திங்கள், 25 ஏப்ரல், 2011

ஆறாவது அறிவு - நவீன விருட்சத்தில்..

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பித்தது.

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

15 ஏப்ரல் 2011 நவீன விருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படம்: நான் எடுத்தது..

வியாழன், 21 ஏப்ரல், 2011

வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை! - கல்கி கவிதை கஃபே


குடியரசுதின அணிவகுப்பு மரியாதை
கண்களுக்குள் ஓட

‘ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்
ஆகணும் டீச்சர்’
தொடங்கி வைத்தாள் எழிலரசி

ஆனந்தி, மல்லிகா, சந்திராவுக்கு
போலீசாய் பைலட்டாய் விஞ்ஞானியாய்
ஆக விருப்பமாம்

கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகி
உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில்
உறுதியாக இருந்தாள் உமா மகேஸ்வரி

தயங்கித் தயங்கி
வெளிப்படுத்தினாள் யாழினி
வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
தன் ஆசையென

கைதட்டிக் குலுங்கியது சிரிப்பால்
குழந்தைகளின் வகுப்பறை

தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன.
***

24 ஏப்ரல் 2011, இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள கவிதை.

வண்ணத்துப்பூச்சி படம் கவிதையுடன் கல்கி ஆன்லைனில் வெளியானது.

பத்திரிகையில்...
என் கவிதையின் தலைப்பு கவிதை கஃபேயின் தலைப்பாகவும் அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி:)!

கல்கியில் இதுவரை வெளியான பிற கவிதைகள்(முன்னர் வாசித்திராதவருக்காக..): தவிப்பு , குழந்தை முகத்தில் குளிர் நிலவு!


நன்றி கல்கி!!!

***

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

திங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.

சென்ற மாதம் போலன்றி சற்று முந்நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன். அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.

1. சித்திரைப் பெண்


அடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:)! பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில், நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:

2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..


3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்போகும்..

சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.

கடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.

சிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌துவே. ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண்ணிய‌க் கண‌க்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)!

மனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்?

நிலாச் சோறு நினைவுகள்:

சின்ன வயதில் நாங்கள் வசித்த திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திருக்கும். [படம்:4]

பெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.

சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.

ஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாடல்களைக் கசிய விடுவாள்.  நேர் எதிரே பரந்து விரிந்து நிற்கும் (பிள்ளையார் கோவில்) அரச மரத்திலிருந்து எண்ணற்றப் பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.
4. கூரைப்படி
இதோ இந்தக் கூரைப் படிகளில் (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!

அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.

பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.

நானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.

து ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

இனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்!

அப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)!

*** *** ***

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

செந்தூரப் பூக்கள்.. செவ்வானத் தீற்றல்கள்.. சிகப்பிலே படங்கள்- ஏப்ரல் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு ‘சிகப்பு’.

அறிவிப்பு அங்கே. ஒரு அணிவகுப்பு இங்கே:

1. பெங்களூர் மைய நூலகம்
10 mm அகலத் திரையில்..
***

2. சிகப்பு உடைச் சிறுமி

3. ஆடுகிறாள் ஆனந்தமாய்..

4. அதரச் சிகப்பு அலகுகள்

5. சிங்கார உடையழகி

6. மேட்ச் பார்க்க மார்ச்சில் வந்த கிறுஸ்துமஸ் தாத்தா
துள்ளிக் குதிக்கிறார் தோனியின் உலகக் கோப்பை ஸிக்ஸருக்கு.
***

7. சிலந்தி மனிதன்
பிறந்தநாள் விழா ஒன்றில் சிறுவன் கையில் நிமிடத்தில் தீட்டப்பட்ட டாட்டூ. சிறுமிகளுக்கு டோராவும், வண்ணத்துப்பூச்சிகளும் தேவதைகளும்.
***

8. மூவண்ணத்தில் முகம் நிமிர்த்தி..
நண்பர்களுடன் பெருமிதமாய்..
***

9. பழுத்த பளபளத்த தக்காளிப் பழங்கள்செந்தூரப் பூக்கள்:

10. இலையா மலரா..
செடியா கொடியா..

11.பூவே.. செம் பூவே..


12. இட்லிப்பூ [எக்ஸோரா]

13. எத்தனை செவ்விதழ்கள்..
எண்ணிச் சொல்லுங்கள்..

14. நாணமோ?

15. கோபமோ?

16. சிகப்பு வெள்ளை கூட்டணி
வாக்களிக்கிறதா தேனீ?

17. கம்பத்துப் பூப்பந்தில்..
சின்னச் சின்ன ரோசாக்கள்


18. சித்திரம் போலொரு செம்பருத்திப் பூவு

19. செந்தாழம் பூவோ..

20. ரோஜா மலரே.. ராஜ குமாரி..

21. தாலாட்டும் தென்றலுக்குத் தலையாட்டும் மலர்கள்

22.வெற்றிலை மென்ற சிவப்பில்
வெற்றிலை போன்ற வடிவில்


செவ்வானத் தீற்றலை உள்வாங்கிக் கடலும் ஏரியும்:

23. பொன் எழில் பூத்தது புது வானில்..


24. பொன் அந்தி மாலைப் பொழுது..
***


முதல் படம் போட்டிக்கு..

தலைப்புக்குப் பொருந்துவதால் மீள்படங்கள் சில தொகுப்பில்..

போட்டிக்கு இதுவரை வந்திருக்கும் படங்களை இங்கே காணலாம்.

சிகப்பு கலர் ஜிங்குச்சா’ எனும் பாடலை இந்நேரம் நீங்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தால் நான் பொறுப்பில்லை:)! எந்த ஜிங்குச்சா குறிப்பாய் உங்களைக் கவர்ந்தது என நேரமிருப்பவர் சொல்லிச் செல்லுங்களேன்!
***

திங்கள், 11 ஏப்ரல், 2011

நிசப்தத்தின் சப்தம் - வடக்கு வாசலில்..


பச்சிளம் புதுத்தளிரின்
நுனிப்பொட்டில் சொட்டும் மழைத்துளி

இடவலமாய் மிக நளினமாய்
அசைந்து மிதந்து தரைசேரும் சருகு

அணில் குஞ்சின் மழலை
காற்றின் ஊதல் கிளைகளின் ஆடல்

இயற்கையின்
ஒவ்வொரு அதிர்விலும் அசைவிலும்
எழும்பும் ஓசைகள் எத்தனை

தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
பிரபஞ்சத்தின் நிசப்தம்.
***

படம்: இணையத்திலிருந்து..

மார்ச் 2011 வடக்கு வாசல் இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும்.., நன்றி வடக்கு வாசல்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

மஞ்சளில் இத்தனை விதங்களா..மலர்களா../‘தனித்திரு விழித்திரு’ அதீதத்தில்..-படங்கள்

அடர் மஞ்சள், வெளிர் மஞ்சள், மனம் வருடும் இளம் மஞ்சள், இதயத்தை அள்ளும் மஞ்சள், பளிச் மஞ்சள், பச்சிலைகளுக்கு நடுவே கொஞ்சும் மஞ்சள், என்னைப் பார் என் அழகைப் பார் எனக் கெஞ்சும் மஞ்சள் என விதவிதமாய் இயற்கை குழைத்த வண்ணங்கள்.

இந்த வியப்பை இன்னும் அதிகரிப்பதாக உள்ளன இயற்கை படைத்த மலர்கள். மஞ்சளிலேதான் எத்தனை வகை மலர்கள்!!! என் காமிராக்கள் கவர்ந்த சில வகைகள் இங்கே..

1. ரோஜா மலரில்.. ராஜ வண்ணமாய்2. குவிந்த மலரில் குளிர்ச்சியாய்..


3. இதயம் அள்ளும் இளம் வண்ணத்தில்..


4. தேன் குவளை


5. தங்க மலர்

ஒன்றரை அங்குலத்தில்..

6. பூப்பந்துகள்


ஏழு. அணிவகுப்பு
லைசன்சுக்கு எட்டு போடுவாங்க. லால்பாகில் கண்காட்சிக்கு மலர்களால் ஏழு!

8. பகலவன் தணலெரிக்கப் புடமாகும் பொன் மஞ்சள்
கரையோரப் பெருமரமொன்றில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த இம்மலர் எவ்வகையோ தெரியாது. [மற்றதெல்லாம் மட்டும் தெரியுதா எனக் கேட்கப் படாது:)]. பகலவனின் கதிரில் கனன்று கொண்டிருந்த ஒரு கொத்தை படகிலே கடக்கும் போது பிடித்தது.

9. தேன் மலர்


10. மூவண்ணத்தில் முன்னணி வகித்து..
இம்மலரின் மொட்டு விரிய ஆரம்பித்த ஓரிரு மணிகளில் முழுதாக மலர்ந்து சிரித்த காட்சி ஒவ்வொரு பருவத்திலும்.., வெவ்வேறு கோணங்களிலும் இங்கே:மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.

லைப்புக்குப் பொருந்தி வருவதால் கீழ் வரும் இரண்டு மீள்படங்களாக:

11.நிமிர்ந்து நோக்கும் செவ்வந்தி


12.நேர்கொண்டு பார்க்கும் செம்பருத்தி

***

பூப்பூவா பூத்திருக்கு பதிவினிலே..
பனிரெண்டு மஞ்சப்பூ!
மனசிலே பதிஞ்சது எந்தப் பூ:)?

***

பகிர்வு:1

நிறத்தை முன்னிறுத்தி இன்று பதிய இவ்விடுகை தயாராக இருக்க, காலையில் வெளியானது PiT ஏப்ரல் மாதப் போட்டிக்கான தலைப்பு: சிகப்பு. காத்திருக்கிறது உங்களுக்கு அவ்வண்ணத்திலும் இம்மாதம் ஒரு அணிவகுப்பு:)!

PiT அறிவிப்பும், அசத்தலான மாதிரிப் படங்களும் இங்கே. சிகப்பு வண்ணத்தில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். (செவ்)வானமே எல்லை:)! இறுதித் தேதி இருபது.

பகிர்வு:2

தனித்திரு விழித்திரு
நான் எடுத்த இப்படம் 1 ஏப்ரல் 2011, அதீதம் இதழின் ஃபோட்டோகிராஃபி பக்கத்தில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்!

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மொழம் - நவீன விருட்சத்தில்..


‘பண்டிகை நேரம்
பதினஞ்சு ரூவாய்க்குப்
பைசா குறையாது மொழம்'

காசில் கறாராய் இருந்தாலும்
களை கட்டியிருந்தது
அவள் கடையிலே வியாபாரம்.

வந்து நின்ற பேருந்திலிருந்து
இறங்குகிறாள் ஒரு இளந்தாய்
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.

எண்ணெய் வைத்து வாரிமுடித்த
பூச்சூடாப் பின்னல் நுனிகள்
பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில்.

கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
குழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா

‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
*** *** ***

படம்: இணையத்திலிருந்து...

20 மார்ச் 2011 நவீனவிருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin