Friday, September 28, 2012

பூமி சிரிக்குது பூக்களிலே..

#1. நலம். நலமறிய ஆவல்..


#2. கொஞ்சும் மஞ்சள்


#3. பூமி சிரிக்குது பூக்களிலே..


#4. தளிருது மலருது


#5. சின்னச் சின்னப் பூக்கள்


#6. நாளைய மலர்கள் 
இன்றைய தளிர்களில்..

#7 ரோசாப்பூ


#8. Golden Trumpet (Allamanda)
Yellow Bell அல்லது Buttercup Flower என்றும் பெயருண்டு. 

பல்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு இது. காணும் போதெல்லாம் சிறைப்படுத்தி வரும் பூமியின் சிரிப்பை அவ்வப்போது தொகுப்பாகப் பகிருவது தொடரும்:)!
***

Monday, September 24, 2012

கேட்பினும் பெரிது கேள்! - புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..

கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ நிஜமோ, பொதுவானதோ புதிரானதோ, அழகோ அல்லாததோ, நேர்மையோ அநீதியோ.., வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் கோர்த்து வாசிப்பவரை மீண்டும் வரிகளிலே வாழச் செய்வதே என நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது.

கவிதையின் இன்றியமையாமையைக் கருத்தினில் கொண்டு க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோர் கவிதைகளுக்காகவே வெளியிட்டு வரும் இருமாதச் சிற்றிதழ் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!”. கவிதைகளோடு அதில் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. தனது அறுபதாவது இதழில் அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது . பலரது படைப்புகளோடு ஒரு குறிப்பிட்டக் கவிஞரின் சிறப்பிதழாகவும் கவிஞர்களைக் கெளரவித்து வருகிற புன்னகையின் எழுபதாவது இதழில் அந்தப் பெருமையைப் பெறுகின்றவர் கவிஞர் கதிர்பாரதி. ஜூலை-ஆகஸ்ட் 2012 புன்னகையில் இவரது 13 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு இதழிலும் கவிதை குறித்த பார்வையாக அமைகிற முதல் பக்கம் புன்னகையின் சிறப்பம்சம். எழுபதாவது இதழின் முதல் பக்க வரிகளில் சில, கவிதையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிற கதிர்பாரதிக்கும் அவரது கவிதைகளுக்குமே பொருந்துவதாக:
  • “கவிதையை உணர்ந்து படைப்பவர்களுக்கும் கவிதையை உள்ளக் கிளர்ச்சியோடு தேடுகிறவர்களுக்காகவும் கவிதை தன்னை ஒப்படைத்துவிடவே ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறது.
  • கவிதை கடைசிச் சொட்டு கண்ணீரையும் ஒற்றியெடுக்கும் கைக்குட்டையாகவும் இருக்கும்.
  • கவிதை போராட்டத்தின் வலிமையை கூடுதலாக்கும் ஒரு வைராக்கியச் சொல்லாகவும் மாறும்.
  • தனித்த பயணத்தில் பாதைகாட்டியாகவும் தன்னை அடையாளப்படுத்தும்.”
பத்திரிகைகள், சிற்றிதழ்கள் மற்றும் இணையம் மூலமாக இவரது கவிதைகள் ஏற்கனவே எனக்குப் பரிச்சயம் என்கிற வகையிலேயே இதை எளிதாக உணரவும் சொல்லவும் முடிகிறது. சீரணிக்கச் சிரமமான, வாழ்வின் கடினமான நிதர்சனங்களைப் படம் பிடிப்பவையாக இருக்கின்றன இவரது கவிதைகள். கூர்மையுடன் கவனிக்கிற வாசகருக்கு நல்லன அல்லாதன எவையும் இவர் கண்களினின்று தப்பாததும் சமூகத்தின் மீதானக் கோபங்களைக் கூட அழகியலுடன் அங்கதம் கலந்து சொல்லிச் செல்வதும் புலனாகும். அன்பு நகரில்,
அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்” என்ற சுற்றலா வழிகாட்டியின் வார்த்தைகளில் பதற்றமுற்று அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்துக்குத் தப்பித்து வந்ததைச் சொல்லுகிற ‘அன்பின் வாதை’ அப்படியான ஒன்றே.

வேம்பு கசப்பதில்லை’ கவிதையின் வார்த்தை வனப்பில் தமிழ் தித்திக்கிறது:
...ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை.

பழைய குடும்பப் படங்கள் எதேச்சையாகக் கையில் கிடைக்கையில் அதில் நம்மையே தொலைத்து விடுகிறோம். நம் அனைவரின் உணர்வாகவும் இந்தக் ‘குடும்பப் புகைப்படம்’:

நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்” என நீளுகின்ற கவிதையில் இந்தக் கடைசி நான்குவரிகளில் ஒரு திடுக்கிடலை உணரவே செய்கிறோம்.

வீட்டை எட்டிப் பார்த்தல்’. மனித இயல்புகளில் ஒன்றான இதை விவரித்துச் செல்லுகிறவர் முடிவில்,
...புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.
ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.” என பெண்ணின் சோகத்துக்கான காரணங்களை வாசகர் கற்பனைக்கு விட்டு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

‘நமது வாழ்வை முழுமையாக வாழுகிறோமோ?’ கேட்டுக் கொள்ளாமல் கடக்கவே இயலாது நம்மால் மற்றுமொரு கவிதையான ‘கடக்க இயலாத தெரு’வை:
தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாக தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.

சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து, இவரிடம் தன்னை ஒப்படைத்த கவிதைக்கு நேர்மையாக ஒவ்வொரு கணத்தையும் வரிகளாக வடித்து, நம் உணர்வுகளையும் அவற்றில் உயிர்த்தெழச் செய்கிற கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த வருடம் வெளியாக இருக்கிறது. வாழ்த்துவோம் கவிஞரை.
***

புன்னகை இதழின் ஆண்டுச் சந்தா: ரூ.60
அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642 104
படைப்புகள் அனுப்ப:
punnagaikavi@gmail.com

Saturday, September 22, 2012

அவள் - மலைகள் இதழில்..நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.
***

18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்!

Thursday, September 20, 2012

கணபதியே காப்பாய்..


#1. கைவினைத் திறனில் உருவான வினை தீர்க்கும் விநாயகர்

வேழ முகத்தோனின் ஆசிகள் வேண்டி சதுர்த்தி தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.

 #2. கணபதியே அருள்வாய்

பண்டிகைக்கு முன்னாலிருந்தே பெங்களூர் மாநகராட்சியும்(BBMP) மாநில மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் (KSPCB) வண்ணம் தீட்டிய விநாயகர் உருவச் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சிலை செய்பவர்களையும் அதிக அளவில் களிமண் சிலைகளை விற்பனைக்குக் கொண்டுவர ஆணையிட்டிருந்தது. ஆனால் விற்ற பத்து சிலைகளில் எட்டு வண்ணப் பிள்ளையார்களே. வண்ணப் பிள்ளையாரை செய்ய உபயோகிக்கும் மண்ணை விட களிமண் சிலைகள் உயர்தர மண்ணில் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விலை அதிகமென்றும், சம அளவில் இரண்டும் கிடைக்குமாறு செய்திருந்தும் மக்கள் அதை வாங்கவில்லையென்றும் விற்காத களிமண் பிள்ளையார்களைக் காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். மக்களைக் கவர கிரீடம், நகைகளுக்கு மட்டும் பொன் வண்ணம் தீட்டியிருந்தும் பயன் இருக்கவில்லை.
#3.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்வரையிலும் களிமண் பிள்ளையார்கள் குறிப்பிட்ட சில இடங்களிலேயே கிடைத்து வந்தது. தேடிச் சென்று வாங்கிவருவோம், ஊர் வழக்கம் அதுவென்பதால். இப்போது எல்லா இடங்களிலும் கிடைத்தும் கூட, வண்ணச் சிலைகளே மக்களின் தேர்வாக இருக்கிறது.., ஏரிகளில் அவற்றைக் கரைப்பதால் நீர் வாழ் உயிரனங்கள், உபயோகிக்கும் மனிதர்கள், தாவரங்களுக்கு இரசாயனங்களால் கேடு என்பது தெரிந்தும். ஆசையுடன் குழந்தைகள் அவற்றைத் தொட்டுக் குதூகலிக்கிறார்கள். அதே கையுடன் அவர்கள் எதையேனும் சாப்பிட நேர்ந்தால் வண்ண இரசாயனம் உடல்நலனுக்கு உடனே தீங்காகும் எனவும் அறியப்படுகிறது.

தத்தமது வியாபார ஸ்தலங்கள் முன்னால் பொது இடத்தில் வைத்துப் பூசை செய்வதில் யாருடைய சிலை பெரியது என்பதில் போட்டியும் நிலவுவதால் பெரிய வண்ணச் சிலைகளின் விற்பனை அதிகமாகவே இருந்திருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் எடுபடாததால் வரும் வருடத்தில் வண்ணப் பிள்ளையார் சிலைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை. ஆனால் ஆளும் மாநில அரசு  அதை அமல்படுத்துமா அரசியல் காரணங்களுக்காக மீண்டும் கோரிக்கை வைப்பதுடன் நிறுத்திடுமா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது ஏரிகளில் கரைப்பதை முடிந்தவரை தடுத்திட கர்நாடக அரசே பெங்களூரின் பல பாகங்களிலிருந்து பிள்ளையார்களைப் பெற்று முறைப்படி அவற்றைக் கரைக்க ஆவன செய்துள்ளது. எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு பிள்ளையார்களை எடுத்துச் செல்வார்கள் என்கிற அறிவிப்பையும் செய்தித்தாள்களில் அறியத் தந்திருக்கிறது.

கரைப்பதற்கு கிணறு இல்லாத நிலையில் ஆரம்ப காலத்தில் ஏரிகளில் கரைத்திருக்கிறோம் நாங்களும். வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.

#4 ஞான முதல்வன்
எளிய கடவுள் பிள்ளையார்.  அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்.

#5. பண்டிகைக்குப் பிறகு ஓய்வாக:
(ஓய்வெடுத்த பின் கவனிக்க ஓரமாக வைப்போம் விண்ணப்பம்.)
கணபதியே காப்பாய்..
வையகத்தின் பசுமையை.. இயற்கையின் கொடையை..
***

Monday, September 17, 2012

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..- திண்ணை இதழில்..

ந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..' செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.

ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.

தொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே: http://www.vadakkuvaasal.com/. இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html

பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா?” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டுச் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.

***

16 செப்டம்பர் 2012 திண்ணை இதழில், நன்றி திண்ணை!

Friday, September 14, 2012

தூறல்:8 - குங்குமம் வலைப்பேச்சு; பெங்களூரில் பேருந்துகள் வேலைநிறுத்தம்

ந்தவாரக் குங்குமம் வலைப்பேச்சில்..., என் சென்ற பதிவாகிய காரணம் ஆயிரத்திலிருந்து..

நன்றி குங்குமம்:)!ஜூலை 2012 பூவரசி சிற்றிதழில் எனது 'தொடரும் பயணம்' கவிதை.

நன்றி பூவரசி!

ஈழவாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சமூக இலக்கிய சினிமா அரசியல் அரையாண்டிதழ் பூவரசி. விலை:125. இது இரண்டாவது இதழாகும்.
தொடர்புக்கும் படைப்புகள் அனுப்பவும்:
editor@poovarashi.com
poovarashi@gmail.com

அதீதம் கார்னர்:
அபிராமி அந்தாதி

தூறல்:7-ல் அதீதம் ஒலிப்பேழை குறித்தும் அதன் முதல் வெளியீடான தாலாட்டுப் பாடலையும் பகிர்ந்திருந்தேன். இப்போது தொடராக அதில் அபிராமி அந்தாதி வெளிவரத் தொடங்கியுள்ளது, ராகங்களின் அடிப்படையில். காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே செல்லலாம். திருமதி இந்திரா சுப்பிரமணியன் அவர்கள் அற்புதமாகப் பாட, தாயாரின் குரலை நேர்த்தியாகப் பதிவு செய்து பொருளும் எழுதியிருப்பவர் பதிவர் அப்பாதுரை அவர்கள்.


ரசுப் பேருந்துக்கழக ஊழியர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நேற்றிலிருந்து. செய்தித்தாளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது அரசு. நடக்கவிருந்த பரீட்சைகள் தள்ளிப் போயுள்ளன. சில தனியார் பள்ளிகளோ காலையில் விடுமுறையை அறிவிக்காமல் குறைந்த அளவு மாணவர் வருகையால் பிறகு அறிவிக்க அவர்கள் வீடு திரும்பத் திண்டாடும் சூழல் நகரெங்கும் இருந்திருக்கிறது. காஷ்மீரிலிருந்து பொறியியல் கல்லூரில் சேருவதற்காகத் தனியாக முதன் முறையாக பெங்களூர் வந்து இறங்கிய இளைஞன் உட்பட, ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் மெஜஸ்டிக்கில் செய்வதறியாது திகைத்து நிற்க போலீசார் 17 தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்து அவற்றின் மூலமாக உரிய இடங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பணியாளர் வருகை குறைந்தாலும் இயங்கின அலுவலகங்கள். ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மீட்டர் போட மறுத்து, சொல்லும் தொகைக்கு சம்மதித்தாலே ஏற்றிக் கொள்கின்றன. இயல்பு வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க எப்போது முடிவுக்கு வரும் போராட்டம் என்கிற தவிப்பில் பெங்களூரு.

இவற்றோடு இன்னொரு கவலையாக இன்றிலிருந்து ஏற்றம் கண்டிருக்கிறது லிட்டருக்கு ரூ 5 ஆக டீசல் விலை. கூடவே சமையல் வாயு விலையும். தொடர்ந்து அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க அச்சத்தில் எளிய ஜனங்கள்.

படத்துளி:
மெட்ரோ @ எம்.ஜி. ரோட்ஏராள மரங்களை ஏப்பமிட்டு உருவாகிய மெட்ரோ திட்டமாவது முழுமையாக செயலுக்கு வந்து சாலைப் போக்குவரத்தையே நம்பிக் கிடக்கிற பெங்களூர்வாசிகளின் நிலைமையை மாற்றுமா, தெரியவில்லை.
***

Tuesday, September 11, 2012

காரணம் ஆயிரம்

ஒரு காரணம்..


1. கடமை ஒரு காரியத்தைச் சரியாகச் செய்து முடிக்கிறது. விருப்பம் அழகுறச் செய்ய வைக்கிறது.

2. அறிவார்ந்த மொழிகள் பலநேரங்களில் கவனத்தில் கொள்ளப்படாமல் தரிசு நிலங்களில் விழுகின்றன. அன்பான வார்த்தைகளை எல்லா நேரங்களிலும் மனங்கள் பத்திரப்படுத்துகின்றன.

3. அடைந்த இலக்கு ஆரம்பப் புள்ளியாகட்டும் அடுத்த முன்னேற்றத்துக்கு.

4. வாலினால் பறக்கிறது பட்டம். சின்னச் சின்ன விஷயங்களிலும் செலுத்தும் அக்கறையினால் சிறக்கிறது திட்டம்.

5. பெரும் இடைவெளிகளைக் குறைக்க சிறு புன்னகை போதும்.

6. சிந்திக்க அவகாசம் எடுக்கலாம். ஆற்றலின் ஊற்றுவாய் அதுவே.

7. சங்கிலிகளுடன் வாழுகிறோம் சாவி கையிலிருப்பதை உணராமலே.

8. தோல்விகளே வாய்ப்புகளாக மாறுகின்றன விவேகத்துடன் மீண்டும் தொடங்க .

9. பிறருக்கு உதவும் வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறார் வெற்றி பெறுபவர். ‘இதனால் எனக்கென்ன கிடைக்கும்’ என்கிற தேடலிலேயே மற்ற சிலர்.

10. ஆயிரம் காரணங்களை அடுக்கலாம் எதனால் முடியாதென்பதற்கு. ஒன்று கூடவா கிடைக்காது ஏன் முடியும் என்பதற்கு?
***

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி
உறுதி ஊற்றெடுக்கும் காலம்

திறக்கிற மறுகதவு

Monday, September 10, 2012

ஒரு சொல் - மலைகள் இதழில்..


நினைவின் விளிம்பில்
தளும்பி நின்றாலும்
முழுதாக முகங்காட்ட மறுத்துக்
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது
அந்த சொல்

பல ஒலிகளில் நீளங்களில்
விதவிதமான அழகுச் சொற்கள்
விரித்த வலையில் வந்து விழுந்தாலும்
எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை

பள்ளிக்கூட வாசலில்
சீருடைச் சிட்டுகளோடு கலந்துவிடும்
சின்னஞ்சிறு மகளைத்
தேடிக் களைக்கும் கண்களை விடச்
சோர்ந்து விட்டிருந்தது மூளை
நாட்கணக்கில் கசக்கப்பட்டதில்

மறந்து விடத் தீர்மானித்தேன்
மறந்து விட்டதாய்
சொல்லியும் கொண்டேன்

அப்படியும் எங்கிருந்தாவது
எட்டிப் பார்த்துப்
பாதிமுகம் காட்டிப் பைத்தியமாக்கியது
பல வாரங்கள் ஆட்டிப் படைத்தது

‘உனக்கும் எனக்குமிடையே
இனி ஒன்றுமேயில்லை
குறுக்கிடாதே என் வழியில்’
கோபித்துக் கொண்டேன்

என்ன நினைத்ததோ
காட்சிதந்தது மறுநாளே
தோட்டத்து மண்ணில்
வானத்து நட்சத்திரங்களாக
உதிர்ந்து கிடந்த
எண்ணற்றப் பவள மல்லிகளில்
ஒன்றாக.

விடிவெள்ளியாய்ப் பிரகாசித்ததனை
நொடியில் அடையாளங்கண்டு
சிலிர்ப்புடன் கையில் ஏந்தி
ஓடிச்சென்று பொருத்தினேன்
அந்த ஒரு சொல்லே
உயிர்நாடியென நான்
கைவிரித்து விட்டதால்
மரிக்கக் கிடந்த கவிதையில்..

எழுந்து அமர்ந்தது கவிதை.
குலுக்கிக் கொண்டோம்
நானும் சொல்லும் கைகளை.
***

படம் நன்றி: இணையம்

18 ஆகஸ்ட் 2012, மலைகளின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!

Friday, September 7, 2012

பறவை போனால் பறவைக்கூடு யாரைத் தேடும்..? - Sep PiT

வெற்று அல்லது காலி. EMPTY. EMPTINESS. இதுதான் இந்த மாத PiT போட்டியின் தலைப்பு.

பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.

மாதிரிக்கு சில படங்களைப் பார்க்கலாம்:

# 1


# 2


# 3


# 4


# 5


# 6


#7


# 8


# 9


# 10
sparrow nest

போட்டி அறிவிப்பில் நவ்ஃபல் எடுத்த மேலும் சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம். விதிமுறைகள் இங்கே.

போட்டிக்கு வர ஆரம்பித்து விட்ட படங்களை இங்கு காணலாம்.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012

இன்னும் இரண்டு வாரகால அவகாசம் இருக்கிறது:)!
***Wednesday, September 5, 2012

நண்பனை வழியனுப்புதல் – சீனக் கவிதை - அதீதத்தில்..


வடக்கு மதிலைத் தாண்டி
நீண்டிருந்தது பச்சை மலைத் தொடர்.
கிழக்கு நகரத்தைச் சுற்றிப்
பாய்ந்து கொண்டிருந்தது வெள்ளை நீர்.

இதோ இங்கே இவ்விடத்திருந்து
தன்னந்தனியே தரிகொள்ளா மனநிலையுடன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலான
பயணத்தைத் தொடங்குகிறான் அவன்.

விரைகின்ற மேகங்களாய்
பயணிகளின் உட்துடிப்பு இருக்க
மறைகின்ற கதிரவனாய்
எனதாருயிர் நண்பனின் அன்பு.

கிளம்பிச் செல்லுகையில்
கையசைத்து விடை கொடுக்கிறான்
கலங்கும் கண்களைக்
கட்டுப்படுத்திக் கொண்டு.

வெள்ளைத் திட்டுகள் கொண்ட
அவனது பழுப்புக் குதிரையின்
கனைப்பில் வெளிப்படுகிறது..
தனிமை.
***

படம் நன்றி: இணையம்

மூலம்: சீன மொழியில்-Li Bai
ஆங்கிலத்தில்-Stephen Carlson

1 செப்டம்பர் 2012 அதீதம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.

Monday, September 3, 2012

இறக்கைகள்


நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக
அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன
மாதங்களாகவும் வருடங்களாகவும்.

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு
சோபையிழந்து சிரிக்கின்றன
அர்த்தமற்றப் பெருமிதங்களும்
கொண்டாடிய சம்பவங்களும்
உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

எதையோ தேடப்போனபோது
அகப்பட்டன
அனுபவப் பாடங்களும்
தொடர்பறுந்த நட்புகளும்
தவறவிட்டப் பல
அற்புதத் தருணங்களும்.

இறக்கைகளைக் கழற்றி விட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு
தளிர்நடை போடுகிறது காலம்.
***

படம் நன்றி: இணையம்

18 ஆகஸ்ட் 2012, மலைகள்.காமின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin