Wednesday, December 31, 2014

விடை பெற்றுச் செல்கிறது 2014!விடை பெற்றுச் செல்கிறது 2014. சற்று திரும்பிப் பார்க்கிறேன் நானும். எழுத்தினைப் பொறுத்தவரையில் மனதுக்கு நிறைவாக அமைந்த விஷயங்களாக..

Tuesday, December 30, 2014

சித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (பாகம் 1)

 #1 அம்மா என்றால் அன்பு..

ஊர் மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பனின் கைவண்ணத்தை இந்த வருட சித்திரச் சந்தையிலும் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்ததை இங்கே (2014) சொல்லியிருந்தேன். கண்டு இரசித்த ஓவியங்களின் படங்களைப் பகிர்ந்திடுவதாக வாக்கும் அளித்திருந்தேன். அடுத்த சித்திரச் சந்தை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் நினைவு வந்து அவசரமாகப் பகிர்ந்து கொள்கிறேன் இதோ உங்களுடன், இரண்டு பாகங்களாக:)!

ரசனை மிகு மாந்தர் கூட்டம்
தொடர்ச்சியாக இது 3வது வருடம். முத்துச்சரத்தைத் தொடரும் நண்பர்கள் இவரை நன்கறிவர். புதியவர்கள் எனில் முந்தைய கண்காட்சிகளில் இவர் காட்சிப்படுத்தியிருந்த ஓவியங்களைக் காண இங்கே செல்லலாம்:  2012 (படங்கள் 1, 17, 18, 19);  2013 (காவியமா ஓவியமா?); கல்கி ஆர்ட் கேலரியில் என் கட்டுரை

கடந்த வருடங்களைப் போலல்லாமல் இவ்வருடம் இவரது ஓவியங்களைப் படமாக்குவதில் சிரமம் இருந்தது. கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இடம் ஒதுக்கப்பட்டு வருகிறவர்களைக் கவரும் வகையில், நுழைவாயில் அருகாமையில் அமைந்திருந்தது  ஸ்டால். ஓவியங்கள் எல்லாம் நிழல் சூழ்ந்த இடத்தில், சுவற்றின் மேல் வைக்கப்பட்டிருந்ததால் விரும்பியபடி கோணம் அமைக்க முடியவில்லை. மேலும் நீளவாக்கில் ஸ்டால் அமைந்திருக்க, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர் கூட்டம் ஒரு பக்கம். முடிந்த வரையில் சிறைப்படுத்தினேன் இவர் தூரிகையில் உதித்த சித்திரப் பாவையரை:

#2 கார்த்திகைப் பெண்

Saturday, December 27, 2014

தூறல் 23: 2014_ல் FLICKR_ம் நானும்; சித்திரச் சந்தை 2015

தினம் ஒன்று அல்லது இரண்டு எனத் தொடர்ந்து ஃப்ளிக்கரில் படங்கள் பகிர்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருப்பதால்தான் ஒளிப்படத் துறையில் ஈடுபாடு குறையாமல் இருந்து வருகிறது.

ஒளிப்படங்களைப் பகிர்வதற்கான பிரத்தியேகத் தளமான FLICKR குறித்து அடிக்கடி இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஃப்ளிக்கரை பின்பற்றி எத்தனையோ தளங்கள் வந்து விட்டிருப்பினும் பல அபிமானிகள் இன்னும் தொடர்ந்து ஃப்ளிக்கரை விடாமல் உபயோகித்து வருகின்றனர். நானும் அதில் அடக்கம்:)!

கடந்த ஒரு வருடத்தின் சுவாரஸ்யமான பதிவுகளாக.. அதிகம் பேரால் விரும்பப்பட்ட, பார்வையிடப்பட்ட பதிவுகளாக இவை:
(most liked and viewed shots in the last one year) 
இவையும் இவை போன்ற மற்ற வருடங்களின் மேலும் சிலபல படங்களும் சராசரியாக 400_லிருந்து 1500 வரையிலுமே பார்வையாளர்களைப் பெற்று வந்திருக்கின்றன. அப்படியிருக்க இம்மாதம் அடுத்தடுத்து EXPLORE ஆன  எனது இரு படங்கள் 7500+, 4500+ பார்வையாளர்களைப் பெற்றிருந்தன.

EXPLORE என்றால் என்ன?

Tuesday, December 23, 2014

‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன்,  நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ்  ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு  (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#

நான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’  (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன.  மூவருக்கும் வாழ்த்துகள்!  அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது! பதிப்பாளருக்கு வாழ்த்துகள்! மேலும்

Friday, December 19, 2014

தேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும்.

முதல் கவிதை முதுமையையும் இனிமையாக்குகிறது, செவிகளால் பார்க்கமுடியும் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்றால்

Wednesday, December 17, 2014

கருப்பு வெள்ளையும் ஐந்து நாட்களும்..

ருப்பு வெள்ளையில் மட்டுமே ஒரு காலத்தில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. டிஜிட்டல் உலகில் விதம் விதமான வசதிகளுடன் ஒளிப்படக் கருவிகள், எடுக்கும் படங்களை விருப்பத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளும் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியில் இன்றைக்கும்  வண்ணப்படங்களுக்கு மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறவையாக இருப்பவை மோனோக்ரோம் எனக் குறிப்பிடப்படும் கருப்பு வெள்ளைப் படங்களே.

காட்சியை வலிமையாக வெளிப்படுத்த உதவுவது, கருப்பொருளின் மீதான கவனம் பிற வண்ணங்களால் சிதறாமல் இருப்பது, குறைந்த ஒளியிலும் அழகான ரிசல்ட் கொண்டு வர முடிவது,  உணர்வை அழுத்தமாகக் காட்டக் கூடிய தன்மை எனப் பல காரணங்கள். அதுமட்டுமின்றி,

Monday, December 15, 2014

சான்றோர் ஆசி


கடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிட்டு, ஏதேனும் காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த ஒரு சந்திப்பு சென்ற சனிக்கிழமை நண்பகலில் நிறைவேறியது.

வெ.சா என கலை மற்றும் இலக்கிய உலகில் அறியப்படும் மதிப்பிற்குரிய திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் தனது எண்பதாம் அகவையை நான்காண்டுகளுக்கு முன் நிறைவு செய்திருந்தார். சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்த விவரம் அறிந்ததில் இருந்து அவரைச் சந்தித்து அளவளாவி ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே நண்பர்கள் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது. இந்த முறை நேரம் கூடி வந்தது. ஷைலஜா ஒருங்கிணைக்க, அவர் இல்லத்துக்கு வெகு அருகாமையில் இருந்த ஹெப்பால் எஸ்டீம் மாலின் மூன்றாம் தளத்தை தேர்வு செய்தோம்.

#2
சான்றோர்
வழக்கமாக சனிக்கிழமை காலையில் நடைபெறும் கம்ப இராமயணம் முற்றோதலை மாலை நேரத்துக்கு மாற்றி அமைத்து விட்டு மகேஷ், திருமூலநாதன் ஆகியோருடன் சரியான நேரத்துக்கு வந்து விட்டிருந்தார் மதிப்பிற்குரிய திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள். இரு சான்றோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கூட்டம்.

Thursday, December 11, 2014

சிறுகதை: "நல்லதோர் வீணை" - தமிழ் ஃபெமினாவில்..


ன்றைக்குதான்  ரேணுவுக்கும் பிறந்தநாள்.


மணவாழ்வு முறிந்து முழுதாக இருபத்தியெட்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும், ஒரு முறையேனும்  ரேணுவை நினைக்காமல் இளைய மகள் திரிஷாவின் பிறந்தநாளைக் கடக்க முடிந்ததில்லை கிஷோரால்.  அதுவும் நேற்று நடுங்கும் குரலில் வெகுநேரம் அம்மா அவன் கையைப் பிடித்தபடி ரேணுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில் அவள் நினைவு கூடுதலாகவே மனதை ஆக்ரமித்திருந்தது.

Monday, December 8, 2014

“கர்நாடக சுற்றுலா” அகில இந்திய ஒளிப்படப் போட்டி 2014 - பெங்களூர் கண்காட்சி (2)


முன்னரெல்லாம் மக்கள் கூடும் முக்கியமான திருவிழாக்களில் செய்திக்காகப் பத்திரிகையாளர்கள் மட்டுமே கேமராவுடன் செல்வது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டினர் மற்றும் ஒருசில புகைப்பட ஆர்வலர்கள் கேமராவுடன் தென்படுவார்கள். இப்போது இது போன்ற விழா சமயங்களில் குழுவாகவோ தனியாகவோ புகைப்படக் கலைஞர்கள் பெருமளவில் சென்று படமாக்கி, நேரில் பார்க்கும் உணர்வோடு அக்காட்சிகளை மற்றவருக்கு அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேரோட்டங்கள், மதுரை சித்திரைத் திருவிழா, கூவாகம் திருவிழா, குலசை தசரா போன்ற பல விழாக்களுக்கு ஒவ்வொரு வருடமுமே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பல கலைஞர்கள். ஒருவர் எடுக்கும் படங்களைப் பார்க்கையில் மற்றவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ள அடுத்தடுத்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புகைப்படக் கலைஞர்களும் பயணக் கட்டுரைகள் எழுதுகிறவர்களும் சுற்றுலா துறைக்கு ஆற்றி வரும் சேவை அளப்பரியது. சுற்றுலா வளர்ச்சி பல மனிதர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவும் இருக்கிறது. திருவிழாக்களுக்குக் கூடுகிற கூட்டம் பிரமிப்பையும், நம் கலாச்சாரத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பையும் காட்டுகின்றன.

சென்ற பதிவின் தொடர்ச்சியாக.. சுற்றுலா வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய ஒளிப்படப் போட்டியில் வென்ற படங்களில் சில உங்கள் பார்வைக்கு. சுமார் 120 காட்சியில் இருந்தன.  என்னைக் கவர்ந்த இருபத்து இரண்டினை, எடுத்தவர்களின் பெயரோடு இங்கே பகிருகிறேன்.  அடுத்து இந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கோ, அல்லது கர்நாடகா சுற்றுலாவுக்கு திட்டமிடவோ இவை உதவுமென நம்புகிறேன்.

#1

#2 கம்பாலா
எருமைகளை ஓட விடும் இந்தப் பந்தயத்தை தடைசெய்யக் கோரி வழக்கு நடைபெற்று வருகிறது. . “ஜல்லிக் கட்டினைப் போல இது ஆபத்தானது அல்ல. இதை நம்பிப் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்தப் பாரம்பரிய விளையாட்டைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர்.

#3 வீடு திரும்பல்

#4 உறி அடி விழா

Sunday, December 7, 2014

காண வேண்டிய கானுயிர் உலகம் - பெங்களூரில் சர்வதேச ஒளிபடக் கண்காட்சி (1)

பன்னாட்டுக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஸ்தம்பிக்க வைக்கும் கானுயிர் ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில். 1 டிசம்பர் 2014 அன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலதிகாரியான திரு. கெளசிக் முகர்ஜி ஆரம்பித்து வைத்த இக்கண்காட்சி இன்று 7 டிசம்பர் நிறைவு பெறுகிறது. ஆர்வமுள்ள ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் அனைவரும் கண்டு இரசிக்கலாம்.

அரங்கின் நான்கு அறைகளில் சுமார் 520 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 200, சர்வதேசப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் “17th INTERNATIONAL FEDERATION OF PHOTOGRAPHIC ART(FIAP) NATURE BIENNIAL WORLD CUP"  போட்டியில் வென்ற படங்களும், 120 படங்கள், அகில இந்திய கர்நாடக சுற்றுலா புகைப்படக் கண்காட்சியில் வெற்றி பெற்ற படங்களும் ஆகும். இரண்டு பிரிவுகளில் உலகக் கோப்பையை வென்ற நாடுகள் முறையே இத்தாலியும், தென் ஆப்பிரிக்காவும். இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்!

விருது பெற்ற இந்தியக் கலைஞர்கள் ஆன ஜெயதேவ் பசப்பா, ஃபிலிப் ரோஸ், க்ளெமென்ட் ஃப்ரான்ஸிஸ் மற்றும் மஞ்சுநாத் SK ஆகியோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று சர்வதேச விருது வாங்கிய கிருபாக்கர் செனானி எடுத்த “ Walking with the Wolves" டாகுமென்டரி படம் திரையிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் 24 நாடுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் கலைஞர்கள் இக்கண்காட்சிக்காகத் தங்கள் படங்களை அனுப்பி வைத்திருந்தனர். அளவுகள் சற்று சிறிதாக இருப்பினும் நல்ல Print Quality_யில் அமைந்திருந்த படங்கள் அனைத்தும் அப்படியே நேரில் பார்க்கும் உணர்வைத் தந்தன.

 என்னைக் கவர்ந்த படங்கள் சிலவற்றை எடுத்தவரின் பெயரோடு அப்படியே இங்கு உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.

#1

Friday, December 5, 2014

திருக்கார்த்திகை வாழ்த்துகள்!

#1 திருக்கார்த்திகை வாழ்த்துகள்!#2 போற்றி போற்றி
 தீப ஒளியில் ஞான முதல்வன்

#3 ஐந்து முக விளக்குகள்

Tuesday, December 2, 2014

குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 4 & 5) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்

"நிஜம்,” என்றார்கள் குழந்தைகள், “எங்களுக்கான
காலம் வரும் முன்னரே நாங்கள் மரணிப்பது நடக்கிறது!
சென்ற வருடம் இறந்து போனாள் சின்னஞ்சிறு ஆலிஸ்

Sunday, November 30, 2014

தூறல் 22: ‘அதீதம்’ புதிய பொலிவுடன்; திருச்சியில் 26_வது இலக்கிய விழா; திறமைகள் 70+, 5+; பட்டாணி விலை

ருமாத இடைவெளிக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவந்து விட்டுள்ளது அதீதம்.


2011_ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சில நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதீதம் மின்னிதழ், ஜூலை 2011_ல் எங்கள் குழுவின் வசம் வந்தது.
அதே பாதையில் மூன்று வருடங்களாகப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், கதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இரு மாத இடைவெளியோடு, பழைய படைப்புகளை உடனடியாக புதிய தளத்துக்குக் கொண்டு வர முடியாத சூழல். இருப்பினும் இதழின் இயக்கம் நின்று போக வேண்டாமென்கிற முடிவுடன் சுவைபடச் சொல்லும் பணியைத் துவங்கி விட்டுள்ளது அதீதம். முந்தைய வெளியீடுகள் விரைவில் வேறுதளத்திலோ அல்லது அதீதத்திலேயே   “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழோ கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணம் உள்ளது.


னி அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.  தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும் மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன் அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.


மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இணைந்து நடத்திய 26_வது இலக்கியப் போட்டியில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்த விருதினைப் பற்றி இங்கே பகிர்ந்திருந்தேன். 12 அக்டோபர்  2014 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் எனக்காக வழங்கப்பட்ட விருதினை அனுப்பி வைத்திருந்தார் மன்றத்தின் மாநிலச் செயலாளர், முனைவர். திரு. நா. இராமச்சந்திரன். அவருக்கு என் நன்றி.


#  போட்டியில் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

 விழா அமைப்பாளர்களுக்கு நன்றி! 


Monday, November 24, 2014

யன்னல் நிலவு - ‘சொல்வனம் 115’, பெண்கள் சிறப்பிதழில்..

சுற்றி வளரும் புற்றினை உணராது 
தியானத்திலிருக்கும் துறவியின் தலையில்
விழுகிறது இலையொன்று.
காற்றில் பறந்து நதியில் விழுந்து 
கப்பலாகிறது 
தத்தளிக்கும் கட்டெறும்புக்கு.

Saturday, November 22, 2014

“நம்பிக்கை மனுஷிகள்” - குறும்பட வெளியீடு


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி மலர்ந்த முகம், உதவும் உள்ளம், உற்சாகமான பேச்சு, உறுதியான நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட சகோதரிகள் .Muscular dystrophy-தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்த வந்த பாதை, வலிகளை வலிமையாக்கிக் கொண்ட விதம், தளராத போராட்ட குணம் இவற்றால் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறார்கள்.

Friday, November 21, 2014

தூறல் 21: திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ்

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழா, 12 அக்டோபர் 2014 அன்று திருப்பூரில்  நடைபெற்றது. விழா அமைப்பாளர் திரு. ஜீவானந்தம் அவர்கள் பரிசுத் தொகையோடு கேடயம், சான்றிதழ்களை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  சேமிப்புக்காக விருதுகளை இங்கும் பதிந்து வைக்கிறேன்:). [தொடர்புடைய முந்தைய பதிவுகள் இங்கும், இங்கும்.]

#1

#2
#3

விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்றைக்குப் பலரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது குறித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக திருமதி. தனலெக்ஷ்மி நான் வராதது ஏமாற்றமாக இருந்ததென்றும், சந்திக்கும் ஆசை நிறைவேறுமென நம்புவதாயும் சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே நம்புகிறேன். அவரது அன்புக்கு நன்றி:).
***

துளசிதளம். 2008_ல் பதிவுலகம் நுழைந்ததிலிருந்து தொடருகிற தளம்.  அன்றிலிருந்து இன்று வரை இங்கிருந்து நிறையக் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். என்னென்ன கற்றேன் என்பதையும் பல்வேறு சமயங்களில் பலபதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். சமீபத்தில் நேரடியாக அவரிடமே சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி:).

Thursday, November 20, 2014

மனிதனும் பிரம்மனே..

இந்த மாத PiT போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்து, சப்ஜெக்டைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்கான கதவுகளையும் விரியத் திறந்து விட்டிருக்கிறார் நடுவர். மனிதனின் கைவண்ணத்தில் உருவான எந்தப் பொருளையும் ஒளிப்படமாக்கி அனுப்பலாம். சின்னஞ்சிறு குண்டூசி முதல் கலைநயமிக்கச் சிலைகள், பிரமாண்டமானக் கப்பல்கள் வரை இரசனையுடன் படமாக்கி அனுப்பிடலாம். மாதிரிப் படங்களுடனான அறிவிப்புப் பதிவு இங்கே.

படங்களை அனுப்ப இன்றே கடைசித் தேதி ஆகையால் உங்களுக்கு நினைவு படுத்திட 10 மாதிரிப் படங்களுடன் ஒரு பகிர்வு. 5,6 தவிர்த்து மற்றன யாவும் புதிது.

#1 கலைவாணி கலையழகுடன்..


#2 ஆயர்ப்பாடி மாளிகையில்..

#3 புத்தம் சரணம்
#4 Made for each other

Monday, November 17, 2014

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. - ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’ருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை.  அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.

பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை  எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.

Wednesday, November 12, 2014

நாம் நாமாக..

1. கண்கள் இருளைப் பார்க்கும் போது நம்பிக்கை நிறைந்த இதயம் ஒளியைப் பார்க்கிறது. 2. வாழ்க்கை எளிதாவதில்லை. எதிர்கொள்ளும் திறனே வலுப்பெறுகிறது.

Bokeh Photography - இதுவும் கீழ் வருகிற மூன்று மற்றும் படம் 10...

3. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதுதான் சகலமும்.
சொல்கிறாள் Dolly

4. குறைகளில்லாத மனிதர்கள் இல்லை. சந்திக்க விரும்பும் ஆதர்ச மனிதராக நாம் இருக்கிறோமா முதலில்?

Sunday, November 9, 2014

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்..

#1 அப்பாவின் அரவணைப்பில்..

#2 அம்மாவின் நிழலில்..

#3 அக்காவின் அன்பில்..

#4 ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்..’ - கற்றுத் தரும் அன்னை

Friday, November 7, 2014

‘நான்கு பெண்கள்’ தளத்தில் நேர்காணல் - இந்த மாத நூலாக ‘இலைகள் பழுக்காத உலகம்’


நான்கு பெண்கள் தளத்தில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை இம்மாத நூலாக அறிமுகம் செய்திருப்பதோடு நேர்காணலுக்காகப் பல கேள்விகளையும் முன் வைத்திருந்தார் மு.வி. நந்தினி:

* சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி... குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?

Tuesday, November 4, 2014

சிறுகதை: சின்னஞ்சிறு கிளியே.. - ‘சொல்வனம்’ பெண்கள் சிறப்பிதழில்..


ன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கணுமோ, தெரியலையே’ சலிப்பாக இருந்தது பூமாவுக்கு.

மணி அடித்து எல்லோரும் உள்ளே போய் விட்டிருந்தார்கள். “இந்த பெஞ்சுலயே இரு. சன்னல் பக்கம் அப்பப்ப வந்து பாத்துட்டிருப்பேன். மேனேஜர் வந்ததுமா சூப்பர்வைஸரை சொல்லச் சொல்லிருக்கேன். நானே கூட்டிட்டுப் போறேன். தெரிஞ்சுதா” தேவகியக்கா கண்டிப்பான குரலில் சொல்லி விட்டுப் போய் ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது. ஒரே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் எவ்வளவு நேரம்தான் இருக்கிறதாம்?

வலது உள்ளங்கையை இடது கையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். ‘காயம் ஆறிட்டுதான். ஆனாலும் இப்பத்தானே கட்டுப் பிரிச்சிருக்கு. கூட ரெண்டு நாளு ரெஸ்ட் எடுக்க விட்டிருக்கலாம். அம்மாக்குதான் எம்மேலேத் துளிக்கூடப் பாசம் கெடயாதே. தம்பிங்கள மாதிரி நல்லாப் படிச்சிருந்தா என்னயும் தாங்கியிருப்பா. எவ்ளோ முட்டுனாலும் மண்டையில ஏறலன்னு அடம் புடிச்சுப் படிப்ப விட்டது தப்போ?’ அடிக்கடி தோன்றுகிறது இப்போதெல்லாம்.

Tuesday, October 28, 2014

இந்த மனுஷங்களே இப்படித்தான்.. - பெங்களூர் பெரிய ஆலமரம்

3 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கும் 400 வயதான இந்த ஆலமரம் கர்நாடாகத்தில் ரமோஹள்ளி எனுமிடத்தில் உள்ளது.

#1

250 மீட்டர் சுற்றளவிலான இதன் அடிமரம் வியாதி வந்து அரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.  ஆனால் ஆயிரத்துக்கும் மேலான விழுதுகள் தாங்கி நிற்கின்றன மரத்தை. போகவும்கிளைகளின் முனைகள் நிலத்தில் வீழ்ந்து விடாதபடி தாங்குக் கட்டைகளை வைத்திருப்பதைக் கீழ்வரும் படத்தில் காணலாம்.

#2

ஒருநாள் சுற்றுலாவுக்கு பெங்களூர் மக்கள் நாடும் இந்த ஆலமரத்தைத் தேடி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

#3

இந்த இடத்தை அடைய பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 28 கி.மீ பயணப்பட்டு

Friday, October 24, 2014

சிறந்த ஆசிரியர்கள்

 1. தீவிரமான நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

2. இணைந்து செயலாற்றினால் அதிகம் சாதிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை நாம் பார்க்கிற விதத்தை மாற்றிக் கொண்டால், பார்க்கின்ற விஷயங்களும் மாறத் தொடங்கும்.


4. ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் கூறித் திரியாமல்,

Tuesday, October 21, 2014

ஒளிப்படங்கள் இரண்டு.. 2014 கல்கி தீபாவளி மலரில்..

300 பக்கங்களுடன், கோகுலம் மற்றும் மங்கையர் மலர் பக்கங்களையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கி தீபாவளி மலரில்.. எனது ஒளிப் படங்கள் இரண்டு..

நன்றி கல்கி!

பக்கம் #194_ல்..

Monday, October 20, 2014

செடிகொடியில் காய்கனிகள்.. - PiT Oct 2014

#1
ஒரு கல்லில் எத்தன மாங்கா..?
இந்த மாத PiT போட்டிக்குப் படங்கள் அனுப்ப இன்றே கடைசித் தினம் ஆகையால், நினைவூட்டிடும் விதமாக இங்கும் ஒரு பதிவு. 

நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக்  காட்சியாக்க வேண்டும்.

தலைப்பு: கொய்யாத காய்கனிகள்” என அறிவிப்புப் பதிவில் சொல்லியிருந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடித்துப் பெய்கிற மழைக்கு நடுவில் எப்படித் தோப்புத் துரவுக்குள் போகட்டும் என்கிறீர்களா? மழை விடும் நேரத்தில் முயன்று பாருங்களேன். காய்கனிகளும் மழையில் நனைந்து பளிச்சென போஸ் கொடுக்கும்:)!

ஒவ்வொரு மாதமும் தலைப்புக்காகப் புதுப்படங்கள் பதிகிற வழக்கத்தில் இந்தப் பதிவிலும் முதல் ஐந்து புதியவை. மற்றவை முன்னர் பல பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

#2
இவை என்ன காய் :)?
#3 குட்டைச் செடியில்..


#4 ஒற்றைக் கத்திரி..

Friday, October 17, 2014

இம்மாத தமிழ் ஃபெமினாவில்.. எஸ். செந்தில் குமார் பார்வையில்.. “அடைமழை”


சென்ற மாத ஃபெமினாவில் வெளியான அறிமுகத்தைத் தொடர்ந்து இம்மாதம், அக்டோபர் 2014 தமிழ் ஃபெமினாவில்.. அடை மழை நூலுக்கான மதிப்புரையை வழங்கியிருக்கிறார், இதழின் ஆசிரியரான எஸ். செந்தில்குமார்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin