ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

வடம் - இன்றைய தினமணி கதிரில்..

'பதப'வெனப் படபடத்து அடங்கி நின்றது என்ஜின். வாயிற்கதவின் படிக்கட்டில் அமர்ந்திருந்த விமலா சட்டெனத் துள்ளி எழுந்து அவனைப் பார்த்து வாய் கொள்ளாச் சிரிப்புடன் "மாமா" என்றாள் மகிழ்ச்சியாய்.

அதே மகிழ்ச்சியைத் தன் அகன்ற புன்சிரிப்பால் விவேக் அந்த மழலைக்குப் புரிய வைத்த படி "மாமாவுக்கு வழி விடும்மா" என்றதும், அவள் ஒதுங்கிக் கொள்ள இரும்புக் கதவைத் தள்ளித் திறந்தான். இரட்டைப் படிகளின் நடுவேயிருந்த சறுக்கத்திலே பைக்கின் சக்கரத்தை வைத்து எம்பி உள்ளே ஏற்றினான்.

மறுபடி கதவை மூடி உட்புறமாகத் தாளிடவும் ஓடி வந்து வழக்கம் போல கதவின் கீழ் கம்பியில் தொற்றி நின்று கொண்டாள் விமலா.

மாடியேறி விவேக் தன் அறைக்குள் நுழையும் முன் மேலிருந்து கை அசைக்க வேண்டும் விமலாவுக்கு. இந்தப் புது சிநேகிதம் மொட்டு விட்டு மூன்று வாரங்களாகின்றன.

மூன்று வயதான விமலா வீட்டின் எதிர் நிலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியரின் ஒரே மகள். அங்கேயே தற்காலிகக் குடிசை இட்டு வசித்தாலும், தங்களது வேலை நேரத்தில் குழந்தை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்கட்டும் எனப் பெரும்பாலும் அவளை விவேக் குடியிருந்த வீட்டின் வாயிற்கதவையொட்டிய படிக்கட்டில் அமர்த்தி விட்டிடுவாள் அவளது அன்னை முனியம்மா.

'குளுகுளு'வென்ற வேப்பமரம் ஒரு காரணம் என்றால் கீழ் தளத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களான வயதான தம்பதியரின் அனுசரணையும் ஒரு காரணம். எப்போதும் வராந்தாவில் அமர்ந்து எதையாவது படித்தபடி இருக்கும் பெரியவர் மணியும், அவரது மனைவி மேகலாவும் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தபடி இருப்பார்கள். சில சமயங்களில் சாப்பாடும் கொடுப்பதுண்டு.

விவேக் நண்பன் கார்த்திக்குடன் மேல் தளத்திலிருந்த அறையில் வாடகைக்கு இருந்தான்.

மேல்படிக்கு வந்து சாவியால் கதவைத் திறந்ததும் அனிச்சையாக விமலாவுக்குக் கை அசைக்கத் திரும்பிய விவேக் ஒரு கணம் திகைத்து நின்று விட்டான். குழந்தை வாயிற்படியில் விநோதமாக மல்லாந்து விழுந்து கிடந்தாள். பதட்டத்துடன் நான்கு நான்கு படியாகத் தாவித் தாவி இறங்கி ஓடி வந்து கதவைத் திறந்து குழந்தையைத் தூக்கினால் பேச்சு மூச்சில்லை.

ணி சார் மணி சார்” என குரலெழுப்பவும் பெரியவரும் மேகலாவும் ஓடி வந்தனர்.

“என்னப்பா ஆச்சு”

“தெரியலையே! நான் வரும் போது நல்லா சிரிச்சுட்டு நின்ன குழந்த மேலே போய் திரும்புவதற்குள் இப்படிச் சுருண்டு கிடக்குதே”

என்ன ஏது என ஆராய முற்படும் முன்னரே தெருவின் எதிர்த் திசையிலிருந்து ஓடி வந்தான் சின்னையா. விமலாவின் தகப்பன்.

“தம்பி புள்ளய இப்படிக் கொடுங்க”

பின்னாடியே ஓடி வந்த முனியம்மா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்க "தே சும்மா இரு புள்ளே" என சின்னையா போட்ட அதட்டலில் அரண்டு சேலைத் தலைப்பைப் பந்தாய்ச் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டாள். விமலாவை விவேக்கிடமிருந்து வாங்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டு தன் குடிசை இருந்த திசையில் நடையைக் கட்டியவனை பெரியவரின் குரல் தடுத்தது.

“என்னப்பா டாக்டரிடம் காட்ட வேண்டாமா?”

“என்ன காட்டியும் இனிப் பிரயோசனமில்லை சாமி. இப்படித்தான் அப்பப்ப மயங்கி விழுந்திடுது. சித்த நேரத்தில் சரியாயிடும்...விதி நல்லா இருந்தா...” என்றான் கனத்த குரலில்.

“சொல்றத புரியும் படியா சொல்லக் கூடாதா...?” ஆதங்கத்துடன் கேட்டான் விவேக்.

குழந்தையை முனியம்மாவிடன் கொடுத்து குடிசையில் படுக்க வைக்குமாறு ஜாடை காட்டிவிட்டு அவர்கள் அருகில் வந்தான் சின்னையா.

“தெரிஞ்சு என்னா ஆகப் போவுது தம்பி? இருந்தாலும் இத்தினி அக்கறயா கேக்கிறதால சொல்லுதேன். இது இப்படி ரெண்டு மூணு தபா மயக்கம் போட்டு விழுந்ததால போன வாரம் தர்மாஸ்பத்திரிக்கு இட்டுக்கிட்டுப் போய் காம்பிச்சோம். மூளயில கட்டியாம் எதோ, சொன்னாக புரியல. 'ஆப்புரேசன் பண்ணணும். எங்க ஆசுபத்திரில அதுக்குண்டான வசதிங்க இல்ல. வேறயிடம் பாரு'ன்னு எழுதிக் குடுத்தாக. லச்சக் கணக்கில செலவாகுமின்னும் சொன்னாக. ரெண்டு வேள கஞ்சிய அன்னின்னிக்கு உழைச்சாதான் கண்ணால பாக்க முடியுது எங்களால. இதுக்கு மேல சாமி விட்ட வழின்னு இருக்கோமுங்க.”

சொல்லி முடிக்கும் முன் குரல் உடைந்து போனது சின்னையாவுக்கு. எந்தப் பதிலையும் எதிர் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடியே சின்னையா சென்று விட உறைந்து போய் நின்றிருந்தார்கள் மூவரும்.

கார்த்திக் அறைக்குத் திரும்பும் போது இரவு மணி எட்டரையிருக்கும். அறை ஜன்னல் இருண்டிருக்க ‘பைக் நிக்குது. அதுக்குள்ள சாப்பிடக் கிளம்பிட்டானா என்ன’ எண்ணியபடி தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து சுவிட்சைத் தட்டியவன் படுக்கையில் 'கொட்டக் கொட்ட' விழித்தபடி விட்டத்தைப் பார்த்துப் விழுந்து கிடந்த விவேக்கைக் கண்டு வியந்தான்.

ஏதோ நெருடினாலும் "என்னாச்சு விவேக். கரெண்ட் சேவிங்கா..?" என்றான் சூழ்நிலையைக் கலகலப்பாக்க முயன்றபடி.

இவன் எப்போது வருவான் என்று காத்திருந்தவன் போல விமலாவைப் பற்றி 'கடகட'வென விவரித்து முடித்தான் விவேக்.

“வருத்தமான விஷயம்தான். ஆனால் நம்மால என்ன செய்ய முடியும்?”

“என்ன கார்த்தி இப்படி சொல்லிட்டே, எதுவும் முடியாதா” ஆதங்கமாகக் கேட்டான் விவேக்.

“மாசக் கடைசியான நம்ம பாடே தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு இருக்கு. படிப்பு லோனு, பைக்கு லோனு இதெல்லாம் போக ஊருக்கு வேற அனுப்பணும். என்ன முடியும் சொல்லு!”

“முடியும்னு தோணுது கார்த்தி. அந்தக் குழந்தையை நாம முயற்சி செஞ்சா காப்பாத்திட முடியும்னே தோணுது.”

“எனக்கும் மட்டுமென்ன ஆசையில்லயா அந்தக் குழந்தை பிழைச்சு வரணும்னு. ஆனா லட்சக் கணக்கில பணத்துக்கு எங்க போறது?” என்றபடியே ஷூவைக் கழட்டி ஓரமாக வைத்தான்.

“லட்சக் கணக்கில பணம் நம்மகிட்ட இல்லேன்னா என்ன? உதவக் கூடிய நல்ல மனசு உள்ளவங்களை ஒண்ணு சேர்க்கிறதும், அவங்க கவனத்துக்கு இதைக் கொண்டு போவதும் கூடவா முடியாது? யாரையும் வற்புறுத்தப் போறதில்லையே. இந்தக் குழந்தையைப் பத்திய விவரங்களை எழுதி உதவி கேட்டு நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஈமெயில் அனுப்பிதான் பார்ப்பமே.”

“சரிப்படுமா? நம்மைக் கண்டாலே ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்’னு ஓட மாட்டாங்க?”

“அதுக்குதான் சொல்றேன் நம்மைப் புரிஞ்ச தெரிஞ்சவங்களுக்கு மட்டும் அனுப்புவோம். ஒரு பொதுச் சேவைன்னு வரும் போது எல்லோருமே இப்படித்தான் நினைச்சு ஒதுங்கிடறோம். அப்புறம் ஊர்ல உலகத்துல நல்லது செய்ய யாரு இருப்பா?”

“அப்படிங்கறே? ரைட்டுப்பா. நாளைக்கேதொடங்கிடுவோம். முதல்ல மெஸ் மூடும் முன்னே சாப்பிட்டுட்டு வரலாம் வா. பசி ஆளக் கொல்லுது"

நண்பன் ஒத்துக் கொண்டு உடனிருக்கச் சம்மதித்ததிலே பெரும் தெம்பு கிடைத்தாற் போலிருக்க கிளம்பினான் விவேக்.

வழக்கமாக ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி விடும் கீழ்த்தளத்தில் இன்னும் விளக்கெரிந்து கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. சாப்பிட்டு அரை மணியில் திரும்பி வந்து இரும்புக் கதவைத் திறக்கையில் 'எண்ணெய் போடக் கூடாதா எனக்கு' என அது எழுப்பிய 'க்ரீச்' சத்தத்தில் வெளியில் வந்து வராந்தா விளக்கை எரிய விட்டார் மணி.

“இன்னுமா தூங்கப் போகல சார்?” ஒரு மரியாதைக்கு கேட்டு வைத்தான் கார்த்திக்.

“இன்னிக்கு தூக்கம் வரும்னு தோணலப்பா”

பதில் கார்த்திக்குக்கு என்றாலும் பார்வை என்னவோ விவேக் மேல் பதிந்தது அர்த்தத்துடன்.

“விமலா நினைப்புத்தானே”

“சரியாச் சொன்னே விவேக்” என்றபடி உள்ளிருந்து வந்த மேகலா அழிக் கதவைத் திறந்து விட எல்லோரும் அங்கிருந்த பிரம்புக்கூடை நாற்காலிகளில் அமர்ந்தனர். விவேக்கின் விவேகமான யோசனையை கார்த்திக் விவரிக்க விவரிக்க முகம் மலர்ந்து பூரித்துப் போனார் மணி.

“கொஞ்சம் இருப்பா” என உள்ளே சென்று திரும்பியவரின் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.

“என் சக்திக்கு முடிஞ்சது”

ஓய்வூதியத்திலும் தாங்கள் கொடுக்கும் அறை வாடகையிலும் நாட்களை நகர்த்தும் அவர் அன்புடன் தொடங்கி வைத்த அந்த உதவித் தொகை லட்சியத்தையே எட்டி விட்ட சந்தோஷத்தை அப்போதே கொடுத்தது விவேக்கிற்கு.

“ஊர்க் கூடி இழுக்கும் தேரானாலும் அதுக்கும் தேவையாச்சேப்பா ஒரு சாரதி. நீ செலுத்து. காட்டுற திசையில வடம் இழுக்கறோம். தேரு நிலைக்கு வரும் வரை கூட இருப்பேன்” என்ற போது நெகிழ்ந்தே போனான் விவேக்.

தன் பிறகு நடந்தவை எல்லாமே கனவோ என வியக்கும் படியாக இருந்தது. பெரியவர் மணியின் அக்காள் மகள், தான் நர்ஸாகப் பணி புரியும் பிரபல மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க, மருத்துவர் தனக்கான அறுவை சிகிச்சை கட்டணத்தைத் தள்ளுபடி செய்து பிற செலவுகளுக்கான இரண்டு லட்சத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார் கனிவுடன்.

கல்லூரி நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் என தொடர்பு கொண்டு தங்கள் வங்கிக் கணக்கு எண்ணையும் தர டிராஃப்ட், செக், வங்கிக் கணக்குக்கு என வந்து சேர்ந்தவை ஒரே வாரத்தில் ஐம்பது ஆயிரத்தைத் தொட்டது. மகிழ்ச்சியில் திளைத்தனர் இருவரும்.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடிட, பெரிய தேக்கம் வரவில். கூட பத்தாயிரமே சேர்ந்திருந்தது. துண்டு விழுந்த தொகை விவேக்கிற்குக் கவலையை உண்டு பண்ணுவதாய் இருந்தது. ஏனெனில் மருத்துவர் ஒரு மாதத்துக்குள் குழந்தையின் சிகிச்சையை ஆரம்பித்து விட வேண்டுமெனக் கெடு வைத்திருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக அன்று சற்று சீக்கிரமாகவே அறைக்குத் திரும்பிய கார்த்திக் “ நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்ல இன்னும் சில பேரோட ஐடீஸ் கிடைச்சிருக்குடா" என்றான் உற்சாகமாய்.

'சட்'டென ஏதோ பொறி தட்ட “இரு வரேன்” என அவசரமாய் விமலாவைத் தேடிச் சென்றான் விவேக். வேப்பமரத்து நிழலிலே ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள். புதிதாய் அவளுக்குக் கிடைத்திருந்த தோழன்.

பக்கத்தில் நின்றிருந்த முனியம்மா இவனைக் கண்டதும் கை எடுத்துக் கும்பிட்டது சங்கோஜமாக இருந்தது. காட்டிக் கொள்ளாமல் வந்த வேலையில் மும்முரமாகி மொபைல் காமிராவால் விமலாவைப் படம் எடுக்கத் தயாரானான். அவளோ ஒத்துழைக்காமல் குட்டியின் பின்னே ஓடிக் கொண்டேயிருந்தாள். முனியம்மா பெரிதாக ரெண்டு அதட்டுப் போட்டாள் மகளை.

“அட குழந்தைய கோவிச்சுக்காதீங்க.” என்றவன் விமலாவை சமாதானப் படுத்தி, ஆட்டுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருப்பது போலவே இரண்டு மூன்று எடுத்து முடித்தான்.

முனியம்மாவிடம் காட்டிய போது முதலில் பூரித்துப் போனாள். பிறகு சற்று வாட்டமாக “தம்பி படம் புடிச்சா ஆயுசு கொறஞ்சுடும்பாங்களே. ஏற்கனவே இதுக்கு..” என இழுத்தாள்.

“நீங்க வேணா பாருங்கம்மா. இந்தப் படங்கள்தான் உங்க பொண்ணோட ஆயுசைப் கெட்டியாக்கப் போகுது” என்றான் அழுத்தமாக.

யிற்று, விமலாவின் படத்துடன் அடுத்தச் சுற்று ஈ மெயில்கள் பறந்து. பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. மருத்துவர் சொன்ன கெடுவுக்கோ இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்க மெல்ல மெல்ல லட்சத்தை அப்போதுதான் எட்டிக் கொண்டிருந்தது சேகரிப்பு. பாதிக் கிணறே தாண்டிய நிலை. விவேக்கை விட அதிகம் கலங்கி விட்டிருந்தது கார்த்திக்தான்.

“ஹும்... விதி விட்ட வழின்னு இருந்தவங்களுக்கு வீணா ஆசை காட்டிட்டமோன்னு குற்ற உணர்ச்சியால்ல இருக்கு”

“எனக்கு அப்படித் தோணல கார்த்தி. இருக்கிற பணத்தை வச்சு சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம்.”

“அது சரி. முழு பணத்தையும் கட்டினாதான் ஆச்சுன்னா என்ன செய்வ?”

“ம்ம். செய்யலாம் ஏதாச்சும். கடைசி முயற்சியா தானே நாளைக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறதாவும், ஏதாவது தொண்டு நிறுவனம் பார்த்துட்டு உதவ முன்வர சான்ஸ் இருக்குன்னும் மணி சார் சொல்லியிருக்கிறார். விடியும்னு தூங்கப் போகிற மாதிரி, பிறக்கும் வழின்னு நம்புவோம். ஆரம்பத்தில் மதர் தெரஸா தனி மனுஷியா.. எத்தனை தைரியமாய்.. பிடிவாதமா.. தன்னால முடியும்னு சேவையில் இறங்கினாரு, நல்ல உள்ளங்கள ஒண்ணு சேர்த்தாருன்னு இப்ப நினைக்க நினைக்கப் பிரமிப்பா இருக்கு. அதுவே தன்னம்பிக்கையும் தருது.”

சொன்னது காதிலேயே விழாத மாதிரி எந்த உணர்ச்சியும் காட்டாமல் சுரத்தின்றி அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில், தன் வார்த்தைகளில் அவனுக்குக் கிஞ்சித்தும் பிறக்கவில்லை நம்பிக்கை என்பது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது விவேக்கிற்கு.

ஒருவகையில் அவனைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இதுவே வேறொரு ஞாயிறாக இருந்தால் ரிலாக்ஸ் பண்ணுகிறேன் பேர்வழியெனப் பாட்டை அலற விட்டு அதகளம் செய்திருப்பான்.

“சரி வா. ப்ரெளசிங் சென்டர் வரை ஒரு நடை போய் மெயில் செக் பண்ணிட்டு அப்படியே டீ சாப்பிட்டு வரலாம்”

“நான் வரலை” குப்புற அடித்துப் படுத்துக் கொண்டான் கார்த்திக். அவனை அவன் போக்கில் விட முடிவு செய்தவனாய் தான் மட்டும் கிளம்பினான் விவேக்.

'புது மடல் இரண்டு' எனக் காட்டிய இன்பாக்ஸ் மேலே மவுஸால் 'க்ளிக்'கிடவும் விரிந்தது ஷ்யாமின் மடல். கல்லூரி நண்பன் ராமின் அண்ணன்.

'அன்பின் விவேக்,

நலமா? உன் மடலை வாசித்துக் கொண்டிருக்கையில் விமலாவின் படத்தைப் பார்க்க நேர்ந்த என் அப்பா விவரம் சொன்னதும் “எப்படியாவது இந்தக் குழந்தை நல்லாகி வரணுமடா “ என்றபடி என் மகளை அணைத்துக் கொண்டார். விமலாவைத் தன் சொந்தப் பேத்தியாகவே நினைத்து அவர் சொல்லியிருந்தது மறுநாள் 'ஃபார் விமலா' என்ற குறிப்புடன் என் அக்கவுண்டுக்கு அவர் மாற்றியிருந்த ஒரு லட்ச ரூபாய் உணர்த்தியது.

கடந்த மாதம் ஓய்வு பெறுகையில் அவருக்கு வந்த பணத்திலிருந்து நாளையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை அளித்திருந்தது என்மேல் அவர் வைத்திருக்கும் பரிபூரண நம்பிக்கையையும் உணர்த்தியது. நல்ல மகனாக அதைக் காப்பாற்றுவேன். அவரது மகனாய் இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். அந்தப் பணத்தை உங்கள் வங்கி எண்ணுக்கு மாற்றி விட்டேன். சரிபார்ததிடுங்கள்.

உங்கள் அலைபேசிக்கு முயற்சித்த போது தொடர்பு கிடைக்காததால் மடலிட்டுள்ளேன். விமலா பரிபூரண குணமடைய எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
ராம்'

மீண்டும் வாசித்தான்.

நம்பிக்கை என்பது ஒரு சுழற்சியாய் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் நகர்த்திச் சென்று கொண்டே இருக்கும் அற்புதத்தைத் தன் அனுபவத்திலேயே உணர்ந்ததில் நெகிழ்ந்து போனவனாய் கார்த்திக்கிடம் காட்ட அக்கடிதத்தைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.

வீட்டை நெருங்கிய போது, நடைவாசலில் வழக்கம் போல விமலா. மணித் தாத்தா வீட்டில் தனக்குத் தரப்பட்ட உணவின் ஒரு பாதியை ஆட்டுக்குட்டிக்கு உருட்டி வைத்துச் சாப்பிடச் செய்து கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் எப்போதும் போல மலர்ச்சியாய் புன்னகைத்தாள்.

தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. இலேசான மனதுடன் அவள் அருகில் அமர்ந்து ஆட்டுக் குட்டியைத் தடவிக் கொடுக்கலானான் தானும்.
*** *** ***

நன்றி தினமணி கதிர்!

கதைக்கான காட்சியுடன் தலைப்பை வலிமையான வடமாகவே வரைந்திருக்கும் ஓவியருக்கும் நன்றி! தினமணி இணைய தளத்திலும் வாசிக்கலாம் இங்கே..

வியாழன், 24 பிப்ரவரி, 2011

குழந்தை முகத்தில் குளிர் நிலவு! - இந்த வார கல்கியில்..

இக்கவிதைக்கான புகைப்படமே எதிர்ப்பக்கம் அமைந்த நான்கு கவிதைகளுக்கும் பின்னணியாக..

கல்கி ஆன்லைனில் இருந்து அப்படமும் உங்கள் பார்வைக்கு..

புகைப்படத் துறையில் சிறப்பாகப் பரிமளித்து வரும் எழுத்தாளரும் கவிஞருமான விழியன் எடுத்த படம். நிலவை நோக்கும் நிலவு அவரது பெண் குழலி.

என் கவிதைக்கு முக்கியத்துவமும் முழுப்பக்கமும் தரப்பட்டிருப்பது பார்த்து அளவற்ற மகிழ்ச்சி:)!
நன்றி கல்கி!

இம்மாதத்தில் கல்கியில் வெளியாகி இருக்கும் இரண்டாவது கவிதை இது. முதல் கவிதை இங்கே.

கல்கி வார இதழை இப்போது நீங்கள் ஆன்லைனிலும் வாசிக்கலாம். கூடவே மங்கையர் மலர் மாத இதழ், கோகுலம், ஆங்கிலத்தில் Gokulam ஆகியனவும் வலையேற்றப்பட்டு வருவது வரவேற்புக்குரிய செய்தி.

கல்கி ஆன்லைன் அன்புடன் வரவேற்கிறது

வாசித்துப் பயன்பெற முதலில் உங்கள் பெயர் மற்றும் மின்மடல் முகவரியைப் பதிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்- கிருஷ்ணகிரி மாம்பழங்கள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்க இயற்கையெழில் காட்சிகள்.

சமீபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக விரைந்த எம் வாகனத்தினுள் இருந்து, ஏற்றிய கண்ணாடிகள் வழியே, ஷட்டர் ஸ்பீட் 1/800-ல் முயற்சித்த படங்கள்.

குறிப்பிடும் அளவுக்கு இது பெரிய விஷயமா எனக் கேட்டால், இதே போல விரைந்த வாகனத்தில் இருந்து நான் எடுத்த படம், [சரியாக இரண்டு வருடம் முன்னர் பிப்ரவரி 2009 PiT ] ‘கணநேரக் கண்ணாடிகள்-ஆக்‌ஷன் படங்கள்’ தலைப்புக்காக இரண்டாவது படமாக இந்தப் பதிவில்!

பார்த்து விட்டீர்களா? இப்போது புரிந்திருக்குமே ஏன் ஆர்வமாக SLR-ல் இந்த முயற்சி என்று? ஒத்தும் கொள்வீர்கள்தானே கிடைத்த ரிசல்டை நான் பகிர்ந்திட நினைத்ததில் தவறில்லை என்று:)!

1. எழிலோவியம்


2. நீல வானமும் நீண்ட மலைகளும்..

இதே படங்களை வண்டியை ஆங்காங்கே நிறுத்தியும் எடுத்திருக்கலாம்தான். ஆனால் திட்டமிட்ட நேரத்தில் ஊர் போய் சேர இயலாதென்பதோடு, நெடுஞ்சாலைகளில் திடீர் திடீரென வேகத்தைக் குறைப்பதையும், ஆங்காங்கே நிறுத்துவதையும் தவிர்ப்பதே நல்லதெனக் கருதுவேன். விரையும் பிற ஊர்திகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடியே செல்லுவதும் தேவையான ஒன்றாக உள்ளது.


3. நெடிந்துயர்ந்த தென்னைகளும்..


4.தேசிய நெடுஞ்சாலையும்..



குன்றுகள்
சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)! ஆக ஏற்றியே இருந்த கண்ணாடியின் பிரதிபலிப்பு கீழ் வரும் முதலிரண்டு படங்களில் தெரியத்தான் செய்கிறது.

5. பச்சைப் பாவாடை அணிந்து..


6. பளபளக்கும் பாறையுடன் நிமிர்ந்து..


7. உச்சியிலே கோட்டையினைச் சுமந்து..


திப்பு சுல்தானும், கிருஷ்ணகிரி மாம்பழமும்:

இப்படங்களை ஒரு ஆர்வத்தில் ‘தமிழ்வாசல்’ பல்சுவை மின்குழுமத்தில் பகிர்ந்து கொண்ட போது கிருஷ்ணகிரியை சொந்த ஊராகக் கொண்ட வடக்கு வாசல் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன் ‘ எங்கள் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.’ என்றதோடு ‘இத்தனை அழகான இடத்தை விட்டு டெல்லியில் வந்து வாழ எந்த ஜென்மத்தில் எந்தப் பாவம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். படங்களுடன் தொடர்புடையதாக சில அரிய வரலாற்றுத் தகவல்களையும் தந்திருந்தார். அவற்றை அவரது வார்த்தைகளிலே, வண்ண எழுத்துக்களில் பதிந்துள்ளேன்.

நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கும் இடங்களில் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் அலைந்திருக்கிறார்கள். குலாம் அலி என்கிற மனிதர் சுமார் 103 ஆண்டுகள் உயிரோடு இருந்தவர். திப்புவால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கான்ஸ்டான்டிநோபிள் அனுப்பப்பட்டார். இவர்தான் கிருஷ்ணகிரியின் முதல் முன்சீப்பாக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதற்கு விலையாக அவர் பின்னாளில் திப்புவைக் காட்டிக் கொடுத்தார்.

உங்கள் இரண்டாவது புகைப்படம்
[2. நீல வானமும் நீண்ட மலைகளும்] இருக்கும் குன்றில் திப்புவின் நண்பர் பசவராஜ் என்பவர் பாண்டிச்சேரிக்கு திப்புவின் உதவி கோரிய ஓலையை சுமந்து குதிரையில் பயணித்த போது அவரை சில துரோகிகள் வழிமறித்துக் கொன்று அங்கேயே புதைத்தனர். பிரான்சுப் படைக்கு திப்பு நலமாக இருப்பதாகவும் படைகள் தேவை இல்லை என்று வேறு செய்தியை அந்தத் துரோகிகள் அனுப்பினார்கள். பிரென்சுப் படைகள் நேரத்தில் வராததால் திப்பு போரில் மரணத்தைத் தழுவினார்.

மீண்டும் குலாம் அலிக்கு வருகிறேன். அவர் கான்டோன்டிநோபிள் சென்ற போது திப்புவுக்காக அங்கிருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் சுமந்து வந்தார். அந்தப் பழத்தில் ஒரு கொட்டையை திப்பு சந்தூர் என்கிற கிராமத்தில் (அநேகமாக உங்கள் படம் 5ல் உள்ள குன்றின் பின்புறம் உள்ள கிராமம்) புதைத்து வைத்தார். அந்த மாம்பழம்தான் சந்தூரா என்ற பெயரில் பெங்களூரிலும் கிடைக்கின்றன.

சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கியதும் இந்த மாம்பழம்தான். கிருஷ்ணகிரிக்கு சேரவேண்டிய பெருமை, அப்போது கிருஷ்ணகிரி சேலம் மாவட்டத்தில் இருந்ததால் சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கி விட்டது.


ஊர்க்காரர்களுக்கே உரித்தான உண்மையான ஆதங்கம்.

எதேச்சையாக எடுத்த படங்களுக்குப் பின்னால் இத்தனை அரிய பல தகவல்கள் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை. மிக்க நன்றி திரு. பென்னேஸ்வரன்!.

வன ஆண்டு:

வரலாற்று உண்மைகளுக்குப் பிறகு நிகழ்காலத் தகவல் ஒன்று:

அந்தி நேரத்து நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு பார்வைக்குக் கிடைத்த பசுமைகள் யாவும் ‘இருக்கிற வளமாவது காக்கப்பட வேண்டுமே’ எனும் ஏக்கத்தை ஏற்படுத்தியது. 2011 சர்வ தேச வன ஆண்டாகக் கொண்டாடப்படுகிறதாம். இப்படியான கொண்டாட்டங்களை அறிவித்துதானே விழிப்புணர்வைக் கொண்டு வரவும் மரங்களைக் காப்பாற்றவும் போராட வேண்டியிருக்கிறது.

கீழ்வருவது மட்டும் டோல் கேட் பக்கம் நின்ற சில நொடிகளின் போது...

8. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

அந்தப் பனை அழகா? இல்லை.., பாயும் கதிர் அழகா..?

எது அழகு:)? நீங்களே சொல்லுங்கள்!
*** *** ***

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அன்புக்காக.. படங்கள் - பிப்ரவரி PiT போட்டி

அன்பு.

போட்டித் தலைப்பு.

ஒரு படம் போட்டிக்கு.. நான் எடுத்தது.

ஒரு படம் தலைப்புக்கு.. நான் இருப்பது.


தளிர் நடை
தத்தித் தத்தி நடந்து வரும் தங்க பாப்பா
அவள்
தானாக நடக்கும் வரை தாங்கிப் பிடிக்க
தாய்மாமனோ தகப்பனோ..
தந்திருக்கும் அன்புக் கரங்கள்!
அந்த ஆதரவில்
ஒளிர்கின்றன மின்மினியாய்க்
கண்மணியின் சின்னக் கண்கள்!


அம்மாவின் ஆசைக்காக..

அன்பைச் சொல்லும், பாசம் பேசும் இப்படம்.. உங்கள் பார்வைக்கு..

என் திண்ணை நினைவுகளில் பதிவுக்குப் பொருத்தமாக சிறுவயது படங்கள் பலவற்றை உபயோகித்திருந்தேன். அதைப் பார்த்த நாளிலிருந்து அம்மாவின் ஆசை இந்தப் படத்தை என்றேனும் நான் வலைப்பூவில் பகிர்ந்திட வேண்டுமென்று. கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பென்பது இதுதான் எனச் சொல்லிச் சொல்லி ரசிப்பார்கள்.


புகைப்படச் சட்டத்துள்
காலம் நகருகையில்
படங்களும் புதிது புதிதாக
மாறியபடி இருப்பது
பொதுவாக வழக்கம்தான்.

ஆனால் படம் எடுத்த அப்பா
விரும்பி சட்டத்துள் வைத்தது என
அவர் மறைந்த பின்னும்
மாற்றாமல் இருந்தார்கள் அம்மா.

படத்தில் இருக்கும்
மறைந்த அண்ணனின் நினைவாக
மாற்றாமல் வைத்திருக்கிறேன்..

இன்றுவரை நானும்.
***
எனது பிட் பதிவுகள் எதிலும் நான் எடுக்காத படம் எதையும் இதுவரை பதிந்ததில்லை. இந்த முறை ‘அன்புக்காக’ ‘அம்மாவுக்காக’ப் பகிர்ந்தது என்பதால் தவறில்லை என எண்ணுகின்றேன்.

இருத்தலின் அடையாளமாக 'தளிர் நடை' போட்டு என் படம் போயிருக்க,அன்பு வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் ஏனைய போட்டிப் படங்கள் இங்கே. பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

அப்டேட்ஸ்:



நன்றி PiT!!


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மின்னல் தென்றல் புதையல்..- காதல் காதல் காதல்..


மின்னல்
இரவு வானும் நட்சத்திரங்களும்
முழு நிலவும் பனிக் காற்றும்
மழை மேகமும் மின்னல் கீற்றும்
ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது..
வாழ்வை அற்புதமாக்கும்
மந்திரசக்தி காதலென்பது.
***

தென்றல்


தீண்டிய யாவரையும்
தழும்பச் செய்தது
காதலால் தென்றல்..
காற்றுவெளியை நிறைத்தக்
காதல் குறுஞ்செய்திகளில்
குளித்த களிப்பில்.
***

புதையல்
வெண்டைப் பிஞ்சு விரல்கள்
ரோஜாப்பூ இதழ்கள்
மான்போல் மருளும் விழிகள்
தேன்போல் ஒலித்தது சிணுங்கல்
பூக்குவியலாய் கையில் புதையல்
மகவை ஏந்திய அக்கணத்தில்..
பெருகியது ஈன்ற உன்மேல்
பன்மடங்காய் காதல்!
***

காதலர் தின ஸ்பெஷல்:)!

படம்: இணையத்திலிருந்து..

இன்று வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நவீன விருட்சத்தில்.. - அழகிய வீரர்கள்


மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***

முதன் முறையாக நவீன விருட்சத்தில், நன்றி நவீன விருட்சம்!

படம் நன்றி: இணையம்



இந்தக் கவிதை ஜூன் 2011-ல் வெளியான நவீனவிருட்சம் சிற்றிதழ் பிரசுரத்துக்கும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியருக்கு நன்றி!


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

முகமூடிகள் - உயிரோசை கவிதை

ன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி
தோலோடு சங்கமமாகி
சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே
எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்
அத்தனையும் ரசித்தபடி
இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி
உயிரோடு ஒன்றிப்போய்
உலகுக்கான அடையாளமாகி.

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்
விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்
கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்
தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி
ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து
மதி மழுங்கி மற்றவர் வருத்தி
மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்
எதிரே இருந்த கண்ணாடியை
எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்
தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***
டைந்து போன பொம்மையைக்
கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த
குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்
விளையாட்டுச் சாமான்களைப் போலக்
கலைந்து கிடந்தது வீடு
கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்
அமுங்கி மூச்சுத் திணறி
மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
மகானுபாவர்,

”வருத்தம் விடு!
மனிதருக்காகவே
படைக்கப்பட்டவைதாம் இவை.
சேர்ந்து கிடப்பதில்
இன்னும் சிறப்பானதாய்த்
தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
கிடைத்த வாய்ப்பாகப் பார்”
உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
கெட்டியாகப் பிடித்தபடி.
*****

படம் 1: TOI Crest-ல் பொருத்தமாகக் கிடைத்தது.

படம் 2: உயிரோசையில் கவிதையுடன் வெளியானது.

நன்றி உயிரோசை!

புதன், 2 பிப்ரவரி, 2011

கல்கி இதழில்..-தவிப்பு

முதன் முறையாக கல்கியில்
என் கவிதை

நன்றி கல்கி!


படம்:http://www.flickr.com/photos/kaaviyam/5359828191/in/set-72157625196293310/ எந்தப் புகைப்படத்தை ஃப்ளிக்கரில் பார்த்ததும் கவிதை தோன்றியதோ அதையே உரியவர் அனுமதியுடன் பதிந்துள்ளேன். நன்றி காவியம்:)!

கல்கியின் அதே பக்கத்தில் நமது நண்பர் உழவனின் கவிதையும். வாழ்த்துக்கள் உழவன்:)!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin