திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை


தன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்
தழுவியபடி ஊற்றெடுத்து ஓடும்
நதிக்குத் தெரிவதேயில்லை
எங்கே பாதை விரியும்
எங்கே குறுகிச் சுழியும்
எங்கே திருப்பம் எங்கே வளைவு
எங்கே பாறை எங்கே பள்ளம்
எங்கே குபீரென விழ நேரும்
எதுவாயிருக்கும் சென்று சேருமிடம்

எவையும் தெரியாமலே தேடாமலே
தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
அனுபவத்தில் அதுவாகக்
கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
பயணிப்பதாலேயே

எதிர்வரும் எத்தடையையும்
எதிரே பாரா
எவ்வகை வீழ்ச்சியையும்
கடக்கிறதோ அநாயசமாய்
தயக்கங்கள் ஏதுமின்றி

எச்சுழலையும் எச்சூழலையும்
எந்நிலையிலும் எம்முனையிலும்
சவாலாகவே சந்தித்தபடி?
***

படம்: இணையத்திலிருந்து..
ஜூன் 2010 வடக்கு வாசல் இதழிலும்











மற்றும் அதன் இணையதளத்திலும்..



"இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது..... தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது" எனும் குறிப்புடனான ஓவியர் சந்திரமோகனின் பதிவு ‘மகாக்கவிக்கு ஒரு சமர்ப்பணம்..இங்கே.

68 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.

    வடக்கு வாசலில் வெளியானதற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நதியினை உற்று நோக்குதல் அல்லது அதனோடு சில மைல் தூரம் பயணித்தல்,முழு கொள்ளளவு கொண்ட நதி /முற்றிலும் வற்றிய நதி பச்சை பசுமைகளை தந்து செல்லும் நதி,எல்லா இடங்களிலும் படர்ந்து வெள்ளக்காடாகிக்கி செல்லும் நதி என ஒவ்வொரு முகத்தினையும் நம்மால் உணரமுடியும் -நதியினை முழுமையாக கவனிக்க தொடங்கும்போது - வாழ்க்கையும் கூட அப்படியே!


    //எவையும் தெரியாமலே தேடாமலே
    தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
    எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
    அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளை//

    மனதில் ஊன்றிக்கொள்ளுமளவுக்கு படித்துக்கொண்டிருக்கின்றேன்! :)

    பதிலளிநீக்கு
  3. ஓடும் நதியை பார்க்க மட்டுமே எங்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் நீங்கள், அந்த நதியோடு பயணித்தது போன்று, அந்த நதியின் எண்ணங்களை உள்வாங்கி அழகாக படைத்து விட்டீர்கள் ஒரு கவிதை.

    பதிலளிநீக்கு
  4. நதியோட சேர்ந்து ஓடி இருக்கீங்களோ..:)

    பதிலளிநீக்கு
  5. அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி///

    நதியிடம் கற்க வேண்டிய பாடம் .

    பதிலளிநீக்கு
  6. இப்ப தான் எழுதின ஈரம் காயலை. எப்படித்தான் பத்து வரியிலே 3 பக்கத்தை முழுமையா அடக்குறீங்களோன்னு. நல்லா இருக்கு. நதியை, ஓடையை, அருவியை, கடலை காணக்காண அலுப்பதும் இல்லை அது போல புதுப்புது எண்ணங்கள் உதிப்பதை மறுப்பதும் முடியா. நல்லா இருக்கு கவிதை!!!

    பதிலளிநீக்கு
  7. வாங்க வணக்கம்....
    கவிதை மிக அழகு
    வாழ்த்துகள்...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    பதிலளிநீக்கு
  8. அப்படியே மனித வாழ்க்கைக்கு சரியான பாடமும் நதியின் மூலம் சொல்லியிருக்கீங்க மேடம்

    ஊருக்கு போய்ட்டு வந்துருக்கீங்க தாமிரபரணி படம் போட்ருக்கலாம்...!

    ஹையைய்யோ மகாகவி தாகூர் பேர் கேள்விப்பட்டதும்தான் போன வாரம் யோசிச்சு வச்சுருந்த அடுத்தவார ஸ்பெசல் இடுகை ரெடி பண்ணனும்ன்னு ஞாபகம் வந்தது மீ ஜூட் ...!

    பதிலளிநீக்கு
  9. அழகான கவிதை அக்கா.. பயணத்தின்போது என் கூடவே வந்த நதி நினைவுக்கு வருது :))

    அப்படியே வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  10. "நீ நதி போல ஓடிக் கொண்டிரு.." வரிகள் நினைவுக்கு வந்தன. நல்ல கவிதை. நடுவில் நீண்ட இடைவெளி விட்டு விட்டீர்கள்.
    வடக்கு வாசல்...
    எனக்கு ஒரு புதிய தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. மற்ற கவிதைகளும் அங்கு வாசித்தேன். நல்ல கவிதைகள். மற்ற பக்கங்களையும் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. நதி....
    அது ஒரு வாழ்க்கையின் தத்துவம் என்பது உங்கள் கவிதை மூலம் விளங்கியது. வாழ்த்துகள்... வடக்குவாசல் இதழில் கவிதை வந்ததற்கும்- அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும்.

    பதிலளிநீக்கு
  12. நதியின் ஓட்டம், வாழ்க்கையின் ஓட்டம் இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாகவே எப்போதும் எனக்குப்படும். இப்போதும் அப்படித்தான். வடக்கு வாசலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ராமலக்ஷ்மி,நல்ல கவிதை.

    வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    நதி அதன் போக்கில் போவது போல் வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு அனுபவத்தை பெற வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதை சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் அக்கா, ரொம்ப நாளா எங்கே போனீங்க ஆளே காணோம்

    பதிலளிநீக்கு
  16. //அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
    பயணிப்பதாலேயே//

    உண்மைதானுங்க... எவ்வளவோ சொல்கிறது கவிதை...

    பதிலளிநீக்கு
  17. வடக்கு வாசலில் வரும் கவிதைகள் தரமானவை.அதிலும் நதிபற்றிய உங்கள் கவிதை நதிபோலவே நெஞ்சக்கடலில் சங்கமம் ஆகிற தகுதியையும் பெறுகிறது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. எவையும் தெரியாமலே தேடாமலே
    தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
    எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
    அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
    பயணிப்பதாலேயே

    வாழ்க்கையும் இப்படித்தான்...

    புதியதளத்தின் அறிமுகத்திற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  19. நல்ல கவிதை.
    வடக்கு வாசல் அறிமுகத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  20. மொத்தத்தில் நதி போல் பயணித்தால் நிம்மதி.
    இல்லையா ராமலஷ்மி.
    அருமையான தெளிந்த ஆழ்ந்த அகன்ற நல்ல நதியோட்டமான கவிதை

    பதிலளிநீக்கு
  21. வாவ்./...வாவ்....

    அருமை!

    நதி எனும் குறியீடு மனதில் மிகவும் பதிந்துகிடக்கிறது. வாழ்வு நதியில் கோணங்கள் கடக்கிறவனே சமுத்திரம் அடைகிறான். நதிக்குத் தெரியும், தான் எங்கே செல்கிறோமென்று.

    சிறப்பான கவிதை

    பதிலளிநீக்கு
  22. நதி, விதி வ‌ழி செல்லும் வாழ்வைச் சொல்லுதோ?

    பதிலளிநீக்கு
  23. நல்லா இருக்கு கவிதை

    பதிலளிநீக்கு
  24. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. நதியின் பயணத்தில் அழகான பாடம் மிக எளிதாய்

    பதிலளிநீக்கு
  26. நல்ல கவிதை..
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !

    பதிலளிநீக்கு
  27. ம்... கவிதை ஸ்பெஷலிஸ்டா ஆகிட்டு இருக்கீங்க......

    பதிலளிநீக்கு
  28. நல்ல கவிதை.
    தொடர்ந்து எழுதுங்கள் மேடம்!

    பதிலளிநீக்கு
  29. சே.குமார் said...
    //நல்ல கவிதை.

    வடக்கு வாசலில் வெளியானதற்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  30. ஆயில்யன் said...
    //நதியினை உற்று நோக்குதல் அல்லது அதனோடு சில மைல் தூரம் பயணித்தல்,முழு கொள்ளளவு கொண்ட நதி /முற்றிலும் வற்றிய நதி பச்சை பசுமைகளை தந்து செல்லும் நதி,எல்லா இடங்களிலும் படர்ந்து வெள்ளக்காடாகிக்கி செல்லும் நதி என ஒவ்வொரு முகத்தினையும் நம்மால் உணரமுடியும் -நதியினை முழுமையாக கவனிக்க தொடங்கும்போது - வாழ்க்கையும் கூட அப்படியே!//

    இன்னொரு கவிதையாய் உங்கள் வரிகள்..

    //எவையும் தெரியாமலே தேடாமலே
    தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
    எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
    அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளை//

    மனதில் ஊன்றிக்கொள்ளுமளவுக்கு படித்துக்கொண்டிருக்கின்றேன்! :)
    ஊன்றிக் கொண்டு விட்டோமெனில் அந்தக் கடைசி வரிகள் நமக்கும் கைவந்து விடும். ஆனால் அத்தனை சுலபமாக இல்லை அது:(!

    பதிலளிநீக்கு
  31. தமிழ் உதயம் said...
    //ஓடும் நதியை பார்க்க மட்டுமே எங்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் நீங்கள், அந்த நதியோடு பயணித்தது போன்று, அந்த நதியின் எண்ணங்களை உள்வாங்கி அழகாக படைத்து விட்டீர்கள் ஒரு கவிதை.//

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  32. தமிழ் பிரியன் said...
    //நதியோட சேர்ந்து ஓடி இருக்கீங்களோ..:)//

    ஓட விட்டேன் எண்ணத்தை:)!

    பதிலளிநீக்கு
  33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ***/அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி///

    நதியிடம் கற்க வேண்டிய பாடம் ./***

    ஆம் முத்துலெட்சுமி. பாடம் புரிந்தாலும் நடைமுறைப்படுத்ததான் முடியவில்லை. தெரியவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அபி அப்பா said...
    //இப்ப தான் எழுதின ஈரம் காயலை. எப்படித்தான் பத்து வரியிலே 3 பக்கத்தை முழுமையா அடக்குறீங்களோன்னு.நல்லா இருக்கு.//

    ஆரம்பத்தில் இருபது முப்பது வரிகளிலேயே எப்போதும் எழுதி வந்திருந்தேன்:)! இப்போதுதான் பத்து பதினைந்துக்குள்ளும் சொல்ல முயன்று வருகிறேன்.

    // நதியை, ஓடையை, அருவியை, கடலை காணக்காண அலுப்பதும் இல்லை அது போல புதுப்புது எண்ணங்கள் உதிப்பதை மறுப்பதும் முடியா. நல்லா இருக்கு கவிதை!!!//

    உண்மைதான். அலுப்பதுமில்லை. மறுக்கவும் இயலா. நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  35. ஆ.ஞானசேகரன் said...
    //வாங்க வணக்கம்....
    கவிதை மிக அழகு
    வாழ்த்துகள்...//

    வணக்கமும் நன்றிகளும், ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  36. ப்ரியமுடன் வசந்த் said...
    //அப்படியே மனித வாழ்க்கைக்கு சரியான பாடமும் நதியின் மூலம் சொல்லியிருக்கீங்க மேடம்

    ஊருக்கு போய்ட்டு வந்துருக்கீங்க தாமிரபரணி படம் போட்ருக்கலாம்...!//

    முரப்பநாடு போயிருந்தோம். தாமிரபரணி ஓடும் அழகைத் தனிப்படமாக எடுக்க விட்டுவிட்டேன். இருபக்கமும் கரை தொட்டு ஓடியது அங்கு. இறங்கிக் குளித்த வீட்டுக் குழந்தைகளின் கால்களை மீன்கள் கடித்துக் கிச்சுமுச்சு மூட்ட அவர்களுக்கு ஆனந்தம்:)!

    //ஹையைய்யோ மகாகவி தாகூர் பேர் கேள்விப்பட்டதும்தான் போன வாரம் யோசிச்சு வச்சுருந்த அடுத்தவார ஸ்பெசல் இடுகை ரெடி பண்ணனும்ன்னு ஞாபகம் வந்தது மீ ஜூட் ...!//

    நன்று. காத்திருக்கிறோம் இடுகைக்கு.

    பதிலளிநீக்கு
  37. சுசி said...
    //அழகான கவிதை அக்கா.. பயணத்தின்போது என் கூடவே வந்த நதி நினைவுக்கு வருது :))

    அப்படியே வாழ்த்துக்களும்.//

    ரசித்தபடியே பயணித்திருப்பீர்கள்:)! நன்றிகள் சுசி.

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம். said...
    //"நீ நதி போல ஓடிக் கொண்டிரு.." வரிகள் நினைவுக்கு வந்தன. நல்ல கவிதை. நடுவில் நீண்ட இடைவெளி விட்டு விட்டீர்கள்.//

    சொந்த ஊருக்குப் போயிருந்தேன் ஸ்ரீராம்.

    //வடக்கு வாசல்...
    எனக்கு ஒரு புதிய தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. மற்ற கவிதைகளும் அங்கு வாசித்தேன். நல்ல கவிதைகள். மற்ற பக்கங்களையும் பார்க்க வேண்டும்.

    வடக்கு வாசலில் என் மூன்றாவது படைப்பு இது.

    மற்ற பக்கங்களையும் அவசியம் பாருங்கள். வீடுதேடியும் வடக்கு வாசல் புத்தகமாக வரும். விவரம் ஓவியர் சந்திரமோகனின் பதிவில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  39. குடந்தை அன்புமணி said...
    //நதி....
    அது ஒரு வாழ்க்கையின் தத்துவம் என்பது உங்கள் கவிதை மூலம் விளங்கியது. வாழ்த்துகள்... வடக்குவாசல் இதழில் கவிதை வந்ததற்கும்- அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும்.

    நன்றி அன்புமணி.

    பதிலளிநீக்கு
  40. நல்ல சப்ஜெக்டிவ்வான கவிதை. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததாய் இதைக் குறிப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
  41. As you may have noticed, I am not seriously blogging these days! :)

    நதியைப் பற்றி இதுபோல் யோசித்ததில்லை!

    நதியைப்போல தைரியமாக எதையும் சந்தித்து அதை நல்ல அனுபவமாக எடுத்துக்கனும்னு சொல்றீங்க?

    ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பல சம்யங்களில் "அனுபவம்" தடங்களாக நிற்பதென்னவோ உண்மைதான்!

    வடக்கு வாசல் பற்றி இப்போதான் தெரிந்துகொள்கிறேன். வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  42. அழகான கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  43. அமைதிச்சாரல் said...
    //நதியின் ஓட்டம், வாழ்க்கையின் ஓட்டம் இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாகவே எப்போதும் எனக்குப்படும். இப்போதும் அப்படித்தான். வடக்கு வாசலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//

    நிறையவே ஒற்றுமை. நதியினைப் போல எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டு கடக்க எல்லாராலும் இயலுவதில்லை. ஆனால் அபூர்வமாக அப்படியும் சில பேர் இருக்கவே செய்கிறார்கள். நன்றிகள் சாரல்.

    பதிலளிநீக்கு
  44. கோமதி அரசு said...
    //ராமலக்ஷ்மி,நல்ல கவிதை.

    வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    நதி அதன் போக்கில் போவது போல் வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு அனுபவத்தை பெற வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதை சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.//

    அழகாகச் சொன்னீர்கள். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  45. Jeeves said...
    //நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி ஜீவ்ஸ்.

    பதிலளிநீக்கு
  46. சசிகுமார் said...
    //சூப்பர் அக்கா, ரொம்ப நாளா எங்கே போனீங்க ஆளே காணோம்//

    ஊர் பக்கம்:)!

    பதிலளிநீக்கு
  47. க.பாலாசி said...
    ***//அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
    பயணிப்பதாலேயே//

    உண்மைதானுங்க... எவ்வளவோ சொல்கிறது கவிதை...***

    நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  48. ஷைலஜா said...
    //வடக்கு வாசலில் வரும் கவிதைகள் தரமானவை.அதிலும் நதிபற்றிய உங்கள் கவிதை நதிபோலவே நெஞ்சக்கடலில் சங்கமம் ஆகிற தகுதியையும் பெறுகிறது வாழ்த்துகள்!

    மிக்க நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  49. கண்ணகி said...
    ***எவையும் தெரியாமலே தேடாமலே
    தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
    எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
    அனுபவத்தில் அதுவாகக்
    கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
    திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
    பயணிப்பதாலேயே

    வாழ்க்கையும் இப்படித்தான்...

    புதியதளத்தின் அறிமுகத்திற்கு நன்றி..***

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கண்ணகி.

    பதிலளிநீக்கு
  50. அம்பிகா said...
    //நல்ல கவிதை.
    வடக்கு வாசல் அறிமுகத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  51. goma said...
    //மொத்தத்தில் நதி போல் பயணித்தால் நிம்மதி.
    இல்லையா ராமலஷ்மி.//

    அதேதான்.

    //அருமையான தெளிந்த ஆழ்ந்த அகன்ற நல்ல நதியோட்டமான கவிதை//

    நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  52. ஆதவா said...
    //வாவ்./...வாவ்....

    அருமை!

    நதி எனும் குறியீடு மனதில் மிகவும் பதிந்துகிடக்கிறது. வாழ்வு நதியில் கோணங்கள் கடக்கிறவனே சமுத்திரம் அடைகிறான். நதிக்குத் தெரியும், தான் எங்கே செல்கிறோமென்று.

    சிறப்பான கவிதை//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவா.

    பதிலளிநீக்கு
  53. vasan said...
    //நதி, விதி வ‌ழி செல்லும் வாழ்வைச் சொல்லுதோ?//

    அப்படிதான் எனக்குத் தோன்றுகிறது. முதல் வருகைக்கு நன்றி வாசன்.

    பதிலளிநீக்கு
  54. சின்ன அம்மிணி said...
    //நல்லா இருக்கு கவிதை//

    நன்றி அம்மிணி.

    பதிலளிநீக்கு
  55. SELVARAJ said...
    //நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி செல்வராஜ்.

    பதிலளிநீக்கு
  56. ஈரோடு கதிர் said...
    //நதியின் பயணத்தில் அழகான பாடம் மிக எளிதாய்//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  57. James Vasanth said...
    //நல்ல கவிதை..
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !//

    நன்றி ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  58. yeskha said...
    //ம்... கவிதை ஸ்பெஷலிஸ்டா ஆகிட்டு இருக்கீங்க......//

    அப்படியா சொல்றீங்க:)?

    பதிலளிநீக்கு
  59. அமைதி அப்பா said...
    //நல்ல கவிதை.
    தொடர்ந்து எழுதுங்கள் மேடம்!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  60. ஆதிமூலகிருஷ்ணன் said...
    //நல்ல சப்ஜெக்டிவ்வான கவிதை. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததாய் இதைக் குறிப்பிடுவேன்.//

    மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  61. வருண் said...
    //As you may have noticed, I am not seriously blogging these days! :)//

    எல்லோருக்கும் ஒரு இடைவெளி, நிதானித்தல் தேவைப்படுகிறது. நல்லதும் கூட:)!

    //நதியைப் பற்றி இதுபோல் யோசித்ததில்லை!

    நதியைப்போல தைரியமாக எதையும் சந்தித்து அதை நல்ல அனுபவமாக எடுத்துக்கனும்னு சொல்றீங்க?//

    அதே. முயன்று பார்ப்போமே.

    //ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பல சம்யங்களில் "அனுபவம்" தடங்களாக நிற்பதென்னவோ உண்மைதான்!

    வடக்கு வாசல் பற்றி இப்போதான் தெரிந்துகொள்கிறேன். வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி//

    நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  62. கடையம் ஆனந்த் said...
    //அழகான கவிதை அக்கா.//

    நன்றி ஆனந்த். நலமா?

    பதிலளிநீக்கு
  63. தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  64. அன்பின் ராமலக்ஷ்மி

    கவிதை - படம் இரண்டுமே அருமை
    கயல்களை ரசித்துத் தழுவியபடியே ஓடும் நதி - வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் - எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது - எவ்வித முன்னேற்பாடும் இல்லாது - எச்சுழலையும் - எச்சூழலையும் - எந்நிலையிலும் - எம்முனையிலும் சந்திக்கும் நதியின் திறமை நமக்கும் கிடைக்க வேண்டும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  65. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    //நல்ல கவிதை.//

    நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  66. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி

    கவிதை - படம் இரண்டுமே அருமை
    கயல்களை ரசித்துத் தழுவியபடியே ஓடும் நதி - வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் - எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது - எவ்வித முன்னேற்பாடும் இல்லாது - எச்சுழலையும் - எச்சூழலையும் - எந்நிலையிலும் - எம்முனையிலும் சந்திக்கும் நதியின் திறமை நமக்கும் கிடைக்க வேண்டும்.//

    அப்படித்தான் மனம் விரும்புகிறது. தங்கள் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin