புதன், 22 ஜூலை, 2009

LAND MARK - July PiT மெகா போட்டிக்கு

இம்மாதம் மெகாப் போட்டி. தலைப்பு: LANDMARK. பெங்களூரில் கடந்த ஒருவாரமாக வானம் மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுவதால் விதான் செளதா, விகாஸ் செளதா, UB City இவற்றைப் படம் பிடிக்க நினைத்து முடியாமல் போகவே, வழக்கம் போல் ஏற்கனவே எடுத்தவற்றில் தேர்ந்தெடுத்தது. ஒன்றிரண்டு மீள்படங்கள்,தலைப்புக்குப் பொருத்தமாய்த் தோன்றியதால்:)! ‘

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் உலவியில் 'view' க்ளிக் செய்து அதில் 'zoom-zoom in' செய்து காணக் கேட்டுக் கொள்கிறேன்.]


வங்கக் கடல் மீதினில்..


பல்லவர் பெருமையைப் பறைசாற்றும் கடற்கரைக் கோவில்



அலைகடல் ஓரம் கலையழகுக் கோபுரம்



[கடந்த PiT பதிவில் போட்டிக்கு அன்றி பார்வைக்கு வைத்ததில், பலருக்கும் பிடித்திருந்த இப்படமே மெகாவிற்கான என் தேர்வாக உள்ளது.]





முக்கடலும் சங்கமிக்கும் முனையினில்..


உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்
உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
உலகப் புகழ் பெற்ற குறளை
எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை!

***

விவேகானந்தா மணிமண்டபம்



***


1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு
133 அடி உயரத்தில் செய்யப்பட்டிருக்கும் மரியாதை


***





தன்னை உணர.. ஞானம் பெற.. தியானமே வழி



மைசூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் "பைலாகுப்பே' என்னும் ஊரில், குஷால் நகர் என்னுமிடத்தில் உள்ளது இந்தத் தங்கக் கோவில். திபெத்திலிருந்து இந்தியா வந்து இப்பக்கம் குடியேறிய திபெத்தியர் கட்டியுள்ள பௌத்த மதக் கோவில்.

மிகப்பெரிய வளாகத்தில் வெவ்வேறு மண்டபங்களாக அமைந்துள்ளது. புத்த மதத்தின் மிக முக்கியமான அம்சம் தியானம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற தியானம் உதவுகிறது என்பது இவர்களுடைய கொள்கை. மேல் இருப்பது பிரதான தியான மண்டபம்.
***


தர்மச் சக்கரத்துடன் தங்கப் கோபுரம்




கோவிலின் இன்னொரு மண்டபம் இது. கோபுரம் தங்க நிறத்தில் மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைந்துள்ளது. உச்சியில் காணப்படும் தர்மச் சக்கரம் புனிதச் சின்னமாக மதிக்கப் படுகிறது.

கோபுரஉச்சியிலிருந்து கீழே உள்ள பாகங்களை இணைக்கிற விதமாய் பல வண்ணத் துணியினாலான நான்கு தோரணக் கொடிகள் உள்ளதை இரண்டு படங்களிலுமே காணலாம். அவை வெறும் அலங்காரக் கொடிகள் அல்லவாம். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் அர்த்தமுள்ள கொடிகளாம்.




ஹலேபீடு ஹொய்சாலேஷ்வரர்



கர்நாடகாவில் சிற்பக் கலைக் களஞ்சியமாகப் போற்றப்படும் இக்கோவிலின் சுவர்களில் இந்துமதப் புராணக் கதைகளை விளக்கும் பறவைகள், விலங்குகள், நடன உருவங்கள் உள்ளிட்ட எண்ணிலடங்கா சிற்பங்களைக் காணலாம். எந்த இரண்டு சிற்பங்களும் ஒன்றைப் போல ஒன்றில்லாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பது இவற்றின் தனிச் சிறப்பு.






ஷ்ராவணபெலகுலா கோமதீஸ்வரர்



பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ள சந்திரகிரி எனும் குன்றின் மேல் எழுதருளியுள்ள கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்ததாகும். ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 57 அடி.

தீர்த்தங்கரராகிய கோமதீஸ்வர் கடுந்தவம் புரிகையில் அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சிலையும் அந்த கோலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது திருமுடி அருகே பக்தர் நின்று அபிஷேகம் செய்ய அந்த உயரத்துக்கு தளம் அமைத்து வசதி செய்து தரப்படுகிறது. 2006-ல் அவ்விழாவையொட்டி சென்றிருந்த போது எடுத்த படமே இது.





தீயசக்திகளுக்கு சிம்மசொப்பனமாய் மகிஷாசுரன்




மைசூர் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க குன்றேறி வருபவர்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து வரவேற்கும் நெடிந்துயர்ந்த மகிஷாசுரனை, வெருண்டோ வியந்தோ (முகம் தெரியவில்லை பாருங்கள்) வேடிக்கைப் பார்க்கும் ஒரு பாப்பாவுக்கு முத்தாய்ப்பாய் ஒரு பாட்டு சொல்லிப் பதிவினை முடிக்கிறேன்..



வீரனாய் சூரனாய்.. [பாப்பா பாட்டு]


காவல் தெய்வம் கைகளில் அரிவாள்
தீயன செய்வோரை ஓட விரட்டிடத்தான்;
உருட்டிமுழிக்கும் பார்வையும் மீசையும்
பாவம் பண்ணுபவர் பயங்கொள்ளத்தான்;
கைக்குள்அடக்கி வைத்திருக்கும்நாகம்
'அடக்குவேன் உமையும் அப்படியே'
என்று அசுரரை மிரட்டிடத்தான்-ஆனால்
வீரனுக்கு அழகு ஆயுதம் ஏந்துதல்
சூரனுக்குஅடையாளம் அடுத்தவரை ஆளுதல்
எனும் எண்ணந்தனை வளர்த்திடாதே பாப்பா!
மாலையும் மரியாதையும் கிடைக்குமென்ற
மாயவலையில் வீழ்ந்திடாதே பாப்பா!
தெய்வத்தின் நியாயத்தை உன்னோடு
பொருத்திப் பார்த்திடலாகாது பாப்பா!
துளிர்த்து வரும் உன் தலைமுறையாவது
தீவிரவாதத்தைத் தொலைத்து முழுகட்டும்பாப்பா!
அறிவிலும் ஆற்றலிலும் வீரராய் சூரராய்-
அன்பாலும் பண்பாலும் அனைவர் மனங்களையும்
வென்றிடத் தெரிந்த தீரராய்த் திகழட்டும்பாப்பா!

***

*26/11 நிகழ்வில் கைதான இளைஞன் நேற்றுமுன்தினம் மடைதிறந்த வெள்ளம் போலத் தந்திருக்கும் வாக்குமூலமும், மனசாட்சியற்ற செயல்களின் இலக்கும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. உருவாகி வரும் இளைய சமுதாயம் வாழ வேண்டும் வளமாக, நல்வழியில் நடைபோட்டு!





நன்றி விகடன்!











  • தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற பதிவு! இதற்காக ரூ.ஐநூறு பெறுமானமுள்ள புத்தக கூப்பனை அனுப்பி வைத்த தமிழ் மணத்துக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

திங்கள், 13 ஜூலை, 2009

பால் நிலா



மொட்டுஅதுத் தானாகக்
கட்டவிழும் முன்னே
பட்டுடுத்தி அலங்கரித்துப்
பாதந்தனைப் பற்றியெடுத்து
அம்மிமேல் வைத்தழுத்தி
அருந்ததியைப் பார்க்கவைத்து
கட்டிவைக்கிறார் அவசரமாய்
கடமையை முடித்திட..!

ஈரைந்து திங்களிலே
ஆடுகிறது தொட்டில்.
தொலைத்திட்ட அவள்
பருவம்போலத் துலங்குகின்ற
பால் நிலவை-
அழைக்கின்றாள் தேன்குரலில்
அழகாகத் தன்தாலாட்டில்
குழந்தைக்கு அமுதூட்டத்
துள்ளியோடி வருமாறு..!

***

  • படம்: இணையத்திலிருந்து

  • யூத்ஃபுல் விகடனில் எனது இருபத்தைந்தாவது படைப்பாக 12 ஜூலை 2009 வெளிவந்துள்ள கவிதை:











திங்கள், 6 ஜூலை, 2009

ரசிகன்




பூமித் தாயைக் கண்ணில் ஒற்றிப்
புதையலாய்க் கையில் ஏந்திப்
பார்த்துப் பார்த்துப் பக்குவமாய்ப்
படைத்து வைத்தப பாண்டங்கள்-
பாழாகிப் போகுமேயெனப்
பதறிப் போகாமல்..

வருண பகவான
கருணை மிகக்கொண்டு தன்
வருகையை மறுகோடிக்கும்
தெரிவிக்கத்

தோற்றுவிக்கும்
அழகிய வானவில்லைத்
தொலைதூரத்திலிருந்து
கண்டதுமே-

பரவசமாகிப் போகின்ற குயவன்..

வாழ்க்கையை
நலம் விசாரிக்க வரும்
இனிய தருணங்கள் யாவற்றையும்-
இயல்பாக அள்ளியணைத்து
அனுபவிக்க
வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!
***


படம்: இணையத்திலிருந்து..

4 ஜூலை 2009 யூத்ஃபுல் விகடன்
இணைய தளத்தில் வெளியான கவிதை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin