திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ‘மின்னல் வரிகள்’ தளத்தில் ‘அடைமழை’
சிறுகதைத் தொகுப்புக்கு அளித்த விமர்சனத்தை இங்கும் சேமித்துக் கொள்கிறேன்:
‘முத்துச் சரம்
’ நமக்குத் தொடுத்து அளிக்கும்
ராமலக்ஷ்மி ராஜன்
அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. பத்திரிகைகளில் (தளத்தில்)
பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய்
சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக
மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப்
படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக்
கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து
விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.
ராமலக்ஷ்மி
இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை
நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை
கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு
மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை
அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக
அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான
அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது
விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து
விடலாம்....