நினைவுகளைப் பதியவே புகைப்படங்கள் என்றிருந்த நம்மை
திறமையுடன் பதிந்திடவும் என உணர்த்தி அதை ஒரு கலையாகப் பார்க்க வைத்து பாடம் நடத்தி போட்டிகள் வைத்து ஆர்வத்தை வளர்த்து வருபவர்கள் PiT குழுவினர். 17 டிசம்பர் 2008 ஆனந்த விகடனில் ‘
விகடன் வரவேற்பரை’யில் அவர்கள் கெளரவிக்கப் பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆயில்யன்
வாழ்த்துப் பதிவிட்டிருந்தார். பார்க்கத் தவறியவர்களுக்கு வாழ்த்த வழி செய்ய இங்கும் பதிந்துள்ளேன்:
***
இம்முறை எடுத்ததில் பிடித்ததைத் தரலாம் என தீபா அறிவித்து விட்டார்கள். ஆனால் 'எது நேர்த்தி எனக் கருதுகிறீர்களோ அதை..' என்கிற போது வந்ததே குழப்பம். சரியென நேர்த்தியை மட்டும் பார்க்காமல் மனதுக்கு நெருக்கமாக.. நேசமாக.. உணர்ந்த பலவற்றுள் சிலவற்றை வைத்து விட்டேன் உங்கள் பார்வைக்கு:
கீழ் வரும் முதல் படமானது இதுவரை போட்டிக்கு தரப் படாவிட்டாலும் "
எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" என்ற என் பதிவில் இடம் பெற்று பலரின் பாராட்டையும் பெற்றது.
தியானத்தின் மேன்மையை அண்ணாந்து வியப்பது போல் அமைந்த காமிரா கோணமும், ஆன்மீகத்தின் அடையாளமாய் தெரிகிற அந்த வானமும் படத்துக்கு ஒரு சிறப்பைத் தருவதாயும் எனக்குத் தோன்றுகிறது. இதுவே இம்மாதப் போட்டிக்கான எனது தேர்வு:
வான மண்டலத்தை
நோக்கி உயர்ந்து நிற்கும்
தியான மண்டபம்
தென்குமரிக் கடலினிலே-
விவேகத்துக்கு வழிகாட்டிய
விவேகானந்தா உட்கார்ந்து
தியானித்தப் பாறையிலே-
தியானத்தின் மேன்மையை
உலகுக்கு உணர்த்திடவே-
எழுந்து நிற்கும் மணிமண்டபம்.
***
செயற்கை குளமும்
பின்னே
இயற்கை வளமும்
கட்டுக்குள் அடங்கிய நீச்சல் குளமும்
கட்டுக்குள் அடக்க இயலா அலைகடலும்
[க்ளிக்கிட்டுப் பார்க்கத் தவறாதீர்]
***
பஞ்ச பாண்டவர் மண்டபம் மேல்
வஞ்சனை இன்றி கதிரொளி வீசுகிறார்
கர்ணனின் தந்தை!
[படத்தின் மேல்பாகம் ஓவர் எக்ஸ்போஸ்டாக இருந்தாலும் அந்த ஒளிக் கீற்றுகள்..அற்புதமாகப் பட்டன.]
***
கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா!
ராஜா செஞ்ச சிலைகளிலே தாய்மையை
உணர்த்துவதுதான் இந்த சிற்பத்தின் ஜோரா?
***
அணில்ஜிக்கும் பிடித்தது பார்லே-ஜி!
***
இலவு காக்கும் கிளியா
இல்லையேல்
தனிமையில் காணும் இனிமையா?
***
(கொக்கு பறபற கோழி பறபற) வாத்து பறபற!
சிறகுகள் சிலிர்த்து பறக்க முயல்கிறதா?
குளித்து முடித்து இறகுகளை உலர்த்துகிறதா?
***
மன்னிக்க மாட்டாயா
உன்
மனம் இரங்கி?
‘
மன்னிப்பு-தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’! ‘ரமணா’வின் திரைவசனம் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப் பட்டது. அதை அப்படி நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ளுதல் நலம். மன்னிக்கவே முடியாத சமூகக் குற்றங்கள் வேறு. தொழிலில் நட்பில் உறவில் சூழ்நிலை சந்தர்ப்பங்களால் சில துரோகங்கள் சில தப்பான புரிதல்கள் சில தவறுகள் நேர்ந்து பின் மன்னிப்பை நாடி நிற்கும் மனித மனங்கள் வேறு. உணர்ந்து அவர்கள் திரும்பி வருகையில் அந்த வாத்தைப் போல முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல் மன்னியுங்கள். ‘
மன்னிப்புக் கேட்பவனே மனிதன். மன்னிக்கத் தெரிந்தவனோ இறைவன்’! யார் சொன்னது என்று தெரியாது. ஆனால் மன்னியுங்கள். மன்னித்துப் பாருங்கள்! தவறு உங்கள் பக்கம் இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். இதனால்
இறுகிய மனங்கள் இளகும். இணைய வேண்டும் என ஏங்கி மருகிய மனங்கள் மலரும்.
***
"சரியான வாத்துக்கள்"
'சரியான வாத்து'
எவரையும் வையும் முன்
சற்றே நிதானிக்கலாம்
எவரிடமும் உண்டு
கற்பதற்கு நற்பண்பு.
நடைபோடும் வாத்துக்கள்
கடைப் பிடிக்கிற
'வரிசையில் ஒழுங்கு'
பலநேரம் நமக்கு
வாராத் ஒன்று!
***
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
ஜெய்ஹிந்த்!
செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்:
கேள்வி:"செஸ் காய்களில் உங்களுக்குப் பிடித்தது எது?"
பதில்:"
சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்து கொண்டே இருப்பார். பிஷப், ராஜாவைக் காப்பாற்ற வியூகங்கள் வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால், ஒரு சிப்பாய்தான் தன் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து
உயிரைக் கொடுத்துப் போராடுவார். அவர்
ஒரு போதும் பின்வாங்க மாட்டார். செஸ் ஒரு மெளன யுத்தம். நான் செஸ் விளையாடும்போது என்னைச் சிப்பாயாகக் கற்பனை செய்துகொள்வேன். அதனாலேயே என் ராஜாவைக் காப்பாற்ற நான் முடிந்த அளவு போராடுவேன்"
எவ்வளவு உண்மை. அப்படித்தான் பின் வாங்காமல் போராடி 26/11 மும்பை நிகழ்வில் மக்கள் உயிர் காக்க தம் இன்னுயிர் நீத்தார் நம் காவலர். நாட்டின் தலைமை, உள்துறை செயலகம் [ராஜா? பிஷப்?]அறைக்குள் முன்னும் பின்னும் நடந்தபடி பிறப்பித்த உத்திரவுகளை,
பின் வாங்காமல் முன் நின்று அன்று முடித்தவருக்கும் அப்பணியிலே தம் வாழ்வையே முடித்திட நேர்ந்தவருக்கும் நம்
வீர வணக்கங்கள்!
***