வெள்ளி, 28 ஜூன், 2019

நூற்றாண்டு நிறுவனமும்.. மக்கள் ஆதரவும்.. ஏழு தமிழக முதலமைச்சர்களும்.. - தூறல்: 36

ன் குடும்பப் பின்னணியை இதுகாலமும் வெளிப்படுத்தாமல் தவிர்த்தே வந்திருக்கிறேன். நினைவலைகள் எனும் பகுப்பின் கீழ், கூட்டுக் குடும்பமாக நாங்கள் வளர்ந்த விதத்தைப் பற்றி மட்டும் ‘திண்ணை நினைவுகள்’ போன்ற சில பதிவுகளில் சொன்னதுண்டு. 

திரு. ஏ. ஆர். சண்முகம் அவர்கள்
தாத்தா திரு. எம். சோமசுந்தரம் அவர்கள்

பெரிய தாத்தா திரு. ஏ. ஆர். சண்முகம் அவர்கள் (தாத்தாவின் தாய்மாமா)
, என் தாத்தா (அப்பாவின் அப்பா) திரு எம். சோமசுந்தரம் அவர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டு உயர்ந்த ‘லயன் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனம் இவ்வருடம் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் வேளையில் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் பதிவு, எப்போதும் போலவே உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும்.. தூறல்: 36_ல்!



திருநெல்வேலியில் தற்போது ‘லயன் பஸ் சர்வீஸ்’ ஆக இயங்கி வரும் ‘லயன் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனம் குறித்து சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு சங்கம் தனது இதழுக்காகத் தயாரித்த குறிப்பு இணையத்தில் வெளியாக, அடுத்த சில தினங்களில் நெல்லை-தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்களால் உலகெங்கிலும் பகிரப்பட்டு வைரலாக வலம் வந்தது மக்கள் கொண்டிருக்கும் அபிமானத்தைக் காட்டியுள்ளது. பல ஊர்களில் நாடுகளில் வசிக்கும் எனது பள்ளி, கல்லூரி தோழியர், தங்கையரின் தோழியர் எங்களுக்கே இதை கடந்த சில தினங்களில் பலமுறை வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்கள்.

உலகை வலம் வந்த செய்திக் குறிப்புகள் (படங்கள் நான் இணைத்துள்ளேன்):

யன் ஆட்டோமொபைல் சர்வீஸ் கம்பெனி, திரு ஏஆர் சண்முகம்  அவர்களால் எட்டு நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஒரு பேருந்துடன் 1919 ம் வருடம் திருநெல்வேலி ஜங்ஷனில் ஆரம்பிக்கப்பட்டது. அதுமுதல் அவருடன் பணியாற்றி வந்த அவரது மருமகன் திரு எம் சோமசுந்தரம் அவர்கள் 1930 ல் அவரது பங்குதாரர் ஆனார்.

கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் கிளைகளுடன் இயங்கி வந்த இந்நிறுவனம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 21 வழித்தடங்களில் 53 பஸ்களை தினம் 5,900 மைல்கள் இயக்கி வந்தது.

அகில இந்திய விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 ல் அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் அமல்படுத்திய பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு.

தொழிலாளர்கள் நலனைப் பேணுவதற்காக 1960களிலேயே நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் லயன் மோட்டார் தொழிலாளர்கள்  சங்கம் உருவாக்கப்பட்டது.

நிர்வாகம் பத்து வருட பணி நிறைவு செய்த தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் HMT கைக்கடிகாரம் பரிசளித்து கெளரவப்படுத்தி வந்தது.

தொழிலில் அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி அரசின் நன்மதிப்பை பெற்ற இதன் பங்குதாரர்கள், வருமானவரித்துறையின் அதிக வரி செலுத்துவோர் பட்டியலிலும் தவறாது இடம் பெற்று வந்தனர்.

தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு  பெருமளவில் நிதி வழங்கி வந்ததோடு கல்வி, சமூக, ஆன்மீக பணிகளிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தனர்.

திரு ஏஆர் சண்முகம் அவர்கள் நெல்லை மதிதா இந்துக் கல்லூரி கல்விச் சங்கம், கோ-ஆப்பரேட்டிவ் அர்பன் பேங்க், ரோட்டரி கழகம், டிஸ்ட்ரிக்ட் கிளப், சிவசைலம் அத்திரி ஆசிரமம், சாலை குமாரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக கமிட்டி ஆகியவற்றில் தலைவராகவும், சௌத் இந்தியா பேங்க் - ல் இயக்குனராகவும்  திறம்பட செயலாற்றியுள்ளார்.

திரு எம் சோமசுந்தரம் அவர்கள், பெருமாள்புரம் வீட்டுவசதி சங்கம், ஸ்கவுட் மாஸ்டர்,  ரோட்டரி கழகம்,  ப்ரீமேசன்ஸ் லாட்ஜ், நெல்லை சங்கீத சபா, திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றில் பல முக்கியப்  பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட், சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இயக்குனராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.



திரு எம்ஜிஆர் சிறுசேமிப்புத் துறை தலைவராக 1967 ல் பதவி வகித்த போது மாவட்ட சிறுசேமிப்பு பிரச்சாரக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு திறம்படச் செயலாற்றியுள்ளார்.

தற்சமயம் மூன்றாம் தலைமுறையினரால் நடத்தப்படும் இந்நிறுவனம் 11 வழித்தடங்களில் 17 பேருந்துகளுடன் தினம் 5000 கிலோமீட்டர் இயக்கப்பட்டு சுமார் 12,000 பயணிகளுக்கு சேவையை வழங்கி வருகிறது. 

நிறுவனர்களின் ஆசியோடு நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் இதன் பின்னணியில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பினையும், பொது மக்களின் ஆதரவையும் இந்நிறுவனத்தினர் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

தைத் தொடர்ந்து மக்களால் பகிரப் பட்டிருந்த அடுத்தக் குறிப்பு...

திருநெல்வேலி - தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கி வருகிற பேருந்து  பற்றி..


LION BUS SERVICE


படத்தில் சக்கரத்துக்கு இடப்பக்கம் பெரிய பெரியப்பா திரு முத்துவேல் அவர்கள்
சக்கரத்துக்கு வலப்பக்கம் அப்பாவின் மாமா திரு. கோமதிநாயகம் அவர்கள்
அவருக்கு அடுத்து சின்னப் பெரியப்பா திரு சுப்பிரமணியம் அவர்கள்


ந்த நிறுவனமானது வெற்றிகரமாக 100 வது ஆண்டில் தடம் பதிக்கிறது. 



லாபத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மக்களுக்காக பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்தை வடிவமைத்துள்ளது இந் நிறுவனம்.

சாதாரண பேருந்துகளில் 55+2 இருக்கைகள் இருக்கும். இப்பேருந்தில் 50+2 இருக்கைகள் மட்டுமே.



மேலும் இப்பேருந்தின் சிறப்பம்சம் திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இடை நில்லா பேருந்து. 

பயணிகள் சவுகரியமாக பயணிக்க இருக்கைகள் அனைத்தும் கூடுதல் டிகிரி சாய்வு கோணத்தில் அமைக்கபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி

AIR SUSPENSION
FREE WIFI
MOBILE CHARGER
NEWS MAGAZINES
VOICE ANNONCEMENT( பேருந்து நிறுத்துமிடம் அறிய)

WEIGHING SCALE (எடை பார்க்கும் கருவி)

MORE LEG ROOM (கால் நீட்டி மடக்க அதிக இடவசதி இதன் காரணமாக இருக்கைகள் குறைவு)

CCTV 

ANTILOCK BRAKING SYSTEM 

AUTOMATIC DOOR  (தானாக திறந்துமூடும் கதவுகள்)
என சகல வசதிகளுடன் வடிவமைக்கபட்ட பேருந்து.”
----

(மேற்கண்ட பேருந்தினைப் பல கோணங்களிலும் படமாக்கித் தொகுப்பாக வாட்ஸ் அப்பில் வலம் வரச் செய்ததும் 
நிறுவனத்தின் மேல் அபிமானம் கொண்ட ஒரு பயணியே.) 

து போன்ற பதிவுகளில் பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிந்துள்ளார்கள்.



FB - Fans of Tirunelveli குழுமத்தில் ஒரு பகிர்வு:



அரை நூற்றாண்டு வயதைக் கடந்த பலரும் தம் அந்நாளைய நினைவுகளை அனுபவங்களை வாழ்த்துகளோடு அனுப்பியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு இரண்டு:
FB_யில்..

WhatsApp_ல்..
* “னது உளங்கனிந்த வாழ்த்துக்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னர் நம் ஊர்களின் சாலை வசதி எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் மிகச் சரியாகத் திட்டமிட்டு அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் முழுமைக்கும் பேருந்து சேவை புரிந்து வந்துள்ளனர்.திருநெல்வேலி தலைமையிடமாக வைத்து, கோவில்பட்டி, தூத்துக்குடியில் Shed அமைத்து அனைத்து தாலுகாக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, காடல்குடி, இலட்சுமிபுரம், இராமச்சந்திரபுரம், பூதலாபுரம், சிவகிரி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், ஸ்ரீவி, மாசார் பட்டி, குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், சிவகளை , ஏரல், சாத்தான்குளம்,கடலையூர், கழுகுமலை என பரந்து விரிந்து தனது சேவையை ஆற்றி வந்துள்ளனர். இதில் கேள்விப்படாத ஊர்களெல்லாம் உள்ளது. அந்த ஊர்களில் Night Halt Bus உண்டு. அருகருகே அமைந்த ஊர்களாகத் தான் இருக்கும். எ. கா - க காடல்குடி, இலட்சுமிபுரம், இராமச்சந்திரபுரம் பூதலாபுரம் போன்ற ஊர்கள் ஒரே area .அவர்களின் திட்டமிடல் நேர்த்தியாக இருந்துள்ளது.அரை நூற்றாண்டு வயதாகும் எனக்குத் தெரிந்த குறைந்த விசயங்கள் இவை. என்னிலும் மூத்தவர்கள் இதை விட அதிகமான செய்திகள் தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் எனக்குத் தெரிந்த ,அனுபவித்த விசயங்களை பகிர்ந்துள்ளேன். _ லயன் பஸ் கம்பெனி இன்னும் பல்லாண்டு தனது சேவையை சிறப்பாகத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.🙏🙏🙏”

---


1982_ஆம் ஆண்டில் பேருந்தை நிறுத்தி இறக்கையில் அடிபட்ட புறாவுக்கு முதலுதவி செய்து பறக்க விட்டதாக, கண்டக்டரைப் பாராட்டி எழுதியிருந்தார் FB_யில் மற்றொருவர். என் சித்தப்பாவின் மூலம் அறிந்த இன்னொரு தகவல், பல பத்தாண்டுகளுக்கு முன், பிரசவ வலி எடுத்த பெண்ணை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுகப்பிரசவம் ஆன கதை. அந்த வீட்டினர் பேருந்தின் படத்தைத் தங்கள் வீட்டில் மாட்டி வைத்திருந்தார்கள் என்பது கூடுதல் செய்தி.


***
க்கள் சேவையில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினருடன் அந்நாளைய மந்திரிகளும் நல்ல உறவு முறையில் இருந்திருக்கிறார்கள். கீழ்வரும் படங்கள் முதலமைச்சர்கள் அந்தந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி வந்த போது எடுக்கப்பட்டப் படங்கள்:


முன்னாள் முதலமைச்சர்களுடன்.. 

#1
முன்னாள் முதலமைச்சர் திரு இராஜாஜி அவர்களுடன்..

இரண்டாம் வரிசையில் பின் இருக்கையில் தாத்தாவும்
வலப்பக்கப் பின் இருக்கையில் பெரிய தாத்தாவும்

#2
1963_ல் இந்தியா-சைனா போரின் போது போர் நிவாரண நிதிக்காக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரிடம் என் பெரியப்பா, அத்தைகள் மற்றும் அக்கா ஒரு பவுன் தங்கக் காசு வழங்குகிறார்கள்:

#3
சிவசைலத்தில் ஒரு அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் திரு பக்த்வசலம் அவர்களுடன்..
நடுவில் அமைச்சர். இடப்பக்கம் தாத்தாக்கள் இருவரும்.
வலப்பக்கக் கடைசியில் என் ஆச்சி ராமலக்ஷ்மி அவர்கள்.

#4
முன்னாள் முதலமைச்சர் திரு அண்ணாதுரை அவர்களுடன்...
தாத்தாக்கள் இருவரும்..

#5
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களுடன்..
மாலை அணிவித்து வரவேற்கிறார் அப்பாவின் மாமா திரு பொன்னுச்சாமி அவர்கள்..
இடப்பக்கம் புன்சிரிப்புடன்  தாத்தா


கலைஞருடன் தாத்தா அமர்ந்திருக்க
அருகே நிற்பது அப்பா திரு சண்முகம் அவர்கள்

#6
முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி,ஆர் அவர்களுடன்.. தாத்தா..


திரு MGR மற்றும் தாத்தா நடுவில் அமர்ந்திருக்க தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள் இருபுறமும் கால்மேல் கால் போட்டு வீற்றிருக்கார்கள்.  அந்நாளில் தலைவர்களுக்கு இருந்த புரிதலையும், அதிகாரிகளுக்கு இருந்த சுதந்திரத்தையும் பார்க்கையில் பின்னாளில் தமிழகத்துக்குள் நுழைந்த காலில் விழும் கலாச்சாரம் நினைவுக்கு வந்து போகிறது இந்தப் படத்தைக் காணுகையில்..



#7
முன்னாள் முதலமைச்சர்கள் அறுவருடன் இருக்கும் படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக கீழ்வரும் படங்கள். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தாத்தா 1983_ல் காலமாகி விட்டிருந்தார்கள். மேலும் கடைசி சில வருடங்கள் அதிக வெளியுலகத் தொடர்புகள் இன்றி ஓய்வில் இருந்தார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் நிறுவனத்துடன் ஏதோ ஒரு வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும்..



திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில்.. ‘ராஜா’ திரைப் படத்தில்.., லயன் ஆட்டோமோபைல்ஸ் பேருந்திலிருந்து இறங்கும் காட்சி...


***
ரின் முக்கிய மனிதர்கள் பலரும் தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கும் வந்து செல்வார்கள்.  ‘பாலஸ் டி வேல்ஸ்’ திரையரங்கை நடத்தி வந்த வகையில் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் வந்ததுண்டு. ஜெமினி பிக்ஸர்ஸ் தயாரித்த படங்கள் அங்கே மட்டுமே திரையிடப்பட்டதால் ஆனந்த விகடன் திரு வாசன் குடும்பத்தினர் மற்றும் அவரது மகன் திரு பாலன் ஆகியோரும் வந்திருக்கிறார்கள். தியேட்டர் பற்றி என் சித்தப்பா திரு வடிவேல் முருகன் அவர்கள் தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்று: ஜெமினியும் நாங்களும் 


தன் அலுவலக அறையில்
தாத்தா திரு சோமசுந்தரம் அவர்கள்

பதவியேற்கும் மாவட்ட கலெக்டர்கள் தாத்தாவை வந்து முதலில் சந்தித்துச் செல்வார்கள்களாம். எனக்கு விவரம் தெரிந்த வயதில் நீதிபதிகள் மற்றும் கலெக்டர் குடும்பத்தோடு வந்து பார்த்திருக்கிறேன். கலெக்டர் கொடியேற்றும் குடியரசு தின, சுதந்திர தின விழாக்களுக்கு தாத்தாவுடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்திருப்போம். அவ்வளவே நினைவில் உள்ளது. மற்றபடி இது போன்ற விவரங்கள், முதலமைச்சர்களுடனான புகைப்படங்கள் ஆகியன தாத்தாவின் காலத்துக்குப் பிறகே அத்தைகள், அம்மா, பெரியம்மா, சித்தப்பா ஆகியோர் கூறியே எங்களுக்குத் தெரியும்.



அதாவது, ஊரில் முக்கிய நபராக இருந்தாலும் பேரக்குழந்தைகள் நாங்கள் அவரைப் பாசமான தாத்தாவாக மட்டுமே அறிந்திருந்தோம். உழைப்பால் உயர்ந்த மனிதரான தாத்தாவிடம் எந்தவொரு தீய பழக்கமும் கிடையாது. தர்ம சிந்தனை, தன்னடக்கம், பொறுமை நிறைந்தவர். அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்ட பண்புகள் பல. எதிலும் ஒழுங்கு, நேர்த்தி, பெரியவர்களை மட்டுமின்றி எளியவர்களையும் மதித்தல், எந்த ஒரு பொருளையும் பத்திரமாகப் பயன்படுத்துதல், பாதுகாத்தல் (அடிக்கடி இதை என் சிறுவயதில் வலியுறுத்தியிருக்கிறார்கள்). 

ஒரு நிறுவனம் அதை வளர்த்து விட்டவர்களுக்குச் செய்யும் மரியாதை அதைத் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை நிலை நாட்டுவதுதாம். அந்த வகையில் லயன் நிறுவனம் நூற்றாண்டைத் தொட்டிருப்பது முன்னோரின் ஆசியும், முன்னெடுத்துச் செல்லும் மூன்றாம் தலைமுறையினரின் உத்வேகமுமே. மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான சேவை தொடரட்டுமாக!
**
இந்தப் பதிவின் Facebook  பகிர்வில் ‘இங்கே
 வாழ்த்தியிருப்பவர்களுக்கும் நன்றி
***

12 கருத்துகள்:

  1. நூறாண்டை தொட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்கள் பாரம்பர்யம் பற்றி அறிந்து சிலிர்த்தேன். நீங்களும் இதுவரை அதை வெளிப்படுத்தியதில்லை என்பதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பெருமைமிகு குடும்பம் பற்றி இதுநாள் வரை தாங்கள் வெளிப்படுத்தாமல் இருந்தது வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 100 ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனம் நடத்துவது சிறப்பான விஷயம். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மூதாதையரின் தொழில் மீது இருந்த அர்ப்பணிப்பு, தொழிலாளர் மேல் காண்பித்த அனுசரணை, பயனாளர்களுக்கான வசதிகள்.., ஒவ்வொரு குறிப்புக்கும் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    // ஒழுங்கு, நேர்த்தி, பெரியவர்களை மட்டுமின்றி எளியவர்களையும் மதித்தல், எந்த ஒரு பொருளையும் பத்திரமாகப் பயன்படுத்துதல், பாதுகாத்தல்//வாசிக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    மூன்றாம் தலைமுறையினரும் மேன்மேலும் சாதிக்க, வெற்றி சிறக்க அன்பின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. முதல்வர் எம்.ஜி.ஆர்,ஏ.எல்.எஸ் , ஆகியோருடன் தாத்தா நிற்கும் படம் திர்நெல்வேலி கலெக்டர் பங்களா வெளியே உள்ள காத்திருப்பு அறையில் எடுக்கப்பட்டது. அப்போது நானும் அங்கே இருந்தேன். எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தி.க சோமசுந்தரமாக. படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனது -கலாப்ரியா

    பதிலளிநீக்கு

  7. பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே முன்வைத்து நடத்தும் காலத்தில் கடந்த நூறு வருடங்களாக மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று பவனி வரும் லயன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் சேவை பாராட்டுக்குரியது.

    காலத்தின் ஆவணங்களாய் அந்நாளைய புகைப்படங்கள் யாவும் அழகாய் அமைதியாய் வரலாற்றைப் பதிவுசெய்கின்றன.

    சாதனை மிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தும் ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாத உங்கள் இயல்பு வியக்கவைக்கிறது. தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட பண்புகளுள் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

    இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் இந்நிறுவனம் தன் சேவையைத் தொடரவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். பெருமைமிகு பாரம்பரியத்தின் அங்கமான உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப மகிழ்ச்சி :-)

    100 ஆண்டு என்பது மிக மிக பெரிய சாதனை அதுவும் இந்தக்காலத்தில் தொடர்ந்து.

    முன்பு 100 ஆண்டுகள் என்பது சாத்தியமான ஒன்றாக இருக்கலாம் ஆனால், தற்போது போட்டி மிகுந்த உலகத்தைக் கடந்து 100 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை.

    இருக்கைகள் குறைவாக வைத்து அமைத்தது என்பது மிக பாராட்டத்தக்கது.

    ஏனென்றால், சென்னையில் இருக்கையை அதிகப்படுத்தி என்னுடைய முட்டியை பெயர்த்து விடுகிறார்கள். தற்போது வந்துள்ள புதிய பேருந்து வடிவமைப்பு பரவாயில்லை.

    நூறு ஆண்டுகள் நிறுவனம் நடத்தப்பட்டது என்றால், அதில் பணி புரிந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாராட்டத்தலுக்குரியவர்கள்.

    இவர்கள் தான் ஒரு பேருந்தின் சிறப்பை மேம்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும். 100 ஆண்டுகள் உங்களுக்கு இது போல நடத்துநர் ஓட்டுநர் அமைந்தது மிகப்பெரிய வரம்.

    மேலும் பயணிகளின் சிரமங்களை உணர்ந்து அவர்களின் வசதிற்கேற்ப பேருந்தை அமைத்து அவர்களின் வாழ்த்துகளுடன் மேலும் பல நூறு ஆண்டுகள் உங்கள் பல தலைமுறை இச்சேவையை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. கடந்த சில வருடங்களாக, நான் அதிக அளவில் இணையத்தில் நேரத்தை செலவிட முடியாமல் போனதன் காரணமாக, தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. எனினும், தங்களுடைய குடும்ப வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு, இந்த பதிவை படிக்க வாய்ப்பளித்த இயற்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் அவ்வப்பொழுது பதிவிடும் பழைய புகைப்படங்களை வைத்து, தாங்கள் பிரபலமான குடும்பத்தை சார்ந்தவர் என்பதை யூகித்து வைத்திருந்தேன். அது உண்மையாய் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    நூறு ஆண்டுகளைக் கடந்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் தங்களுடைய குடும்ப நிறுவனம், இன்னும் பல நூறாண்டுகள் மக்கள் சேவையாற்றுவதோடு தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றும் வகையில் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கருத்துகளைப் பகிர்ந்திருக்கும்
    வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும்
    அனைவருக்கும்
    அன்பும் நன்றியும்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin