வெள்ளி, 31 டிசம்பர், 2010

தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்.. - 2010_ல் முத்துச்சரம்

ஆய கலைகள் அறுபத்து நான்கு. எழுத்து, புகைப்படம், ஓவியம், நடனம், இசை, சமையல் என எந்தக் கலையானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தோமானால் அதைவிடச் சிறந்த தியானம் வேறில்லை என்றே தோன்றும். ஆழ்கடலின் அடிதொட்டு வந்தாலும் கையுக்குள் கிடைப்பது ஒரு முத்தாகவே இருக்கும். தேர்ச்சி பெற்று விட்டோம் என எண்ணி விட்டால் தேங்கி நின்று விடுவோம். முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா:)?

எனக்கும்... ஒரு மயக்கம்...’ எனும் தனது 199-வது பதிவில் தோழி கவிநயா நடனக் கலை மீதும் எழுத்தின் மீதும் தனக்கிருக்கும் மயக்கத்தை அழகாய் சொல்லியதோடு தொடர்பதிவாக அதை எடுத்துச் செல்ல வேண்டுகோளும் வைத்திருக்கிறார் இங்கே.

நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர், தனது 200-வது பதிவினைக் கடந்து விட்டுள்ளார் சமீபத்தில். இன்று போல் என்றும் அழகிய தமிழில் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து தந்து கொண்டேயிருக்க அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

அடுத்து நம்ம விஜி "2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ பற்றி தொடருமாறு அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார் இங்கே.

இருவரின் அழைப்புக்கும் ஏற்றவகையில் பகிர்ந்திட என்னிடம் எண்ணங்கள் இருக்கவே இந்தப் பதிவு, பேனாவையும் காமிராவையும் சார்ந்த கலைகளை முன் நிறுத்தி..:)!

எழுத்து:
எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன். பள்ளிப் பருவத்தில் அதாவது ஏழு எட்டாவது வகுப்புகளிலிருந்து, ஊரிலிருக்கும் அத்தைகளுக்கும், பெரியம்மா சித்திகளுக்கும், கோடை விடுமுறையில் தோழிகளுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதுவதுண்டு. எழுதிய கடிதங்களை பலமுறை நானே ரசித்து வாசித்த பின்னரே கோந்தின் பக்கம் விரல்கள் செல்லும்.

பள்ளி இறுதி, மற்றும் கல்லூரி காலத்தைய ஆண்டுமலர்கள் கவிதைகள், கதைகள் எழுத வைத்தன. அந்தச் சமயம் ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகை அறிமுகமாக திருமணத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் மும்பையிலிருந்தும் அதில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தப் பத்திரிகை நின்று போக பிறகு வேறு பத்திரிகைகளுக்கு முயன்றுபார்க்கும் ஆவல் ஏற்படவில்லை.

இந்நிலையில் ‘முரசு’ எழுத்துரு தட்டச்சில் தமிழ் எனும் புரட்சியைக் கணினியில் கொண்டு வந்தது. 2003-ல் திண்ணை இணைய இதழை கோமா அவர்கள் அறிமுகப் படுத்த, இணையத்தில் பத்திரிகை.. அதில் நம் எழுத்து.. என்பது பரவசம் தந்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பின் முரசு எழுத்துரு தந்த பிரச்சனையால் அதுவும் அப்படியே நின்று போனது. அப்போதுதான் அகலத் திறந்தன பதிவுலகக் கதவுகள். நெல்லை சிவாவின் மின்மினி வலைப்பூவே முதல் அறிமுகம். [நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று செம்மொழிப் பூங்கா பற்றி பதிவிட்டுள்ளார், பாருங்கள்!] நானானி அவர்களின் வலைப்பூவில் இ-கலப்பைக் கொண்டு பின்னூட்டமிடத் தொடங்கியதே முதல் பதிவுலகப் பிரவேசம்.

அப்புறமாக அதுவரை எழுதியவற்றை எல்லாம் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கோர்க்கத் தொடங்கிய முத்துச்சரத்தை இன்னமும் கோர்த்துக் கொண்டே.. இருக்கிறேன் தீராத ஆர்வத்துடன்.. மாறாத மயக்கத்துடன்..! நன்றி கவிநயா:)!

இப்போது விஜியின் அழைப்புக்குச் செல்கிறேன்!

2010 சிறப்பான வருடமாகவே தொடங்கியது என் எழுத்துக்கு, 'சமூகம்' பிரிவில் தமிழ்மணம் தந்த தங்கப் பதக்க விருதுடன். 'உயிரோசை' இணைய இதழில் முதன் முறையாக என் படைப்பு வெளியாகி, தொடர்ந்து இதுவரை கட்டுரை கவிதைகள் என 8 படைப்புகள் வந்ததில் மகிழ்ச்சி. யூத்ஃபுல் விகடனில் இவ்வருடம் 10 படைப்புகள். வார்ப்பு(10), வல்லமை(9), திண்ணை(11) இணைய இதழ்கள் தொடர்ந்து தந்து வரும் ஊக்கம் குறிப்பிடத் தக்கது. அகநாழிகை, வடக்குவாசல், புன்னகை பத்திரிகைகளில் வந்தன கவிதைகள். அனைத்து ஆசிரியருக்கும் என் நன்றிகள்.

ஒருமுறையே ஆயினும், தமிழ்மணம் வரிசைப்படுத்தி வரும் முன்னணி இருபது வலைப்பூக்களில் பத்தாவது இடம் கிடைத்ததில் தனி மகிழ்ச்சி.

நூறாவது இடுகை
யைத் தொட்டேன் இவ்வருடம்.

தேவதை மற்றும் கலைமகளில் கடந்த வருடம் வலைப்பூ அறிமுகமானது போல இந்த வருடம் ‘ லேடீஸ் ஸ்பெஷல்’ சிறப்பான அங்கீகாரம் தந்தது முத்துச்சரத்துக்கு எனது கட்டுரையையும் வெளியிட்டு.

பத்திரிகை உலகத்தில் பரவலாகப் பல இதழ்களில் தடம் பதிக்க முடிந்ததை என்னளவில் இவ்வருட சாதனையாகக் கருதுகிறேன். தேவதை, ஆனந்த விகடனில் கவிதைகள், தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள், கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களில் சிறுகதைகள். இப்படியாக என் எழுத்துப் பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்து விட்டுள்ளது 2010.

இவ்வருட கவிதைகளில் பிடித்தமானவை: யார் அந்தச் சிறுவன்?; ஒற்றைப் பேனாவின் மை ; அகநாழிகை கவிதைகள்; ஆயிரமாயிரம் கேள்விகள்; ஒரு நதியின் பயணம் போன்றவை. சிறுகதைகளில் ‘வயலோடு உறவாடி..’. கட்டுரைகளில் உலகம் உய்ய.. ; தாயுமானவராய்..; செல்வக் களஞ்சியங்கள்; மேகங்களுக்குப் பின்னால்.. ஆகியன.

சொல்ல விழையும் கருத்துக்களைப் பத்து பதினைந்து வரிகளில் வெளிப்படுத்திவிட்டு நகரும் செளகரியமாகக் கவிதைகளை நான் கருதியதால், அவையும் ஓரளவுக்குக் கை கொடுத்ததால், கட்டுரை மற்றும் சிறுகதைகள் மேல் அதிக ஆர்வம் ஏற்படாமலே இருந்தது. இந்த வருடம் அதில் மாற்றம் வந்திருக்கிறது. காரணம் பதிவுலக நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தித் தந்த ஆலோசனைகளே. ஏற்று நடந்ததில் கை மேல் பலனாய் பத்திரிகைகளில் படைப்புகள். அவர்களுக்கும் கூடவே ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

2011_ல் சிறுகதைகள் மேல் இன்னும் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுவே என் புதுவருட நிலைப்பாடாக உள்ளது. இவ்விரண்டு எண்ணங்களையுமே செயல் படுத்த உதவும் வகையில் அருமையான ஆலோசனைகளுடன் அமைந்திருந்தது, ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் கருத்துக்கள். அவற்றை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் பரிசல்காரன் இங்கே. காணொளியும் விரைவில் இணையத்தில் வருமென எதிர்பார்க்கப் படுகிறது.
*** *** ***

புகைப்படங்கள்:
பதினேழு வயதில் முதலில் கையில் பிடித்தது யாஷிகா-D. அப்பா மட்டுமின்றி அவரது சகோதர சகோதரிகளும் புகைப்படக்கலை வல்லுநர்கள். ஆர்வலர்கள். ஆக இயல்பாக வந்து விட்டிருந்தது எனக்கும் அண்ணனுக்கும் பதின்ம வயதில் இதன் மேலான ஆர்வம். அண்ணனும் நானுமாக அப்பாவின் யாஷிகா-டியில் படமெடுக்கப் படித்துக் கொண்டோம். [எங்களுக்கு முறையே ஒன்பது பத்து வயதாக இருக்கையில் அப்பா காலமாகி விட்டிருந்தார்.] ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிரா. இப்போது எப்படி டிஜிட்டல் கேமிராவில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உள்ளதோ, அது போன்றதானதொரு வசதி அதில் உண்டு.அண்ணனுக்கு ஃப்லிம் ரோலை வீட்டிலேயே கழுவி ப்ரிண்ட் போடுவதிலும் ஆர்வம் இருந்தது. எனக்கு நாட்டம் இல்லை. சின்னதாக ஒரு ஸ்டூடியோ செட் செய்திருந்தார். என் சின்னத் தங்கைதான் அவருக்கு அஸிஸ்டெண்ட். ஆரம்பத்தில் ப்ரிண்ட் போட்டவை பழுப்பு நிறத்தில் வந்தன. பின் சற்று முன்னேற்றம் வந்தது.

பள்ளி இறுதியில் [1982] நான் மும்பைக்கு சுற்றுலா செல்லுகையில் எடுத்துச் செல்ல எளிதாக இருக்குமென அண்ணன் சிபாரிசு செய்ய க்ளிக்-4 காமிரா வாங்கித் தந்தார் தாத்தா. இந்த இரண்டு காமிராவிலுமே நான் அடிக்கடி செய்த தவறு ஒரு படம் எடுத்ததும் அடுத்த படத்துக்கு ஃப்லிம் சுருளை கொண்டு செல்ல மறந்து விடுவது. 12 படங்கள் எடுக்க முடிகிற 120 ஃப்லிம் சுருள் விலை அப்போது பன்னிரெண்டரை ரூபாய்கள். அதில் இப்படித் தப்பு விட்டே நாலு படங்களின் கதை கந்தலாகி விடும்:(!

கல்லூரியில் இருக்கும் சமயத்தில்தான் கலர் படங்களுக்கான 35mm கேமிரா மற்றும் 36mm ஃபிலிம் சந்தைக்கு வர ஆரம்பித்திருந்தன. அம்மா பச்சை கொடி காட்ட ஹாட் ஷாட்-ல் கவனமாக ஆட்டோ வைண்டிங் ரிவைண்டிங் வசதியிருந்த காமிராவை தேர்வு செய்தேன். [ஆம், ஆலோசனை கேட்க என்னோடு காமிராவை கையில் எடுத்த அண்ணனும் இல்லாது போனார்.]

அப்போதெல்லாம் மனிதர்களைத் தவிர வேறெதையும் படம் எடுத்ததே இல்லை! ஃப்லிம் சுருள், பிரிண்ட் செலவு எல்லாம் ‘எதற்கு போட்டு இவற்றை எடுப்பானேன்?’ என்கிற மனோபாவமே பலரையும் போல எனக்கும் இருந்தது!

பள்ளி, கல்லூரியில் எடுத்தவற்றை நண்பருக்கும், உறவினர் மற்றும் அவர்தம் குழந்தைகளை எடுக்கும் படங்களை அவரவருக்கும் உடனுக்குடன் ப்ரிண்ட் எடுத்து அனுப்பி வைக்கிற வழக்கமும் அப்போதிருந்தே உண்டு. இந்த விஷயத்தில் நான் என் அப்பாவைப் போலவே என அடிக்கடி புகழ்வார் என் பெரியம்மா, அம்மாவின் அக்கா.

சமீபத்தில் என் பள்ளி, கல்லூரிகாலத் தோழி என் புகைப்படப் பதிவுகளைப் பார்த்து விட்டு ரொம்ப ஆர்வமாக யாஷிகா-டி, க்ளிக்-4, ஹாட் ஷாட் இவற்றை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளனவா அவை என்று குசலம் விசாரித்தார். யாஷிகா-டியை அப்பாவின் நினைவாகவும் antique piece ஆகவும் பார்வைக்கு வைத்திந்த தங்கை சமீபத்தில் என் வசம் தந்து விட்டாள். செல்ஃப் டைமர் உபயோகித்து பல படங்களை அதில் பள்ளி காலத்தில் எடுத்திருக்கிறேன். மறக்காமல் சிலாகித்தார் அதையும் என் தோழி.

90-களில் கணவர் நைகான் 70W வாங்கித் தந்தார். 2000_களின் தொடக்கத்தில் சோனி TRV140E வீடியோ கேமிரா கைக்கு வர ஸ்டில் படங்கள் எடுப்பது வெகுவாகு குறைந்து எங்கு சென்றாலும் வீடியோவாகவே எடுத்தபடி இருந்தேன். வந்தது டிஜிட்டல் புரட்சியும். நைகான்3700 முதல் டிஜிட்டல். இயற்கை காட்சிகள் கோவில்கள் என எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தது இதிலிருந்துதான். இந்த சமயத்தில் கனமான வீடியோ காமிராக்கள் போய் கையடக்க வீடியோ கேமிராக்கள் வந்தன. கணவர் வற்புறுத்தியும் வாங்க மறுத்து விட்டேன். முக்கிய காரணம் எடுத்தவற்றை மறுபடி போட்டுப் பார்க்க நேரம், பொறுமை எவருக்கும் இல்லை.[பிற்காலத்தில் வரலாம்:)!]மகனும் பள்ளிப் படிப்பைப் முடிக்க, பள்ளி விழாக்களுக்கான பயன்பாடும் இராது என்ற நிலையில் அதிக பிக்ஸல்,க்ளாரிட்டி வேண்டி சோனிW80 வாங்கிக் கொண்டேன்.

2008 மே, பதிவுலகம் வந்த மாதத்திலிருந்து பிட் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொள்ள PiT உதவியது. உதவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆர்வம் தணியாது பார்த்துக் கொள்கிறது. நண்பர் பலரும் இந்த சமயத்தில் SLR-க்கு மாறும் நேரம் வந்து விட்டது என அடிக்கடி சொல்லியபடி இருந்தாலும் அதன் பயன்பாடு குறித்த தயக்கத்தால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சென்ற மாதம் எங்கள் மணநாள் அன்று ‘பழகு’ என வாங்கிக் கையில் திணித்து விட்டார் கணவர்.

நைகான்-D5000 18-55mm பேஸிக் லென்ஸ்+ 55-200mm லென்ஸ், ட்ரைபாட் சகிதம் களமிறங்கியிருக்கும் எனக்கு, பால பாடங்கள் புரிபடவே சிலநாட்கள் ஆயிற்று. முதலில் ‘ஒளி.. ஒரு துவக்கமாய்’ என ஒரே ஒரு விளக்குப் படத்தை ஃப்ளிக்கரில் போட்டுவிட்டு பேசாதிருந்து விட்டேன். 'விளக்குப் பூஜையிலிருந்து இன்னுமா கேமிராவை எடுக்கவில்லை:)?’ என அக்கறையுடன் ஒரு மென் அதட்டல் போட்டார் கருவாயன் என்ற சுரேஷ்பாபு. [இத்தகு நட்புகளே பதிவுலகில் நமக்குக் கிடைத்த வரம்.]

அவர் கேட்டதில் தப்பில்லை. ரெண்டு நாளைக்குக் காமிராவைக் கையில் வைத்து உருட்டி உருட்டிப் பார்த்து விட்டு, அப்பெச்சர்,ஐ எஸ் ஓ, ஷட்டர் ஸ்பீட் எனத் தூக்கத்திலும் உளறி விட்டு, பையில் போட்டு ஜாலியாக மூடி வைத்து விட்டிருந்தேன். இவர் இப்படிக் கேட்டதும் வந்தது வேகம். காட்சிப் படுத்தினேன் அடுத்தநாள்காலை அதிகாலை வானின் மேகத்தை விரிந்த 18mm-ல்.

கடந்த பிட் பதிவின் அந்த மேக ஊர்வலம் இங்கும் ஃப்ளிக்கரிலும் நல்ல பாராட்டைப் பெற்றுத் தர, நம்பிக்கை பிறக்க, தொடர்ந்து இப்போது அதில் படங்கள் எடுக்கப் பழகி வருகிறேன். இருவாரம் முன்னே ஜீவ்ஸ் தலைமையிலான கப்பன் பார்க் புகைப்பட ஆர்வலர் சந்திப்பில் நான் கேட்ட ஒண்ணும் ஒண்ணும் எத்தனை மாதிரியான கேள்விகள் எல்லாவற்றிற்கும் சிரித்துவிட்டு ஆனால் பொறுமையாக பதில் தந்தார்கள் வந்திருந்த அத்தனை பேரும்.

ஆக, 2011_ல் காமிரா பயணத்தின் இலட்சியம் வேறென்னவாக இருந்திட இயலும்? SLR-ன் பயன்பாடுகளை முடிந்தவ்ரை கற்றுத் தேர்ந்திட வேண்டும் என்பதுதான்:)!

மற்றபடி 2010 புகைபடப் பயணமும் தமிழ்மண விருதுடனேயேதான் ஆரம்பித்தது ஜனவரியில். இரண்டு முறைகள் ஃப்ளிக்கரின் ‘இந்தவார சிறந்த படம்’ ஆகத் தேர்வாயின என் படங்கள். குமரகம் புகைப்படங்கள்;தண்ணி காட்டறேன்; லால்பாக் மலர் கண்காட்சி; மலரோடு மலராக; மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.. போன்ற பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிக்கப் பட்டன.

வழிப்பாட்டுத் தலங்கள்; இறையும் கலையும்-நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள் ஆகியன இந்திய சிற்பக்கலையின் அருமையையும், சொந்த ஊரின் பெருமையையும் இற்றைப் படுத்த கிடைத்த வாய்ப்பாக அமைந்து மிகுந்த மனநிறைவைத் தந்தன.

என் மூன்றாம் கண்கள்:)!
இதில் க்ளிக்-4 மட்டும் மிஸ்ஸிங். படத்தை எடுத்தது லேட்டஸ்ட் நைகான் D5000-ல்.

எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்த அழைப்புகளுக்காக கவிநயா, விஜி இருவருக்கும் என் நன்றிகள். விருப்பமானவர் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். விரிவான விவரங்களுக்கும், [நான் அப்படியே பின்பற்றாவிட்டாலும்:)] விதிமுறைகளுக்கும் அவர்களது பதிவுகளைப் பாருங்களேன்.


மிக நீண்ட பதிவாகி விட்டது. கொட்டாவி வந்திருந்தால் விரல்களால் இரண்டுமுறை சொடுக்குப் போட்டு விரட்டி விட்டு மேலே கவனமாக வாசிக்கவும்:)!

தமிழ்மணம் விருது 2010-ன்
1]காட்சிப் படைப்புகள் பிரிவில் ‘ஏரிக்கரை பூங்காற்றே..’[கேமிரா வடித்தது];
2]நூல் விமர்சனம் பிரிவில் ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்-என் பார்வையில்..’[பேனா வடித்தது];
3]பயண அனுபவங்கள்,ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் ‘மேகங்களுக்குப் பின்னால்..’[கேமிரா பேனா இரண்டும் கலந்து செய்த கலவை:)]
இவை முதல் சுற்றில் வெற்றி பெற வாக்களித்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்களோடு வாசகர்களும் கலந்து கொள்ளலாம் இங்கே. புதியவர்கள் தமிழ்மணத்தில் கணக்கு திறந்து பிறகு வாக்களிக்க வேண்டும். ஜனவரி நான்கு கடைசி தினம்!

முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் அத்தனை நண்பருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்! வெற்றி நோக்கிப் பயணப்படுவோம். யாருக்குக் கிட்டினாலும் நமக்கேயானதாய் மகிழ்வோம்.


இருதினம் முன் என் பிறந்த தினத்தன்று சுவரொட்டியில் வாழ்த்திய தமிழ் பிரியனுக்கும், பதிவிட்டு வாழ்த்திய நானானி அவர்களுக்கும், கவிதையால் மகிழ்வித்த திகழுக்கும் அப்பதிவுகளிலும் முகநூலிலும் வாழ்த்தியிருந்த நண்பர் யாவருக்கும், தமிழ்வாசல் குழுமத்தில் மடலிட்டு வாழ்த்துக்களை ஆசிகளை வாங்கித் தந்த எல் கே, மற்றும் அலைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பியும் வாழ்த்திய அத்தனை தோழமைகளின் அன்புக்கும் நெகிழ்வான நன்றிகள். வெகு சிலரைத் தவிர எவரையும் நேரில் சந்தித்ததில்லை. ஆயினும் நெடுநாள் பழகிய உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன இணைய நட்புகள்.



புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
என் அன்பான வாழ்த்துக்கள்!
***

புதன், 22 டிசம்பர், 2010

உன்னோடு நீ..


பெருங்கிளையின் சிறுமுனையில்
வீற்றிருக்கிறது தேன்சிட்டு
உற்சாகமாய்

அவ்வப்போது
வண்ண மலர்களுக்குத் தாவி
மதுவருந்தி ஊஞ்சலாடிக் கரணமடித்து
மீண்டும் சிறுமுனை திரும்பி
கூவிக் கொண்டிருக்கிறது
கொஞ்சலாய்

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்

'பார்ப்பவர் பரிகசிப்பார்
பார்த்து பெரியவரே'
ஏளனம் செய்தவனை
இரக்கத்துடன் ஏறிட்டார்

“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

என்னை நீயும் உன்னை நானும்
பார்வையால்.. சொல்லால்.. கூட
தாக்காது இருக்க”

கசிந்து வழிந்தது
பிறப்பின் அர்த்தம்
பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்

அண்டம் நிறைத்தது
வாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்.

சிறகுகள் விரித்து 
வானில் பறக்கிறது தேன்சிட்டு 
உல்லாசமாய்.

அழைத்த அலைபேசியை
அவசரமாய் அணைத்து விட்டு
சிலிர்த்து விரிக்கிறான் சிறகை

முதன்முறையாய்
தன்னைத் தான் சந்திக்க..
தன்னோடு தான் இருக்க..
***


12 டிசம்பர் 2010, திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை.

சனி, 18 டிசம்பர், 2010

தமிழ்மணம் - தேர்தல்.. தொகுதிகள்.. வேட்பாளர்கள்..

வந்து விட்டது தேர்தல். தமிழ்மணம் விருதுகள் 2010.

எந்தத் தொகுதிக்கு எதை நிறுத்தலாம் என்கிற ஆராய்ச்சியில் கடந்த ஓராண்டின் நமது படைப்புகளை நாமே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாய் வேட்பு மனுத் தாக்கல். அது முடியவும் வந்திருக்கிறது வாக்களிப்பு வா...ரம். நண்பர்களின் ஆகச் சிறந்த படைப்புகளை மீண்டும் பார்த்து மகிழக் கிடைத்த நல்வாய்ப்பு.

முத்துச்சரம் நிற்பது மூன்று தொகுதிகளில்.

விவரங்களும் வேட்பாளர்களும் சுட்டிகளாக..

தொகுதி ஒன்று: காட்சிப்படைப்புகள்

வேட்பாளர் : ஏரிக்கரைப் பூங்காற்றே.. - குமரகம் படங்கள் - PiT போட்டிக்கும்











தொகுதி இரண்டு: நூல் விமர்சனம், அறிமுகம்

வேட்பாளார்: யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் - என் பார்வையில்..












தொகுதி மூன்று : பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

வேட்பாளர்: மேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..











ஜனநாயகக் கடமைகளுள் ஒன்று தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பது:)! நம் படைப்புகளை உலகறியக் கொண்டு சேர்க்கும் பதிவுலகத்துக்கான கடமையையும் ஆற்றிடுவோம் வாருங்கள்! கடைசித் தேதி 26 டிசம்பர் 2010. தவறாமல் அத்தனை தொகுதியிலும் பிடித்த பதிவுகளுக்கு வாக்களியுங்கள். மேற்கண்ட பதிவுகளுக்கு அளிப்பதும் உங்கள் விருப்பம்:)!

இந்த வாரம் முத்துச்சரத்தைத் தொடருபவர் எண்ணிக்கை S. பாரதி வைதேகி இணையவும் 300-யைத் தொட்டு, தாண்டிச் சென்றபடி உள்ளது. தவிரவும் ரீடர் காட்டுவது 389.

தொடரும் அத்தனை பேரின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

*** *** ***

புதன், 15 டிசம்பர், 2010

கிழக்கு சிவக்கையிலே..- அதிகாலைப் படங்கள் - டிசம்பர் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு அதிகாலை.

“அதிகாலையில் எடுக்கப்பட்ட படமா இருக்கணும். படத்தில், பனி படர்ந்த தெருவும் இருக்கலாம், அதிலிருக்கும் ஃப்ரெஷ்ஷான கோலமும் இருக்கலாம், பேப்பர் போடும் பையனும் இருக்கலாம், ஓரமா குந்திக்கினு பீடி பிடிக்கும் பெரியவரும் இருக்கலாம், டீ ஆத்தும் நாயரும் இருக்கலாம், பால் பூத்தில் வரிசையாக நிற்கும் யுவதிகளும் இருக்கலாம், ஜாகிங்க் செல்லும் பெருசுகளும் இருக்கலாம்,..”

இப்படிப் போகிறது காட்சி விதிமுறைகளின் பட்டியல்:)!




1.புலரும் காலைப் பொழுதினிலே..
பிழைப்புக்குப் புறப்படும் தோணியிலே..
அன்றைய சவாரி பற்றிய சிந்தனையிலே..
இருக்கும் இவர்களுக்கு இயற்கையை ரசிக்கத் தோன்றிடுமா? சந்தேகமே:(!

இப்படத்தை சிலதினம் முன்னர் என் ஃப்ளிக்கர் தளத்தில் மகாக்கவியின் வரிகளோடு பதிந்திருந்தேன், ‘கேணி’ எனும் வார்த்தையை மட்டும் ‘ஏரி’யாக்கி. வரிகளை முணுமுணுத்தபடியே படத்தை மறுமுறை பாருங்களேன்:)!

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
'ஏரி'யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும்
- நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
***






2. விடியல்
வாழ்வின் நம்பிக்கை
***


3. நடைப் பயிற்சி

பனி விலகாக் காட்டுக்குள்ளே பொடி நடையாப் போறாக..
***



4.
அதிகாலை நேரம்
ஆத்தங்கரையோரம்
அழகான குடும்பம்

குளித்து முடித்து.. துவைத்துப் பிழிந்து..
***



5. சலவை

'கும்மு கும்மு'ன்னு கும்மி.. 'பொளேர் போளேர்'னு நாலு சாத்தி.. அலசிப் பிழியும் சலவை. மறந்தே போச்சு இல்லே:)?
***



6. இதோ மேக ஊர்வலம்

கிழக்கு சிவக்கையிலே மேற்கு சிலிர்த்துக் கொள்ள
உறங்கிக் கொண்டிருந்த மேகக்கூட்டம்
அடிவானிலிருந்து சிலுப்பிக் கொண்டு
கிளம்புகின்ற அற்புதக் காட்சி.

இந்தக் கடைசி படமே தலைப்புக்காக கடந்த வாரம் ஒரு ‘அதி’காலையில் எடுத்தது:)! அதிகாலை உணர்வு அதிகம் வெளிப்படாததால் போட்டிக்கு அன்றி, பார்வைக்கு வைத்தாயிற்று. [இன்னும் பெரிதாகக் காண விரும்பினால் படத்தின் மேல் சொடுக்குங்கள்.]
***

விடியல் மற்றும் நடைப் பயிற்சி தவிர்த்து மற்ற நான்கும் முதன் முறையாகப் பதிந்தவையே.

போட்டிக்குப் படம் நான்கு அல்லது ஐந்தினைக் கொடுக்க எண்ணியுள்ளேன்!

உங்களுக்குப் பிடித்ததாக இருப்பதையும் சொல்லிச் செல்லலாம்:)!

இதுவரை அணிவகுத்திருக்கும் போட்டிப் படங்கள் இங்கே.


வியாழன், 9 டிசம்பர், 2010

இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

எண்ணற்ற முறைகள் சென்றிருப்பினும் கடந்த முறையே படங்கள் எடுக்க வாய்த்தது. கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். நெல்லையப்பர், காந்திமதி மூலஸ்தானங்கள் தவிர்த்து மற்ற இடங்களை எடுக்கலாம் என அனுமதி வழங்குகிறார்கள். பிரமாண்டமான திருக்கோவிலை நிதானமாகச் சுற்றி வந்து படமெடுக்க ஒரு முழு நாள் கிடைத்தாலும் போதாது. சில மணி நேரத்தில் தங்கைகளின் குழந்தைகள் களைப்படைய ஆரம்பிக்க விரைந்து தரிசனத்தை முடித்தோம்.

இறை எண்ணமும் கலை வண்ணமும் ஒருங்கிணைந்து ஒளிரும் அற்புதக் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு..


1.காந்திமதி அம்மன் திருக்கோபுரம்


2. நெல்லையப்பர் திருக்கோபுரம்
அதிக உயரமில்லாது அகன்ற வடிவில் அமைந்த கோபுரம்.

14 ஏக்கர் பரப்பளவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் காந்திமதிக்கு இடப்பக்கம் நெல்லையப்பர் சந்நிதி. இரண்டு கோயில்களையும் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் தனித்தனியாகக் கட்டியதாக அறியப் படுகிறது. பின்னர் வடமலையப்பர் என்பவர்,இரண்டையும் இணைக்கும் விஸ்தாரமான சங்கிலி மண்டபத்தைக் கட்டியதாகத் தெரிய வருகிறது. கி.பி 950 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இங்கே உள்ளது.தரிசன நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 வரை. மாலை 4 முதல் 9 வரை.

3.அண்ணாந்து பார்க்க வைக்கும் அழகான கூரை


இருபக்கமும் கடைகள் கொண்ட நுழைவாயிலின், உயரமான மேற்கூரை அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.



4. கம்பீரத் தேவன்
செந்நாவைச் சுழற்றும் மாக்காளையாய் நெல்லையப்பர் திருக்கோவில் நந்தி தேவன் தெறிக்கும் திமிலுடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். கடல் சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் செய்யப்பட்டு உயரமான மேடையிலிருந்து மேலும் ஒரு பத்தடிக்கு உயர்ந்து நிற்கிறார்.


5. பொலிவாய்..
முத்துப் பல்வரிசை காட்டி, அகன்ற கண்களும் சின்னக் கருங்கொம்புகளுமாய் வண்ண அணிகலன்களுடன் மிகப் பொலிவாய் தோற்றமளிக்கும் நந்தி நம்மை நின்று சிலநாழி ரசிக்க வைக்கிறது.
6. தயாராய்..
கருவறையில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் எக்கணத்தில் வெளிவந்தாலும் சுமந்து செல்லத் தயாராக, சட்டென எழுந்து நிற்க எத்தனிக்கும் கோலத்தில் அமைந்துள்ளது இந்நந்தியின் தனிச் சிறப்பாகும்.

7.இசைத்தூண்
நெல்லையப்பர் கருவறை இருக்குமிடத்தினுள் நுழையும் முன் நம்மை வரவேற்கும் ஒலிநாத மணிமண்டபத்தின் இருபக்கமும் நெடிந்துயர்ந்து நிற்கும் இசைத் தூண்கள் மிகப் பிரசித்தம். அபூர்வமானவையும். ஒரே கல்லில் நுட்பமாக உருவாக்கப்பட்ட 48 சிறுதூண்கள் இரண்டு பக்கமும் எழும்பி நிற்கின்றன. நாணயத்தால் ஒருபக்க ஏழு தூண்களைத் தட்டுகையில் ச ரி க ம ப த நி ச’ ஒலியெழும்பி அதிசயக்க வைக்கிறது. மறுபக்கத் தூண்களைத் தட்டினால் மிருதங்க ஒலி வெளிப்பட்டு வியக்க வைக்கிறது.


மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னதிகள் அமைந்திருக்கும். கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் போற்றப்படுகிறது.

8.தாமிர சபை பிரகாரம்

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. அங்கு இட்டுச் செல்லும் மேல்காணும் பிரகாரத்திலே 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


9. தாமிரசபை


நெல்லையப்பர் திருக்கோவில் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளில் தாமிர சபையாகத் திகழ்கிறது. நடராஜர் இங்கே ஆனந்தக்கூத்தனாக அருள்புரிகிறார்.

10. இரண்டாம் சுற்றுப் பிரகாரம்


11. அகன்ற பிரகாரத்தில் ஆனை காந்திமதி
மூன்றாவது சுற்றுப் பிரகாரம் மிகப் பெரியது. இன்னும் அதிக உயரமும் அகலமும் கொண்டது. மூன்று யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும் என்பார்கள். அது உண்மைதான் என்பது இப்படத்தைப் பார்த்தால் புரியும். பிரகாரத்தின் முடிவில் பக்தர்களைச் சந்திக்கக் காத்திருக்கிறாள் ஆனை காந்திமதி.

12.அழகிய திருமகளாய்..13. வழங்குகிறாள் ஆசிகளை..
அருகில் செல்ல பயந்த என்னைப் பார்த்துச் சுற்றிலுமிருந்த பொதுமக்களில் சிலர் தைரியமாகப் பக்கதில் செல்லுமாறும், இவளைப் போன்ற சாதுவான யானையை உலகத்தில வேறெங்கில பார்க்க முடியாது என்றும் உற்சாகமாகக் குறிப்பிட்டார்கள். நல்லவிதமான பரமாரிப்பைக் காரணம் காட்டுகிறார்கள். இயல்புக்கு மாறான சூழலில் ‘வன’விலங்குகள் வளர்க்கப்படுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படாத நம் நாட்டில் அவை பரிவுடனும் அன்புடனும் கவனிக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு அவசியமாகிறது. இங்கே கேட்ட செய்தி ஆறுதலாக இருந்தது.



14.தெப்பக் குள மணிமண்டபம்


மிகப் பெரிய உள் தெப்பத்தில் சிவனே இங்கு நீர் வடிவம் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மன் பொன் மலரோடு தோன்றிய தடாகம் என்கிறார்கள். வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.



15.தூணில் யாழி


16. யாழி மண்டபம்

காந்திமதி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே கோபுர வாசலையொட்டி அமைந்த அழகு மண்டபம். இருபக்கமும் பூட்டப்பட்டிருந்தபடியால் கம்பிகள் வழியே காமிராவை நுழைத்து எடுத்தபடம்.



17. பாவை விளக்கு

சுமார் மூன்றரை அடி உயரத்தில்..



பிரகாரங்களின் பல தூண்களில் சிற்பங்களை நுண்ணிய அழகுடன் செதுக்கியிருக்கிறார்கள்.
18. ஆஞ்சநேயர்

பிரிய தெய்வத்தை பக்தர்கள் வெண்ணை சாத்தி வணங்கியிருப்பதைக் காணலாம்.

19. சிவபக்தர்
தலை, கழுத்து, கைகளில் ருத்ராட்ச மாலைகளுடன் அக்கால சிவனடியார்களின் தோற்றம் அப்படியே தத்ரூபமாக.


நெல்லையிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரம் சென்றிருக்கிறீர்களா? ஆளுயர உருவச் சிலைகளாய் நகக்கணுக்களும் துல்லியமாகச் செதுக்கப்பட்ட சிறப்பான சிற்பங்களுக்காக உலகப் பிரசித்திப் பெற்றவை. இப்போது கோவில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்சித் துறையின் பாதுக்காப்புக்குள் வந்துவிட்ட படியால், படமெடுக்க அனுமதியில்லை.

அங்கு காணப்பட்ட சிலைகளில் பல அதே அளவு நேர்த்தியுடன் நெல்லையப்பர் கோவிலின் பிரகாரத்திலும் இருப்பதைக் கவனிக்க முடிந்தது.
20.அர்ஜுனர்_________________ 21. யுதிஷ்ட்ரர்.. பீமர்

என்ன ஒரு வித்தியாசம் எனில் கிருஷ்ணாபுரத்து சிற்பங்கள் எண்ணெய் பூச்சுடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டு பளபளப்புடன் மின்ன, இவை வேறு விதமான கற்களால் செய்யப் பட்டதாலோ என்னவோ பளபளப்பு குறைவாகக் காணப்படுகிறது.

கல்லிலே கலை வண்ணம் கண்டார்
நந்தி தேவனுக்கு முன் அமைந்த நுழைவாயிலின் இருபக்கமும் நின்றிருந்த உயரமான தூண்களில், சிற்பங்கள் கருங்கல்லால் சுமார் ஆறேழு அடிகளுக்கு மேற்கூரையைத் தொட்டபடி வரவேற்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

22.காவல் தெய்வம் வீரபத்திரர்


***
23. நாகாஸ்திரத்துடன் கர்ணன்


***
24. கிராத மூர்த்தி

அர்ஜுனனோடு சண்டை போட்ட வேடுவக் கோலத்தில் ஈசன்.
***



25. சன்னதி
உச்சிகாலத்தில் நடை சாத்தப்பட்டிருந்த சுப்பிரமணிய சுவாமி சன்னதி.

26. சுற்றிக் களைத்த குழந்தைகள் பசி தாகம் தணித்திடும் காட்சி:)!


களைக்காமல் சளைக்காமல் படங்களுடன் கூடவே பயணித்தவருக்கு நன்றிகள் பலப் பல :)!
*** *** ***



[இந்தப் படங்களை ரசித்தவருக்கு எனது இந்தப் பதிவிலுள்ள படங்களும் பிடிக்கக் கூடும்:

வழிபாட்டுத் தலங்கள்

முன்னர் பார்த்திராதவருக்காகத் தந்திருக்கிறேன் சுட்டி:)!]

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

படைப்பாளி


தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும்
பனித்துளியைப் பார்த்து வரும்
மேனிச் சிலிர்ப்பும்
தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும்
சொல்லிப் புரிவதில்லை

கவிதையில் கசியும் காதலும்
கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
தார்மீகக் கோபங்களும் வலியும்

அனுபவித்தவருக்கே வாய்க்கும்
முழுமையாய் ரசிக்க
நெருக்கமாய் உணர
தாக்கத்துடன் உள்வாங்க

வருவதில்லையோ ஆதலினாலேயே
ஆதிபகவன் தானே நேரில்
மெய்ப்பொருள் விளக்க?

அடைந்திடு அனுபவத்தில் என
ஒதுங்கிடத் தெரிந்த
ஒப்பற்ற படைப்பாளி!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

2 அக்டோபர் 2010 திண்ணை இணைய இதழில்.. நன்றி திண்ணை!

புதன், 1 டிசம்பர், 2010

கைமாறு - தினமணி கதிர் சிறுகதை

ப்பா என்னோட டான்ஸ் ட்ரெஸ் எப்படிப்பா இருக்கு”

வெளிர் சிகப்பில் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களிட்ட ஃபிரில் வைத்த கவுனில் குழந்தை தேவதை போலிருந்தாள்.

“செல்லத்துக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகுதான்” சிரித்தான் சுந்தர் மகளைப் பார்த்து.

“பதினொரு மணிக்கு சரியா வந்திடுங்கப்பா. நான்தான் முன் வரிசையில் நின்னு ஆடறேன். அப்புறமா கடைசில நாலு ப்ரைஸ் இருக்கு எனக்கு” கையைக் குவித்து மடக்கியவள் “ட்ராயிங்,பாட்டு,ரன்னிங் ரேஸ், சயின்ஸ் க்விஸ்..” ஒவ்வொரு பிஞ்சு விரலாக இதழ் போல் விரித்துக் கொண்டே வந்தாள்.

“பாம் பாம்” ஒலி எழுப்பியது பள்ளி வேன்.

“வேன் வந்தாச்சு பாரு. நீ கிளம்பு பாப்பா. பத்து மணிக்கெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, நான் நாலு பேரும் அங்கிருப்போம்.” என்றான் அவளைப் போலவே ஒவ்வொரு விரலாக விரித்துக் காட்டி.

கண் அகல ரசித்துச் சிரித்தவளாய் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிய மகளை சந்தோஷமாகப் பார்த்திருந்த வேளையில் கைபேசி சிணுங்கியது. டாக்டர் முத்து.

சொல்லுங்க டாக்டர்”

“அவசரமா ஓ நெகட்டிவ் வேண்டியிருக்குப்பா. சிசேரியன். ரெட்டப் புள்ளங்க வேற. சிக்கலான பிரசவம்னு பக்கத்து டவுணிலிருந்து இங்க வந்து அட்மிட் ஆயிருக்காங்க இப்பதான்”

“எத்தனை மணிக்கு ஆபரேஷன்?”

“மதியம் 2 மணிக்கு மேலே. அப்பதான் நல்ல நட்சத்திரம் பிறக்கிறதாம்” சிரித்தார்.

“சரி அவங்க குடும்பத்திலே...” என இழுத்தவனை இடைவெட்டி “கேட்காம இருந்தா சும்மா விடுவீங்களா என்னைய, விசாரிச்சிட்டேன். சொந்தத்தில இப்போ கூட இருக்கிறவங்க யாருக்கும் அந்த க்ரூப் இல்லையாம்” என்றார் டாக்டர்.

“கவிதா” என அவசரமாய் மனைவியை அழைத்தான். “நீ அம்மா அப்பாவைக் கூட்டிட்டு முதல்ல போயிடறயாம்மா? டான்ஸ் நேரத்துக்கு முடியாவிட்டாலும் ப்ரைஸ் கொடுக்கிற நேரத்துல வந்திடப் பார்க்கிறேன். அவசர வேலைம்மா.”

அவனைப் பற்றி நன்கு அறிந்த கவிதா “சரிங்க. ஒண்ணும் பிரச்சனையில்ல. பாப்பாவைச் சமாளிக்க எனக்குத் தெரியும்” என்றாள் சமாதானமாய்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் கண்கள் மின்ன விடைபெற்ற மகள், தான் போக இயலாது போனால் ஏமாற்றத்தில் எப்படிச் சோர்ந்து போவாள் என்பதை நினைக்கையில் மின்னல் வெட்டாய் ஒரு சின்னவலி. மறுகணம் சுறுசுறுப்பானான்.

தொடர்ச்சியாய் எண்களைத் தட்டியதில் ஓ நெகட்டிவ் பட்டியலில் இருந்த இரத்ததான தன்னார்வலர்களில் மூன்று பேர் ஊரில் இருக்கவில்லை. ஒருவனுக்குக் காய்ச்சல். இன்னொருவன் இரவு தண்ணியடித்து விட்ட்தாகத் தலையைச் சொறிந்தான். மீதமிருந்தது அசோக் மட்டுமே. ஆனால் பாவம் அவன் தங்கைக்கு அன்று திருமணம். தந்தை இல்லை. அவர் ஸ்தானத்தில் முன்னிருந்து நடத்துவது அவனே. என்ன செய்ய? வேறு வழியில்லை அவனைதான் கூப்பிட்டாக வேண்டும்.

அது ஒரு அபூர்வ க்ரூப். எப்போதாவதுதான் தேவைப்படும். முன்னரே ஸ்டாக் செய்து வைத்தால் வீணாகி விடக் கூடாதென தேவைப்படும் சமயத்தில் அந்த க்ரூப் நபர்களைத் தொடர்பு கொண்டு கொடுக்க வைப்பதே வழக்கம். முன் கூட்டி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை எனில் கொடுப்பவர் சவுகரியத்தைப் பார்க்க இயலும். விபத்தோ அவசரத் தேவையோ வருகையில் இப்படிப் பாலமாக செயல்படுவது பழகிப் போன சவால்தான்.

அசோக்கின் எண்களைத் தயக்கத்துடன் அழுத்தினான்.

“என்னப்பா பொண்ணு பள்ளிக்கூடத்துல ஆண்டுவிழான்னு முகூர்த்தத்துக்கு வர மாட்டேன்னுட்ட. பரவாயில்ல. ஆனா கண்டிப்பா ரிசப்ஷனுக்குக் குடும்பத்தோட வந்திடணும், ஆமா” என்றவன் இவன் பதில் பேசும்முன் “யப்பா யப்பா, அங்கே இல்லை. இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரூமுல கொண்டு வைய்யப்பா” என யாரிடமோ படபடப்பாய் சொல்லிக் கொண்டிருந்தான்.

தயங்கித் தயங்கி இவன் விஷயத்தைச் சொல்லவும், ஐந்து விநாடி அமைதிக்குப் பின், “முகூர்த்தம் பத்தரைக்கு முடியுது. பதினொரு மணிக்கு மண்டபத்து பின் வாசலுக்கு காரைக் கொண்டு வந்திடு”

நன்றி சொல்லக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தான். ஏன், இவனும் கூட அப்படியான நன்றியை எவரிடமும் எதிர்பார்த்ததில்லைதான். இது போன்ற ஒத்துழைப்புகள் எல்லா சமூக ஆர்வலர்களுக்குமே இயல்பான ஒன்றாகி விட்டிருந்தது.

கல்லூரி வயதில் இரத்ததானம் பற்றி அறியவந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொரு முறை இரத்தம் கொடுப்பதில் ஆரம்பித்த சேவை ஆர்வம், இப்போது தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர் ஆக்கியிருந்தது.

கழகத்துக்காக முகாம் நடத்துவது, கிடைப்பதில் குறிப்பிட்ட பங்கை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பது, அவசரத் தேவைக்கு வழங்க முன்வருபவர் தொடர்பு விவரங்களை நுனிவிரலில் வைத்திருந்து எந்நேரத்திலும் ஏற்பாடுகளைக் கவனிப்பது இவை அவன் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது.

தான் அப்படி இருப்பதை பெரிய விஷயமாக எண்ணாதவன், சமயங்களில் நண்பர்கள் தங்கள் இயல்பு வாழ்வின் கெடுபிடிகள் கடமைகளிலிருந்து இப்படி விலகி, அனுசரித்து இவன் வார்த்தைக்காக ஓடி வருகையில் ஏற்படும் வியப்பும் நெகிழ்வும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இன்று அசோக்.

ருக்கு சற்றே வெளியில் அமைந்த மண்டபம். கால் மணிக்கு முன்னதாகவே பின்வாசல் பக்கமாய் வண்டியைக் கொண்டு நிறுத்தி விட்டான் சுந்தர்.

சொன்ன நேரத்துக்குச் சரியாக அசோக் வெளியே வரவும், காரில் ஏற்றிக் கொண்டு விரைந்தான்.

போக்குவரத்து நெரிசலுக்குள் மாட்டி, போராடித் தப்பித்து, அந்த தனியார் மருத்துவமனையின் பெரிய வளாகத்துள் நுழையும் போது மணி பனிரெண்டை நெருங்கி விட்டிருந்தது. இரத்தம் கொடுக்க வேண்டிய இடம் இருக்கும் கட்டிடத்தின் முன்னால் சுந்தர் வண்டியை நிறுத்த, “நீ ஸ்கூலுக்குக் கிளம்புப்பா சுந்தர். நான் டாக்ஸியோ ஆட்டோவோ பிடிச்சு மண்டபத்துக்குப் போயிக்கறேன்” என்றான் அசோக்.

“நல்லா சொன்னே போ. உன்னை மறுபடி நேரத்துக்கு மண்டபத்துல சேர்த்தால்தான் எனக்கு நிம்மதி. காரை பார்க் பண்ணிட்டு அப்படியே டாக்டர் முத்துவை எட்டிப் பார்த்துட்டு வரேன். சந்திச்சு நாளாச்சு. எம்மகளை மொதமொத தொட்டுத் தூக்கின மகராசனாச்சே”

“சொன்னா கேட்க மாட்டே நீ” அவசரமாய் அசோக் நடையைக் கட்ட, வரிசையாக இருந்த கட்டிடங்களைத் தாண்டி, வளாகத்தின் பின்பக்கம் அமைந்த வண்டிகளுக்கான நிறுத்தத்தில் மெல்லச் சென்று காரை பார்க் செய்தான் அசோக். டாக்டர் முத்துவின் அறை இருந்த கட்டிடத்தை நோக்கி நடந்த வேளையில் முன்னால் நடந்த இருவரின் சம்பாஷணை திடுமென அவன் கவனத்தை ஈர்த்தது.

“இரத்தம் கேட்டு எவ்ளோ நேரமாச்சு? என்ன வங்கி வச்சு நடத்துறானுக? அவசரம்னு சொல்லியாச்சு. கொடுக்கிற பய ஆரோக்கியமானவனா இருக்க ஒட்டிக்கு ரெட்டியா துட்டு தாரோம்னும் சொல்லியாச்சு. அன்ன இன்னன்னு மணி பன்னெண்டாகப் போது. டாக்டரம்மாக்கு போனைப் போட்டுக் கேளுடா அனுப்புறானுகளா இல்லையான்னு” என்றார் ஐம்பதுகளில் இருந்த அந்தப் பெரியவர்.

“சும்மா சும்மா கேட்காதீங்கன்னு கோபப்படறாங்கப்பா. வெயிட் செய்யலாம்.” மகன் போலும்.

எதுவும் பேசாமல் அவர்களை வேகமாகக் கடந்தான். டாக்டரின் அறையை அடையும் அந்த சொற்ப நேரத்துக்குள் அவன் மனதினுள் ஒரு பிரளயமே நடந்து முடிந்திருந்தது.

“வாங்க சுந்தர். இப்பதான் லேபிலிருந்து ஃபோன் செஞ்சாங்க. நேரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். அந்தக் குடும்பம் வேற பொசுபொசுன்னுட்டே இருந்தாங்க. அப்புறம், எப்படியிருக்கா செல்லப்பொண்ணு? நல்லா படிக்கிறாளா?”

“ஓ. இன்னைக்கு ஆனுவல் டே. நாலஞ்சு ப்ரைஸ் வாங்குறா. எல்லாம் உங்க ஆசிர்வாதம்” சொன்னவன் அவர் காட்டிய இருக்கையில் அமராமல் “டாக்டர் இந்த இரத்தத்தை உபயோகிக்க இருக்கிற குடும்பத்தோட நான் கொஞ்சம் பேசலாமா?” என்றான்.

வியப்பாகப் பார்த்தார் டாக்டர் முத்து.

எத்தனையோ முறை பல குடும்பத்தினர் நன்றி சொல்ல அவனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த வேளையில் எல்லாம், பிடிவாதமாய் மறுத்து தன்னை அடையாளம் கூட காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து பறந்து விடுபவனின் இந்தப் புது விண்ணப்பம் ஆச்சரியப் படுத்தியது.

மணியடித்து நர்சை வரவழைத்தவர் “மிஸ்டர் தணிகாசலமும் பையனும் எங்கேன்னு பாருங்க” என்றார்.

“அவங்க பேஷண்டுக்கு யாரு?” கேட்டான் சுந்தர்.

“மாமனாரும் கணவரும். முன்ன நின்னு கவனிக்கிறது அவங்கதான். பொண்ணுக்கு ஏதோ குக்கிராமம். அங்க வசதிப்படாதுன்னு மொதல்ல டவுணுல காமிச்சிருக்காங்க. அப்புறம்தான் திடீர்னு காலைலதான் அங்கிருந்து இங்க அனுப்பிட்டாங்க. ரெட்டை வாரிசு வரப் போகுதுன்னு குடும்பமே ஒரே பரபரப்புல இருக்கு. வாங்க போய் பார்க்கலாம்” என எழுந்தார்.

காரிடாரில் நடக்கையில் எதிரே வந்து கொண்டிருந்தார்கள் இவன் பார்த்த அதே பெரியவரும் மகனும்.

டாக்டர் அவனை அறிமுகப்படுத்தவும் “ரொம்ப சந்தோசம் தம்பி. என்ன விசயம். இரத்தம் கொடுத்தவருக்கு அதிகமா பணம் தேவைப்படுதா? கொடுத்திடலாம்” என்றார்.

“அதெல்லாம் தேவையில்லைங்க. ஆனா ஒரு ரெக்வெஸ்ட். உங்க குடும்பத்துல யாராவது ஒருத்தர்,அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் ரத்தம் கொடுத்திட்டு வந்து, இந்த இரத்தத்தை வாங்கிக்கறீங்களா?”

“என்ன தம்பி பேசறீங்க? நாங்க பணமெல்லாம் கட்டியாச்சு. எங்களுக்கு இதெல்லாம் பழக்கமுமில்ல. மேலே என்ன விலைன்னாலும் கேளுங்க” கடுகடுத்தார் தணிகாசலம்.

“பொறுங்க ஐயா. அந்தப் பணத்தையே கரைச்சு ஏத்த முடியாதுதானே.இரத்தம் விற்பனைக்கு கிடைக்கிற கடை சரக்கு இல்லங்க. தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம். அதுக்குன்னு வசூலிக்கப் படற பணம் இரத்த வங்கி இயங்கறதுக்காக. பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம். இப்படி ரத்தத்துக்கு ரத்தம் கேட்கலாம்ங்கறதே எனக்குக் கூடதான் இத்தன நாள் தோணாமப் போச்சு பாருங்களேன்”.

இப்போது பெரியவரின் மகன் சுதாகரித்துக் கொண்டு அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் தணிந்து “தம்பி நான் பேசினதை கேட்டுட்டீங்க போலிருக்கு. மன்னிக்கணும் ஏதோ ஒரு பதட்டதுல வார்த்தைங்க விழுந்துட்டு”.

“இல்லைங்க. நீங்க உங்க மனசுல உள்ளததானே கொட்டுனீங்க. பரவாயில்ல. உங்களப் போல எண்ணமுள்ளவங்களும் இருப்பாங்கன்னு எனக்குப் புரிய வச்சதுக்கு முதல்ல நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.”

தணிகாசலத்தின் முகம் கோணியது.

“அட என்னங்க உங்கள சங்கடப் படுத்தணும்னு சொல்லல. ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. காசுக்காக இரத்தத்தை கொடுக்கிறவங்க ரொம்ப ரொம்பக் கொறைவு. பெரும்பாலும் ஒரு சேவையா நினைச்சுதான் கொடுக்கறாங்க பலரும். அதனாலதான் அதைத் ‘தானம்’னு கவுரவப் படுத்துறாங்க. நிறைய பேரு அதை ஒரு வழக்கமாகவே பண்ணிட்டிருக்கிறாங்க. உங்களை அப்படி வற்புறுத்தல. அது தனி மனுச விருப்பம். ஆனா இப்படிக் குடும்பத்துல ஒருத்தருக்குத் தேவை வரும் போதாவது கொடுக்கலாமே.ஒரு ஆளு கொடுக்கிற இரத்தம் சில நேரம் மூணு உயிரைக் கூடக் காப்பாத்தும் தெரியுமா? அரசு ஆஸ்பத்திரிபக்கம் போய்ப் பார்த்தீங்கன்னா எத்தன பேருக்கு எவ்வளவு தேவையிருக்குன்னு உங்களால நிச்சயம் உணர முடியும்.”

பணிவான அவன் பேச்சுக்குப் பிறகும் இறுக்கமாகவே தணிகாசலம் நின்றிருக்க, அருகிலிருந்த பெஞ்சிலிருந்து ஒரு வயதான பெண்மணி மெல்ல எழுந்து சுந்தர் அருகே வந்தார்.

“தம்பி. எம் மகனை எலிக்காச்சல்ன்னு ஆசுபத்திரில போன வாரம் சேர்த்தோம். முழு இரத்தமும் மாத்தணும்னுட்டாங்க. பேரன் கூடப் படிக்கற பசங்க, அவங்க ஃப்ரெண்டுங்கன்னு 40, 45 பேரு மடமடன்னு வந்து அஞ்சே மணி நேரத்துல இரத்தம் கொடுத்தப்போ என் நாடி நரம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. எங்கே யாரு பெத்த புள்ளங்களோ இப்படி நம்ம வூட்டுப்புள்ளைக்குக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்காங்களேன்னு. இன்னிக்கு எம்மவன் கண்ணு முழிச்சுக் கிடக்கான்னா அதுக்கு அவங்கெல்லாம்தான் காரணம். அதுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு ஏங்கிப் போய்க் கிடந்தேன். எனக்கு நல்ல வழியொண்ணு சொன்னேப்பா. என் வயசுக்காரங்க இரத்தம் கொடுக்கலாமாப்பா?”

“தாராளமா கொடுக்கலாம்மா. அறுபத்தஞ்சு எழுபது வயசு ஆளுங்க வரை கொடுக்கறாங்க. உங்கள நல்லா செக் பண்ணிட்டு உடம்பு ஒத்துழைக்குமான்னு பாத்துட்டுதான் எடுப்பாங்க” என்றான் சுந்தர் கனிவும் நெகிழ்வுமாக.

“அரசு ஆசுபத்திரில எங்கேன்னு போய் கேட்கணும்பா?”

அவன் பதில் சொல்லும் முன் “வாங்கம்மா. அங்கதான் இப்பக் கிளம்பிட்டிருக்கேன். என் கூடவே அழைச்சுட்டு போறேன்” என அவரின் கையைப் பற்றினான் தணிகாசலத்தின் மகன்.

திகைத்து நின்றிருந்த டாக்டரைப் பார்த்து ‘வரட்டுமா’ என சுந்தர் தலையசைக்க, அவர் ‘தொடருங்கள் இது போலவே’என்பது போலாகத் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து நிறைவாகப் புன்னகைத்தார்.
*** *** ***

  • 7 நவம்பர் 2010 இதழில். நன்றி தினமணி கதிர்!

தினமணியின் இணையதளத்திலும் இங்கே வாசிக்கலாம்
  • கவிநயாவின் இந்தப் பதிவும் உங்கள் பார்வைக்கு! நல்ல பகிர்வுக்கு நன்றி கவிநயா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin