கடவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில்.
இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.
மனித நேயத்தால் இவர்களுக்கு உதவுபவர்கள் ஒரு பக்கமெனில், 'தர்மம் தலை காக்கும்' எனப் புண்ணியம் சேர்க்க உதவக் கிளம்புகிறவர்கள் ஒரு பக்கம். சரி இப்படியெல்லாம் சான்றோர் சொல்லி வைத்துச் சென்றிருக்கவில்லையாயின் பகிரும் எண்ணமே உதவும் உள்ளமே அற்றுப் போயிருக்கும் உலகத்தில்.
எப்படியோ இப்போது பலரும் இது போன்ற இல்லங்களுக்குத் தங்களாலான உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அவரவர் அவரவருக்கு தெரிந்த முடிந்த வகையில் செய்து வரும் உதவிகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கு பகிர்ந்திட விளைகிறேன்.
நானறிந்த இல்லங்கள் இரண்டில் உதவிகளை ஏற்பதில் எதிர்மாறான விதிமுறைகள் இருந்து வருகின்றன. ஒன்று அரசு இல்லம். மற்றது தனியார் நடத்துவது. இரண்டுமே குழந்தைகளைப் பரமாரிப்பவை. அரசு தனியார் என்பதனாலன்றி அதை திறம்பட நடத்துபவரின் சில தனிப்பட்ட கொள்கைகளினாலேயே விதிமுறைகள் அமைந்துள்ளன என்பதையும் முதலிலேயே தெளிவு படுத்தி விடுகிறேன்.
நமக்குத் தேவையில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள் அரசு இல்லத்தில். நல்ல நாட்கள் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நினைவு நாட்கள் வருகையில் அந்த நேரத்து சாப்பாட்டுக்கான செலவினை ஏற்றுக் கொண்ட முறையிலோ அல்லது உணவை தயாரித்து எடுத்துச் சென்றோ அக்குழந்தைகளுக்கு தம் கையால் உணவளிக்க விருப்பப் பட்டால் அனுமதிக்கும் இவர்கள் குழந்தைகளுக்கு அருமையாக டேபிள் மானர்ஸ் பழக்கியிருக்கிறார்கள். மேசையிலே தத்தமது தட்டுடன் வரிசையாக ஒழுங்குடன் அமர்ந்து பிரார்த்தனைக்குப் பிறகே உண்ண ஆரம்பிக்கிறார்கள். சின்னப் பருக்கையும் சிந்தாமல் கவனமுடன் உண்பதும் எதையும் வீணாக்காது உணவை முடிப்பதும் கருத்தைக் கவர்கிறது.
இந்த இல்லத் தலைவி அடிக்கடி வலியுறுத்தும் இன்னொரு விஷயம், இனிப்புகள் வழங்குவதைத் தவிர்க்கச் சொல்வது. அதற்குப் பதில்
அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.
சில நேரங்களில் வாங்கித் தரும் இனிப்புகள் என்னதான் மிக நல்ல பெயர் பெற்ற கடையில் வாங்கினாலும், பாதுகாக்கப் பட்ட முறை, செய்ய பயன்படுத்தப் பட்ட பொருட்களின் பரிசுத்தம் இதில் ஏதும் பிரச்சனை இருக்க நேர்ந்தால் நம்மால் அந்தக் குழந்தைகளின்
ஆரோக்கியத்துக்குக் கேடு வந்து விடவும் கூடாதல்லவா? நாமே வீட்டில் செய்ய முடிந்தால் நல்லது. அப்படி முடியாத பட்சத்தில், பழங்கள் சாலச் சிறந்ததல்லவா? இல்லை இனிப்புகள் தருவதே விருப்பம் அதில்தான் திருப்தி என்றால் அதன்
தரத்தினை உறுதி செய்து கொள்வதுடன் கூடவே பழங்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்தானே.
பழங்கள் விற்கும் விலையில் சாப்பாடு போக அதை வாங்கி வழங்குவது என்பது தங்களுக்குச் சிரமமானதாய் இருப்பதாகவும் அந்த இல்லத் தலைவி தெரிவித்தார். உண்மைதானே. ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியமான பழங்களை அவர்கள் சுவைத்திட தருவதில் நமக்கும் கிடைக்கும் ஒரு மன நிறைவு.
இன்னொரு தனியார் இல்லத்தில் சில வருடங்கள் முன்னர் வரை நமக்குத் தேவையற்ற பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி கொண்டார்கள்தான். ஆனால் இப்போது எந்த பழைய உடைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. தேவையற்ற ஸ்டேஷனரி அயிட்டங்கள் எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை. உதவ விரும்புபவர்கள் பணமாகவோ அல்லது புது உடைகள் அல்லது தைத்துக் கொள்ள புதுத் துணி புது பேனா பென்சில் நோட்டுப் புத்தகங்கள் இப்படித்தான் தர வேண்டும் என்கிறார்கள்.
'தானம் பெறும் நிலையில் இருந்து கொண்டு இந்த வெட்டிப் பந்தா தன்மானத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை' எனும் விமர்சனங்களுக்கு இவர்கள் வருத்தப் படவுமில்லை. இந்த இல்லத்தின் தலைவியை இது குறித்து நான் கேட்ட போது அவர் அளித்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாகவே தோன்றியது.
அவர் கூறியதாவது:
"பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத உடைகளை உதவுகிறோம் என்ற பெயரில் சலவைக்கு போடும் அழுக்கு மூட்டைகளாக மிக மோசமான நிலையில் வந்து இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள். அதே போல இங்கு வந்து விழும் க்ரையான்ஸ், கலர் பென்சில், நோட்டுக்கள் போன்ற ஸ்டேஷனரிகளும் அப்படியே. பாதிக்கும் மேலானவை உபயோகிக்கவே முடியாத நிலையில் இருக்கும். இதை வகைப்படுத்தி எடுப்பதே மிகப் பெரிய வேலையாகி விடுகிறது சமயத்தில்.
மேலும் இதைக் காண நேரும் எம் குழந்தைகளுக்கு மற்றவர் இரக்கத்தில் அண்டிப் பிழைக்கிறோமோ என்கிற மனோபாவம் எழவும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கையால் இனிப்புகளை விநியோகம் செய்ய விரும்புவதாகச் சொல்லி விட்டு குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து ‘பொத் பொத்’ எனக் கையிலே போடுபவர்களும் சிலருண்டு. கருணை காட்டுவதாக எண்ணிக் கொண்டு எங்கள் குழந்தைகளைக் கையேந்துபவர்கள் போல நடத்துவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை" என்றார்.
பின்னர் முத்தாய்ப்பாய்
"எல்லோரும் அப்படி எனச் சொல்ல வரவில்லை. ஆனால் இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கவே இப்போது எந்த பழைய பொருட்களையும் ஏற்பதில்லை" என முடித்தார். ஆக இவர் சொல்வது போன்ற விதிமுறைகள் சில இல்லங்களில் இருக்குமாயின்
நம் உதவிகளை பணமாகவோ புது பொருட்களாகத் தருவதாகவோ
அவர்களின் விதி முறைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி சிந்திக்காமல் அவர்களை விமர்சிக்கக் கூடாது.
பிறர் உதவியை எதிர்பார்த்துதான் இந்த இல்லங்கள் இயங்குகின்றன என்றாலும் இங்கிருப்பவர்கள் எவரும்.. குழந்தைகள் என்றன்றி ஆதரவற்ற பெண்கள், முதியோர்கள் அனைவருமே
கருணைக்குரியவர்களாய் நடத்தப் படாமல் சக மனிதர்களால் நட்பும் அன்பும் பாராட்டப் படவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
நாம் நமது நண்பர்களுக்கு பரிசு வழங்க விரும்புகையில் அதை அழகான வண்ணத் தாளில் சுற்றி ரிப்பன் கட்டி எத்தனை அக்கறையாய் எடுத்துச் செல்கிறோம். அதே போல இவர்களையும் எண்ணி அந்த அக்கறையை இவர்களிடத்திலும் காட்டலாமே.
உபயோகித்த நமக்கு தேவையற்ற உடைகளாயின் சலவை செய்து தையலோ பொத்தானோ விட்டிருந்தால் தைத்து இஸ்திரி போட்டு அழகாய் கொடுக்கலாமே. விளையாட்டுப் பொருட்கள் போன்ற எதுவானாலும் உடையாமல் நல்லபடியாக இருந்தால் மட்டுமே கொடுங்களேன்.
நம் குழந்தைகளின் பழைய நோட்டுக்களில் எழுதாமல் எஞ்சிய சில தாள்களை நாமே கிழித்து பைண்டு செய்து கொடுக்கலாமே. சில பக்கங்களே எழுதியவையாயின் அவற்றை நாமே நீக்கி அட்டையிட்டு உபயோகிக்கும் நிலையில் தரலாமே. காலிலே சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிற காலமிது எங்கே கிடைக்கும் இதற்கெல்லாம் நேரமென சிலர் நினைக்க வாய்ப்புண்டு. மனம் இருந்தால் உண்டுதானே மார்க்கம்?
அதே போல நம் கையால் உணவளிக்க விரும்பும் பட்சத்தில் நம் வீட்டு விருந்தினர்களை எப்படிக் கவனிப்போமோ அதே போல ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்துப் புன்னகைத்துக் கனிவுடன் பரிமாறுவதில் கவனம் எடுக்கலாமே. தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய
இவர்களும் நம் நண்பர்களேயன்றோ?
*** *** *** *** ***
*சர்வேசனின் ‘
சென்னை விஸிட்-உதவுக் கரங்கள்’. விஸிட் செய்யாதவர்கள் செய்யலாமே. அவரது பதிவினை மட்டுமல்ல, உதவுகின்ற கரங்கள் எங்கு இருப்பினும்...
*இப்பதிவின் பிரதிபலிப்பாக.. தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதாக இங்கு பின்னூட்டத்தில் வாக்களித்த படி.. 4 ஏப்ரல் 09 அன்று
ஜீவன் அவரது 'கண்ணாடி' வலைப்பூவில் பதிந்த
"இறைவனின் குழந்தைகள்"!
இனிப்புகள் வழங்குவதால் மட்டுமே ஆரோக்கியத்துக் கேடு வர வாய்ப்பென்பதில்லை,
யார் யார் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதை அறியாமல், எதையும் வீணாக்காது சாப்பிட வேண்டும் எனப் பழக்கப் படுத்தப் பட்ட அக்குழந்தைகளுக்கு நாம் பரிமாறுவதும் சரியல்ல என்பதையும் புரிய வைத்துள்ளார். கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். கவனிக்க வேண்டிய கருத்து அது. அதையும் மீறி ‘தம் கையால் பரிமாறினால்தான் புண்ணியம்’ என்பது போன்ற கொள்கையுடையோர் கூடவே நிர்வாகத்தினரை அருகில் வைத்துக் கொள்வதும், கடைசிப் பத்தியில் நான் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கவனத்தில் கொள்வதும் அவசியம்.
*ஜீவனைத் தொடர்ந்து இங்கே வாக்களித்தபடி
ரம்யா அவர்கள் தன் ஐம்பதாவது பதிவாக 14 ஏப்ரல் 09 அன்று, தான் வாழும் அர்த்தமுள்ள வாழ்க்கையின் அனுபங்களைப் பதிந்திருக்கும்
"ஆதரவற்ற குழந்தைகளும்-முதியவர்களும்".
விழிப்புணர்வினைக் கோரும் இப்பதிவு இன்னும் பலரைச் சென்றடைய வழி செய்திருக்கும் விகடனுக்கு நன்றி!
- தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், சமுக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை பெற்ற பதிவு! தமிழ் மணத்துக்கும், வாக்களித்து பலரிடத்தில் பதிவின் நோக்கம் சென்றடைய உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்!