வியாழன், 29 மே, 2008

கல்விச் சந்தை


கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!
புற்றீசல் போலத் தொழிற் கல்விக் கூடங்கள்!
பெற்றவரின் சேமிப்பைச் சரியாகக் குறி வைத்து...
கல்லூரிக்கும் விளம்பரங்கள்! கூறு போட்டுக் கூவி
கொடுக்கிறார்கள்-என எண்ண வைக்கும் அவலங்கள்!


மாணவ மணிகள் கை நிறைய அள்ளி வரும்
மதிப்பெண்களுக்கு இல்லை ஏதும் மதிப்பு!
பெற்றவர்கள் கை இடுக்கில் கொண்டு வரும்
பெரும் தொகைக்கே நல் வரவேற்பு!
இருப்பவர்களுக்கு இருப்பதில்லை இதிலேதும் பிரச்சனை.
இல்லாதாருக்கு கிடப்பதோ விரும்பியதைக் கல்லாமை!


கட்டிடத்துக்குள் கால் வைக்கத் தலையை அடகு வை,
கேட்ட பாடம் கிடைக்க உன்னையே அடகு வை!
எங்கு செல்லும் ஏழை வர்க்கம் என
எண்ணிப் பார்க்கவும் நேரமில்லை ஒரு பக்கம்!
ஆயினும் கல்விச் சந்தையிலே வியாபாரம்
சூடு பறக்கிற விந்தை மறு பக்கம்!


கொட்டிக் கொடுப்போருக்கும் யாரிதைத்
தட்டிப் பறிக்கின்றோம் என்று அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறதே ஒரு குற்ற உணர்வு!- சரி
கட்டி விட்டார் அதையும்தான் பெருமை மிகு
'பெய்ட் சீட்' என்ற பெயரில்- ஆகப்
'பெய்' என்றால் பெய்யுது மழை இவர் காட்டில்!


தருவது தருமத்துக்குப் புறம்பில்லையெனப் பலரும்
தேற்றிக் கொண்டார் காலத்தின் தேவையிதுவென-
தருவதற்குத் தயாரெனும் போது தயங்குவானேனென
விற்றவரும் எண்ணி விட்டார் சட்டமிருக்கையில் துணையென-
குற்றம்தான் யார் மீதும் சுமற்றிட வழியின்றிக்
கொற்றவனும் அன்றோ வீற்றிருக்கிறார் உடந்தையென?


ஏங்கி நிற்குது பார் இளைய இந்தியா
எங்கு இருக்கிறது இதற்குத் தீர்வு என!
கனவுகளே கூடாதா திறமை இருந்தும்?
கதவுகளே திறக்காதா வறுமை புரிந்தும்?
ஆசை இருந்தும் ஆசி இல்லை!
கல்வி வாங்கக் காசில்லை!


அடிப்படை அறிவைக் கோருவது
அவரது குன்றாத உரிமை!
அதைத் தடையின்றி வழங்குவது
அரசின் தலையாயக் கடமை!
கவனிக்குமா இப் பிரச்சனையைக்
கருணையுடன் கல்வியின் தலைமை?


கனாக் காணும் மாணவரின் கனவு கலைந்திடாது
காத்திட வழியொன்று சொல்வதற்கே-
நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?
இலவசமாகவோ இனாமாகவோ இல்லாவிடினும்
நியாய நிதியிலே எல்லா தரப்பினரையும்
கல்வி சென்றடையச் செய்வாயா?

***

(July 17, 2003 திண்ணை இணைய இதழில் 'நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?' என்கிற தலைப்புடன் வெளி வந்தது. இன்று வரை இந்த நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பெண்கள் இருந்தும், பல்வேறு காரணங்களால் விரும்பிய துறை, கல்லூரி, பாடம் கிடைக்காத காரணங்களால் உயிரையே மாய்த்துக் கொள்ளும், அல்லது அந்த முடிவு வரைத் தள்ளப் படும் மாணவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.)

[படம்: இணையத்திலிருந்து]செவ்வாய், 27 மே, 2008

கூழ்ச் சறுக்கு

கோடை வந்தால் கூடவே நினைவுக்கு வருவது கூழ் வற்றல். கூழ் வற்றல் என்றால் எங்களுக்குக் கூடவே நினைவுக்கு வருவது கூழ்ச் சறுக்கு. குளு குளு வெண் பனிச் சறுக்கு தெரியும்? அது என்ன கூழ்ச் சறுக்கு? சற்றுப் பொறுங்கள்! சகோதரிகள் நாங்கள் கூடி மலரும் நினைவுகளை அசை போடுகையில் மறக்காமல் நினைவு கூர்ந்து சிரித்து மகிழும் ஒரு சின்னச் சம்பவம்.

சிறு வயதில், எல்லா வீட்டிலும் போல கூழ் வற்றல் போடும் வைபவம் எம் வீட்டிலும் திருவிழா போலத்தான் திமிலோகப் படும். முன்னிரவே பின் முற்றத்தில் பெரிய பித்தளை அண்டாவில் கூழ் காய்ச்சப் படும். [தற்சமயம் US-ல் இருக்கும் என் சிறிய தங்கை இந்தியா வரும் போது அவளுக்குப் பிடிக்குமென அத்தனை பெரிய அண்டாவில் ஒரு காலத்தில் காய்ச்சிய கூழை சின்னஞ்சிறு பால்(வால்) சட்டியில் அம்மா காய்ச்சிக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கும். சரி விஷயத்துக்கு வருவோம்.] மறுநாள் காலையில் 'பாலாடை' போல் படர்ந்த்திருக்கும் கெட்டியான 'கூழாடை'க்கு ஒரு போட்டா போட்டியே நடக்கும். அதே போல் முழுமையாகக் காயாத வற்றல் ஒரு தனிச் சுவை. அதையும் விட்டு வைப்பதில்லை.

இருள் பிரியும் முன்னரே அனைவரும் எழுப்பி விடப் படுவோம். அம்மாவும் சின்ன பெரியம்மாவும் கையில் திணிக்கும் 'லொட்டு லொசுக்கு'சாமான்களை மேல் தட்டட்டி(மொட்டி மாடி)க்கு எடுத்துச் செல்வதும், அங்கு 'பராக்கு'ப் பார்க்காமல் காக்காய் விரட்டுவதும்தான் எங்கள் ட்யூடி!

ஒரு சமயம் முழு வேட்டியில் முதுகொடிய முத்து முத்தாய் வற்றலை இட்டு விட்டு 'அப்பாட!' என இடுப்பில் கை வைத்தபடி எழுந்து நின்றார்கள் என் பெரியம்மா. அருகே குட்டைச் சுவர் மேல் நின்றிருந்த என் பெரிய தங்கை (அப்போது ஆறேழு வயதிருக்கும்) காக்காய் விரட்டுகிறேன் பேர்வழி என்று 'உஷ்' என எம்பிக் குதித்தவள் 'சர்' என குளு குளு வெண் கூழில் சறுக்கி, முக்கால் வேட்டி கூழை முதுகிலே அப்பியபடி மல்லாந்து விழுந்தாளே பார்க்கலாம்:-))))! தான் இட்டு முடித்த கூழின் அழகைத் திருப்தியுடன் ஒரு கணம் ரசித்து நின்றிருந்த என் பெரியம்மாவின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே:-((((! அப்புறம் என்ன, 'பூசை'தானே என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி. நாங்கள் பெரியம்மா செல்லங்கள்!

புதன், 14 மே, 2008

மே PIT -'ஜோடி'க்காக வேடிக்கையாக எடுத்தவை..


போட்டிக்கான படங்கள் முந்தைய பதிவில்! இவை தங்கள் பார்வைக்காகப் பல 'ஜோடி'களை வீட்டுக்குள்ளேயே ஓடியோடி வேடிக்கையாகப் பிடித்தது! ரசிக்க முடியுதா பாருங்க!

இந்த ஜோடிக்குத் தேவை...

இந்த ஜோடியின் சேவை!
*** *** ***
ஜோடிப் பொர்ருத்தம் பார்க்க வாரீங்களா?


தண்ணிக் குடமெடுத்து தங்கமணி காட்டு வழி நடை போட
கையில் கம்பெடுத்து ரங்கமணி காவலுக்குக் கூட வர..
***"ராஜாவின் பார்வை..."


***"ஆகா! என்னப் பொருத்தம்..."


*** *** ***


காலம் பொன்னானதெனத் தூக்கி காட்டும் கண்மணிகள்!
***கடமை கண்ணானதெனக் கூடை சுமக்கும் குமரிகள்!
*** *** ***தரையில் தவழும் வாத்துக்களே போட்டிக்குப் போகையிலே...
புறப் படுவோம் நாமுமெனப் புயலாய்ப் பாயும் புரவிகள்!


*** *** ***கொஞ்சம் திரும்புங்க பசங்களா..


***


தெரியாம சொல்லிப்புட்டேன் சாமிங்களா!


*** *** ***

செவ்வாய், 13 மே, 2008

மே PIT போட்டி-'ஜோடி'க்காகத் தேடியெடுத்துப் போட்டவை

இரு ஞானிகள் இரு பாறைகள்
அண்டசாகரங்கள் அவற்றின் அர்த்தங்கள்!


"எல்லோரும் வாழ்கிறோம் எதையோ தேடி! இருக்குது பார் விடை இங்கே" எனக் கூறும் 'நான்கு ஜோடி'களைகத் தன்னுள் அடக்கிய இந்த முதல் படத்தை PIT-மே 2008-போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன்!


உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்-
உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
உலகப் புகழ் பெற்ற குறளை
எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை!

அலைகடலில் நீந்திக் கரைசேரும் வண்ணமாய்
வள்ளுவர் வகுத்த இம்மைக்கான
வாழ்வியலைக் குறிக்கும் ஆழ்கடலும்-
விவேகானந்தர் போதித்த மறுமைக்குமான
ஆன்மீகத்தின் அடையாளமாய் ஆகாயமும்-
வாழ்வின் 'இரு' ஆதார அர்த்தங்களைப்
பிரதிபலிக்கும் அடுத்த அற்புத ஜோடி!


*** *** ***


ஜோடிக் கம்பிகளுக்கிடையே
காணக் கிடைத்த ஜோடிப் படகுகள்!
*** *** ***ஜோரான ஜோடித் தந்தங்களுடன்
ஜோடி ஆனைகள்!

*** *** ***


ஒளிரும் சிப்பிக்கள்!


*** *** ***


சிப்பிகளுக்குள்ளிருந்து சிலிர்த்துக் கிளம்பும் டால்ஃபின்கள்!
*** *** ***நானின்றி நீயில்லை!


*** *** ***


சக்தியின்றி சிவனில்லை!உலகை ரட்சிக்கும் எம் பெருமானுடன்
ஊஞ்சலிலே ராஜ ராஜேஸ்வரி அம்பாளும்-
அடுக்கு விளக்குகளும்-
கோலக் கமலங்களூம்!


*** *** ***
எத்தனை ஜோடி எண்ணுங்கள் என்பதை விட
எதுவெல்லாம் ஜோடி சொல்லுங்கள் என்பதே சரி!மிளிரும் மின் விளக்கும் ஒளிரும் குத்து விளக்கும்
சிற்பத்தில் ஆனைகளும் சற்று கீழே இரு புறத்தில்
சர மணிக் கொத்துகளும் ஜோடி ஜோடியாய்
அல்ங்கரிப்பது போதாதென ஆறு ஜோடி மணிகள்!
*** *** ***
ஞாயிறு, 4 மே, 2008

விழுந்த கல்லும் புகையும் கல்லும்

விழுந்தது கல்

வருண பகவான்
கருணை மழையால்
அணை தாண்டிக்
காவேரி கரை தொட்டோட-
தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சனை-
தற்காலிகமாகவேனும்
தலை தூக்காதெனச்
சற்றே நிம்மதிப் பெருமூச்செறிந்த
தமிழன் தலையில்
விழுந்தது (ஹொகேனக்)கல்!
***

புகையும் கல்

ஹொகேனக்கல்
என்றால்
'புகையும் கல்' எனப்
பொருளாமே
கன்னடத்தில்.
தம் எல்லை
தாண்டிப் போனாலும்
தமக்குப் பயன்படாத
தண்ணீரே ஆனாலும்
தமிழன் தாகம்
தீர்க்கப் போகிறது
என்றதுமே
ஒரு சிலரின்
காது வழியே
'புகையும் கல்'தானோ
ஹொகேனக்கல்?
***

படங்கள்: இணையத்திலிருந்து

காலத்தின் கட்டாயம்


வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*
நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*
எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*
ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*
இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*
கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*
கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
***

செப்டம்பர் 18, 2003 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை

30 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:


ஒன்று பட்டால்...
உள்ளத்தை உணர்த்துகின்ற
ஒலிவடிவே மொழி என்றால்
உலகம் உய்த்திருக்க
ஒருவழிதான் ஒருமொழிதான்
அதுவே அன்புமொழி.
வாழ்க்கைக்கு வழிகாட்டும்
ஒளிவிளக்கே மதம் என்றால்
வையகத்தை வாழ்விக்க
'ஒன்றேகுலம் ஒருவனேதேவன்'
என்பதுவே வேதம்.
***

மொழியின் ஒலிவகை
பலவாக இருப்பினும்
பண்பெனும் பாதையிலே
அம்மொழிப் பாதங்கள்
பயணிக்கையிலே
பாஷைகளின் ஓசைகள்யாவும்
நேசத்துடன் இனிமையாய்
தேசிய கீதத்துக்கு
இசை அமைத்திடாதோ!
***

மதங்களிலே இந்துமதம்
எடுத்துரைக்கும் அறநெறிகளும்;
விவிலியம் கற்பிக்கும்
கருணவடிவாம் கர்த்தரின்
வாழ்வும் போதனையும்;
குர்ஆன் உரைக்கும் உயர்நெறிகளும்;
மாற்றானை நேசிக்கவும்-
மனசாட்சிக்கு பயப்படவும்-
மனிதநேயம் வளர்க்கவும்-
வலியுறுத்தும் வழிகாட்டிகளாய்த்தான்
விளங்குகின்றன திகழுகின்றன!
***

சமுத்திரத்தில் சங்கமமாகும்போது
சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்
சமத்துவமாகி விடுகின்றன.
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-
அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று
பிரித்தறிந்திட இயலுகிறதா?
***

வார்த்தைகளால் வர்ணிக்க வாராது
விவரிக்க விவரிக்க வியப்பேற்றும்
வரலாற்றுச் சிறப்புகள்
ஒவ்வொரு மொழிக்கும்
ஒவ்வொரு மதத்துக்கும்
உண்டென்றாலும் கூட
இந்திய சரித்திரமெனும்
மகா சமுத்திரத்தில்
சங்கமிக்கையில் அவற்றினிடையே
பேதம்பார்ப்பது பேதமையல்லவா?
***

கடலிலே கலந்திட்ட மழைத்துளியைக்
கண்டெடுப்பது ஆகிற காரியமல்ல.
அன்புக்கடலிலே மக்கள் கலந்துவிட்டால்
அவர்களைப் பிரிப்பது சுலபமல்ல.
பாஷைகள் பலவானால் என்ன ?
மதத்தால் மாறுபட்டால் என்ன ?
பார்க்கின்ற பார்வையிலே
பாசத்தைப் படரவிட்டால்
வாழ்கின்ற வாழ்க்கை வசந்தமாகுமே!
தேசத்தில் ஒற்றுமையுணர்வு
தேனாறாய் ஓடுமே!
***

எந்தத்தாயும் தன் குழந்தைகள்
ஒன்றுபட்டு வாழ்வதை
விரும்பிடல் இயல்பு.
பாரதமாதாவும் அதற்கில்லை
பாருங்கள் விதிவிலக்கு.
நம்போல வேற்றுமையிலே
ஒற்றுமைகாண வேறெருதேசம்
இனிப்பிறந்துதான் வரவேண்டுமெனப்
பெருமிதமாய் பேசிப்பூரித்திருந்த
பொழுதுகள் யாவும்-
இன்று கனவுக்காட்சிகளோ எனக்
காற்றோடு காற்றாய்க் காணமல்
போய்க் கொண்டிருக்கின்றன.
***

மனம் வலித்தாலும்
மறுக்க முடியவில்லையே!
கணக்கிட்டால் நாம் களித்திருந்த
கணங்களை விடவும் மனம்
வலித்திருந்த கணங்கள்தாம் அதிகம்.
அவர் தம் மொழியினரே;
ஆயினும் தம்மதம் இல்லையென
அடித்துக் கொள்கிறார்.
அவர் தம் மதத்தவரே;
ஆயினும் தம்சாதி இல்லையென
வெட்டி வீழ்த்த விழைகிறார்
சுட்டுத் தள்ளவும் துணிகிறார்.
***

இன்னாரின் தொழில் இதுவென்றறிய
அன்னாளில் தோன்றியதே சாதி.
திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-
எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்
வரிசைகட்டி நிற்கின்ற இந்த
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
சாதி எனும் சங்கடத்தைப்
பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?
நீ இந்தஇனம் நான் அந்தஇனமென
உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே
இழிவுபடுத்துதல் ஆகாதா?
***

'சுதந்திரம் ' என்ற குறிக்கோளுக்காக
அன்று ஒன்றுபட்டு நின்றதால்தான்
'இந்தியா 'வை முழுமையாகப் பெற்றோம்.
இன்று சிதறிவிடுவோமோ என்கின்ற
அச்சம்ஒன்றே மிச்சமாகி நிற்கின்றோம்.
***

சுனாமிநம்மைச் சூறாவளியைப் போலச்
சூரையாடிய போது மொழிம்தம்இனம்
மட்டுமின்றி தேசமும் தாண்டிய
மனிதநேயம் பார்த்து
மலைத்துப்போனோமே!
அந்தநேயம் கண்டு நெஞ்சுருகி
நின்ற யாவரும்-
'மனிதம்' கற்ற மகத்தானநேரமது.
இந்திய இதயங்களிலும் ஈரம்
முற்றிலுமாய் வற்றிவிடவில்லையென
நம்பிக்கை விதைகள் விழுந்ததருணமது.
***

இயற்கையின் சீற்றத்தால்-
இழப்புக்கள் நேர்வது விதி.
மனிதனின் சீற்றத்துக்கு-
மனிதன் பலியாவது வலி.
வந்துபோன சுனாமி மற்றுமொரு
வரலாற்று வேதனையெனக்
குறிப்பெழுதி ஒதுக்கி விடாமல்;
வரும்நாளில் கற்றுணர்ந்த மனிதத்தை
கணநேரமும் மறவாதிருப்போம்.
***

பலிவாங்கும் பழிவாங்கும்
பாவ காரியங்களுக்குப்
பலம் கொடுப்பதில்லை
படை திரட்டுவதில்லையெனப்
பத்திரம் எழுதிடுவோம்.
விவேகத்தை வளர்த்துக் கொண்டால்
விரோத நினைப்புக்கள் விடைபெறும்.
துவேஷத்தைத் துடைத்து விட்டால்
துர்எண்ணங்கள் தோற்று விடும்.
மாசற்ற மனமே பாசம்வளர்க்கும்,
தேசம் தாண்டியும் நேசக்கரம்நீட்டும்.
***

நம் 'மக்கள்சக்தி ' கண்டு
மாபெரும் தேசம் யாவும்
மருண்டு மலைத்து
வியந்து நிற்கின்றன.
நம்உதவியில் உயரஉவந்து
விரைந்து வருகின்றன;
உதவியபடியே நம்மையும்
உயர்த்திக்கொள்ள உன்னதநேரமிது.
***

இன்று உலகமே நம்
ஒவ்வொரு அசைவையும்
கூர்ந்து கவனிக்கிறது.
இழை பிசகினாலும் இந்தியாவுக்கு
இறங்கு முகமே!
வேண்டாமே அந்த வேதனை.
கடந்து வந்த சோதனைகள்
கற்பித்தப் பாடங்கள் போதுமே.
***

வரும்நாளில் இந்தியா வல்லரசாய்
வளர்ந்திடத் தெளிவோடு ஒன்றுபட்டால்..
சாதனைகள் சத்தியமாய் சாத்தியம்,
சிகரத்தை எட்டிடலாம் சீக்கிரம்!
*** *** ***
[படம்: இணையத்திலிருந்து]


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin