கண்ணோடு காண்பதெல்லாம்.. காமிராவுக்குச் சொந்தமில்லை என எனைத் தடுமாற வைத்த அனுபவம் இது:)!
இரவுக் காட்சிகளை எடுக்க என்னென்ன அவசியம் என்பதைப் புரிய வைத்த படங்கள் இவை.
சென்ற வருட ஜனவரியில் விடுமுறைக்காக குமரகம் சென்றிருந்ததும் அதைப் பற்றிய பகிர்வு ‘
ஏரிக்கரைப் பூங்காற்றே..’ புகைப்படங்களுக்காக தமிழ்மணம் விருது 2010 வெள்ளிப் பதக்கம் பெற்றதும் உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.
அங்கு வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்த தாஜ் ரெட்ரீட் விடுதியில் இருக்கும் சிறு நீர்தேக்கத்தைச் சுற்றிலும், மாலைச் சூரியன் மெல்ல மெல்ல ஏரிக்குள் உறங்கச் செல்ல, இருள் படர ஆரம்பிக்கும் ஏழுமணி அளவில் ஆரம்பித்து, நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். (நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம்). சரியாக அத்தனை விளக்குகளும் ஏற்றி முடிக்க ஒருமணி நேரமாவது தேவைப்படுகிறது.
இந்தப் பின்னணியில் அங்கிருக்கும் பேக்கர்ஸ் பங்களாவையொட்டிய புல்வெளியில் தினமும் இரவு எட்டிலிருந்து எட்டரை மணி வரை ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. அருகிலேயே உணவுக் கூடாரம். இரவு உணவை சுவைத்தபடி நிகழ்வுகளை தங்கியிருப்பவர் ரசிக்கவே இந்த ஏற்பாடு.
முதல் நாள் மோகினி ஆட்டம். மாலை படகுச் சவாரி முடிந்து ஏரிக்கரை புல்வெளியில் வழங்கப்பட்ட கேரளப் பணியாரங்கள், தேநீர் இவற்றால் வயிறு ‘கம்’ என்று இருப்பதாகவும், பசிக்கவில்லையாதலால் சற்று பொறுத்து வருகிறோமென்றும் கணவரும், மகனும் காட்டேஜில் தங்கி விட நான் மட்டும் ஆர்வமாய் ஆஜராகி விட்டேன் அங்கே எட்டு மணிக்கு. நான்கு நாட்களுமே ஆரம்பத்தில் இருபது பேரும் நிகழ்வு முடியும் நேரம் 40 பேர் வரைக்குமே பார்வையாளர்கள் எனினும் முழு ஈடுபாட்டுடன் கலைஞர்கள் லயித்து ரசித்து தம் கலையோடு ஒன்றி, பார்ப்பவரையும் ஒன்றிட வைத்தார்கள்.
என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம்? படம் எடுக்க எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. புல்வெளியின் சமதளத்துக்கு தற்காலிகமாய் போடப்பட்டிருந்த மேடையை ஒளியூட்ட ஒரு ஃபோகஸ் விளக்கு(படம் 1). எத்தனை நெருங்கிச் சென்று வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். வழக்கமாக படம் எடுக்க போட்டிக்கு வரும் வெளிநாட்டவர் கூட யாருமில்லை. ஆயினும் ஆயினும்.... :(!
அகல் தீபங்கள் ஆயிரம் பின்னால் ஒளிர்ந்து கொண்டிருக்க அற்புதமாக ஆட ஆரம்பித்தார் நர்த்தகி. ரசித்தபடியே ஆர்வமாகப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்கப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘மோகினி ஆட்டமல்லவா? அதனால்தானோ!’ என எண்ணும் வகையில் நர்த்தகியின் கைகள் கழன்று திசைக்கொன்றாக வான் வெளியில் மிதந்து கொண்டிருந்தன. ‘மகிஷாசுரனை அழிக்க வந்த ஸ்வரூபமோ’ எனத் தலைகள் பன்மடங்காகித் தெரிந்தன.
சோனி W80 அளவில் மிகச் சிறியதாயினும் எனக்குக் கைநடுக்கமே ஏற்படாது. பலரும் என் பல படங்களைக் குறிப்பிட்டு ஷேக் இல்லாமல் எடுத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் . ‘ஓஹோ.., இது பாராட்டுக்குரிய ஒரு திறமை போலும்’ என உணர்ந்திருக்கிறேன்.
என்னதான் பிரச்சனை என முழிந்துக் கொண்டிருக்கையில் கணவரும் மகனும் சாவகாசமாக நடந்து வந்து கூடாரத்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். பீதி அப்பிய முகத்தோடு விரைந்து சென்று ‘காமிராவுக்கு என்னவோ ஆயிட்டு’ என்றேன். முந்தைய பாகத்தில் சொன்னது போல நான்தான் அப்போது காமிராவின் பிற பயன்பாடுகளை முயன்றிராத பேர்வழியாயிற்றே. கணவர் சிரித்து விட்டு ‘இரவுக் காட்சிகளுக்கு ISO மாற்றணும். Night shot mode இருக்குதா பார்’ எனச் சுட்டிக்காட்ட அதன் பிறகு எடுத்த படங்களே இங்கே:
மோகினி ஆட்டம்
#படம் 1
#படம் 2
#படம் 3
#படம் 4
2. பரதம்
#படம் 5
#படம் 6
3. திருவாதிரைக்களி
ஓணம் மற்றும் திருவாதிரை விழாக்களில் கேரள நங்கையர் ஆடி மகிழும் இந்நடனம் ‘கைகொட்டிக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது. (தீபங்களின் ஒளி தனித்துத் தெரிய வேண்டுமென்பதற்காகவோ என்னவோ, இந்த நிகழ்ச்சிக்கு ஃபோகஸ் லைட்டும் இருக்கவில்லை. மிகக் குறைந்த வெளிச்சத்தில் படமாக்க வேண்டியிருந்தது.)
#படம் 7
இப்படியாகத் தொடர்ந்து வந்த நாட்களிலும் ISO மற்றும் twlight mode-ல் ஒருவாறாக . . 'சுமார்' திருப்தியுடன் இரவுப் படபிடிப்பை முடித்தேன். (சுமாராகத் தேறியவற்றையே பகிர்ந்தும் உள்ளேன்).
ஊரிலிருந்து வந்ததும் ‘பிட்டூ..’ என ஓடினேன். இரவுப் புகைப்படக்கலை பற்றிய விளக்கங்கள் இரண்டு (PiT) பதிவுகளில் கிடைத்தன:
இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்;
படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1.
“இரவு காட்சிகளில் முக்காலியின் அவசியத்தை பல காலம் கழித்துதான் தெரிந்து கொண்டேன்” என இதிலொரு பதிவில், இன்றைக்கு சென்னையில் புகைப்படக் கண்காட்சிகள் நடந்தும் புகழ்பெற்ற வல்லுநர் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தது பார்த்து சற்றே ஆறுதலாகவும், கொஞ்சமே கொஞ்சம் அற்ப சந்தோஷத்தைத் தருவதாகவும் இருந்தது:)! DSLR-ல்தான் நல்ல ரிசல்டுக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் கூடுதலாக நான் செய்திருக்க வேண்டியது முக்காலிக்கு பதில் ஒரு நாற்காலியில் காமிராவை வைத்து செல்ஃப் டைமர் போட்டிருந்திருக்கலாம்.
போகட்டும். இப்போது முக்காலியுடன் DSLR-ல் இரவுக் காட்சிகளைப் படமாக்குவதிலே தேர்ச்சி பெற்று விட்டக் கதையைதான் உங்களுக்கு ஏற்கனவே
சூப்பர் மூன் மற்றும்
சித்திரா பெளர்ணமி பதிவுகளில் சொல்லி விட்டுள்ளேனே. நீங்களும் சூப்பர் சூப்பர்னு சொல்லிவிட்டீர்களே:)!
***
சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1)
இங்கே.
அடுத்த பாகத்துடன் தொடர் நிறைவுறும்:)!