியேறினது இன்றும் கண்களினின்று அகலாக் காட்சியாக.

ழைப்பு மணி ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டார்.

பக்கத்திலிருந்த சொர்ணம் “இனியெங்க காவேரி வரப் போறா? ஏஜெண்டா இருக்கும். இல்லேன்னா அந்தப் பையனையே திருப்பித் துரத்தி விட்டிருப்பார். சும்ம மல்லுக்கு நிக்காம ரூவாயக் குடுத்தனுப்புங்க. கீரைக்கு நடையா நடக்கறது பத்தாம, விடிஞ்சும் விடியாமப் பேப்பருக்கு நடக்கப் போறீங்களாக்கும்?” அலுத்துக் கொண்டவள் “அத்தன காலையில தெருவெல்லாம் வெறிநாய்ங்க அட்டகாசம் வேற” கண்களை உருட்டிச் சின்னக் குழந்தையைப் பயமுறுத்துவதைப் போலச் சொன்னாள். அதே தெருவழிதான் அந்தச் சின்னப்பையனும் வரவேண்டும் எனும் நினைப்பு அவளுக்கு எழாதது வேதனையைத் தர, எதுவும் பேசாமல் போய்க் கதவைத் திறந்தார். நின்றிருந்தது சிறுவன் அல்ல. பளிச் முகத்தோடு பள்ளிச் சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்கச் சிறுமி.

யாரெனக் கேட்கும் முன்னர் அவளே “வணக்கம் சார். என் அம்மாதான் காவேரி. எதுத்த வீட்டுல வேல பாக்கும் அக்காவ வழியில பாத்தேன். அம்மா வரலன்னு பெரியம்மா கோவமா இருப்பதா சொன்னாங்க. ‘எனக்கும் நேரமில்ல. நீ போனா என்னாடி’ன்னாங்க. அம்மாக்கு ஒடம்பு முடியல. நாள வந்திடுவாங்க. எதும் செய்யணுமின்னா சொல்லுங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போயிக்கலாம். மொதப் பீரியடு கேம்ஸுதான்” படபடவெனப் பேசினாள். சூட்டிகையான அந்தக் குழந்தையின் முகத்தில் அம்மாவின் வேலையைக் காப்பாற்றிக் கொடுக்க வந்தப் பெருமிதம்.

“இல்லம்மா. நீ ஸ்கூலுக்கு...”

பாய்ந்து வந்த சொர்ணம் இவரைத் தள்ளாத குறையாக இழுத்து நிறுத்திக் கதவை விரியத் திறந்து விட்டாள்.

இப்படியான தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவர் அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே “நல்லதாச்சுப் பொண்ணே. வேறொண்ணும் செய்ய வேண்டாம். இன்னைக்கு ஒரே ஒரு நாள்.., பாத்திரத்தை மட்டும் தேச்சுக் கொடுத்துட்டுப் போயிடு” என்ற சொர்ணத்தைப் பின் தொடர்ந்தாள் அந்தச் சின்னபெண், முதுகில் பள்ளிக்கூடப் பையுடன் கருத்துப் போனக் கால் கொலுசுகள் சுடிதாருக்குக் கீழே தலைநீட்டி ’ஜலங் ஜலங்’ எனச் சத்தமிட.

திகைத்து நின்றிருந்த சபாபதிக்கு “ஒரே ஒரு மாசந்தானேங்க” ஐம்பது வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்ன அம்மாவும், கணுக்கால் தெரியும் பாவாடை தாவணியில் மஞ்சள் துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு அம்மா பரிசளித்தப் புதுக் கொலுசுகள் மின்னப் பெரியக்காவுடன் ரயிலேறிய வசந்தாவும் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.
***

27 நவம்பர் 2011 இன்றைய தினமணி கதிரில்..,

நன்றி தினமணி கதிர்!


கதாபாத்திரங்களை உயிர்த்தெழச் செய்திருக்கும் தலைசிறந்த ஓவியர் ராமு அவர்களுக்கும் நன்றி!

  • முடிவற்றுத் தொடரும் அவலம் பற்றியதான இச்சிறுகதை நட்சத்திர வாரத்தின் நிறைவு நாளில் வெளியாகிப் பலருடன் பகிர்ந்திடும் வாய்ப்புக் கிட்டியதில் மனதுக்கு ஒரு திருப்தி.
  • மழலைகள் உலகம் மகத்தானது’ எனும் தலைப்பில் தொடர்பதிவு இட என்னை அன்புடன் அழைத்திருந்த அமைதிச் சாரலுக்கு நன்றி. அச்சங்கிலியில் இக்கதையினையும் இணைக்கிறேன்.


தினமணியில் வெளியான என் பிற சிறுகதைகள்:

வயலோடு உறவாடி..
ஆயர்ப்பாடி மாளிகையில்..
கைமாறு
வடம்
பிடிவாதம்

ஞாயிறு, 1 மே, 2011

மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’

பொங்கி வந்த பாலை அணைத்து, அளவான சர்க்கரை டிக்காஷனுடன் சேர்த்து, கிளம்பிய மணத்தை நாசிக்குள் இழுத்தவாறே கோப்பையுடன் டிவி முன் அமர்ந்தான் ரகு.

‘இன்று காலை பத்து மணிக்கு ஞாயிறு மகளிர்மலர் நிகழ்ச்சியில் இளம் மருத்துவர் சக்தி ரகுநாதன் நம்முடன் கலந்துரையாடுகிறார். காணத் தவறாதீர்கள்.’

உறிஞ்சத் தொடங்குகையில் தேவாமிர்தமாய் இருந்த காஃபி ஒரே கணத்தில் வெறுத்தது. கடனே என குடித்து முடித்தான் மிச்சத்தை. ஆனால் மீத வாழ்க்கையை அப்படி சலிப்புடன் கழிக்கத் தான் தயாராக இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே ரெகார்ட் செய்ய சக்தி செட் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. மெயின் சுவிட்சை அணைத்து விடலாம் என அற்பமாக யோசித்த வேளையில் தொலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா.

“ஏன்டா, சக்தி ப்ரோக்ராம் இன்னிக்குதானே? போன ஞாயிறே அவ சொன்னதாலே பார்க்கச் சொல்லி அக்கம்பக்கம் தெரிஞ்ச எல்லார்க்கிட்டேயும் கொட்டடிச்சாச்சு. அவ பேட்டி முடிஞ்ச கையோட நானும் அப்பாவும் சம்பா சித்தி பொண்ணு கல்யாணத்துக்குக் கிளம்பிட்டிருக்கோம். வந்து பேசறேன்னு சக்திட்ட சொல்லு. இருக்காளா?”

சின்ன தயக்கத்துக்குப் பின் “நைட் ட்யூட்டி முடிஞ்சு வரல இன்னும்” என்றான்.

“ம்ம். சரி. அவதான் வர முடியாட்டியும் நீயாவது வந்திருக்கலாம்டா. சித்தி நீ ஏன் வரலைன்னு என்னப் பிச்சு எடுக்கப் போறா?” பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டாள் அம்மா.

‘வந்தா என்னைய ஆளாளுக்குப் பிச்சுத் தொங்க விட்டுறுவீங்களே’

போன வாரம் கல்லூரி நண்பன் கதிரேசன் தம்பிக்குத் திருமணம். குடும்பத்தோடு வந்து அவனுக்குச் சட்டை, சக்திக்குப் பட்டுப்புடவை தந்து அழைப்பு வைத்திருந்தார்கள். ஒருமாதம் முன்னாலிருந்தே சக்தியிடம் நினைவுபடுத்தியபடி இருந்தும் அன்று காலை தவிர்க்க முடியாத பிரசவ கேஸ் எனக் கிளம்பிப் போய் விட்டாள். நண்பர்களின் கலாட்டா தாங்கவில்லை. அதுவும் குரு இவன் காலை வாருவதிலேயே குறியாயிருந்தான்.

“வந்துட்டான்யா வந்துட்டான், கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி வந்துட்டான்” அத்தனை நண்பர்களும் ‘கொல்’ என சிரித்தது காதுக்குள் இன்னும் காய்ச்சி ஊற்றிய ஈயமாக. கல்லூரி நண்பர்கள் எப்போதுமே அதிக உரிமை எடுத்து கிண்டல் செய்வது சகஜம்தான். என்றாலும், வரவர இது போன்ற விளையாட்டுக்களை ரசிக்க முடியவில்லை.அதிக நேரம் அங்கிருக்கப் பிடிக்காமல் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமலே நழுவி வந்து விட்டிருந்தான் ரகு.

ஏற்கனவே மாமாவால் புகையத் தொடங்கியிருந்த மனம் குபுக் என பற்றிக் கொண்டதும் அன்றுதான்.

வேலை விஷயமாக ஊரிலிருந்து வந்து அவனோடு இரண்டு நாள் தங்கியிருந்த தாய்மாமா கிளம்பும் முன்னே, “என்ன வாழ்க்கடா வாழற. நல்லாப் படிச்சு உத்தியோகத்துல மடமடன்னு முன்னேறி என்ன பிரயோசனம் எங்கியோ பார்த்தேன், இவதான் வேணும்னு டாக்டர் பொண்ணக் கட்டுன. நீ வீட்டுக்கு வந்தா அவ கிளம்பிப் போறா. அவ காலையில திரும்பி வரும் போது நீ போயிடுற. எப்ப பாக்குறீங்களோ? எப்ப பேசுறீங்களோ? புள்ளக் குட்டியும் இன்னும் ரெண்டு வருஷம் வேண்டாம்னு இருக்கோம்ங்கிற. ஒண்ணும் நல்லதாத் தெரியல” என்றவர் போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் தூக்கிப் போட்டார்.

“ஒண்ணு பண்ணு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு எம் எம் மெடிக்கல் காலேஜில் இருக்கான். அவன் மூலமா லெக்சரர் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். நேரத்துக்கு போனமா வந்தமான்னு வாழ்க்கை சுலபப்படும். யோசிச்சு எனக்கு ஃபோன் செய். அவ மாட்டேன்னுதான் சொல்லுவா. பேசிக் கீசி கன்வின்ஸ் செய்யப் பாரு”

அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் நண்பர்களின் கேலியால் நொந்த தருணத்தில் பரிசீலிக்கத் தொடங்கி, இரண்டு நாள் முன்னர் சக்தியிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவற்றதாய் நீண்டு, இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற உச்சத்தைத் தொட்டு, இப்போது அவள் நர்சிங்ஹோம் கெஸ்ட் ஹவுஸில். பிடிவாதக்காரி. பிரிவதில் தனக்கு உடன்பாடில்லை என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர, தன் ஆலோசனையைப் பரிசீலிக்கக் கூட அவள் தயாராக இல்லாதது இவனுக்குப் பெரும் கோபத்தைக் கிளப்பி விட்டது.

அவளா தானா என பார்த்து விடும் கட்டத்தில் இருந்தான். ’என்னை விட உன் தொழில்தான் முக்கியமென்றால் அப்படியே இருந்து விடு’ தீர்மானமாய் சொல்லி விட்டான். இத்தனைக்கும் விரும்பிக் கைப் பிடித்தவள். எப்போது பார்த்தான் முதன் முதலில் அவளை?

பெரியம்மா மகனின் திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியாக. பார்த்த சில நிமிடங்களிலேயே அப்படிப் பிடித்துப் போனது அவனுக்கு. அவள் டாக்டர் எனத் தெரியவந்த போது அவனால் நம்பவே முடியவில்லை. படித்து ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததுமே மனிதர்களிடம் இயல்பாக வந்து ஒட்டிக் கொள்ளும் கெத்து எதுவும் இல்லாமல் மிக எளிமையாகவும் கலகலப்பாகவும் ஓடியாடி ஒவ்வொருவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அப்போதே பெரியம்மாவைக் கைக்குள் போட்டுக் கொண்டு கட்டினால் சக்தியைத்தான் கட்டுவேன் எனக் கைகாட்டி விட்டு வந்து விட்டான்.

‘நம்ம சமூகம் இல்லை. டாக்டர் பொண்ணு குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராது’ என அவன் பக்கத்திலும், ‘எங்க ஆட்கள் இல்லீங்களே. அது கூடப் பரவாயில்ல. நாங்க டாக்டர் பையனா தேடறோமே’ என சக்தி குடும்பத்திலும் கிளம்பிய எதிர்ப்புகளையும் மறுப்புகளையும் நடுவில் நின்று சமாளித்து, பரஸ்பரம் சந்திக்க வைத்துப் பேசி முடித்தது பெரியம்மாதான்.

சக்தி மிகத் தெளிவாக இருந்தாள்.

“ஒரு டாக்டரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னா என் ப்ரொஃபஷனைப் பற்றிய புரிதலோட நடந்துப்பாங்கன்னு என் அப்பா நினைக்கறதில தப்பில்லை. நான் ஆசைப்பட்டதுக்காக பல சிரமங்களுக்கு மத்தியில என்னப் படிக்க வச்சவரு அவரு. அந்தப் படிப்புக்கான மரியாதை நான் இதுல உயர்ந்து காட்டறதுதான். அதுக்கு உங்களால...”

“நோ சக்தி. இது ஒரு புனிதமான வேலைன்னு புரியாதவன் இல்லை நான். எங்க சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியிலும் நேரங்காலமில்லாத உழைப்புகள் எல்லாம்தான் இப்போ சகஜமாகி விட்டதே. என்னோட மனைவின்னு ஒரு வட்டத்துக்குள்ள கண்டிப்பா உங்களக் கட்டிப் போட மாட்டேன்” அவள் நம்பினாளோ இல்லையோ தான் அப்படி இருப்போம் என்பதில் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது அப்போது. ஓரளவு தொழிலில் கவனம் செலுத்தி ஒரு நிலைக்கு வர மூன்று வருடமாகலாம் என்றும், அதுவரை குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க முடியுமா என்றும் அவள் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை” என்று தலையைத் தலையை ஆட்டியவன்தான் அப்போது.

ப்போது அவன் பார்வை முழுவதுமாய் மாறி விட்டிருந்தது. பொறுமை போய் விட்டிருந்தது.

ஆனால் அவளோ மாமாவின் ஆலோசனையை முன் வைத்த போது கோபப்படவே இல்லை.

“ஏன் ரகு, திடீர்னு இப்படி லெக்சரர்? தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. ஜஸ்ட் இன்னும் ஒரே வருஷம். ஒரு சிறந்த குழந்தைப்பேறு நிபுணராகிடுவேன். அப்புறம் ஒண்ணென்ன ரெண்டோ மூணோ கூட பெத்துத் தந்துட மாட்டேனா. வேலைக்கும் போயிக்கிட்டு, ஆளுங்களப் போட்டு குழந்தைகளையும் நிச்சயம் நல்லாப் பார்த்துக்க முடியும் என்னாலே”

“பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இப்போ தோணுது” ஏதேதோ இவன் பேச, பதிலுக்கு அவளும் பேச “அவுட்” என வாசலைக் காட்டிக் கொந்தளித்து விட்டான்.

“உங்களிடம் இப்போ என்ன பேசியும் புண்ணியமில்லை. ஆற அமர யோசிங்க. என்னைப் பார்க்கப் பார்க்க கோபம்தான் அதிகமாகும். இப்போதைக்கு நர்சிங்ஹோமிலேயே தங்கிக்கறேன்” என துணிமணிகளை அடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“வீராப்பா போறியா? போ போ. ஊர் வாய்க்குப் பயந்துகிட்டெல்லாம் உங்கிட்டே தோற்க மாட்டேன். திரும்ப வந்து கூப்பிடவும் மாட்டேன். நீயா வர்றியான்னு ஒரு மாசம் பார்ப்பேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா சேர்த்துப்பேன். இல்லைன்னா டைவர்ஸ்தான்.”

அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டுக் கிளம்பி விட்டாள்.

லைபேசி அழைத்தது. அறியாத எண்கள்.

அழைத்தது, நண்பன் பாலகணேஷ்.

“டேய்ய்ய் பாலா...” அலறினான் ஆனந்தத்தில்.

“மாறவே இல்ல ரகு நீ. அப்பாவுக்கு பை பாஸ் சர்ஜரி. சென்னை வந்து ஒரு வாரமாச்சு. காலையிலே ஃப்ரீயா சொல்லு. எனக்கு 12 மணிக்கு ஃப்ளைட். அதுக்குள்ள உன்னைப் பார்த்துட்டு போலாம்னு..”

“வா வா. ப்ரேக்ஃபாஸ்ட் இங்கயே வச்சுக்கலாம்”

சமையல் உதவிக்கு வரும் சீதாம்மாவைப் பாலாவுக்குப் பிடித்த பூரிக்கிழங்கை செய்யச் சொல்லிவிட்டுக் குளிக்க ஓடினான்.

பாலா ப்ளஸ் டூ வரைக் கூடப் படித்த பால்ய சிநேகிதன். பக்கத்து தெருவும் ஆகிப் போக எப்போதும் சேர்ந்தே திரிவார்கள். எத்தனை நட்புகள் பின்னாளில் கிடைத்தாலும் எதிர்பார்ப்புகளற்ற கள்ளமில்லா சிறுவயது நட்புக்கு ஈடாகுமா? கல்லூரிக்காகப் பிரிந்தவர்கள். பிறகு சந்திக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்த கையோடு இவன் சென்னையிலும் அவன் டெல்லியிலுமாய் செட்டிலாக ஒருவர் திருமணத்துக்கு மற்றவர் போகவும் இயலவில்லை.

சொன்னபடியே ஒரு மணிநேரத்தில் அங்கிருந்தான் பாலா. ஆரத் தழுவிக் கொண்டார்கள். நான்கு கண்களும் மினுங்கி மினுங்கிப் பழைய காலத்துக்குப் போய்த் திரும்பின.

பாலா சொன்னான்: “நினைவிருக்கா ரகு. உங்கிட்டே ஒரு பிடிவாதம் உண்டு. ஏதாவது விளையாட்டில நீ தோத்துப் போனா அத்தோட விட மாட்டே. எதிராளிகிட்ட நைச்சியமா பேசியோ சமயத்தில கெஞ்சியோ மறுபடி விளையாட வச்சு ஜெயிச்சாதான் நிம்மதியாவே. உன்னோட அந்தப் போக்கு எங்களுக்கு அலுப்பா இருந்தாலும், போகுது ஃப்ரெண்டாச்சேன்னு சலிப்பா விளையாண்டாலும் உள்ளுக்குள்ள பிரமிப்பா இருக்கும்.”

ரகுவுக்குப் பெருமையாக இருந்தது.

பாலா தொடர்ந்தான்: “ஒருவகையில நான் இப்ப நல்ல நிலமையில இருக்கதுக்கு உன் கூடவே இருந்து கத்துக்கிட்ட அந்த பிடிவாத குணமும் ஒரு காரணம். அப்போ அதோட அருமை தெரியல. அவரவர் வழியில பிரிஞ்ச பிறகு வாழ்க்கையில எந்தத் தடை வந்தாலும் இத ரகு எப்படி சமாளிச்சிருப்பான்னு என்னய நானே கேட்டுப்பேன்னா பார்த்துக்கோயேன்” சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவன் அலைபேசி சிணுங்கியது.

“சொல்லும்மா.... அவகிட்ட ஃபோனைக் குடும்மா நான் பேசறேன்.... அனுக்குட்டி, செல்லமாச்சே நீ. பாட்டியைப் படுத்தாம குடுத்ததை சமர்த்தா சாப்பிடுவியாம். அப்பா இதோ வந்துட்டேயிருக்கேன்.... சரி சரி... வாங்கிட்டு வர்றேன். குளிச்சு ரெடியா இருக்கணும். நாம ரெண்டு பேரும் ஏர்போர்ட் போகணுமில்லையாடா.. குட் கேர்ள்” போனை வைத்தான்.

“வொய்ஃப் வரலையாடா உன்னோட?”

“இல்லடா. அவங்க ஆன்சைட் ப்ராஜக்டுக்காக யு கே போய் ஆறுமாசமாகுது”

“அப்போ குழந்தைய யார் பார்த்துக்கறது?” ஆச்சரியமாய் கேட்டான் ரகு.

ன் நான்தான். ஆயாம்மா காலையில எட்டு மணிக்கு வந்து சாயங்காலம் நான் வந்ததுமா ஆறுமணிக்குப் போவாங்க. அதுக்கு மேல நான் பாத்துக்கறேன்”.

“எப்படிடா மூணு வயசுதான் ஆகுதுங்கறே?”

“அனுக்குட்டிக்கு ஒண்ணரை வயசா இருக்கும் போதே ஒரு மாசம் பிரியா ஜெர்மனி போனப்போ பார்த்துக்கிட்டவன் நான். இப்ப முடியாதா என்ன ஆறு மாசமேன்னு ரொம்ப யோசிச்சாங்க இந்த தடவை. திறமைக்குச் சவாலா தேடிவந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாதுன்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”

ரகுவுக்கு வியர்த்தது.

“ஒண்ணுக்கு ரெண்டு பசங்க ஆயிட்டா வேலைய விடச்சொல்ற ஆளுங்களையும் நிறையப் பார்த்துட்டேன். வர்ற ப்ரோமோஷனை வேண்டாம்னுட்டு, தன்னைவிடத் திறமை குறைஞ்சவங்க தாண்டிப் போறத கைகட்டி வேடிக்க பார்த்துகிட்டு, சம்பளத்தை மட்டும் கொண்டு தரணும்னாஅநியாயமா இல்லே? மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை”

ரகுவுக்கு லேசாக வெட்கம் வந்தது. தன்னிச்சையாக செட் டாப் பாக்ஸ் பக்கம் பார்வை சென்றது. சக்தியின் பேட்டி அதில் ரெகார்ட் ஆகிக் கொண்டிருந்தது.

“உறவும் ஊரும் இன்ன வரை என்னப் பேசாத கேலி இல்ல. வர்றான் பாரு ஃபீடிங் பாட்டில்னுதான் ஃப்ரெண்ட்ஸ் கிண்டலடிப்பாங்க. அவங்களுக்கென்ன, ஜாலியாச் சொல்லிட்டு அடுத்த வேலயப் பார்க்கப் போயிடுவாங்க. நாம ஏன் அதை மனசுல ஏத்திட்டுத் திரியணும்னு எதையும் சட்டை செய்யறதில்ல. இது நம்ம வாழ்க்கை. அடுத்தவங்க மூக்கை நுழைக்கப்படாதுங்கறதுல தீர்மானமா இருந்தோம் ரெண்டு பேருமே...

“நா ஒரு முட்டாள். யாரு கிட்ட என்ன சொல்லிட்டிருக்கேன் பாரு. அன்னக்கி உம்மேல வச்ச பிரமிப்பு இன்ன வர மாறல, நா சொல்லியா தெரியணும் இதெல்லாம்? ஊரே மெச்சுற டாக்டரையில்ல கட்டிக்கிட்டிருக்க. அவங்கள பார்க்காம போறமேன்னுதான் வருத்தம் எனக்கு. அடுத்த தடவை ஃபேமிலியோட மீட் பண்ணலாம்.” விடாமல் பேசிய பாலா கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தான்.

ஏதேதோ மிதப்பில் இருந்த ரகு மெல்லத் தரை தொட்டிருந்தான்.

"இது நம்ம வாழ்க்கை' உதடுகள் முணுமுணுக்க, டின்னருக்கு சக்தியை எங்கே அழைத்துச் செல்லலாம் எனும் சிந்தனை வந்திருந்தது.
*** *** ***

படம்: கதையுடன் பிரசுரமானது.

  • உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாய் இருங்கள்:)! மேதினத்தில் இச்சிறுகதையை வெளியிட்டிருக்கும் தினமணி கதிருக்கு என் நன்றி!
  • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம்இங்கே.
  • அனைத்து வர்க்க உழைப்பாளிகளின் வாழ்வு சிறக்க, நலன் பெருக மே தின வாழ்த்துக்கள்! சென்ற வருட என் மே தினக் கவிதை ‘நட்சத்திரங்கள் இங்கே.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

வடம் - இன்றைய தினமணி கதிரில்..

'பதப'வெனப் படபடத்து அடங்கி நின்றது என்ஜின். வாயிற்கதவின் படிக்கட்டில் அமர்ந்திருந்த விமலா சட்டெனத் துள்ளி எழுந்து அவனைப் பார்த்து வாய் கொள்ளாச் சிரிப்புடன் "மாமா" என்றாள் மகிழ்ச்சியாய்.

அதே மகிழ்ச்சியைத் தன் அகன்ற புன்சிரிப்பால் விவேக் அந்த மழலைக்குப் புரிய வைத்த படி "மாமாவுக்கு வழி விடும்மா" என்றதும், அவள் ஒதுங்கிக் கொள்ள இரும்புக் கதவைத் தள்ளித் திறந்தான். இரட்டைப் படிகளின் நடுவேயிருந்த சறுக்கத்திலே பைக்கின் சக்கரத்தை வைத்து எம்பி உள்ளே ஏற்றினான்.

மறுபடி கதவை மூடி உட்புறமாகத் தாளிடவும் ஓடி வந்து வழக்கம் போல கதவின் கீழ் கம்பியில் தொற்றி நின்று கொண்டாள் விமலா.

மாடியேறி விவேக் தன் அறைக்குள் நுழையும் முன் மேலிருந்து கை அசைக்க வேண்டும் விமலாவுக்கு. இந்தப் புது சிநேகிதம் மொட்டு விட்டு மூன்று வாரங்களாகின்றன.

மூன்று வயதான விமலா வீட்டின் எதிர் நிலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியரின் ஒரே மகள். அங்கேயே தற்காலிகக் குடிசை இட்டு வசித்தாலும், தங்களது வேலை நேரத்தில் குழந்தை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்கட்டும் எனப் பெரும்பாலும் அவளை விவேக் குடியிருந்த வீட்டின் வாயிற்கதவையொட்டிய படிக்கட்டில் அமர்த்தி விட்டிடுவாள் அவளது அன்னை முனியம்மா.

'குளுகுளு'வென்ற வேப்பமரம் ஒரு காரணம் என்றால் கீழ் தளத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களான வயதான தம்பதியரின் அனுசரணையும் ஒரு காரணம். எப்போதும் வராந்தாவில் அமர்ந்து எதையாவது படித்தபடி இருக்கும் பெரியவர் மணியும், அவரது மனைவி மேகலாவும் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தபடி இருப்பார்கள். சில சமயங்களில் சாப்பாடும் கொடுப்பதுண்டு.

விவேக் நண்பன் கார்த்திக்குடன் மேல் தளத்திலிருந்த அறையில் வாடகைக்கு இருந்தான்.

மேல்படிக்கு வந்து சாவியால் கதவைத் திறந்ததும் அனிச்சையாக விமலாவுக்குக் கை அசைக்கத் திரும்பிய விவேக் ஒரு கணம் திகைத்து நின்று விட்டான். குழந்தை வாயிற்படியில் விநோதமாக மல்லாந்து விழுந்து கிடந்தாள். பதட்டத்துடன் நான்கு நான்கு படியாகத் தாவித் தாவி இறங்கி ஓடி வந்து கதவைத் திறந்து குழந்தையைத் தூக்கினால் பேச்சு மூச்சில்லை.

ணி சார் மணி சார்” என குரலெழுப்பவும் பெரியவரும் மேகலாவும் ஓடி வந்தனர்.

“என்னப்பா ஆச்சு”

“தெரியலையே! நான் வரும் போது நல்லா சிரிச்சுட்டு நின்ன குழந்த மேலே போய் திரும்புவதற்குள் இப்படிச் சுருண்டு கிடக்குதே”

என்ன ஏது என ஆராய முற்படும் முன்னரே தெருவின் எதிர்த் திசையிலிருந்து ஓடி வந்தான் சின்னையா. விமலாவின் தகப்பன்.

“தம்பி புள்ளய இப்படிக் கொடுங்க”

பின்னாடியே ஓடி வந்த முனியம்மா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்க "தே சும்மா இரு புள்ளே" என சின்னையா போட்ட அதட்டலில் அரண்டு சேலைத் தலைப்பைப் பந்தாய்ச் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டாள். விமலாவை விவேக்கிடமிருந்து வாங்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டு தன் குடிசை இருந்த திசையில் நடையைக் கட்டியவனை பெரியவரின் குரல் தடுத்தது.

“என்னப்பா டாக்டரிடம் காட்ட வேண்டாமா?”

“என்ன காட்டியும் இனிப் பிரயோசனமில்லை சாமி. இப்படித்தான் அப்பப்ப மயங்கி விழுந்திடுது. சித்த நேரத்தில் சரியாயிடும்...விதி நல்லா இருந்தா...” என்றான் கனத்த குரலில்.

“சொல்றத புரியும் படியா சொல்லக் கூடாதா...?” ஆதங்கத்துடன் கேட்டான் விவேக்.

குழந்தையை முனியம்மாவிடன் கொடுத்து குடிசையில் படுக்க வைக்குமாறு ஜாடை காட்டிவிட்டு அவர்கள் அருகில் வந்தான் சின்னையா.

“தெரிஞ்சு என்னா ஆகப் போவுது தம்பி? இருந்தாலும் இத்தினி அக்கறயா கேக்கிறதால சொல்லுதேன். இது இப்படி ரெண்டு மூணு தபா மயக்கம் போட்டு விழுந்ததால போன வாரம் தர்மாஸ்பத்திரிக்கு இட்டுக்கிட்டுப் போய் காம்பிச்சோம். மூளயில கட்டியாம் எதோ, சொன்னாக புரியல. 'ஆப்புரேசன் பண்ணணும். எங்க ஆசுபத்திரில அதுக்குண்டான வசதிங்க இல்ல. வேறயிடம் பாரு'ன்னு எழுதிக் குடுத்தாக. லச்சக் கணக்கில செலவாகுமின்னும் சொன்னாக. ரெண்டு வேள கஞ்சிய அன்னின்னிக்கு உழைச்சாதான் கண்ணால பாக்க முடியுது எங்களால. இதுக்கு மேல சாமி விட்ட வழின்னு இருக்கோமுங்க.”

சொல்லி முடிக்கும் முன் குரல் உடைந்து போனது சின்னையாவுக்கு. எந்தப் பதிலையும் எதிர் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடியே சின்னையா சென்று விட உறைந்து போய் நின்றிருந்தார்கள் மூவரும்.

கார்த்திக் அறைக்குத் திரும்பும் போது இரவு மணி எட்டரையிருக்கும். அறை ஜன்னல் இருண்டிருக்க ‘பைக் நிக்குது. அதுக்குள்ள சாப்பிடக் கிளம்பிட்டானா என்ன’ எண்ணியபடி தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து சுவிட்சைத் தட்டியவன் படுக்கையில் 'கொட்டக் கொட்ட' விழித்தபடி விட்டத்தைப் பார்த்துப் விழுந்து கிடந்த விவேக்கைக் கண்டு வியந்தான்.

ஏதோ நெருடினாலும் "என்னாச்சு விவேக். கரெண்ட் சேவிங்கா..?" என்றான் சூழ்நிலையைக் கலகலப்பாக்க முயன்றபடி.

இவன் எப்போது வருவான் என்று காத்திருந்தவன் போல விமலாவைப் பற்றி 'கடகட'வென விவரித்து முடித்தான் விவேக்.

“வருத்தமான விஷயம்தான். ஆனால் நம்மால என்ன செய்ய முடியும்?”

“என்ன கார்த்தி இப்படி சொல்லிட்டே, எதுவும் முடியாதா” ஆதங்கமாகக் கேட்டான் விவேக்.

“மாசக் கடைசியான நம்ம பாடே தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு இருக்கு. படிப்பு லோனு, பைக்கு லோனு இதெல்லாம் போக ஊருக்கு வேற அனுப்பணும். என்ன முடியும் சொல்லு!”

“முடியும்னு தோணுது கார்த்தி. அந்தக் குழந்தையை நாம முயற்சி செஞ்சா காப்பாத்திட முடியும்னே தோணுது.”

“எனக்கும் மட்டுமென்ன ஆசையில்லயா அந்தக் குழந்தை பிழைச்சு வரணும்னு. ஆனா லட்சக் கணக்கில பணத்துக்கு எங்க போறது?” என்றபடியே ஷூவைக் கழட்டி ஓரமாக வைத்தான்.

“லட்சக் கணக்கில பணம் நம்மகிட்ட இல்லேன்னா என்ன? உதவக் கூடிய நல்ல மனசு உள்ளவங்களை ஒண்ணு சேர்க்கிறதும், அவங்க கவனத்துக்கு இதைக் கொண்டு போவதும் கூடவா முடியாது? யாரையும் வற்புறுத்தப் போறதில்லையே. இந்தக் குழந்தையைப் பத்திய விவரங்களை எழுதி உதவி கேட்டு நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஈமெயில் அனுப்பிதான் பார்ப்பமே.”

“சரிப்படுமா? நம்மைக் கண்டாலே ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்’னு ஓட மாட்டாங்க?”

“அதுக்குதான் சொல்றேன் நம்மைப் புரிஞ்ச தெரிஞ்சவங்களுக்கு மட்டும் அனுப்புவோம். ஒரு பொதுச் சேவைன்னு வரும் போது எல்லோருமே இப்படித்தான் நினைச்சு ஒதுங்கிடறோம். அப்புறம் ஊர்ல உலகத்துல நல்லது செய்ய யாரு இருப்பா?”

“அப்படிங்கறே? ரைட்டுப்பா. நாளைக்கேதொடங்கிடுவோம். முதல்ல மெஸ் மூடும் முன்னே சாப்பிட்டுட்டு வரலாம் வா. பசி ஆளக் கொல்லுது"

நண்பன் ஒத்துக் கொண்டு உடனிருக்கச் சம்மதித்ததிலே பெரும் தெம்பு கிடைத்தாற் போலிருக்க கிளம்பினான் விவேக்.

வழக்கமாக ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி விடும் கீழ்த்தளத்தில் இன்னும் விளக்கெரிந்து கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. சாப்பிட்டு அரை மணியில் திரும்பி வந்து இரும்புக் கதவைத் திறக்கையில் 'எண்ணெய் போடக் கூடாதா எனக்கு' என அது எழுப்பிய 'க்ரீச்' சத்தத்தில் வெளியில் வந்து வராந்தா விளக்கை எரிய விட்டார் மணி.

“இன்னுமா தூங்கப் போகல சார்?” ஒரு மரியாதைக்கு கேட்டு வைத்தான் கார்த்திக்.

“இன்னிக்கு தூக்கம் வரும்னு தோணலப்பா”

பதில் கார்த்திக்குக்கு என்றாலும் பார்வை என்னவோ விவேக் மேல் பதிந்தது அர்த்தத்துடன்.

“விமலா நினைப்புத்தானே”

“சரியாச் சொன்னே விவேக்” என்றபடி உள்ளிருந்து வந்த மேகலா அழிக் கதவைத் திறந்து விட எல்லோரும் அங்கிருந்த பிரம்புக்கூடை நாற்காலிகளில் அமர்ந்தனர். விவேக்கின் விவேகமான யோசனையை கார்த்திக் விவரிக்க விவரிக்க முகம் மலர்ந்து பூரித்துப் போனார் மணி.

“கொஞ்சம் இருப்பா” என உள்ளே சென்று திரும்பியவரின் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.

“என் சக்திக்கு முடிஞ்சது”

ஓய்வூதியத்திலும் தாங்கள் கொடுக்கும் அறை வாடகையிலும் நாட்களை நகர்த்தும் அவர் அன்புடன் தொடங்கி வைத்த அந்த உதவித் தொகை லட்சியத்தையே எட்டி விட்ட சந்தோஷத்தை அப்போதே கொடுத்தது விவேக்கிற்கு.

“ஊர்க் கூடி இழுக்கும் தேரானாலும் அதுக்கும் தேவையாச்சேப்பா ஒரு சாரதி. நீ செலுத்து. காட்டுற திசையில வடம் இழுக்கறோம். தேரு நிலைக்கு வரும் வரை கூட இருப்பேன்” என்ற போது நெகிழ்ந்தே போனான் விவேக்.

தன் பிறகு நடந்தவை எல்லாமே கனவோ என வியக்கும் படியாக இருந்தது. பெரியவர் மணியின் அக்காள் மகள், தான் நர்ஸாகப் பணி புரியும் பிரபல மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க, மருத்துவர் தனக்கான அறுவை சிகிச்சை கட்டணத்தைத் தள்ளுபடி செய்து பிற செலவுகளுக்கான இரண்டு லட்சத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார் கனிவுடன்.

கல்லூரி நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் என தொடர்பு கொண்டு தங்கள் வங்கிக் கணக்கு எண்ணையும் தர டிராஃப்ட், செக், வங்கிக் கணக்குக்கு என வந்து சேர்ந்தவை ஒரே வாரத்தில் ஐம்பது ஆயிரத்தைத் தொட்டது. மகிழ்ச்சியில் திளைத்தனர் இருவரும்.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடிட, பெரிய தேக்கம் வரவில். கூட பத்தாயிரமே சேர்ந்திருந்தது. துண்டு விழுந்த தொகை விவேக்கிற்குக் கவலையை உண்டு பண்ணுவதாய் இருந்தது. ஏனெனில் மருத்துவர் ஒரு மாதத்துக்குள் குழந்தையின் சிகிச்சையை ஆரம்பித்து விட வேண்டுமெனக் கெடு வைத்திருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக அன்று சற்று சீக்கிரமாகவே அறைக்குத் திரும்பிய கார்த்திக் “ நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்ல இன்னும் சில பேரோட ஐடீஸ் கிடைச்சிருக்குடா" என்றான் உற்சாகமாய்.

'சட்'டென ஏதோ பொறி தட்ட “இரு வரேன்” என அவசரமாய் விமலாவைத் தேடிச் சென்றான் விவேக். வேப்பமரத்து நிழலிலே ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள். புதிதாய் அவளுக்குக் கிடைத்திருந்த தோழன்.

பக்கத்தில் நின்றிருந்த முனியம்மா இவனைக் கண்டதும் கை எடுத்துக் கும்பிட்டது சங்கோஜமாக இருந்தது. காட்டிக் கொள்ளாமல் வந்த வேலையில் மும்முரமாகி மொபைல் காமிராவால் விமலாவைப் படம் எடுக்கத் தயாரானான். அவளோ ஒத்துழைக்காமல் குட்டியின் பின்னே ஓடிக் கொண்டேயிருந்தாள். முனியம்மா பெரிதாக ரெண்டு அதட்டுப் போட்டாள் மகளை.

“அட குழந்தைய கோவிச்சுக்காதீங்க.” என்றவன் விமலாவை சமாதானப் படுத்தி, ஆட்டுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருப்பது போலவே இரண்டு மூன்று எடுத்து முடித்தான்.

முனியம்மாவிடம் காட்டிய போது முதலில் பூரித்துப் போனாள். பிறகு சற்று வாட்டமாக “தம்பி படம் புடிச்சா ஆயுசு கொறஞ்சுடும்பாங்களே. ஏற்கனவே இதுக்கு..” என இழுத்தாள்.

“நீங்க வேணா பாருங்கம்மா. இந்தப் படங்கள்தான் உங்க பொண்ணோட ஆயுசைப் கெட்டியாக்கப் போகுது” என்றான் அழுத்தமாக.

யிற்று, விமலாவின் படத்துடன் அடுத்தச் சுற்று ஈ மெயில்கள் பறந்து. பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. மருத்துவர் சொன்ன கெடுவுக்கோ இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்க மெல்ல மெல்ல லட்சத்தை அப்போதுதான் எட்டிக் கொண்டிருந்தது சேகரிப்பு. பாதிக் கிணறே தாண்டிய நிலை. விவேக்கை விட அதிகம் கலங்கி விட்டிருந்தது கார்த்திக்தான்.

“ஹும்... விதி விட்ட வழின்னு இருந்தவங்களுக்கு வீணா ஆசை காட்டிட்டமோன்னு குற்ற உணர்ச்சியால்ல இருக்கு”

“எனக்கு அப்படித் தோணல கார்த்தி. இருக்கிற பணத்தை வச்சு சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம்.”

“அது சரி. முழு பணத்தையும் கட்டினாதான் ஆச்சுன்னா என்ன செய்வ?”

“ம்ம். செய்யலாம் ஏதாச்சும். கடைசி முயற்சியா தானே நாளைக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறதாவும், ஏதாவது தொண்டு நிறுவனம் பார்த்துட்டு உதவ முன்வர சான்ஸ் இருக்குன்னும் மணி சார் சொல்லியிருக்கிறார். விடியும்னு தூங்கப் போகிற மாதிரி, பிறக்கும் வழின்னு நம்புவோம். ஆரம்பத்தில் மதர் தெரஸா தனி மனுஷியா.. எத்தனை தைரியமாய்.. பிடிவாதமா.. தன்னால முடியும்னு சேவையில் இறங்கினாரு, நல்ல உள்ளங்கள ஒண்ணு சேர்த்தாருன்னு இப்ப நினைக்க நினைக்கப் பிரமிப்பா இருக்கு. அதுவே தன்னம்பிக்கையும் தருது.”

சொன்னது காதிலேயே விழாத மாதிரி எந்த உணர்ச்சியும் காட்டாமல் சுரத்தின்றி அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில், தன் வார்த்தைகளில் அவனுக்குக் கிஞ்சித்தும் பிறக்கவில்லை நம்பிக்கை என்பது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது விவேக்கிற்கு.

ஒருவகையில் அவனைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இதுவே வேறொரு ஞாயிறாக இருந்தால் ரிலாக்ஸ் பண்ணுகிறேன் பேர்வழியெனப் பாட்டை அலற விட்டு அதகளம் செய்திருப்பான்.

“சரி வா. ப்ரெளசிங் சென்டர் வரை ஒரு நடை போய் மெயில் செக் பண்ணிட்டு அப்படியே டீ சாப்பிட்டு வரலாம்”

“நான் வரலை” குப்புற அடித்துப் படுத்துக் கொண்டான் கார்த்திக். அவனை அவன் போக்கில் விட முடிவு செய்தவனாய் தான் மட்டும் கிளம்பினான் விவேக்.

'புது மடல் இரண்டு' எனக் காட்டிய இன்பாக்ஸ் மேலே மவுஸால் 'க்ளிக்'கிடவும் விரிந்தது ஷ்யாமின் மடல். கல்லூரி நண்பன் ராமின் அண்ணன்.

'அன்பின் விவேக்,

நலமா? உன் மடலை வாசித்துக் கொண்டிருக்கையில் விமலாவின் படத்தைப் பார்க்க நேர்ந்த என் அப்பா விவரம் சொன்னதும் “எப்படியாவது இந்தக் குழந்தை நல்லாகி வரணுமடா “ என்றபடி என் மகளை அணைத்துக் கொண்டார். விமலாவைத் தன் சொந்தப் பேத்தியாகவே நினைத்து அவர் சொல்லியிருந்தது மறுநாள் 'ஃபார் விமலா' என்ற குறிப்புடன் என் அக்கவுண்டுக்கு அவர் மாற்றியிருந்த ஒரு லட்ச ரூபாய் உணர்த்தியது.

கடந்த மாதம் ஓய்வு பெறுகையில் அவருக்கு வந்த பணத்திலிருந்து நாளையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை அளித்திருந்தது என்மேல் அவர் வைத்திருக்கும் பரிபூரண நம்பிக்கையையும் உணர்த்தியது. நல்ல மகனாக அதைக் காப்பாற்றுவேன். அவரது மகனாய் இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். அந்தப் பணத்தை உங்கள் வங்கி எண்ணுக்கு மாற்றி விட்டேன். சரிபார்ததிடுங்கள்.

உங்கள் அலைபேசிக்கு முயற்சித்த போது தொடர்பு கிடைக்காததால் மடலிட்டுள்ளேன். விமலா பரிபூரண குணமடைய எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
ராம்'

மீண்டும் வாசித்தான்.

நம்பிக்கை என்பது ஒரு சுழற்சியாய் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் நகர்த்திச் சென்று கொண்டே இருக்கும் அற்புதத்தைத் தன் அனுபவத்திலேயே உணர்ந்ததில் நெகிழ்ந்து போனவனாய் கார்த்திக்கிடம் காட்ட அக்கடிதத்தைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.

வீட்டை நெருங்கிய போது, நடைவாசலில் வழக்கம் போல விமலா. மணித் தாத்தா வீட்டில் தனக்குத் தரப்பட்ட உணவின் ஒரு பாதியை ஆட்டுக்குட்டிக்கு உருட்டி வைத்துச் சாப்பிடச் செய்து கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் எப்போதும் போல மலர்ச்சியாய் புன்னகைத்தாள்.

தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. இலேசான மனதுடன் அவள் அருகில் அமர்ந்து ஆட்டுக் குட்டியைத் தடவிக் கொடுக்கலானான் தானும்.
*** *** ***

நன்றி தினமணி கதிர்!

கதைக்கான காட்சியுடன் தலைப்பை வலிமையான வடமாகவே வரைந்திருக்கும் ஓவியருக்கும் நன்றி! தினமணி இணைய தளத்திலும் வாசிக்கலாம் இங்கே..

புதன், 1 டிசம்பர், 2010

கைமாறு - தினமணி கதிர் சிறுகதை

ப்பா என்னோட டான்ஸ் ட்ரெஸ் எப்படிப்பா இருக்கு”

வெளிர் சிகப்பில் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களிட்ட ஃபிரில் வைத்த கவுனில் குழந்தை தேவதை போலிருந்தாள்.

“செல்லத்துக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகுதான்” சிரித்தான் சுந்தர் மகளைப் பார்த்து.

“பதினொரு மணிக்கு சரியா வந்திடுங்கப்பா. நான்தான் முன் வரிசையில் நின்னு ஆடறேன். அப்புறமா கடைசில நாலு ப்ரைஸ் இருக்கு எனக்கு” கையைக் குவித்து மடக்கியவள் “ட்ராயிங்,பாட்டு,ரன்னிங் ரேஸ், சயின்ஸ் க்விஸ்..” ஒவ்வொரு பிஞ்சு விரலாக இதழ் போல் விரித்துக் கொண்டே வந்தாள்.

“பாம் பாம்” ஒலி எழுப்பியது பள்ளி வேன்.

“வேன் வந்தாச்சு பாரு. நீ கிளம்பு பாப்பா. பத்து மணிக்கெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, நான் நாலு பேரும் அங்கிருப்போம்.” என்றான் அவளைப் போலவே ஒவ்வொரு விரலாக விரித்துக் காட்டி.

கண் அகல ரசித்துச் சிரித்தவளாய் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிய மகளை சந்தோஷமாகப் பார்த்திருந்த வேளையில் கைபேசி சிணுங்கியது. டாக்டர் முத்து.

சொல்லுங்க டாக்டர்”

“அவசரமா ஓ நெகட்டிவ் வேண்டியிருக்குப்பா. சிசேரியன். ரெட்டப் புள்ளங்க வேற. சிக்கலான பிரசவம்னு பக்கத்து டவுணிலிருந்து இங்க வந்து அட்மிட் ஆயிருக்காங்க இப்பதான்”

“எத்தனை மணிக்கு ஆபரேஷன்?”

“மதியம் 2 மணிக்கு மேலே. அப்பதான் நல்ல நட்சத்திரம் பிறக்கிறதாம்” சிரித்தார்.

“சரி அவங்க குடும்பத்திலே...” என இழுத்தவனை இடைவெட்டி “கேட்காம இருந்தா சும்மா விடுவீங்களா என்னைய, விசாரிச்சிட்டேன். சொந்தத்தில இப்போ கூட இருக்கிறவங்க யாருக்கும் அந்த க்ரூப் இல்லையாம்” என்றார் டாக்டர்.

“கவிதா” என அவசரமாய் மனைவியை அழைத்தான். “நீ அம்மா அப்பாவைக் கூட்டிட்டு முதல்ல போயிடறயாம்மா? டான்ஸ் நேரத்துக்கு முடியாவிட்டாலும் ப்ரைஸ் கொடுக்கிற நேரத்துல வந்திடப் பார்க்கிறேன். அவசர வேலைம்மா.”

அவனைப் பற்றி நன்கு அறிந்த கவிதா “சரிங்க. ஒண்ணும் பிரச்சனையில்ல. பாப்பாவைச் சமாளிக்க எனக்குத் தெரியும்” என்றாள் சமாதானமாய்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் கண்கள் மின்ன விடைபெற்ற மகள், தான் போக இயலாது போனால் ஏமாற்றத்தில் எப்படிச் சோர்ந்து போவாள் என்பதை நினைக்கையில் மின்னல் வெட்டாய் ஒரு சின்னவலி. மறுகணம் சுறுசுறுப்பானான்.

தொடர்ச்சியாய் எண்களைத் தட்டியதில் ஓ நெகட்டிவ் பட்டியலில் இருந்த இரத்ததான தன்னார்வலர்களில் மூன்று பேர் ஊரில் இருக்கவில்லை. ஒருவனுக்குக் காய்ச்சல். இன்னொருவன் இரவு தண்ணியடித்து விட்ட்தாகத் தலையைச் சொறிந்தான். மீதமிருந்தது அசோக் மட்டுமே. ஆனால் பாவம் அவன் தங்கைக்கு அன்று திருமணம். தந்தை இல்லை. அவர் ஸ்தானத்தில் முன்னிருந்து நடத்துவது அவனே. என்ன செய்ய? வேறு வழியில்லை அவனைதான் கூப்பிட்டாக வேண்டும்.

அது ஒரு அபூர்வ க்ரூப். எப்போதாவதுதான் தேவைப்படும். முன்னரே ஸ்டாக் செய்து வைத்தால் வீணாகி விடக் கூடாதென தேவைப்படும் சமயத்தில் அந்த க்ரூப் நபர்களைத் தொடர்பு கொண்டு கொடுக்க வைப்பதே வழக்கம். முன் கூட்டி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை எனில் கொடுப்பவர் சவுகரியத்தைப் பார்க்க இயலும். விபத்தோ அவசரத் தேவையோ வருகையில் இப்படிப் பாலமாக செயல்படுவது பழகிப் போன சவால்தான்.

அசோக்கின் எண்களைத் தயக்கத்துடன் அழுத்தினான்.

“என்னப்பா பொண்ணு பள்ளிக்கூடத்துல ஆண்டுவிழான்னு முகூர்த்தத்துக்கு வர மாட்டேன்னுட்ட. பரவாயில்ல. ஆனா கண்டிப்பா ரிசப்ஷனுக்குக் குடும்பத்தோட வந்திடணும், ஆமா” என்றவன் இவன் பதில் பேசும்முன் “யப்பா யப்பா, அங்கே இல்லை. இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரூமுல கொண்டு வைய்யப்பா” என யாரிடமோ படபடப்பாய் சொல்லிக் கொண்டிருந்தான்.

தயங்கித் தயங்கி இவன் விஷயத்தைச் சொல்லவும், ஐந்து விநாடி அமைதிக்குப் பின், “முகூர்த்தம் பத்தரைக்கு முடியுது. பதினொரு மணிக்கு மண்டபத்து பின் வாசலுக்கு காரைக் கொண்டு வந்திடு”

நன்றி சொல்லக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தான். ஏன், இவனும் கூட அப்படியான நன்றியை எவரிடமும் எதிர்பார்த்ததில்லைதான். இது போன்ற ஒத்துழைப்புகள் எல்லா சமூக ஆர்வலர்களுக்குமே இயல்பான ஒன்றாகி விட்டிருந்தது.

கல்லூரி வயதில் இரத்ததானம் பற்றி அறியவந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொரு முறை இரத்தம் கொடுப்பதில் ஆரம்பித்த சேவை ஆர்வம், இப்போது தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர் ஆக்கியிருந்தது.

கழகத்துக்காக முகாம் நடத்துவது, கிடைப்பதில் குறிப்பிட்ட பங்கை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பது, அவசரத் தேவைக்கு வழங்க முன்வருபவர் தொடர்பு விவரங்களை நுனிவிரலில் வைத்திருந்து எந்நேரத்திலும் ஏற்பாடுகளைக் கவனிப்பது இவை அவன் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது.

தான் அப்படி இருப்பதை பெரிய விஷயமாக எண்ணாதவன், சமயங்களில் நண்பர்கள் தங்கள் இயல்பு வாழ்வின் கெடுபிடிகள் கடமைகளிலிருந்து இப்படி விலகி, அனுசரித்து இவன் வார்த்தைக்காக ஓடி வருகையில் ஏற்படும் வியப்பும் நெகிழ்வும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இன்று அசோக்.

ருக்கு சற்றே வெளியில் அமைந்த மண்டபம். கால் மணிக்கு முன்னதாகவே பின்வாசல் பக்கமாய் வண்டியைக் கொண்டு நிறுத்தி விட்டான் சுந்தர்.

சொன்ன நேரத்துக்குச் சரியாக அசோக் வெளியே வரவும், காரில் ஏற்றிக் கொண்டு விரைந்தான்.

போக்குவரத்து நெரிசலுக்குள் மாட்டி, போராடித் தப்பித்து, அந்த தனியார் மருத்துவமனையின் பெரிய வளாகத்துள் நுழையும் போது மணி பனிரெண்டை நெருங்கி விட்டிருந்தது. இரத்தம் கொடுக்க வேண்டிய இடம் இருக்கும் கட்டிடத்தின் முன்னால் சுந்தர் வண்டியை நிறுத்த, “நீ ஸ்கூலுக்குக் கிளம்புப்பா சுந்தர். நான் டாக்ஸியோ ஆட்டோவோ பிடிச்சு மண்டபத்துக்குப் போயிக்கறேன்” என்றான் அசோக்.

“நல்லா சொன்னே போ. உன்னை மறுபடி நேரத்துக்கு மண்டபத்துல சேர்த்தால்தான் எனக்கு நிம்மதி. காரை பார்க் பண்ணிட்டு அப்படியே டாக்டர் முத்துவை எட்டிப் பார்த்துட்டு வரேன். சந்திச்சு நாளாச்சு. எம்மகளை மொதமொத தொட்டுத் தூக்கின மகராசனாச்சே”

“சொன்னா கேட்க மாட்டே நீ” அவசரமாய் அசோக் நடையைக் கட்ட, வரிசையாக இருந்த கட்டிடங்களைத் தாண்டி, வளாகத்தின் பின்பக்கம் அமைந்த வண்டிகளுக்கான நிறுத்தத்தில் மெல்லச் சென்று காரை பார்க் செய்தான் அசோக். டாக்டர் முத்துவின் அறை இருந்த கட்டிடத்தை நோக்கி நடந்த வேளையில் முன்னால் நடந்த இருவரின் சம்பாஷணை திடுமென அவன் கவனத்தை ஈர்த்தது.

“இரத்தம் கேட்டு எவ்ளோ நேரமாச்சு? என்ன வங்கி வச்சு நடத்துறானுக? அவசரம்னு சொல்லியாச்சு. கொடுக்கிற பய ஆரோக்கியமானவனா இருக்க ஒட்டிக்கு ரெட்டியா துட்டு தாரோம்னும் சொல்லியாச்சு. அன்ன இன்னன்னு மணி பன்னெண்டாகப் போது. டாக்டரம்மாக்கு போனைப் போட்டுக் கேளுடா அனுப்புறானுகளா இல்லையான்னு” என்றார் ஐம்பதுகளில் இருந்த அந்தப் பெரியவர்.

“சும்மா சும்மா கேட்காதீங்கன்னு கோபப்படறாங்கப்பா. வெயிட் செய்யலாம்.” மகன் போலும்.

எதுவும் பேசாமல் அவர்களை வேகமாகக் கடந்தான். டாக்டரின் அறையை அடையும் அந்த சொற்ப நேரத்துக்குள் அவன் மனதினுள் ஒரு பிரளயமே நடந்து முடிந்திருந்தது.

“வாங்க சுந்தர். இப்பதான் லேபிலிருந்து ஃபோன் செஞ்சாங்க. நேரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். அந்தக் குடும்பம் வேற பொசுபொசுன்னுட்டே இருந்தாங்க. அப்புறம், எப்படியிருக்கா செல்லப்பொண்ணு? நல்லா படிக்கிறாளா?”

“ஓ. இன்னைக்கு ஆனுவல் டே. நாலஞ்சு ப்ரைஸ் வாங்குறா. எல்லாம் உங்க ஆசிர்வாதம்” சொன்னவன் அவர் காட்டிய இருக்கையில் அமராமல் “டாக்டர் இந்த இரத்தத்தை உபயோகிக்க இருக்கிற குடும்பத்தோட நான் கொஞ்சம் பேசலாமா?” என்றான்.

வியப்பாகப் பார்த்தார் டாக்டர் முத்து.

எத்தனையோ முறை பல குடும்பத்தினர் நன்றி சொல்ல அவனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த வேளையில் எல்லாம், பிடிவாதமாய் மறுத்து தன்னை அடையாளம் கூட காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து பறந்து விடுபவனின் இந்தப் புது விண்ணப்பம் ஆச்சரியப் படுத்தியது.

மணியடித்து நர்சை வரவழைத்தவர் “மிஸ்டர் தணிகாசலமும் பையனும் எங்கேன்னு பாருங்க” என்றார்.

“அவங்க பேஷண்டுக்கு யாரு?” கேட்டான் சுந்தர்.

“மாமனாரும் கணவரும். முன்ன நின்னு கவனிக்கிறது அவங்கதான். பொண்ணுக்கு ஏதோ குக்கிராமம். அங்க வசதிப்படாதுன்னு மொதல்ல டவுணுல காமிச்சிருக்காங்க. அப்புறம்தான் திடீர்னு காலைலதான் அங்கிருந்து இங்க அனுப்பிட்டாங்க. ரெட்டை வாரிசு வரப் போகுதுன்னு குடும்பமே ஒரே பரபரப்புல இருக்கு. வாங்க போய் பார்க்கலாம்” என எழுந்தார்.

காரிடாரில் நடக்கையில் எதிரே வந்து கொண்டிருந்தார்கள் இவன் பார்த்த அதே பெரியவரும் மகனும்.

டாக்டர் அவனை அறிமுகப்படுத்தவும் “ரொம்ப சந்தோசம் தம்பி. என்ன விசயம். இரத்தம் கொடுத்தவருக்கு அதிகமா பணம் தேவைப்படுதா? கொடுத்திடலாம்” என்றார்.

“அதெல்லாம் தேவையில்லைங்க. ஆனா ஒரு ரெக்வெஸ்ட். உங்க குடும்பத்துல யாராவது ஒருத்தர்,அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் ரத்தம் கொடுத்திட்டு வந்து, இந்த இரத்தத்தை வாங்கிக்கறீங்களா?”

“என்ன தம்பி பேசறீங்க? நாங்க பணமெல்லாம் கட்டியாச்சு. எங்களுக்கு இதெல்லாம் பழக்கமுமில்ல. மேலே என்ன விலைன்னாலும் கேளுங்க” கடுகடுத்தார் தணிகாசலம்.

“பொறுங்க ஐயா. அந்தப் பணத்தையே கரைச்சு ஏத்த முடியாதுதானே.இரத்தம் விற்பனைக்கு கிடைக்கிற கடை சரக்கு இல்லங்க. தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம். அதுக்குன்னு வசூலிக்கப் படற பணம் இரத்த வங்கி இயங்கறதுக்காக. பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம். இப்படி ரத்தத்துக்கு ரத்தம் கேட்கலாம்ங்கறதே எனக்குக் கூடதான் இத்தன நாள் தோணாமப் போச்சு பாருங்களேன்”.

இப்போது பெரியவரின் மகன் சுதாகரித்துக் கொண்டு அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் தணிந்து “தம்பி நான் பேசினதை கேட்டுட்டீங்க போலிருக்கு. மன்னிக்கணும் ஏதோ ஒரு பதட்டதுல வார்த்தைங்க விழுந்துட்டு”.

“இல்லைங்க. நீங்க உங்க மனசுல உள்ளததானே கொட்டுனீங்க. பரவாயில்ல. உங்களப் போல எண்ணமுள்ளவங்களும் இருப்பாங்கன்னு எனக்குப் புரிய வச்சதுக்கு முதல்ல நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.”

தணிகாசலத்தின் முகம் கோணியது.

“அட என்னங்க உங்கள சங்கடப் படுத்தணும்னு சொல்லல. ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. காசுக்காக இரத்தத்தை கொடுக்கிறவங்க ரொம்ப ரொம்பக் கொறைவு. பெரும்பாலும் ஒரு சேவையா நினைச்சுதான் கொடுக்கறாங்க பலரும். அதனாலதான் அதைத் ‘தானம்’னு கவுரவப் படுத்துறாங்க. நிறைய பேரு அதை ஒரு வழக்கமாகவே பண்ணிட்டிருக்கிறாங்க. உங்களை அப்படி வற்புறுத்தல. அது தனி மனுச விருப்பம். ஆனா இப்படிக் குடும்பத்துல ஒருத்தருக்குத் தேவை வரும் போதாவது கொடுக்கலாமே.ஒரு ஆளு கொடுக்கிற இரத்தம் சில நேரம் மூணு உயிரைக் கூடக் காப்பாத்தும் தெரியுமா? அரசு ஆஸ்பத்திரிபக்கம் போய்ப் பார்த்தீங்கன்னா எத்தன பேருக்கு எவ்வளவு தேவையிருக்குன்னு உங்களால நிச்சயம் உணர முடியும்.”

பணிவான அவன் பேச்சுக்குப் பிறகும் இறுக்கமாகவே தணிகாசலம் நின்றிருக்க, அருகிலிருந்த பெஞ்சிலிருந்து ஒரு வயதான பெண்மணி மெல்ல எழுந்து சுந்தர் அருகே வந்தார்.

“தம்பி. எம் மகனை எலிக்காச்சல்ன்னு ஆசுபத்திரில போன வாரம் சேர்த்தோம். முழு இரத்தமும் மாத்தணும்னுட்டாங்க. பேரன் கூடப் படிக்கற பசங்க, அவங்க ஃப்ரெண்டுங்கன்னு 40, 45 பேரு மடமடன்னு வந்து அஞ்சே மணி நேரத்துல இரத்தம் கொடுத்தப்போ என் நாடி நரம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. எங்கே யாரு பெத்த புள்ளங்களோ இப்படி நம்ம வூட்டுப்புள்ளைக்குக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்காங்களேன்னு. இன்னிக்கு எம்மவன் கண்ணு முழிச்சுக் கிடக்கான்னா அதுக்கு அவங்கெல்லாம்தான் காரணம். அதுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு ஏங்கிப் போய்க் கிடந்தேன். எனக்கு நல்ல வழியொண்ணு சொன்னேப்பா. என் வயசுக்காரங்க இரத்தம் கொடுக்கலாமாப்பா?”

“தாராளமா கொடுக்கலாம்மா. அறுபத்தஞ்சு எழுபது வயசு ஆளுங்க வரை கொடுக்கறாங்க. உங்கள நல்லா செக் பண்ணிட்டு உடம்பு ஒத்துழைக்குமான்னு பாத்துட்டுதான் எடுப்பாங்க” என்றான் சுந்தர் கனிவும் நெகிழ்வுமாக.

“அரசு ஆசுபத்திரில எங்கேன்னு போய் கேட்கணும்பா?”

அவன் பதில் சொல்லும் முன் “வாங்கம்மா. அங்கதான் இப்பக் கிளம்பிட்டிருக்கேன். என் கூடவே அழைச்சுட்டு போறேன்” என அவரின் கையைப் பற்றினான் தணிகாசலத்தின் மகன்.

திகைத்து நின்றிருந்த டாக்டரைப் பார்த்து ‘வரட்டுமா’ என சுந்தர் தலையசைக்க, அவர் ‘தொடருங்கள் இது போலவே’என்பது போலாகத் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து நிறைவாகப் புன்னகைத்தார்.
*** *** ***

  • 7 நவம்பர் 2010 இதழில். நன்றி தினமணி கதிர்!

தினமணியின் இணையதளத்திலும் இங்கே வாசிக்கலாம்
  • கவிநயாவின் இந்தப் பதிவும் உங்கள் பார்வைக்கு! நல்ல பகிர்வுக்கு நன்றி கவிநயா!

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணி கதிர் சிறுகதை


"நீ போய் வண்டியில வெயிட் பண்ணு. அப்பாவிடம் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்".

'அஞ்சு நிமிஷத்தில பேசி முடிக்கிற விஷயமா இது?' சுந்தரத்துக்கு மகனின் மேல் கோபம் கோபமாக வந்தது.

சுரேஷ் நீட்டிய கார்சாவியை வாங்கிக் கொண்ட ஸ்நேகா "இன்னும் நீங்க சாப்பிடலை மாமா. உங்களுக்காக வெயிட் பண்ணிப் பாத்துட்டு இப்பதான் சாப்பிட்டோம். இட்லி மேசையிலே இருக்கு. காஃபி ஃப்ளாஸ்கில வச்சிட்டேன். கரெண்ட் அடிக்கடி போகுது. மைக்ரோஅவன்ல சூடு பண்ண முடியாதே, அதான்.." என்றாள்.

"நீ கிளம்பும்மா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" சிரமப்பட்டு புன்னகைத்தார். அவள் வெளியேறியதும் மறுபடி முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டார். சுரேஷின் கண்களைத் தவிர்க்க செய்தித்தாளைப் புரட்ட ஆரம்பித்தார்.

முன் தினம் இரவு படுக்கும் முன்னால் அவன் சொன்ன விஷயத்திலிருந்து இன்னும் அவரால் மீள முடியவில்லை. ஸ்நேகாவுடனான ஆறு வருட மனம் நிறைந்த தாம்பத்தியத்தில் சாத்தியப்படாது போன ஒரேஒரு ஆசையை, தத்து எடுப்பதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக நிறுத்தி நிதானமாகவே அவன் சொன்னாலும் அதிர்ந்துதான் போனார் சுந்தரம். அவரை அதிகம் பேசவும் விடாமல் 'முடிவை யோசிச்சு மெதுவா சொல்லுங்க' என அவன் தூங்கப் போய்விட்டான். பொட்டுத் தூக்கமில்லாமல் இவர் புரண்டு மனம் புழுங்கி எழுந்தது யாருக்குத் தெரியும்?

'மீனாட்சி உசுரோட இருந்திருந்தா அவளுக்கு புரியும். இந்தத் தடியனுக்கு எப்படி விளங்கும்?'

ஆனால் அவர் மனக்கிலேசத்தை விளங்கியவன் போலவே சின்னச் சிரிப்புடன் "நீங்க கையில் பிடிச்சிருக்கிறது நேத்தய பேப்பர். இதப் படியுங்க" என அன்றைய செய்தித்தாளை நீட்டினான் சுரேஷ். அவர் வாங்கிக் கொள்ளவில்லை.

"அப்பா இதப் பாருங்க. நீங்க என்ன முடிவெடுத்தீங்கன்னு நான் கேக்கப் போறதில்ல்லை இப்போ. அடுத்த வாரத்துக்குள்ள சொன்னா போதும். உங்க ஆசிர்வாதத்தோடதான் போய் பதிவு செய்யலாம்னு இருக்கோம். அதுக்காக இப்படி சாப்பிடாம எல்லாம் இருக்காதீங்க."

அனுமதியோடு என்று சொல்லாமல் ஆசிகளோடு என அவன் சொன்னதைக் கவனித்துக் கலவரமானவர் அவசரமாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, "ம்ம். இல்ல நானும் யோசிச்சேன். தத்து என்பதொண்ணும் புதிய விஷயமில்லதான். காலகாலமா நடக்குறதுதான். எம் பொண்ணாதான் ஸ்நேகாவைப் பார்க்கிறேன்னு உனக்கே தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் நல்லவழி காட்டத்தானே குத்துக்கல்லாட்டம் இருக்கேன் ஒங்கம்மா போனப் பொறவும்."

அவரது பீடிகை அவருக்கே பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் தொடர்ந்தார்: "நீ ஊம்னு சொல்லு. கிராமத்தில என் தம்பியோட பேரப் பசங்களில ஒண்ணைக் கூட்டிட்டு வந்துடலாம். இப்பதான் பொறந்த கைக்குழந்தை வேணுமின்னாலும், மூணாவது மருமக மாசமா இருக்கறதா போன தடவை ஃபோனில பேசினப்போ சொன்னான். அந்தக் குடும்பம் தலையெடுத்ததே என்னாலதான். ஒரு பய புள்ளயும் என் பேச்சைத் தட்ட மாட்டானுங்க."

ஆவலாக மகனைப் பார்த்தார்.

"வேண்டாமேப்பா. அம்மா அப்பா கூடப் பொறப்பு எல்லாம் நல்ல விதமா அமைஞ்ச குடும்பத்திலிருந்து பிரிச்சு ஒரு குழ்ந்தையைக் கூட்டி வருவதை விட இதெல்லாம் அமைய வாய்ப்பில்லாமல் போன ஒரு குழந்தைய அழைச்சுட்டு வந்து வளர்க்கதான் ரெண்டு பேரும் விரும்புறோம். எது சிறப்பு நீங்களே சொல்லுங்க."

"உங்களுக்கெல்லாம் பரந்த மனசு. நா யாரு? பழைய பஞ்சாங்கம். ஒரு குழந்தைக்கு வாழ்க்கையில்ல கொடுக்கறீங்க. அதைத் தடுக்கற பாவியா நான் எதுக்கு இருக்கணும் நடுவில இங்க"

"ஏன் பெரிய வார்த்தையெல்லாம்? நமக்கு மேலே ஒருத்தர் இருக்கையில யாருக்கு யார் வாழ்க்கை தர்றது? சொல்லப் போனா அம்மா அப்பாவா இருக்கிற வாய்ப்பையும் வாழ்க்கையையும் அந்தக் குழந்தைதான் எங்களுக்குத் தரப் போகுது. தாத்தான்னு உங்க மடியிலேறிக் கொஞ்சி விளையாடப் போகுது."

"நீ என்ன சொன்னாலும் எம் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. இரத்த சொந்தமில்லாத ஒரு உயிர்மேல பாசத்தைக் கொட்ட முடியும்னு எனக்குத் தோணலை".

"அப்போ அம்மாவை நீங்க நேசிச்சது பொய்யா?"

"இதென்ன எடக்குமுடக்கா? இரத்த சம்பந்தம் இல்லாட்டாலும் அந்தப் பந்தம் வேற. ஆயிரமானாலும் நம்ம மனுஷங்க. புள்ள விஷயம் அப்படியில்ல. ஒரு மண்ணுல துளிர் விட்டதை இன்னொரு மண்ணில நட்டு வச்சு, பாத்துப் பாத்து தண்ணி விட்டு வளர்த்தாலும் நமக்கு அது ஒட்டுமா? உறவாகுமா?"

"அப்படித் தோணலை எனக்கு. தேவகி வயித்தில பொறந்த கண்ணன் ஆயர்ப்பாடி மாளிகையில் அன்னை யசோதைக்கு இன்பத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கலையா? பாசமா இருக்கலையா? போங்கப்பா நீங்க சொல்லிக் கொடுத்த கதைகளை உங்களுக்குத் திரும்பச் சொல்ல வைக்கிறீங்களே?" மென்மையாகச் சிரித்தான் சுரேஷ்.

சுந்தரமா அசைந்து கொடுக்கும் பேர்வழி?

"இப்படியெல்லாம் விதண்டாவாதம் செஞ்சா மேலே நா சொல்ல என்ன இருக்கு? உங்க இஷ்டப்படியே செய்யுங்க. அப்படியே நெட்டுல எனக்கொரு டிக்கெட்டும் புக் பண்ணிடு. பெரியவனா இங்க வந்து உட்கார்ந்திருப்பதில் பிரயோசனமிருக்கணும். ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் உங்களை வழிநடத்த முடியுமேங்கிற திருப்திக்காகத்தான் கூட வாழ சம்மதிச்சேன். பேசாம ஊரைப் பாக்கவே போயிடுறேன்."

"ரொம்பக் கோபமாயிருக்கீங்க. நான் கிளம்புறேன். ஸ்நேகா இஸ் வெயிட்டிங். இப்போ தயவுசெஞ்சு சாப்பிடுங்க. இந்தப் பேச்சை இப்போதைக்கு விட்டுடுவோம்."

ப்போதைக்காமில்ல இப்போதைக்கு? எப்போது கேட்டாலும் என் பதில் இதுதான்’ நினைத்தபடி அமர்ந்திருந்தவரைக் கலைத்தது இண்டர்காம் அழைப்பு.

'யாராயிருக்கும்?'

அது சுமார் ஐநாறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. ஊருக்குப் போயிடுறேன்னு ஜம்பமாய் சொன்னாரே தவிர மனதுக்குள் நடுக்கம்தான். மனைவி மீனாட்சியின் மறைவுக்குப் பிறகு கிராமத்தில் தனியாக இருக்கிறாரே என டெல்லியின் குளிருக்கு பெங்களூர் இவருக்கு தேவலாமாயிருக்கும் என ஒரே மாதத்தில் மாற்றல் பெற்றுக் கொண்டு, வந்த கையோடு இந்த ஃப்ளாட்டையும் வாங்கி, அவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். மருமகள் ஸ்நேகாவின் கவனிப்பும் அனுசரணையும் இதுநாள் வரை ஊர் நினைப்பைத் தரவே இல்லை. அதுமட்டுமில்லாமல் கிராமத்து வாழ்க்கையை விட இந்த நகர வாழ்வு பிடித்துப் போய் அதில் அவர் ஐக்கியமாகி விட்டதும்தான் உண்மை.

சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், சூப்பர் மார்க்கெட், காண்டீன், உடற்பயிற்சி நிலையம் என எல்லா வசதியும் வளாகத்தினுள்ளே கொண்ட அந்தக் குடியிருப்பில் ‘சீனியர் சிட்டிசன்ஸ்’ என ரொம்ப மரியாதையாய் அழைத்து நடத்தப் பட்டவர்களில் ஒருவராகத் தானும் இருப்பதில் அவருக்கு அதிபெருமிதம். கூடவே நல்ல நட்புகளும் கிடைத்திருந்தன. அவர்களோடு நடைப் பயிற்சிக்கு செல்வது, பழைய கதைகள் பேசுவது, பூங்காவுக்கு விளையாட வரும் குழந்தைகள அடித்துக் கொண்டால் அவர்களுக்குப் பஞ்சாயத்து பண்ணுவது, குடியிருப்பு நிர்வாக விவகாரங்களை இழுத்துப்போட்டு செய்வது என வாழ்க்கை வெகு சுவராஸ்யமாகி விட்டிருந்தது.

'செக்யூரிட்டி கேட்டிலிருந்து இருக்குமோ? இந்த நேரத்தில் நட்புகள் அழைக்காதே!' என அவர் நினைத்தது தப்பாக இருந்தது.

“என்ன சுந்தரம்? பையனும் மருமவப் பொண்ணும் ஆஃபிசுக்குப் போயாச்சா? உனக்கென்ன ப்ரோக்ராம்? எங்கூட ஏர்போர்ட் வரைக்கும் வர்றியா? எம்பேரனை கூப்பிட்டு வரணும்.”

தானிருக்கும் மனநிலையில் எங்காவது போய்வந்தால் தேவலாம் போலிருக்க 'சரி' என்றார். அவசரமாய் சாப்பிட்டுவிட்டு மறக்காமல் காஃபியையும் குடித்து விட்டுக் கிளம்பினார்.

ஹெ
ப்பால் ஃப்ளை ஓவரில் ஏறுகையில் வழக்கமாய் ரசிக்கும் ஏரியையும், நீலவானப் பின்னணியில் நிமிர்ந்து நின்றிருந்த இரட்டை வெள்ளைக் கோபுரங்களையும் ரசிக்கும் மனநிலை அன்று இல்லை. ஏதேதோ சொல்லிக் கொண்ட வந்த மூர்த்தியின் பேச்சிலும் மனது ஒட்டவில்லை.

மூர்த்தி கில்லாடி. என்னமோ சரியில்லை என்று கண்டு பிடித்து விட்டார். சுந்தரத்துக்கும்தான் நண்பர்களை விட்டால் யாருள்ளார்? சொந்தங்களிடம் சொல்லி அழ ஈகோ தடுக்கிறது. சின்னதாய் மூர்த்தி ‘என்னாச்சு சுந்து’ன்னு ஆதுரமாகக் கையை அழுத்திக் கேட்கவும் நெகிழ்ந்து போனார். ஒரு பாட்டம் சொல்லி முடிக்கையில் தழுதழுத்து "நான் எதுக்கு இவங்க கூட இருக்கணும். என் சொல்லுக்கு என்ன மதிப்பிருக்கு" அழுதே விட்டார் சின்னக் குழந்தையைப் போல.

"உன் சொல்லுக்கு மதிப்பில்லேங்கிறதுதான் இப்போ பிரச்சனையா?"

'நிச்சயமா இல்லை' என்பது போல வலதும் இடதுமாய் ஆட்டினார் தலையை மூக்கை உறிஞ்சிபடி.

"வழி நடத்த, வழி நடத்தன்னு ஒப்புக்குச் சொல்றியே தவிர வழிவிடாத நந்தி மாதிரியில்ல நடந்துக்குற?"

"நிறுத்துப்பா ட்ரைவர். அத்தனை தூரமில்லை. இப்படியே ஆட்டோப் பிடிச்சு வீட்டுக்குப் போறேன்."

சுர்ரென தலைக்கு ஏறிய கோபத்தில் கத்தினார் சுந்தரம் கரகரப்பாக.

"அதுக்குள்ள இப்படிக் கோச்சுக்கறியே. சரி சரி. நீ என் பேரனைப் பார்த்ததில்லையே. காட்டுறேன் பாரு."

தன் அலைபேசியின் சேமிப்பிலிருந்த படத்தைத் திறந்து காட்ட அதில் மெல்லியதாக மீசை முளைத்துப் பூனைக் கண்களுடன் பளீரென்ச் சிரித்தான் ஒரு வெளிநாட்டுச் சிறுவன். பதினைந்து வயது இருக்கலாம்.

"இவனா உங்க பேரன்?" குழப்பமாகிக் கேட்டார் சுந்தரம் "கோகுல் கோகுல்னு சொல்வீரே!"

"இவனும் என் பேரன். கோகுல் இல்லை மைக்கேல்."

என்ன சொல்லவெனத் தெரியாமல் சுந்தரம் முழிக்க,

"ஆச்சரியமா இருக்குல்ல. நம்ம ஃப்ரென்டுங்க யாருட்டேயும் இன்னும் சொல்லலை. நேரில வரவிட்டு முன்னே நிறுத்திக்கலாம்னுதான். இவன் என் மகள் வயித்தில பிறக்காத பிள்ளை. ஸ்டூடண்ட்ஸ் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராம்ல முதல்ல பேரன் கோகுல் யு.எஸிலிருந்து இதோ ஜெர்மனியில் இருக்கிற இந்த மைக்கேல் வீட்டுல போய் 3 மாசம் இருந்து அங்குள்ள ஸ்கூலுக்குப் போய்வர, அடுத்த வருஷத்தில அவன் என் மகள் வீட்டுக்கு வந்திருக்கான். கோகுலோட க்ளாஸிலேயே மூணு மாசம் ஒண்ணாப் படிச்சான். எந்த ஜன்மத்துப் பந்தமோ தெரியல. அப்படியே மகளுக்கு ரெண்டாவது பிள்ளையாகிட்டான். இது நடந்து ரெண்டு வருஷமிருக்கும்.

ஜெர்மனி திரும்பிய பிறகும் இந்த அம்மாவுடன் பேசாமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. அவனம்மா ரோஸி என் பெண்ணுக்கு சகோதரியாயிட்டா. மைக்கேல் தும்மினாலும் இருமினாலும் நம்ம நாட்டு வைத்தியம்தான் நடக்குது என் மகளிடம் கேட்டு. எங்களோடையும் அடிக்கடி பேசுவாங்க. இப்போ இந்த தாத்தா பாட்டியோடு சில நாள் இருந்துட்டுப் போகணுமின்னு ஆசைப்பட்டு கிளம்பி வந்துட்டிருக்கான்.

இதெல்லாம் சாத்தியமா இந்த மாதிரியான அன்பெல்லாம் சத்தியமான்னு விதண்டாவாதம் செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க. அவங்களுக்கு பதில் சொல்லிட்டிருக்க விருப்பமில்லை. அதனாலேயே இதை இத்தனை காலமும் உங்களுக்கெல்லாம் சொல்லலை. அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்தான் இல்லையா? இப்பப் பாரு இப்படி திடீர்னு பொறப்பட்டு பேரன் வரும் சந்தோஷத்துல திக்குமுக்காடி, ஏர்போர்ட் வரலைன்னுட்டு அவனுக்கு விதம் விதமா சமைக்க பம்பரமா சுத்திட்டிருக்கா நேத்துவரை கைவலிக்கு கால்வலிக்குன்னுட்டிருந்த என் வூட்டுக்காரி"

பகபகவென மூர்த்தி சிரிக்க தேசிய நெடுஞ்சாலையில் வெகுவேகமாய் வழுக்கிக் கொண்டு வந்த வாகனம் விமான நிலையத்தின் உள்ளிருந்த ஃப்ளைஓவரில் ஏறத் தொடங்கியிருந்தது.

ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.

“எறங்கு சுந்தரம் என்ன யோசன”

வளாகத்தின் வாசலில் வண்டி நின்றிருந்தது.

பேரனை வரவேற்கும் ஆவலில் மூர்த்தி இறங்கி அவசர அவசரமாய் நடக்க ஆரம்பிக்க, 'இந்த மனுஷனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. விடப்படாது இவரை' என்பது போலாக அவர் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தார் சுந்தரம்.

***




நன்றி தினமணிக் கதிர்!

4 ஜூலை 2010

  • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம் இங்கே.
  • கதையின் கடைசி வரிகளைக் கண்முன் கொண்டு வந்திருக்கும் கதிரின் ஓவியருக்கும் நன்றி!

திங்கள், 3 மே, 2010

வயலோடு உறவாடி..-தினமணி கதிர் சிறுகதை


‘வயலோடு விளையாடி வயலோடு உறவாடி
வயலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்…'

ஐபாடிலிருந்து வழிந்த திரைப்பாடலின் வரிகளை மாற்றிப் பாடியவனாய், ஊருக்குப் போனபோது எடுத்த படங்களை பிக்காஸாவில் அப்லோட் செய்து கொண்டிருந்த சுந்தரேசனின் ஹெட்ஃபோன் திடீரெனப் பிடுங்கப்பட்டது.

“கூப்பிடக் கூப்பிட பதில் இல்லாதப்பவே நினைச்சேன் இதக் காதுல மாட்டியிருப்பீங்கன்னு. சாப்பிட வாங்க. சன்டேதான். அதுக்காக இப்படியா?”

மாடிப் படியேறி வந்ததில் மூச்சு வேறு வாங்க, அலுப்பாகத் திட்டிக் கொண்டே பின்னால் வந்து நின்றிருந்த சுமதி கணினித் திரையைப் பார்த்ததும் “வாவ்” என்றாள்.

மைத்துனரின் மனைவி பொங்கல் அன்று இட்டிருந்த பெரிய ரங்கோலி நேரில் பார்த்ததை விட அத்தனை அழகாக விரிந்திருந்தது.

பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அமர உற்சாகமாகி விட்டான் சுந்தரேசன்.

அங்கே அவன் காமிராவும் கையுமாக அலைந்தபோது உறவுகள் மத்தியில் சொல்ல முடியாமல் “என்ன இது சும்மா சும்மா எல்லாத்தையும் க்ளிக்கிட்டு” என சந்தர்ப்பம் பார்த்து காதோரம் கடிந்தவளாயிற்றே. கண்டு கொள்ளாமல் இவன் தொடர்ந்ததில் வருத்தத்துடன் சற்று எரிச்சலும்தான் அவளுக்கு.

இப்போது அவளே சிலாகிக்க, ஆனந்தமாகி ‘இதப் பாரு அதப்பாரு’ என அடுத்தடுத்து படங்களைக் காட்ட ஆரம்பித்தான்.




முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து குளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்..!

பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒன்றொன்றாக விரிந்தன.

“நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு இப்படி சட்டிப் பானை, அடுப்பு கரும்புன்னு எடுத்தீங்களே..! பட்டிக்காட்டான் யானையப் பாத்த மாதிரின்னு யாரும் நினச்சுடக் கூடாதேன்னு இருந்துச்சு!” வில்லங்கமாகச் சிரித்தாள்.

“நாமதான் எதையும் செய்யறதில்லை. உனக்கும் எல்லாம் புது அனுபவம். மொத தடவையா நீ பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கேன்னு சித்தியும் விளக்கேத்துறதில இருந்து எல்லாத்தையும் உன்னையே பண்ண வச்சாங்க! செஞ்சதை நீயும், பார்த்ததை நம்ம பொண்ணுங்களும் நினைவில் வச்சுக்கணுமேன்னுதான் எடுத்தேன் தெரிஞ்சுக்கோ. இங்க பாரு நம்ம இளவரசிங்கள..”

மகள்கள் இருவரும் பாவாடை சட்டையில் தேவதைகளாய்த் தெரிந்தார்கள்.

பால் பொங்கி வருகையில் ‘பொங்கலோ பொங்கல்’ என எல்லோருமாய்க் கூவியதை வீடியோ க்ளிப்பிங்காக எடுத்திருந்தான். பானையில் அச்சுவெல்லக் கட்டிகளைச் சேர்த்த சுமதியின் வளை கரங்களை மட்டுமின்றி, கண்ணும் மூக்கும் அருவியெனப் பொங்க, அடுப்புப் புகையில் இவள் ஓலை வைக்கத் திண்டாடுவதைக் கூட க்ளோஸ் அப்பில் எடுத்து விட்டிருந்தான்.

“ஓ நோ..! இதை உடனே டெலிட் செய்யுங்க” கடுப்பாகிக் கூவினாள்.

“அட இருந்துட்டுப் போட்டும் விடு. நான் ரசிப்பேன்ல. வேணுமான ஆல்பத்திலே ஏத்தல” என்று சிரித்தவன் “சரி, உன் வேலையைக் கவனியேன். இதை முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். இன்னிக்கு விட்டா மறுபடி ஒருவாரம் இழுத்துடும். ‘சித்திரை பொறக்கப் போகுது. பொங்கலுக்கு வந்து போனவன் இன்னும் படங்களை அனுப்பலையே’ன்னு சித்தப்பா பொசுபொசுங்க்கிறாராம். நாமெல்லாம் சேர்ந்து எடுத்துக்கிட்ட படத்தை பெரிசா ப்ளோ அப் செய்து போட்டுக்கணும்மாம் அவருக்கு. தம்பி ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிட்டான்.”

“அரைமணியிலே வந்து சேருங்க.” பெரிய மனதுடன் அனுமதி தந்தவளாய் நகர்ந்தாள் சுமதி.

த்தனை வருடங்களுக்குப் பிறகு வாய்த்த்து இது. பெருநகரமும் கிராமமும் இல்லாத ஊர் அவனுடையது. அவனது பள்ளிப் பருவம் வரை அங்கேதான் வளர்ந்தான் தாத்தா வீட்டில். அப்பாவுடன் பிறந்த தம்பி விவசாயததை பார்த்துக் கொள்ள அவர் மட்டும் படித்து வங்கியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தார். ஊர் ஊராக மாற்றலாகும் உத்தியோகம் படிப்பு கெட்டு விடக் கூடாது என ஒரே மகனென்றாலும் இவனை தன் பெற்றோரிடமே விட்டு விட்டார்.

சித்தப்பாவின் பிள்ளைகளோடு, கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு அத்தைகளும் ‘டவுணு’ பள்ளிக்கூடத்திலதான் படிப்பு நல்லாயிருக்கும் என ஏற்கனவே தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருந்தார்கள். அந்த பெரிய மழலைப் பட்டாளத்தில் இவனும் ஐக்கியமாகி, கூடி வாழ்ந்த சொந்தங்களுடன் எந்தக் குறையுமில்லாமல்தான் வளர்ந்தான்.

அத்தைகள் அடிக்கடி தம் பிள்ளைகளை வந்து பார்த்துப்போக, தாய் தகப்பனை விட்டு ரொம்பத் தள்ளி வந்த பிள்ளை என இவன் மேல் எல்லோருக்கும் எப்போதும் தனி அக்கறை கரிசனம்தான். ஆனால் அவர்களை விடவும் ஒருபடி மேலாகவே இயற்கை தன்னை அரவணைத்துக் கொண்டதாகவேத் தோன்றும்.

தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.

அறுவடையாகி வந்த அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள் மேலே ஏறி அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். வீட்டுப் பாடம் செய்வார்கள். பெரிய பெரிய அடுப்புகளில் மெகா சைஸ் உருளிகளில் நெல் அவிக்கும் அழகை வேடிக்கைப் பார்ப்பார்கள். மரத்துடுப்பைத் தாமும் பிடித்து கிண்டிக் கொடுப்பார்கள் ரொம்பச் சமர்த்தாய். பின்பக்க முற்றத்தில் நீண்ட நீண்ட பிறை நிலா வடிவில் அவித்த நெல்லை பண்ணைப் பெண்கள் அழகாய்ப் பரத்திக் காய வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகரக் காத்திருப்பார்கள்.

நெல் வெதுவெதுப்பாகி விட்டதா எனக் கவனமாய்க் காலாலே கிளறி உறுதி செய்த பிறகு அதில் உருண்டு புரண்டு சிந்திச் சிதறி மகிழ்வார்கள் யாராவது வந்து பெரிதாக அதட்டல் போடும்வரை. நெல் முழுதாகக் காய நாலு நாள் பிடிக்கும். கூத்தும் அதுவரை தொடரும். ஒருமுறை தாத்தா பார்த்து விட்டார்.

“டேய் டேய் பசங்களா என்ன இது. விளையாட்டுக்குக் கூட நெல்லை இப்படியெல்லாம் சிந்தியடிக்கப் படாதுடா” என எல்லோரையும் இழுத்துப் பிடித்து வரிசையாக அமர்த்தி விட்டார். இவர்களது எந்தக் குறும்புகளையும் கண்டு கொள்ளாத அவர் எதையாவது வலியுறுத்திச் சொல்லுகையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாகி விடுவார்கள்.

அப்படித்தான் அன்றும். எப்படி உழவும் நெல்லும் சோறு தரும் கடவுள் என அவர் விவரிக்க விவரிக்க மனதில் ஒரு பயபக்தி ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து வந்த பொங்கலின் போது, பண்ணை ஆட்களுக்கு கொடுக்கின்ற பொங்கல்படி புதுத்துணி எல்லாம் தானமோ தர்மமோ அல்ல, நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை எனப் புதிய கோணத்தில் பார்க்க வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் ‘நாட்கதிர்’ என்றொரு வழிபாடு இருந்தது. அறுவடையானதும் பசுமை மாறாத நெற்கதிர் கட்டு ஒன்று வயலில் இருந்து வீடு தேடி வரும் அருள் பாலிக்க. முற்றத்தில் கோலமிட்ட மணை ஒன்றில் அதை நேராக நிறுத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து சூடம் காட்டிக் கும்பிடுவார்கள்.

பின்னர் தாத்தா அனைவர் கையிலும் ஒரு கதிர் எடுத்துக் கொடுப்பார். நெற்குதிர் அறையில் சுண்ணாம்புக் கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட புது மண் பானை காத்திருக்கும். முதல் கதிரை தாத்தா வைக்க, மற்ற பெரியவர்கள் தொடர,‘கூகூஊஊ’ என ரயில் வண்டி மாதிரி ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து வந்த குழந்தைகளும் விளையாட்டு போலவேதான் அதில் கதிர்களைச் சேர்ப்பார்கள்.

அன்றைக்கும் நெல்மூட்டைகளுடன் தாம்பூல மரியாதை உண்டு கதிரை எடுத்துவந்த பண்ணையாட்களுக்கு. வடை பாயாசத்துடன் சாப்பாடும். புதுக்கதிரினைக் கசக்கியெடுத்து வரும் அரிசிமணிகளைச் சேர்த்துதான் பாயாசமே செய்வார்கள். ஒரு சிறிய கொத்தினை பூஜை அறையிலும் தொங்க விடுவார்கள். அந்த ஐதீகங்களின் அர்த்தமும் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. செய்யும் தொழில் தெய்வம் என்பதும் ஆழப் பதிந்தது.

ந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடுவது நமக்கெல்லாம் பெருமை என உணர்த்தியபடியே இருப்பார் தாத்தா. “‘சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம்’ எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் அய்யன்” என சிலாகிப்பார். “‘உழந்தும் உழவே தலை’ எந்தச் சிரமம் வந்தாலும் நம்ம குடும்பம் உழவைத் தொடரணுமடா” என்பார்.

கேட்டு கேட்டு வளர்ந்து ப்ளஸ் டூ வரை வந்து விட்டிருந்தவன் அரும்பு மீசையைத் தடவியபடி ஒருமுறை திருப்பிக் கேட்டு விட்டான்.

“அப்போ ஏன் தாத்தா அப்பாவை மட்டும் வேற வேலைக்கு அனுப்பிட்ட?”

கேள்வியின் கூர்மையில் தாத்தா சற்று திணறிப் போன மாதிரி இருந்தது. ஆனால் என்றைக்காவது இப்படிக் கேட்பான் என பதிலைத் தயாராகவே வைத்திருந்த மாதிரியும் இருந்தது.

“நாந்தான் படிக்க முடியாது போச்சு. படிப்பு நல்லா வந்ததாலே புள்ளைங்கள்ல ஒருத்தராவது உத்தியோகம் பாக்க பட்டணம் போகட்டும்னு அனுப்பிச்சேன். காடுகரைய பாத்துக்க சித்தப்ப்பா போதும்னுதான்.”

“அப்பாவுக்கு பதிலா நான் விவசாயத்தைப் பண்ணட்டுமா தாத்தா? படிச்சு முடிச்சுட்டே செய்யறேன்”

“வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக. அவனை அருகில் அமர வைத்துக் கையைப் பிடித்துக் கொண்டார்.

“ஒன் தம்பிதான் இருக்கானே. ஒஞ்சித்தப்பா அவனை விவசாயத்துக்கே படிக்க வைக்கப் போறானாம். அவன் பார்த்துப்பான் இந்த நெலம் நீச்சையெல்லாம். ஒன்னைய என்ஜினீயராக்கணும்னு கனவு கண்டுட்டிருக்கான் ஒங்கப்பா. நீயும் படிப்புல அவனப் போலவே புலியா இருக்கே. அவன் பேச்சைக் கேட்டு நட. பெரிய உத்தியோகத்துக்கு போ.”

நெருடலாக இருந்தது அவர் அப்படிப் பேசியது.

“அப்புறம் நாங்க சரியா வளர்கலைன்னு ஒரு சொல் வந்திடப்பிடாதுப்பா” கெஞ்சியபோது ஏமாற்றமாக இருந்தாலும் ஏதோ புரிந்தது.

டுத்த வருடம் கல்லூரியில் சேர ஊரைப் பிரிந்தவன்தான். பாட்டி இருந்தவரை அப்பா வேலைக்கு லீவு போட்டு வருடாவருடம் எல்லா பண்டிகைகளுக்கும் அழைத்துச் சென்றார். பாட்டி போனதும் தாத்தாவுக்காக பொங்கலுக்கு மட்டுமாவது போவது கட்டாயமாக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் அதுவும் நின்று போனது.

இவனும் படித்து முடித்து கணினித் துறையில் வேலையாகி, பட்டணத்துப் பெண்ணே மனைவியாய் வர அசுர வேக இயந்திர வாழ்வில் தொலைத்த பலவற்றில் ஒன்றாகிப் போனது பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளும். எப்போதோ ஊர் விட்டு வந்துவிட்ட அம்மாவும் இவற்றில் அத்தனை ஆர்வம் காட்டாதாது இன்னும் வசதியாகப் போயிற்று சுமதிக்கு.

மற்ற பண்டிகைகள் பற்றி அத்தனை உறுத்தல் இல்லாவிட்டாலும் தைப்பொங்கலை குக்கரில் பொங்கி பால்கனியில் சூரியனுக்குப் படையல் வைத்து வணங்கி முடிப்பது மிகுந்த வருத்தம் தரும் இவனுக்கு. உழவுக் குடும்பத்தில் பிறந்தவன் கொண்டாடும் திருநாள் இப்படி சம்பிரதாயமாக முடிந்து போகிறதே என்றிருக்கும்.

அப்பா தன் பாகத்துக்கு வந்த வயல்வெளி அத்தனையையும் கிரயம் செய்து சென்னையில் இந்த வீட்டை வாங்கிப் போட்டுக் காலமாகியும் விட்டிருந்தார் திடீர் மாரடைப்பில். ஊரில் மிச்சமாகி இருந்தது ஐம்பது செண்ட் அளவிலான தோட்டம் மட்டுமே.

இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்ட சித்தப்பாவுக்கும் வயதாகி விட விவசாயத்தில் முன் போல ஈடுபட இயலவில்லை. அதை நம்பி மட்டும் பிழைக்க முடியாதென மகன் குமரேசன் நான்கு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டான். நன்றாக அவை ஓடவே டிரான்ஸ்போர்ட் பிஸினஸில் கவனம் செல்ல ஆரம்பித்து விட்டது. இப்படியாக வயல்கள் எல்லாம் கிரயமாகி கார்களாக வேன்களாக மாற ஆரம்பித்தன. சித்தப்பாவால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் தன் ஆத்ம திருப்திக்காக என்று சொல்லி சில தோட்டங்களை வசப்படுத்திக் கொண்டு அத்தோடு இவனுடையதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

தனக்கும் வயதாகிக் கொண்டே வருவதால் ‘குடும்பத்தோடு பொங்கலுக்கு வந்து போப்பா’ என்ற அவரது அன்புக்குக் கட்டுப்பட்டுதான் இந்தமுறை அங்கு சென்றிருந்தான். அப்போதுதான் அவனுக்கான தோட்டத்தைக் காட்டினார். அதில் வாழை பயிரிட்டிருந்தார். சுற்றிலும் சுமார் பத்து தென்னைகளும் இருந்தன. “நல்லா வச்சிருக்கீங்க சித்தப்பா” என அவர் கையைப் பிடித்து தழுதழுத்து விட்டான்.

மாதாமாதம் அவர் அனுப்புகிற பணத்தை வாங்கிக் கொள்ளுகையில் ஏற்படாத குற்ற உணர்வு பச்சை பசேல் என அவனுடைய தோட்டத்தைப் பராமரித்திருந்த அழகைப் பார்த்ததும் ஏற்பட்டது. வருடக் கணக்கில் எட்டிப் பார்க்காதது எத்தனை பெரிய தப்பென வருத்தியது.

சித்தப்பா அதை பெரிது பண்ணிக் கொள்ளவில்லை.

“எனக்கென்ன சிரமம்? சொல்லப் போனா சந்தோசம்தான். உன் தம்பியானா எல்லா வயலையும் வித்து வண்டியாக்கிட்டான். மனசு வலிச்சாலும் அவன் வாழ்க்கைக்கு எது வேணுமின்னு அவந்தானே தீர்மானிக்கணுமின்னு விட்டுட்டேன். எப்படியொ நல்லாயிருந்தா சரிதான். கிராமத்தில நாம நெல்லு விளைச்சல் பாத்த பூமியெல்லாமே கைய விட்டுப் போயாச்சு. என் ஆயுசு மட்டும் மிச்சமிருக்கிற தோட்டங்களையாவது விக்கப்படாதுன்னு சொல்லி பயிர் பண்ணிட்டிருக்கேன்” என்றபடியே அடுத்து இருந்த அவரது தோட்டத்துக்கும் அழைத்துச் சென்றார்.

கத்திரி, வெண்டை, புடலை, தக்காளி எல்லாமும் பயிரிட்டிருந்தார். தள்ளாத வயதிலும் தினசரி இரண்டு மூன்று மணி நேரங்களாவது அங்கு செலவிடுகிறார் என்பது பேச்சிலே தெரிந்தது. இளசாய் வெண்டைக்காய்களைப் பறித்து சாப்பிடத் தந்தார். “சின்னதில ரொம்ப இஷ்டமா சாப்பிடுவியே. கணக்கு நல்லா வரும்னு” சிரித்தார். “இதுகளை சாப்பிட்டு சாப்பிட்டே ஒனக்கு கணக்கு நல்லா வந்து படிச்சு பெரியாளாகி உழவை விட்டு ஒதுங்க வேண்டியதாப் போச்சு. ஊரோடு இருக்கேன் உழவைப் பாக்கேன்னு அக்ரி படிச்ச ஒன் தம்பியும் இப்போ வேற பொழப்பைத் தேடிக்கிட்டான்” என்றார் விரக்தியாக.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை அவனுக்கு.

ப்பாவும் அவனும் விவசாயத்திலிருந்து வெளியேறி, விருப்பப்பட்டோ படாமலோ 'திறமைக்கேற்ற' என்ற அடையாளத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டது நியாயமெனில் தம்பி செய்ததை அநியாயமாக நினைக்க எப்படி இயலும்? தோட்டத்தை விற்காமல் சித்தப்பாவின் உணர்வுகளுக்கு இந்த அளவுக்காவது மதிப்புக் கொடுத்திருக்கிறானே என்றுதான் சமாதானமாக வேண்டியிருந்தது. அவன் சிரமங்கள் அவனுக்கு.

அந்த சிறு நகரம் பட்டணத்துக்கு இணையான வசதிகளுடன் வளர ஆரம்பிக்க வயல் வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகிப் போனதாம். உடம்பை வருத்தாத வேறு வேலை வாய்ப்புகள் பெருகி விட்டிருந்ததை முக்கிய காரணமாக சித்தப்பா முன் நிறுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்போது எல்லோருமே பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள். மீடியாக்களின் தாக்கத்தில் மொபைல்ஃபோன், டிவி, வாகனம் என அவரவருக்கு இயன்ற அளவில் வாழ்வாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மேல்வர்க்கம் அனுபவிக்கும் வசதிகளை அவர்களும் அனுபவிக்க நினைப்பதில் தவறேதுமில்லையே. படிப்பறிவு இல்லாது போனாலும் அவர்கள் தரும் உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊதியத்தை உயர்த்துவதே சரியான தீர்வாக அமையும்.

தாத்தாவாக இருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பான். ஆனால் அவரிடம் வாதம் வளர்த்து மனதை வருத்த விரும்பவில்லை. காரணங்கள் எதுவாயினும் உழவின் மீதான நாட்டம் குறைந்து வருவதும், காப்பாற்றப்பட வேண்டிய ஒன்றாக அது மாறி வருவதும் உண்மைதானே. சொந்த நிலத்தில் உழுது வந்த ஏழை விவசாயிகளும் அரசு என்னதான் சலுகைகள் தர முன் வந்தாலும் எப்போதடா உழவிலிருந்து கழன்று கொள்ளலாமென்கிற மனநிலையிலேதான் இருப்பது புரிந்தது.

ஊரிலே பரிச்சயமான பல இடங்களில் முன்பிருந்த பச்சை வயலெல்லாம் வணிக வளாகங்களாகவும் பெரிய மருத்துவமனைகளாகவும் பள்ளிக் கூடங்களாகவும் அல்லவா மாறி விட்டிருந்தன! பட்டணத்தில்தான் அநியாயம் என நினைத்தால் பெருகி விட்ட போக்குவரத்துக்கென, சாலைகளை விஸ்தரிக்கப் போட்டுத் தள்ளியிருந்தார்கள் பலநூறு வயதான விருட்சங்களை சகட்டுமேனிக்கு. ஏரி குளங்களைத் தூர் வாருவதில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் அரசும் தேவையென்று வருகையில் நீர்வளத்தில் கைவைக்கத் தயங்கவில்லையே? ஊரின் பெரிய குளத்தை மூடிப் பேருந்து நிலையமாக்கி விட்டிருந்தார்கள். பழைய நிலையத்தில் நெருக்கடி அதிகமாகி விட்டதாம்.

வளரும் மக்கள் தொகைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இவையெல்லாம் அவசியம், வேறு வழியுமில்லை எனக் கருதும் நாடும் மனிதரும் மிக வசதியாக இயற்கை அன்னையின் வருத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் மறந்து விட்டார்கள். வாழும் வரை தத்தமக்கான வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாரிசுகளுக்குச் சொத்து பத்தைச் சேர்ப்பது ஒன்றுதான் குறிக்கோளாகத் தெரிந்தது. வெட்டிச் சாய்த்த மரங்களின் எண்ணிக்கைக்கு இணையாக வீட்டுக்கு ரெண்டு மரமாவது வைத்து வளர்த்து இருந்திருப்பார்களேயானால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! யார் சொல்லி யார் கேட்பது? ‘பூமியாம் வெப்பமடையுதாம் என்னமோ பூச்சாண்டி காட்டுறாங்க’ என்கிற அளவிலேதான் இருந்தது படித்தவர்களின் பார்வையும் கூட.

இத்தனைக்கும் சென்னை போல் நாற்பதுக்கு அறுபது ஒரு கிரவுண்ட் என்றில்லாமல் எல்லா வீடுகளும் செண்ட் கணக்கில் அமைந்தவை. காம்பவுண்டுக்குள்ளே வீட்டைச் சுற்றித் தாராளமாய்க் கிடைத்திருந்த இடத்தை எப்படிச் சோலையாக்கி வைக்கலாம்? கொசுத் தொல்லை, பராமரிக்க கஷ்டம் என்னன்னவோ சொல்லி மண்ணை மூடி சிமெண்ட் தளமாக்கி விட்டிருந்தார்கள் பலரும். வந்த நாலு நாளில் சென்ற நண்பர் உறவினர் வீடுகளில் கவனித்ததுதான். இப்படிச் செய்தால் பிறகு நிலத்தடி நீர் வறளாமல் என்ன செய்யும்?

நல்லவேளையாக அடுக்குமாடிக் குடியிருப்பு மோகம் மட்டும் அங்கு வளரவில்லை. அந்த ஊரில் எலி வளையானாலும் தனி வளை, என் காட்டுக்கு நானே ராசா என வாழ்ந்து பழக்கப் பட்டிருந்தார்கள் மேல் தட்டினர். ‘வளவு’ எனும் ஒண்டுக் குடித்தனமுறையில் வாழ்ந்து அனுபவப்பட்ட நடுத்தர வர்க்கமும் கூட இது போன்ற குடியிருப்புகளின் பராமரிப்புக்கான சட்டதிட்டங்கள், பொதுச் செலவுகளைச் சீரணிக்க முடியாமல் அந்தக் கலாச்சாரத்தையே வெறுப்பதாகக் கேள்வி. அதுவும் நல்லதாயிற்றோ? இல்லையெனில் இருக்கும் கொஞ்சநஞ்ச விளைநிலங்களையும் இந்நேரத்துக்கு ரியல் எஸ்டேட்காரர்கள் சுற்றி வளைத்து வேட்டு வைத்திருப்பார்கள்.

ழந்தும் உழவே தலை என்றிருக்கும் சித்தப்பாவின் வைராக்கியத்தில் பத்து சதவிகிதமாவது வேண்டும் தனக்கு என்கிற ஆசை வந்திருந்தது இப்போது. நேரடியாகத்தான் இறங்க முடியவில்லை. போகட்டும். ஆனால் யார் என்ன ஆசை காட்டினாலும் குத்தகைக்கு விட்டாவது ஆயுளுக்கும் தனது தோட்டத்தை விளைநிலமாகவே தக்க வைத்துக் கொள்வது ஒன்றுதான் ஆளாக்கிய தாத்தாவுக்கும், பூமித் தாய்க்கும் செய்யக் கூடிய மரியாதையாக இருக்கும் என உறுதி எடுத்துக் கொண்ட போது மனது கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே போகாமல், பொங்கலைக் கொண்டாடிக் களித்து மறுநாள் விடைபெறுகையில், வளர்த்த பாசம் கண்ணில் வழிய விடை கொடுக்கத் திணறித்தான் போனார்கள் சித்தியும் சித்தப்பாவும். அம்மாவின் முன் அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாதவனாய் ‘அடிக்கடி வந்து போறேன் சித்தப்பா.தோட்டத்தையும் பார்த்தாப்ல ஆச்சு’ என்றான்.

ம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்கப்பா”

நினைவுகளிலிருந்து மீண்டு, தேர்ந்தெடுத்த படங்களை ஆல்பத்தில் ஏற்றி முடிக்கையில், கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தாள் மகள்.

“இதோ ஆச்சுடா ஒரே நிமிஷம்” ஷேர் ஆல்பம் என்பதைக் க்ளிக் செய்து தம்பியின் மெயில ஐடியை தட்டச்சிட ஆரம்பித்தான். ‘கு ம ரே சன் அட் ஜிமெயில் டாட் காம்’ எனக் கூடவே நிறுத்தி வாசித்தவள், இவன் அனுப்பி விட்டுக் கணினியை மூடியதும், "அப்பா சம்மர் லீவு வரப் போகுது. சின்ன தாத்தா வீட்டுக்குப் போலாம்னு நான் சொன்னா பாட்டியும் அம்மாவும் இப்பதானே போயிட்டு வந்தோம். அடுத்த வருஷம் யோசிக்கலாம் அப்படிங்கிறாங்கப்பா” என்றாள்.


“யோசிப்பாங்களாமா? ம்ம்! நான் அழைச்சுட்டுப் போறேண்டா செல்லம். உன் ஆசையெல்லாம் அவங்களுக்குப் புரியாது.”

ஆதங்கமாய் சொன்னவனைப் பார்த்து ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஆதுரமாய்த் தலையசைத்தன ‘எங்களுக்குப் புரியும்’ என்பது போல், வீட்டைக் கட்டும்போது அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஹாலின் அளவு குறைந்தாலும் பரவாயில்லை எனப் பத்துக்குப் பதினைந்தடி அளவில் அமைத்திருந்த சின்ன தோட்டத்தில் அவன் நட்டு வைத்து, இப்போது நெடுநெடுவென வளர்த்து விட்டிருந்த நெல்லி மரமும், காய்த்துக் குலுங்கி நின்றிருந்த தென்னை மரமும்.
***

ஓவியம்: நன்றி தினமணிக் கதிர்
புகைப்படங்கள்: நான் எடுத்தவை








  • 2 மே 2010 தினமணிக் கதிர் பத்திரிகையில் வெளியான சிறுகதை. தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம் இங்கே.
  • இந்த நெடுங்கதைக்கான சிறுபொறியை நான் பெற்றது உழவனின் இந்த ஜோதியில் இருந்தே. நன்றி உழவன்! “நெற்குவியல்” எனும் தன் வலைப்பூவின் முகப்பில் ‘உழத் தவறியவன்’ என்றே தன்னை ஆதங்கத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார் இவர்.
  • புதுகைத் தென்றலின் அழைப்புக்காக இக்கதையை பேரண்ட்ஸ் க்ளப்பின் 'குறள் கதைகள்' பெட்டகத்தில் சேர்த்திட விரும்புகிறேன்.
  • மரங்களைக் காக்கப் பதிவிடுமாறு அன்புடன் அழைத்த அமைதிச் சாரலுக்கும் இக்கதையையே பதிலாகத் தருகிறேன். இதையே அழைப்பெனக் கொண்டு விரும்பவர் தொடரவும் கேட்டுக் கொள்கிறேன்.
  • வலைப்பூ தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைகின்றன. கடந்த வாரம் இருநூறாவது நபராக இணைந்து, தொடருபவர் எண்ணிக்கையை இரட்டை சதம் ஆக்கிய ‘அமைதி விரும்பி’க்கும், இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஊக்கமளித்து உடன் வரும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin