வியாழன், 14 பிப்ரவரி, 2013

உப்புத் தாத்தா

#1 
உப்பு உப்போய்... கோலப்பொடி! உப்பு உப்போய்... கோலப்பொடி” எனக் குரல் கொடுத்தபடி வெள்ளிக்கிழமைகளில் இருமுடி கட்டிய மாதிரி தலையில் இரண்டையும் சுமந்து வருகிற பழனித் தாத்தாவை நெல்லை வீதிகளில் உங்களில் யாரேனும் பார்த்திருக்கவும் கூடும். சிறு வியாபாரிகளுக்கும் அவர்களிடம் வாடிக்கையாய் வாங்குகிற வீட்டினருக்கும் ஒரு காலத்தில் இருந்த பந்தங்கள் நகர வாழ்வில் காண அரிதானதென்றால் சிறுநகரங்களிலும் வந்துவிட்டுள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகளால்  இந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

தலை மேல் சுருட்டி மடித்தத் துண்டோ, சேலை தலைப்போ தாங்கிப் பிடிக்க, பெரிய கூடையில் அப்போதுதான் பறித்த காய்கறி, கீரைகளை நீண்ட முடுக்கு வழியே பின்முற்றம் வந்து இறக்கி வைத்து, தவழ்ந்து வந்து கூடையில் கை வைக்கும் குழந்தையின் பல் வளரக் கேரட்டைக் கையில் கொடுத்து, வெண்டைப் பிஞ்சு ரெண்டை  “கணக்கு நல்லா வரும்” என வளர்ந்த வாண்டு கையில் திணித்து, “என்ன மல்லி இன்னிக்கு ஸ்கூல் போகலியா? காய்ச்சலா?” எனத் தொடங்கி ராமு கோமுவின் ரிசல்ட் முதல் நாத்தனார் பிரசவம், பொங்கலுக்கு மச்சினர் வருகை வரை எல்லாமும் குசலம் விசாரித்து, காஃபியோ மோரோ உரிமையாய்க் கேட்டு வாங்கிக் குடித்து, காசைச் சுருக்குப் பையில் இறுக்கி முடிந்து இடுப்பில் செருகியபடி “இந்தா, கூடையத் தூக்க ஒரு கைகொடு” என சிறுசுகளை ஒரு அதட்டல் போட்டுக் கிளம்புவார்கள்.

#2
இதிலும் கவனித்துப் பார்த்தால் வாடிக்கையாய் வருகிற பலர் அதிகமாய் தெருவில் சத்தம் போட்டுச் செல்வதில்லை. மடமடவென வீடுகளுக்குள் புகுந்து வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடையைக் கட்டி விடுவார்கள். எப்போதாவது தேவைப்படுகிற பண்டங்களின் விற்பனைக்குக் குரலோ மணியோ ஏதோ ஒரு சத்தம் தேவைப்பட்டிருக்கிறது.  வண்டிக்கு அடியில் கட்டிய பெரிய மணியை இழுத்து இழுத்து அடித்தபடியே வரும் சோன்பப்டிக்குப் பெயரே ‘டிங் டிங்’ மிட்டாய்தான்.  அதேபோல, ஒரு நீண்ட கம்பிலே சுற்றப்பட்டிருக்கும் (‘மிட்டாய் பிங்க்’ எனும் நிறப் பெயருக்குக் காரணமான) ஜவ்வு மிட்டாய்க்குப் பெயர் ‘கிரிகிரி மிட்டாய்’! அரையடி உயரக் குச்சியின் முனையில் வட்டமாக உருளும் சாதனத்திலிருந்து வருகிற ‘கிர்ர்ரி.. கிர்ர்ரி...’ எனும் சத்தம் கேட்டே பிள்ளைகள் தெருவுக்கு வந்து விடுவார்கள். சின்னப் பொம்மைகள் செய்து கொடுப்பதோடு, இழுத்து கையில் அழகானக் கடிகாரம் கட்டி விடுவார். சுத்தம் காரணம் காட்டி இதை வீட்டில் வாங்க விட்டதில்லை. ஆனால் அவர் செய்யும் அழகை ஆவலுடன் வேடிக்கை பார்ப்போம்.

#3
ஐஸ் க்ரீம் என்றாலே நெல்லையில் (திருவனந்தபுரம் ரோட்டில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்துக்கு திரும்புகிற முனையில் இருக்கும்) காளி மார்க்தான் என்றிருந்த எழுபதுகளில் தள்ளு வண்டிகளில் அறிமுகமானது ‘கனி’ ஐஸ்.  ‘டப் டப்’ என ஐஸ் பெட்டியின் மூடியையே திறந்து திறந்து  மூடி சத்தம் செய்தவாறு ‘குச்சி ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ்’ எனக் கத்திச் செல்வார்கள். பத்து பைசா பால் ஐஸின் சுவையை இன்று வரையில் எந்தப் பிரபல பிராண்ட் வெனிலாவும் கொடுத்ததில்லை. 30 பைசாக்குக் கிடைக்கும் கிரேப் ஐஸை உறிஞ்சு உறிச்சென உறிஞ்சிக் கொண்டே செல்வோம் ஆங்காங்கே தென்படும் திராட்சையை நாவால் சுழற்றி எடுத்துச் சுவைக்க.  திராட்சைச் சாறின் வண்ணம் வாயிலிருந்து விலக மணிக்கணக்காகும். ஆரஞ்சு ஐஸ் 25 பைசா, சாக்கோபார் 35 பைசா, இளம் பிங்க் க்ரீம் ஐஸ் 55 பைசா, கப் ஐஸ் ஒரு ரூபாய். எல்லோருக்கும் அத்தனை பிடித்து விடுவதில்லை க்ரீம் ஐஸ் என்றாலும் அது என்னுடைய ஃபேவரைட்.   கோடை விடுமுறையில் வாரம் இருநாட்கள், மற்ற மாதங்களில் எப்போதேனும் வாரயிறுதிகளில் வாங்கித் தருவார்கள் வீட்டில்.  ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொன்றை வாங்கிக் கொள்வோம். பள்ளிக்கூட வாசலில் கப் ஐஸ் வாங்குகிறவர்கள் உசத்தியாகப் பார்க்கப்படுவார்கள். அதிகமாய்க் கையில் காசு கொடுக்க மாட்டார்கள் வீட்டில். ஆகையால் அங்கே பால் ஐஸோடு நின்று விடுவது வழக்கம். சீ சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்றில்லாமல் நிஜமாகவே நிரம்பப் பிடித்ததும் அதுதான் என்பதால் இருந்ததில்லை வருத்தம்.

விஷயத்துக்கு வருவோம். இன்றைய விளம்பரப் பாடல்களைக் குழந்தைகள் முணுமுணுப்பது, பாடித் திரிவது போல வீதியில் ராகம் போட்டு சிலர் விற்றுச் செல்கிற விதமும் தெருக் குழந்தைகள் மனதில் பதிந்து போயிருக்கும். ஊர் அசந்து கிடக்கும் மதிய வேளையில் ஒரே ஒரு தொட்டியைத் தலையில் சுமந்து செல்பவரின் ‘சி..மெண்டுத் தொட்ட்டீ..’ , மூட்டைகளில் உள்பாவாடைகள் விற்பவரின் ‘பாவா...டை’ போன்ற சத்தங்கள் பல வீடுகளிலிருந்து குழந்தைகளின் விளையாட்டு நேரத்தில் திடீரென எழும். இன்று சூப்பர் மார்க்கெட், மால் ஆகியன சிறு வியாபாரிகளின் வாழ்வை பெருமளவில் புரட்டிப் போட்டு விட்டன. இப்போதும் தள்ளு வண்டி வியாபாரம் பெங்களூர் வீதிகளில் நன்றாகப் போகிறதுதான். ஆனால் வாடிக்கையாய் வீதிகளைச் சுற்றி வரும் வழக்கங்கள் அதிகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அபூர்வமாய் சிலரை அப்படிப் பார்க்க முடிகிறது. அப்படி நெல்லையில் பார்த்த உப்புத் தாத்தா என அறியப்படுகிற இந்தப் பெரியவருக்கு 85 வயதுக்கு மேலாகிறது. பார்க்கும் திறன், கேட்கும் திறன் குறைந்து கொண்டே வருகிற இந்த வயதிலும் வாரம் தவறாமல் கோலப்பொடி, உப்பைச் சுமந்து வருகின்றவரின் வயதையும் உழைப்பையும் மதித்தேப் பலரும் இவரிடம் வாங்குகின்றனர்.

#4
‘இலாபம் ஒண்ணு... இலாபம் இரெண்டு..’
அளவாய் எடுத்து வந்து, விற்றுக் காலி செய்தும் விடுகிறார்.  கணக்கு தவறிடக் கூடாதென ‘ஒண்ணு... ஆண்டவன். ரெண்டு... ஆண்டவன். மூணு.. ஆண்டவன்’ என உப்பையும், ‘இலாபம் ஒண்ணு.. இலாபம் ரெண்டு.. இலாபம் மூணு..’ எனக் கோலப்பொடியையும் நடுங்கும் குரலால் ராகமாக இழுத்து ஆலாபனை செய்தபடி ஒவ்வொரு படியாக அளந்து போடுகிறார்.

#5 எங்கே செல்லும் இந்தப் பாதை..

நிழல் மட்டும் துணை வரினும்
நெஞ்சில் உறுதியுடன்..
தொடருகிற பயணம்
குடும்பத்தாருடன் ஏற்பட்ட ஏதோ மனஸ்தாபத்தில் வைராக்கியமாய்த் தனியே வாழ்ந்து வருகிறவர் இந்தத் தொழிலை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. ‘வயலில் அறுப்பு இருக்கு. சீக்கிரமாய்ப் போகணும்’  என்பார்.  இருக்கும் நிலத்தை விற்றுவிடாமல் தள்ளாத வயதிலும் ஈடுபாட்டுடன் பயிர் செய்து பிழைக்கிறார். எவரிடமிருந்தும் உதவி பெறுவது தன்மானக் குறைவாகவும் எண்ணுகிறார். வியாபாரத்துக்கு வருகையில் குளித்து முடித்து நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க வந்தாலும் அணியும் உடையைச் சரிவர சலவை செய்து கொள்ள முடியாததற்கு முதுமையே காரணமாக இருக்க வேண்டும்.


#6
பலர் வீட்டு வாசலில் இவரிடம் வாங்கும் பொடியால் கோலம்.
வாழும் வரை ஆரோக்கியத்தை வழங்கட்டும் காலம்!

வாழ்க்கை நம்மிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம், எங்கே செல்லும் அதன் பாதை என்பதை அறியத் தராமல் இருப்பதுதான்.  சாதாரண மனிதர்கள் அசாதாரணமாக அதை எதிர்கொள்ளும் விதத்தை அத்தனை சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது.
***55 கருத்துகள்:

 1. செய்யும் தொழிலே தெய்வம் என்று எங்கள் ஊரில் இவர்களைப் போல் பல பேர் சந்தோசமாக உள்ளனர்...

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு வரியும் அருமைப்பா! அதிலும் அந்த ரெண்டாவது பாரா..... ஹைய்யோ!!!!

  ஜவ்வு மிட்டாயை இப்போ ஏன் 'இழுத்தீங்க?' நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்னு:(

  கொசுவத்திக்கே கொசுவத்தி. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. உப்புத் தாத்தாவை பார்க்க இந்த‌
  சுப்பு தாத்தாவுக்கு
  ஆசையா இருக்கு.
  அட்ரெஸ் இருக்கா... ?
  அட்லீஸ்ட் கைபேசி ?
  ஐ மீன் அவரோடது...

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 4. பொரிப்பாட்டியும்,, கைக்குத்தல் அவல் பாட்டி..கோலமாவு தாத்தா.. எல்லாரும் நினைவுக்கு வராங்க..
  ரொம்ப அழகான பதிவு..ராமலக்‌ஷ்மி

  குழந்தைங்க அதைப்பாடுவதே அழகுதான்..இங்க இன்னும் எங்கவீட்டுக்கிட்ட சிலர் கூவி விற்பது உண்டு..அதற்காகவே எங்க ஏரியாவில் செக்யூரிட்டி இன்னும் பலமாக இல்லையே என்று நான் வருந்துவதில்லை..

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் சொல்வது போல் இப்போது இப்படி மூட்டைகளில் கொண்டு வரும் உப்பு, கோலப்பொடி வாங்குபவர்கள் குறைந்து விட்டார்கள். பாலீதீன் பைகளில் கவர்ச்சியாக அடைக்கப்பட்ட உப்பைத்தான் வாங்குகிறார்கள்.

  இந்த தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து பிழைக்கும் தாத்தாவை பாராட்ட வேண்டும்.

  ஐஸ், சவ்வுமிட்டாய், நினைவலைகள் எனக்கும் உண்டு.
  அது பொற்காலம் தான் ராமலக்ஷ்மி.
  படங்களும் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. சென்னையில் இன்னும் துடைப்பம் விற்பவர்,
  பழைய பேப்பர்க் காரர், ஞாயிற்றுக்கிழமை மட்டும் காய்கறி கொண்டுவரும் கோவிந்த தாத்தா. எல்லோரும் 30 வருஷமாக இருக்கிறார்.
  உப்புத் தாத்தா தவறிவிட்டார்.
  மழையிலும் உப்புவிற்றுக் கொண்டு வருவார். வாழைப்பழத்தாத்தாவின் பேத்தி இப்போது பழம் கொடுக்கிறார்.
  நானும் அவள் வருவதற்காக வாங்குகிறேன்:)
  மிக நல்ல பகிர்வு ராமலக்ஷ்மி.
  எத்தனையோ நினைவுகளை எழுப்பி விட்டுவிட்டது.
  கோல மாவு விற்பவரையும் காணொம்,
  அன்பர்கள் தின வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 7. உப்பு தாத்தா பாவம் இந்த தள்ளாது வயதிலும் தன் கையே தனக்கு உதவி, தன் காலிலெ நிற்கவேண்டும் என்கிறார். அதே நேரத்திலே. இந்த சுப்பு தாத்தா இன்னிக்கு வாலன்டைன் டே லே என்ன பண்றாருன்னு
  கவனிங்க...

  இங்கே வந்து பாருங்க..

  மீனாட்சி பாட்டி.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 8. பழைய நினைவலைகளைத் தூண்டிவிட்ட பதிவு... அந்த ஒரு யாதார்த்த வாழ்வை இழந்து இயந்திர வாழ்க்கைக்கு பயணப்ப்ட்டு(பழக்கப்பட்டு)விட்டோம்

  பதிலளிநீக்கு
 9. காய்கறி விற்பவரின் கூடையை தூக்கிவிட நானும் என் தம்பியும் போட்டி போட்டது, ஜவ்வு மிட்டாயை கைகடிகாரமாக கையில் கட்டிக்கொண்டு அலைந்தது என்று என் சிறு வயது நினைவுகளை தூண்டியது பதிவு.

  பதிலளிநீக்கு
 10. மிகவும் நெகிழ வைத்தப் பதிவு. இது போன்ற பெரியவர்களுக்கு வாழ்க்கையில் என்ன motivation, எப்படி motivationஐத் தக்கவைக்கிறார்கள் என்று நிறைய வியந்திருக்கிறேன். அதை எப்படியாவது அறிந்து கொண்டால் posterityக்குப் பாடம்.

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அழகானப் புகைப்படங்கள். விடிந்ததும் உங்களுக்கு மட்டும் அந்த பத்துப் பைசா பால் ஐஸ் கிடைக்க வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அருமை!மறந்துபோன பல அற்புதமான நினைவுகளை(ஈச்சம்பழம்..ஈச்சம்பழம்.. பதனீர்..பதனீர்..!:))இழுத்துக்கொண்டு வந்துவிட்டது இப்பதிவு!உப்புத் தாத்தாவைப்பற்றிய செய்திகள் நெகிழவைத்தது.என்றும் அவர் சௌக்கியமாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. அருமையான பதிவு...நெகிழவைக்கிறது...

  பதிலளிநீக்கு
 13. நல்ல பதிவு ராம்லஷ்மி. உள்ளம் நெகிழச்செய்தீர்கள்.வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 14. உப்புத் தாத்தா படத்தில்தான் எவ்வளவு உயிர்ப்பு. அவரைப் பற்றிச் சொல்லும்போது அனைவருக்கும் அவரவர்களுக்குப் பழகிய இது மாதிரி வியாபாரிகள் நினைவு வந்து விடுவதைத் தவிர்க்க முடியாது. வியாபாரிகள் என்றே சொல்ல முடியாதுதான். நீங்கள் சொல்கிறபடி நம் வீட்டினரோடு நம் குடும்ப நிகழ்வுகளோடு நெருங்கிப் பழகி குடும்பத்தில் ஒருவர் போல...

  10 பைசா பால் ஐஸின் சுவையை இன்னும் தேடுகின்றன நா நரம்புகள். இப்போது எங்குமே அப்படிக் கிடைப்பதில்லைதான்.

  பதிலளிநீக்கு
 15. உப்புத் தாத்தா எல்லோர் நினைவலைகளிலும்.

  இப்பொழுது மரக்கறியும் ,பழவண்டியும் தான் வருகின்றன. அதுவும் கால ஓட்டத்தில் என்ன ஆகுமோ.

  பதிலளிநீக்கு
 16. பதிவு அருமை! தள்ளாத வயதிலும் தன் காலில் நிற்கும் உப்பு தாத்தாவிற்கு வணக்கங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. உண்மைதான் அக்கா,உப்புத்தாத்தா பற்றி எனக்கும் இந்த பதிவை படிக்கும்போது ஞாபகம் வந்துவிட்டது.அவர்களின் உழைத்து வாழ வெண்டும் என்ற தன்னம்பிக்கையை நினைத்து மெய்சிலிர்க்கிறது.எப்போழுதும் அவர் நன்றாக இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 18. பழைய நினைவுகளை உங்கள் புகைப்படங்கள் போல் பளிச் சென்று பதிந்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 19. நெகிழ வைத்தப் பதிவு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. உப்புத்தாத்தா நெகிழ்ச்சிக்குறிய மனிதர்.உங்கள் அன்ப்வப்பகிர்வு என்னையும் கடந்த காலத்துக்கு இழுத்து சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. நான் இவரை பார்த்துருக்கேன்.உப்பு ,கோல போடி வாநிகியும் இருக்கேன்.நல்ல தாத்தா.ஒரு நிமிஷம் எனக்கு ஊருக்கு போய் வந்து விட்ட உணர்வு வந்துடுச்சு!!!

  பதிலளிநீக்கு
 23. மலரும் நினைவுகளை மலரவைத்த அருமையான பகிர்வு ..சமீப்பத்தில்தான் உப்புவிற்பவர் -தலைமுறைகள் தாண்டி பரிச்சய்மானவ்ர் -- கீரைக்கார பாட்டி உரிமையுடன் பேசுபவர் ,
  அரப்புவிற்பவர் , காய்கறி விற்பவர் யாரும் இப்போது காண்முடிவதில்லை . ஊரே இப்போது கமர்ஷியலாகிவிட்டது ..

  பதிலளிநீக்கு
 24. சிமெண்டுத்தொட்டி எங்கூர்லயும் வரும்.. அந்தப்பொருளின் ரெண்டாம் பகுதி எங்கூர்ல ஒரு தகாத வார்த்தை. ஆகவே வித்துட்டுப் போறவரைக் கூப்பிடணும்ன்னா ரொம்பவே சங்கடப்படுவோம்.

  இதுபோன்ற நிறைய மனிதர்கள் அருகி வர்றாங்க. எங்கூர்லயும் ப்ளாஸ்டிக்குக்கு எடைக்கு எடை பூண்டு கொடுக்கறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சுட்டே வருது. ஒரு வேளை புறநகர்ப்பகுதிகள்ல இருக்குதோ என்னவோ..

  பதிலளிநீக்கு
 25. @திண்டுக்கல் தனபாலன்,

  போற்றுதலுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. @துளசி கோபால்,

  மிக்க நன்றி:)!

  ஜவ்வு மிட்டாய் நீங்களும் சுவைத்ததேயில்லையா? மிட்டாய்க்காரர் படம் சென்ற வருட லால்பாக் மலர் கண்காட்சியில் எடுத்தது. இடது கீழ் மூலையில் அவர் செய்த பொம்மையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள் பாருங்கள் ஒரு சிறுமி. எதற்காக சின்ன வயதில் தடை விதித்தார்களோ அதற்காகவே இப்போதும் வாங்கத் தயக்கமாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 27. @sury Siva,

  நேரிலே பேசுவதையே அவரால் சரிவரக் கேட்க முடிவதில்லை. அலைபேசி இருக்குமா என்பது சந்தேகமே. பார்க்கும் ஆசையை என் படங்கள் தீர்த்து வைத்திருக்க வேண்டுமே:)? உங்கள் பதிவைப் பார்த்தேன். அருமையாகப் பாடியுள்ளீர்கள். கருத்துக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 28. @முத்துலெட்சுமி/muthuletchumi,

  ஆம் அவர்கள் ஒருவகையில் ஊருக்குப் பாதுகாப்பும்தாம். அந்தநாளில் இதுபோலப் பலபேர் இருந்தார்கள். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 29. @கோமதி அரசு,

  மகிழ்ச்சி. தங்கள் நினைவலைகளையும் நேரமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 30. @வல்லிசிம்ஹன்,

  எல்லா இடங்களிலும் இவர் போன்ற மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 31. @ezhil,

  /இயந்திர வாழ்க்கைக்கு/ உண்மைதான். கருத்துக்கு நன்றி எழில்.

  பதிலளிநீக்கு
 32. @RAMVI,

  / கூடையை தூக்கிவிட/

  கற்பனையில் அந்தக் காட்சி விரிகிறது:)! ரசித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @அப்பாதுரை,

  எது அவர்களைச் செலுத்துகிறது என்பது வியப்புதான். ரசித்ததற்கு நன்றி. நீங்கள் சொன்னதே பால் ஐஸை ருசித்த மகிழ்ச்சியைத் தந்து விட்டது:)!

  பதிலளிநீக்கு
 34. @meenamuthu,

  பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி:).

  பதிலளிநீக்கு
 35. @ஸ்ரீராம்.,

  பலருக்கும் நினைவலைகளை எழுப்பி விட்டுள்ளது பதிவு. பால் ஐஸ் ரசிகர்தானா நீங்களும்:)?

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 36. @S.Menaga,

  அப்படியே வேண்டிக் கொள்வோம். நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 37. @gomathi,

  நெல்லைதானா நீங்களும்:)? அவரைப் பார்த்தும், உப்பு கோலப்பொடி வாங்கியும் இருக்கிறீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. @இராஜராஜேஸ்வரி,

  தலைமுறைகளாக தொடர்கிறவர்களும் பலருண்டு. வல்லிம்மாவும் வாழைப்பழத் தாத்தா குறித்து சொல்லியிருக்கிறார்.

  தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @அமைதிச்சாரல்,

  புறநகர்களில் இருக்க வாய்ப்புள்ளது. எல்லா புறநகர்களும் ஐந்து, பத்து ஆண்டுகளில்தான் நகரின் அங்கமாகி விடுகின்றனவே. காலம் அடித்துச் சென்று விடுகிறது பல நல்ல விஷயங்களை. பகிர்வுக்கு நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 40. மிகவும் அழகான, அருமையான, மனதை நெகிழ வைத்த பதிவு. நன்றி ராமலக்ஷ்மி. உப்புத் தாத்தா நன்றாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 41. பால் ஐஸின் சுவை இந்த பதிவு முழுவதும் வியாபித்திருக்கிறது.உப்புத் தாத்தா மாதிரி இன்னமும் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.உப்புத் தாத்தா போல் எங்கள் தெருப் பக்கம் வரும் அவல் சம்பா அவல் - தாத்தா நினைவிற்கு வருகிறார். ஆனால் அவருக்கும் தள்ளாத வயது தான்,ஆனால் பளிச்சென்று இருப்பார்.அந்த அவல் தாத்தாவை பார்த்தால் இந்த முறை பார்த்தால் நிச்சயம் படம் பகிர்வேன்..சின்ன வயதில் வந்த ஜவ்வு மீட்டாய் விற்பவர் கூட நினைவில் வந்து செல்கிறார்.
  மொத்தத்தில் பழைய நினவுகளை கிளறிவிட்டு விட்டீர்கள்..

  பதிலளிநீக்கு
 42. முதுமை குறித்த ஒரு பயத்தையும் விதைக்கிறது பதிவு

  பதிலளிநீக்கு
 43. @Asiya Omar,

  நன்றி ஆசியா. உங்கள் பகிர்வுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 44. அருமையான பதிவு ராமலக்ஷ்மி !! புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 45. "சி மெண்டுத் தொட்டீ" என்று விற்றவர் மட்டும் என் நினைவில் வருகிறார். நல்ல பதிவு. பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin