புதன், 17 பிப்ரவரி, 2010

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்-PiT போட்டிக்கும்

கேரளம் என்றால் பசுமை. பசுமை என்றால் கேரளம். கட்டியம் கூறுவது போல இருந்தன விமானத்திலிருந்து பார்க்கையில், விரிக்கப்பட்ட பச்சைக் கம்பளம் போலக் காட்சியளித்த தென்னைகள். கொச்சினில் இருந்து ஒன்றரைமணிநேரம் பயணித்தால் குமரகம். படங்களைப் பேசவிட்டிருக்கிறேன் வழக்கப்போல சின்னக் குறிப்புகளுடன்.

ஏரிக்கரைப் பூங்காற்றே

இம்மாத PiT போட்டித் தலைப்பு: வாகனம். இந்த முதல் படத்தையே போட்டிக்குத் தந்துள்ளேன்.
***

கரையோரக் கவிதைகள்

கண்ணுக்கெட்டிய வரையில் ஏரியைச் சுற்றியமைந்த கரையெங்கும் பசுமைதான். செழிப்புக்குக் காரணம் பேக் வாட்டர்.இருநூற்றுஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து பரந்த வேம்பநாடு ஏரியைச் சுற்றிதான் குமரகமும் ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களும் உள்ளன.

முதலில் பேக்வாட்டர்ஸ் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த ஏரியை எடுத்துக் கொண்டால் அது கடல் மட்டத்தின் அளவில் உள்ளது. மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீரானது கடலில் கலக்கும்போது ஏரியையும் நிரப்புகிறது. அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் இருக்கிறது. மழையற்ற கோடையிலோ தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் ஏரிக்குள் புகுகிறது. இதைத்தான் ‘பேக் வாட்டர்ஸ்’ என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.
***

போறவழி தென்கிழக்கோ

படகுவீடுகள் சராசரியாக 70அடி நீளமும் நடுப்பகுதில் 15அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. ஆணிகளை உபயோகிக்காமல் தேங்காய் நார்களைக் கொண்டேதான் பலகைகளைக் கட்டுகின்றார்களாம்.
***

அதிகாலை நேரமே இனிதான பயணமே
நிலாவைத்தான் கையில பிடிக்கமுடியுமா? அள்ளமுடியும் அதேபாணியில் சுடாத காலைச்சூரியனையும். ஆனா தோணி ஆட்டம் கண்டுட்டா.. அதான் கம்முன்னு அள்ளிட்டேன் நிர்மலமான அந்தச் சுடரொளியை கவனமா காமிராவிலேயே:)! எப்படிப் படகு சீராய்க் கிழிக்கிறது நீரிலே கோடு, பாருங்களேன்!
***

ஒதுங்கி நிற்கிறது படகு
கூரைமேல் சூரியன் எத்தனை அழகு

***
அஸ்தமனப் பொழுது
அமைதியில் மனது

அந்திசாயும் நேரமானால் ஏரிக்கரையோரம் இருக்கும் இருக்கைகள் நிரம்பிவிடும் அஸ்தமனத்தை ரசிக்க. ‘சளக் சளக்’ தாளகதியோடு கரையைத் தொடர்ந்து தொட்டுச் செல்லும் சிற்றலைகளின் சங்கீதம், நொடிக்கு நொடி மாறும் வானின் வர்ண ஜாலம், மெல்ல மெல்ல நீருக்குள் இறங்கும் சூரியப்பந்து யாவும் நெஞ்சை நிறைக்கும் அமைதியைத் தந்து.
***

தனித்திரு விழித்திரு
***
விழித்திருந்ததால் தனித்துத்தெரிவது
அடர்கானகத்தில் நிமிர்ந்துவளர வழியின்றிபோனாலும்
அயர்ந்து போகாமல்
கிடைத்தசந்தில் புகுந்துபுறப்பட்டு உருப்பட்டு
உலகுக்கு சொல்லுது பாடம்
வாய்ப்பு தேடிவரக் காத்திருக்காதே
தேடிப்போ நீ வாய்ப்பையென!
***


வானமே எல்லைநானும்தான் நானும்தான் என இன்னுமொன்று
தொட்டுவிடும் தூரம்தான் வானம்என்று
***

மோட்டர் படகு, துடுப்புப் படகு, படகு வீடு என எல்லாவற்றிலும் பயணித்து ஏரியைச் சுற்றி சுற்றி வந்த போது எடுத்த படங்களில் ஒருசிலவற்றைப் பகிர்ந்து கொண்டாயிற்று. ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


பேக்கர்ஸ் பங்களா

வேம்பநாடு ஏரியின் கரையில்தான் அமைந்திருக்கிறது தாஜ் கார்டன் ரெட்ரீட் விடுதி.  ஆல்ஃப்ரெட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-ல் கட்டப்பட்டது. நான்கு தலைமுறைகளாக நூறு வருடங்கள் அவரது குடும்பத்தினரே அதை உபயோகித்து வந்தபடியால் அவர் பெயருடனேயே இப்போது ரிசார்ட்டின் அலுவலகமாயும் உணவு விடுதியாயும்.


லகூன்
பங்களாவுக்கு நேர் எதிரே அமைந்த இந்த் லகூனைச் சுற்றிலும் இரவு ஏழுமணி அளவில் ஆரம்பித்து நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம். இந்தப் பின்னணியில் மேலேதெரியும் புல்வெளியில் தினமும் இரவு எட்டு மணியிலிருந்து அரைமணி நேரத்துக்கு ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. இரவுக்காட்சியாய் எடுத்தபடங்கள் எவையும் அத்தனை கூர்மையாக வரவில்லை. [மற்ற படங்கள் அந்த அனுபவத்துடன் இங்கே: ‘கண்ணோடு காண்பதெல்லாம்.]
ஒளிரும் தீபங்கள்
***

நெல் வயல்

சலசல ஓடை சிலுசிலு நாத்து
ஒத்தையடிப் பாலம் ஒசந்துநிக்கும் தென்னைகள்
***

பாதையோரம் பூத்திருந்து வரும்வழியைப் பார்த்திருந்தவை

செந்தாழம் பூவோ


***
ஸ்பீக்கர்பூவும் வெண்பூவும்
***
எக்சோரா என்னும் இட்லிப்பூ


***

சின்னஞ்சிறு மஞ்சள்மலர்

மொளைச்சு மூணுஇலையே விட்ட அரையடி உயரச்செடியில் ஒன்றரையங்குல அளவில் கண்சிமிட்டிய மஞ்சப்பூ மேக்ரோவில் அழகா வந்திருக்கா? ஒரு விஷயம் கவனித்தேன். இவற்றை எடுத்த பத்து நாட்களுக்குள்ளாகவேதான் லால்பாக் மலர்கண்காட்சி செல்லும் வாய்ப்பு வந்தது. பார்வைக்கென அணிவகுத்திருந்த தொட்டிச்செடிகளில் பூத்திருந்தவற்றைக் காட்டிலும் மண்ணில் வளர வரம் வாங்கி வந்தவற்றின் மலர்ச்சியே தனிதான் என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது. 
***


இயற்கையின் எழிலில் திளைக்க முடிந்த வனத்தில்
உறுத்தலாய் அமைந்தது இதுதான் மனதில்!

போட்டுத்........................................ ...........தள்ளுறாங்களே!
‘ஏன் வெட்டுறீங்க’ என்ற கேள்விக்கு ‘பூச்சி வெட்டிடுச்சு’ என வந்தது பதில். பல ஏக்கர் பரப்பளவில் பலவகை மரஞ்செடிகளைப் பயிர்செய்து பரமாரித்து வருபவர்கள் தப்பாகச் சொல்ல மாட்டார்கள் எனத் தோன்றினாலும் அத்தனை உயர்ந்தமரம் ஓரிரு மணியில் வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தமே த்ந்தது.

உலகெங்கிலும் மனிதரின் தேவைக்காக கணக்கில்லாமல் கடந்த சில வருடங்களாய்ச் சாய்க்கப்பட்டு வரும் மரங்கள்! காணாது போகிற காடுகரைகள்! விளைநிலங்கள்! விளைவுகள்? இயற்கையின் சீற்றம். குறைகிற மழை வரம். கூடிக்கொண்டே போகிற பூமியின் வெப்பம். இனியேனும் யோசிப்போம்.


இயற்கை அன்னையைப் போற்றுவோம்
இருக்கும் வளத்தைக் காப்பாற்றுவோம்


***


பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!



ஏரிக்கரை படங்கள் மேலும் சில இந்தப் பதிவில்: தண்ணி காட்டறேன்..

இங்கே படங்கள் ஒன்றும் நான்கும்: கிழக்கு சிவக்கையிலே..




இப்பதிவுக்கு காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக தமிழ்மணம் விருது 2010
வெள்ளிப் பதக்கம்
நன்றி தமிழ்மணம்!

முதலிரண்டு சுற்றுகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்,
இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி!
***


29 மார்ச் 2012
பேக்கர்ஸ் பங்களாவை இன்னொரு கோணத்தில் நான் எடுத்த படத்தை மேக் மை ட்ரிப் டாட்.காம் வாங்கி தன் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது என்பதையும் இங்கே பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
***

வியாழன், 11 பிப்ரவரி, 2010

கைமாத்து



அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.

தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க..

உறவுகள்
உதட்டைப் பிதுக்க..

பழகிய சில இடங்களில்
'பழைய பாக்கியே இன்னும்..'
என இழுக்க..

ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.

நல்லவேளையாய்
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.

நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்'
எனத் தலைப்பிட்டேன்.

அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு..

கைமாத்தாகக் கவிதையாவது
கிடைத்ததே என்று.
***



  • படம் நன்றி: கீற்று

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தேடல்


ன்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..

ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!

***

ன்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..

இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..

தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?

*** *** ***


படம்: இணையத்திலிருந்து...






யூத்ஃபுல் விகடன் முகப்பில்:















விகடன்.காம் முகப்பில்:












LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin