MOON PHOTOGRAPHY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MOON PHOTOGRAPHY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஆண்டின் முதல் பெருமுழுநிலவு.. ஓநாய் நிலவு.. - 3 ஜனவரி 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிலவைப் படமாக்கினேன், புதிய நிகான் Z5 II-வை பரிசோதிக்கும் ஆர்வத்தினாலும். நேற்றைய தினம் வானில் தோன்றிய முதல் முழு நிலவானது பெரு நிலவும் (supermoon)  ஆகும். 

Exif: 1/100s,f/13, ISO1000
Focal length: 300mm
Nikon Z5 II
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
03-01-2026 21:14:06

சென்ற சில தடவைகளைப் போலவே நேற்றும் ட்ரைபாட் இல்லாமல் கையில் பிடித்தே படமாக்கினேன்.

ண்டின் முதல் முழுநிலவு ‘ஓநாய் நிலவு’ (wolf moon) என்றும் அறியப்படுகிறது. ஃபார்மர்ஸ் அல்மனாக்  (The Old Farmers Almanac)  குறிப்பேட்டில் அந்தந்த மாதத்தின் நிலவுக்கென ஒரு பெயரும் அதற்கென ஒரு காரணக் கதையும் இருக்கும். உலகளாவிய அளவில்  அந்தப் பெயராலேயே ஒவ்வொரு மாத நிலவும் அழைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாக முன்னரும் சில பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஜனவரி மாத நிலவு ஓநாய் நிலவென அழைக்கப்படுவதற்கான காரணம், குளிர் காலத்தின் உச்சத்தில் சரியாக உணவு கிடைக்காமல் ஓநாய்கள் பசியில் ஊளையிட்டபடி இருக்குமாம். அதனாலேயே ஆண்டின் முதல் முழு நிலவுக்கு ‘ஓநாய் நிலவு’ எனப் பெயர் வந்திருக்கிறது.

ந்த வருட முதல் முழுநிலவு பெருநிலவாகவும் (supermoon) அமைந்தது கூடுதல் சிறப்பானது. சூப்பர் மூன் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை படங்களுடன் எனது இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2013/06/super-moon-2013.html ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் என்றாலும் மீண்டும் சுருக்கமாக:

பூமியை நிலவு வட்டப் பாதையில் அன்றி, நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. பெரிஜி (Perigee) என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி, அப்போஜி (Apogee) என்பது நிலவு பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் புள்ளி. நிலவு பூமிக்கு மிக அருகில் வருகையில் வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தரும். அவ்வாறாக நேற்றைய நிலவு பூமிக்கு அருகாமையில் (Perigee)   சுமார் 3,62,312 கிலோமீட்டர் தொலைவில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருந்ததால் பெருநிலவும் (supermoon) ஆனது. 

ந்த வருடத்தில் அடுத்து வரவிருக்கும் இரு பெருநிலவுகள்: 

24 நவம்பர்: 3,60,768 கிலோமீட்டரில்..
24 டிசம்பர்: 3,56,740 கிலோமீட்டரில்..

நேரமும் வாய்ப்பும் கூடி வருமாயின் அவற்றைப் படமாக்குவேன் :).

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***

வெள்ளி, 5 ஜூன், 2020

இப்போது வானில்.. ஸ்ட்ராபெர்ரி நிலவு..

Exif: 1/125s, f/13,
 ISO 100
Focal length: 300mm
#HandHeld 

இன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்:

இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு.. இதோ இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இது நிலவு தேய்ந்து மீண்டும் வளரும் பூரணச் சந்திரக் கிரகணம் இல்லை. பூரணக் கிரகணத்தின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி இல்லாமல் சூரியனின் கதிர்கள் பூமி மேல் விழுகையில், பூமியின் மங்கலான penumbra எனும் அரைநிழற் பகுதியை  நிலவு கடந்து செல்வதையே ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள். நிலவின் தேய்வும் மிகமிகச் சிறிதாக நாம் சாதாரணமாப் பார்க்கையில் உணர முடியாதபடியே இருக்கும். டெலஸ்கோப் மூலமாகதான் தேய்வை உணர முடியும்.

இந்திய நேரப்படி, இன்றிரவு சுமார் 10.30 மணி முதல் நாளை  அதிகாலை 2.40 மணி வரை நீடிக்கும் சந்திர கிரகணம்  இரவு 12.40 மணியளவில் முழுமையான அளவை எட்டும் என்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான பிரகாசத்தோடு இருக்காதாம் முழுநிலவு.

ஸ்ட்ராபெர்ரி மூன்:

பொதுவாக ஜூன் மாத நிலவை ஸ்ட்ராபெர்ரி மூன் என்கிறார்கள். Honey Moon, the Mead Moon(தேனில் தயாரிக்கப்படும் பானம்), and Rose Moon போன்ற பெயர்களும் உண்டு. The Maine farmer's almanac_படி ஒவ்வொரு மாதத்தின் முழு நிலவுக்கும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. 

முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், ஃபார்மர்ஸ் அல்மனாக் என்பது ஓரளவுக்கு நம்ம ஊர் பஞ்சாங்கம் போல.

சனி, 20 ஏப்ரல், 2019

சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019

சித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.


Exif: 1/160s, f/9, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:23
#HandHeld

ஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல.

திங்கள், 14 நவம்பர், 2016

ஸூப்பர் நிலா - SUPER MOON 2016

வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தந்து கொண்டிருக்கும் இன்றைய முழு நிலவு...

Exif: 1/60s,f/13, ISO400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
14-11-2016 19:31:40

68 வருடங்கள் கழித்து, அதாவது 26 ஜனவரி 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு

ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்டேன் நிலவை.. - SUPER MOON 2013

இந்த வருடத்தின்  அனைத்து முழுநிலாக்களிலும் 14% பெரிதாகவும் 30% அதிக பிரகாசத்துடனும் தோன்றி இதோ இப்போது வானிலே ஜொலித்துக் கொண்டிருக்கும் அழகு நிலா. மேகங்களுக்குள் ஒளிந்தபடி கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கும் நிலா:)!

நாள் முழுவதுமே இன்று மேகமூட்டம்தான். அதிலும் மாலையில் இராட்சதக் கருமேகங்கள் பெரிது பெரிதாகத் திரண்டு கொண்டிருந்தன.

ஞாயிறு, 6 மே, 2012

சித்திரை நிலவு.. இன்றைய வானிலே..

# Perigee Super Moon 2012
வழக்கத்தைவிடப் பதினான்கு சதவீதம் பெரியதாகவும், முப்பது சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் இன்றைய சித்திரை நிலவு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிற நிலவின், பூமி பார்த்த பக்கம் மற்ற பக்கத்தை விட 50 ஆயிரம் கி.மீ பூமிக்கு அருகில் இருக்குமாம். இது போன்ற நேரத்தில் வருகிற பெளர்ணமியில் அளவில் பெரிதாக நிலா தெரியும் என்றும், அதுவும் சித்திரா பெளர்ணமியில் இந்த நிகழ்வு ஏற்படுவது அபூர்வமானது என்றும் அறிவிக்கின்றன செய்திகள்.

பெங்களூரில் இன்றைய மேகமூட்டம் படம் எடுக்க முடியுமா எனும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஏழரை மணிக்கு ஒரு முறை, ஒன்பது மணிக்கு ஒருமுறை மேல்மாடிக்குச் சென்று எல்லாம் செட் செய்து முடிக்கவும் மேக வில்லன்கள் கூட்டம் கூட்டமாக வந்து மறைத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தோன்றுகிற நேரத்தில், முன் இரவில் எடுத்தால்தான் நிலவு பெரிதாகத் தெரியும். விவரங்களும் மிகத் துல்லியமாகக் கிடைக்கும். ஹி.., அதுவுமில்லாம கழுத்து ரொம்ப வலிக்காமலும் எடுக்கலாம்:)!

# காணும் போதே மறைந்தாயே..
இப்படிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த நிலவு ஒருவாறாக இரவு பத்தரை மணியளவில் தெளிந்த வானில் பாலாகப் பொழிந்தாள்! அப்போது பத்திரப் படுத்தியதே முதல் படம். அதிபிரகாசமாக இருந்தாலும் பார்க்க என்னவோ வழக்கமான அளவில்தான் தெரிந்தாள். விஞ்ஞானிகள் சொல்கிற விவரங்களை எனக்கு அதில் வாசிக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்றைக்கும் அழகு மகள் அவள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாதுதானே:)?
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. (10 Dec 2011)

2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்.. (10 April 2011)

3. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON (20 March 2011)

சனி, 10 டிசம்பர், 2011

சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து..

# 1

நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை.

# 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு


இன்று:

# 3 கண் முன்னே தேயும் அற்புதம்

முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய நாடுகள் பார்க்க முடிந்திருக்காதாம் சந்திரன் உதிக்கும் நேரம் வந்திருக்காததால். இந்தியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நன்கு பார்க்கமுடியுமென்று சொல்லப்பட்டாலும் மேகங்கள் மனது வைக்காவிட்டால் முடியாதே:)! ஆம், எட்டாவது தளத்துக் குளிரில், மூடிய வானைக் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்த என் மேல் இரக்கம் கொண்டு மேகங்கள் போனால் போகுதென அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்து நிலவைக் காண்பித்துக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.

# 4 முகில்களின் கருணையில்..
இதற்கடுத்து பதிவின் முதல் படத்தையும் முடித்து 15 நிமிடங்களாகியும் அடர்த்தியாக நிலவை மூடிக் கொண்டு ‘அவ்வளவுதான்’கட்டு மூட்டையை’ எனச் சொல்லி விட்டது மேகக்கூட்டம்:(! இதனால் வளரும் நிலவைப் படிப்படியாக பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

மறுபடி முழு நிலவாகும் நேரத்துக்குச் சிலமணித்துளிகள் முன்னே சரியாக மேலே சென்ற போது...

# 5

# 6





# 7
              பூமியின் நிழல் விட்டு விலக மீண்டும் வட்ட நிலாவாக..
இப்படியொரு அதி பிரகாசமான நிலவைக் கண்டதேயில்லை என சொல்லும்படியாக இருந்தது கிரகணம் முடிந்த உடன் ஒளிர்ந்த நிலவு:


அதுவரை சுற்றிச் சுற்றி வந்த மேகக் கூட்டம் இந்தப் பிரகாசத்தின் அருகில் நிற்க முடியாமலோ என்னவோ ஒருவித அதிர்ச்சி கலந்த வேகத்துடன் விலக ஆரம்பித்தன. அப்போது அவை வானில் வரிசை கட்டி நகன்ற கோணத்தைக் காணக் கண்கோடி வேண்டும். 18-55mm லென்ஸை உடன் எடுத்துச் சென்றிராததால் படமாக்க இயலவில்லை.

நேர்த்தியான படங்கள் என சொல்ல மாட்டேன். அப்பெச்சர் மோடிலிருந்து இப்போது மேனுவல் மோடிலுமாக முயன்ற பரிசோதனை முயற்சிகளில் சிலபடங்கள் திருப்திகரமாக இல்லைதான். இருந்தாலும் ஒரு அற்புத நிகழ்வைப் படமாக்கிய திருப்தி. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிற இப்பொழுதில், [தலைப்புக்கான பதில்:)] பூமியின் நிழலால் நிலவு இப்படித் தேய்ந்து மறைந்து மீண்டும் முழுமையாகத் தெரிகிற சந்திர கிரகணத்தை மீண்டும் காண நாம் 27/28 ஜூலை 2018 வரைக் காத்திருக்க வேண்டுமாம்.
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON
2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

திங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.

சென்ற மாதம் போலன்றி சற்று முந்நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன். அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.

1. சித்திரைப் பெண்


அடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:)! பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில், நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:

2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..


3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்போகும்..

சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.

கடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.

சிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌துவே. ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண்ணிய‌க் கண‌க்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)!

மனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்?

நிலாச் சோறு நினைவுகள்:

சின்ன வயதில் நாங்கள் வசித்த திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திருக்கும். [படம்:4]

பெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.

சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.

ஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாடல்களைக் கசிய விடுவாள்.  நேர் எதிரே பரந்து விரிந்து நிற்கும் (பிள்ளையார் கோவில்) அரச மரத்திலிருந்து எண்ணற்றப் பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.
4. கூரைப்படி
இதோ இந்தக் கூரைப் படிகளில் (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!

அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.

பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.

நானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.

து ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

இனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்!

அப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)!

*** *** ***

ஞாயிறு, 20 மார்ச், 2011

என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON

1. அபூர்வ நிலா

துதான் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின் தெரிந்த அபூர்வ நிலா. சூப்பர்மூன் என உலகமே உற்றுப் பார்த்த உச்சி நிலா. பூமிக்கு வெகு அருகாமையில் வந்து வழக்கத்தை விட 10% பெரிய அளவிலும், 30% அதிக பிரகாசத்துடனும் ஒளிர்ந்த நிலா. இதற்கு முந்தைய சூப்பர் நிலாக்கள் 1955,1974, 1992 and 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் வந்து ‘ஹலோ’ சொல்லி கவனம் பெற்றிருந்தன.

நேற்று இந்நிலாவைப் பதிய பரபரப்புடன் தயாரானார்கள் பதிவுலக நண்பர்களும் புகைப்பட ஆர்வலர்களும். ஏற்கனவே நான்கு மாதங்களாக நிலவைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நான் சூப்பர்நிலவைத் தவற விடுவேனா:)? எம் குடியிருப்பின் எட்டாவது தளத்தில் அமைந்த மொட்டை மாடியிலிருந்து காட்சிப் படுத்தியாயிற்று கண் கொள்ளா பிரகாசத்துடன் மிளிர்ந்த வெண்ணிலவை. முன்னிரவில் கிழக்கே உதிக்கும் போதே எடுத்தவர்களுக்கு ‘மெகா நிலா’வாகப் பதிய முடிந்திருக்கிறது. இரவு பதினொரு மணியளவில் நான் பதிந்தது மேலே.

தேய்வதும் பின்னர் வளர்வதுமாய் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தியும், கோடியில் புரளும் கோமானுக்கும், வீதியில் வாழும் இல்லாதவனுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் பாசம் பாராட்டும் அன்னையைப் போல் பாலாய் பொழியும் நிலவின் மேல்தான் எத்தனை பாடல்கள்? மனதோடு ஒன்றி விடுகின்றன நிலவுப் பாட்டுகளும்.

பதிவுலகம் வந்த புதிதில் PiT மூலமாக இணையத்தில் நிபுணர்கள் எடுக்கும் படங்கள் காணக் கிடைத்ததுடன், புகைப்படத் தளங்களும் அறிமுகமாயின. ஒரு முறை நந்துவின் நிலாவை [அவர் பொண்ணைச் சொல்லவில்லை:)] பார்க்க நேர்ந்த போது அதுபோல எடுக்க ஆசை வந்து zoom செய்தால் ஒரு வெள்ளிப் பொட்டு கிடைத்தது:)! பின்னரே அறிந்தேன் அதற்கு SLR அல்லது அதிக optical zoom வேண்டுமென. அதிக optical zoom-க்கு மாற நேர்ந்த போதும் [குறைந்த பட்சம் 8X optical zoom அவசியமாம் P&S-ல் நிலவை முயற்சிக்க-தகவல் நன்றி ஜீவ்ஸ்] வெள்ளிப் பொட்டு வெள்ளித் தட்டாகக் கிடைத்து வந்ததே தவிர நிலவுக்குள்ளே வடை சுடும் பாட்டியும், காதுகளை உசத்தி அமர்திருக்கும் மொசலும் மாட்டவே இல்லை!

2. வெள்ளித் தட்டு


வம்பர் இறுதியில் SLR வாங்கும் போதே 55-200mm lens, tripod-ம் வாங்கி விட்டேன் நிலவைப் பிடிக்கவே. வீட்டின் பால்கனிகள் மேற்கு பார்த்தவை என்பதால் அஸ்தமன நிலவே கண்ணுக்குக் கிடைத்தது, இம்மாதம் தவிர்த்து. உதய நிலா பிடிக்க மொட்டை மாடிக்குதான் செல்ல வேண்டும். அதுவும் கொஞ்சம் உயரம் வந்த பிறகே காணக் கிடைக்கும். கீழ்வானம் தெரிவதில்லை. உதய நிலாவில்தான் விவரங்கள் தெளிவாகக் கிடைக்குமென சொல்லுகிறார்கள் நிபுணர்கள். போகட்டுமெனப் பிடித்த மேற்கு நிலாக்கள் இங்கே வரிசையாக:

3. மார்கழித் திங்கள் அல்லவா..?
மதி கொஞ்சும் நாள் அல்லவா..?


4. தைத்திங்கள் திருநாளில்..


முதலிரண்டு மாதமும் எந்த mode-ல் வைத்து எடுத்தால் நன்றாக வருமெனும் வித்தை பிடிபடவில்லை. ஆனாலும் காமிரா அதுபாட்டுக்குப் பிடித்து, ஃப்ளிக்கரில் தவறாமல் போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தது:)! மாசியும் வந்தது.

5. மாசி நிலா


இருபத்தைந்து நிமிட இடைவெளியில்..
6. வெள்ளி நிலா தங்கமாய்..
இந்த தங்க நிலா, காலைத் தேநீர் தயாரித்துவிட்டு வந்த பத்தே நிமிட அவகாசத்தில் கீழ்வானைத் தொட்டு பெரிய சைஸில் ‘தகதகதக தகதகதக என ஆடவா?’ எனக் கேட்க காமிராவை கோணம் வைப்பதற்குள் ஒருசில நொடியிலேயே ‘ஓடவா?’ என ஓடி விட்டது!! மஞ்சள் நிலாவுக்கு ஒரே அவசரம்..!


ற்றுக் குட்டி முயற்சிகள்தாம்.

இருப்பினும் இம்மாத(பங்குனி) முழுநிலாவுக்கு என்னைத் தயார் செய்து கொள்ள சென்ற வாரம் வெண்ணிலா வானில் வரும் வேளையில்... விழித்திருந்து, அடுத்தடுத்த நாட்கள் எடுத்தவை கீழே. இவை நள்ளிரவிலேயே மேற்கு வான் உச்சிக்கு வந்தவை.


7. அரை நிலா ஆகாசத்திலே..



சற்றே படம் ஆட்டம் கண்டிருக்க மறுநாளே முயன்றதில்...

8. வளர் நிலா வானிலே..



இப்படியாக எடுத்த பயிற்சி நேற்று கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஓரளவு திருப்தியாக அமைந்து விட்டது அபூர்வ நிலா[படம் 1]. ஃப்ளிக்கர் தளத்திலும் கிடைத்தது நல்ல வரவேற்பு: "Rare" Super Moon/View from Bangalore.

இதுதான்...

அந்த நிலாவை நான்.. காமிராவில் புடிச்ச கத:)!
*****


நிலவை எடுத்த விதத்தைப் பற்றிய இதே அனுபவப் பகிர்வு விளக்கங்களுடன் PiT தளத்தில்: அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin