திங்கள், 22 மார்ச், 2010

நோட்டு மாலைகள்


பசித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை

மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்

உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்

அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது ஆகுமென
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவனை
நினைத்து நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி

'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்

'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
***












நன்றி விகடன்!



புதன், 17 மார்ச், 2010

ஒற்றை-மார்ச் PiT போட்டிக்கு-பறக்கும் படங்கள்

'ஒற்றை’ இதுதான் தலைப்பு. ‘சிங்கம் சிங்கிளாதான் வரும். அப்படி இருக்கணும் படங்கள்’ என்கிறது போட்டியின் விதிமுறை. பறவைகளில் ஆரம்பித்து விலங்குகளையும் காண்பித்துப் படகிலே முடித்துள்ளேன்.

[கணினித் திரையை விட்டு விலகித் தெரியும் படங்களை ரசிக்க ‘கண்ட்ரோல், மைனஸ்’ பொத்தான்களை ஒருசேர அழுத்தங்கள். நன்றி.]


கொக்கரக்கோ

போட்டிக்கு!
***

பாசக்காரன்
விட்டு விட்டுக் கூவி
விட்டேனா பாரென
பாயைச் சுருட்டியெழும்வரைப்
பார்த்து நிற்கும் ஸ்னூஸ் அலாரம்
***

ஒயிலாய் ஓர் மயில்





வான்கோழியும் விடாமுயற்சியும்
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை...! ஒரு உவமைக்காகச் சொல்லப் பட்டதைப் பிடித்துக் கொண்டு.. எதற்கெடுத்தாலும் எல்லோரும் உபயோகித்தபடி..ஏன்? இன்று வரை வான்கோழி என்றாலே நினைவுக்கு வருவது இந்தப் பழமொழிதான். பாவமில்லையா அது? மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே!
***
நடக்கையில் சிலிர்க்கும் சிறகும்..


சிலிர்க்கையில் விரியும் இறகும்..


கொடுத்திருக்கிறான் இறைவன்
அழகென இதற்கும்
***


உஜாலா

நான் மாறிட்டேன். அப்போ நீ?
***

வான்கோழிக் குஞ்சு

‘ராபின் தி பெஸ்ட்’

விளம்பரங்களில் போட்டித் தயாரிப்புகளைச் சற்றே குறிப்பாகக் கோடு காட்டினாலே கோர்ட்டுக்கு போய் உடனே ஸ்டே வாங்கி விடுவார்கள். இப்போது ரின் தன் விளம்பரத்தில் டைட் பாக்கெட்டையே காட்டி, போட்டுத் தாக்கி வருகிறது! டைடும் கோர்ட்டுக்கு போயிருப்பதாகக் கேள்வி! என்ன தாமதமோ? ரின் கொண்டாட்டமாய் விளம்பரைத்தைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்கிறது!


இரட்டைவால்

ஒற்றையாய் வீற்றிருக்கும்
இரட்டைவால் குருவி
இலைகளுக்குள் எங்கிருக்கு
உற்றுப் பார்த்துக் கண்டுபிடி
***


'விலங்கு'
வனத்தில் வாழப் படைத்தான் இறைவன்
அடக்கி ஒடுக்கி ஆள்கிறான் மனிதன்

இப்படிப் பம்மி நிற்கிறது, ‘அட்டென்ஷன்’ ட்ரில் மாஸ்டர் போலக் குரல் கொடுத்தாரோ பாகன்? மனிதனின் முன்னேற்றத்துக்குத் தடையான கால் விலங்கும், தன் பலம் உணராமைதான்!


தனிமை
இனிமையா கொடுமையா?
இருண்டு வரும் வானும்
உருண்டு மோதும் அலையும்
விரிந்து பரந்த மணலில்
புள்ளியாய் நாயும்..

இனிமையென சொல்ல முடியாதபடி ஏதோவொரு சோகம் இயம்புகிறதோ இப்படம்?


ஒரு படகு
பழுப்பழகு
வண்ணமயமல்ல..
கருப்பு வெள்ளையுமல்ல..
இரண்டோடும் சேராத பழுப்பழகு!

இது மீள்படம் அன்று ! கடந்த மாத PiT பதிவில் , படகுப் படங்கள் வேறு மூன்றைப் பகிர்ந்து கொண்டு விட்டதால், இதை இப்படித் தந்துள்ளேன் பிக்காஸாவின் ‘சேப்பியா’வை உபயோகித்து. மூதாதையர் ஆல்பம் ஒன்றைப் புரட்டும் உணர்வு வருகிறதா? எனது ஃப்ளிக்கர் தளத்தில் ஒரிஜனலையும் காண விரும்பியவருக்காக எழில் வண்ணமாய் இங்கு.

போட்டிக்கான கடைசித் தேதி 20, மார்ச். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

பிடித்த படமெனக் குறிப்பாக ஏதேனும் இருப்பின் சொல்லிச் செல்லுங்கள். நன்றி!
***

சனி, 13 மார்ச், 2010

உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக

நிலாவில் இருக்கிறதாம் நீர்! கண்டுபிடித்த அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு எல்லையே இல்லைதான். செயற்கைகோள்கள், உலகை உள்ளங்கையில் அடக்கிட வலை மற்றும் தொலை அலைபேசிகள், நாளுக்குநாள் அப்டேட் ஆகிக் கொண்டே போகும் எலக்ட்ரானிக் காட்ஜெட்கள், அதிநவீன ஊர்திகள், மருத்துவ முன்னேற்றங்கள் இப்படி எல்லாமே மகத்தான சாதனைகள்தான். ஆனால் இத்தனை பெருமிதத்துக்கும் முதலில் இருக்க வேண்டுமே பூமி?

டைனாசர்களை அனிமேஷன் வித்தைகளாகவே காண வாய்த்திருந்தாலும் அவை வாழ்ந்ததற்கு ஆதாரமாய் இருக்கின்றன எலும்புக்கூடுகள். அசுரபலம் நமக்கென நினைத்து வாழ்ந்த அவையாவும் ஒரு கட்டத்தில் தங்கள் பெரும்பசிக்கு ஏற்ற தீனி கிடைக்காமல்தான் மரித்துப் போயிருந்திருக்கக் கூடும். அப்படித்தான் ஆகி விட்டன இன்று இயற்கையை அழித்தபடி, மிதித்தபடி நான் ஏறி ஏறிச் சென்றடையும் விஞ்ஞான வியப்புகள், பொருளாதார வளர்ச்சிகள்.

அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.

சுத்தமான நீர் வேண்டுமானால் விலை கொடுத்தே வாங்க வேண்டுமென்கிற அவலம் வரும் எனக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னே கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டோம். வந்து விட்டது. மாசடைந்த நீரினால் வாய்க் கொப்பளித்தால் கூட நோய்வர வாய்ப்பிருக்கிறதென கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? எங்கிருந்து தொடங்கப் போகிறோம்?

தொடங்கலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் வின்சென்ட் அவர்கள் தனது மண், மரம், மழை, மனிதன் வலைப்பூவில்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபத்து இரண்டாம் தேதி உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் என்றும், வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்றும் கூறியுள்ளார்.

அழைப்பினை ஏற்று முத்துலெட்சுமி இட்டிருக்கும் பதிவு இங்கே.

என் பங்குக்கு இந்தப் பதிவு, தண்ணீர் சிக்கனம் குறித்த அனுபவங்களும் புகைப்படங்களுமாக:

குழாயைக் குற்றால அருவியாய்க் கொட்டவிட்டபடி பல்துலக்காதீர்கள். தேவைப்படும் நேரம் மட்டுமே திறவுங்கள்.


ஷவரில்
‘ஊலலல்லா’ என மணிக்கணக்காக உல்லாசக் குளியல் போடாதீர்கள்.

வாஷிங் மெஷினில் முழு லோடு சேர்ந்தால் மட்டுமே போட்டு எடுங்கள். நிறைய தண்ணீர் மிச்சமாகும்.


வாகனங்களைக் குளிர குளிர குளிப்பாட்டினால்தான் பப்பளவெனப் பளபளக்கும் என்பதில்லை. ஹோஸ் பைப் வசதியிருந்தாலும் கூட வாளிநீரில் கழுவும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மற்றவருக்கும் வலியுறுத்துங்கள்.


ஓவர்ஹெட் டாங்குகளை நிரம்பி வழிய விடாதீர்கள். என்வீட்டு பால்கனியிலிருந்து ஜூம் செய்த காட்சியொன்று:

புறாக்கள் குளிக்க இப்படித் தண்ணீரைத் திறந்துவிடுவதால் சிபிச் சக்ரவர்த்திகளாகி விடுவோம் என எண்ணாதீர்கள். அதிலே ரொம்பக் குறிப்பாக இருந்தால் தனியே ஒரு சின்ன டப்பில் நீர் வைத்தாலே போதும். கீழ்வரும் படத்தில் எத்தனை தொட்டிகள் பாருங்கள்!


நாளுக்கு ஏதோவொரு டாங்க் நிரம்பி இப்படிக் கொட்டிக் கொண்டிருப்பதைக் காணநேர்கிறது. உங்கள் வீட்டுத் தொட்டி நிறைவதற்கு எடுக்கும் நேரம் என்ன என்பதைச் சரியாகக் கணக்கிட்டு மோட்டாரைக் குறிப்பிட்ட நேரத்தில் அணைத்து விடப் பழகுங்கள். அல்லது இதற்கென கிடைக்கும் ஆட்டோமேடிக் கண்ட்ரோலரை வாங்கிப் பொறுத்திடுங்கள். [இத்தகவலை பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கும் பதிவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்!]

சிறுதுளி பெருவெள்ளம். தெரிந்துதான் வைத்திருக்கிறது உள்ளம்.ஆனாலும் அசட்டையாகவோ அவசரத்திலோ சரியாகக் குழாயை மூடாமல் விடுபவர் எத்தனை பேர்? ஒருவேளை அது லீக்கேஜ் என உறுதியானால் உடனடியாக ப்ளம்பரை அழைத்து சரிசெய்யுங்கள். ஒரு எலக்ட்ரிகல் பாயிண்டில் சிறுபொறி வந்தால் பதறி எப்படி எமர்ஜென்ஸி என நினைப்பீர்களோ அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுங்கள்.
நான் வசிக்கும் அறுநூறுவீடுகள் கொண்டு பெரிய குடியிருப்பில் 24 மணி நேர தண்ணீர் சப்ளைதான். ஆனால் கோடை காலத்தில் நீரை விலைகொடுத்து வாங்கிதான் சம்புகளை நிரப்புகிறார்கள். அரசாங்கமானாலும் சரி அசோசியேஷன் ஆனாலும் சரி வரிப்பணம் கொடுக்கிறோம், பராமரிப்புப் பணம் கொடுக்கிறோம், தண்ணீரைத் தங்குதடையின்றி தருவது அவர்கள் கடமை நமக்கென்ன ஆயிற்று எனக் கருதாமல், நம் பங்குக்கும் சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தனி வீடுகளில் வசிப்பவர்கள் மழைநீர் சேமிப்புக்கு வழி செய்து கொள்ளுங்கள். மண் தரைகளை கூடுமானவரை சிமிண்ட் தளத்தால் மூடாதீர்கள். நிலத்தடி நீர் வற்றாதிருக்க வழிவகுக்கும். புதிதாக கட்ட ஆரம்பிக்கும் குடியிருப்பெனில் இதை வலியுறுத்திப் பார்க்கலாம் அங்கு வீடு வாங்குபவர்கள்.

புதிதாக எதையும் நான் சொல்லிவிடவில்லைதான். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும் திரும்பத் திரும்ப கண்ணுக்கும் கருத்துக்கும் வருகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனும் எண்ணம் வலுக்கும்தானே?


ண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் தண்ணீராய் இருந்தாலும் கையளவு கூடப் பருகிட உகந்ததாய் இருப்பதில்லை கடல்நீர். எல்லாத் தண்ணீரும் மாசினால் அப்படி தகுதியற்றதாகி, கண்ணீருடன் வருங்கால சந்ததி வருந்தி நிற்க நேரும் அவலம் தவிர்ப்போம்.

சுத்தமான நீரே ஆரோக்கியத்துக்கான அடிநாதம், அண்டத்தின் சுழற்சிக்கான உயிர்நாடி என்பதை உணர்வோம். அனைத்து ஜீவராசிகளும் நலனுடன் வாழ்ந்தால்தானே உலகம் உய்யும்?

ஒவ்வொரு முறை இயற்கை சீறும் போதும் அதை நிந்திப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்ட நாம் சிந்திப்போம். போற்றி, அன்னையவள் தந்த வளங்களைக் காப்போம்.

நதிகளையும் நீர் நிலைகளையும் மாசுப் படுத்துவோர் சிந்திக்க வலைப்பதிவுகள் வாயிலாகக் குரல் எழுப்புவோம். கீழ்வரும் படத்தை தங்கள் வலைப்பக்கங்களில் பதிந்தும் பங்கை ஆற்றிடலாம்!
நன்றி!
***



  • இங்கு வலையேற்றிய பிறகு மார்ச் 2010 வெள்ளிநிலா இதழிலும்.

வியாழன், 11 மார்ச், 2010

கால காலமாய்..





கோவிலில்
அர்ச்சனைக்குக் கொடுத்திருக்கிறாளாம்
அவர் பெயரில்

அழைத்து நின்ற மனைவிக்கு
அவள் செல்லமகன் கடைக்குட்டியைக்
கைகாட்டி விட்டு
மனையெங்கும் நிறைந்திருந்த
மற்ற உறவுகளைக்
கூட்டினார் ஒன்றாகக் கூடத்தில்

அடுத்த ஐந்து தினங்களில்
வரவிருந்த தன் ஐம்பதாவது
மணவிழாக் கொண்டாட்டத்தில்
எவரெவருக்கு என்ன பொறுப்பெனப்
பிரித்துக் கொடுத்துவிட்டுப்
பெருமிதமாய் நிமிர்ந்தமர்ந்தார்

வருகின்றயாவரும் வாய்பிளந்து
ஆச்சரியப் பெருமூச்செறிந்து
கண்ணிமைக்கவும்தான்
மறந்துபோகிற வண்ணமாய்
பரிசொன்றைத் தரவேண்டும்
சபையிலே தன்னவளுக்கு

கவுரவத்தைக் காக்கும்வகையில்
கச்சிதமான பொருளினைப்
பரிந்துரைக்கும் நபருக்கும்
தருவேன் என்றார் அன்பளிப்பாய்
தங்கத்தில் மோதிரமொன்று
நடுவில் உயர்ரத்தினம் பதித்து

முன்வந்து சிலாகித்தாள்
மூத்த கொழுந்தியாள்
அன்றொருநாள் போத்தீஸில்
வியந்துபார்த்து வாங்காதுவிட்ட
பாட்டுப்பாடும் சீலையை

'வைரத்தில்ஆரம் வனப்பாய்
இருக்கும் அண்ணிக்கு'
குரல் கொடுத்தாள் தங்கை
வேண்டும் போது பெற்றிடலாம்
உரிமையோடு இரவல் என்று

'தனியாகக் கார் இருந்தால்
சவுகரியம் பாட்டிக்கு'
ஊர்சுற்ற தனக்கும்
உள்ளுக்குள் நினைத்தபடி
செல்லமகளின் சீமந்தப் புத்திரன்

'ப்ளாஸ்மா நல்லாயிருக்குமே'
தென்றலும் திருமதிசெல்வமும்
இனிவிரிவார்கள் பெரியதிரையில்
கற்பனையில் அகமகிழ்ந்தபடி மருமகள்

பெரியமகன் சொன்னது
சகலைக்குப் பிடிக்கவில்லை
அயித்தான் சொன்னது
அத்தைக்கு ஒப்புதலில்லை
அவரவர் ஆசைக்கு
அடுத்தவர் சொல்வது
அத்தனை ரசிக்கவில்லை

ஆனாலும் பெரிதுபடுத்தாது
நவநாகரீக பிளாட்டின நகைமுதல்
அதிநவீனக் கைபேசி வரை
ஒவ்வொருவர் ஒன்றைச் சொன்னார்
தவற விடுவானேன்
தனிபரிசையெனப் பலபேரும்
அக்கறையில் வெகுசிலபேரும்

எவர்சொன்னதிலும் திருப்தியின்றி
அவகாசம் வாங்கிக்கொண்டு
கூட்டத்தைக் கலைத்திட்டார்
குழப்பத்துடன் எழுந்திட்டார்
ஓய்வாக உள்ளறையில்
ஆழ்ந்துபோனார் சிந்தனையில்

ஆடியதுநிழல் வாசற்படியிலே
அன்னைக்குத் துணையாக
ஆலயம் சென்றிருந்தவன்
நின்றிருந்தான் நெடுமரம்போலே

ஏனோ தன்னோடு அதிகம்
ஒட்டுவதில்லை எனும்
நெஞ்சடைக்கும் ஏக்கத்தால்
அதீத பிரியம்தான்
எப்போதும் இவன்மேலே

சொல்லெனக் கண்ணாலேபேசிக்
கனிவாய்ப் பார்த்திருந்தார்
ஆடும் நாற்காலியில்
முன்னும்பின்னும் போனபடி

சின்னத் தயக்கத்துக்குப்பிறகு
திறந்தான் சின்னவன் மனதை
"இனியாவது அம்மாவுக்கு
மதிப்பு சந்தோசம் நிம்மதி"

நின்றது நாற்காலி.
நிற்காமல் காலகாலமாய்
ஓடிக் கொண்டிருந்தது
அறைமூலையில்
ஆளுயரப் பாட்டன்கடிகாரம்

திருகப்பட்ட சாவிக்குத்
தடையற்ற
சேவையைத் தந்தபடி
கடந்துபோன
நிகழ்வுகளுக்கு எல்லாம்
கனமான மவுனசாட்சியாய்..?!
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.


  • 6 மார்ச், விகடன்.காம் சக்தி 2010 மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியான கவிதை.




திங்கள், 8 மார்ச், 2010

சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.காமின் சக்தி 2010-ல்

மகளிர்தின வாழ்த்துக்கள்!

ன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.

துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.

கமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.



இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களை பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. அவர்கள் முயற்சித்துதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை. ஆனால் முயற்சிக்க விடுங்கள்!

மாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.

விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.

பி
ரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய மங்கையர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?

சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.

வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.

கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.

துரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***






  • 6 மார்ச், “சக்தி 2010” மகளிர்தினச் சிறப்பிதழின் ஹைலைட்ஸ் ஆகஇங்கே:













  • யூத்ஃபுல் விகடன் தளத்தின் ‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:
நன்றி விகடன்!

  • ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனும் தலைப்பில் ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

புதன், 3 மார்ச், 2010

கலைமகளில் வலைப்பதிவர்

கலைமகள் மாத இதழின் வாசகர்களுக்கு, வலைதளத்தின் குட்டி சாம்ராஜ்யமாக விளங்கும் பதிவுலகினை அறிமுகப்படுத்தும் முயற்சியாக ஷைலஜா அவர்கள் கடந்த இதழில் ஆரம்பித்திருக்கும் கட்டுரைதான் ‘இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்!’. முதல் பாகத்தில் சுப்பையா சார், துளசி மேடம், அம்பி, ரிஷான் ஷெரீஃப் ஆகியோர் இடம் பெற்றதைத் தொடர்ந்து இம்மாத இதழில் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருடன் நானும்.

[ஸ்கேன் பக்கங்களைக் ‘க்ளிக்’கிட்டுப் பெரிதாக்கியும் வாசித்திடலாம்.]

முதலில் பிப்ரவரி இதழில் ஷைலஜா எழுதிய முன்னுரை உங்கள் பார்வைக்கு:


இனி மார்ச் இதழின் கட்டுரை:

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனது பதிவினை முழுவதுமாக வாசிக்க இங்கும் செல்லலாம்.




நன்றி ஷைலஜா!

மகளிர்தினம் காணும் மாதத்தில் மங்கையர் எமைச் சிறப்பித்தமைக்கு நன்றி கலைமகள்!

இடம் பெற்றிருக்கும் சக பதிவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!

இதை சாத்தியமாக்கி, தொடர்ந்து எங்களை எழுத வைத்து ஊக்கம் தந்து வரும்
நண்பர்கள் உங்களுக்கு
எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்!

திங்கள், 1 மார்ச், 2010

பூமேலே நேசம்



'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே
புன்னகைத்தபடி இருப்பதுதான்.
இதுபுரியாதவர் என்னமனிதரோ?'

சிரித்துக்குலுங்கிய பவளமல்லிகளைப்
பார்த்ததும்கிடைத்த பரவசத்தை
அடுத்தநொடியே அலுப்பதில் தொலைத்தாலும்
கண்ணுங்கருத்துமாய்த் தன்தோட்டம்
பேணிவந்த கனகத்தின் கொள்கையிலே
தவறேதும் தெரியவில்லை.

அவர்நந்தவனத்தை அலங்கரித்து வந்தன
செவ்வரளி செம்பரத்தை சிவந்திசம்பங்கி
சிவப்பு மஞ்சள் ரோஜாக்கள்
மகிழம்பூ நந்தியாவட்டை
வண்ணவண்ண ஜினியாக்கள்.

இவற்றுக்குநடுவே புதிதாக உயர்ந்து
சுற்றுச்சுவரினை விடவும்வளர்ந்து
தெருவைஎட்டிப் பார்த்து
இதமாய்ச் சிரித்த
இருசூரியகாந்திகளைக் கண்டதும்
பூந்தோட்டக் காவல்காரம்மாவின்
கடுகடுப்பு மறந்தேதான் போனதுபாவம்
சிறுமி செண்பகத்துக்கு.

அச்சோலையைக் கடக்கும்போதெல்லாம்
கம்பிக்கதவுளின் ஊடாக
மெல்லிய ஏக்கப்பார்வையை படரவிட்டபடி
விடுவிடுவெனப் பயந்துநடப்பவளைத்
தயங்கித்தயங்கிக் கால்தேய்த்து
நிற்க வைத்தன
மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்.

ஆதவன் உதிக்கும் திசைநோக்கி
வந்தனம் பாடி அவைநிற்க
தன்னை எதிர்பார்த்தே
தவமிருப்பதாய் நினைத்து
தலையசைக்கும் தங்கமலர்களுக்குக்
கையசைத்துச் செல்லுவாள்
காலையிலே பள்ளிக்கு.

மணியடிக்கக் காத்திருந்து
மாலையில் திரும்புகையிலோ
மறையும் கதிரவனை
மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்
அவளைக்காணவே மேற்குத் திரும்பி
வட்டக்கருவிழி பூரிக்க
ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்
எண்ணந்தனை வேறு
வளர்த்து விட்டிருந்தாள்!

உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
அடைத்து வைக்கும் வித்தை
அறியாத பருவத்தினள்
கருணைகொள்வாள் கனகமெனக்
கனன்றெழுந்த கணநேரச்சிந்தனையில்
துணிந்துகை காட்டியேதான்விட்டாள்
ஒருமலரேனும் வேண்டுமென.

"செடியோடு அவையிருந்தால்
இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
உனக்காக நான்பறித்தால்
ஒரேநாளில் வாடிவிடும்"

மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
இந்தப்பக்கம்
வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.
***


படம்: இணையத்திலிருந்து..



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin