வியாழன், 31 மே, 2012

கோடை விடுமுறையும் குழந்தைகளும்..

கோடை என்றாலே மின் தடையும் அக்னி நட்சத்திரமும் அனல் வெயிலுமே மனதில் வந்து மருள வைக்க, குழந்தைகளுக்கோ அதுவே மான் குட்டிகளாகத் துள்ளித் திரியக் கிடைத்த சுகமான பருவகாலமாக இருக்கிறது.

பள்ளி நாட்களில் பரபரப்பாக புத்தக மூட்டைகளுடன் கிளம்பிச் சென்று மாலையில் வாடிவதங்கிய மலர்களாகத் திரும்பும் அரும்புகளின் முகங்களில் இந்த இரண்டு மாத விடுமுறைதான் எத்தனை குளிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகின்றன!!!

#1 பூவொன்று கண்டேன்..



#2 இரட்டைச் சடை நிலவுகள்


#3 கூல்.../ CoooooooooooooL


தொலைக்காட்சியிலும் கணினியிலும் தொலைந்து போயிடாமல் ஒன்று கூடி ஓடியாடி மகிழும் குழந்தைகளின் சத்தம் குயில்களின் கூவலாக ஒவ்வொரு குடியிருப்பிலிருந்தும் ஒலித்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் எப்போது சூரியன் கடையை விரிப்பார் எனத் தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டிடங்களுக்கு நடுவே நிழலான இடமாகப் பார்த்து அடிக்கடி ஜாகையை மாற்றியும் கொள்கிறார்கள்.

#4 ஆடுவோமே..


சின்ன சின்னக் குழுக்களாக தென்படும் இவர்கள் சிலநேரங்களில் கட்டிடத்தின் அகன்ற படிக்கட்டுகளில் மொத்தமாக முப்பது நாற்பது பேராகக் கொலுப்பொம்மைகளைப் போல் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். வாட்டர் பாட்டில்கள், பந்துகள், மட்டைகள், பொம்மைகள் போன்றனவும் இறைந்து கிடக்கப் போவார் வருவோருக்கு ஒரு ஒற்றையடிப் பாதை விட்டிருப்பார்கள்:)!

நம்ம காலமும் நினைவுக்கு வருகிறது. கூட்டுக் குடும்பமாக இதே போல நாளெல்லாம் ஆட்டம் போட்ட விடுமுறை நாட்கள். கேரம், சைனீஸ் செக்கர்ஸ், தாயம், சதுரங்கம், மோனோபொலி, ட்ரேட், ஹாக்கி, கில்லி(அண்ணன்களுக்கு நிகரா ஆடுவோமே), ஷட்டில், கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, கலர் கலர் வாட் கலர்.. இன்னும் இருக்கு இப்படி நிறைய:)!
[பெயர் மறந்து விட்டது. பலகை எங்கும் சிறிய ஆணிகளால் அரைவட்டத்தில் அமைந்த குழிகள் பாயின்டுகளுடன் காத்திருக்கும். ஓரத்திலிருக்கும் பாதை வழியே கோலிக் குண்டை பலமாகச் சுண்டி விட்டு குழிகளில் விழ வைக்க வேண்டும். அதிக பாயிண்ட் தரும் குழிகளில் விழ வைப்பதில் இருக்கிறது சாமர்த்தியம். படம்: தந்தை எடுத்தது.]


#5 வல்லவனுக்கு..


கூட்டுக் குடும்ப வழக்கங்கள் மறைந்து விட்ட இந்நாளில் குடியிருப்புகள் ஓரளவு குழந்தைகளுக்கு அந்தச் சூழலை நல்கித் தாமாகவே விட்டுக் கொடுத்தல், பகிருதல் போன்ற நல்ல பழக்கங்களைக் கற்றிட வழிவகுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

இதோ முடிகிறது கோடை விடுமுறை. சர் சர்ரென வந்து நிற்கிற பள்ளி வேன்கள் அள்ளிக் கொண்டு போய் விடும் குழந்தைகளை. இனி ஆளற்ற நீச்சல் குளத்தில் தனியாக நீந்திக் கொண்டிருக்கும் சூரியன். பூங்காவின் பேரமைதி ஏற்படுத்துகிற வெறுமையில் நடுங்கிக் காற்றிடம் கெஞ்சக் கூடும் ஊஞ்சல்கள் கொஞ்சம் ஆட்டிவிடச் சொல்லி. குழந்தைகளின் பெருங்கூச்சலுக்குத் தொடக்கத்தில் பதறிப் படபடத்த புறாக்கள் இப்போது எங்கே அவர்கள் எனக் குழப்பத்துடன் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வரக் கூடும்.

பயணங்கள், விருந்தினர் வருகை, ருசித்து ரசித்துச் சாப்பாடு, நல்ல ஆட்டம், நல்ல தூக்கம் எல்லாம் தந்த நீண்ட விடுமுறைக்கு இன்னும் முழுதாக ஓராண்டு காத்திருக்க வேண்டுமே என்றொரு ஒரு மெல்லிய சோகத்துடனே ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டு. ஆனாலும் புதிய வகுப்பறை, புதிய புத்தகங்கள், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் எனப் பொங்கும் உற்சாகத்துடன் விரைவில் சூழலுடன் பொருந்திப் போய் விடுவார்கள் குழந்தைகள்! வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!

#6 சாதிக்கப் பிறந்தவள்

***

திங்கள், 28 மே, 2012

குங்குமம் தோழியில்.. - புதிய அத்தியாயம்

மார்ச் மாதத்திலிருந்து மகளிருடன் நட்பு பாராட்ட மலர்ந்து வருகிற குங்குமம் தோழியின் ஜூன் இதழில், களிப்பூக்களின் ஒரு பூவாக என் ‘புதிய அத்தியாயம்’ கவிதை!

நன்றி குங்குமம் தோழி!
***

சனி, 26 மே, 2012

கேமரா குடித்த கொல்லிமலைத் தேநீர்... - ஐயப்பன் கிருஷ்ணன் படங்களுடன் கல்கியில் நேர்காணல்

3 ஜூன் 2012 கல்கி இதழின் ஃபோட்டோ கேலரியில்..



மறக்க முடியாத நாமக்கல் சிறுவன்


நன்றி கல்கி!
வாழ்த்துகள் ஐயப்பன் கிருஷ்ணன்!

மேலும் இவரது படங்களை கண்டு ரசிக்க இங்கே செல்லுங்கள்: http://www.flickr.com/photos/iyappan/
***

புதன், 23 மே, 2012

பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்

#1 ‘பிரம்மக் கமலம்’
ண்டுக்கொரு முறை இரவில் மட்டுமே பூக்கிற, பூத்ததும் ஒருசில மணிகளில் மூடிக் கொண்டு விடுகிற அதிசய மலர்களான பிரம்மக் கமலங்கள் அபூர்வமாகவே ஒரு செடியில் பல மொட்டுகள் விட்டு விரிந்து மலரும். அப்படியான அதிசயம் சென்ற ஞாயிறு, அமாவாசையும் சூரியக் கிரகணமும் சேர்ந்த நாளின் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்கு கீழ்தளத்தில் வசிப்பவர்கள் வீட்டில் நிகழ்ந்தது.

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் இம்மலரின் தாவரயியல் பெயர் Epiphyllum oxypetalum. இமய மலை, வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சைனாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இமய மலைப் பிரதேசங்களில் சுமார் 4500 மீட்டர் உயரத்தில் காணக் கிடைக்கின்றன.

உத்தர்காண்டின் மாநில மலராக இருப்பதுடன், 1982 ஆம் ஆண்டு இந்திய தபால் துறையால் ‘ஹிமாலயன் மலர்கள்’ வரிசையில் தபால்தலையாகவும் வெளியிடப் பட்டிருக்கிறது பிரம்மக் கமலம்.
#2 தெய்வீக மலராகக் கொண்டாடப் படும் இவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. வளைந்த தடிமனான இதன் தண்டுகள் வெட்டுக் காயங்களுக்கு மருந்தாகிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் தடைபடுகிற cerebral ischemia மற்றும் பக்கவாதத்தைக் குணமாக்கவும் பயனாகிறது.திபெத்தியர் இதை மூலிகையாகக் கருதுகிறார்கள்.

சிலருக்கு வளர்க்க ஆரம்பித்து இரண்டு, மூன்று ஆண்டுகளிலே பூப்பது உண்டு. தோழி லதா இந்தச் செடியை ஐந்து ஆண்டுகளாகப் பராமரித்து வளர்த்து வருகிறார். முதன் முறையாக சென்ற வருடம் ஒரே ஒரு மலர் பூத்த போது அந்த இரவிலும் குடியிருப்பிலிருந்த பலரும் கூடி இரசித்துச் சென்றனர். இந்த ஆண்டோ பத்து மொட்டுகள் விடவும் அவரது பரவசத்துக்கு அளவேயில்லை.
#3

முதலில் சிறிதாக இருக்கும் மொட்டுகள் பூக்கவிருக்கும் நாளில் இப்படிப் பெரிதாகி விடுகின்றன.
#4

இரவு ஒன்பது மணி அளவில் இப்படிப் பாதியாக மலர்ந்து, பின் நள்ளிரவை நெருங்கும் சமயத்தில் முற்றிலுமாக முகிழ்ந்து மிக இரம்மியமான மணத்தையும் எழுப்பியன.
#5 இரவில் வேறு விளக்கு வெளிச்சம் இல்லாத சூழலில் ஃப்ளாஷ் உபயோகித்தே படங்களை எடுக்க வேண்டியதாயிற்று.

#6 பூத்த பத்து மலர்களையும் பூரிப்புடனும் பார்த்து ரசிக்கிறார் லதா.அபூர்வமாய் மலருவதால் மட்டுமின்றி, பூக்கும் வேளையில் அதன் அருகிலிருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்படுவதாகவும் அதிர்ஷ்டம் ஏற்படுமென்றும் ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருவதால் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது நாடெங்கிலுமே. விரும்பியவர்கள் இரசித்து படமெடுத்துச் சென்றபின் செடியில் வாடவிட வேண்டாமென அவற்றைக் கொய்து பூஜைக்கு வைத்து விட்டார் லதா.

தே நாளில் பெங்களூரின் வேறு சில இடங்களிலும் பிரம்மக் கமலங்கள் பூத்த விவரம் பின்னர் அறிய வந்த போது அமாவாசைக்கும் இதற்கும் தொடர்புண்டோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தெரிந்தவர் சொல்லலாம். இளவேனிற் காலத்திலேயே பூக்கும் என அறியப்பட்டாலும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பூக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அபூர்வ நிகழ்வின் அழகிய தருணங்களைக் காண அழைத்த தோழிக்கு நன்றி. அவற்றை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி:)!
***

திங்கள், 21 மே, 2012

தூறல்: 5 - கல்கி சிறுகதைப் போட்டி; IRCTC

ல்கி 2012 சிறுகதைப் போட்டி அறிவிப்பைத் தவறவிட்டவர் வசதிக்காக இங்கே:கடைசித் தேதி 15 ஜூன் 2012. ஒவ்வொரு வாரமும் கல்கியில் வெளியாகிக் கொண்டிருக்கிற அறிவிப்புடன் இருக்கும் கூப்பனை நிரப்பிக் கதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும் எனும் புதிய விதிமுறையைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
***


IRCTC-யில் தத்கல் பயணச்சீட்டுக்களுக்கு முன்பதிவு செய்யும் நேரத்தை இப்போது 24 மணிநேரமாக்கி விட்டது அனைவரும் அறிந்ததே. அவசரப் பயணங்களுக்கு அதிகாலை 8 மணிக்கு தயாராகக் கணினி முன் காத்திருந்து மடமடவெனப் படிவத்தை நிரப்பி நிமிரும் முன் மின்னல் வேகத்தில் வேறு யாரேனும் வாங்கி விட்டிருக்க ஏமாந்த அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். கை கொடுக்க வந்திருக்கிறது ஐஆர்சிடிசியின் புதிய வசதியான மேஜிக் ஆட்டோ ஃபில். தத்கலுக்கு மட்டுமின்றி எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டுமானாலும் உபயோகமாகும். இணைய குழுமத்தில் உதயன் பகிர்ந்திருந்த தகவலைப் பார்த்து அறிய வந்தேன். உங்களுக்கும் பயனாகலாம்.

மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இப்பக்கத்தில் காணப்படும் படிவத்தை ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் செய்வது போன்றே பெயர், வயது உள்ளிட்ட விபரங்களையும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே நிரப்பி தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்தபின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும். அதை அப்படியே டிராக் செய்து, புக் மார்க் டூல் பாரில் நிறுத்தி விடுங்கள். முன்பதிவு செய்யும் போது விவரங்கள் நிரப்பும் பக்கம் வருகையில் டூல் பாரில் நிறுத்திய மேஜிக் ஆட்டோ ஃபில்-ஐ க்ளிக் செய்தால், பயணிகளின் விவரப் பட்டியல் ஒரு நொடியில் நிரம்பி விடும். தெளிவாகத் தெரிந்து கொள்ள யூட்யூபில் வீடியோ டெமோவும் தந்திருக்கிறார்கள்.
***

பெங்களூரின் கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக சாரலைக் கொண்டு வந்து சேர்த்தார் மும்பையிலிருந்து வந்திருந்த (அமைதிச் சாரல்) சாந்தி மாரியப்பன். கடந்தவார இறுதியில் அவர் இங்கிருந்த நான்கு நாட்களும் மழையால் பூமி குளிர்ந்தது. சந்திப்பால் எங்கள் மனமும்:)! சென்ற திங்கட்கிழமை மாலை சொன்ன நேரத்தை விடச் சற்று தாமதமாகவே செல்ல முடிந்தது என்னால். அதுவரையிலும் மூன்றாம் ஆண்டைத் தொடங்கும் வல்லமை இதழின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள் நிறுவனர் அண்ணா கண்ணனும், துணை ஆசிரியரான சாந்தியும். எனது ‘புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்’ பதிவுக்காக வல்லமையாளர் விருது கிடைத்ததை ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான பரிசும் அன்று வழங்கப்பட்டது. நன்றி வல்லமை:)! சந்திப்பில் ஐயப்பன் கிருஷ்ணன், வா. மணிகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

***
ங்கள் ப்ளாகில் பாஹே அவர்கள் 'கதைக்குத் தலைப்பு'ப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே பரிசு என அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வென்றவர்களை. “அடடா இப்படி நடக்குமெனத் தெரியாமப் போச்சே. இனி சொன்னால் பரிசு உண்டா?” கெஞ்சாத குறையாக ஆதங்கப்பட்டார்கள் கலந்து கொள்ளாத நண்பர் சிலர்:)! நல்ல பரிசைத் தவறவிட்டிருக்கிறார்கள்.மனைவியின் மறைவுக்குப் பிறகு அவரது பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்ட திரு பாலசுப்ரமணியம் ஹேமலதா(பாஹே) எழுதிய தத்துவத் துளிகளால் நிறைந்தது இந்நூல். வாழ்வியல் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியும், மானுடரின் மனப்போக்குகளை அலசித் தன் கோணத்தில் விடைகளைத் தந்தும் நிறைய சிந்திக்க வைக்கிறார். முதிர்ந்த அனுபவம் தெளிந்த வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும் பின் அட்டையும், தத்துவச்சாரலில் நனையும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுமாக அட்டைப்படம் ஒரு அழகிய செய்தியைச் சொல்கிறது. பரிசுக்கு நன்றி 'எங்கள் ப்ளாக்'!

புத்தகத்திலிருந்து ஒரு துளி:

எவரெஸ்டை எட்டுவதிலா இருக்கிறது வெற்றி?
***

டத்துளி:
இப்ப நல்லாத் தெரியுதுப்பா!

***

வியாழன், 17 மே, 2012

பிரெஞ்சுக் கவிதைகள்: இரகசியம்; அதிசயம்; மணியொலி - அதீதத்தில்..

இரகசியம்

ஒலிக்காத மணி
உயிரற்ற பறவைகள்
ஒன்பது மணிக்கெல்லாம்
உறங்கிவிடுபவரைக் கொண்ட
வீட்டினுள்

பூமி சுற்றாமல் தன்னைத் தானே பிடித்திருக்க
யாரோ பெருமூச்சு விட்டதாக நீங்கள் சொல்லலாம்

மரங்கள் புன்னகைப்பது போல் தோன்றின
ஒவ்வொரு இலை நுனியினின்றும் நீர் சொட்டியது
மேகமொன்று இரவைக் கடந்து சென்றது

கதவின் முன்னே பாடிக் கொண்டிருக்கிறான்
ஒரு மனிதன்

திறக்கிறது ஜன்னல் சத்தமின்றி.
***




அதிசயம்

தலை தொங்கிக் கிடக்க
கண் இமைகள் சுருண்டிருக்க
உதடுகள் மெளனம் காக்க
ஒளிர்ந்தன விளக்குகள்

எதுவுமில்லை அங்கே
மறந்து போன பெயரைத் தவிர

ஒருவேளை கதவு திறந்தாலும்
நுழையும் துணிவில்லை
அங்குதான் அத்தனையும் நடப்பதால்

அவர்கள் பேச
நான் கேட்க வேண்டும்

என் விதி
அந்த அறையிலேதான்
பணயம் வைக்கப்பட்டுள்ளது.
***


மணியொலி

எல்லா விளக்குகளும் அணைந்தன
காற்று பாடிக் கொண்டே கடந்தது
மரங்கள் நடுங்கின
மிருகங்கள் மரித்தன
எவரும் விட்டு வைக்கப்படவில்லை

பார்
நட்சத்திரங்கள் மின்னுவதை நிறுத்தி விட்டன
பூமி கூடச் சுழலவில்லை

ஒரு தலை மெல்ல அசைய
கேசம் இரவைத் துப்புரவு செய்ய
காணாது போன ஊசிக்கோபுரத்திலிருந்து
ஒலிக்கின்றது
நள்ளிரவில் மணி.
***

மூலம் பிரெஞ்சு மொழியில்: PIERRE REVERDY(1889-1960)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth

அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்த கவிதைகள்:
‘SECRET’ http://www.atheetham.com/atheetham/?p=328 [31 March 2012]
‘MIRACLE’ http://www.atheetham.com/atheetham/?p=331 [31 March 2012]
‘A RINGING BELL’ http://www.atheetham.com/?p=637 [2 May 2012]

செவ்வாய், 15 மே, 2012

வலைப்பூவரசி - அவள் விகடன் 'நெட் டாக்ஸ்' விருது


ஆனந்த விகடன் வலையோசை அறிமுகத்தைத் தொடர்ந்து, அடுத்து அமைந்த ஊக்கமாக ‘அவள் விகடன்’ என் எழுத்தையும் புகைப்படத் தொகுப்புகளையும் பாராட்டி, எனது படமொன்றுடன் 22 மே 2012 இதழில் தந்திருக்கும் விருதினை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி!
நன்றி அவள் விகடன்!
***

ஞாயிறு, 13 மே, 2012

வைரங்கள் - பண்புடன் இதழில்..


சிதறிக் கிடந்த
நட்சத்திரங்களின் மீது
ஏறி ஏறி விரைகிறான்
பாலாய்ப்
பொழிந்து கொண்டிருந்த
பிளாட்டினப் பந்தை
எட்டிப் பிடிக்க.

கால் பதித்துக் கடக்கிற
ஒவ்வொரு விண்மீனும்
அந்நிலவினும் பிரகாசமான
பேரொளி வைரங்களாக
மின்னிக் கொண்டிருந்ததை

நின்று கவனிக்கவோ
திரும்பிப் பார்க்கவோ
நேரமின்றி.
***

11 மே 2012 பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!

படம்: கவிதையுடன் வெளியானது.

வெள்ளி, 11 மே, 2012

காற்றுக்கென்ன வேலி - மே PiT போட்டி

கடந்த ஐந்து வருடங்களாகப் போட்டிகளில் கலந்து கொண்டும், வருகிற படங்களைக் கவனித்தும் வருபவராயிற்றே! அதனால்தான் சொல்கிறார் “உங்களுக்கு சவாலான தலைப்பைக் கொடுப்பதுதான் பெரிய சவால்” என்று இம்மாத சிறப்பு நடுவரான சத்தியா. அந்த சவாலில் அவர் வென்று விட்டார், காற்று தலைப்பைத் தந்து. இப்போ உங்க முறை. சவாலை சமாளிக்கப் போகிறீர்களா? அல்லது கோமா அவர்கள் அறிவிப்பைப் பார்த்து சொன்ன மாதிரி சும்மா ஊதித் தள்ளப் போகிறீர்களா:)?

காற்றின் தாக்கம் படத்தில் தெரிய வேண்டும் என்பது முக்கிய விதி.

# காற்றுக்கென்ன வேலி



# காற்றைச் சுமந்து..


# ஊதி ஊதி.. தீ.. தீ..


# தென்றல் காற்றே நீ மெல்ல வீசு..


காற்றுக்கு மட்டுமல்ல. கற்பனைக்கும் இல்லை வேலி:)!

கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு யோசியுங்கள். கடைசித் தேதி 20 மே.

அறிவிப்புப்பதிவு இங்கே. விதிமுறைகள் இங்கே.
இதுவரை வந்திருக்கும் படங்களின் அணிவகுப்பு இங்கே.

***

வியாழன், 10 மே, 2012

அன்பின் பிரார்த்தனை - நவீன விருட்சத்தில்..


சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
அன்பையும்
சந்தேகித்தபடியே சில இதயங்கள்

அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணைகொண்டு
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன
பேதமையின் உச்சத்தில்.

யார் யார் வாயிலாகவோ
சுற்றிச் சுற்றி முயன்றும்
தாம் தாமாகத்
தங்க முடியாத இடத்தில்
சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
பிரார்த்திக்கத் தொடங்குகிறது
வேதனையுடன் அன்பு

அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
நச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்திற்காக.
***

15 ஏப்ரல் 2012 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படம் : இணையத்திலிருந்து..

செவ்வாய், 8 மே, 2012

காத்திருப்பின் அழகு - நவ்ஃபலுடன் என் நேர்காணல் - கல்கி ஃபோட்டோகேலரியில்..

இந்த வாரக் கல்கியில்..

காத்திருப்பின் அழகு’, நன்றி கல்கி!


வாழ்த்துகள் நவ்ஃபல்:)!
மேலும் இவரது படங்களை ரசிக்க இங்கே செல்லுங்கள்: NAUFAL PHOTOGRAPHY
***

திங்கள், 7 மே, 2012

மொழம் - மே மாத மல்லிகை மகளில்..

எனது மொழம் கவிதையை வெளியிட்டிருப்பதற்கும் சென்ற மாதம் வெளியிட்ட ராணித் தேனீயை ‘அழகிய கவிதை’ என மல்லிகை மெயில் பக்கத்துக்குத் தலைப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் நன்றி மல்லிகை மகள்!

ஞாயிறு, 6 மே, 2012

சித்திரை நிலவு.. இன்றைய வானிலே..

# Perigee Super Moon 2012
வழக்கத்தைவிடப் பதினான்கு சதவீதம் பெரியதாகவும், முப்பது சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் இன்றைய சித்திரை நிலவு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிற நிலவின், பூமி பார்த்த பக்கம் மற்ற பக்கத்தை விட 50 ஆயிரம் கி.மீ பூமிக்கு அருகில் இருக்குமாம். இது போன்ற நேரத்தில் வருகிற பெளர்ணமியில் அளவில் பெரிதாக நிலா தெரியும் என்றும், அதுவும் சித்திரா பெளர்ணமியில் இந்த நிகழ்வு ஏற்படுவது அபூர்வமானது என்றும் அறிவிக்கின்றன செய்திகள்.

பெங்களூரில் இன்றைய மேகமூட்டம் படம் எடுக்க முடியுமா எனும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஏழரை மணிக்கு ஒரு முறை, ஒன்பது மணிக்கு ஒருமுறை மேல்மாடிக்குச் சென்று எல்லாம் செட் செய்து முடிக்கவும் மேக வில்லன்கள் கூட்டம் கூட்டமாக வந்து மறைத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தோன்றுகிற நேரத்தில், முன் இரவில் எடுத்தால்தான் நிலவு பெரிதாகத் தெரியும். விவரங்களும் மிகத் துல்லியமாகக் கிடைக்கும். ஹி.., அதுவுமில்லாம கழுத்து ரொம்ப வலிக்காமலும் எடுக்கலாம்:)!

# காணும் போதே மறைந்தாயே..
இப்படிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த நிலவு ஒருவாறாக இரவு பத்தரை மணியளவில் தெளிந்த வானில் பாலாகப் பொழிந்தாள்! அப்போது பத்திரப் படுத்தியதே முதல் படம். அதிபிரகாசமாக இருந்தாலும் பார்க்க என்னவோ வழக்கமான அளவில்தான் தெரிந்தாள். விஞ்ஞானிகள் சொல்கிற விவரங்களை எனக்கு அதில் வாசிக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்றைக்கும் அழகு மகள் அவள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாதுதானே:)?
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. (10 Dec 2011)

2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்.. (10 April 2011)

3. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON (20 March 2011)

வெள்ளி, 4 மே, 2012

ஆனந்த விகடன் வலையோசை - முத்துச்சரம் நான்காண்டு நிறைவு

லைப்பூவை தொடங்கிய இந்நாளில் ஆனந்த விகடன் வலையோசையில் முத்துச்சரம்!

பிறந்த ஊர் நெல்லையை முன் நிறுத்தி மதுரை என் விகடனில் என்பது கூடுதல் சந்தோஷம்.


நடுப்பக்கத்தில்...

**

கீழ்வரும் நான்கு பதிவுகளிலிருந்து தேர்வு செய்திருக்கிறார்கள்:
1. தலைக்கு வந்தது 2. செல்வக் களஞ்சியங்கள் 3. மன்னாதி மன்னர்கள் 4. ஜப்பானியக் கவித்துளிகள்


நன்றி ஆனந்த விகடன்!
***
முதல் முத்துக்களைக் கோர்த்தபோது நினைத்திருக்கவில்லை நான்காண்டுகள் தொடருவேன் என்றோ ஆனந்த விகடனில் வந்து நிற்கும் முத்துச்சரம் என்றோ.

“எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகக் கோர்த்தபடி”த் தொடருகிற பயணத்தில் ஊக்கம் தரும் அங்கீகாரங்கள் பல கிடைத்திருப்பினும் இந்த வாரம் விசேஷம்தான்:)!

ஒளிப்படங்களுக்கான அங்கீகாரமாக இந்த ஞாயிறு தினமலர் பொக்கிஷம் பாராட்டு.

எழுத்துக்கான அங்கீகாரமாக இப்போது விகடன் பாராட்டு.

வல்லமை இணைய இதழின் முதல் வல்லமையாளர்! அந்தந்த வாரத்தில் சிறப்பாக செயலாற்றிய ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிற திட்டத்தில் கெளரவித்திருக்கிறார்கள் என்னை ‘புவியின் பொக்கிஷங்கள் - மரங்கள்’ பதிவினைப் பாராட்டி. நன்றி வல்லமை!

படைப்புகளை அங்கீகரித்து வெளியிட்ட இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளுக்கும் இந்நேரத்தில் என் நன்றி!

நேற்றுவரை 499-லிருந்த தொடருபவர் எண்ணிக்கை சரியாக 500-யைத் தொட்டதும் இன்றுதான்! மற்றும் ரீடரில் தொடரும் 595 பேர் உட்பட திரட்டிகள், குழுமங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வருகை தந்து வாசிப்பவருக்கும் கருத்தளித்து உற்சாகப்படுத்தி ஐந்தாம் ஆண்டில் முத்துச்சரம் அடியெடுத்து வைக்கக் காரணமாக அமைந்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி! இங்கு கிடைக்கிற ஊக்கமே இதை சாத்தியமாக்கியுள்ளது!
***

புதன், 2 மே, 2012

தினமலர் பொக்கிஷம் - இந்த வார அறிமுகம்

தினமலர் ஆன்லைன் ஞாயிறுதோறும் புதுப்பிக்கும் ‘பொக்கிஷம் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=457286’ சிறப்புப் பகுதியில் என் கேமராவை அறிமுகம் செய்திருக்கும் திரு எல்.முருகராஜ் அவர்களுக்கு நன்றி! அதே பக்கத்தில் ‘ஃபோட்டோ கேலரி [http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=457286 ]’’க்கான இணைப்பும் உள்ளது. அங்கே அவர்களது விருப்பத் தேர்வாக அமைந்த எனது எட்டு படங்களைக் காணலாம். அவற்றில் ஒன்று உங்கள் பார்வைக்கு:
நன்றி தினமலர்!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin