செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஜெய் ஹோ...!

முதன் முறையாக யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் எனது இக்கவிதை!


"எல்லாப் புகழும்
இறைவனுக்கே
"-
அல்லாவின் திருவடியில்
அத்தனைப் பாராட்டையும்
அர்ப்பணித்து
வெற்றி ஏணியின்
ஒவ்வொரு படியிலும்
ஏ.ஆர் ரஹ்மான்
தன் உள்ளிருந்து
உச்சரிப்பது.
உலகமே பார்த்திருக்க
இந்திய இதயங்கள்
இன்பத்தில் பூத்திருக்க
தமிழர் தலைகள்
பெருமிதத்தில்
நிமிர்ந்திருக்க
உச்சிப்படியில் நின்று
மறுபடி அதையவர்
உச்சரிக்கக் கேட்ட போது
அரங்கம் அதிர்ந்தது
கரகோஷத்தில்
அகிலம் அதிர்ந்தது
அவர் தந்த இசையில்..
ஜெய் ஹோ...!

தன்னம்பிக்கை இவரது
வெற்றியின் சூட்சமம்
தன்னடக்கமே இவரது
தாரக மந்திரம்-
ஈன்றெடுத்த
தாயின் பாதங்களில்
விருதினை சமர்ப்பித்து
தாய் மண்ணுக்கும்
ஈட்டித் தந்திருக்கிறார்
இத்தனை பெருமை-
ஆனந்த வெள்ளத்தில்
குதித்துக் கும்மாளமாய்
கூவுகிறார் ரசிகரெல்லாம்..
ஜெய் ஹோ...!

சூழ்கிறார் இவரைப் பேட்டிக்கு-
"எதுவும் முடியும்
எனும் எண்ணம்
இனி வரட்டும்
இளைஞர் ஒவ்வொருவருக்கும்"

சொல்கிறார் நற்செய்தி
வெல்கின்ற வழிகாட்டி-
சொல்லுங்கள் இளைஞர்களே
ஜெய் ஹோ..
வெல்லுங்கள் உலகை
ஜெய் ஹோ...!

செய்யும் தொழிலே
தெய்வம் என்று
நேர்த்தியை நாடி
விழித்தே இருந்த
இவரது இரவுகள்
யாவும் விடிந்தன
வெற்றியின் முகத்தில்
ஒவ்வொரு நாளும்-
வந்தன விருதுகள்
வாசலைத் தேடி..
ஜெய் ஹோ...!

வறுமை இவரை
வறுத்த போதும்
வருத்தம் விடுத்து
பொறுப்புகள் சுமந்தார்.
இளமையில் கல்வி
முழுமை அடைய
முடியாது போயினும்-
முயன்று கற்றார்
அல்லும் பகலும்-
முழுமையாய் இசையினை
மூத்தோர் பலரிடம்-
கூடவே கற்றார்
பணிவும் பண்பும்-
அயராத உழைப்பால்
அடைந்தார் வெற்றியும்-
ஜெய் ஹோ...!

பெற்றவர் இன்ன
துறையில் எனை
நுழைய விட்டிருந்தால்
தொட்டிருப்பேன் வானத்தை-
இன்னார் எனக்குவந்த
இவ்வாய்ப்பைத்
தட்டிப் பறிக்காதிருந்தால்
எட்டியிருப்பேன் இமயத்தை-
என்றெல்லாம்
போனவற்றைப் பேசிப்பேசிப்
பொழுதினைப் போக்காமல்
காரணத்தைத் தேடித்தேடி
கணங்களைக் வீணாக்காமல்
கற்றிடுங்கள் பாடமிவர்
பெற்றிருக்கும் வெற்றியில்
ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
நிச்சயமாய் நீங்களும்..
ஜெய் ஹோ...!
*** *** ***


[படம்: இணையத்திலிருந்து..]

[25-27 பிப்ரவரி 2009 விகடன் இணைய தள முகப்பிலும் ஒலித்தது 'ஜெய் ஹோ...!']


யூத்ஃபுல் விகடன் முகப்பில்
:
விகடன் இணையதள முகப்பில்:

திங்கள், 16 பிப்ரவரி, 2009

'பறக்கத்தான் சிறகுகள்’:கணநேரக் கண்ணாடிகள்[Action Shots]-Feb PiT

1. பறக்கத்தான் சிறகுகள்


'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!
*** *** ***


2. "நகருவது நாமா.. சாலையோரச் செடியா.."

விரைகின்ற வண்டியிலிருந்து
வியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..
கண நேரத்தில் காமிரா
கவர்ந்திட்ட காட்சி இதற்காகவே
பிறந்திட்ட கவிதை கீழே:

இரயில் பயணங்களில்..


நிற்கின்ற புகைவண்டியிலே
ஜன்னல் ஓர இருக்கையிலே
அமரக் கொடுத்து வைக்கையிலே-
சடாரெனப் பக்கத்து
இருப்புப் பாதையிலே
‘தடதட’ சத்தத்துடன்
பாய்ந்து வரும்
எதிர்திசை வண்டி
ஏற்படுத்தும் ஓருணர்வை-
நாமிருக்கும் வண்டிதான்
நாலுகால் பாய்ச்சலில்
நகர்வது போலவே..
பிடித்த பிரமை
'மடமட'வென்றே
விலகிடும் வந்த வேகத்தில்..
பின்னால் தேய்ந்து
சன்னமாகிடும் சத்தத்திலும்-
கண் முன்னால் விரிந்திடும்
சற்றுமுன் கண்ட
அதே காட்சியிலும்..

வாழ்விலும் கூட இதுவே நியதி-
பிரச்சனை தடதடவென வருகையிலே
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்
எடுத்திடலாம் ஓட்டம்
என்றுதான் மனமது விழையும்..
நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போய்விடும்.
இன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.



3.காலக் கண்ணாடியில் ஒரு ஆனந்தத் தாவல்


ஆனந்தம் இது ஆனந்தம்
ஆஹா வெகு ஆனந்தம்
காவேரியில் இத்தனை தண்ணீர் கண்டால்
கரை புரண்டிடாதோ ஆனந்தம்!
[கணநேரக் கண்ணாடி மட்டுமல்ல இது. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முந்தைய கணத்தைக் கண் முன் கொண்டு வந்திருக்கும் காலக் கண்ணாடியும் கூட!]
*** *** ***


இங்கு வலையேற்றிய பின் “பறக்கத்தான் சிறகுகள்” கவிதை பிப்ரவரி 19, 2009 திண்ணை இணைய இதழிலும், மார்ச் 10, 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது:




இங்கு வலையேற்றிய பின் “இரயில் பயணங்களில்..” கவிதை 8 மார்ச் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும், 17 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது:

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்



ட்டு வயது நிரம்பாச் சிறுமி
அடிக்கிறாள் எட்டுக் குட்டிக் கரணம்-
குருட்டுப் பையன் குரல் எடுத்து
பாடுகிறான் தோதாகப் பாடல் ஒன்று-
பக்கத்தில் சோதாவாய்த் தெரிந்த
பாலகன் அவன் நண்பனின் விரல்கள்
அசாதாரணமாய் அற்புதமாய்
விளையாடுகின்றன மத்தளத்தில்-
சிந்தை மயங்குகிறது அவர் வித்தையில்-
செவிகள் சிலிர்க்கின்றன கேட்கையில்-
விழிகள் விரிகின்றன வியப்பில்-
புருவங்கள் உயர்கின்றன
அளவு கடந்த ஆச்சரியத்தில்-
கலைவாணியின் பூரண அருள்
வீதிக் கரையோரம் தாராளமாய்ப்
புரள்கின்ற புதிரான விந்தையில்!

போக்குவரத்து நெரிசல் அல்லது
சிவப்பு நிறத்தில் சிக்னல்-
போக முடியாமல் வாகனங்கள்-
வேகம் வேகமென
விரையும் மாந்தர்கள்
ஆரன் அடித்து அடித்து என்ஜினை
அலுப்புடன் அணைத்துக்
காத்திருக்கும் தருணங்கள்-
இதுதான் இச்சிறாருக்கு இறைவன்
அன்றைய பொழுதுக்குக்
கருணை காட்டும் கணங்கள்.

செம்பஞ்சுத் தலையுடன்
புழுதி பூசிய உடம்புடன்
கிழிந்து தொங்கும் உடையுடன்
ஒவ்வொரு வண்டிக் கதவும்
ஒற்றை விரலால் தயங்கிப் பின்
ஓங்கித் தட்டப் படுகையில்
ஒரிரு கண்ணாடிகளே இறங்கிடும்
இரக்கம் 'காசாக'க் கைமாறிடும்.

இறங்காக் கண்ணாடிகள்
ஏஸியின் குளிரிலும்
இறுக்கமாய் புழுங்கிடும்-
‘கொடுத்தால் கூடிடும்
இக்கொடுமை’ மிகப்
பொறுப்பாய் பேசிடும்-
தெருவிலே இப்படிக்
கையேந்த வைத்தப்
பெற்றவரின்
பொறுப்பின்மையைக்
கடுப்பாய் ஏசிடும்.

'கொடுக்கா விட்டால்
கிடைக்காத ஏமாற்றத்தில்
ஆத்திரமாகித் தீட்டிடுவாரோ
அழுத்தமாய்ச் சித்திரத்தை
விரலிடுக்கு நாணயம் எனும்
விசித்திர ஆயுதத்தால்
பளபளக்கும் தம்
பணக்காரவண்டி மேலே’
பயத்துடனே படபடப்பாய்
சீமை வாகனங்கள் சில
சிட்டாய் விரைந்திடும்-
வெறுப்பாய்ப் பார்வையை வீசிடும்!
***
தே நெரிசல்
அதே சிக்னல்-
அதே கெஞ்சும் கண்கள்
அதே பிஞ்சு விரல்கள்-
தட்டப் படுகின்றன
வண்டிக் கதவுகள்.
ஓரிரு அன்றி அநேகமாய்
எல்லாக் கண்ணாடிகளும்
இப்போது இறங்குகின்றன
இரக்கம் ‘நோட்டாக’க்
கைமாறுகின்றன
‘பாவம் யார் கையில்
வதை படுவரோ
வசூல் இல்லையெனில்’ என.

அத்துடன் அடங்காத கருணை
அக்கறையும் காட்டுகிறது-
மீட்க வேண்டும் காவலர்-
கொடுக்க வேண்டும் கல்வி-
ஆவன செய்ய வேண்டும் அரசு-
நெஞ்சம் குறுகுறுக்கக்
கொஞ்சம் கொஞ்சமாய்
எழுகின்றன குரல்கள்.

இங்குதான் நிற்கிறதோ
ஸ்லம்டாக் மில்லியனர்
ஆயிரம் குற்றச்சாட்டுகளையும்
அநாயசமாய் கடந்து நிமிர்ந்து-
நிராதரவான இவர் பின்னணியை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து.

சேற்றிலே மலர்ந்து
சோற்றுக்காக உலர்ந்து
வேற்று மனிதரின்
வஞ்சகத்தால்
கைகால் பார்வை
பலவந்தமாய்
பறிக்கவும்பட்டு
இன்னலை
இன்னலென்றும்
கொடுமையைக்
கொடுமையென்றும்
புரிந்திடக் கூட இயலாத
பூக்கள் இவற்றைச்
சமூகம் மீட்டெடுத்துச்
சரியாக வாழ வைத்தால்
அந்தச் செந்தாமரைகளின்
ஆசிகளும் வாழ்த்துக்களுமே
ஆயிரம் ஆயிரம்
ஆஸ்கார் அவார்டுகளுக்குச்
சரிநிகர் சமானமாகுமே!
*** *** ***



பி.கு:


இந்தப் படத்தில் வருவது போல எழுகின்ற இரு கேள்விகள்:

இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது?

அ. பெற்றவர் ஆ. சமூகம் இ. அரசு ஈ. விதி

இதற்கு 'அனைத்தும்தான்' என்ற சொல்லத் தோன்றினால்..

இவரை மீட்டு வாழ வைப்பதால் யாருக்கு லாபம்?

அ. அவருக்கு ஆ.நமக்கு இ.நாட்டுக்கு ஈ.உலகுக்கே

இதற்கும் சொல்லிடலாம்: 'அனைத்தும்தான்’!

போட்டி விதிகளின்படி இப்பதில் பரிசினை இழந்தாலும், மனதால் ஆவோம் கோடீஸ்வரராய் மாற்றங்கள் இவர் வாழ்வில் சீக்கிரமே வரப் பிரார்த்தித்து ..!
*** *** ***

[படங்கள்:இணையத்திலிருந்து]





இங்கு வலையேற்றிய பின் மார்ச் 2009 ‘மனிதம்’ மின்னிதழிலும் வெளியாகியுள்ளது:
















படத்தின் மேல் 'க்ளிக்'கிட்டு காண்க.]


இக்கவிதை








21 - 24 பிப்ரவரி, 2009 இளமை விகடன் இணைய தள "குட்... Blogs" பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு பின்னர்










2 மார்ச் 2009 அன்று வெளியாகியும் உள்ளது. நன்றி விகடன்!




புதன், 4 பிப்ரவரி, 2009

மயிலிறகுக் கனவுகள்


படிக்கப் போவதாய்ச் சொல்லி
புத்தகங்கள் கையில் ஏந்தி
படிப்படிப்பாய்த் தாவி ஏறி
மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
சாய்வாய் உள்ளடங்கி-
புத்தகத்தை கைகள் விரிக்கையில்
விழிகள் விரிந்ததென்னவோ
விண்ணினை நோக்கி.

கண் எட்டிய தூரமெல்லாம்
அகண்ட பெருவெளியாய்
அது ஒன்றே தெரிந்திட-
உலகமே அதுதானோ என
வானின் அழகில்
மனமது லயித்திட..

பொதிப் பொதியாய்
நகர்ந்திட்ட வெண்பஞ்சு
மேகக் கூட்டமதனில்
பலப்பல வடிவங்களை
உள்ளம் உருவகப்படுத்தி
உவகை கொண்டிட-
கூடவே குடை பிடித்து
உற்சாகமாய்க் கனவுகள்
ஊர்வலம் சென்றிட..

கூட்டம் கூட்டமாய்
பறந்திட்டக் கிளிகளோ
கூட வாயேன் நீயுமெனக்
கூப்பிடுவதாய்த் தோன்றிட-
இல்லாத இறக்கை
இரண்டால் எம்பிப்
பறக்கவும் துவங்கிடுகையில்..

தலைமாட்டுச் சுவற்றின்பின்
தலைதட்டி நின்றிருந்த
கொய்யாமரக் கிளையிலிருந்து
கூடு திரும்பிய
காகமொன்று கரைந்திட-
மறைகின்ற சூரியனுடன்
கரைகின்ற வெளிச்சம்
கவனத்துக்கு வந்தது.

மூடியது பதின்மம்
மடியிலிருந்த புத்தகத்தை-
மயிலிறகெனக் கனவுகளைப்
பத்திரமாய் உள்வைத்து-
கரைந்திடுமோ அவையுமென்ற
கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-
படிக்காத பாடங்கள் மட்டுமே
பாரமாய் நெஞ்சில் இருக்க.

*** *** ***

[படம்: இணையத்திலிருந்து]

[இங்கு வலையேற்றிய பின் ஜனவரி 30,2009 திண்ணை இணைய இதழிலும் பிப்ரவர் 5,2009 வார்ப்பு கவிதை வாராந்திரி மின்னிதழிலும் பின்னர் மார்ச் 14,2009 இளமை விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ள கவிதை]

விகடன் முகப்பில்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin