அழைப்பிதழை வெகுநேரம் வெறித்துப் பார்த்திருந்த முரளி ஒரு முடிவுக்கு வந்தான்.
'உயிரை விட்டு விட வேண்டும்', உறுதியே எடுத்து விட்டான்.
'வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டோம்', விரக்தியின் விளிம்பில் வெம்பினான்.
"உன்னை வளர்த்துப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன், அத்தனையும் வேஸ்ட். நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்? உங்கூடப் பிறந்தவங்களப் பாரு படிச்சமா, கையோடு வேலையில சேர்ந்தமான்னு. ச்சே" என்று சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டப்படும் அப்பாக்கள் கற்பனை அல்ல என நிரூபிக்கிற அப்பா.
"அதச் சொல்லுங்க. உங்களுக்கு மட்டுமா வச்சான் செலவு. அந்த கோர்ஸ் பண்றேன் இந்தக் கோர்ஸ் பண்றேன்னு எம் பணத்தையும் ஏப்பம் போட்டதுதான் மிச்சம். அய்யா எந்த கோச்சிலும் ஏறின பாடில்லை," என்று அடிக்கடி குத்திப் பேசும் அண்ணன்.
"வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்," சம்பாதிக்கும் திமிரில் தேளாகக் கொட்டுகின்ற தம்பி.
அவனோடு பேசுவதையே குறைத்து விட்ட நோயாளி அம்மா.
"வேலை வெட்டி இல்லாதவன்" என்று அலட்சியப் பார்வை பார்க்கும் சமுதாயம்.
எல்லோருக்கும் மேலாக உமா. அவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.
அவனும் உமாவும் கம்ப்யூட்டர் கோச்சிங் வகுப்பொன்றில் அறிமுகமாகி நல்ல நண்பர்களும் ஆனார்கள். இவன் அந்த நட்பைக் காதலாக்கிப் பார்த்த போதும், அவள் அதை நட்பாகவே பாவிக்கத்தான் விரும்பினாள்.. ஆனால், இவனது தீவிரத்தைப் பார்த்து மனம் இளகி தந்தை முன் கொண்டு நிறுத்தினாள்.. அந்த நல்ல மனிதரோ ஒரு வேலையோடு வந்தால் உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லையெனில் தான் பார்க்கும் வரனையே மணந்து கொள்வாள் என்று வாக்களித்து ஒரு வருட அவகாசமும் கொடுத்திருந்தார்..
உமா கொடுத்து வைத்தவள். கோச்சிங் முடிந்த கையுடனே வங்கியொன்றில் வேலையும் கிடைத்து விட்டிருந்தது. இவன் நேரம் எந்த வேலையும் சரியாக அமைய வில்லை. வருடமும் ஒன்றல்ல இரண்டே ஓடிட இப்போது வேறு வரன் பார்த்து விட்டார் அவளது தந்தை. இவன் வேலைக்கு முயற்சி செய்யாமலா இருந்தான்? எத்தனை இன்டர்வியூக்கள்? எத்தனை தோல்விகள்? அதுவும் கடந்த ஒரு வருடமாக உலகப் பொருளாதாரச் சரிவில் எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு வேறு. இந்தச் சமயத்தில் வேலையில் எந்த முன் அனுபவமும் இல்லாத தன்னை எவர் சீண்டுவர் என்கிற தன்னிரக்கம் வேறு தாறுமாறாகச் சுரந்தபடி இருக்கையில்தான் இப்படியொரு இடி. ஏற்கனவே அவமானத்தைச் சுமந்தபடி ஊசலாடிக் கொண்டிருந்த மனது இப்போது அடியோடு அறுந்து விட்டதைப் போல உணர்ந்தான்.
'வேலையில்லாத வெட்டிப் பயல் என வீட்டுக்கு வேண்டாதவனாக இருந்தேன். இப்போது விரும்பியவளுக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையும் கிடைக்காமல் உமாவும் கிடைக்காமல் எதற்காக யாருக்காக நான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்துக்கே வர வைத்து விட்டது, வாசல் வராந்தாவில் அன்று வந்து விழுந்த உமாவின் திருமண அழைப்பிதழ்.
அம்மாவுக்கு டாக்டர் தந்திருந்த தூக்க மாத்திரைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டான். தூங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் இப்போது பணம் கேட்டால் கூடவே ஆயிரம் கேள்விகள் கேட்பாள். ஏனென்றால் அப்பாவுக்கு சரியான காரணம் சொல்ல வேண்டுமாம்.. அவளுடன் வாக்குவாதம் செய்யும் மனநிலையில் அவன் இல்லை. அலமாரியின் மேல் கை விட்டு துழாவியதில் சாவி கிடைத்தது. சத்தம் வராமல் திறந்தான்.. அவன் அதிர்ஷ்டம் இழுப்பறை வாயிலேயே அதன் சாவி. இழுத்தான். ஏழுமலையான் படம் கொண்ட அதரப் பழைய சாக்லேட் பெட்டியில் அம்மா வைத்திருந்த நோட்டுத்தாள் சில்லறைகளை அப்படியே எடுத்து பையில் திணித்துக் கொண்டான்.
வீதியில் இறங்கிய போது ஒரே ஒரு முறை உமாவைக் கடைசியாக அவள் வேலை பார்க்கும் வங்கியில் சென்று சந்தித்து வாழ்த்தி விடும் எண்ணம் வந்தது. 'ஏன் அவள் நிம்மதியை சந்தோஷத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்' மனசாட்சி இடித்தது.
'நாளை என் மரணம் தெரிய வருகையில் அந்தக் குற்ற உணர்விலே வாழ்நாளுக்கும் வருந்தட்டுமே. கடைசி கணத்திலும் வாழ்த்த வந்த என் பெருந்தன்மையை நினைத்து உருகட்டுமே'. இன்னோரு பக்கம் சாத்தான் வேதம் ஓதியது. சாத்தான் ஜெயிக்க பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.
பேருந்துக்காகக் காத்திருந்த போது, "என்ன சார், எங்கே கிளம்பிட்டீங்க?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு 'சார்' என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஜீவன் காயத்ரியாகத்தான் இருக்க முடியும். பக்கத்து வீட்டுப் பெண். பிரபல மருத்துவமனையொன்றில் நர்ஸாக இருக்கிறாள்.
"சும்மாதான், இப்படியே இந்திரா நகர் வரை போகலாம்னு.."
"அதென்ன 'சும்மாதான்'? நம்ம ஜனங்கதான் சார், இப்படி எதற்கெடுத்தாலும் சொல்லப் படிச்சிருக்காங்க ஒரு வார்த்தை 'சும்மா'ன்னு" என்று சிரித்தவளின் முகம், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சுமதியைப் பார்த்ததும் பிரகாசமானது.
"ஹாய் சுமதி! எப்ப வந்தே? நேற்று கூட உன் வீடு பூட்டியிருந்ததே? ரெண்டு நாளா உன் மொபைலுக்கு முயற்சித்தேன் எப்ப வருவேன்னு தெரிஞ்சுக்க. ஸ்விட்ச்ட் ஆஃப்னே வந்தது"
"இன்னிக்கு காலையில்தான் வந்தோம். ரோமிங்ல இருந்ததால் செல்லை அணைத்து வைத்திருந்தேன். என் ஆஃபிசுக்கு லீவு எக்ஸ்டெண்ட் பண்ணக் கேட்டு அங்கிருந்தே மெயில் கூட அனுப்பி விட்டிருந்தேன்."
"ட்ரிப் எப்படி? மாமா ஊரிலே ஒரு வாரமும் குஷாலாய் கழிஞ்சுதுன்னு சொல்லு!"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே"
அவள் குரலில் இருந்த உற்சாகக் குறைவைக் கவனிக்கத் தவறவில்லை காயத்ரி.
"ஏன் என்ன விஷயம்?"
"அதையேன் கேட்கிறே? ஊரிலிருந்து கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்ன எங்க மாமா வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான். அந்தப் பையனுக்கு பதினெட்டே வயசுதான் பாவம்! 'நீ வேற விதமாய் போயிருந்தா கூட விதின்னு மனசு ஏத்திருக்கும். ஆனா நாங்கெல்லாம் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டியே? எப்படிப்பா மனசு வந்தது'ன்னு அவன் குடும்பம் கதறின கதறல் இருக்கே, அப்பப்பா..! சரியாப் படிக்கலேன்னு அப்பா ஓவரா திட்டிட்டாரு போலிருக்கு. மனுஷன் குற்ற உணர்விலே ரொம்பவே உடைஞ்சு போயிட்டார்."
'நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்?' அருகில் நின்றிருந்த முரளிக்கு சமீப காலமாய் தன் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தைகள் மனதினுள் வந்து போக 'வேண்டியதுதான் அந்த அப்பனுக்கு' என்ற காட்டமாக நினைத்துக் கொண்டான்.
"எதற்குத் திட்டுகிறார்? அப்படியாவது பையனுக்கு ரோஷம் வந்து நல்லாப் படிக்க மாட்டானாங்கிற ஆசையில திட்டியிருப்பார். அவர் செஞ்சது சரின்னு சொல்ல வரலை. நீ சொல்ற மாதிரி ஓவர்தான். இருந்தாலும் எந்த அப்பாவும் தன் பையன் ஒழிஞ்சு போகட்டும்னு மனசார நினைக்கவே மாட்டார். போறவன் போயிட்டான். இருக்கிறவங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் பார்த்தியா? அவன் மேல பாவப்படுறியே?"
சுரீரென்று வந்த காயத்ரியின் பதிலில் இவன் திகைக்க ஏற்பட்ட அதே வியப்பில் சுமதி கேட்டே விட்டாள்: "என்ன மனசுடி உனக்கு? அவன் முடிவு உன்னைப் பாதிக்கவேயில்லையா?"
உஷ்ணமேறியது காயத்திரியின் குரலில். "பாதிக்கிறதனாலேதான் சொல்றேன், அவன் மேலே பாவமாயில்லேன்னு. பரிதாபப் படுறேன் அவன் குடும்பத்த நினைச்சு. வருத்தப்படுறேன் அவன் முட்டாள் தனத்தையும் கோழைத் தனத்தையும் நினைச்சு. ஆனா என்னால ஏனோ அவன் மேல இரக்கப் பட முடியல. வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப் படத்தான் தோணுது. ரிசல்ட் சமயத்திலே எத்தனை ஸ்டூடன்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிறாங்க பாரு! எதிர்காலத்தை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாத இவங்க கையில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்குன்னு நாம நம்பிட்டிருக்கோம்."
"ஈஸி காயத்ரி. ரொம்ப உணர்ச்சிவசப்படுறியே?"
"இல்லப்பா! ரொம்ப நாளாகவே எம் மனசை அரிச்சிட்டிருக்கும் விஷயம் இது. 'காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை! இளம்பெண் தற்கொலை'ன்னு எத்தனை ந்யூஸ் படிக்கிறே? இவங்கெல்லாம் காதலும், கலியாணமும் மட்டுமேதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அது வாழ்க்கையிலே ஒரு அம்சம்தான். இட்ஸ் ஒன்லி எ பார்ட் ஆஃப் அவர் லைஃப். விரும்பினவங்களை அடையறது ஒண்ணுதான் வாழ்க்கையோட லட்சியம்னு தப்புக் கணக்குப் போட்டு வாழறாங்களே! வாழ்க்கையிலே இதையெல்லாம் தாண்டி உயர்ந்த லட்சியங்கள் எவ்வளவு இருக்கு? நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற என்னவெல்லாம் சாதிக்கணும்னு ஆக்க பூர்வமா சிந்திக்க மறந்திட்டு இந்த இளைய சமுதாயம் 'காதல் காதல்'னும், 'காதல் இல்லையேல் சாதல்'னும் இருப்பதைப் பார்த்தால் மனசு பதறது. 'சாதல்'னா 'சாகிறது'ன்னு நினைச்சுட்டாங்க!"
காயத்ரி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் கன்னத்தில் விழுந்த அறைகளாக முரளி உணர, அவளோ யாரையும் சட்டை பண்ணாமல் சீரியஸாகப் பேச்சைத் தொடந்தாள்.
"போன வாரம் கூட எங்க ஹாஸ்பிடல்லே போஸ்மார்ட்டத்துக்கு ஒரு கேஸ் வந்ததுப்பா. பி.காம் படிச்சவனாம். வேலை தேடித் தேடி அலுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானாம். இப்படி வெள்ளைத் துணியப் போட்டு மூடற நிலைக்குப் போனாலும் பரவாயில்லை. வெள்ளைச் சட்டை வேலை... அதாம்பா வொயிட் காலர் ஜாப் கிடைச்சாதான் பார்க்கணும்ங்கிற போலி கவுரவத்திலே ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டான்."
"அவன் ஒரு விரக்தியில அப்படி பண்ணியிருக்கலாமில்லே?"
"அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு முதல்ல ஆட்டோதான் ஓட்ட ஆரம்பிச்சார். இப்பப் பாரு நாலு ஆட்டோ ரெண்டு டாக்ஸிக்குச் சொந்தக்காரராயிட்டார். தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"
"இந்த மாதிரி கோணங்களிலே எல்லாம் நான் யோசிக்கவேயில்லை காயத்ரி," என்றாள் சுமதி வியப்பு தொனிக்கும் குரலில்.
'நானும்தான்' என்று நினைத்துக் கொண்டான் முரளி. அவனுக்குள் ஒரு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.
"சரி இருக்கட்டும். இவங்களை விடு. புகுந்த வீட்டிலயோ வேலைக்குப் போகிற இடத்திலயோ ஏற்படுகிற ஏதேதோ பிரச்னைகளால உயிரை மாய்ச்சுக்கிற பெண்கள்?" சுமதியிடமிருந்து அடுத்தக் கேள்வி புறப்பட்டது.
"ம்ம்ம்... இல்லப்பா சூழ்நிலைக் கைதிகளாயிட்டாலும் கூட அவங்களும் முட்டாள்கள் கோழைகள்னுதான் சொல்லத் தோணுது. உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? சொந்தக் காலிலே வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் எப்பவும் இருக்கணும். இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்க சீர் செனத்திய விட பொண்ணுகளுக்கு முக்கியமா இந்தத் தைரியத்தை தந்து அனுப்புறதும் ஆம்பள பசங்களுக்கு குறைவில்லாம அவங்களையும் படிக்க வைக்கறதும் பாராட்டுக்குரியது. ஒரு பொண்ணு வீட்டிலயும் சரி வேலைக்குப் போகிற இடத்திலயும் சரி, கோழையா பயந்து சாகிறத விட வாழ்ந்து அவளுக்கு அநியாயம் பண்றவங்கள இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாமில்லையா?"
அதுவரை பேசாமலிருந்த முரளிம், "உங்களை ஒண்ணு கேட்கலாமா காயத்ரி" என்றான். 'தாராளமாக' என்பது போலப் பார்த்தாள் காயத்ரி.
"தற்கொலை பண்ணிக்கிறதை முட்டாள்தனம்னு சொல்றீங்க.. சரி. ஆனா கோழைத்தனம்னு எப்படிச் சொல்ல முடியும்? சாகிறதுக்கு ஒரு அசாத்திய தைரியம், துணிச்சல் இருக்கணுமில்லையா?"
காயத்ரியின் முகம் சிவந்தது.
"பிரச்னைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா? தற்கொலை ஒரு ஈஸி எஸ்கேப்பிஸம். பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலைதான்னா எல்லோருமே சாக வேண்டியதுதான்! யாருக்குதான் பிரச்னையில்லை?"
"ஒத்துக்கறேன். பிரச்னை ஒரு பொதுச் சொத்துதான். ஆனா அவங்க துவண்டு போறது ஓட ஓட விரட்டும் தாங்க முடியாத தோல்விகளாலே..."
"முரளி சார், தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு..."
"இருங்க இருங்க. முதல் சில தோல்விகளிலே வேணுமானா அப்படி நினைக்கலாம் நம்பலாம். ஆனா வெற்றிப் படியே கண்ணுக்குத் தெரியாம அடுக்கடுக்கா தோல்விகளே தொடரும் போது..?"
"வெற்றி கிடைக்குமோ என்னமோ? அதனாலே இப்பவே செத்திடலாம்னு முடிவு பண்ணிடணுமா? முயற்சி வேணுங்க. நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களைச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது... அத்தனை கஷ்டப்பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? எதுங்க விவேகம்?"
பொட்டில் அறைந்தது போலப் புறப்பட்ட அவளது கேள்வியிலே பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்டான் முரளி. மனதில் இருந்த அத்தனை பாரங்களையும் காயத்ரி என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. கூடவே உமாவின் நினைவுகளையும். நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
"நான் சொல்றதெல்லாம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?"
'இல்லை' என்பது போலத் தலையாட்டியவன், என்ன பதில் சொல்வதென யோசிக்கையிலேயே அவனுக்குச் சிரமம் வைக்காமல் பேருந்து வந்து நின்றது. ஏறுவதற்கு எல்லோரும் எத்தனிக்கையில், இவன் மட்டும் அம்மா பார்க்கும் முன் பணத்தைத் திரும்ப வைக்க வேண்டுமே என்ற அவசரத்துடன் திரும்பி நடக்கலானான்.
"இந்திரா நகர் போகணும்னீங்களே? இப்ப எங்க போறீங்க..?" அவசரத்துடன் கூவினாள் காயத்ரி.
"கரையைத் தேடி..." என்றபடி இவன் கை அசைக்க, அவன் சொன்னது புரியாத முக பாவத்துடனே காயத்ரி பஸ்ஸில் ஏறிக் கொள்ள, அது வேகமாக நகர்ந்தது.
*** *** ***
*மார்ச் 1988 "நண்பர் வட்டம்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை காலத்திற்கேற்ற சிறு மாற்றங்களுடன்.