ஞாயிறு, 27 நவம்பர், 2011

நட்சத்திர வாரமும் நன்றி நவிலும் நேரமும்

கண்சிமிட்டும் நேரத்தில் கடந்து விட்டது வாரம். வாய்ப்பு வந்த வேளையில் சேமிப்பில் இருந்த சில பதிவுகளை மட்டுமே நம்பிச் சரி என ஏற்றுக் கொண்டாலும் ஒருவித மலைப்பு இருக்கவே செய்தது. ஆயினும் சராசரியாகத் தினம் இரண்டு என்ற விகிதத்தில் இத்துடன் 16 இடுகைகள் அளிக்க முடிந்தது என்றால் அது நண்பர்களின் ஊக்கத்தினாலும், நட்சத்திரமாகப் பொறுப்பேற்றது அறிந்து வழக்கமாக வராதவர்கள் கூட தேடி வந்து முதல் பதிவில் அளித்த வாழ்த்துகள் தந்த பலத்தினாலுமே.



இவ்வார முன்னணி இருபது வலைப்பதிவுகளில் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தில் முத்துச்சரம். எதிர்பாராதது. வாழ்த்தியிருந்தார் இன்றைய பதிவில் நண்பர் ஒருவர். ஒருநாள் முதல்வர் போலக் கிடைத்த இந்த ஒருவாரச் சிறப்புக்குக் காரணம் முகப்பில் தனிக்கவனம், இடுகைகளின் எண்ணிக்கை, நண்பர்களின் ஆதரவு ஆகியவையே. கூகுள் ஸ்டாட்ஸ் தினம் சில ஆயிரங்களில் காட்டியப் பார்வையாளர்கள் எண்ணிக்கைச் சற்று மிரளவே வைத்தது. இந்த இடத்தின் புரிதல் சரிவர இன்றிப் பெரிய திட்டமிடலும் இல்லாமல் தொடங்கியிருந்த வேளையில் மாலை நேரப் பதிவுகளாக 3 நாட்கள் பயணக்கட்டுரையைப் புகைப்படங்களுடன் பகிர்ந்த போது ‘நட்சத்திர வாரத்தில் ஒரே மாதிரியான அதுவும் புகைப்படங்களாகவே வேண்டாமே’ என அன்புடன் அறிவுறுத்திய உரிமையுடன் கேட்டுக் கொண்ட நட்புகளுக்கு என் சிறப்பு நன்றி. ஆம், அதிகம்பேர்கள் ரசித்தாலும், புகைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பகிரலாம்தான். எழுதும் எண்ணத்தில் குறிப்புகளோடு நிறுத்தியிருந்த பதிவுகளை வேகமாகச் செயல்பட்டு எழுதிப் பதிந்தேன். நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்.. ; இவர்களுக்குப் பூங்கொத்து இரண்டுமே மனதுக்கு நிறைவாக. நிறைவு நாளான இன்று வெளியாகியுள்ள தினமணி கதிர் சிறுகதையும் சமூகத்துக்கான இன்னொரு பதிவாக அமைந்ததில் திருப்தி.

வாசிப்பின் மீதான நேசம் மக்களுக்கு வற்றிவிடவில்லை எனக்காட்டுவதாக அமைந்திருந்தன வாழ்வை வளமாக்கும் புத்தகங்கள், புத்தகக் கண்காட்சிப் பதிவு ஆகியன பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை. மலரும் நினைவுகளுடன், குறும்பட விமர்சனம், கவிதை, வாசிப்பனுபவம், புகைப்படக் கலையை வளர்க்கும் PiT என இயன்றவரை (மீள்பதிவுகள் இன்றி) மாறுபட்டப் பதிவுகளைப் பகிர்ந்ததாகவே என் வரையில் எண்ணுகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
*****

கற்க-கற்பிக்க-கற்க “தமிழில் புகைப்படக்கலை”

டிஜிட்டல் புரட்சி புகைப்படக்கலையைப் பொறுத்தவரை ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் பிரமாண்டமானது. ரோல் ஃப்லிமை வாங்கி 36 (அதற்கும் முந்தைய காலத்தில் 12) படங்களே எனப் பார்த்து பார்த்து எடுத்து, ஸ்டுடியோவில் “நன்றாக வந்தவை மட்டும்” எனும் குறிப்போடு பிரிண்ட் போடக் கொடுத்து... அந்தக் காலமெல்லாம் போயே போச்சு. ஒரு படம் நல்ல வரணுமா? “தட்டு ராசா தட்டு” எனத் தொடர்ந்து கேமராவை தட்டிக்கிட்டே இருக்கலாம். எந்தக் கட்டுப்பாடுமின்றி செல்லுமிடங்களில் ( நம் கேமராவின் மெமரி கார்ட் கொள்ளளவைப் பொறுத்து) எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். வீட்டில் விசேஷமா, கேமரா மேனை கூப்பிட்டாகும் கட்டாயங்கள் இல்லை. நினைவுகளை சந்தோஷமாகப் பத்திரப்படுத்துகின்றன குடும்பங்கள். படம் பிடிப்பது, பிரதி எடுப்பது இவை தம் வருமானத்துக்கு ஆடம்பரம் என்பது போய் அனைத்து தரப்பினருக்கும் எட்டும் கனியாகியிருப்பது டிஜிட்டலின் இன்னொரு சிறப்பு. எளிய முறையில் கையாள வசதியாக பாயின்ட் அண்ட் ஷூட் கேமராக்கள். அதுவுமின்றி பத்திரிகை, மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, விளம்பரம், விஞ்ஞானம் முதல் விண்வெளி வரை இக்கலை இல்லாத துறைகளே இல்லை எனலாம். பதிவர்களைப் பொறுத்த வரையில் செல்லும் நிகழ்வுகளைப் படங்களுடன் பகிரவேண்டிய அவசியமும் ஆவலும் இருக்கிறது.

ஆனால் எடுக்கிற படங்களைச் சிறப்பாக எடுக்கிறோமா? என்ன தவறுகள் செய்கிறோம்? ஒரு கேமராவில் தரப்பட்டிருக்கும் பலவிதமான வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? அவரவரின் தேவைகள் என்ன? அதற்கு என்ன வகையான கேமரா சிறந்தது? இன்னும் நம் திறனை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்? இவற்றை எல்லாம் எளிய தமிழில் புரியும் வகையில் கற்றுத் தரும் திறனில்தான் “தமிழில் புகைப்படக்கலை” Phototography-in-Tamil (சுருக்கமாக PiT) தளம் பிற புகைப்படக்கலை தளங்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. இங்கு படங்களை மேம்படுத்தும் ஃபோட்டோஷாப் நுணுக்கங்களை மட்டும் சொல்லித் தராமல் மேல் சொன்னவற்றையும் விளக்குவதாலேயே 800 பேர்கள் தொடர, ரீடரில் தொடருபவர் 1160-யைத் தாண்டி வளர்ந்தபடி இருக்கிறது. புதுப்பதிவுகள் இல்லாத நாளிலும் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 300 பார்வையாளர்களைப் பெற்றபடி உள்ளது.


இத்தளம் குறித்து பதிவுலகில் அனைவரும் நன்கறிந்திருப்பினும் புதிதாக வருபவரும், ஏன் பதிவராகி ஓரிரு வருடங்கள் கடந்த சிலரும் கூட ‘PiT என்றால் என்ன? ஏதோ மாசாமாசம் அதுக்கு போட்டின்னுல்லாம் பதிவு போடுறீங்களே?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் போன்றவருக்காகவும் சமீபத்தில் இணைந்தவருக்காகவும் இப்பதிவென்று கொள்ளலாம். இதன் ஆரம்பக்கால வரலாறையும் சற்றேத் திரும்பிப் பார்க்கலாம்.

“கற்க-கற்பிக்க-கற்க” (learn-teach-learn) எனும் நோக்கத்துடன் ஆர்வமுள்ள திறமையான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ஜூன் 2007-ல் ஓசைச் செல்லா மற்றும் ஜீவ்ஸ் ஆகியோர் ஆரம்பித்ததே இத்தளம். பலரும் இணைந்து பணியாற்றிய களத்தில் ஓசைச்செல்லா, CVR, தீபா போன்றோர் பணிச்சுமையால் தொடர்ந்து செயலாற்ற இயலாத நிலையில் விலகிச் சென்று விட்டாலும் ஆரம்பத்திலிருந்து தளத்தைச் சிறப்பாகக் கொண்டு சென்றபடி இருப்பவர்கள் சர்வேசன், கருவாயன், நாதாஸ், ஆனந்த், ஜீவ்ஸ் ஆகியோர். சமீபத்தில் இணைந்தவர்களாக MQN, Anton மற்றும் நான். இக்கலையானது முடிவற்ற கற்றலை உடையது. உறுப்பினர்கள் தாங்கள் தொடர்ந்து பரீட்சிக்கும், கற்றுக் கொள்ளும் விஷயங்களைப் படிப்படியான விளக்கங்களுடன் பகிர்வதே PiT பாடங்களின் சிறப்பு.

பாடப் பகிர்வுகளோடு நின்றிடாமல் தமிழர்களிடையே இக்கலையின் மீதான் ஆர்வம் தொடர்ந்து வளர PiT நடத்தும் மாதாந்திரப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. பொதுவாக ஒன்றாம் தேதி போட்டி அறிவிப்பு, 20ஆம்தேதி முதல் சுற்று, மற்றும் 25 ஆம் தேதி இறுதிச் சுற்று அறிவிப்புகள் வெளியாகும். படங்களை அனுப்பக் கடைசித் தேதி 15, தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவிப்புகள் தள்ளிப் போகையில் மட்டும் முடிவுத் தேதி 20 என அறிவிப்பாகும். ஒவ்வொரு மாதத்துக்குமான பொதுவான போட்டி விதிமுறைகள் இங்கே. ஆர்வத்துடன் ஒவ்வொரு மாதமும் 50 முதல் 90 பேர் வரை போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் . அவரவர் தங்கள் திறமையை நிரூபிக்க, படங்களை மற்றவர் பார்வைக்கு வைக்க உதவும் களமாக மட்டுமின்றி பிறர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் நல்ல வாய்ப்பையும் இப்போட்டிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. போகவும் உலகளாவிய போட்டிகள் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளையும் PiT தன் தளத்தில் தமிழ் நண்பர்களுக்கு அறியத் தருகிறது.

இன்னொரு முக்கிய அம்சம், இது ஒரு இலாப நோக்கற்ற தளம். இதன் உறுப்பினர் பலரும் தங்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் தமிழ் நண்பர்கள் புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திட வேண்டுமென்கிற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே செயலாற்றி வருகிறார்கள். இப்போது இதிலிருக்கும் பாடங்களை வகைப்படுத்தி PDF கோப்புகளாக மாற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வந்துள்ளார் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் உறுப்பினர் Anton. வாசகர் வசதிக்காக அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாக வழங்க உள்ளது PiT.

அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமில்லாமல் சிலருக்குத் தொழிலாக, சிலருக்கு மனதுக்குப் பிடித்த பொழுது போக்காக, சிலருக்கு தாம் வாழ்ந்த காலத்தை வருங்கால சமுதாயத்துக்கு ஆவணப்படுத்தும் ஊடகமாக எனப் பலவித பயன்பாடுகளுடன் நிழற்படக் கலை. கற்போம். பகிர்வோம். கற்போம்.
***

இன்னொரு வசந்தா - (இன்றைய) தினமணி கதிர் சிறுகதை

சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

“அலாரம் வச்சு மூணரைக்கெல்லாம் எந்திச்சுக்கறேன். சரியா நாலு மணிக்கு ஏஜண்ட் வாசலில் சைக்கிள் பெல் அடிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவார். ஒருநாள் லீவு போட்டதில்லையே? என்ன தப்பு சார் செஞ்சேன்?” கலக்கத்துடன் பையன் கேட்கவும் அதிர்ச்சியின் அளவு எகிறியது.

“ஆமா உன்ன மாதிரிச் சின்னப் பசங்க பேப்பரு போட்டா போலிசுல புடிச்சுடுவாங்க தெரியுமா? படிக்கற வயசுல எதுக்கு இந்த வேல? என்ன கஷ்டம் வீட்டுல? சரி நீ போ. நான் பேசிக்கறேன் ஒன் மொதலாளிகிட்டயே” என்றார் கடுமையாகவே.

“படிப்புச் செலவுக்கு ஆகுமின்னுதான் இந்த வேலயச் செய்றேன் சார். ஒம்பதாவதுல இருக்கேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்j எங்க மொதலாளி ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர எதுவுஞ் சொல்லிடாதீங்க. பரிச்சைக்கு லீவுல்லாம் கொடுக்கேன்னுருக்கார். யூனிஃபார்ம் கூட எடுத்துக் கொடுத்தார்.”

‘சோழியன் குடுமி சும்மவா ஆடும். கையில காசு பொழங்க ஆரம்பிச்சதும் எந்தப் படிப்புக்காக வேலையில சேந்தியோ அதயே தொலச்சுட்டு நிக்கப் போறடா பாவி’ மனதில் ஓடியதைச் சொல்ல முடியாமல் நிற்கையில், “உங்களுக்கு என்ன ஆகணும்னு எங்கிட்டயே சொல்லுங்க. நடுவால மொதலாளி எதுக்கு? இன்னும் அர மணி முன்ன தரணுமா?” குரல் கரகரக்கக் கண்ணீர் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.

தர்ம சங்கடமாய்ப் போயிற்று. இப்போதைக்குச் சமாதானமாகப் பேசி அனுப்பி விட்டால் போதுமென முடிவெடுத்தவராய் “டைமுக்கு வைக்கற சரிப்பா. கதவுக் கம்பியில சொருகி வைக்கணும். தூக்கி எறியப்புடாது. ஆனாலும் நீ புதுசா இருக்கதால பணத்தை அவர்ட்டதான் கொடுப்பேன்னு சொல்லிடு.” என்றார் தீர்மானமாய், சின்ன மீனை அனுப்பிப் பெரிய மீனை பிடித்துத் தாளித்து விடும் எண்ணத்தில்.

“அதான் ரசீது பொஸ்தம் கொண்டாந்திருக்கனே” வாதாடிப் பார்த்தான். ‘இந்த மனுசனிடம் பருப்பு வேகாது’ எனப் புரிந்த கொண்டானோ என்னவோ, சில நொடிகளில் கண்களைத் துடைத்துக் கொண்டு சந்தேகமாகப் பார்த்தபடியே வெளியேறினான்.

“காசைக் கொடுத்து அனுப்பிருக்கலாமே? இப்ப அந்தாளு வந்து தாம்தூம்னு குதிக்கவா? நானே காவேரி வரலியேங்கற டென்ஷன்ல இருக்கேன். இது வேறப் புதுத் தலவலி.” சிடுசிடுத்தாள் சொர்ணம்.

வள் கவலை அவளுக்கு. நேற்று எதிர்பாராத விருந்தினர்கள் இரவு உணவுக்கு வந்து விட, சேர்ந்து போனப் பாத்திரங்கள் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. முன்னெல்லாம் இவரது கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து, பொதுநல விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையைப் பெருமையாகக் கருதி வந்த சொர்ணம் இப்போது தலைகீழாக மாறி விட்டிருந்தாள்.

வயதின் இயலாமை ஆட்டுவிப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. மூட்டெலும்புத் தேய்மானம். இரத்த அழுத்தம். போதாக்குறைக்கு சர்க்கரை நோயும். சிலவருடம் முன்னர் வரை எந்த வேலைக்கும் ஆள் எதிர்பார்த்து வாழ்ந்தவள் இல்லை. அப்போதெல்லாம் முடிந்த அளவு கூட இவரால் இப்போது உதவ முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வியாதிகள் ஓய்வு கால போனஸாக வந்து சேர சின்னச் சின்ன வேலைகளையே செய்து கொடுக்க முடிகிறது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய சூழலில் இருவருமே.

மகனும் மகளும் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தார்கள். வருந்தி வருந்தி அழைக்கவே செய்தார்கள். ஆறுமாதங்களுக்குத் திட்டமிட்டுச் சென்றால் ’நம்மூரைப் போலாகுமா’ என மூன்றே மாதங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விடுவதே நடந்தது. நிரந்தரமாய் போய்த் தங்குவது நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. வயது காலத்தில் தனியாக வாழுகையில் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளக் கூடாதென்பதில் சொர்ணம் தெளிவாக இருந்தாள். இந்த வயதில் தன்னலமே நல்லதென்றாள். போனமாதம் நடந்த சம்பவம் இந்தத் தீர்மானத்தை மேலும் தீவிரமாக்கியிருக்க வேண்டும்.

வீட்டெதிர் விளக்குக் கம்பத்தின் கீழ் மாலையில் கீரைக்கடை பரப்பும் கங்கம்மா, ஒரு நாள் முன்னிரவில் “நாளக்கி பரிச்ச இருக்கு. போகாதம்மா” எனப் பரிதாபமாக மகன் கூவக் கூவ காதில் வாங்காமல் வியாபாரத்துக்கு அவனை நிற்க வைத்து விட்டு சீரியல் பார்க்கச் செல்ல,, மறுநாள் அவளை ஒருபிடி பிடித்து விட்டார் சபாபதி. அவமானம் தாங்காதவளாய் ”எம்புள்ள மேல எனக்கில்லாத அக்கறதான் ஒமக்குப் பொத்துக்கிட்டு வருதோ?” சீறியதோடு அன்றிலிருந்து இவரைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளலானாள். சொர்ணத்தையும் தன் கடைப்பக்கம் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். இப்போது மார்க்கெட் வரை போய் கீரைவாங்க வேண்டிவந்தது கூட வருத்தமாய் இல்லை. “தேவையா இது நமக்கு”எனத் தினம் தினம் சொர்ணம் சொல்லிக் காட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. இதே சொர்ணம் எப்படியெல்லாம் பக்கபலமாக முரட்டு ஆசாமிகளிடம் கூட மல்லுக்கு நின்றிருக்கிறாள் ஒருகாலத்தில்.

சிலர் அடாவடியாகப் பேசுவார்கள். சில ஏழைப் பெற்றோர் “என்ன சார் செய்வது? படிப்பு ஏறல. எங்களுக்கும் சொல்லித் தரத் தெரியல. அப்படியே விட்டாலும் பசங்க வீணாகிடுவாங்களேன்னு வேலைக்கு விட்டுட்டோம்”எனக் காரணம் சொல்வார்கள். அப்போது ஆயிரங்களைக் கொட்டி ட்யூஷனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற சாராருக்கும், ஏழைகளுக்குச் சரியான கல்வி மறுக்கப்படுகிற அவலத்துக்குமான இடைவெளி மனதைப் பிறாண்டும்.

பெரிய அங்காடி முதல் சிறிய கீரைக்கடை வரை குடும்ப வியாபாரத்துக்குக் கல்லாவில் அமர்ந்து உதவும், பழகும் குழந்தைகளைப் பார்க்கிறார்தான். அது படிப்பைப் பாதிக்காமல் நடந்தால் பரவாயில்லை. அதிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த பேப்பர் ஏஜண்ட் போல மற்றவர் பிள்ளைகளைத் தம் சுயநலத்துக்குப் பலி கொடுப்பவரை மன்னிக்கவே முடிந்ததில்லை அவரால், தன் பெற்றோர் உட்பட.

த்தாம் வகுப்பில் இவர் நுழைந்த முதல் நாளன்று மாலை. டிரைவர் ஆறுமுகம் தன் தங்கை காமாட்சியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் வீட்டு வேலைக்கென. காமாட்சியின் கணவர் ஒருமாதம் முன்னர் தவறி விட்டதாகவும், பெண்ணின் படிப்புக்காக இங்கே அழைத்து வந்து, தன் பக்கத்து வீட்டிலேயே குடி வைத்திருப்பதாகவும் சொன்னார். காமாட்சியின் பின்னால் நின்றிருந்தது அன்று புது அட்மிஷனாக இவரது வகுப்பிலே சேர்ந்திருந்த வசந்தாதான். முதல் நாளே தன் பேச்சாலும் அறிவாலும் ஆசிரியர்களைக் கவர்ந்து விட்டிருந்தவள். அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவளே. பிறகு ஒருபோதும் வந்ததில்லை, அம்மா கூப்பிட்டு அனுப்பும் வரை.

ஆனால் ஆறுமுகத்தின் மகன் ரங்கன் அடிக்கடி வருவான். வசந்தா இவர் வகுப்பில் என்றால் ரங்கன் சின்னக்கா வகுப்பில் இருந்தான். ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாத நல்ல கல்வி முறை இருந்தது அந்தக் காலத்தில். இவரை விட இரண்டு வயது பெரியவனாயினும் நெருங்கிய விளையாட்டுத் தோழன். வசந்தாவைத் திட்டிக் கொண்டேயிருப்பான். “இவ நல்லாப் படிக்கறதப் பார்த்து எப்பவும் எனக்கு வீட்டுல திட்டு விழுது. நான் பாஸாகிறது பத்தாதாம். அவளப் போல க்ளாசுல மொதலா வரணுமாம். எங்கழுத்த அறுக்கதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கா” என அங்கலாய்ப்பான். போதாதற்கு அவள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தது இன்னும் வெறுப்பை ஏற்றியது.

கோடை விடுமுறைக்கு பெரியக்கா வயிற்றில் மூன்று மாத மசக்கையும் கையில் இரண்டு வயது மகளுமாக வந்திருந்தாள். கூடவே ஆஸ்த்மா தொந்திரவு வேறு. அம்மா சாதுர்யமாகக் கேட்டாள், “ஏன் காமாட்சி. ரங்கன் வர்ற மாதிரி வசந்தாவும் நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கட்டுமே. இப்பப் பெரிய லீவுதான? சின்னவ கூட விளையாடட்டும். குட்டிப்பாப்பாவும் வசந்தாவைப் பாத்தா ஒட்டிக்குவா.”

காமாட்சி தலையைத் தலையை ஆட்டினாலும் அழைத்து வரவில்லை. அப்புறம் அம்மா நேராக விஷயத்துக்கு வந்து விட்டாள். ஒரு வாரத்தில் ஊருக்குக் கிளம்பவிருந்த அக்காவுடன் வசந்தா போய் ஒரு மாதம் உதவியாக இருந்து வரட்டுமென. காமாட்சியால் மறுக்க முடியவில்லை. மறுநாள் வசந்தா குழந்தையோடு பழக வீட்டுக்கு வந்தாள். அம்மா சின்னக்காவின் துணிமணிகளைக் கொடுத்ததோடு புதிதாகவும் ரெண்டு மூணு செட் எடுத்திருந்தாள். கூடவே பளபளவென ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் வாங்கிக் கொடுத்தாள்.

“படிக்கிற பொண்ணாச்சே. அதுவும் சின்னப் பொண்ணு” என ஆட்சேபித்த அப்பாவை“நம்ம பொண்ணுங்க இந்த வயசுல வீட்டு வேல செஞ்சதில்லையா? சின்னவ பாப்பாவப் பாத்துக்கறதில்லையா? அது போலதான? ஸ்கூல் திறக்குமுன்னே நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்” என்று மடக்கினாள். நாத்தனாருக்குத் திருமணமென அக்கா போயே ஆக வேண்டியிருந்த சூழலில் அப்பாவால் தடுக்க முடியவில்லை.

வசந்தா ரொம்ப சமர்த்தாகப் பாப்பாவைப் கவனித்துக் கொள்வதாகவும் அதைவிட அருமையாகப் பாட்டு, பாடமெல்லாம் சொல்லித் தருவதாகவும் அக்கா எழுதிய கடிதத்தைக் காமாட்சியிடம் காட்டிப் புகழ்ந்தாள் அம்மா. பதினோராம் வகுப்பு ஆரம்பமாக சிலநாட்களே இருக்க வசந்தாவை அழைத்து வர அம்மா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரித் தெரியாது போக காமாட்சி வாய் விட்டேக் கேட்டு விட்டாள். அந்நேரம் ரங்கன் வசந்தாவிடம் தோற்றுவிடக் கூடாதென முயன்று படித்து பியுசி பாஸ் ஆகியிருந்தான், அம்மா அழகாகக் காய் நகர்த்த வசதியாக.

ங்கனைப் பட்டதாரியாக்கி, வேலை வாங்கித் தந்து, ஐந்து பவுன் நகையோடு வசந்தாவை அவனுக்குக் கட்டி வைப்பதாகவும் அதுவரை வசந்தா அக்காவுடனே இருக்கட்டுமென்றும் அம்மா சொல்ல “அவ அப்பாக்கு அப்படியொரு ஆசம்மா பொண்ணப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுமின்னு. புண்ணியவான் போய்ச் சேந்துட்டாரு. புகுந்த வூட்டு சனம் பொட்டைப்புள்ளக்கி எதுக்குப் படிப்புன்னு சொல்லப் போய்தான் அண்ணன அண்டிப் பொழைக்க இங்க வந்தேன். இந்த வருச கவர்மெண்டு பரிச்சயாச்சும் முடிச்சிரட்டுமேம்மா” தயங்கித் தயங்கிக் காமாட்சி சொன்னாள். அப்போதெல்லாம் பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி!

“என்னைக்கானாலும் ரங்கனைக் கட்டிக்கிட்டுச் சோறாக்கத்தானே போறா? ரங்கனுக்கு நல்ல வேலை அமைஞ்சா இவ எதிர்காலந்தானே செழிப்பா இருக்கப் போது? நல்லா யோசிச்சு ஆறுமுகத்துட்டேயும் பேசிட்டுச் சொல்லு.”

ஆறுமுகத்துக்குக் கசக்குமா என்ன? தங்கை மனதை மாற்றினார். அப்பா ரங்கனைப் படிக்க வைப்பதில் பாவம் தீர்ந்து விடுமென எண்ணி விட்டார் போலும். ரங்கனுக்குக் கொஞ்சம் தன்மானம் அடிவாங்கின மாதிரி தோன்றினாலும் கல்லூரி ஆசை கை கூடியதில் ரோஷம் ஓடி ஒளிந்தது. பி.காம் முடித்த கையோடு வங்கி வேலையும் கிடைத்தது. அம்மா சொன்ன வாக்கு மாறாமல் பத்துக்குப் பதினைந்து பவுனாக நகை போட்டுக் கோவிலில் கல்யாணம் முடித்து, வீட்டுத் தோட்டத்திலே பந்தல் போட்டு ஊரைக் கூட்டிச் சாப்பாடு போட்டாள். திருமணத்துக்கு முன் தினம் வரை பெரியக்காவின் குழந்தைகள் இரண்டும் வசந்தா ஊட்டினால்தான் சாப்பிட்டன.

ஊர் மெச்சிய கல்யாண விருந்திலே வருத்தமாகக் கை நனைத்த ஜீவனாக அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியர். பதினோராம் வகுப்புப் பரீட்சையில் மாநிலத்தில் முதலாவதாய் வந்து, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தருவாள் வசந்தா எனப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர். ‘பெரிய கலெக்டராய் வருவாள்’ என வாய்க்கு வாய் பாராட்டியவர். இவரிடம் முணுமுணுப்பாகத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுத் தளர்வாக வெளியேறினது இன்றும் கண்களினின்று அகலாக் காட்சியாக.

ழைப்பு மணி ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டார்.

பக்கத்திலிருந்த சொர்ணம் “இனியெங்க காவேரி வரப் போறா? ஏஜெண்டா இருக்கும். இல்லேன்னா அந்தப் பையனையே திருப்பித் துரத்தி விட்டிருப்பார். சும்ம மல்லுக்கு நிக்காம ரூவாயக் குடுத்தனுப்புங்க. கீரைக்கு நடையா நடக்கறது பத்தாம, விடிஞ்சும் விடியாமப் பேப்பருக்கு நடக்கப் போறீங்களாக்கும்?” அலுத்துக் கொண்டவள் “அத்தன காலையில தெருவெல்லாம் வெறிநாய்ங்க அட்டகாசம் வேற” கண்களை உருட்டிச் சின்னக் குழந்தையைப் பயமுறுத்துவதைப் போலச் சொன்னாள். அதே தெருவழிதான் அந்தச் சின்னப்பையனும் வரவேண்டும் எனும் நினைப்பு அவளுக்கு எழாதது வேதனையைத் தர, எதுவும் பேசாமல் போய்க் கதவைத் திறந்தார். நின்றிருந்தது சிறுவன் அல்ல. பளிச் முகத்தோடு பள்ளிச் சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்கச் சிறுமி.

யாரெனக் கேட்கும் முன்னர் அவளே “வணக்கம் சார். என் அம்மாதான் காவேரி. எதுத்த வீட்டுல வேல பாக்கும் அக்காவ வழியில பாத்தேன். அம்மா வரலன்னு பெரியம்மா கோவமா இருப்பதா சொன்னாங்க. ‘எனக்கும் நேரமில்ல. நீ போனா என்னாடி’ன்னாங்க. அம்மாக்கு ஒடம்பு முடியல. நாள வந்திடுவாங்க. எதும் செய்யணுமின்னா சொல்லுங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போயிக்கலாம். மொதப் பீரியடு கேம்ஸுதான்” படபடவெனப் பேசினாள். சூட்டிகையான அந்தக் குழந்தையின் முகத்தில் அம்மாவின் வேலையைக் காப்பாற்றிக் கொடுக்க வந்தப் பெருமிதம்.

“இல்லம்மா. நீ ஸ்கூலுக்கு...”

பாய்ந்து வந்த சொர்ணம் இவரைத் தள்ளாத குறையாக இழுத்து நிறுத்திக் கதவை விரியத் திறந்து விட்டாள்.

இப்படியான தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவர் அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே “நல்லதாச்சுப் பொண்ணே. வேறொண்ணும் செய்ய வேண்டாம். இன்னைக்கு ஒரே ஒரு நாள்.., பாத்திரத்தை மட்டும் தேச்சுக் கொடுத்துட்டுப் போயிடு” என்ற சொர்ணத்தைப் பின் தொடர்ந்தாள் அந்தச் சின்னபெண், முதுகில் பள்ளிக்கூடப் பையுடன் கருத்துப் போனக் கால் கொலுசுகள் சுடிதாருக்குக் கீழே தலைநீட்டி ’ஜலங் ஜலங்’ எனச் சத்தமிட.

திகைத்து நின்றிருந்த சபாபதிக்கு “ஒரே ஒரு மாசந்தானேங்க” ஐம்பது வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்ன அம்மாவும், கணுக்கால் தெரியும் பாவாடை தாவணியில் மஞ்சள் துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு அம்மா பரிசளித்தப் புதுக் கொலுசுகள் மின்னப் பெரியக்காவுடன் ரயிலேறிய வசந்தாவும் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.
***

27 நவம்பர் 2011 இன்றைய தினமணி கதிரில்..,

நன்றி தினமணி கதிர்!


கதாபாத்திரங்களை உயிர்த்தெழச் செய்திருக்கும் தலைசிறந்த ஓவியர் ராமு அவர்களுக்கும் நன்றி!

  • முடிவற்றுத் தொடரும் அவலம் பற்றியதான இச்சிறுகதை நட்சத்திர வாரத்தின் நிறைவு நாளில் வெளியாகிப் பலருடன் பகிர்ந்திடும் வாய்ப்புக் கிட்டியதில் மனதுக்கு ஒரு திருப்தி.
  • மழலைகள் உலகம் மகத்தானது’ எனும் தலைப்பில் தொடர்பதிவு இட என்னை அன்புடன் அழைத்திருந்த அமைதிச் சாரலுக்கு நன்றி. அச்சங்கிலியில் இக்கதையினையும் இணைக்கிறேன்.


தினமணியில் வெளியான என் பிற சிறுகதைகள்:

வயலோடு உறவாடி..
ஆயர்ப்பாடி மாளிகையில்..
கைமாறு
வடம்
பிடிவாதம்

சனி, 26 நவம்பர், 2011

நவீன விருட்சம் 89-90வது இதழ் - ஒரு பகிர்வு (அதீதத்தில்..)



எனது எழுத்துப் பயணம் தொடங்கியதே சிற்றிதழில்தான். பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு மலர்கள் அதற்கு அச்சாரமிட்டன என சொல்லலாம். திருநெல்வேலியிலிருந்து வெளியான ‘நண்பர் வட்டம்’ இதழில் 1987-ல் கல்லூரியில் படிக்கும் போதே எழுத ஆரம்பித்து விட்டிருந்தேன். தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் அதில் எழுதிவந்த நிலையில் சில காரணங்களால் அது நின்று போனது. வேற்று மாநிலங்களில் வசித்த காரணத்தால் அதன் பிறகு வேறெந்த சிற்றிதழ்களோடும் அறிமுகமில்லை. பின்னர் 2003-ல் திண்ணை இணைய இதழ் அறிமுகமாகி எழுதிக் கொண்டிருந்தேன் எனினும் 2008-ல் எனக்கென முத்துச்சரம் வலைப்பூவை உருவாக்கிக் கொண்டு பதிவுலகம் நுழைந்த பின்னரே வாசிப்பும், நல்ல நட்புகளும் அவர்கள் மூலமாக பல இலக்கியப் பத்திரிகைகளும், இணைய இதழ்களும் அறிமுகமாயின.

நவீன விருட்சம் வலைப் பக்கம் அனுஜன்யா மற்றும் உழவன் ஆகியோரின் பதிவுகள் மூலமாகவே எனக்கு அறிமுகமானது. அன்றிலிருந்து அத்தளத்தை தொடர்கிறேன் என்றாலும் அதன் 23ஆம் ஆண்டின் 89-90 வது தொகுப்புதான் நான் புத்தக வடிவில் வாசிக்கும் முதல் நவீன விருட்ச சிற்றிதழ்.

என்னைப் பொறுத்தவரை சில இதழ்கள் வாசகர் வசதிக்காக தங்கள் இணையப் பக்கத்திலும் படைப்புகளை வெளியிட்டாலும் கூட சிற்றிதழ் வடிவத்திற்கு நாம் ஆதரவு தர வேண்டும். நண்பர்களுக்கு ஓராண்டு சந்தாவைப் பரிசளித்து இதழ்களை அறிமுகப்படுத்தலாம். பிறகு தொடர்வது அவர்கள் விருப்பம். பல சிற்றிதழ்கள் எந்த வியாபார நோக்குமின்றி இலக்கிய ஆர்வத்தினால் பொருளாதார நெருக்கடிகளை உதாசீனம் செய்தபடி தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன. நவீன விருட்சம் 23 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு இதழுக்காகவும் அதன் வாசகர் வட்டம் ஆவலாகக் காத்திருப்பதுமே அதன் மதிப்பைப் புரிய வைப்பதாக இருந்தது.

89-90வது இதழ்-ஒரு பகிர்வு

க.நா.சு அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது கட்டுரையொன்றைப் பிரசுரிக்க விரும்பிய ஆசிரியரின் கண்ணில் சிக்கியிருக்கிறது கணையாழி இதழில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘இலக்கியத் தரம் உயர’ எனும் கட்டுரை. இக்காலத்துக்கும் பொருந்துவதாக பல விஷயங்களில் நியாயம் இருப்பதாகக் கூறி ஆசிரியர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம், அதிலும் நியாயம் இருக்கிறது, நீங்களே பாருங்கள். க.நா.சு சொல்லுகிறார்:

இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம், லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்ப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்சனைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.


இதழின் கடைசி மூன்று பக்கங்களில் ஆசிரியர் அழகிய சிங்கர் தன் எண்ணங்களை, பேருந்து நிலையத்தில் சந்தித்துப் பயணிக்கும் ஜெகன் மற்றும் மோகினியுடான உரையாடல் மூலமாக எள்ளலுடன் சொல்லியிருப்பது ரசனைக்குரியது. இது ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர் பகுதியாகவும் இருக்கலாம்.

வள்ளுவர் ஏன் இது மாதிரி ஒரு குறளைப் படைத்தார்?” என்றொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆசிரியரின் “ஜோல்னாபைகள்” கவிதை உட்பட்ட பல படைப்புகளுடன்..,

சத்தியப் பிரியன் எழுதிய “பாரத புத்ரி” நாவலைப் பற்றிய விமர்சனம்:

பக்கம் 14: ‘அடிப்படைத் தேவைகள் எதையுமே பூர்த்தி செஞ்சு வைக்காம என்றும் சலுகைகள் மட்டும் எதை பூர்த்தி செல்ல இயலும்?’....

ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது என்ற ரமேஷ் - பிரேம் வரிகளுடன், நாம் ஒத்துப் போக வேண்டியது ஆகிறது.இது பெண்ணின நாவலா?.......

பக்கம் 91: பெண் ஜென்மம் பாவம் எனத் தோன்றியது. பண்ணெடுங்காலம் முன்பு ஆதி சக்தியிலிருந்து பிறந்த முப்பொறிகளே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆனதாக தேவி பாகவதம் சொல்கிறது. இதை நிறுவும் முகமாகவே திரிபுரம் எரித்த மகாசக்தி அவதாரம் எடுத்தாள். ஆனால் எங்கு பிசகியது என்று தெரியவில்லை. மனிதப் பிறவியில் பெண் இரண்டாம் நிலையை எய்திவிட்டாள். அவளுக்குண்டாஅன உரிமைகள் மறுக்கப் பட்டுவிட்டன.......

பக்கம் 127 எந்த அரசுப் பணியாளராலும் அரை மணிநேரம் தொடர்ந்து ஓர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய இயலவில்லை. டீ குடிக்க, சிகரெட் குடிக்க, சொந்த அலுவல்களை கவனிக்க அலைந்த வண்ணம் இருந்தனர்.அடிப்படை இந்தியமனம், அக்கறையின்மை, அரசியல் குறுக்கீடு இவை மூன்றும்தான் அரசு அமைப்புகளைப் பாழ்படுத்துகின்றன.........

“வெறும் சம்பவக் கோர்வையாக அமைந்திருக்க வேண்டிய ஒரு ஆனந்த விகடன் தொடர்கதையில் இத்தனை திட்டவட்டமான கருத்துக்களைக் கூற முற்பட்ட சத்தியப்பிரியன் ஒரு புத்திசாலி எழுத்தாளர்தான், இந்நூல் நம்மால் ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நூல்”.


லாவண்யா, உஷாதீபன், எஸ். சங்கர நாராயணன், நா. ஜெயராமன் (ஆசிரியர்: “நா ஜெயராமனின் கதைகள், கவிதைகள் தொகுத்து ஒரு புத்தகமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர எண்ணம். அவருடைய கதை ஒன்றை கசடதபற இதழிலிருந்து கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறேன்”) ஆகியோரின் சிறுகதைகள்.

விட்டல் ராவ் அவர்கள் “பழம் புத்தகக் கடை”யில் கண்டெடுத்தாகச் சொல்லும் “FOR YOU THE WAR IS OVER" புத்தகம் பற்றியொரு பகிர்வு. “SUNDAY CHRONICLE" பிரிட்டிஷ் பத்திரிகையின் யுத்த நிருபராக இருந்த GORDON HORNER எழுதிய நூல்: “இந்நூலை மூன்று நிலைகளில் வைத்துப் பார்க்க சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒன்று: இரண்டாம் உலகப் போர் கைதி ஒருவரின் சிறந்த கைதிமுகாம் டைரி. இரண்டு : அந்த யுத்த அனுபவங்களையும் கைதி முகாம் நாட்களையும் அதன் மனிதர்களையும் நிகழ்வுகளையும் மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் வாஷ் சித்திரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தியிருப்பது. மூன்று: கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களின் உயர்ந்த தரம்.

நீல. பத்மநாபன், அனுஜன்யா, குமரி. எஸ். நீலகண்டன், ரிஷான் ஷெரீப், மிருணா, ராஜேஷ் நடராஜன், மதியழகன், செல்வராஜ் ஜெகதீசன், ஐராவதம் ஆகியோரின் கவிதைகளுடன் எனது கவிதை “அழகிய வீரர்கள்” (முன்னர் பகிர்ந்த போது வந்த கருத்துக்களுடன் காண இங்கே செல்லலாம்.):

மிகக் கவனமாகக்
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***



தற்போது விற்பனையில்,
நவீனவிருட்சம் 89-90
பக்கங்கள்: 90
ஆசிரியர்: அழகிய சிங்கர்
விலை: ரூ.15
கிடைக்குமிடம்: New Book Lands, T.Nagar, Chennai-17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)

அடுத்த இதழ் தயாராகி வரும் நிலையில் சந்தா செலுத்த விரும்புகிறவர்கள் ஆண்டுச் சந்தா ரூ:60-யை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை 600 033.http://www.blogger.com/img/blank.gif

அல்லது இணையம் மூலமாக கீழ்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு,
Name of the account - Navinavirutcham
Account No: 462584636
Bank: Indian Bank
Branch - Ashok Nagar, Chennai.
உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு navina.virutcham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
*** *** ***


[14 நவம்பர் 2011, அதீதம் இணைய இதழில் பகிரப் பட்டக் கட்டுரை].

வெள்ளி, 25 நவம்பர், 2011

மிலே சுர் - சர்வேசனின் குறும்படம் - கிரியின் விமர்சனம்

பாகம் 1
பாகம் 2


யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழும் இந்நாளில் அனைவரின் சுரமும் ஒன்றாகி அகிலமெங்கும் அன்பு பெருக சர்வேசன் எடுத்துக் கொண்டிருக்கும் நன்முயற்சியே இக்குறும்படம்:

http://youtu.be/_cRtySd65u8



பிழைப்புக்காக உழைப்புக்காக மட்டுமின்றி, பிறந்த மண்ணில் இருக்க இயலா கட்டாயத்தாலும் புலம் பெயர்ந்து வாழுபவர் உலகில் பல கோடி. சக மனிதர் எவர் மீதும் நேசம் பாராட்டும் உணர்வு ஒன்றாலேயே உலகில் அமைதி சாத்தியப்படும். அந்த வகையில் நம் நாட்டின் ஒற்றுமைக்கான இப்பாடலைப் பிறநாட்டு முகங்களும் பாடுகையில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. தொழில் நுட்ப வகையில் தரமான ஆக்கம். பல மாத உழைப்புக்குச் சிறப்பான பலன்.

இவர் சமூக நோக்குடனான பதிவுகள் பல குறித்து ஆசிரியராக வலைச்சரம் தொகுத்த போது நான் பகிர்ந்தவை இங்கே. ‘மிலே சுர்’ரின் அடுத்த கட்ட முயற்சியாக நல்ல சமூகக் கருத்துடைய ஒரு கருவை எடுத்து இயக்க விரும்பிக் கதை தேடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை ஷக்தி பிரபா உதவக் கூடும். இன்னொரு நல்ல சமுதாய நோக்குடனான குறும்படம் பிறக்கக் கூடும். அதற்கு இப்பதிவு ஒரு விதையாய் அமையுமாயின் மகிழ்ச்சியே.

‘மிலேசுர்’ படம் குறித்த விமர்சனத்தை நான் தருவதை விடப் பதிவுலகில் சிறந்த திரைப்பட விமர்சகராக அறியப்படும் கிரி தந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. கோரிக்கையை ஏற்றுக் குறுகிய அவகாசத்தில் செய்து தந்த அவருக்கு என் நன்றி.

கிரியின் பார்வையில் ‘மிலே சுர்’:

ம்மில் பலருக்கும் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதாவது வழக்கமான நமது பணியில் இருந்து விலகி. ஒரு சிலர் பைலட் ஆக நினைத்து இருக்கலாம், சிலர் ஆசிரியர் ஆக நினைத்து இருக்கலாம் இன்னும் சிலர் கலெக்டர் ஆக விரும்பி இருக்கலாம் சிலர் ஒரு இசையமைப்பாளரோ அல்லது இயக்குனர் ஆக நினைத்து இருக்கலாம் ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் அப்போது கிடைத்த வாய்ப்பை பொறுத்து நாம் ஒரு பணியில் அமர்ந்து இருக்கலாம். இருப்பினும் நாம் ஏதாவது வித்யாசமாக செய்து அல்லது நமது மனதுக்கு பிடித்த மாதிரி உள்ள பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

இது போல நிலையில் என்ன தான் நாம் நம் பணியில் சிறப்பாக இருந்தாலும் நம் மனதிற்கு முழு திருப்தி அளிக்கக்கூடிய பணியை செய்யவில்லையே என்ற ஒரு வருத்தம் அல்லது ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இது போல ஒரு நிலையில்தான் சுனில் ஜெயராம் (சர்வேசன்) ஒரு வகுப்பில் இணைந்தார். இதில் நம் ஆர்வம் என்ன? என்ன செய்யலாம் என்பதற்கு ஆலோசனை கூறுவார்கள் அதன் படி நாம் முயற்சிக்கலாம். என்னதான் இதை எல்லாம் நாமே செய்யலாம் என்றாலும் நமக்கு இதை செய்யலாம் என்று அனுபவமுள்ள ஒருவர் ஆலோசனை கூறும் போது நமக்கும் சரி இதை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன? என்று தோன்றும்.

இது போல ஒரு வகுப்பில் இவரிடம் உள்ள புகைப்பட கலையில் உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவர் நீங்கள் குறும்படம் எடுக்கலாம் என்று ஆலோசனை கூறி இருக்கிறார். இவருக்கு அப்போது முடியும் என்று தோன்றவில்லை என்றாலும் அது மனதில் இருந்து கொண்டே இருந்ததால் சரி முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று இந்த குறும்படத்தை எடுத்து இருக்கிறார். ஒரு சிலருக்கு என்னதான் நல்ல சம்பளம் வசதி இருந்தாலும் ஏதாவது வித்யாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் அந்தத் தேடலில் வந்ததுதான் இந்தக் குறும்படம்.

எனக்குக் கூட நிருபராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது. அதனால் அந்த ஆசையை அல்லது தற்போதைய சூழ்நிலையில் முடியாத ஒன்றை நிறைவேற்ற ப்ளாகில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது போல் ஒருவரின் முழுமையான முயற்சிதான் இந்தக் குறும்படம்.

இதை தன்னுடைய அலுவலகத்தில் 3000 பேர் உள்ள இடத்தில் மின்னஞ்சல் அனுப்பி இதைப் போல செய்யப்போவதாக கூறியுள்ளார் இதற்கு பதில் அளித்த பலரும் தாங்களும் இதில் பங்கு கொள்வதாகக் கூறி அதை சிறப்பாகச் செய்தும் இருக்கிறார்கள். இது நிச்சயம் ஒரு கூட்டு முயற்சிதான். ஒரு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் உள்ளவர்களை (வெள்ளையர்கள் சைனீஸ் உட்பட) ஒருங்கிணைத்து செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை என்பது உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இனி குறும்பட விமர்சனம்:

முன்னரே கூறியபடி 80-களில் வந்த தூர்தர்ஷன் பாடலை அப்படியே தற்கால சூழ்நிலைக்கேற்ப ரொம்ப மாற்றாமல் அழகாகக் கொடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் மிகச் சிறப்பான இயக்கம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

Mile Sur பாடல் இந்திய ஒருமைப்பாட்டை அழகாக விளக்கிய குறும்படம். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி நபர்களையும் ஒரே பாடலில் கொண்டு வந்து நமது கலாச்சாரத்தை அனைவருக்கும் உணர்த்தி இருப்பார்கள். இன்று வரை இதை அடித்துக்கொள்ள ஒரு தேசிய ஒருமைப்பாட்டு குறும்படம் வரவில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

Mile Sur Mera Tumhara [இதன் பிறகு வரும் ஹிந்தி புரியவில்லை ஹமாரா தவிர :-)] என்பதன் அர்த்தம் "நீயும் நானும் பாடும் பொழுது அந்தப்பாடல் நம் பாடலாகிறது". சரிதானே! இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்றுதானே! நாமும் வேறு ஒரு நாட்டு நபரும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கினால் அது இதைத்தானே குறிக்கிறது. இதை விட பொருத்தமான ஒரு பாடல் இவர்கள் நிறுவன ஊழியர்களை வைத்து இயக்கும் போது கிடைக்குமா என்ன! அருமையான தேர்வு.

எனக்கு உள்ள மிகப் பெரிய ஆச்சர்யம் எப்படி இவ்வளவு பேரை ஒருங்கிணைத்து செய்தார்கள் என்பதே! ஒரு பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு இதில் உள்ள சிரமம் நிச்சயம் புரியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அதுவும் வெள்ளைக்காரர்கள் சீனர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் எடுப்பது என்பது மிகச் சிரமமான ஒன்றே.

ஒவ்வொரு காட்சிக்கும் சரியான நபர்களை காட்சிப்படுத்தி இருப்பதே என்னைப் பெரிதும் கவர்ந்து இருந்தது. ஒரு சில படங்களில் நீங்கள் கவனித்து இருக்கலாம். பாடல் நல்ல ஹைபிச்சில் இருக்கும். ஆனால் அதில் நடித்துள்ள கதாநாயகன் கதாநாயகி வாயசைப்பது அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். மெலடி பாடலைப் பாடுவது போல ஒரு ஹைபிச் பாடலுக்கு முகத்தில் உணர்ச்சிக் காட்டுவார். இதில் என்னை கவர்ந்தவர் என்றால் அஜித். பாடலுக்குத் தகுந்த உணர்ச்சி அவரது முகத்தில் இருக்கும். எடுத்துக்காட்டு "சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்" படம் தீனா.

இதில் அந்தத் தவறு செய்யாமல் சரியான நபரை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். மிகக் கனமான குரலாக இருக்கும், ஆனால் பாடுபவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார். இதில் அது போல இல்லாமல் குரலுக்கேற்ற நபராக இருக்கிறது. இது தெரியாமல் நடந்ததா இல்லை இதை எல்லாம் யோசித்து செய்தார்களா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் நன்றே.

குறிப்பாக லதா மங்கேஷ்கர் குரலுக்கு 5.40 நிமிடத்தில் வருபவரும் (அட்டகாசம்), 3.20 நிமிடத்தில் வருபவரும், 4:51 நிமிடத்தில் வருபவரும் மிகச் சரியான தேர்வு. அவர்களே பாடுவது போல உள்ளது. பாடியவர்கள் (வாயசைத்தவர்கள்) பெரும்பாலானோர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள் என்னை ரொம்பக் கவர்ந்தார்கள்.

# தேர்வுகள் அருமை..






ஒரிஜினல் குறும்படம் வெளிவந்த போது தமிழ்நாட்டில் இருந்து கமல் பிரதாப் போத்தன் ரேவதி KR விஜயா பாலமுரளி கிருஷ்ணா என்று பலர் வருவார்கள் அடடா! இதில் நம்ம தலைவர் இல்லையே என்று நினைத்ததுண்டு. இதில் அந்தக் குறை நீக்கப்பட்டு இருக்கிறது :-) தமிழ்ப் பகுதி வரும் போது அதில் வருபவர் ரஜினி ஸ்டைலில் நடித்து இருக்கிறார். [இதோடு துவக்கத்தில் அண்ணாமலை பாட்ஷா படத்தில் வருவது போல அமைத்து இருப்பது சூப்பர் :-)] ரஜினி ஸ்டைலிலான ‘தமிழ்’ பகுதி மற்றும் 5:06 நிமிடத்தில் வரும் ஒளிப்பதிவு இவை சரியாக வரவில்லை. அனைத்து இடங்களிலும் ஒரு திரைப்படத்துக்கான தரத்தில் ஒளிப்பதிவு இருக்கும் போது இந்த இடங்களையும் கவனித்துச் சரியாக எடுத்து இருக்கலாம். பாடல் துவங்கும் போது (1.30 நிமிடத்தில்) கேமரா வளைந்து அறைக்குள் செல்லும் போதும் இசைக்கு ஏற்ப ஒரு இடத்தில் ஒரிஜினல் ரயிலை போலப் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்.

# பாட்ஷா

பன்னாட்டு நிறுவனம் என்பதால் வெள்ளைக்காரர்களையும் சீனர்களையும் அவர்களது மொழியில், பாரம்பரிய உடையில் நடிக்க வைத்து இருப்பது நல்ல உத்தி. அவர்களுக்கும் முழுக்க இந்தியப்படம் என்றில்லாமல் இது அனைத்து நாட்டு மக்களையும் உள்ளடக்கியப் படம் என்ற திருப்தி இருக்கும். இந்தப்பாடலும் அதையே வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலின் அர்த்தம் என்ன என்று தெரியாமலே (ஹிந்தி நகி மாலும்) பாடலை ரசித்து வந்தேன். இதில் முதலில் வந்த சப் டைட்டில் மூலமே இதன் அர்த்தம் புரிந்தது. அதனால் என்ன! இசைக்கு மொழி உண்டா என்ன? இசையை ரசிக்க என்றும் எனக்கு மொழி அவசியமாக இருந்தது இல்லை இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இதில் நடித்துள்ளவர்கள் எந்த ஒரு வழக்கமான நடிகருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள். படம் எடுத்ததும் திரைப்படம் போல ட்ராலி எல்லாம் வைத்து (Camera--> Rolling --> Action) ஒரு ப்ரொஃபசனலாக எடுத்து இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாரும் ஓவர் ஏக்டிங் செய்யாமல் குறும்படத்தை காப்பாற்றி இருப்பது :-). பொதுவாக மலையாளத்துக்காரர்கள் என்றாலே ஆண்கள் என்றால் அடர்த்தியான மீசையும் பெண்கள் என்றால் படர விட்ட ஈரக் கூந்தலும்தான் சிறப்பு. இதில் கேரளப்பகுதியில் வருபவருக்கு மீசை இல்லை. இதில் கொஞ்சம் கவனம் எடுத்து யோசித்துச் செய்து இருக்கலாம்.

துவக்கத்தில் பெயர் போடும் போது இன்னும் கொஞ்சம் ப்ரொஃபசனலாக ஸ்டைலிஷாக போட்டு இருக்கலாம். இவர்கள் எடுத்த படத்திற்கும் துவக்கத்தில் வரும் எழுத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறது. அதாவது குறும்படம் டாப்பாக உள்ளது. எழுத்து ரொம்பச் சாதாரணமாக உள்ளது.

# இன்னும் ஸ்டைலிஷா...மணிரத்னம் போன்ற சில இயக்குனர்கள் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம். எழுத்துப் போடும் போது கூட அதிலும் ஒரு அழகு இருக்கும். துவக்கத்தில் வரும் எழுத்தின் அழகில் கூட ஒரு இயக்குனரின் ரசனை அடங்கி இருக்கிறது என்பது என் கருத்து. படம் ஆரம்பிக்கும் போதே பார்ப்பவர்களை அசரடிக்க வேண்டும்.

குறும்படம் முடியும் போது ஜாக்கி சான் படத்தில் வருவது போல, காட்சிகளை எடுக்கும் போது நடந்த நிகழ்வுகளைச் சேர்த்து இருக்கிறார்கள். நன்றாக இருந்தது சரியான யோசனை கூட.

சர்வேசன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "கலக்கிட்டீங்க" :-) என் மனமார்ந்த வாழ்த்துகள்.
***

குறும்பட ஆசை

பாகம் 1

ம்மைப் பாதித்த சில விஷயங்களை கட்டுரையாக முன் வைக்கும் போதே அதில் உண்மைத் தன்மை அதிகமிருக்கும் என்பார் அடிக்கடி ஒரு நண்பர். அதை படைப்பிலக்கியத்தில் வெளிபடுத்த முயன்றால் ‘கற்பனைதானே’ எனும் எண்ணமே எவருக்கும் தலை தூக்கும் என்பது அவர் வாதம்.

இதையே நான் இப்படியும் பார்க்கிறேன். கட்டுரையாகத் தரும் போது ‘அன்றாடம் செய்தித்தாளைத் திறந்தாலே இதுதானே’ என மற்றுமொரு செய்தியாக கடந்து விடும் வேதனையும் நிகழவே செய்கிறது. அதையே கவிதையாகவோ கதையாகவோ தரும் போது உணர்வுப்பூர்வமாக நெருங்கி ‘நடக்காததையா சொல்றாங்க?’ என சிந்திக்க வைக்கும் வாய்ப்பாகவும் சிலசமயம் அமைந்து போகிறது.

இரண்டு வடிவங்களும் சிறப்பெனினும் இவை நிறைகுறைகள். இவற்றை விட ஒரு படி மேலாகக் காட்சி ஊடகங்கள். ஒரு கதை சொல்ல வருவதை ஒரே ஒரு நிழற்படம் உணர்த்தி விடுவதையும் பலநேரம் பார்க்கிறோம். அடுத்து இன்று செய்தித்தாளில் செய்திகளை வாசிப்பவரை விட சேனல் சேனலாக செய்தியைப் பார்ப்பவரே அதிகமென்பதை மறுக்க முடியாது. சமுதாயத்துக்கான கருத்தை ஒரு திரைப்படம் அழுத்தமாகத் தரமுடியுமென்றால் குறும்படம் அதையே ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்க முடியும். திரைப்படங்கள் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய சூழலில் செய்து கொள்ள வேண்டி வரும் சமரசங்களால் சொல்ல வரும் விஷயத்தை விட்டுப் பல இடங்களில் விலக வேண்டி வருகிறது. அந்த வகையில் குறும்படம் தனிச் சிறப்புடன் நிமிர்ந்து நிற்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

குறும்படம் குறித்து இப்படியான ஒரு கருத்து என் மனதில் இருப்பினும் அதைத் தயாரிக்கும் எண்ணமெல்லாம் ஏற்பட்டதேயில்லை 2001-ல் SONY TRV140E வீடியோகேம் வாங்கும் வரை. அது வந்த போது சில வருடம் ஸ்டில் ஃபோட்டோ எடுப்பதையே நிறுத்தி விட்டு எங்கு போனாலும் வீடியோதான்.

# கனமான கேமரா
பதிவுக்காக இன்று எடுத்தது

வாங்கிய புதிதில் ஒரு விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது 2,3 வாகனங்களில் தங்கைகள் குடும்பம், பெரியப்பா, அத்தை குடும்பத்தினர், குழந்தைகள் என எல்லோருமாக பாபநாசம் சென்றிருந்தோம். வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இயற்கை காட்சிகளையும் உறவினர் எவரையும் விட்டு விடாமலும் அங்குக் (காணக்கிடைத்த சுவாரஸ்யக் காட்சிகள் உட்பட) திரும்ப வந்து சேரும் வரையான நிகழ்வுகளைப் பதிவாக்கி, H8 கேசட்டிலிருந்து அதை சிடியாக்கும் சாஃப்ட்வேர் பிடிபடாததால் டிவியில் கனெக்ட் செய்து VCR-ல் (எடிட்டிங்குடன்) பதிவு செய்து, பின் அந்த வீடியோ கேசட்டைக் கடையில் கொடுத்து என..... தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு... எல்லோருக்கும் சிடி நகல் அனுப்பி வைத்திருந்தேன்.

சின்னத் தங்கை புகழ்ந்து தள்ளி விட்டாள் [உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்குவது] அதுவும் பலதடவை: “பிரமாதமான கவரேஜ். எடிட்டிங். எங்கே லாங் ஷாட் , எங்கே க்ளோஸ் அப் என்பதெல்லாமும் கூட அருமையா பண்ணியிருக்கே” என. அப்போ தலைதூக்கியதுதான் இந்த ஒளிப்பதிவு ஆசை. ஒரு சின்ன குறும்படத்துக்கு நாம ஒளிப்பதிவு செய்யலாமோன்னு... கிடப்பிலேயே போட்டிருந்த ஆசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக குறும்படம் தயாரிக்கும் எண்ணம் வந்தது பெங்களூர் குழுவுக்கு.

க்தி பிரபா டிஸ்டண்ட் எஜுகேஷனில் MCA செய்த போது அதில் ஒரு பாடமாக மல்டிமீடியா மற்றும் வெப் டிஸைனிங் கற்றுத் தேர்ந்திருந்தார். திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எல்லாமே எனக்குக் கசந்து விட்டக் கதையைதான் பாகம் ஒன்றில் பார்த்தீர்களே:)! இந்த இடத்தில் எனக்கான களம் ஒளிப்பதிவுதான் எனத் தோன்றியது. கனமான ஹேன்டி கேமராக்கள் போய் கையடக்க டிஜிகேம்கள் வந்த பின்னும் ஏன் அதை வாங்கவில்லை எனும் கதையெல்லாம் இங்கே விலாவாரியாகச் சொல்லியிருக்கிறேன்.

“சோதனை முயற்சிக்காகப் புதிய டிஜிகேமெல்லாம் வாங்க வேண்டாம். இருப்பதை உபயோகித்திடலாம்” என முடிவாயிற்று. அனலாக் பதிவு முறையே அவுட் டேட்டட் ஆகி விட்டநிலையில் என் வீடியோகேம் உபயோகித்து H8-ல் பதிவு செய்தால் அதே தரத்துடன் டிவிடி ஆக்க வேண்டுமே என யோசித்தபோது “படமாக்கிக் கேசட்டைக் கையில் கொடுப்பதோடு உங்க வேலை முடிஞ்சது. மற்றதை நான் பார்த்துக்கறேன்” என இமேஜ் எடிட்டிங், வீடியோ ஆடியோ மிக்ஸ்ங், premiere, 3dmax மற்றும் பலவருடம் முன் 2d அனிமேஷனும் படித்திருந்த ஷக்தி குழுவினருக்குத் தைரியம் அளித்தார்.

கதை நல்லதா தோன்றினா சொல்லலாம். மற்றபடி கேமராவை வல்லுநர் கையில் கொடுத்து விட்டு நாம ஒரு ஓரமா நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என நினைத்த வேளையில் ஜீவ்ஸ் அவராகவே “வீடியோ கேமராவைத் தொடர்ந்து கையில் பிடிப்பது எனக்கு நடுக்கம் வந்துடும். நீங்களே பாருங்க” என்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை:)! ஒருவகையில் கனமான கேமரா இதுமாதிரியான படபிடிப்புக்கு நல்லதென்றும் சொன்னார்.

சமூக நோக்குடனான படமாக இருக்கவேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தோம். ரெண்டு ஸ்கிர்ப்ட் முழுமையாய் ரெடியானது. தோழி ஷைலஜா தன் இமேஜையும் பொருட்படுத்தாது ‘இந்தியன்’ கமல் போல மேக்கப் போட்டு பாட்டியாக (ஒதுக்கப்படும் முதியவர்கள் பற்றியது) ஒரு கதையில் நடிக்க ஒப்புதல் அளித்திருந்தார். இவர் நாடகப் போட்டிகளில் நடிப்புக்குப் பரிசுகள் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட டிஸ்கஷன் எனது இல்லத்தில் நடைபெற்ற வேளையில் ஷக்தியால் கலந்து கொள்ள முடியாது போயிற்று. இரண்டாவது கட்ட டிஸ்கஷன் ஷக்தி வீட்டில் நடந்த போது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இப்படி டிஸ்கஷன் லெவலுக்கே இழுத்த வேளையிலும் “நண்பர் ஒருவர் பயிற்சிப்பட்டறை நடத்தித் தரத் தயாராக இருக்கிறார். ஒரு சின்ன ஹால் பார்க்கணும். ஆனால் குறைந்தது 20 பேராவது அட்டெண்ட் செய்தால்தான் வருவாராம்” என்ற ஜீவ்ஸ் இன்னும் பதினைந்து பேரைத் திரட்ட யார் யாரையெல்லாம் கூப்பிடலாமென விட்டத்தைப் பார்த்துத் திட்டமே போட ஆரம்பித்திருந்தார் பாவம் அடுத்த லெவலுக்கே நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறியாமல்.

ஒவ்வொரு முறை திட்டமிட முனைகையிலும் யாரேனும் ஒருவருக்கு கலந்து கொள்ள முடியாது எனத் தகவல் வரும். கூட்டம் ரத்தாகும். இப்படி நகர்ந்த நாட்களில் திருமால் குடும்பஸ்தராகி, நித்திலா பாப்பா பிறக்க குழந்தையோடு இன்னும் பிஸியாகிக் குழுவிலிருந்து நகர்ந்து விட்டார். ஸ்விட்சர்லாந்து பறந்து விட்ட ஷைலஜா ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பி வந்து இப்போது வட இந்தியா சென்றுவிட்டார் மகளின் ப்ராஜெக்டுக்குத் துணையாக. இரண்டு வருடம் முன் செய்து கொண்ட ஒரு அறுவை சிகிச்சையின் பின்விளைவால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை (தள்ளிப்போட்டபடி) எதிர்நோக்கி இருக்கும் நிலையில் நானும் இப்போதைக்கு அதில் ஈடுபடுவதாயில்லை. ஆனால் தன் ஆர்வத்தை அணைய விடாமல் இருந்த ஷக்தி பிரபா, கல்கி நடத்திய போட்டியில் கலந்து கொண்டு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப் பெற்றதில் எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி.



கல்கியில் ஒரு கதையின் கருவை இருவரியில் விளக்கியிருந்தனர். அதனையொட்டி கதையை உருவாக்குவதைப் போட்டியாக அறிவித்திருந்தனர். (நடுவராக இருந்து) பரிசு பெற்றவர்களை இயக்குனர் கௌதம் மேனன் பாராட்டுவதே இந்தப் போட்டி:
வாழ்த்துக்கள் ஷக்தி:)!

வாழ்த்துவோம் ஷக்தியை. ஷக்தியின் கதைகளில் எனக்குப் பிடித்த ஒன்றாக இதைச் சொல்வேன்: பள்ளிக்கூடம் போக மாட்டேன். இதுவும் கூட இவர் திரைக்கதைத் திறனை உங்களுக்குப் புரியவைக்கக் கூடும்.

ங்கள் குறும்பட ஆசை நிறைவேறாமல் போனாலும் நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவரும், PiT குழும உறுப்பினருமான ஒருவர் சிறப்பான ஒரு குறும்படத்தை எடுத்து வந்து ‘இதோப் பாருங்க’ எனக் காண்பித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் அளவில்லை. நேர்த்தியான அதன் ஆக்கத்தில் பிரமிப்பும் ஏற்பட்டது.

அந்தக் குறும்படமும் அதற்கான விமர்சனமும் அடுத்த பாகத்தில்...

விமர்சனத்தை எழுதியது நான் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்:)!

(அடுத்த பாகத்துடன் நிறைவுறும்)

நாளை நமதே... - பள்ளி மேடை

முதல் முதலில் ஏறிய பள்ளி மேடை நெல்லை சங்கீத சபாவில் ‘நர்சரி’ (எல்கேஜி) வகுப்புப் படிக்கும் போது. குறி சொல்லும் பாடல் ஒன்று. எனக்குப் பெரிய வேலையில்லை. ‘தேமே’ எனக் கையை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்:)! ஆனாலும் பாருங்க, மேடைப்பயம் துளியேனும் இருக்கா என.

#

அடுத்து இரண்டாம் வகுப்பில் இருக்கையில் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ. பள்ளிக்கு விடுமுறை. ஆனால் நடனத்தில் சேர்ந்திருந்த சிறுமியர் நாங்கள் மட்டும் 5ஆம் வகுப்பு வரைக்கான சின்ன (லயோலா) கான்வென்டிலிருந்து ‘பெர்ரிய’(இக்னேஷியஸ்) கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதே ஒரு பிக்னிக் போலிருந்தது. அங்கே இரண்டு முறை ஒத்திகை முடிந்ததும் எல்லோருக்கும் மேக் அப் போட்டு விட்டார்கள். பிறகு அருகிலிருந்த வ.உ.சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நடனம் தொடங்கும் முன் வந்து அப்பா என்னை எடுத்த படமே இது:

#

நான்தான் ராதை என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். ‘தேமே’ லெவலில் இருந்துக் கொஞ்சம் கையைக் காலை ஆட்டத் தெரிந்ததால் ராதையின் தோழிகளுள் ஒருவராக ஸைடில் ஆடும் கூட்டத்தில் இருந்தேன். படத்துக்கு நல்லாயிருக்குமே எனக் கிருஷ்ணருடன் நிற்க வைத்து எடுக்கப்பட்டது!

ந்தாம் வகுப்பில் கொஞ்சம் முன்னேற்றம். க்ரூப் டான்ஸில் முதல் வரிசையில். சந்தோஷமாக இருந்தது ‘நல்லா ஆடுறோம் போலயே’ என்று(உண்மைக் காரணம் இரண்டு வருடம் கழித்துப் புரிந்தது). “லல்லி, லில்லி, ஜிம்மி, ஜிக்கி, லூசி, ரோஸி, ராணி’ என நாய்க்குட்டிகளை அழைக்கும் பாடலின் இந்த முதல்வரி மட்டுமே இப்போது நினைவில் உள்ளது. அதன் பின் அப்பாடலை வாழ்நாளில் கேட்டதேயில்லை. நடனத்துக்காகப் பத்து பேருக்கும் ஒரே மாதிரி மஞ்சளில் பெரிய பெரிய பூக்கள் போட்ட கவுன் தைத்திருந்தார்கள். 20 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள்.

அதே வருடம் நான் நடித்த நாடகம் திருவிளையாடல். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பையும் ரோஸ், லில்லி, லோட்டஸ், ஜாஸ்மின் என நான்கு க்ரூப்களாகப் பிரித்திருப்பார்கள். போட்டிகள் எல்லாமே இந்த க்ரூப்புகளுக்குள்ளேயேதான் நடக்கும். நான்காம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை ஒவ்வொரு க்ரூப்பும் ஓரணியாய் திரளும். அந்த வருடம் நாடகப் போட்டி.

ரோஸ் அணியின் தேர்வு ‘திருவிளையாடல்’. ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் மலையேறும் முருகனாக எனக்கு வேடம். ஜிலுஜிலு பட்டுடை அணிந்த முருகனை அப்படியே ரீப்ளேஸ் செய்யணும் காவி உடையணிந்த முருகன். மலைமேல் ஏறிவிட்ட என்னை சமாதனப்படுத்த முடியாமல் தோற்று ஒளவை போனதும், பார்வதி வந்து “உன்னை மட்டுமா சோதித்தார். ஈசன் என்னையே சோதித்தார்” என தாட்சாயிணி கதையைக் கூறி மனதை மாற்றுவதாய் நாடகம் முடியும். “மூத்த பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை எனக் காட்டி விட்டீர்கள்” என்பதை ஒத்திகையின் போது ஈனஸ்வரத்தில் முனகினால் யாருக்குதான் கோபம் வராது?

ட்ராயிங் ‘மிஸ்’தான் டைரக்டர். சும்மவே கண்டிப்பு. சொல்லிச் சொல்லிச் சலித்து ஒருநாள் “இன்று நீ சரியாக பேசவில்லையென்றால் இவள்தான் முருகன்” என பி செக்‌ஷன் செளமினியைக் கூட்டி வந்து விட்டார். சீனியர் அக்காக்கள் எல்லோரும் தனியே அழைத்துச் சென்று ‘நல்லா செய். சத்தமா சொல்லு. இல்லேன்னா நீ அவுட்டு. ட்ராமாவுல இல்லே”ன்னு பயங்காட்டி உற்சாகப்படுத்த, வந்தது வீரம். விட்ட சவுண்டில் முதல் டேக்கில் ஓக்கே சொல்லி விட்டார் டைரக்டர் மிஸ். அலெக்ஸாண்டர் நாடகம் முதல் பரிசும், நாங்கள் இரண்டாவதாயும் வந்தோம் என்றாலும் என் இந்தக் கேரக்டரை சீனியர் அக்காக்கள் மறக்கவே இல்லை. பின்னாளில் எனக்குப் பிரசவம் பார்த்த டாக்டரின் மகள் அப்போது 10ஆம் வகுப்பில் இருந்தார். பிரசவத்துக்கு அம்மா வீடு வந்து நான் செக் அப்புக்காக டாக்டர் அறையில் நுழைந்த போது தன் அம்மாவுடன் இளம் மருத்துவராக அமர்ந்திருந்தவர் “அடடே நீயா, வா முருகா வா” என்றார்!

தே போல மறக்க முடியாத நடனமாக ஆறாம் வகுப்பில் ஆடிய நாளை நமதே படத்தின் ஃப்ளாஷ் பேக் பாடலாகிய ‘அன்பு மலர்களே’ பாடல். அதில் கடைக்குட்டி பாடுவதாக இரண்டு வரி குழந்தைக் குரலில் வரும். ஆரஞ்சில் வெள்ளைக் கட்டம் போட்ட பெல்பாட்டம் வாங்கப்பட்டது. அதில் இருந்த கஃப் கை நான் பையனாகத் தோன்ற வேண்டுமென்பதால் ரப்பர் பேண்ட் போட்டு அமுக்கப் பட்டது. குழந்தைகளாக நாங்க ஒரு மூணுபேர், அப்பா அம்மாவாக ஆடிய சீனியர் அக்காக்களுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு படத்தில் வருவது போலவே சுற்றிச் சுற்றி ஆடினோம். சும்மா எனது அந்த ரெண்டு வரி குழந்தைக்குரல் வாயசைப்புக்கு நல்ல கைதட்டல். வருடங்கள் கடந்து என் மகனுக்கு ஆறேழு வயதாக இருக்கையில் பெங்களூர் டு சென்னை லால்பாக் சேர்காரில் போய்க் கொண்டிருந்தேன். ‘ஹலோ நாளை நமதே, என்னைத் தெரியுதா?” என்றார் எதிர் சீட்டிலிருந்து ஒரு சீனியர் அக்கா.

அப்புறம் ஏழாம் வகுப்பில் மியூசிக் மட்டுமே இருக்கிற வெல்கம் டான்ஸில் இரண்டு முறை முதல் வரிசையில் நிற்க வைத்த போதுதான் புரிந்தது, குட்டையாய் இருப்பவரை முன்னால் போடுவார்களென:)! அதே வருடம் ஒரு ஹிந்தி மற்றும் மலையாளப்பாட்டுக்கும் ஆடினேன். பிறகு நடனத்தில் சேரும் விருப்பம் போய் விட்டது. ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் நழுவி விடலானேன்.

ல்லூரியில் மேடை அனுபவம் கவியரங்கங்களாயின. (தமிழாசிரியைகள் மாறிமாறி ஒவ்வொரு வருடமும் தரமுயன்ற நாடக வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்தேன்). சுற்றுலாவுக்கு அனுப்பத் தயங்கும் அம்மா எந்த இண்டர் காலேஜ் போட்டி நிகழ்வுகளுக்கும் அனுப்பத் தயங்கியதில்லை. சதக் அப்துல்லா கல்லூரி கவியரங்கம், சேவியர்ஸ் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகள் நடத்திய ஆன் தி ஸ்பாட் கதை, கவிதை போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. பெரும்பாலும் சமூகம் சார்ந்தவைகளாகவே எழுதி வந்தேன்.

ஒருமுறை எங்கள் கல்லூரியில் அடுத்த நிகழ்ச்சி தயாராகச் சற்றுத் தாமதமாகவே முதல் பரிசு பெற்ற என் சிறுகதையைக் கையில் கொடுத்துத் திடுமென மைக் முன் தள்ளி விட்டு விட்டார் தமிழாசிரியை, இடைப்பட்ட நேரத்தை நிரப்ப. வேறு வழியின்றி சுதாகரித்துக் கொண்டு கதையை வாசிக்க ஆரம்பித்ததும் சளசளவென அளவளாவிக் கொண்டிருந்த அரங்கு அப்படியே ஊசி விழுந்தால் கேட்கும் அமைதிக்கு வந்து விட்டிருந்தது. இலங்கை வானொலியில் சிறுகதைகளைக் கேட்டு ரசித்த அனுபவமே அப்போது கை கொடுத்தது.

டிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்று. முக்கியமாகச் சொல்ல வந்த இயக்கம் பற்றிப் பார்ப்போம். மீண்டும் பள்ளிப் பருவத்துக்கு வருகிறேன். வீட்டில் என்னுடைய கொரியோகிராஃபிக்கு தங்கைகள் ஆடிய நடனங்கள் (முற்றத்து ‘மணவட’ மற்றும் பாட்டாலையிலிருந்த தாத்தாவின் தேக்குக் கட்டிலே மேடை) எப்போதும் விருந்தினரால் பாராட்டப்பட்டது அன்பினால் மட்டுமே எனப் புரிய வராத வயது அது.

ஆறாம் வகுப்பில் அதே வருடம் நான் ஆடிய ‘அன்பு மலர்களே’ பாடலையே இன்டர் வகுப்புப் போட்டிக்கு எடுத்துக் கொண்டோம். நடன அமைப்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள் தோழியர் என் மேடை அனுபவத்தால். குடும்பப் பாட்டாக இல்லாமல் நடுவில் ஒரு பெண் ஆட இரண்டு பக்கமும் மூன்று மூன்று பேர் ஆடும் குழுநடனமென முடிவாயிற்று. ஓபனிங் சீன். நடுவில் ஆடும் சிறுமி குனிந்து அமர்ந்திருக்க, மற்றவர் சுற்றி அமர்ந்து மொட்டு போல மூடியிருக்க “அன்பு மலர்களே” ஒலிக்கையில் மொட்டு விரிந்து, பாடியபடியே நாயகி வெளியே வரவேண்டும்.

நிச்சயம் இந்தக் காட்சிக்கு நல்ல கைதட்டல் கிடைக்குமென்றெல்லாம் பேசிக் கொண்டோம். ஒத்திகைக்கும் ஆர்வமாக ஒத்துழைத்தார்கள். பள்ளிக்கு எதிர் வரிசையில் இருந்த தோழியின் வீட்டுக்குக் கும்பலாகப் போய் தினம் ரெகார்ட் ப்ளேயர் எடுப்பதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையாயிற்று. நிகழ்ச்சிக்கு முன் தினம் மாலை வகுப்புத்தோழியின் அக்காவைக் கருத்துக்காக அழைத்திருந்தோம். அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.

த்தோடு என் கொரியோக்ராஃபி ஆசைக்கு வைத்தேன் முற்றுப்புள்ளி (எந்த விஷயத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து முயன்றிடும் உந்ததல் இருக்கும் என்பதை இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது). முதல் காட்சியும் நீக்கப்பட்டது. “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”ன்னு இருந்தது ஏழாம் வகுப்பில் தேடி வந்த டைரக்டர் போஸ்ட்.

ரோஸ், ஜாஸ்மின் ஓரணியாக; லில்லி, லோடஸ் ஓரணியாகப் பிரிந்து இன்டர் க்ரூப் போட்டி. தமிழ் பாடத்தில் வந்த குமண வள்ளல் நாடகத்தையே இரண்டு க்ரூப்பும் போட வேண்டும். பாடத்தின் நீட்சியான க்ளைமேக்ஸையும் நாடகத்தில் சேர்க்க வேண்டும். தன்னிடம் நாட்டைக் கொடுத்து விட்டு காடு சென்ற விட்ட வள்ளலைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்கணும் தம்பி (இதில் தகவல் பிழை இருந்தால் பொறுத்தருள்க, இப்படிதான் ஞாபகம்). சின்ன நோட்டுப் புத்தகத்துக்கு இரண்டு பக்கம் வருமாறு மாங்கு மாங்கென வசனம் எழுதியிருந்தேன் தம்பிக்கும் அண்ணனுக்குமான வசனங்களை.

#
இதுல வசந்தலக்ஷ்மி, சித்ரா, லதா, ஜாக்குலின் எல்லாரும் இருக்காங்க.
மேலிருந்து இரண்டாவது வரிசையில்
இடமிருந்து இரண்டாவதாக நானும்..


குமணராக நடித்தத் தோழி லதா ஒத்திகையின் போது செய்த பிகு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்குப் பிடிக்காத ஜாக்குலின் ஒத்திகை ஸ்பாட்டில் இருந்தால் நடிக்க மாட்டேன் எனச் சொல்ல, எல்லோருக்கும் காஸ்ட்யூம் ஏற்பாடு செய்திருந்த ஜாக்குலின் வெளிநடப்புச் செய்ய, கண்ணை கட்டி விட்டது எனக்கு.

நாடக நாளும் வந்தது. ஆடிட்டோரியத்தில் 7-ஏ பிள்ளைகள் மட்டும் ஒரு மாலையில் கூடியிருக்க, க்ளாஸ் டீச்சர் ‘கோதை ஆண்டாள் மிஸ்’ஸுடன், சி செக்‌ஷன் மிஸ் நடுவராக வந்திருந்தார். நீண்ட வசனக் கடைசிக் காட்சியுடன் எங்கள் நாடகம் முடியக் கிளம்பிய கைத்தட்டல் நிம்மதியைத் தந்தது.. அதில் எண்பத்து இரண்டே முக்கால் சதவிகிதச் சத்தம் எங்கள் க்ருப் பிள்ளைகள் எழுப்பியது எனத் தெரிந்திருந்தாலும்.

லோட்டஸ் - லில்லி கூட்டணி நாடகத்தை ஆரம்பித்தது. க்ளைமேக்ஸும் வந்தது. குட்டை வசந்த லக்ஷ்மிதான் குமணர். தம்பியாக நடித்த நெடுநெடு உயரச் சித்ரா பட்டுத் துணி தரையில் புரள “அண்ணாஆஆஆ...” என ஓடி வந்து குமணரின் காலில் விழுந்தார். தொட்டுத் தூக்கிய வள்ளல் உணர்ச்சி பொங்கத் “தம்பீஈஈஈ..” எனத் தழுவிக் கொண்டார். சுபம். கைதட்டல் ஆடிட்டோரியத்தின் கூரையைப் பிளந்தது. திரும்பிப் பார்த்தால் எங்கள் ரோஸ் - ஜாஸ்மின் க்ரூப் பிள்ளைகள்தான் தம்மை மறந்து வாயெல்லாம் பல்லாக அதிக உற்சாகத்துடன் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

வியாழன், 24 நவம்பர், 2011

இவர்களுக்குப் பூங்கொத்து

ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் பெங்களூர் ஜனாகிரஹாவின் முக்கிய நோக்கம் ஆர்வமுள்ள பொதுமக்களை இணைத்துக் கொண்டு ஜனநாயத்தைப் பலபடுத்துவதாகும். வறுமைக் கோட்டில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து பழகிப் புரிந்து தீர்வுக்காக, அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவதற்காக மாநில அரசை அணுகிப் போராடுவதாகும்.

படிப்பை முடித்ததும் அயல்நாட்டுக்குப் பறக்கவோ அல்லது நல்ல சம்பளத்துடனான வேலைகளில் அமரவோ ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில், அயல்நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு பெற்ற கல்வியை நாட்டில் வறுமையில் உழலும் மக்களின் நலனுக்காகச் செலவிட ஜனாகிரஹா அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் யுவதிகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே.

இவர்கள் எல்லோருக்குமே வயது 25-லிருந்து 30-க்குள். பேச்சில் பக்குவமும், எடுத்த முடிவில் தெளிவுடனுமாக இருக்கிறார்கள். மானஸ்வினி ராவ் கணினித் துறையில் பட்டம் பெற்று பெர்க்லே பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்த பின் இப்போது கர்நாடகத்தின் பிடார் மாவட்டத்தில் ஏழைகளுடன் சேர்ந்து உழைத்து வருகிறார். “இளங்கலை முடித்ததும் எனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வந்தன. ஏழைகளைப் பற்றி எவ்வளவோ வாசித்து அறிகிறோம், கேள்விப்படுகிறோமே தவிர அவர்களுக்காக எப்படி உதவுவது என்கிற புரிதல் இல்லாமலே இருந்தது. அப்போதுதான் ஜனாகிராஹாவில் இணைந்து ஒரு புதிய உலகைக் கண்டு கொண்டேன். பிறகு அது சம்பந்தமான ஆய்வையே மேற்கொள்ள விரும்பி ‘பப்ளிக் பாலிஸி’ படித்து முடித்து இந்தியா திரும்பி இந்த கிராமத்தில் வாழ்கிறேன்” எனப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவரை போலவே பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் படித்து இந்தியா திரும்பிய ஜனாகிரஹாவில் இணைந்தவர்கள் சீரத் கவுர், நேஹா ஷர்மா, ஜானகி கிபே. இவர்கள் ஜே-பால்(J-Pal) ஆய்வாளர்கள் என அறியப்படுகிறார்கள். ஹார்வர்டில் பொருளாதாரம் கற்ற 26 வயது ஜானகி “ எல்லா ஹார்வர்ட் பட்டதாரிகளைப் போலவே முதலில் நானும் முதலீட்டு வங்கியொன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். எப்போதுமே ‘ஏன் இந்த உலகில் சிலருக்கு மட்டும் எல்லாமே நல்லபடியாக அமைகிறது. சிலருக்கு அப்படி அமைவதில்லை’ என்கிற கேள்வி என்னுள் சுழன்று கொண்டேயிருந்தது. எங்கோ சில இழைகள் விட்டுப் போய் சேர்க்கப்பட காத்திருப்பதாய் உணர்ந்தேன். அப்போதுதான் என் வேலையைத் துறந்து விட்டு ஜே-பாலில் இணைந்து இந்தியா திரும்பி கிராமங்களில் வாழலானேன்.” என்கிறார்.

இவர்கள் ஏதோ குறுகியகால ஆய்வுக்காக இப்பணியில் ஈடுபடுவதாக எண்ணிவிட வேண்டாம். படிப்பை முடித்து, சிலர் பார்த்த வேலையைத் துறந்து இவ்வமைப்பில் இணைந்தவர்கள். கிராமங்களில் வறுமைக்கோட்டில் இருப்போருடன் வாழ்ந்து ஒரு முழுமையான ஆய்வுடனான கோரிக்கை மனுக்களை அரசுக்குச் சமர்ப்பித்து, அரசு அதை நடைமுறைப்படுத்தும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்திலேயே தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஓவ்வொருவரும் தங்களைச் சுற்றியிருக்கும் வட்டத்தை விரிவாக்கி அதிலும் இன்னும் பலருக்கு இடம் கொடுத்தபடி நகர்கிறார்கள். இருதினம் முன்னே பாராட்டியிருக்கிறது இவர்களை ஒரு பத்திரிகை. என் பூங்கொத்துக்களும்.

ஜானகி சொல்லியிருப்பது போல நம்மைச் சுற்றி சரிவர எதுவும் அமையப் பெறாதவருக்காக நமது பங்காக என்ன செய்கிறோம்? நாட்டில் அது சரியில்லை இது சரியில்லை எனப் பதிவுகளும், ட்வீட்டுகளும், முகப்புத்தகக் குறிப்புகளும் ஒரு செவ்வகக் கணினித் திரையில் எழுதி முடிப்பதும், அல்லது நண்பர்களிடம் அங்கலாய்ப்பதும் ஆத்திரப்படுவதுமாய் மட்டுமே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா? அரசுக்குக் கட்டும் வரியோடு நம் பங்கு முடிந்ததா? அரசு மட்டுமே வறுமை ஒழிப்புக்குப் பாடுபட வேண்டுமென்பதில்லை, குடிமக்களாகியத் தமக்கும் பங்கு உள்ளதெனக் காட்டியிருக்கும் இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.

*** *** ***

வாழ்வை வளமாக்கும் புத்தகங்கள்

என்னுடைய வாசிப்பு அத்தனை விஸ்தாரமானதல்ல. சிறுவயதிலிருந்து இப்போதைய அனுபவம் வரை இந்தக் பதிவில் (“கட்டிப் போட்ட கதைகள்”) சொல்லிவிட்டுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக வாசிப்பு சற்றே அதிகரித்திருக்கிறது எனச் சொல்லலாம். என் வீட்டிலிருக்கும் சுமார் 1800 புத்தகங்களில் எனது சேகரிப்பு 200 வரைதான் இருக்கும். கணவரின் சேகரிப்பான மீதப் புத்தகங்களில் 90 சதவிகிதம் ஆங்கிலமே. இன்ன வகை(Subject)தான் என்றில்லாமல் பரவலாக பலவற்றைப் பற்றியும் அறியும் தாகமுடைய சேகரிப்பாக அவை. புனைவுகள் வெகு சொற்பமே. ஆரம்பக் காலங்களில் புத்தகத்துக்காக ஒதுக்கப்படும் தொகையைப் பார்த்து முணுமுணுத்ததுண்டு நான்! பின்னர் எனக்கே அதன் பயனில் ஒரு தெளிவு ஏற்பட்டு எதுவும் சொல்லுவதில்லை.

பெங்களூரைப் பொறுத்தவரை கங்காராம்ஸ், சப்னா, ஹிங்கிங்பாதம்ஸ், ஸ்ட்ராண்ட், ஷங்கர்ஸ் புக் ஹவுஸ் போன்றன ரொம்பகாலமாக இருப்பவை. கடந்த பத்து வருடங்களில் வந்தவையாக க்ராஸ்வொர்ட், லேண்ட்மார்க் மற்றும் சமீபத்தில் ரிலையன்ஸ் டைம் அவுட். மாதந்தோறும் மேற்சொன்ன கடைகளில் குறைந்தது ஏழெட்டு புத்தகங்களாக வாங்குவார் கணவர். இவரது இந்த தொடர் வாசிப்பில் எனக்கு வியப்பும் உண்டு. சலிப்பும் உண்டு. வாங்கிய வேகத்திலேயே அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தினம் பயணிக்கும் வேளைகளில், வாரயிறுதிகளில் என வாசித்து முடித்து விடுவது வியப்பு. என்னைப் போல வாங்கிப் ‘பிறகு படிக்கலாம்’ என சேர்த்துக் கொண்டே போவதில்லை:)! தவிக்கமுடியாமல் எழும் சலிப்பு அவற்றை இடம்பார்த்து வைப்பதில்.

#

இருபது வருட சேகரிப்பு. ஐந்து புத்தக அலமாரிகள். அதில் வீட்டிலிருந்த புத்தகங்களின் உயர அகலம் பார்த்து தேவைக்கேற்ப நானே வடிவமைத்து ஒரே மாதிரியான உயரங்களில் செய்து கொண்டவை நான்கு. இதனால் சின்ன புத்தகங்கள் சில தட்டுகளில் இரண்டு வரிசைகளில் வைக்க முடிகிறது. வாசித்தவற்றையே திரும்ப வாசிக்கும் அல்லது திடீரெனக் குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துப் புரட்டும் பழக்கம் உண்டு. ஆரம்பத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதை பட்டியல் படுத்த ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்டேன். 95-ல் கணினி வந்த போது எளிதாக இருக்குமென அதிலும் முயற்சித்து விட்டு விட்டேன். இப்போது ஐபேட் அந்த வேலையை சுலபமாக்கி விட்டுள்ளது.

நூலகங்களில் ISBN எண்ணை ஸ்கேன் வைத்து பட்டியல் படுத்துவது பல காலமாக இருந்து வரும் முறையே. அந்த வசதியை ஐபேடின் app ஆகிய iBookShelf நமக்குத் தருகிறது. ஐபேடின் கேமராவே ஸ்கேனாகப் பயன்பட அனைத்துப் புத்தகங்களையும் நொடியில் பட்டியல் படுத்துவதோடு அதன் விவரங்களையும்(Read Book Synopsis) தருகிறது. அதுமட்டுமின்றி Goodreads Reviews தளத்திலிருந்து அப்புத்தகத்துக்காக எழுதப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் கொண்டு வந்து கொடுக்கிறது. தமிழ் புத்தகங்களில் முயன்றதில் விகடன் மற்றும் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்கள் சேமிப்பாகி ஓரிரு வரிகளில் விவரங்களையும் காட்டுகிறது iBookShelf. மற்ற தமிழ் பதிப்பகப் புத்தகங்களை இன்னும் முயன்று பார்க்கவில்லை.

'Kindle' வாங்கிய புதிதில் ‘இனி இடம் அடைக்காமல் புத்தக வாசிப்புத் தொடரும்’ என்றே மகிழ்ந்திருந்தேன். ஆனால் அங்கொரு பக்கம் அமேசானில் வாங்குவதோடு எப்போதும் வாங்குவது தொடரவே செய்கிறது. கின்டிலும், ஐபேடும் பலபுத்தகங்களைக் கையடக்கமாக வைத்து வாசிக்க, குறிப்பாகப் பயணங்களின் போது சவுகரியமாக இருப்பது தாண்டி புத்தகங்களுக்கு மாற்று எனக் கொள்ள முடியாதபடியாக.., புத்தகத்தில் வாசிக்கும் நிறைவைத் தராதவையாக.. என்பதே கணவர் உட்பட நான் கேட்டறிந்த பலரின் கூற்றும்.

# பிறகு வாசிக்கலாமென..

எனது மேசையில்..:(

பெங்களூர் மக்களுக்கு வாசிப்பை வளர்த்ததில் மிகப் பெரிய பங்கு ஸ்ட்ராண்ட் புக் ஸ்டாலுக்கே என்றால் இந்த ஊர்க்காரர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அவர்கள் வருடம் தோறும் நடத்தும் புத்தக விழாவுக்கு கூட்டம் அலைமோதும். குழந்தைகள் பெரியவர்கள் கூடை கூடையாகப் புத்தகங்களை அள்ளிச் செல்லுவார்கள் சகாய விலையில். எல்லாமே ஆங்கிலம்தான். வழக்கமான பெங்களூர் புத்தக கண்காட்சியை விடவும் இந்த ஒரு சிறிய கடை பெரிய அரங்கினை வாடகைக்குக்கு எடுத்து வருடம் இருமுறை நடத்தும் கண்காட்சிக்கு அதிக கூட்டம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக கணவரும் சரி, மகனும் சரி தங்களைப் பற்றி நான் வலைப்பூவில் பகிர்வதை விரும்புவதில்லை. இருப்பினும் இது பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றியதாகையால் பகிர்ந்திடும் எண்ணம் பிறந்தது (புத்தகக் கண்காட்சிப் பதிவின் நீட்சியாகவும்).

மகன் எட்டாம் வகுப்பில் Best Reader Award வாங்கியிருக்கிறான் பள்ளியில். சக மாணவர் அனைவரும் அவனையே தங்களுக்குப் புத்தகம் தேர்ந்தெடுக்கச் சொல்லுவதாக நூலக மேற்பார்வையாளர் ஒருமுறை மகிழ்வுடன் குறிப்பிட்டார். தந்தையைப் போலவே fast reader. பதினோராம் வகுப்பில் படிப்புச் சுமை கூடிய வேளையில் வாசிப்பு குறைய ஆரம்பித்து இப்போது நின்றே விட்டுள்ளது. ஒருவயதுக்கு மேல் எதையும் நாம் பிள்ளைகளிடம் திணிப்பது சரியல்ல என்பது என் எண்ணமாக. விட்டதை விரும்பி அவனே தொடர்வான் எனும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது என் தங்கையின் மகளுக்குப் பிடித்தமான விஷயமாக வாசிப்பு இருப்பதும், வாசிக்கிற புத்தகங்களுக்கு உடனுக்குடன் அருமையான விமர்சனங்களை எழுதி வருவதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவளது(எட்டு வயது) ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவள் விரும்பும் புத்தகங்களைப் பரிசளிப்பதே என் பழக்கம்.

ஆக, ஆரம்பத்தில் நான் இருந்தது போல நீங்களும் ஒருவேளை புத்தகங்களுக்குச் செலவழிப்பது வீண் எனும் எண்ணம் கொண்டிருப்பீர்களானால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பகிர்வு. அவரவரால் இயன்ற அளவு ஒரு தொகையை புத்தகங்களுக்கு ஒதுக்குவது அவசியமானதே. அவற்றுக்கு நாம் செய்யும் செலவு நம் வாழ்வை வளமாக்கச் செய்கிற முதலீடே.

இப்பதிவுக்காக வற்புறுத்தி, சில கேள்விகளின் மூலமாகக் கணவரிடம் பெற்ற கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு:

  • உலகை மற்றும் வாழ்வைப் பற்றியதான பார்வை முழுமை பெற புத்தகங்கள் உதவுகின்றன. ஒரே வகையான சித்தாந்தத்தையோ ஒரே வகையான விஷயங்களையோ ஆழமாகப் படிக்கப் படிக்க பார்வை குறுகிக் கொண்டே போகுமே தவிர விரிவடைவதில்லை. எல்லா வகைப் புத்தகங்களும் படிக்கையிலேயே அது சமமாகக் கிடைக்கும்.

  • சில புத்தகங்கள் தகவல்களை மட்டுமே தருவதாக இருந்தால், சில தகவல்களோடு சிந்தனைகளைத் தூண்டுவதாக, சிந்தனைகளின் விளைவாகத் தெளிவைத் தருவதாக அமைந்து விரிந்த பார்வையை அளிக்கின்றன.

  • நாம் வாழ்க்கையைக் கடக்கும் போது நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்று அறியாமலே கடப்பவரும் உண்டு. அறிய விரும்பி, அதனை அலசி ஆய்ந்து அனுபவத்தை ஆசானாக எடுத்துக் கொள்பவரும் உண்டு. ஆனால் நம் ஒருவருடைய அனுபவமும் அதைச் சார்ந்த எண்ணமும் மட்டுமே இந்த வாழ்வைப் பற்றியதான புரிதலுக்குப் போதுமானதாகிறதா? இல்லை என்கிற தேடலுடன் இருப்பவர்களுக்கு பலருடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் ஆசான்களாகப் புத்தகங்கள் விளங்குகின்றன.

*****

புதன், 23 நவம்பர், 2011

டால்ஃபின் காட்சி - சிங்கப்பூர் (பாகம் 5)

சென்டோசா தீவின் டால்ஃபின் காட்சியும் பெரிய அளவில் சிலாகிக்கப்படும் ஒன்று. அதற்கென ஆழமற்ற பெரிய குளத்துடனான அரங்கு. அதி புத்திசாலிகளாகக் கொண்டாடப்படும் இண்டோ-பசிபிக் பிங்க் டால்ஃபின்கள் இரண்டு உள்ளன. குச்சியை நீட்டியதும் இரண்டு முறை உயரமாய் துள்ளிக் குதித்தது ஒன்று. ஒரேயொரு முறை பெரிய உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கி மல்லாக்கக் நீருக்குள் விழுந்தது மற்றொன்று. பிறகு சமர்த்தாகப் பயிற்சியாளர்களிடம் மீன் வாங்கிச் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக நீந்தியபடி இருந்தன.

# 1. சின்ன மீனைப்போட்டு பெரிய மீன்..?

# 2.

நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்..

அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னருக்கான படத் தேர்வுகள் குறித்து, சில இதழ்களில் வெளியான படங்களுடனேயே விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன் இங்கு. குழந்தைகள் தினச் சிறப்புப் படமாக 14 நவம்பர் அதீதத்தில் நான் தேர்வு செய்த Camera கிறுக்கன் அவர்களின் படமும் அதற்கான என் தலைப்புமே இது..

நள்ளிரவில் பெற்றோம். இன்னும்...
படம் வெளியான மறுநாள் அதீதம் தளத்தில் சகோதரி ஸ்ரீவிஜி என்பவர் அளித்திருந்த கருத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி..,

Tue, 15/11/2011 - 07:00
குழந்தைகளாக இருக்கும் போது வேலைக்குச் செல்வதென்பது மிக விருப்பமான ஒன்று, பரீட்சை இல்லை, கட்டுப்பாடு என்கிற ரோதனை இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, டியூஷன் இல்லை...! :) அப்பா அம்மா வேர்வையுடன் அழுக்கு ஆடையில் வீட்டிற்கு வரும்போது, அதே போல் நாமும் எப்போது வேலைக்குச்செல்வோம் என ஏங்கியிருந்திருப்போம் அல்லவா! அதற்காகவே என்னனுடைய 13 வயதில், நான் ஒரு சீனன் நடத்திய ‘கிச்சாப்’ (சீன உணவுகளில் தெளிக்கப்படும் ஒரு திரவம்) கம்பெனிக்கு வேலைக்குப்போனேன் பள்ளி விடுமுறையில், (அப்பாவிற்குத்தெரியாது, அம்மாவிடம் டிமிக்கி கொடுத்து, ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காமல் ஓடிவந்துட்டேன். கிச்சாப் போத்தல் கழுவும் வேலை, கடினமான வேலை, சீனன் தாறுமாறாகதிட்டுவான். போத்தல் கழுவ ஒரு சிறிய கருவி இருக்கும் (கடையில் தேங்காய் துருவ வைத்திருக்கும் மிஷின் போல்) அதில் ஒரு பிரஷ் நீட்டிக்கொண்டு இருக்கு, அதில் நீர் வந்துக்கொண்டு அது சுற்றிக்கொண்டே இருக்கும், அப்போது அந்த போத்தலை அதனுள் நுழைக்கவேண்டும், சரியான கழுவினால் தப்பித்தோம், இல்லையேல் அந்த கண்ணாடி போத்தல் பாதியிலே உடைந்து கைகளைப் பதம் பார்க்கும்.. இன்னமும் அதன் காயங்கள் என் விரல்களில் உண்டு.. அப்பாவை விட சித்தப்பா அடிக்கவே வந்து விட்டார் இந்த விவரம் வீட்டிற்கு தெரிந்த போது. அவ்வளவு அக்கறை பிள்ளைகள் மீது. இது விரும்பிச்சென்று செய்துப் பார்த்ததால்,வலி பட்டவுடன் ஓடிவந்தோம். ஆனால் பல குழந்தைகள்??? காலை வைத்துவிட்டு வேதனைகளை அனுபவித்த வண்ணமாக, வெளியே சொல்லமுடியாமல், பாவம் குடும்ப சூழல்???? இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவே என் பிராத்தனை. (மேலே உள்ள படம் என்ன சொல்கிறதுன்னு தெரியல, ஆனால் பசங்க ஃசைக்கிள் கடையில், வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பதைபோல் இருக்கு பள்ளிக்குச்செல்லாமல், அதனால்தான் உடனே பகிர்ந்தேன் என் மனவூஞ்சலில் எழுந்த இந்தப் பகிர்வை...) படத்தை தப்பாக நோக்கி கருத்துரைத்திருந்தால், பொருத்தருள்க.

சரியான புரிதலுடனேதான் தம் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் கேள்விக்கு என்ன பதிலுண்டு நம்மிடம், படத்துக்கான தலைப்பை ‘விடியவேயில்லை’ எனப் பூர்த்தி செய்வது தவிர்த்து???
***

செப்டம்பர் II-அதீதத்துக்கு தேர்வு செய்த ஜீவா சுப்பிரமணியம் அவர்களது படம் “கரங்கள்” இன்னொரு விடையற்ற கேள்வியாக....

துடிப்பான உதவிக் கரங்களா?
படிப்பைத் துறந்து
உழைக்க வந்த பிஞ்சுக் கரங்களா...???
***


14 நவம்பர் 2011. நாடெங்கிலும் பள்ளிகள் தோறும் குழந்தைகள் தினக் கொண்டாட்டம். ஆனால் கர்நாடகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் அன்றைய தினத்தைக் கையிலெடுத்துக் கொண்டது தங்கள் அடிப்படை உரிமைக்காக. ஒரு நாடு அதன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கவேண்டியது தலையாய கடமை. எத்தனை மாநில அரசுகள் அதைச் சரிவர செய்கின்றன? மாநிலத் தலைநகரங்கள் ஐடி வளர்ச்சியில் முன்னிலை வகிக்க வேண்டுமெனக் படுகிற கவலையில் பத்து சதவிகிதமேனும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா என்று கவனிக்கின்றனவா?

பெருநகரின் ஒரு மூலையிலிருந்து ஒரு மூலைக்குச் செல்லப் பலப் பலகோடிகளைச் செலவழித்து மெட்ரோ, போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கப் பாலங்கள். இந்தச் செலவில் ஆயிரத்தில் ஒருபங்கு ஆகாது ஒரு கிராமத்துக்கு அரசு கூட ஒரு பேருந்துவை இயக்குவதால். சரியான போக்குவரத்து வசதி இல்லாததாலே சுற்றுவட்டக் கிராமங்களின் பல சிறுவர் சிறுமியர் மேற்கொண்டு படிப்பைத் தொடர இயலாமல் போய் விடுகிறார்கள்.

இந்தப் பிரச்சனையை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவே குழந்தைகள் தினத்தில் தங்கள் உரிமையைக் கோரி போராட்டத்தைப் பரவலாக மேற்கொண்டார்கள் குழந்தைகள். ரெய்ச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அக்கம்மா பீரப்பா எனும் பதினைந்து வயதுச் சிறுமி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பஞ்சாயத்துத் தலைவரிடம் தங்கள் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி கொண்டுவர மனுக் கொடுத்திருக்கிறார். அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 10 அல்லது 15 பேராவது எட்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். தானும் அவர்களுள் ஒருவரெனச் சொல்லும் அக்கம்மா, படிப்பைத் தாங்கள் தொடரவிரும்பினால் பதினைந்து கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டுமென்றும், அதற்கு நாளொன்றுக்கு ரூ 30 செலவாகுமெனவும், தினக்கூலிக்குச் செல்லும் தன் தாயாரை அப்படித் தன்னால் சிரமப் படுத்த முடியாதென்றும் சொல்லுகிறார்.

ஊருக்கு ஒரே ஒரு பேருந்தே இயக்கப்படுவதாயும், அதுவும் மழைக்காலத்தில் வருவதில்லையெனவும், தன்னோடு எட்டாவது தேறிய 15 பேரில் ஐந்து பேர் மட்டுமே படிப்பைத் தொடர முடிந்ததாகவும், இதுவே ஒவ்வொரு வருடமும் நடப்பதாக வருத்தப்படுகிறார். “எங்கள் ஊரிலேயே மேல்நிலைப்பள்ளி வந்தால் நாங்கள் எல்லோருமே படிக்கலாமல்லவா?” எனக் கண்ணில் நம்பிக்கை மிளிர பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்த இவரது மனுவை பஞ்சாயத்து பரிசீலிக்குமா?

இது போல் பிடார் மாவட்டம், யடியூர் கன்ஞ்ஹல்லி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது ஹஸனம்மா ஜம்பப்பா எப்படி தினம் 7 கிலோ மீட்டர் பயணம் செய்து படிப்பைத் தொடர வேண்டியிருந்தது தங்கள் ஊர் குழந்தைகள் என விளக்கியிருந்தார் குழந்தைகள் தினத்தன்று. இவர் அங்குள்ள குழந்தைகள் அமைப்பின் வைஸ் ப்ரெசிடண்ட். மாவட்ட நீதிபதி, மனித உரிமைக் கமிஷன் அனைவரிடமும் போராடி ஒருவாறாகக் கல்வித்துறை அதிகாரி அவர் ஊருக்கு வந்து பார்த்து ஒன்பதாம் வகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். 2012-ல் பத்தாவதும் வந்து விடும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஹசனம்மா.

இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது? இன்னும் முடியவில்லை இவ்வருடக் குழந்தைகள் தினச் சிறப்புப் பேட்டிகள்.

தேராபவியைச் சேர்ந்த பதினான்கு வயதுச் சிறுவன் அமரேஷ் கரியப்பா, தங்கள் கிராமத்துக்குப் பேருந்தைக் கொண்டுவரப் புத்தகப் பைகளோடு எப்படி மாணவர் எல்லோருமாய்ச் சாலைமறியல் செய்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டிருந்தார் 14 நவம்பர் அன்று. லோகல் செய்தித் தாள்களில் இந்தச் செய்தி இடம்பெறவும் நல்லவேளையாக அரசு பேருந்து டெப்போ நிர்வாகியே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மறுநாளிலிருந்து அவர்களின் கிராமத்துக்குப் பேருந்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தக் கிராமபுறங்களிலிருந்து ஒட்டுமொத்தமாகக் கிடைக்கின்ற வாக்குகளை வைத்தே அரசு பரிபாலனமும் நாட்டில் நடக்கிறது.

நகர்ப்புறங்களில் அரசுப்பள்ளி வசதிகள் ஓரளவு நன்றாக இருப்பினும் கூட பள்ளிப்படிப்பைத் துறப்பவர் எண்ணிக்கை அதிகமான படிதான் உள்ளது. சிறுவர்களை வேலைக்கு வைப்பது கூடாதென்கிறோம். ஆனால் குழந்தைத் தொழிலாளிகளைப் பல இடங்களில் பரவலாகப் பார்க்கமுடிகிறது. நெருங்கி விசாரிக்க முனைந்த போது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான கதை. சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.

இது ஒரு மாநிலத்தின் கதை மட்டுமல்ல. அக்கம்மா பீரப்பா, ஹஸனம்மா ஜம்பப்பா, அமரேஷ் கரியப்பா இவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தக் கிராமப்புற, நடுத்தர மற்றும் உழைக்கும் ஏழை வர்க்கக் குடும்பத்துச் சிறுவர்களின் பிரதிநிதிகளாகவேத் தெரிகிறார்கள்.

அதை உறுதிப்படுத்துவதாகவேப் பகிர்ந்த படங்களும். முதல் படம் கொல்கத்தாவிலும் இரண்டாவது வாரணாசியிலும் எடுக்கப்பட்டவை.
*** ***

செவ்வாய், 22 நவம்பர், 2011

மீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் 4)

# 1. தக தக தங்கமீன் (Parrot Fish)
செண்டோஸா தீவில் கடலுக்குக் கீழே நீளுகிறது பயணம் சுமார் 80 மீட்டர் ட்ரான்ஸ்பரெண்ட் அக்ரலிக் குகையினுள். 250 வகைகளில் 2500 கடல் வாழ் உயிரனங்களை மிக அருகாமையில் ரசிக்க முடிகிறது. மெதுவாக நகரும் தரை(moving travellator)யில் நின்றபடியே பயணிக்கலாம். சற்று நேரம் எடுத்து ரசிக்க விரும்பும் இடங்களில் வெளியேறிக் கொள்ளலாம்.

கண்ணாடியைத் தாண்டி நீரினைத் துழாவிச் சென்று கேமராவின் லென்ஸ் பதிவாக்கிய காட்சிகள் என்பது மட்டுமின்றி, அங்கிருந்த விளக்குகளின் ஒளியினால் ஏற்பட்ட பிரதிபலிப்பையும் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஓரளவு நன்றாக வந்தவை உங்கள் பார்வைக்கு.

பூக்களைப் பறிக்காதீர்கள், தயவு செய்து தொடாதீர்கள் எனும் அறிவிப்புகளைப் பார்த்திருப்பீர்கள். இங்கே “வாங்க வாங்க வந்து தொட்டுப் பாருங்க” என்றே அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் “நீருக்கு வெளிய மட்டும் தூக்கிடாதீங்க” எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

# 2


நான்கடி விட்டத்தில் தட்டையான தட்டு போன்ற அமைப்புடனும் இரண்டடிக்கு நீண்ட வாலுடனும் தொட்டியில் கிடக்கிற ரே-ray மீன்களையும் தொட்டுப் பார்த்துக் குதூகலிக்கிறார்கள் சிறுவர்களோடு பெரியவர்களும்:

#3 Ray Fish


#4
கூடவே வவ்வால் போலவும் சில மீன்கள்

ரே வகை மீன்கள் 2, 3 சென்டி மீட்டர் அளவிலும் நீந்திக் கொண்டிருந்தன வேறொரு கண்ணாடித் தொட்டிகளில்.

ஆரஞ்சு பிங்க் மஞ்சள் என விளக்கொளியில் வண்ணம் மாறி மாறி ஜொலிக்கின்றன நிறமற்ற ஜெல்லி மீன்கள்.

பெங்களூர் புத்தகத் திருவிழா 2011 - 27 நவம்பர் வரை (நேர் காணல்களுடன்)

# பத்து நாள் புத்தகத் திருவிழா


தொடங்கி விட்டது கோலாகலமாக பெங்களூரில் புத்தகக் கண்காட்சி 2011. இம்மாதம் 17ஆம் தேதி ஆரம்பித்து வருகிற ஞாயிறு, 27 நவம்பர் வரை நடக்க இருப்பதால் அது குறித்த ஒரு பகிர்வை இப்போது தருவதே சரியாக இருக்கும்.

புத்தகம் வாங்குபவர் எண்ணிக்கையும் கூட்டமும் கண்காட்சியில் அதிகரித்தாலும் தமிழ் கடைகளின் எண்ணிக்கை மட்டும் வருடத்துக்கு வருடம் குறைந்தபடியேதான் உள்ளது. ஆரம்பித்த மூன்றாவது நாள் அதிக கூட்டமில்லாத காலை பதினொரு மணியளவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன், பைக்குள் கையடக்கக் கேமரா Sony W80-வுடன்.

# நல்ல நேரம்


சென்னை போல் எல்லாப் பதிப்பகங்களும் இங்கே ஸ்டால் எடுப்பதில்லை. ஒரு கண்காட்சியையும் தவறவிடாமல் ஸ்டால் எடுப்பவர்கள் வரிசையில் காலச்சுவடு, விகடன், உயிர்மை, கிழக்குப் பதிப்பகம், திருமகள் நிலையம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்வருடமும் அவ்வாறே.

நாகர்கோவிலில் இருந்து வந்து ஸ்டால் எடுத்திருந்தனர் காலச்சுவடு பதிப்பகத்தார். இந்தமுறை கண்காட்சியின் முதல் வரிசையிலேயே, அதுவும் தமிழ் கடைகளில் முதலாவதாகவும் தங்களுக்கு இடம் கிடைத்து விட்டதால் விற்பனை எப்போதையும் விடச் சற்று அதிகமாகவே இருக்குமென நம்பிக்கை தெரிவித்தனர்.

ஒருபக்கம் ஒருநாவல் வாங்கினால் ஒன்று இலவசமென ஒரு மேசையில் அடுக்கியிருந்தார்கள். நான் ஏற்கனவே வாங்கி வாசித்து விட்டிருந்த கவிதைத் தொகுப்புகள் பலவும் அங்கிருந்தன. (இப்போதெல்லாம் கண்காட்சி வரை காத்திராமல், நல்ல புத்தகமென அறியவருபவற்றை உடனுக்குடன் ந்யூபுக் லேண்ட் மூலமாக தருவித்துக் கொள்வது வழக்கமாகி விட்டது). இணையத்தில் பெரும்பாலோர் பரிந்துரைத்திருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ வாங்கிக் கொண்டேன்.

# திரு பதிநாதன்
நாவல்களே மிக அதிகம் விற்பனையாவதாகத் தெரிவித்தார் திரு. பதிநாதன். காலச்சுவடு பின்பற்றும் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து விளக்கினார். புத்தகம் வெளிவரும் முன்னரே சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்வது. ‘கு. அழகிரிசாமி சிறுகதைகள்’ -முழுத்தொகுப்பினை இப்படி சென்ற முறை வழங்கியபோது பயனடைந்தவர்கள் பலபேர் எனக் குறிப்பிட்டார். பதிப்பகத்தின் புத்தகப்பட்டியலில் க.நா.சு அவர்களின் பரிந்துரை: “கு. அழகிரிசாமி சிறுகதைகளைச் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல “ஐயோ!’ வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது. தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம் இவர்களுடன் சேர்த்து கு. அழகிரிசாமியையும் சொல்லி இவர்கள் மூவரும் இந்தத் தலை முறையின் ‘சிறு’ சிறந்த கதாசிரியர்கள் என்று போற்ற எனக்குத் தோன்றுகிறது.

தற்போதைய முன் வெளியீட்டுத் திட்டத்தில் வர இருக்கும் புத்தகமே சோஃபியின் உலகம்:

# சலுகை விலையில்..
விருப்பமானவர் காலச்சுவடை அணுகலாம்.

# வருடம் தவறாமல் விகடன்
மதுரை மீனாக்ஷி புத்தகக் கடை விகடன் பிரசுரங்களுடன் கடை எடுத்திருந்தார்கள். கண்ணில் பட்டதுமே காலப்பெட்டகத்தை வாங்கிக் கொண்டேன், பெட்டகத்தின் கடைசி 25 வருட நிகழ்வுகள் விகடனில் வெளியானபோதே வாசித்த வகையில் அவை தரக் கூடிய சுவாரஸ்யத்துக்காகவும்.

# காலப் பெட்டகம்


விகடன் பிரசுரங்களில் எல்லாவருடமும் விற்பனையில் சாதனை படைப்பது ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ என்றார். தற்போது அத்துடன் சத்குருவின் புத்தகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார். போகவும் சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’-யும் எல்லா வருடமுமே அதிகம் விற்கிறதாம்.

# திரு மோகன்


# இதுதான் முதல் வருடம்
வி ஓ சி பதிப்பகத்தார் இப்போதுதான் முதன்முறையாக பெங்களூர் கண்காட்சியில் கடை எடுத்துள்ளார்களாம். விற்பனை இங்கு எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை என்றார். ஆன்மீகம் மற்றும் பிற இடங்களில் காணக்கிடைக்காத பாவேந்தர், கலைவாணர் புத்தகங்களுடன் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் அதிகமிருந்தன. பொதுவாக தங்கள் கடையில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களே அதிகம் விற்குமென்றார். அவர் குறிப்பிட்டுச் சொன்னவை:
  • டால்ஸ்டாய் கதைகள்
  • போரும் அமைதியும்
  • குற்றமும் தண்டனையும்
  • மார்க்கபோலோ

# திரு செந்தில் குமார்
‘மார்க்கபோலோ’

# குறிப்பறிந்த சேவை

உயிர்மை பதிப்பகத்தில் 361 டிகிரி சிற்றிதழில் வாசித்துப் பிடித்துப்போன தேவசச்சனின் கவிதைகளால் ‘யாருமற்ற நிழல்’ வாங்கிக் கொண்டேன். ஒருமுறை அனுஜன்யா தன் பதிவொன்றில் பரிந்துரைத்திருந்த முகுந்த் நாகராஜனின் கவிதைத் தொகுப்புகளை வாங்க விரும்பி இணையத்தில் தேடியும் புத்தகங்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. நியூபுக்லேண்டில் கவிஞர் பெயரைச் சொல்லி ஒவ்வொரு முறையும் விசாரிப்பதுண்டு. சென்ற முறை ‘K அலைவரிசை’ அனுப்பி வைத்திருந்தார்கள். உயிர்மையில் அதுவும் ‘ஒரு இரவில் 21 சென்டி மீட்டர் மழை பெய்தது’ம் அடுத்தடுத்து இருந்தன. இரண்டாவதை எடுத்துக் கொண்டேன். பணம் செலுத்தப் போகையில் வேகமாக ‘K அலைவரிசை’யைக் கொண்டு வந்து நீட்டினார் அங்கிருந்த விற்பனையாளர். ‘இருக்கிறது’ என்றதும் மின்னல் வேகத்தில் ‘க்ருஷ்ணன் நிழல்’ எடுத்துத் தந்தார். தேடிய தொகுப்புகளில் இரண்டு கிடைத்ததிலும், பதிப்பகத்தின் குறிப்பறிந்த சேவையிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

# திரு நிஜாமுதீன்
பணம் செலுத்தும் போது திரு நிஜாமுதீனிடம் கேட்டதில் உயிர்மையில் “ஜெயமோகன், சாரு, சுஜாதா புத்தகங்கள் அதிக விற்பனையில்..” என்றார். அனுமதியுடன் படம் எடுத்துப் பெயரையும் குறித்து வாங்கிக் கொண்டேன். உயிர்மை சிற்றிதழைப் பார்க்கச் சொன்னார். ‘நான் சந்தாதாரர்’ என்றேன். உடனே அருகிலிருந்த விற்பனையாளார் “இவர்தான் சாரின் (ஆசிரியரின்) அண்ணன்” எனத் தெரிவித்தார்.

விகடனைப்போல பெரிய ஸ்டாலாக எடுத்திருந்தார்கள் கிழக்குப் பதிப்பகம். டாலர் தேசம், கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் மற்றும் ஆர் முத்துகுமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள் ஆகியன கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுக்கியிருந்தார்கள் மேசையின் முதல் வரிசையில்.

# பெரிய ஸ்டால்


திரு விஜயகுமார்


கிழக்குப் பதிப்பகத்தைப் பொறுத்தவரையில் விற்பனையில் நெம்பர் ஒன் என்றால் எழுத்தாளர் ஜெயமோகன், அடுத்து எழுத்தாளர் சுஜாதா என்றார் திரு விஜயக் குமார்.

# அதிக விற்பனையில்..
இவை யாவும் ஒரு தகவலாகவே சேகரித்துத் தந்துள்ளேன்:)! அவரவர் விருப்பங்களுக்கும் ரசனைகளுக்குமாக புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன வாசிப்போர் வரவை எதிர்பார்த்து.

# பெங்களூர் பாலஸ் க்ரவுண்ட் காயத்ரி விஹாரில்...
27 நவம்பர் வரை..
****

பிகு: படங்கள் நான் எடுத்தவை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin