விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

‘அடை மழை’க்கு ‘அரிமா சக்தி’ விருது

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன்,  நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ்  ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு  (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#

நான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’  (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன.  மூவருக்கும் வாழ்த்துகள்!  அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது! பதிப்பாளருக்கு வாழ்த்துகள்! மேலும்

வெள்ளி, 21 நவம்பர், 2014

தூறல் 21: திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ்

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழா, 12 அக்டோபர் 2014 அன்று திருப்பூரில்  நடைபெற்றது. விழா அமைப்பாளர் திரு. ஜீவானந்தம் அவர்கள் பரிசுத் தொகையோடு கேடயம், சான்றிதழ்களை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  சேமிப்புக்காக விருதுகளை இங்கும் பதிந்து வைக்கிறேன்:). [தொடர்புடைய முந்தைய பதிவுகள் இங்கும், இங்கும்.]

#1

#2
#3

விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்றைக்குப் பலரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது குறித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக திருமதி. தனலெக்ஷ்மி நான் வராதது ஏமாற்றமாக இருந்ததென்றும், சந்திக்கும் ஆசை நிறைவேறுமென நம்புவதாயும் சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே நம்புகிறேன். அவரது அன்புக்கு நன்றி:).
***

துளசிதளம். 2008_ல் பதிவுலகம் நுழைந்ததிலிருந்து தொடருகிற தளம்.  அன்றிலிருந்து இன்று வரை இங்கிருந்து நிறையக் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். என்னென்ன கற்றேன் என்பதையும் பல்வேறு சமயங்களில் பலபதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். சமீபத்தில் நேரடியாக அவரிடமே சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி:).

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு

செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

ஞாயிறு, 5 மே, 2013

‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”


மானா மதுரையிலிருந்து வெளியாகும் ‘நல்ல கவிதை பேசுவோம்’ வளரி இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் அனைத்து இலக்கிய சிற்றிதழ்களிலுமிருந்து மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையாக, அமரர் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் “கவிப் பேராசான் மீரா விருது” வழங்குவதோடு சான்றிதழும் அனுப்பிக் கெளரவித்து வருகிறது. இந்த இதழில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத் தேர்வுகள் வெளியாகியுள்ளன.
அதில் பிப்ரவரி மாத சிறந்த கவிதையாக, (என் கவிதைகளின் சிறப்பிதழாக வெளியான) பிப்ரவரி புன்னகை இதழில் இடம்பெற்ற “யுத்தம்” கவிதை தேர்வாகியுள்ளது.

கவிதை:

சனி, 15 ஜனவரி, 2011

பொங்கல் பரிசுகள்-தமிழ்மணம் விருது 2010-அதீதம் இணைய இதழ்

வெள்ளிப் பதக்கம்


காட்சிப் படைப்புகள் பிரிவில்
‘ஏரிக்கரைப் பூங்காற்றே-PiT’ பதிவுக்கு!

புகைப்படப் பிரிவில் கிடைத்த பரிசுக்கு நான் எடுத்த புகைப்படத்தாலேயே சொல்லி விட்டுள்ளேன் நன்றி:)!


வாக்களித்த அத்தனை நண்பர்களின் அன்புக்கும் நன்றி!
நடுவர் குழுவுக்கும் நன்றி!

வெற்றி பெற்ற சக பதிவர் யாவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

விருதுகள் நம்மை மேலும் உற்சாகமாய் தொடரச் செய்யும் உந்து சக்திகள்!
பல சேவைகளுடன், விருதுகளையும் தந்து பதிவர்களுக்கு ஊக்கம் தந்து வரும்
தமிழ்மணத்துக்கு
சொல்லுவோம் நன்றிகள்!

விருது விவரங்களுக்கு செல்லுங்கள் இங்கே.

அதீதம்

பதிவர்கள் நம் அனைவருக்குமான பொங்கல் பரிசாக, இன்றைய தினத்தில் புதிதாக மலர்ந்துள்ளது ‘அதீதம்’ இணைய இதழ். முகப்பில் எனது கட்டுரையும் [நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’ புத்தக அறிமுகம்] எனக்கான இன்னொரு பொங்கல் பரிசாக:)! நன்றி அதீதம்!

சிறப்பான உள்ளடக்கம், வடிவத்துடன் தொடங்கப்பட்டுள்ள இவ்விதழ் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைய இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

நாம் நன்கறிந்த நிலாரசிகன், உழவன், அனுஜன்யா, தேனம்மை, ரிஷான் ஷெரீஃப்,விநாயகமுருகன், லதாமகன் ஆகியோரின் கவிதைகள்; ஷைலஜா, சந்தனமுல்லை ஆகியோரின் கட்டுரைகள்; வித்யா, கார்த்திகா வாசுதேவன், அமைதிச்சாரல், வெண்பூ ஆகியோரின் சிறுகதைகள்; நந்து, ஜீவ்ஸ் இருவர் எடுத்த புகைப்படங்கள் என அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளது அதீதம்!

‘வலையோசை’யில் பதிவர்களின் கீச்சுக் குறள்களுடன் பதிவர் அறிமுகமும்! ‘சினிமா’வும் உண்டு.

படைப்பாளிகளுக்கென்றே பிரத்தியேகமான இதழாக ஆரம்பமாகியுள்ள ‘அதீதம்’ பதிவர்கள் நம்முடன் கைகோர்த்திருப்பது இனியதொரு ஆரம்பம். சென்று பாருங்கள் இங்கே.



பொங்கல் வாழ்த்து!


கதிரவன் கருணை வைக்க

மாதம் மும்மாரிப் பொழிய
நானிலம் செழிக்க
எங்கும் சுபிட்சம் நிலவ

எல்லோரது இல்லங்களிலும்
பொங்குக பொங்கல்!

அனைவருக்கும்
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!
***

ஞாயிறு, 14 நவம்பர், 2010

தமிழ்மணம்-டாப் ட்வென்டி-பரிசு மழை-விருது விழா

ஞாயிறு கொண்டாட்டம் #மகிழ்ச்சி

தமிழ் மணம் புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு ஞாயிறும் முந்தைய வாரத்தின் முன்னணி வலைப்பூக்கள் இருபதைத் தேர்ந்தெடுத்து இங்கே அளிக்கத் தொடங்கியுள்ளது.

முதல் வாரம் பத்தாவது இடத்தில் முத்துச்சரம்:)!


வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டுவிட்டு பாதையோரமாய் ‘பராக்கு’ பார்த்தபடி போய்க் கொண்டிருந்த என்னை ‘படார்’னு ஜீப்புல ஏத்தி விட்டிருக்காங்க.

எதேச்சையாக ஆனந்தவிகடன் தீபாவளி ஸ்பெஷல் கவிதை, கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிமலர் கதைகள், தினமணி தீபாவளி மலர் பங்களிப்பு என வரிசையாகப் பத்திரிகைப் படைப்புகளைப் பதிந்ததில் தற்காலிகமாக அதிகரித்த பார்வையாளர்களால் (தகவல்:Blogger stat) கிடைத்த இடமே என்றாலும், புதிய சேவையின் தொடக்க வாரத்தில் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தமிழ்மணம்!

சமீபத்திய இடுகை ஒன்றில் பதிவர் சகாதேவன் அவர்கள் ‘what is the secret of your writing?’ எனக் கேட்டிருந்தார்.

‘இங்கு கிடைக்கிற ஊக்கம்’ எனப் பதிலளித்திருந்தேன்.

ஆத்மார்த்தமாய் சொன்னது.

தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கம் தரும் அனைத்து நண்பருக்கும் என் நன்றிகள்!


புத்தகப் புதுவெள்ளம் #குதூகலம்

தமிழ்மணம் விருது 2009-ல் பரிசு பெற்றதற்கு நன்றி சொல்லி இட்ட பதிவில் நான்...

தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

என்னதான் சொல்லுங்க. நம்மை பாராட்டி வழங்கப் படும் எந்தப் பரிசும் குதூகலம் தரக் கூடியவை. அதிலும் எழுதும் நமக்கு சிறந்த பரிசு புத்தகங்களை விட வேறென்னவாக இருந்திட இயலும்?

இரண்டு பிரிவுக்குமாக ரூ.1500-க்கு வருடத் தொடக்கத்திலேயே ந்யூபுக் லேண்ட் பரிசுக் கூப்பன்களை அனுப்பி வைத்திருந்தது தமிழ்மணம். சென்னைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாது போன நிலையில் சமீபத்தில்தான் மிகத் தாமதமாக அணுக முடிந்தது அவர்களை. ஏற்பட்ட கால இடைவெளியின் காரணமாக மறுபடி ‘தமிழ்மணத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தால் நல்லது’ என அவர்கள் தெரிவிக்க, தமிழ்மணம் நிர்வாகி திரு. ஆர்.செல்வராஜ் அவர்கள் உடன் செயல் பட்டு மின்னஞ்சல் அனுப்பியதோடு, நான் புத்தகங்களை வாங்கியாயிற்றா மடல் அனுப்பிக் கேட்டு உறுதியும் செய்து கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

அவனும் இவனும் - ஷைலஜா
யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் - நிலாரசிகன்
என் செல்ல செல்லங்கள் - துளசி கோபால்
கருவேல நிழல் - பா. ராஜாராம்
கோவில் மிருகம் - என்.விநாயமுருகன்
காலப் பயணிகள் - விழியன்
இரவுக் காகங்களின் பகல் - க.அம்சப்ரியா
டி.வி.ஆர் நினைவுப்போட்டி - பரிசு பெற்ற கதைகள்
கருவாச்சி காவியம் - வைரமுத்து
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - மனுஷ்ய புத்திரன்
சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’- முழுத்தொகுப்பு [4 பாகங்கள்]

எல்லாம் வாசித்தானதும் சில புத்தகங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்திட உள்ளேன்.


திருவிழா தேரோட்டம் #உற்சாகம்

வேகமாய் நகருகின்றது காலம். இதோ வந்து விட்டது அடுத்த திருவிழா. தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள்-2010. விவரங்கள் இங்கே. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பிரிவும் புதிதாக அறிவித்துள்ளார்கள்.

பரிசு நம் இலக்கல்ல. பங்களிப்பே முக்கியம். நம் அனைவரது படைப்புகளையும் உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்குக் கொண்டு சேர்க்கும் தமிழ்மணம் நடத்தும் விழா. கூடித் தேர் இழுப்போம். உற்சாகமாய் அனைவரும் கலந்து கொள்வோம். வாருங்கள்.
***


புதன், 17 பிப்ரவரி, 2010

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்-PiT போட்டிக்கும்

கேரளம் என்றால் பசுமை. பசுமை என்றால் கேரளம். கட்டியம் கூறுவது போல இருந்தன விமானத்திலிருந்து பார்க்கையில், விரிக்கப்பட்ட பச்சைக் கம்பளம் போலக் காட்சியளித்த தென்னைகள். கொச்சினில் இருந்து ஒன்றரைமணிநேரம் பயணித்தால் குமரகம். படங்களைப் பேசவிட்டிருக்கிறேன் வழக்கப்போல சின்னக் குறிப்புகளுடன்.

ஏரிக்கரைப் பூங்காற்றே

இம்மாத PiT போட்டித் தலைப்பு: வாகனம். இந்த முதல் படத்தையே போட்டிக்குத் தந்துள்ளேன்.
***

கரையோரக் கவிதைகள்

கண்ணுக்கெட்டிய வரையில் ஏரியைச் சுற்றியமைந்த கரையெங்கும் பசுமைதான். செழிப்புக்குக் காரணம் பேக் வாட்டர்.இருநூற்றுஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து பரந்த வேம்பநாடு ஏரியைச் சுற்றிதான் குமரகமும் ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களும் உள்ளன.

முதலில் பேக்வாட்டர்ஸ் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த ஏரியை எடுத்துக் கொண்டால் அது கடல் மட்டத்தின் அளவில் உள்ளது. மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீரானது கடலில் கலக்கும்போது ஏரியையும் நிரப்புகிறது. அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் இருக்கிறது. மழையற்ற கோடையிலோ தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் ஏரிக்குள் புகுகிறது. இதைத்தான் ‘பேக் வாட்டர்ஸ்’ என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.
***

போறவழி தென்கிழக்கோ

படகுவீடுகள் சராசரியாக 70அடி நீளமும் நடுப்பகுதில் 15அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. ஆணிகளை உபயோகிக்காமல் தேங்காய் நார்களைக் கொண்டேதான் பலகைகளைக் கட்டுகின்றார்களாம்.
***

அதிகாலை நேரமே இனிதான பயணமே
நிலாவைத்தான் கையில பிடிக்கமுடியுமா? அள்ளமுடியும் அதேபாணியில் சுடாத காலைச்சூரியனையும். ஆனா தோணி ஆட்டம் கண்டுட்டா.. அதான் கம்முன்னு அள்ளிட்டேன் நிர்மலமான அந்தச் சுடரொளியை கவனமா காமிராவிலேயே:)! எப்படிப் படகு சீராய்க் கிழிக்கிறது நீரிலே கோடு, பாருங்களேன்!
***

ஒதுங்கி நிற்கிறது படகு
கூரைமேல் சூரியன் எத்தனை அழகு

***
அஸ்தமனப் பொழுது
அமைதியில் மனது

அந்திசாயும் நேரமானால் ஏரிக்கரையோரம் இருக்கும் இருக்கைகள் நிரம்பிவிடும் அஸ்தமனத்தை ரசிக்க. ‘சளக் சளக்’ தாளகதியோடு கரையைத் தொடர்ந்து தொட்டுச் செல்லும் சிற்றலைகளின் சங்கீதம், நொடிக்கு நொடி மாறும் வானின் வர்ண ஜாலம், மெல்ல மெல்ல நீருக்குள் இறங்கும் சூரியப்பந்து யாவும் நெஞ்சை நிறைக்கும் அமைதியைத் தந்து.
***

தனித்திரு விழித்திரு
***
விழித்திருந்ததால் தனித்துத்தெரிவது
அடர்கானகத்தில் நிமிர்ந்துவளர வழியின்றிபோனாலும்
அயர்ந்து போகாமல்
கிடைத்தசந்தில் புகுந்துபுறப்பட்டு உருப்பட்டு
உலகுக்கு சொல்லுது பாடம்
வாய்ப்பு தேடிவரக் காத்திருக்காதே
தேடிப்போ நீ வாய்ப்பையென!
***


வானமே எல்லைநானும்தான் நானும்தான் என இன்னுமொன்று
தொட்டுவிடும் தூரம்தான் வானம்என்று
***

மோட்டர் படகு, துடுப்புப் படகு, படகு வீடு என எல்லாவற்றிலும் பயணித்து ஏரியைச் சுற்றி சுற்றி வந்த போது எடுத்த படங்களில் ஒருசிலவற்றைப் பகிர்ந்து கொண்டாயிற்று. ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


பேக்கர்ஸ் பங்களா

வேம்பநாடு ஏரியின் கரையில்தான் அமைந்திருக்கிறது தாஜ் கார்டன் ரெட்ரீட் விடுதி.  ஆல்ஃப்ரெட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-ல் கட்டப்பட்டது. நான்கு தலைமுறைகளாக நூறு வருடங்கள் அவரது குடும்பத்தினரே அதை உபயோகித்து வந்தபடியால் அவர் பெயருடனேயே இப்போது ரிசார்ட்டின் அலுவலகமாயும் உணவு விடுதியாயும்.


லகூன்
பங்களாவுக்கு நேர் எதிரே அமைந்த இந்த் லகூனைச் சுற்றிலும் இரவு ஏழுமணி அளவில் ஆரம்பித்து நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம். இந்தப் பின்னணியில் மேலேதெரியும் புல்வெளியில் தினமும் இரவு எட்டு மணியிலிருந்து அரைமணி நேரத்துக்கு ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. இரவுக்காட்சியாய் எடுத்தபடங்கள் எவையும் அத்தனை கூர்மையாக வரவில்லை. [மற்ற படங்கள் அந்த அனுபவத்துடன் இங்கே: ‘கண்ணோடு காண்பதெல்லாம்.]
ஒளிரும் தீபங்கள்
***

நெல் வயல்

சலசல ஓடை சிலுசிலு நாத்து
ஒத்தையடிப் பாலம் ஒசந்துநிக்கும் தென்னைகள்
***

பாதையோரம் பூத்திருந்து வரும்வழியைப் பார்த்திருந்தவை

செந்தாழம் பூவோ


***
ஸ்பீக்கர்பூவும் வெண்பூவும்
***
எக்சோரா என்னும் இட்லிப்பூ


***

சின்னஞ்சிறு மஞ்சள்மலர்

மொளைச்சு மூணுஇலையே விட்ட அரையடி உயரச்செடியில் ஒன்றரையங்குல அளவில் கண்சிமிட்டிய மஞ்சப்பூ மேக்ரோவில் அழகா வந்திருக்கா? ஒரு விஷயம் கவனித்தேன். இவற்றை எடுத்த பத்து நாட்களுக்குள்ளாகவேதான் லால்பாக் மலர்கண்காட்சி செல்லும் வாய்ப்பு வந்தது. பார்வைக்கென அணிவகுத்திருந்த தொட்டிச்செடிகளில் பூத்திருந்தவற்றைக் காட்டிலும் மண்ணில் வளர வரம் வாங்கி வந்தவற்றின் மலர்ச்சியே தனிதான் என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது. 
***


இயற்கையின் எழிலில் திளைக்க முடிந்த வனத்தில்
உறுத்தலாய் அமைந்தது இதுதான் மனதில்!

போட்டுத்........................................ ...........தள்ளுறாங்களே!
‘ஏன் வெட்டுறீங்க’ என்ற கேள்விக்கு ‘பூச்சி வெட்டிடுச்சு’ என வந்தது பதில். பல ஏக்கர் பரப்பளவில் பலவகை மரஞ்செடிகளைப் பயிர்செய்து பரமாரித்து வருபவர்கள் தப்பாகச் சொல்ல மாட்டார்கள் எனத் தோன்றினாலும் அத்தனை உயர்ந்தமரம் ஓரிரு மணியில் வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தமே த்ந்தது.

உலகெங்கிலும் மனிதரின் தேவைக்காக கணக்கில்லாமல் கடந்த சில வருடங்களாய்ச் சாய்க்கப்பட்டு வரும் மரங்கள்! காணாது போகிற காடுகரைகள்! விளைநிலங்கள்! விளைவுகள்? இயற்கையின் சீற்றம். குறைகிற மழை வரம். கூடிக்கொண்டே போகிற பூமியின் வெப்பம். இனியேனும் யோசிப்போம்.


இயற்கை அன்னையைப் போற்றுவோம்
இருக்கும் வளத்தைக் காப்பாற்றுவோம்


***


பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!



ஏரிக்கரை படங்கள் மேலும் சில இந்தப் பதிவில்: தண்ணி காட்டறேன்..

இங்கே படங்கள் ஒன்றும் நான்கும்: கிழக்கு சிவக்கையிலே..




இப்பதிவுக்கு காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக தமிழ்மணம் விருது 2010
வெள்ளிப் பதக்கம்
நன்றி தமிழ்மணம்!

முதலிரண்டு சுற்றுகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்,
இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி!
***


29 மார்ச் 2012
பேக்கர்ஸ் பங்களாவை இன்னொரு கோணத்தில் நான் எடுத்த படத்தை மேக் மை ட்ரிப் டாட்.காம் வாங்கி தன் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது என்பதையும் இங்கே பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
***

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது 2009..வெற்றிப் பதக்கங்கள் இரண்டு..மகிழ்வும் நெகிழ்வும்..!

இரண்டு விருதுகள்! இரண்டு பதங்கங்கள்! இரட்டை சந்தோஷம்!

சமூக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கம்
‘இவர்களும் நண்பர்களே..’ பதிவுக்கு!


காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம்‘LAND MARK - July PiT மெகா போட்டிக்கு..’ பதிவுக்கு!



நன்றி தமிழ்மணம்! நன்றி நண்பர்களே!

ம் படைப்புகளை உலகம் அறியத் திரட்டித் தருவதோடு நின்று விடாமல் வருட முடிவில் போட்டியும் நடத்தி விருதுகள் வழங்கி வரும் தமிழ்மணத்தின் மகத்தான சேவைக்கு வணக்கங்கள்! இந்த வருடமும் திருவிழா போல நடந்து முடிந்த போட்டியின் முடிவுகள் இங்கே!

வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

ஏனைய பிரிவுகளில் பரிசு பெற்ற மற்றவருக்கும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

மூகம் பிரிவில் நான் பெற்றிருக்கும் முதல் இடம் சற்றும் எதிரே பாராதது. அப்பதிவில் சொல்லப்பட்டவை பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்றே போட்டிக்குப் பரிந்துரைத்திருந்தேன்.

ஒருவர் எழுதியதை வாசிக்கையில் அது சம்பந்தமாக மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர் பதிய.. இன்னும் பலர் தொடர.. என்பது வலையுலகில் நிலவும் ஆரோக்கியமான சூழல். தொடர் பதிவுகளின் நோக்கமும் கூட அதுவேதான், அழைப்பாக வருகையில் பலவற்றை என் வரையில் பகிர்ந்திட குறிப்பாக எதுவுமில்லாத பட்சத்தில் அன்புடன் நான் மறுத்து விட்டிருந்தாலும்.

சர்வேசனின் ‘உதவும் கரங்கள்-ஒரு விசிட்’ பதிவினைத் தொடர்ந்து நான் வெளிப்படுத்த விளைந்த எண்ணங்களே இப்பதிவு. அவருக்கு என் நன்றிகள். அவரது பதிவையும், என்னைத் தொடர்ந்து ஜீவன், ரம்யா ஆகியோர் எழுதிய பதிவுகளையும் நான் அங்கே தந்திருந்த சுட்டிகளின் மூலமாகப் பலரும் வாசிக்க வாய்த்திருக்குமேயானால் அதுவே மிகுந்த மனநிறைவு!

ஹி..! பெரிய வல்லுநராக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஈட்டித் தரும் அங்கீகாரம் என்பதற்கான அத்தாட்சி காட்சிப் படைப்பில் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த விருதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! PiT குழுவினருக்கே இதை சமர்ப்பிக்கிறேன்.

பதிவுலகம் நுழைந்ததில் இருந்து ஒரு மாதம் கூடத் தவறாமல் PiT போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன் இதுவரையில். நான்கு முறை முதல் சுற்றுக்குள் வந்துள்ளேன். பரிசு மட்டுமே இலக்கு என்றில்லாமல் ‘பங்களிப்பே சிறப்பு’ எனும் மனோபாவத்துடன் முடிந்தவரை எல்லாப் போட்டிகளிலும் எல்லோரும் கலந்து கொள்வோம். நிச்சயம் அது நம் திறமைகளை வெளிக் கொண்டு வரும்.

PiT குழு மாதாமாதம் விதம்விதமாய் தலைப்பைக் கொடுத்து, புகைப்படத் துறையின் மீதான நம் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து போட்டிகளை நடந்தி வருகிறது. வல்லுநரோ கத்துக்குட்டியோ எவராயினும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பொறுமையாக அறிவுரைகளும் வழங்குகிறது. வாழ்க அவர்களது சேவை!

'Land Mark' தலைப்பைக் கொடுத்த நபர் குழுவிலே யாருங்க? உங்களுக்கு தனியாக ஒரு சிறப்பு நன்றி:)!

என்ன, ஒரு சின்ன மனக்குறை. முன்னரெல்லாம் போட்டித் தலைப்பு வெளியான சில நாளில் தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும். முடிவுத் தேதி நெருங்க நெருங்க திருவிழாதான். ஆனால் இப்போது படங்களை நேரடியாக சமர்ப்பித்திடும் வசதி வந்த பின் இதற்கெனப் பதிவிடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து விட்டது.நண்பர் கிரி, ‘நீங்கள் ஒருவர்தான் இத்தனை ஆர்வத்துடன் பதிவிடுகிறீர்கள்’ என்பார். ஆனால் முன் எப்போதையும் விட கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை 50 முதல் 70 வரை என இப்போது அதிகரித்தே இருக்கிறது. அதுவும் கடைசி மணி நேரத்தில் 30 பேர் படங்களை வந்து இணைப்பது அட்டகாசமாக இருக்கும். இவர்கள் எல்லோரிடத்திலும் நான் வைக்கும் வேண்டுகோள் பதிவாகவும் படங்களைத் தாருங்கள் என்பதே. இது பார்க்கும் இன்னும் பல பேரை ஆர்வத்துடன் கேமிராவைத் தூக்க வைக்கும்.

டந்த நான்கு நாட்களாக குமரகத்தின் தாஜ் ரிசார்ட்டில் ஓய்வுக்காக சென்றிருந்த இடத்தில், அறிவிப்பு வெளியான அன்று வலைப்பதிவுகள் திறக்கவேயில்லை. வெற்றி பெற்றிருந்த அந்தந்த எனது பதிவுகளில் நண்பர்கள் வாழ்த்தி இட்டிருந்த பின்னூட்டங்கள் வாயிலாகவே விருதுகள் கிடைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தாங்களே பரிசு பெற்ற சந்தோஷத்துடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களாகவும், மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும் குறுஞ்செய்திகளும் நெகிழ வைத்தன. ‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சிட்டாங்க..’ போன்றதான பின்னூட்டங்கள் இன்னும் நெகிழ்வு.

சில மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், ஏற்பட்ட சில பக்கவிளைவுகளால் உடல்நலக் குறைவு, இன்னும் தொடரும் மருந்துகள் என மனதும் உடலும் சற்றே சோர்ந்திருந்த வேளையில் சமீபகாலமாகத் தொடர்ந்து கிடைத்து வரும் சில அங்கீகாரங்கள் நிஜமாகவே என்னை உற்சாகப் படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அதிலும் தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

ப்போதுமே அதிக எண்ணிக்கையில் பதிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக அதிகம் எழுதவுமில்லை. வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள் பலவற்றிற்கு தொடர்ந்து செல்லவும் இயலவில்லை. இப்போது தேறி தெம்பாகி வரும் வேளையில் ‘எழுது இன்னும்’ என இழுத்துப் பிடித்து தந்துள்ளீர்கள் ஒன்றிற்கு இரண்டாகப் பதக்கங்கள்!

தனிமடலில் வாழ்த்தும் போதே ‘போக வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது’ என அக்கறையுடன் நினைவுறுத்தும் உங்கள் போன்ற நட்புகள் கூடவே வருகையில்.. என்ன சொல்ல.. எப்படி சொல்ல? எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி!

புதன், 22 ஜூலை, 2009

LAND MARK - July PiT மெகா போட்டிக்கு

இம்மாதம் மெகாப் போட்டி. தலைப்பு: LANDMARK. பெங்களூரில் கடந்த ஒருவாரமாக வானம் மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுவதால் விதான் செளதா, விகாஸ் செளதா, UB City இவற்றைப் படம் பிடிக்க நினைத்து முடியாமல் போகவே, வழக்கம் போல் ஏற்கனவே எடுத்தவற்றில் தேர்ந்தெடுத்தது. ஒன்றிரண்டு மீள்படங்கள்,தலைப்புக்குப் பொருத்தமாய்த் தோன்றியதால்:)! ‘

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் உலவியில் 'view' க்ளிக் செய்து அதில் 'zoom-zoom in' செய்து காணக் கேட்டுக் கொள்கிறேன்.]


வங்கக் கடல் மீதினில்..


பல்லவர் பெருமையைப் பறைசாற்றும் கடற்கரைக் கோவில்



அலைகடல் ஓரம் கலையழகுக் கோபுரம்



[கடந்த PiT பதிவில் போட்டிக்கு அன்றி பார்வைக்கு வைத்ததில், பலருக்கும் பிடித்திருந்த இப்படமே மெகாவிற்கான என் தேர்வாக உள்ளது.]





முக்கடலும் சங்கமிக்கும் முனையினில்..


உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்
உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
உலகப் புகழ் பெற்ற குறளை
எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை!

***

விவேகானந்தா மணிமண்டபம்



***


1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு
133 அடி உயரத்தில் செய்யப்பட்டிருக்கும் மரியாதை


***





தன்னை உணர.. ஞானம் பெற.. தியானமே வழி



மைசூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் "பைலாகுப்பே' என்னும் ஊரில், குஷால் நகர் என்னுமிடத்தில் உள்ளது இந்தத் தங்கக் கோவில். திபெத்திலிருந்து இந்தியா வந்து இப்பக்கம் குடியேறிய திபெத்தியர் கட்டியுள்ள பௌத்த மதக் கோவில்.

மிகப்பெரிய வளாகத்தில் வெவ்வேறு மண்டபங்களாக அமைந்துள்ளது. புத்த மதத்தின் மிக முக்கியமான அம்சம் தியானம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற தியானம் உதவுகிறது என்பது இவர்களுடைய கொள்கை. மேல் இருப்பது பிரதான தியான மண்டபம்.
***


தர்மச் சக்கரத்துடன் தங்கப் கோபுரம்




கோவிலின் இன்னொரு மண்டபம் இது. கோபுரம் தங்க நிறத்தில் மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைந்துள்ளது. உச்சியில் காணப்படும் தர்மச் சக்கரம் புனிதச் சின்னமாக மதிக்கப் படுகிறது.

கோபுரஉச்சியிலிருந்து கீழே உள்ள பாகங்களை இணைக்கிற விதமாய் பல வண்ணத் துணியினாலான நான்கு தோரணக் கொடிகள் உள்ளதை இரண்டு படங்களிலுமே காணலாம். அவை வெறும் அலங்காரக் கொடிகள் அல்லவாம். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் அர்த்தமுள்ள கொடிகளாம்.




ஹலேபீடு ஹொய்சாலேஷ்வரர்



கர்நாடகாவில் சிற்பக் கலைக் களஞ்சியமாகப் போற்றப்படும் இக்கோவிலின் சுவர்களில் இந்துமதப் புராணக் கதைகளை விளக்கும் பறவைகள், விலங்குகள், நடன உருவங்கள் உள்ளிட்ட எண்ணிலடங்கா சிற்பங்களைக் காணலாம். எந்த இரண்டு சிற்பங்களும் ஒன்றைப் போல ஒன்றில்லாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பது இவற்றின் தனிச் சிறப்பு.






ஷ்ராவணபெலகுலா கோமதீஸ்வரர்



பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ள சந்திரகிரி எனும் குன்றின் மேல் எழுதருளியுள்ள கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்ததாகும். ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 57 அடி.

தீர்த்தங்கரராகிய கோமதீஸ்வர் கடுந்தவம் புரிகையில் அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சிலையும் அந்த கோலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது திருமுடி அருகே பக்தர் நின்று அபிஷேகம் செய்ய அந்த உயரத்துக்கு தளம் அமைத்து வசதி செய்து தரப்படுகிறது. 2006-ல் அவ்விழாவையொட்டி சென்றிருந்த போது எடுத்த படமே இது.





தீயசக்திகளுக்கு சிம்மசொப்பனமாய் மகிஷாசுரன்




மைசூர் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க குன்றேறி வருபவர்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து வரவேற்கும் நெடிந்துயர்ந்த மகிஷாசுரனை, வெருண்டோ வியந்தோ (முகம் தெரியவில்லை பாருங்கள்) வேடிக்கைப் பார்க்கும் ஒரு பாப்பாவுக்கு முத்தாய்ப்பாய் ஒரு பாட்டு சொல்லிப் பதிவினை முடிக்கிறேன்..



வீரனாய் சூரனாய்.. [பாப்பா பாட்டு]


காவல் தெய்வம் கைகளில் அரிவாள்
தீயன செய்வோரை ஓட விரட்டிடத்தான்;
உருட்டிமுழிக்கும் பார்வையும் மீசையும்
பாவம் பண்ணுபவர் பயங்கொள்ளத்தான்;
கைக்குள்அடக்கி வைத்திருக்கும்நாகம்
'அடக்குவேன் உமையும் அப்படியே'
என்று அசுரரை மிரட்டிடத்தான்-ஆனால்
வீரனுக்கு அழகு ஆயுதம் ஏந்துதல்
சூரனுக்குஅடையாளம் அடுத்தவரை ஆளுதல்
எனும் எண்ணந்தனை வளர்த்திடாதே பாப்பா!
மாலையும் மரியாதையும் கிடைக்குமென்ற
மாயவலையில் வீழ்ந்திடாதே பாப்பா!
தெய்வத்தின் நியாயத்தை உன்னோடு
பொருத்திப் பார்த்திடலாகாது பாப்பா!
துளிர்த்து வரும் உன் தலைமுறையாவது
தீவிரவாதத்தைத் தொலைத்து முழுகட்டும்பாப்பா!
அறிவிலும் ஆற்றலிலும் வீரராய் சூரராய்-
அன்பாலும் பண்பாலும் அனைவர் மனங்களையும்
வென்றிடத் தெரிந்த தீரராய்த் திகழட்டும்பாப்பா!

***

*26/11 நிகழ்வில் கைதான இளைஞன் நேற்றுமுன்தினம் மடைதிறந்த வெள்ளம் போலத் தந்திருக்கும் வாக்குமூலமும், மனசாட்சியற்ற செயல்களின் இலக்கும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. உருவாகி வரும் இளைய சமுதாயம் வாழ வேண்டும் வளமாக, நல்வழியில் நடைபோட்டு!





நன்றி விகடன்!











  • தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற பதிவு! இதற்காக ரூ.ஐநூறு பெறுமானமுள்ள புத்தக கூப்பனை அனுப்பி வைத்த தமிழ் மணத்துக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin