இலவசங்களால் வலைபின்னி
வாக்குறுதிகளால் தூண்டிலிட்டு
தேர்தல் தோணியிலே
வெற்றிமீன் பிடிப்பவருக்கும்
கூட்டணியெனும் வலைபின்னி
மத்தியமந்திரி எனும் தூண்டிலிட்டு
அதே தோணியில்
தொகுதிமீன் பிடிப்பவருக்கும்
உயிரைப் பணயம் வைத்து
வயிற்றைப் பிழைப்புக்கென்று
ஆழ்கடலில் வலைவீசி
வாழ்வோடு போராடுபவர்
வலிகள் புரிவதில்லை
இயற்கை சீறிடுமோ
என்பதுடன்
தோட்டாக்கள் துளைத்திடுமோ
எனவும்
தவியாய் தவித்தபடி
கரையில் கண்ணீருடன்
காத்திருக்கும் உற்றவரின்
வேதனைகள் பொருட்டில்லை
இன்று..
கணக்கற்ற இனக் கொலைகள்
கடலுக்குள் தினம் நடக்க
பிணக்கம் வேண்டாம் அரசுடனென
ஊடகங்கள் மூடி மறைக்க
வந்தாலும் வரக்கூடும்
நாளை விளம்பரங்கள்
அழகான மீன் படத்துடன்
முத்தான எழுத்துக்களில்
சிறுமி கொடுக்கும் கடிதம்
‘அன்புள்ள முதல்வருக்கு
ஆனந்தி எழுதுவது..
ஐந்து லட்சத்துக்கு நன்றி!’
***
நாம் கொடுப்போம் வாரீர்
மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு!
***
- http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 773-வது நபர்தான் நான் நேற்று. ஒரு இலட்சம் பேர்களின் கையெழுத்துக்கள் சேர்ந்தால் மீனவரின் தலையெழுத்தை மாற்றி அமைக்க உரியவரை அணுக முடியும் எனும் நம்பிக்கையுடன் தொடங்கப் பட்டிருக்கும் ஒரு கூட்டு முயற்சி இது. இணைந்திடுங்கள் குரல் கொடுக்க!