ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.
வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.
இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.
வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.
இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.
எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:
பத்திரிகைகள்:
- கல்கியில் 5 கவிதைகள், ஒரு புகைப்படத்தொகுப்பு மற்றும் தீபாவளி மலரில் படங்கள் வெளியாகின.
- தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..
- இவள் புதியவளில் 2 கட்டுரைகள்
- லேடீஸ் ஸ்பெஷலில் 2 கட்டுரைகள்
- வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
- நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை
இணைய இதழ்கள்:
- உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
- கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
- திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
- நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
- வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
- பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
- அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை
வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
க்ளிக் க்ளிக்
புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.
DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.
மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.
29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:
ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.
அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?
கடந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.
ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.
2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***