வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தேவதைக்குப் பிடித்த காலணிகள் - கல்கியில்..

வ்வொரு ஞாயிறும் தன்
ஒழுங்கினைப் பாராட்டித்
தலைப்பக்கம் பரிசு
வைத்துச் செல்லும் தேவதைக்குச்
செருப்புச் செய்யப் போவதாகச்
சொன்னாள் பப்பு.

புதன், 25 ஏப்ரல், 2012

புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!

‘வருஷத்தின் 365 நாளுக்கும் ஏதோ ஒரு தினத்தைக் கொண்டாடிக்கிட்டு கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என்பதுதான் இப்பப் பல பேரின் எண்ணமா இருக்கு. இயற்கையோட ஒன்றின வாழ்வும், இதயத்தில் சுரக்கிற நேசமுமா இருந்தப்ப எந்த நாளுக்கும் அவசியம் இருந்திருக்கல. ஆனா இப்ப?

‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.

உலகம் போற அபாயமான பாதையை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு இருக்கிற வளத்தையாவது விட்டு வைக்கணுமேங்கிற அக்கறையிலே அங்க இங்கக் கூட்டு முயற்சியா செயல்படுற இயற்கை ஆர்வலர்களையும் வேலையத்தவங்கன்னு நினைக்கிறாங்க சிலரு. கொஞ்சம் பேராவது உரக்க எடுத்துச் சொல்லிக் களமிறங்கி செயல்படுறதாலதான், பூமியக் காக்க நம்மால என்ன முடியும்ங்கிற சிந்தனை தனி மனுசங்களுக்கு ஏற்படுது. நாட்டுல எத்தனையோ பிரச்சனைங்க இருக்கையில எதுக்கு புவி தினம், சுற்றுப்புறச் சூழல் தினம்னா, அங்க சுத்தி இங்க சுத்தி பசி பஞ்சத்துக்கான காரணங்களுல முக்கியமானதா இருக்கிறதே இயற்கையை மதிக்காத நம்ம போக்குதான்ங்கிற புரிதல் வரும்.

இதோ மூணு நாள் முன்னே கடந்து போச்சு புவிதினம். நாப்பதிரெண்டு வருஷங்களுக்கு முன்ன திரு. கேலார்டு நெல்சன் இந்த தினத்தை ஏற்படுத்தினாருங்கிற தகவலோடு அவர் சொன்ன முக்கியமான ஒரு சங்கதியையும் பகிர்ந்திருந்தார் இங்கே ‘மண், மரம், மழை, மனிதன்’ திரு வின்சென்ட் அவர்கள்:

நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், மண், காடுகள், தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான சொத்து.

இதுல எத்தனை விஷயங்களைப் பாழ்படுத்திட்டோம்ங்கிறத நினைக்கையில பகீருன்னுதான் இருக்கு.

# பரந்து விரிந்து..
இப்படியாக நிழல் பரப்பிக்கிட்டிருந்த நாலாயிரத்தும் மேலான மரங்களை பெங்களூர் மெட்ரோவுக்காகவும் சாலைவிரிவாக்கத்துக்காகவும் இழந்தாச்சு. 37.1 டிகிரி செல்சியஸோட, இந்த வருடத்தின் அதிக வெப்பமான நாளா நேற்றைய தினம். இன்னும் கோடை முடியல. அதுமட்டுமா? தமிழகம் போல கர்நாடகாவின் பலபாகங்கள்ல திடுதிப்புன்னு மின்வெட்டு. உச்சக் கட்டமா,கிருஷ்ணா நதியில் நீரில்லாமல் ரெய்ச்சூர் பவர் ப்ளாண்டின் எட்டுல நாலு யூனிட்கள் ட்ரிப்பாகி விட மின்வெட்டு நேரத்தையும் அதிகரிச்சிருக்காங்க. பாதிப்பு பெங்களூரை முழுசா எட்டலைன்னாலும் வெட்டு விழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நூற்றாண்டுகளா வேர் விட்டுத் தளைச்சு நின்ன பல விருட்சங்களையும்....


அடர்ந்த காடுகளயும்.....வெட்டி சாச்சுட்டு மழையில்லன்னு புலம்பிட்டிருக்கோம். ஆரம்பப் பத்திகளில் நான் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துகளைப் பிரதிபலிச்ச நண்பர் சதங்காவின் புவிநாள் பதிவும் என்னைக் கவர்ந்தது. அதுல இரண்டு பத்திரிகைக் கட்டுரைகளைப் பகிர்ந்திருந்திருந்தார். இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் சொன்னதாக சதங்கா பகிர்ந்ததிலிருந்து:

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

மரங்க செய்யற பேருதவி நாம சின்ன வயசுல படிச்சதுதான். இப்ப திரும்ப நினைவு படுத்திக்கதான் வேண்டியிருக்கு. சில வருடம் முன் நண்பர் உழவன் கார் பார்க் செய்ய தன் வீட்டிலிருந்த மரங்களை வெட்டலாமான்னு முதல்ல யோசிச்சு அப்புறம் வேண்டாம்னு முடிவெடுத்ததைப் பகிர்ந்திருந்தார். அவரைப் பாராட்டிய கையோடு நான் எழுதிய கதைதான் முதன் முதலில் தினமணி கதிரில் எனக்கொரு வாசலைத் திறந்துச்சு: வயலோடு உறவாடி. உங்களுக்கு படிக்க நேரமில்லாட்டாலும் நான் அதன் மூலம் சொல்ல விரும்புனது: வயலு வரப்பு தோட்டந்தொரவு வச்சிருந்தா முடிஞ்ச வரை அதை அப்படியே பேணமுடியுதா பாருங்க. வளைச்சுப் போடக் கண்கொத்திப் பாம்பா இருக்குறாங்க ரியல் எஸ்டேட்காரங்க. வீட்டச் சுத்தி மண்ணா இருக்கிற பூமியை பராமரிக்க கஷ்டமுன்னு சிமெண்ட்டப் போட்டு மூடாதீங்க. வீட்டில இருக்கிற மரங்கள விட்டுவையுங்க. அடுக்கு மாடிக்காரங்க தொட்டியிலயாவது செடி வளருங்க. உங்க பக்கம் இருக்கிற பூங்கா அல்லது சாலையில மரக்கன்றுகளை நட்டு குழந்தைகளைத் தண்ணி ஊத்திப் பரமாரிக்க ஊக்கப் படுத்துங்க ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமியைப் போல: One Boy One Tree

பாருங்க உழவன் ஒரு தனிமனிதனா யோசிச்சு ஒரு மரத்தை வெட்டாம விட்டதை ‘புதிய தலைமுறை’ பத்திரிகைப் பாராட்டி பரிசு வழங்கியிருந்துச்சு, அது எதுக்கு? எல்லாராலும் ஏதோ ஒரு விதத்துல இயற்கையைக் காக்க உதவ முடியும்னு உணர்த்துறதுக்காகதான்:

சென்னையிலிருந்த வரை (இப்ப இருப்பது கோவை) அவரோட குட்டி மகளுக்கு எத்தனை சுத்தமான காத்தை அந்த மரங்கள் கொடுத்திருக்கும்? ‘என் வீட்டுத் தோட்டத்துக்கு வரும் வண்ணத்துப்பூச்சிகளுக்குக் குட்டிக் கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் செல்கிறாள் அகமதி’ன்னு அடுத்த சில மாசத்துல அவர் பகிர்ந்த ஒரு ட்விட்டர், புன்னகையை வரவச்சதோட சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளின் வரவு அந்த மரங்களோட ஆசிர்வாதமுன்னும் நினைக்க வச்சது:)!

ஈரோடு கதிர் மூலமாக நமக்கெல்லாம் தெரியவந்த கோடியில் இருவரை மறக்க முடியுமா? தன்னலமற்று இந்தப் புவிக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நட்டவங்க.

‘நட்டு வளக்காட்டாலும் வெட்டிச் சாய்க்காதீங்க’ன்னு விசும்புகின்றனவோ இந்த Weeping Willow மரங்கள்:

சென்ற வருட புவிதினத்தின் போது நான் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் இது:

உலகின் நிலையான சொத்து எதுவென உணருவோம்!
***


இப்பதிவுக்காக அளித்த விருதுக்கு நன்றி வல்லமை!

http://www.vallamai.com/news-cat/special-news/19606/

திங்கள், 23 ஏப்ரல், 2012

சூதாட்டம் - சொல்வனத்தில்..


கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
மனிதர்கள்

சிப்பாயாக
குதிரை வீரனாக
மதகுருவாக
யானை மேல் தளபதியாக
உயர்வு தாழ்வுகள்
வசதி வாய்ப்புகளுக்கேற்ப.

அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.

விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும்
தாராளமாக அனுமதி.

பயந்து பதுங்கவும்
ஒதுங்கி வழிவிடவும்
உண்டு அனுமதி என்றாலும்
பலவீனங்கள் பலங்களால்
பந்தாடப்படும்
பலகைக்கு உள்ளேயேதான்
போராட்டம்.

கொய்து
எல்லைக்கு அப்பால் எறியப்படும்
நொடி வரையிலும்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
காலம்.
***

17 ஏப்ரல் 2012 சொல்வனத்தில்.., நன்றி சொல்வனம்!

படம்: கவிதையுடன் வெளியானது..

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

முகிலெடுத்து முகம் துடைத்து.. - பொன்மாலைப் படங்கள்

# 1 முகிலெடுத்து முகம் துடைத்து..
#2 ..மின்னுகிறதோ பொன்னாக!


#3 பரிவட்டம்

#4 சித்திரச் செவ்வானம்
*****

வியாழன், 19 ஏப்ரல், 2012

சிற்றருவியின் சங்கீதம் - வடக்கு வாசலில்..

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி

கூடச் சேர்ந்து இசைக்கக்
காட்டுக் குயிலோ
சுற்றி வந்து ரசிக்க
ஒரு சிட்டுக்குருவியோ
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியோ
ஏதுமற்றத் தனிவெளியில்.

ஆகாய மேகங்கள்
கண்டும் காணாது நகர

சூரியனின் ஒளிக்கதிர்கள்
அருவியின் தலைகோதிப்
பின்னலிட்டு
வானவில்லின் வண்ணங்களில்
பூச்சூட்டி
அழகு பார்க்கும் மனமின்றித்
திரும்பிக் கொள்ள

சூழ இருந்த பெருமலைகளோ
அசைந்து விலகவும் இயலாத
ஆத்திரத்தில்
குதூகலப் பாடலைத் தவிர்க்கக்
கொடும் பாறைகளாய் இறுகி.

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி.
***

படம் நன்றி: ஸ்ருதி http://www.flickr.com/photos/sruthiclicks/6252978980/in/photostream


ஏப்ரல் 2012 வடக்குவாசலில் இக்கவிதையும், இதழின் அட்டையில் நான் எடுத்த ஒளிப்படமும்! நன்றி வடக்கு வாசல்!















புதன், 18 ஏப்ரல், 2012

தூறல்: 4 - தலைக்கு வந்தது..

லுக்கும் நிகழ்வாக கைக்குழந்தை ஹீனாவுக்கு நேர்ந்த கொடுமை. பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்தினால் தகப்பன் உமரால் சித்திரவதைக்கு ஆளாகி மூச்சை நிறுத்தி விட்ட சின்ன மலர். ஹினாவின் தாய் ரேஷ்மா பத்தொன்பது வயதுக்குள் வாழ்வின் மோசமான பக்கங்களைப் பார்த்து விட்டார். வீட்டுப் பணியில் எனக்கு உதவ வருகிறவர், இவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தைக்கும் தாய்க்கும் நேர்ந்த சித்திரவதைகளாக (பத்திரிகைகளில் வராத தகவல்களாக) அவர் சொன்ன எதையும் இங்கே பகிரக் கூட மனம் வரவில்லை. பெண் சிசுக் கொலை, குடும்ப வன்முறை இவற்றுக்கு எதிரான சட்ட திட்டங்கள் பெயரளவிலே இருக்க, இது போல நடப்பவை நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ரேஷ்மா விட்ட தன் படிப்பைத் தொடர உள்ளார். உமர் தனிமைச் சிறையில் தற்போது. காரணம், அவன் செய்த குற்றத்தை அறிய வந்த சக சிறைவாசிகள் கொந்தளித்துப் போய் மூர்க்கத்துடன் அவனைத் தாக்கியிருக்கிறார்கள். குற்றவாளிகளாலும் கூட ஏற்க முடியாத குற்றமாக இது!

குழந்தைகளில் ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசம் பாராட்டாதீர்கள் எனக் கோரும் என் முந்தைய பதிவொன்று இங்கே: செல்வக் களஞ்சியங்கள்

அதிலும் பெண் குழந்தைகள் கடவுள் தருகிற வரம். அவர்கள் பூமியை இரட்சிக்க வந்த தேவதைகள்!

மிழ்புத்தாண்டு அதீதம் சிறப்பிதழ் கொண்டாடுகிறது அத்தேவதைகளை தன் ஃபோட்டோ கார்னரில்.. “தேவதைகள் வாழும் பூமி

பிரேம்குமார் படம்: ஒன்று

முரளிதரன் அழகர் படங்கள்: ஒன்று ; இரண்டு ; மூன்று [மூன்றாவது படம் ஒரு கவிதை. சின்னத் தேவதைகளும் சந்தோஷமாக அவர்களை எதிர் கொள்ளும் முதியவரும், பார்த்து நிற்கும் அன்னையின் பூரிப்பும் என் கண்களை விட்டு அகலவே இல்லை. ஆகச் சிறந்த படமென்பேன்.]
***

ஏப்ரல் I அதீதம் வலையோசை - ஹுஸைனம்மா
ஏப்ரல் II அதீதம் வலையோசை - க. பாலாசி

சொல்லிச் சொல்லிப் பார்த்தது ராஜஸ்தான் அரசாங்கம், குழந்தைத் திருமணம் குற்றமென. மக்கள் காதில் போட்டுக் கொள்கிற மாதிரித் தெரியவில்லை. இன்னொரு முயற்சியாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. பத்திரிகை அச்சடிக்க வருகிறவர்களிடம் மாப்பிள்ளை, பெண் பிறப்பு சான்றிதழ்களை வாங்கிப் பார்ப்பதுடன் அவர்கள் திருமண வயதை அடைந்தவர்களா என விசாரித்து அறிந்து உறுதிப் படுத்திய பின்னரே அச்சகங்கள் அழைப்பிதழ்களை அடிக்க வேண்டும். மீறி அவர்கள் குழந்தைகள் எனத் தெரிய வந்தால் முதல் வாரன்ட் அச்சக உரிமையாளருக்குதான். எல்லாச் சட்டங்களிலும் எங்கே ஓட்டையைப் போடலாமென ஆராயும் புத்திசாலிகள் நிறைந்தது நம் நாடென்றாலும் இந்தச் சட்டம் நல்லாதானிருக்கு. ஒரு நாலு பேராவது பின்வாங்க மாட்டார்களா?

பெங்களூரில் இதுவரையில் மூன்றுமுறைகள் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கின்றன. ’92-ல் சன்னல்கள் பூட்டிய அறையில் நள்ளிரவில் திடீரென அலமாரி சாவித் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாவிக் கொத்து டங்டங் என தொடர்ந்து அலமாரிக் கதவில் மோதிக் கொண்டது. 2001-ல் காலை 11 மணியளவில் சில நொடிகள் ஷோகேஸில் இருந்த கண்ணாடிச் சாமான்கள் மெலிதாக நாட்டியமாடின. சென்றவாரத்தில் உணர்ந்ததுதான் அதிகம். கழுத்து, முதுகு வலி தவிர்க்க இப்போது மடிக்கணினியை மரப்பலகை இணைக்கப்பட்ட (study chair) நாற்காலியில் அமர்ந்தே உபயோகிக்கிறேன். அதில் வேலையாக இருக்கையில் ஒரு சீராக தொடர்ந்து ஆடியது. சற்று சொகுசாக கூட இருந்தது:)! பிரமை என்றே நினைத்தேன். பிறகு உற்று ஷோகேசிலிருந்த க்றிஸ்டல் தாமரைகள் ஆடுகின்றனவா எனப் பார்த்தேன். இல்லை என்றதும் வேலையைத் தொடர ஆட்டமும் தொடர்ந்தது. சந்தேகத்துடன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒருசிலர் மட்டும் பரபரப்பாக வெளியில் வந்து ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் கணவர் அழைத்து தாங்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வெளியே இருப்பதாகச் சொன்னதுமே புரிந்தது. அம்மா, தங்கை ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தபடி இருக்க, சிலநிமிடங்களில் ஆபத்தில்லை என மறுபடி தகவல் சொன்னார் கணவர். பெரும்பாலும் அடுக்குமாடிகளில் இருந்தவர்களுக்கே நடுக்கத்தை உணர முடிந்திருக்கிறது. அப்படியும் பதினோராவது மாடியில் தனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாள் தங்கை.

டுக்கம் வந்த மறுநாள் மாலை, பெங்களூர் ஜி. எம் பாளையாவில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் வசிக்கும் ஒரு பெண்மணி தங்கள் கட்டிடத்துக்கு வெகு அருகாமையில் பயங்கரமாக விமானச் சத்தம் கேட்க கிலியில் நடுங்கி விட்டாராம் ‘நேற்றுதான் நிலம் நடுங்கியது, இப்போது இது என்ன சத்தம்’ என. நினைத்து முடிக்கும் முன்னரே தலைக்கு மேலே ’தட் தடார்’ என ஏதோ இறங்கியது போலிருக்க மொட்டைமாடிக்கு ஓடியிருக்கிறார். பார்த்தால் அங்கே ஒரு ஹெலிகாப்டர் லேண்ட் ஆகியிருக்க, ரோடார் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்க பைலட்கள் பதட்டமாக இறங்கி ஓடிவந்தபடி ‘பக்கத்துல வராதீங்க. கீழே ஓடுங்க’ எனத் துரிதப் படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து கட்டிடத்திலிருந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு, ஆபத்தில்லை என ஊர்ஜிதம் ஆனபிறகே நிம்மதியாகியிருக்கிறார்கள். எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. கட்டிடத்துக்கும் சரி, குடியிருப்பினர் மற்றும் பைலட்களுக்கும் சரி யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

விஷயம் இதுதான். பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்றில் திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட உடனடியாக இறக்கியாக வேண்டிய சூழலில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் நிறைந்த அப்பகுதியின் ஒரு மைதானம் கண்ணில் பட்டிருக்கிறது. ஆனால் அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும், உயர் அழுத்த மின் கம்பிகளும் அதற்கு தடையாக இருக்க “எங்கடா இறக்கறது” எனப் பார்த்தபடியே வந்து இந்தக் குடியிருப்பில் மொட்டைமாடியில் இறக்கி விட்டார்கள். மறுநாள் க்ரேன் மூலமாக ஹெலிகாப்டர் அகற்றப்படும் வரை குடியிருப்பினர் தவிர யாரும் பாதுகாப்பு காரணமாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஹெலிகாப்டர் சாலைக்கு இறக்கப்பட்டதும் அதில் ஏறியே தீரணுமென அழுத ஒரு குழந்தையை அதிகாரிகள் வேறுவழியில்லாமல் ஏற்றிவிட்டு கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்திருக்கிறார்கள். பின்னே ஒருநாள் நிறுத்தி வைத்ததற்கும், சொல்லாமக் கொள்ளாம கட்டிடத்தில் இறக்கியதற்கும் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?


சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.

சரிதானே நான் சொல்வது:)? செல்லும் நிகழ்வுகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அனுபவப் பகிர்வுகள் எதுவாயினும் படங்களுடன் பதிய வேண்டுமென்கிற ஆவலும் அவசியமும் எல்லோருக்கும் இருக்கிறது. பெரும்பாலும் நாம் அதிக பட்ச பிக்ஸலில் வைத்தே படமெடுக்கிறோம். அவற்றை அதே அளவுகளில் உபயோகிப்பது பல சிக்கல்களைத் தருவதால் அளவைக் குறைக்க வேண்டியது அவசியமாகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேலான படங்களை ஒரு பதிவுக்கு உபயோக்க வேண்டியுள்ளது. அல்லது ஒரு பத்திரிகைக்கோ, இணைய இதழுக்கோ சிலபடங்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. இவற்றுகான தீர்வை என் அனுபவத்தில் நான் பின்படுத்தும் முறையை PiT (தமிழில் புகைப்படக்கலை) தளத்தில் பகிர்ந்துள்ளேன்: இர்ஃபான்வ்யூ - படங்களின் அளவைக் குறைக்கவும் பல்வேறு தேவைகளுக்கும்.. தேவையிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கூடி வாழ்தல்

ஏப்ரல் I அதீதம் ஃபோட்டோ கார்னரிலும்.
***

(அவ்வப்போது தூறும்..)

சனி, 14 ஏப்ரல், 2012

மழலையின் பாட்டு - ‘வல்லமை’ சித்திரைச் சிறப்பிதழில்..



விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டி,
மடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டி
குழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்
முகிலாடையால் மூடிக் கிடந்தது

எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்
பொங்கிடலாம் கடல் என்றார்கள்

வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்த
சொந்தங்களின் நினைப்பால்
கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல்

வீசும் காற்று பிடில் வாசிக்க
பாசத்துடன் பாடுகிறாள்
கண்ணே கண்ணுறங்கென.

கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும்
நாளெல்லாம் உருண்ட களைப்பில்
சொகுசாய் மணலுள் புதைந்து
கண் அசர

சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்து
சமர்த்தாக அலைகள் சுருண்டு
பின் வாங்க

கரையின் நீண்ட மணற்பரப்பு
நெட்டி முறிக்கிறது
அயர்வாக.

உறைந்திருந்த அமைதியில்
மறைந்திருந்த அச்சங்களைக்
கரைத்துக் கொண்டிருந்த
அன்னையின் தாலாட்டுக்கு

‘ம்.. ம்..’ எனக் குழந்தை இசைத்த
எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
விரைகிறது முகிலொன்று

ஆழ்கடலுக்குள் சென்றிருந்த தந்தையின்
ஓடம் தேடி..
***

13 ஏப்ரல் 2012, வல்லமை சித்திரைச் சிறப்பிதழில்..,நன்றி வல்லமை!
படம் நன்றி: இணையம்




11 ஏப்ரல், கருணை காட்டிய கடல் அன்னைக்கு வந்தனங்கள்.

இயற்கையின் ஆசிகளுடன் நந்தன வருடம் வளமாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!

புதன், 11 ஏப்ரல், 2012

அறிவின் கருவி

ஆறுதல் பரிசு

1. பலத்தை நம்பி வாக்குக் கொடுத்த பின் பயங்களின் மீது செயல்படாதிருப்போம்.

2. வாழ்க்கைக் களத்தில் பலசாலிகளின் கைகளுக்கே வெற்றிப் பந்து செல்கிறது என ஒதுங்குவது சரியல்ல. ‘என்னால் முடியும்’ எனும் எண்ணம் எதையும் சாதிக்கும்.

3. நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன வாழ்க்கை அனுபவங்கள், திறமை மட்டும் போதாது, உழைப்பும் முயற்சியும் சேர்ந்தாலே வெற்றி என்பதை.

4. அறிவின் கருவிகளைத் தவறாகப் பயன்படுத்துவது நாம்தானேயன்றி கருவிகளில் பிழையில்லை.

5. வாழ்க்கை ஒரு பயணம். இருக்கட்டும் பாதையில் கவனம்.

6. தோற்பவர்கள் தடங்கல்களை ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். ஜெயிப்பவர்கள் வாய்ப்புகளை அலசுபவர்களாய் இருக்கிறார்கள்.

7. எதையுமே இழக்கக் கூடாதென எண்ணுபவர் (எதையுமே செய்யாதவராய்) வாழாவிருந்து, வாழ்க்கையை இழக்கிறார்.

8. சுருக்கமாய், தைரியமாய், தனித்தன்மையுடன், தவறான புரிதல்களுக்கு இடமின்றிப் பேசுதல் சிறப்பு.

9. எதிர் கொள்ள நேரும் நிராகரிப்புகள், விதியின் கட்டளையோ இறுதிக் கட்டங்களோ அன்று. தனிநபர்களின் கருத்து மட்டுமே.

10. பூதாகாரமாய் தோன்றும் எல்லாப் பிரச்சனைகளும் கையோடு ஆறுதல் பரிசாய் அழகிய மலர் ஒன்றை ஏந்தியே வருகின்றன.

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)




தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி


சனி, 7 ஏப்ரல், 2012

கோடு போட்டா ரோடு.. - ஏப்ரல் PiT போட்டி - 19 மாதிரிப் படங்கள்

வழிநடத்தும் கோடுகள் [leading lines]! ஒளிப்படக் கலையின் அடிப்படைகளில் ஒன்றான இதையே தலைப்பாக அறிவித்திருக்கிறார் நடுவர் MQN. புரிந்து கொண்டால்.. மாதிரிப் படங்களைப் பார்த்தால்.. போட்டி ரொம்ப ரொம்ப சுலபமென நீங்களே சொல்வீர்கள். படமெடுக்கும் போது கருப்பொருளை நோக்கி நம்மை கூட்டிப்போகிற மாதிரி கோடுகள் கிடைச்சா.. அதை அப்படியே பின் பற்றிப் போய் கோணத்தை அமைச்சா.. வேலை முடிஞ்சுது. கோடு போட்டா ரோடு என்பார்களே, அதேதான்.

இந்தக் கோடுகள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள், சாலைகள், கடல், வானம், வேலியென. எப்படியெனப் பார்ப்போம். முதல் நான்கும் PiT அறிவிப்புப் பதிவிலும் வெளியாகியிருப்பவை. மேலும் ‘சில’ முத்துச்சரத்தில் காட்டலாமென ஆல்பத்தைப் புரட்டிய போது கிடைத்ததோ ‘பல’:). இருக்கட்டும் மாதிரிக்கு என்று அனைத்தையும் தொகுத்து விட்டேன்:

#1 மணி மண்டபம் நோக்கி இழுத்துச் செல்லுகிறது பூக்களின் வரிசை
[பெங்களூர் ரமண மகிரிஷி பூங்காவின் கெம்பகெளடா மண்டபம்]

#2 மலையொட்டிய பாதையில் பார்ப்பவரை அழைத்துச் செல்லும் கோடு:
கிருஷ்ணகிரி சேலம் வழியாக வந்த போது...

#3 சிங்கப்பூர் சாலை... தூரத்தில் தெரியும் Marina Bay Sands ஹோட்டலுக்கு வழி நடத்திச் செல்வது போலான கோடுகளுடன்..


#4 ஜிவ்வென வேகமாக ஊருக்குள்ளே கூட்டிச் செல்லும் சிங்கப்பூர் பாலம்:

#5 நாழிக் கிணறு நோக்கிக் கூட்டிப் போகிற திருச்செந்தூர் பிரகாரம்:

#6 கருங்குளம் கிராமத்தை நோக்கி இறங்கிச் செல்ல அழைக்கிற படிக்கட்டு:


#7 ஷ்ராவணபெலகுலா கோமதீஷ்வரரை தரிசிக்க ஏறிவர அழைக்கும் படிக்கட்டு:


#8 சாவகாசமாக நடைபோடும் இவர்களை வேகமாகக் கடந்து போக அழைக்கிற மாதிரி கோடுகள்?
நெல்லையப்பர் கோவில் இரண்டாம் சுற்றுப் பிரகாரம்.

#9 ஆனை காந்திமதியைப் பார்க்கக் கூட்டிச் செல்லும் கோடு:

#10 நடை சாத்திய கதவுகளுக்குள் வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்து வரச் சொல்லும் கோடுகள்:[காந்திமதி அம்மன் சன்னதியின் இடப்பக்கம் இருக்கிறது].

#11 கோவை தாஜில்..

ஒரு கிறுஸ்துமஸ் தினத்தில்.. அலங்காரத்துடன்..

#12 ‘சன்னல் வழியே வேடிக்கை பார்க்கணுமா?’ கேட்கின்றன கோடுகள்:


பசுமை நிறைந்த நினைவுகளுடன் கீழ்வரும் நான்கு. படித்த பள்ளிக்கு இரண்டு வருடம் முன்பு சென்றிருந்த போது எடுத்தவை :

#13 பள்ளிமேடைக்குப் பார்வை இழுத்துச் செல்லுகின்றன கட்டிடத்தின் பக்கவாட்டுக் கோடுகள்:


#14 என் பனிரெண்டாம் வகுப்பறை இருந்த வராந்தா:


#15 பள்ளி தேவாலயமும் நான் படித்த பத்தாம் வகுப்பறையும் இங்கேதான் உள்ளன:


#16 தேவாலயக் கட்டிடத்தையும், தலைமை ஆசிரியர் தங்கும் கட்டிடத்தையும் இணைக்கிற பாலம்:


#17 சிகப்பு உடைச் சிறுமி சிந்தும் புன்னகையை ரசிக்க அழைத்துச் செல்லுகின்றன மஞ்சள் கம்பிகளும் அவளது கைகளும்:


#18 வானம் தொட்டு விடும் தூரம்தான்:
சிங்கப்பூரில்..

#19 ஒத்தையடிப் பாலத்துல பேலன்ஸ் செஞ்சு கடந்து பச்சைப் பசேல் வயலுக்குப் போகலாமா?
குமரகம் தாஜில் எடுத்த இப்படத்தை நேற்றுதான் ஃப்ளிக்கரில் பதிந்தேன் “இப்பவே இதில் ஏறி நடக்கணும் போலிருக்கே’ என்றிருந்தார் நண்பர் ஜேம்ஸ். அப்படி உணர வைப்பதே படத்திற்கான வெற்றி! அதற்கு உதவி செய்பவையே கோடுகள்!


நடுவர் MQN போட்ட தலைப்புக் கோட்டின் மேல் மளமளவென ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள் இங்கே. சீக்கிரமா உங்க படத்தையும் அதில் சேர்த்திடுங்கள். மற்றவர் படங்களைப் பார்த்துக் கருத்துகளை வழங்கி உற்சாகப் படுத்துங்கள். ரோடு போடக் கடைசித் தேதி: 20 ஏப்ரல்:)!
***

வியாழன், 5 ஏப்ரல், 2012

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் - நன்றி வடக்குவாசல்!

வடக்குவாசல் இதழ் தபாலில் வந்ததுமே ‘இந்த மாதம் என்ன அட்டைப்படம்’ எனும் ஆவலுடனேயே உறையைப் பிரிப்பது வழக்கம். ஒவ்வொரு இதழிலும் வித்தியாசமான, ரசனைக்குரிய தேர்வுகளாக இருக்கும் அவை. ஒரு நிமிடம் முழுமையாக ரசித்த பின்னரே மற்ற படைப்புகளைத் தேடி இதழைப் புரட்டும் விரல்கள். நான் விரும்பி ரசித்து வந்த அட்டையில் இன்று நான் எடுத்த படமே இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

அட்டைப்பட கெளரவத்துக்கும், படைப்புகளுக்குத் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும் நன்றி வடக்குவாசல்! இந்த இதழில் என் ‘சிற்றருவியின் சங்கீதம்’ கவிதையும் வெளியாகியுள்ளது, விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்:)!

ஆழ்வண்ண படத்துக்கு ஆகாய நீலத்தைப் பின்னணியாக்கி அருமையாக வடிவமைத்திருக்கும் திரு செந்தில்குமாருக்கும் நன்றி.

***

ஜனவரி மாத குங்குமம் இதழின் ‘வந்தாச்சு’ பகுதியில் வடக்குவாசல் குறித்த பாராட்டில் அதன் அட்டைப்படத் தேர்வும் சிலாகிக்கப் பட்டிருந்ததைப் பார்த்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

***

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - அமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலரில்


சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்பதென்றால் குழந்தைகள் எல்லோருக்கும் அத்தனைப் பிரியம். வயதாகி விட்டாலே இயலாமையின் விளிம்பில் இளமைக்கால பிரதாபங்களை எடுத்து விடும் இயல்புக்கு விலக்கில்லை தாத்தாவும். அறுபதை நெருங்கிய ஒடிந்த தேகம். முறுக்கி விட்ட வெள்ளை மீசையும், பம்மென அடர்ந்த நரை முடியும், கணீர் குரலுமாகக் கம்பீரத் தோற்றம் முழுவதுமாகக் குலைந்து விடாததாலேயே அந்த குடியிருப்பின் காவல்காரராக காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறார் இன்னும் தான் காளைதான் என்ற நினைப்பில்.

பள்ளி விட்டு வரும் குழந்தைகள் பட்டாளமாக தினசரி மாலை நேரத்தில் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி அடைக்கப்பட்ட இளவரசியை அரக்கனிடமிருந்து மீட்க இளவரசன் போராடும் மந்திர தந்திரக் கதையில் வரும் தாக்க வரும் பறக்கும் பாம்புகளும், விழுங்க வரும் விசித்திர மிருகங்களும் இன்றைய ஹாரி பாட்டர் கதையை விட சுவாரஸ்யமாக இருப்பதைக் குழந்தைகள் உணர்ந்திருந்தார்கள். சிந்துபாத் கதையைப் போல முடிவில்லாமல் அவர் ஏற்ற இறக்கத்துடன் தொடருவதைத் தினம் கேட்காவிட்டால் தலை வெடித்துப் போகும் பிள்ளைகளுக்கு. தொலைக்காட்சிக்குள் தொலைந்து போகும் இன்றைய பிள்ளைகளை இப்படிக் கட்டிப்போட முடிகிறதென்றால் தாத்தா நிஜமாகவே கெட்டிக்காரர்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin