வெள்ளி, 16 ஜூலை, 2010

மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல..

மொட்டு ஒண்ணு..


மெல்ல மெல்ல..



விரிந்து..


மலர்ந்து..
சிரிக்கிறது அழகாய்.. மூவண்ண மலராய்..

கொஞ்சும் மஞ்சளை
மிஞ்சும் சிகப்பை
மிதமாய் வருடிடும் வெள்ளை..


இளங்காற்றினில்
இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
எழிலாய் அசைந்து
மனதை அடிக்குது கொள்ளை!

*********


[மொட்டு விரியத் தொடங்கிய கணத்திலிருந்து ஓரிரு மணிக்குள் முழுதாய் மலர்ந்து விடுவது இம்மலரின் விசேஷம்.]


கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.

சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)?

செவ்வாய், 13 ஜூலை, 2010

வழிபாட்டுத் தலங்கள்- ஜூலை PiT போட்டிக்கு..

இம்மாதப் போட்டித் தலைப்பு: வழிபாட்டுத் தலங்கள். “கோவில்,சர்ச்,மசூதி,சிலை,கோபுரம்,கலசம்,தூண்,பக்தி,இப்படி எது வேண்டுமானாலும் படம் எடுத்து அனுப்புங்க...” என்கிறார்கள். ஆனால் எத்தனை வேண்டுமானாலும் என சொல்ல மாட்டேன்கிறார்களே:)! ஆகையாலே உங்கள் பார்வைக்கு அத்தனை தலங்களும் பதிவிலே..! இவற்றிலிருந்து போட்டிக்கும் போகும் ஒன்றே ஒன்று.

இதுவரையிலும் மீள் பதிவுகள் இட்டதில்லை. ஆனால் போட்டியின் தலைப்புக்கேற்ப என்ற ரீதியில் 'சில நேரங்களில் சில படங்கள்' மீள் காட்சிகளாக அமைந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்தருள்க:)!

படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தி, சரியான அளவுக்குக் கொண்டுவரக் கேட்டுக் கொள்கிறேன்.


அப்பனே சண்முகா

1. மின்னும் கலசங்களுடன் கோபுரம் திருச்செந்தூரில்..
**

2. கடல் பார்த்து நீண்ட பிரகாரம்

**

3. அதன்வழி..

நாழிக்கிணறு நாடி நடைபோடும் பக்தர் கூட்டம்
**

5. கனகவேல் காக்க

வேலுண்டு வினையில்லை
சொல்லுகிறார் சூரியனாரும்..
***


6. கூடலழகர் திருக்கோபுரம்

மதுரை மாநகரத்தினுள்..
***


7. கற்பகவிநாயகர்

பிள்ளையார் பட்டியில்..
***



8. மதுரை மீனாஷி சுந்தரேஷ்வரர்

**

9. தரணி போற்றும் தங்கத் தாமரைக் குளம்

**

10. குளம் நடுவே பளபளக்கும் பொற்கமலம்

கீழ் இதழ்களில் நிழல்நாடி அமர்ந்திருக்கும் குருவிகள் உணர்த்திடும்
கமலத்தின் பிரமாண்டத்தையும்
தனைநாடி வரும் பக்தருக்கு அம்மன் வழங்கும் பேரருளையும்..
***



11. கோமதீஷ்வரர்

சரவணபெலகுலாவில்..
***



12. ஹொய்சாலேஷ்வரர்

ஹலேபீடுவில்..
***


13. கோடிலிங்கேஷ்வரர்

கோலார் மாவட்டத்தின் கம்மசந்திராவில்..
***


14. ஓம்காரேஷ்வரர்

இஸ்லாமியக் கட்டிடக்கலையைத் தன்னுள் வாங்கி..
கூர்க், மடிக்கேரியில்..
***


15. திபெத்திய தங்கக் கோவில்

மைசூர் அருகே, பைலக்குப்பே ஊரின் குஷால்நகரில்..
***

16. புத்தம் சரணம்
தன்னை உணர, ஞானம் பெற, தியானமே வழியென உலகுக்குச் சொன்ன மகானுடன் அவரது கொள்கைகளை உலகுக்குப் பரப்பியவர்களும் தெய்வமாய் வீற்றிருக்கும் மாபெரும் தியான மண்டபம். [வலது கீழ் மூலையில் உற்று நோக்கினால் புலனாகும் மனிதரின் பார்வையில் சிலைகளின் உயரம். அந்த உயரமே விளக்கிடும் தியானத்தின் மேன்மையையும்.]
***




17. கடற்கரைக் கோவில்

மாமல்லபுரத்தில்..
***

18. "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்"
அவ்வையார் சொன்னது..

[இங்குதான் ‘படையப்பா’ படப்பிடிப்பு நடந்ததாம். மக்கள் சொன்னது:)!]
கர்நாடகத்தின் மேலூரில்..
***

19. " நானுமிருப்பேன் குன்றின் மேலே.."

மலைக்கோட்டை பிள்ளையார் திருச்சியில்..


20. நீ இல்லாத இடமே இல்லை

பேரொளியாய்..
***


21. ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்
‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’- கீதை சொல்வதும்;‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ - பைபிள் சொல்வதும்; ‘ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது’ போன்றதான நம்பிக்கைகளும் யோசித்துப் பார்த்தால் ஒன்றேதான் என்பது புலனாகும்.

வழிபடும் தெய்வத்தின் பெயர்களும் உருவங்களும், தலங்களும், நாம் பின்பற்றும் முறைகளும் மார்க்கங்களும் வேறு வேறாயிருப்பது அவரவருக்கு நெருக்கமாய் உணர்ந்து அமைதியைத் தேடவே அன்றி அவன் பெயரால் மட்டுமின்றி எதன் பெயராலும் சக மனிதரை சங்கடங்களுக்கு உள்ளாக்க அன்று. மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்.

தங்கள் மேலான கருத்துக்காக இம்மாதப் போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன். உங்களைக் குறிப்பாக ஈர்த்த படம் (அ) படங்கள் இருப்பின் சொல்லிச் செல்லுங்களேன். எனக்கான பரிசாகக் கொள்வேன்:)!


14 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இந்தப் பதிவு:
நன்றி விகடன்!

வியாழன், 8 ஜூலை, 2010

இனிய அத்தாட்சி - தேவதை கவிதை



அதிகாலை அழைப்பு மணிக்கு
ஆடியசைந்து கதவைத் திறக்க
வாசலடைத்து நின்று
அதிர வைக்கலாம்
முறக்காதுகள் விசிறியபடியொரு
கறுப்பு யானை

வீதியோரமாய்
வேடிக்கை பார்த்து நடக்கையில்
கழுத்தில் வந்து விழுந்து
ஒருநாள் முதல்வர் ஆக்கலாம்
இந்திரலோகத்து வெள்ளை யானை
தூக்கியெறிந்த மாலை

கட்டிய மணி கலகலக்க
முரட்டுப் பசு துரத்தலாம்
'செண்பகமே' பாட்டு நமக்கு
அந்நேரம் பார்த்து
மறந்து தொலைக்கலாம்

பறக்கும் காத்தாடிகளின்
பச்சை நீல வால்கள் பற்றி
ஏழு கடல் மலைகள்
மேகம் கிழித்துத் தாண்டிப்போய்
தீராநோய் தீர்க்கவல்ல
மூலிகையைப் பறித்துவந்து
பலபேரின்
பெரும்பிணிகள் போக்கலாம்
உற்றவரின் முகங்களிலே
ஒளிதிரும்பச் செய்யலாம்

நடைபழகும் சிறுமகளின்
மூணுசக்கர வண்டியேறி
நாலடி மிதிக்கும் முன்னே
கால்மடங்கிச் சரியலாம்
சூழ நின்ற பாலகர்கள்
கைதட்டிக் குதூகலிக்க
கள்ளமில்லா அச்சிரிப்பினிலே
கரைந்தேதான் போகலாம்

நினைவுகளின் நீட்சியாகவோ
காரணம் தேடவைக்கும் காட்சியாகவோ
எப்படியாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும் கனவுகள்..

கண்ணயர்ந்ததற்கு அத்தாட்சியாக!
***

படம்: இணையத்திலிருந்து..




'தேவதை' மாதம் இருமுறை பத்திரிகையின் ஜுலை 1-15, 2010 இதழில் வெளியாகியுள்ள கவிதை:

நன்றி தேவதை!

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணி கதிர் சிறுகதை


"நீ போய் வண்டியில வெயிட் பண்ணு. அப்பாவிடம் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்".

'அஞ்சு நிமிஷத்தில பேசி முடிக்கிற விஷயமா இது?' சுந்தரத்துக்கு மகனின் மேல் கோபம் கோபமாக வந்தது.

சுரேஷ் நீட்டிய கார்சாவியை வாங்கிக் கொண்ட ஸ்நேகா "இன்னும் நீங்க சாப்பிடலை மாமா. உங்களுக்காக வெயிட் பண்ணிப் பாத்துட்டு இப்பதான் சாப்பிட்டோம். இட்லி மேசையிலே இருக்கு. காஃபி ஃப்ளாஸ்கில வச்சிட்டேன். கரெண்ட் அடிக்கடி போகுது. மைக்ரோஅவன்ல சூடு பண்ண முடியாதே, அதான்.." என்றாள்.

"நீ கிளம்பும்மா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" சிரமப்பட்டு புன்னகைத்தார். அவள் வெளியேறியதும் மறுபடி முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டார். சுரேஷின் கண்களைத் தவிர்க்க செய்தித்தாளைப் புரட்ட ஆரம்பித்தார்.

முன் தினம் இரவு படுக்கும் முன்னால் அவன் சொன்ன விஷயத்திலிருந்து இன்னும் அவரால் மீள முடியவில்லை. ஸ்நேகாவுடனான ஆறு வருட மனம் நிறைந்த தாம்பத்தியத்தில் சாத்தியப்படாது போன ஒரேஒரு ஆசையை, தத்து எடுப்பதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக நிறுத்தி நிதானமாகவே அவன் சொன்னாலும் அதிர்ந்துதான் போனார் சுந்தரம். அவரை அதிகம் பேசவும் விடாமல் 'முடிவை யோசிச்சு மெதுவா சொல்லுங்க' என அவன் தூங்கப் போய்விட்டான். பொட்டுத் தூக்கமில்லாமல் இவர் புரண்டு மனம் புழுங்கி எழுந்தது யாருக்குத் தெரியும்?

'மீனாட்சி உசுரோட இருந்திருந்தா அவளுக்கு புரியும். இந்தத் தடியனுக்கு எப்படி விளங்கும்?'

ஆனால் அவர் மனக்கிலேசத்தை விளங்கியவன் போலவே சின்னச் சிரிப்புடன் "நீங்க கையில் பிடிச்சிருக்கிறது நேத்தய பேப்பர். இதப் படியுங்க" என அன்றைய செய்தித்தாளை நீட்டினான் சுரேஷ். அவர் வாங்கிக் கொள்ளவில்லை.

"அப்பா இதப் பாருங்க. நீங்க என்ன முடிவெடுத்தீங்கன்னு நான் கேக்கப் போறதில்ல்லை இப்போ. அடுத்த வாரத்துக்குள்ள சொன்னா போதும். உங்க ஆசிர்வாதத்தோடதான் போய் பதிவு செய்யலாம்னு இருக்கோம். அதுக்காக இப்படி சாப்பிடாம எல்லாம் இருக்காதீங்க."

அனுமதியோடு என்று சொல்லாமல் ஆசிகளோடு என அவன் சொன்னதைக் கவனித்துக் கலவரமானவர் அவசரமாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, "ம்ம். இல்ல நானும் யோசிச்சேன். தத்து என்பதொண்ணும் புதிய விஷயமில்லதான். காலகாலமா நடக்குறதுதான். எம் பொண்ணாதான் ஸ்நேகாவைப் பார்க்கிறேன்னு உனக்கே தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் நல்லவழி காட்டத்தானே குத்துக்கல்லாட்டம் இருக்கேன் ஒங்கம்மா போனப் பொறவும்."

அவரது பீடிகை அவருக்கே பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் தொடர்ந்தார்: "நீ ஊம்னு சொல்லு. கிராமத்தில என் தம்பியோட பேரப் பசங்களில ஒண்ணைக் கூட்டிட்டு வந்துடலாம். இப்பதான் பொறந்த கைக்குழந்தை வேணுமின்னாலும், மூணாவது மருமக மாசமா இருக்கறதா போன தடவை ஃபோனில பேசினப்போ சொன்னான். அந்தக் குடும்பம் தலையெடுத்ததே என்னாலதான். ஒரு பய புள்ளயும் என் பேச்சைத் தட்ட மாட்டானுங்க."

ஆவலாக மகனைப் பார்த்தார்.

"வேண்டாமேப்பா. அம்மா அப்பா கூடப் பொறப்பு எல்லாம் நல்ல விதமா அமைஞ்ச குடும்பத்திலிருந்து பிரிச்சு ஒரு குழ்ந்தையைக் கூட்டி வருவதை விட இதெல்லாம் அமைய வாய்ப்பில்லாமல் போன ஒரு குழந்தைய அழைச்சுட்டு வந்து வளர்க்கதான் ரெண்டு பேரும் விரும்புறோம். எது சிறப்பு நீங்களே சொல்லுங்க."

"உங்களுக்கெல்லாம் பரந்த மனசு. நா யாரு? பழைய பஞ்சாங்கம். ஒரு குழந்தைக்கு வாழ்க்கையில்ல கொடுக்கறீங்க. அதைத் தடுக்கற பாவியா நான் எதுக்கு இருக்கணும் நடுவில இங்க"

"ஏன் பெரிய வார்த்தையெல்லாம்? நமக்கு மேலே ஒருத்தர் இருக்கையில யாருக்கு யார் வாழ்க்கை தர்றது? சொல்லப் போனா அம்மா அப்பாவா இருக்கிற வாய்ப்பையும் வாழ்க்கையையும் அந்தக் குழந்தைதான் எங்களுக்குத் தரப் போகுது. தாத்தான்னு உங்க மடியிலேறிக் கொஞ்சி விளையாடப் போகுது."

"நீ என்ன சொன்னாலும் எம் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. இரத்த சொந்தமில்லாத ஒரு உயிர்மேல பாசத்தைக் கொட்ட முடியும்னு எனக்குத் தோணலை".

"அப்போ அம்மாவை நீங்க நேசிச்சது பொய்யா?"

"இதென்ன எடக்குமுடக்கா? இரத்த சம்பந்தம் இல்லாட்டாலும் அந்தப் பந்தம் வேற. ஆயிரமானாலும் நம்ம மனுஷங்க. புள்ள விஷயம் அப்படியில்ல. ஒரு மண்ணுல துளிர் விட்டதை இன்னொரு மண்ணில நட்டு வச்சு, பாத்துப் பாத்து தண்ணி விட்டு வளர்த்தாலும் நமக்கு அது ஒட்டுமா? உறவாகுமா?"

"அப்படித் தோணலை எனக்கு. தேவகி வயித்தில பொறந்த கண்ணன் ஆயர்ப்பாடி மாளிகையில் அன்னை யசோதைக்கு இன்பத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கலையா? பாசமா இருக்கலையா? போங்கப்பா நீங்க சொல்லிக் கொடுத்த கதைகளை உங்களுக்குத் திரும்பச் சொல்ல வைக்கிறீங்களே?" மென்மையாகச் சிரித்தான் சுரேஷ்.

சுந்தரமா அசைந்து கொடுக்கும் பேர்வழி?

"இப்படியெல்லாம் விதண்டாவாதம் செஞ்சா மேலே நா சொல்ல என்ன இருக்கு? உங்க இஷ்டப்படியே செய்யுங்க. அப்படியே நெட்டுல எனக்கொரு டிக்கெட்டும் புக் பண்ணிடு. பெரியவனா இங்க வந்து உட்கார்ந்திருப்பதில் பிரயோசனமிருக்கணும். ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் உங்களை வழிநடத்த முடியுமேங்கிற திருப்திக்காகத்தான் கூட வாழ சம்மதிச்சேன். பேசாம ஊரைப் பாக்கவே போயிடுறேன்."

"ரொம்பக் கோபமாயிருக்கீங்க. நான் கிளம்புறேன். ஸ்நேகா இஸ் வெயிட்டிங். இப்போ தயவுசெஞ்சு சாப்பிடுங்க. இந்தப் பேச்சை இப்போதைக்கு விட்டுடுவோம்."

ப்போதைக்காமில்ல இப்போதைக்கு? எப்போது கேட்டாலும் என் பதில் இதுதான்’ நினைத்தபடி அமர்ந்திருந்தவரைக் கலைத்தது இண்டர்காம் அழைப்பு.

'யாராயிருக்கும்?'

அது சுமார் ஐநாறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. ஊருக்குப் போயிடுறேன்னு ஜம்பமாய் சொன்னாரே தவிர மனதுக்குள் நடுக்கம்தான். மனைவி மீனாட்சியின் மறைவுக்குப் பிறகு கிராமத்தில் தனியாக இருக்கிறாரே என டெல்லியின் குளிருக்கு பெங்களூர் இவருக்கு தேவலாமாயிருக்கும் என ஒரே மாதத்தில் மாற்றல் பெற்றுக் கொண்டு, வந்த கையோடு இந்த ஃப்ளாட்டையும் வாங்கி, அவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். மருமகள் ஸ்நேகாவின் கவனிப்பும் அனுசரணையும் இதுநாள் வரை ஊர் நினைப்பைத் தரவே இல்லை. அதுமட்டுமில்லாமல் கிராமத்து வாழ்க்கையை விட இந்த நகர வாழ்வு பிடித்துப் போய் அதில் அவர் ஐக்கியமாகி விட்டதும்தான் உண்மை.

சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், சூப்பர் மார்க்கெட், காண்டீன், உடற்பயிற்சி நிலையம் என எல்லா வசதியும் வளாகத்தினுள்ளே கொண்ட அந்தக் குடியிருப்பில் ‘சீனியர் சிட்டிசன்ஸ்’ என ரொம்ப மரியாதையாய் அழைத்து நடத்தப் பட்டவர்களில் ஒருவராகத் தானும் இருப்பதில் அவருக்கு அதிபெருமிதம். கூடவே நல்ல நட்புகளும் கிடைத்திருந்தன. அவர்களோடு நடைப் பயிற்சிக்கு செல்வது, பழைய கதைகள் பேசுவது, பூங்காவுக்கு விளையாட வரும் குழந்தைகள அடித்துக் கொண்டால் அவர்களுக்குப் பஞ்சாயத்து பண்ணுவது, குடியிருப்பு நிர்வாக விவகாரங்களை இழுத்துப்போட்டு செய்வது என வாழ்க்கை வெகு சுவராஸ்யமாகி விட்டிருந்தது.

'செக்யூரிட்டி கேட்டிலிருந்து இருக்குமோ? இந்த நேரத்தில் நட்புகள் அழைக்காதே!' என அவர் நினைத்தது தப்பாக இருந்தது.

“என்ன சுந்தரம்? பையனும் மருமவப் பொண்ணும் ஆஃபிசுக்குப் போயாச்சா? உனக்கென்ன ப்ரோக்ராம்? எங்கூட ஏர்போர்ட் வரைக்கும் வர்றியா? எம்பேரனை கூப்பிட்டு வரணும்.”

தானிருக்கும் மனநிலையில் எங்காவது போய்வந்தால் தேவலாம் போலிருக்க 'சரி' என்றார். அவசரமாய் சாப்பிட்டுவிட்டு மறக்காமல் காஃபியையும் குடித்து விட்டுக் கிளம்பினார்.

ஹெ
ப்பால் ஃப்ளை ஓவரில் ஏறுகையில் வழக்கமாய் ரசிக்கும் ஏரியையும், நீலவானப் பின்னணியில் நிமிர்ந்து நின்றிருந்த இரட்டை வெள்ளைக் கோபுரங்களையும் ரசிக்கும் மனநிலை அன்று இல்லை. ஏதேதோ சொல்லிக் கொண்ட வந்த மூர்த்தியின் பேச்சிலும் மனது ஒட்டவில்லை.

மூர்த்தி கில்லாடி. என்னமோ சரியில்லை என்று கண்டு பிடித்து விட்டார். சுந்தரத்துக்கும்தான் நண்பர்களை விட்டால் யாருள்ளார்? சொந்தங்களிடம் சொல்லி அழ ஈகோ தடுக்கிறது. சின்னதாய் மூர்த்தி ‘என்னாச்சு சுந்து’ன்னு ஆதுரமாகக் கையை அழுத்திக் கேட்கவும் நெகிழ்ந்து போனார். ஒரு பாட்டம் சொல்லி முடிக்கையில் தழுதழுத்து "நான் எதுக்கு இவங்க கூட இருக்கணும். என் சொல்லுக்கு என்ன மதிப்பிருக்கு" அழுதே விட்டார் சின்னக் குழந்தையைப் போல.

"உன் சொல்லுக்கு மதிப்பில்லேங்கிறதுதான் இப்போ பிரச்சனையா?"

'நிச்சயமா இல்லை' என்பது போல வலதும் இடதுமாய் ஆட்டினார் தலையை மூக்கை உறிஞ்சிபடி.

"வழி நடத்த, வழி நடத்தன்னு ஒப்புக்குச் சொல்றியே தவிர வழிவிடாத நந்தி மாதிரியில்ல நடந்துக்குற?"

"நிறுத்துப்பா ட்ரைவர். அத்தனை தூரமில்லை. இப்படியே ஆட்டோப் பிடிச்சு வீட்டுக்குப் போறேன்."

சுர்ரென தலைக்கு ஏறிய கோபத்தில் கத்தினார் சுந்தரம் கரகரப்பாக.

"அதுக்குள்ள இப்படிக் கோச்சுக்கறியே. சரி சரி. நீ என் பேரனைப் பார்த்ததில்லையே. காட்டுறேன் பாரு."

தன் அலைபேசியின் சேமிப்பிலிருந்த படத்தைத் திறந்து காட்ட அதில் மெல்லியதாக மீசை முளைத்துப் பூனைக் கண்களுடன் பளீரென்ச் சிரித்தான் ஒரு வெளிநாட்டுச் சிறுவன். பதினைந்து வயது இருக்கலாம்.

"இவனா உங்க பேரன்?" குழப்பமாகிக் கேட்டார் சுந்தரம் "கோகுல் கோகுல்னு சொல்வீரே!"

"இவனும் என் பேரன். கோகுல் இல்லை மைக்கேல்."

என்ன சொல்லவெனத் தெரியாமல் சுந்தரம் முழிக்க,

"ஆச்சரியமா இருக்குல்ல. நம்ம ஃப்ரென்டுங்க யாருட்டேயும் இன்னும் சொல்லலை. நேரில வரவிட்டு முன்னே நிறுத்திக்கலாம்னுதான். இவன் என் மகள் வயித்தில பிறக்காத பிள்ளை. ஸ்டூடண்ட்ஸ் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராம்ல முதல்ல பேரன் கோகுல் யு.எஸிலிருந்து இதோ ஜெர்மனியில் இருக்கிற இந்த மைக்கேல் வீட்டுல போய் 3 மாசம் இருந்து அங்குள்ள ஸ்கூலுக்குப் போய்வர, அடுத்த வருஷத்தில அவன் என் மகள் வீட்டுக்கு வந்திருக்கான். கோகுலோட க்ளாஸிலேயே மூணு மாசம் ஒண்ணாப் படிச்சான். எந்த ஜன்மத்துப் பந்தமோ தெரியல. அப்படியே மகளுக்கு ரெண்டாவது பிள்ளையாகிட்டான். இது நடந்து ரெண்டு வருஷமிருக்கும்.

ஜெர்மனி திரும்பிய பிறகும் இந்த அம்மாவுடன் பேசாமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. அவனம்மா ரோஸி என் பெண்ணுக்கு சகோதரியாயிட்டா. மைக்கேல் தும்மினாலும் இருமினாலும் நம்ம நாட்டு வைத்தியம்தான் நடக்குது என் மகளிடம் கேட்டு. எங்களோடையும் அடிக்கடி பேசுவாங்க. இப்போ இந்த தாத்தா பாட்டியோடு சில நாள் இருந்துட்டுப் போகணுமின்னு ஆசைப்பட்டு கிளம்பி வந்துட்டிருக்கான்.

இதெல்லாம் சாத்தியமா இந்த மாதிரியான அன்பெல்லாம் சத்தியமான்னு விதண்டாவாதம் செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க. அவங்களுக்கு பதில் சொல்லிட்டிருக்க விருப்பமில்லை. அதனாலேயே இதை இத்தனை காலமும் உங்களுக்கெல்லாம் சொல்லலை. அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்தான் இல்லையா? இப்பப் பாரு இப்படி திடீர்னு பொறப்பட்டு பேரன் வரும் சந்தோஷத்துல திக்குமுக்காடி, ஏர்போர்ட் வரலைன்னுட்டு அவனுக்கு விதம் விதமா சமைக்க பம்பரமா சுத்திட்டிருக்கா நேத்துவரை கைவலிக்கு கால்வலிக்குன்னுட்டிருந்த என் வூட்டுக்காரி"

பகபகவென மூர்த்தி சிரிக்க தேசிய நெடுஞ்சாலையில் வெகுவேகமாய் வழுக்கிக் கொண்டு வந்த வாகனம் விமான நிலையத்தின் உள்ளிருந்த ஃப்ளைஓவரில் ஏறத் தொடங்கியிருந்தது.

ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.

“எறங்கு சுந்தரம் என்ன யோசன”

வளாகத்தின் வாசலில் வண்டி நின்றிருந்தது.

பேரனை வரவேற்கும் ஆவலில் மூர்த்தி இறங்கி அவசர அவசரமாய் நடக்க ஆரம்பிக்க, 'இந்த மனுஷனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. விடப்படாது இவரை' என்பது போலாக அவர் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தார் சுந்தரம்.

***




நன்றி தினமணிக் கதிர்!

4 ஜூலை 2010

  • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம் இங்கே.
  • கதையின் கடைசி வரிகளைக் கண்முன் கொண்டு வந்திருக்கும் கதிரின் ஓவியருக்கும் நன்றி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin