வியாழன், 29 மார்ச், 2012

‘மேக் மை ட்ரிப்’ வாங்கிய எனது படம்.. - சுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா நீங்கள் எடுத்த படங்கள்?



Picsean.com சென்ற வருடம் Flickr (mail) வழியாகத் தொடர்பு கொண்டு, இப்படத்தை என்னிடம் விரும்பிக் கேட்டு வாங்கி Make My Trip.com_யிடம் விற்றுக் கொடுத்தது. எவ்வளவுக்கு என்பது முக்கியமில்லை, எவ்வளவு பிடித்திருந்தது அவர்களுக்கு என்பது உங்களுடன் பகிர்ந்திடக் கூடிய ஒன்றாகவே எண்ணுவதால் இந்தப் பதிவு. மேலும் அறிந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உங்களில் ஆர்வம் உள்ளவருக்குப் பயனாகும் என எண்ணுகிறேன்.

டிஸ்கவர் இன்டியா, மிஸ்டிகல் கேரளா, பேரடைஸ் காலிங் எனத் தனது ‘பல’ பேக்கேஜ் டூர்களுக்காக மேக் மை ட்ரிப் டாட் காம் எனது இந்தப் படத்தினைப் பயன்படுத்தி வருகிறது:

அனுமதி இல்லாமல், பதிவுகளுக்குச் சரியான சுட்டியும் அளிக்காமல் ‘நவசக்தி’ தளம் என் சிங்கப்பூர் பயணக் கட்டுரைகள் மற்றும் படைப்புகளை அப்படியே வெளியிட்டிருந்தது குறித்து தூறல் ஒன்றில் வருத்தப்பட்டிருந்த போது, அப்பாத்துரை அவர்கள் மேலும் ஒரு தகவலைத் தந்திருந்தார், இரண்டு வருடங்கள் முன் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்மணம் விருது பெற்ற என் புகைப்படப் பதிவொன்று சஞ்சிகை ஒன்றில் மேலும் சிலரது பதிவுகளுடன் அச்சாகி அரை டாலருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்ததாக. இப்படி அனுமதியின்றி எங்கெங்கோ உபயோகப்படுத்தப் படுகையில், நம்மிடம் முறையாகக் கேட்டு பயன்படுத்த விரும்புவருக்குக் கொடுப்பதில் திருப்தியே.

சரி, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமேதான் நாம் கொடுக்க வேண்டுமா? அவர்களின் தேவையை எப்படி அறிவது? எடுத்த எந்தப்படங்களையும் கொடுக்கலாமா? எனும் கேள்விகள் உங்களில் பலருக்கு வரக்கூடும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடிக்கடி சுற்றுலா செல்பவர்களா நீங்கள்? உங்கள் படங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா? உதவி செய்யக் காத்திருக்கும் தளமே http://www.picsean.com/ . இதில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு நம் படங்களை சமர்ப்பித்து வரலாம். தேவையைச் சொல்லி எனது படத்தை வாங்கியிருந்தாலும் தொடர்ந்து எனது படங்களை தங்கள் தளத்தில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டிருந்தது பிக்ஸியன். சமீபத்தில் மீண்டும் கர்நாடக, தமிழக கோவில் படங்கள் சிலவற்றை அங்கு பதிந்து வைத்தேன். படம் எடுத்த இடம், விவரங்கள் ஆகியவற்றையும் கூடவே அளித்திடல் நன்று. Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் [அதாவது உயர அகலத்தில் எது அதிகமோ அது] 2200 பிக்ஸல் இருக்குமாறும்; dpi 300 இருக்குமாறும் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்.

நம் படங்களுக்கானத் தேவையை அவர்களாகக் கண்டறிந்தோ அல்லது தேவைப்படுகிறவருக்கோ விற்றுத் தருகிறார்கள். இணையதள உபயோகத்திற்கு 10$ எனில் அச்சுப் பத்திரிகைகளின் அரைப் பக்க உபயோகத்துக்கு 50$ முழுப்பக்கத்துக்கு 100$ என்பதாகத் தெரிவித்திருந்தார்கள். பணத்தை நமது paypal கணக்குக்குச் செலுத்தி விடுகிறார்கள். முகப்புத்தகத்தில் http://www.facebook.com/picsean இவர்களைத் தொடர்வதும் அவ்வப்போதைய தேவைகள்,போட்டிகளை அறிய உதவும்.




மேலும் ஒரு புகைப்படத் தகவல்:

ஆனால் புகைப்படத் துறையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு மட்டும்:)!
இந்தத் தளத்தில்அறிவிப்பாகியிருக்கும் EVA '12 புகைப்படப் போட்டியில் விருப்பமானவர் கலந்து கொள்ளுங்கள். மார்ச் 31ஆம் தேதியே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

செவ்வாய், 27 மார்ச், 2012

தூறல்: 3 - எங்கேயும் எப்போதும்

கேள்விக் குறியுடன் மாணவர்கள்:

கேள்வித் தாள் கசிவினால் எதிர்காலம் குறித்த கவலையும் கேள்விக்குறியுமாக நிற்கிறார்கள் கர்நாடகத்தின் பி.யூ இரண்டாம் வருட மாணவர்கள். சென்ற வியாழனும் இன்றும் நடக்கவிருந்த இயற்பியல் மற்றும் கணக்குப் பாடங்களின் கேள்வித்தாள்கள் வெளியேறிவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவலருக்குத் தெரியவர அந்தத் தேர்வுகளை ஏப்ரல் முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்து விட்டுள்ளது பியு கல்வித் துறை. அதே 'வாரத்தில்' அனைத்திந்திய மருத்துவ(AIPMT) மற்றும் IIT நுழைவுத் தேர்வுகளும் இருக்க மாணவர்களுடன் பெற்றோரும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள் என்றாலும் வேறு மாற்றுவழி அறிவிக்கப்படவில்லை. பொது நுழைவுத் தேர்வுக்கும் (CET) திட்டமிட்டபடித் தயாராக நேரமில்லை என ஆத்திரப் படுகிறார்கள், வருத்தம் தெரிவிக்கிறார்கள் மாணவர்கள்.

கணக்கு, இயற்பியல் போக, கைதான மூன்று பேரிடமிருந்தும் கைப்பற்றிய உயிரியல் கேள்வித்தாள்கள் கூட அப்படியே அச்சு அசலாகப் பதினாறாம் தேதி நடந்த முடிந்த தேர்வுக் கேள்விகளை ஒத்ததாகவே இருந்ததெனத் துணை கமிஷனர் சொல்வதைக் கல்வித் துறை மறுத்தாலும் கவனக் குறைவால் பெரிய குளறுபடி நேர்ந்து விட்டுள்ளதை மறுக்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறது.

எங்கேயும் எப்போதும்:

சென்ற மாத இறுதியில் பெங்களூர் ‘வொண்டர் லா’ பொழுது போக்குப் பூங்காவுக்கு 140 மாணவர்களில் ஒருவராகப் பள்ளிச்சுற்றலா சென்றிருந்த பனிரெண்டு வயது மாணவி ஷபரீன் தாஜ் விளையாட்டுக் குளத்தில் மூழ்கி இறந்து போனார். இருந்த 12 மிதவை வளையங்களுக்கு 40 குழந்தைகள் போட்டியிட்டதாகவும் நடுவில் நின்றிருந்த தாஜ் அந்த சமயத்தில் மூழ்கி விட்டதாகவும், அசைவற்று நீருக்குள் கிடைப்பதைக் கவனித்து சில குழந்தைகள் எழுப்பிய சத்தத்தில் 20 நிமிடம் கழித்தே மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது, கூட இருந்த நான்கு மாணவ மாணவியர் போலிசுக்குக் கொடுத்த நேரடி வாக்குமூலத்தின்படி. பூங்கா நிர்வாகம் விழுந்த(பார்த்த?) 15 விநாடிகளில் வெளியேற்றி முதலுதவி அளித்ததாகச் சொல்லுகிறது. மதிய உணவை முடிக்கச் சென்றிருந்த இரண்டு பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரை வழி மொழிகிறார்கள். சர்வதேசத் தரத்துடன் ஒவ்வொரு விளையாட்டுக் குளத்துக்கும் தாங்கள் பதினெட்டு உயிர்க்காப்பாளார்களையும், 2 காவலாளிகளையும் வைத்திருப்பதாக நிர்வாகம் காட்டும் கணக்குகள் ஏழை டெம்போ ஓட்டநரின் மகளைத் திருப்பித் தரப் போவதில்லை. இந்த இடத்தில் எத்தனை பேருக்கு எத்தனை பேர் எனும் விகிதத்தை விடவும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

அமீரகத் தமிழ்மன்ற ஆண்டு விழா மலர்:


1 மார்ச் 2012 நடைபெற்ற அமீரகத் தமிழ்மன்றத்தின் 12-ஆம் ஆண்டுவிழா நிகழ்வினைப் பற்றிய செய்தியை நீங்கள் இங்கே காணலாம். 126 பக்கங்களுடன் அன்று வெளியிடப்பட்ட ஆண்டு விழா மலரில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் அப்துல் ஜப்பார், என். சொக்கன், ஷைலஜா, ஆசிப் மீரான், காமராசன், ஜீவ்ஸ், அகமது சுபைர், செல்லமுத்து குப்புசாமி, ஷேக் சிந்தா மதார், சென்ஷி, புதுகை அப்துல்லா, நிர்மலா, ஜெஸிலா ரியாஸ் போன்ற பலரது படைப்புகளுடன் எனது சிறுகதை ‘ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’யும் ஒன்பது பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி அமீரகத் தமிழ் மன்றம்!

PiT குழும உறுப்பினர்களில் ஒருவரான MQ Naufal, அவர் எடுத்த படங்களுடன் மற்ற சிலரது படங்களையும் சேர்த்து அட்டைப் படத்தை அழகுற வடிவமைந்திருக்கிறார். அதன் jpg கோப்பினை மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றி MQN. படைப்பு அனுப்பும்படித் தகவல் தந்த ஜீவ்ஸுக்கும் நன்றி.

பெங்களூர் எழுத்தாளர்களுக்கு வரவேண்டிய 5 புத்தகங்களையும் துபாய் சென்ற நண்பர் ஒருவரின் மூலமாக, சிரமம் பாராமல் அபுதாபிக்குக் கொண்டு வரச் செய்து, இந்தியா வந்த மறுநாளே அக்கறையுடன் கொரியரில் அனுப்பி வைத்த ஹுஸைனம்மாவுக்கு என் அன்பு கலந்த நன்றி:)!
குங்குமம் தோழி:

குங்குமம் பத்திரிகையிலிருந்து வாசகர்களுடன் நட்பு பாராட்டப் புதிதாகப் புறப்பட்டிருக்கிறாள் தோழி. அதன் முதல் இதழைக் கருத்துக்காக எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். பெண்களுக்கு மட்டுமேயான இதழ் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்காமல் அனைவரும் வாசிக்க விரும்பும் வகையில் பலதரப்பட்ட கட்டுரைகளைத் தந்திருப்பது சிறப்பு. டயட், ஹெல்த், அழகுக் குறிப்புகள், ஆலோசனைகள்; சர்க்கஸில் சாகசம் புரியும் பெண்களின் சிரமங்கள்; தன்னம்பிக்கைப் பெண்கள் குறித்த அறிமுகங்கள்; சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் பெண்களுக்கு ‘வழிகாட்டும் ஒளி’யாகத் திகழும் அமைப்பு போன்றவற்றுடன் வி ஐ பி-களின் நேர நிர்வாகம்; சினிமா ஈர்ப்பாக இருப்பினும் தன் மனைவியைப் பற்றிய விஜய்யின் பகிர்வு; நி்கழ்காலப் பிரச்சனைக்குத் தீர்வான இன்வெர்ட்டர் விவரங்கள்; பண்டிகைகள் மற்றும் விசேஷங்களைச் சொல்லும் இந்த மாதம் இனிய மாதம் என பல்சுவை இதழாகவே அமைந்துள்ளது.

நிகழ்காலத் தேவையை மனதில் கொண்டு வெளியாகியுள்ளது இணைப்பாகத் தரப்பட்டிருக்கும் சமையல் புத்தகம். பரீட்சைக்குப் படிக்கிற பிள்ளைகளுக்குப் புத்துணர்வைத் தரக்கூடிய உணவுகளைப் பற்றி ஊட்டச் சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் ஆலோசனைகள் வழங்க அதற்கேற்ற வகையில் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் சூப், கஞ்சி, கூழ், குழம்பு, பீட்சா தோசை, நூடுல்ஸ், சுண்டல், புலாவ், பூரி, பரோட்டா போன்ற பல உணவுகளுக்கான எளிய செய்முறைகளை வழங்கியுள்ளார் மெனு ராணி செல்லம்.

எனது கருத்தாக, இலக்கியத்துக்கு 3 பக்கங்களேனும் ஒதுக்கலாம். கோரிக்கையாக, சமையல் வலைப்பூக்கள் வைத்திருக்கும் பதிவர்களின் உணவுக் குறிப்புகளைத் தொகுப்பாக இணைப்புப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ‘முத்துச்சரம்’:இலங்கையில் பிரபலமான தமிழ் சேனலான வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி, 2011 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருதுக்கான முதலிடத்தைப் பெற்ற ஒன்றாகும். தூவனத்தின் ‘இலக்கிய சஞ்சிகை’ நிகழ்ச்சியில் ஒரு இலக்கிய நேர்காணல், ஒரு குறும்படம், ஒரு வலைப்பூ அறிமுகம் ஆகியன இடம் பெறும்.

சென்ற சனிக்கிழமை 24 மார்ச் அன்று காலை 10 - 11க்கும், நேற்று காலை 11-12க்குமாக ஒளிபரப்பான இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்துச்சரம்’ குறித்து ஒளிபரப்பியதாகவும்; நான் எடுத்த படங்களும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷான் ஷெரீஃப். மனமார்ந்த நன்றி ரிஷான்:)!

தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு
:

வாரயிறுதில் மகனைச் சந்திக்க பெங்களூர் வந்திருந்த தேனம்மை நேற்று காலை என் இல்லம் வந்திருந்தார். அலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் பதிவுகளிலும் படைப்புகளிலுமாகவே அறிமுகமாகியிருந்தவரை நேரில் சந்திக்க முடிந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. இல்லம், இலக்கியம், உலகம் என அளவளாவிக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரங்கள் மூன்று நிமிடங்களாகப் பறந்து விட்டன. ‘ங்கா’வை அவர் கையினாலே பெற்றுக் கொண்டதும் ஆனந்தம்:). சாதனை அரசிகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் மழலை இன்பம் இந்த இரண்டாவது புத்தகம். விரைவில் இப்புத்தகம் குறித்தும் பகிர்ந்து கொள்கிறேன்.
படத்துளி:

கோடை

***

ஞாயிறு, 25 மார்ச், 2012

வாங்க பறிச்சுக்கலாம்.. - தோட்டம்

# பூசணி

# குடை மிளகாய்

# பஜ்ஜி மிளகாய்

# பச்சைத் தக்காளி

# காயும் கனியும்

# கொத்துக் கொத்தாய்..

# நூல்கோல்

# முட்டை கோஸ்
***

  • பெங்களூரு லால்பாக் தாவரவியல் தோட்டத்திலிருந்து...

செவ்வாய், 20 மார்ச், 2012

கூடு இங்கே குருவி எங்கே..

ல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் இன்று எங்கே போயின? நம்புங்கள் அவற்றை நான் கண்ணால் கண்டு ஆயிற்று ஆண்டுகள் பல.

sparrow nest
இந்தக் கூடு நான் பார்த்து வளர்ந்த சிட்டுக் குருவிகள் கட்டியதில்லை. தங்கை வீட்டு மாடித்தோட்டத்தில் புள்ளிச் சில்லைகள் கட்டிய ஒன்று. 

சின்ன வயதில் எங்கள் வீட்டின் உள் முற்றத்துத் தூண்கள் இரண்டுக்கு நடுவே சின்னப் பரண் அமைத்திருந்தார்கள் குருவிகளுக்காக. வைக்கோல்களைக் கொண்டு வந்து அழகாகப் பரத்தி அப்பரணைத் தங்கள் கூடாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. தாய்க்குருவியும் குஞ்சுகளும் குதூகலமாக எழுப்பும் சத்தம் முற்றத்தையும் மனதையும் நிறைக்கும். அம்மாக் குருவி இரைதேடச் சென்றிருக்கும் சமயம் தூணுக்கு அருகே எங்கள் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி,  தூணின் மேல்பகுதியை வளைத்துப் பிடித்துக் கொண்டு குஞ்சுகளை எட்டிப் பார்த்து ‘ஹலோ ஹாய்’ சொல்வது பிள்ளைகள் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை சிறகு முளைக்காத சின்னஞ்சிறு குஞ்சொன்று பரணிலிருந்து விழுந்து விட அந்தப் பட்டுக் குஞ்சினை செய்தித்தாளில் எடுத்து மீண்டும் தாத்தா கூட்டில் விட்டது நினைவில் நிற்கிறது. 

கதை கேட்டுச் சும்மா சும்மா நச்சரிக்கும் சின்னக் குழந்தைகளைக் கலாட்டா செய்ய, வயதில் பெரிய குழந்தைகள் வழிவழியாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு: பாயாசம் பருக ஆசைப்பட்ட குருவிகள் ஒரு பாட்டியிடம் போய் உதவி கேட்டனவாம். “சரி நீங்கள் எனக்கு நெல்மணிகளைக் கொண்டு வந்து தாருங்கள். அவற்றைத் திருத்தி அரிசி எடுத்து வெல்லப் பாயாசம் செய்து தருகிறேன்” என்றாராம் பாட்டி. அருகே ஒரு வீட்டு முற்றத்திலேயே நெல் அவித்துக் காய வைத்திருந்தார்களாம். அந்த வீட்டுக்கு முதலில் ஒரு குருவி வந்துச்சாம். ஒரு நெல்லைத் தூக்குச்சாம். ஒருவரும் விரட்டவில்லை என்றதும் தைரியமா ரெண்டு குருவி வந்துச்சாம் ரெண்டு நெல்லைத் தூக்குச்சாம். அப்புறம் மூணு குருவி வந்துச்சாம் மூணு நெல்லை...! நாலு குருவி... நாலு நெல்லை...!! கண் அகலக் கேட்டபடி இருக்கிற குழந்தைகள் அஞ்சு நெல்லைத் தூக்க அஞ்சு குருவி வருகிற போது முழுசா முழிச்சுக்கிட்டு முகம் சிவக்க அடிக்க வருவார்கள்:)! 

இன்று நமக்கு உணவு வேண்டுமே என விட்டு வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச வயல்களால் நெல் இருக்கு. உலகம் எனும் கூடு இருக்கு. குருவிதான் இல்லை:(! மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும். வனங்களை அழித்தபடி வாழும் நகரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தபடி உருவாக்கிக் கொண்டிருக்கும் கான்க்ரீட் காடுகளைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்வதாக முடிவே கட்டி விட்டோமா? 

என் அம்மா வீட்டுக்கு அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அலைபேசிக் கோபுரம் அமைக்க அந்த வீட்டினர் அனுமதி அளித்து அதற்காக ஒரு தொகையை வாடகையாகப் பெற்று வந்தனர். அப்போது வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. இது மனிதரின் உடல் நலனுக்கும் தீங்குதான். குடியிருப்புப் பகுதியில் இருக்கக் கூடாதென யாரும் புகார் செய்தார்களா அல்லது வேறு காரணமா தெரியவில்லை, இரண்டு வருடங்கள் முன் அந்தக் கோபுரம் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது. கோபுரத்திலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளே அவற்றை அதுகாலமும் நெருங்க விடாமல் செய்திருக்கின்றன.

**
 
இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

அழிந்து கொண்டிருக்கும் இவ்வினத்தைக் காத்து ஆரோக்கிய உலகினை அடுத்த தலைமுறைக்கு வழங்க 2010-லிருந்து மார்ச் 20ஆம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பதிவுலக நண்பர்கள் பலரும் இதுகுறித்து இன்று இட்டிருக்கும் பதிவுகள்: 1. குருவிகளின் தாகம் தணிக்கக் கோருகிறார் எங்கள் ப்ளாக், ஷோபனா. 2. அப்பாவிக் குருவிகளை அரவணைக்க அழைக்கிறார் எல்லாம் புகழும் இறைவனுக்கே, ஸாதிகா. சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன எனும் விபரங்களைச் சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட முயன்றிடும் இயற்கை ஆர்வலர் சங்கத்தைப் பற்றியத் தகவல்களும் தந்துள்ளார். 3. ‘பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை’ என வருந்துகிற எண்ணிய முடிதல் வேண்டும், ஷைலஜா சிட்டுக்குருவி குறித்து அழகான கவிதை ஒன்றையும் படைத்துள்ளார். 4. ‘மண்ணில் உயர்ந்த புள்ளின் இனமது!’ என அக்கக்கூக் குருவியைக் கொண்டாடுகிறார் நித்திலம், பவள சங்கரி 5. காணாமல் போன சிட்டுக்குருவிகளைத் திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆறுதலான செய்தியைத் தந்திருக்கிறார் மண், மரம், மழை, மனிதன் திரு. வின்சென்ட். 6. அழகுக் குருவிகளைக் காணவில்லையே என ஆதங்கத்துடன் காரணங்களை அலசுகிறார் மனதோடு மட்டும், கெளசல்யா. 7. நினைவுகளில் மூழ்கிச் சிட்டுக்குருவிகளைத் தேடுகிற திருமதி பக்கங்கள் கோமதி அரசு அவர்கள் ‘உன்னை மீண்டும் கண்டால் குழந்தையை போலக் குதூகலிப்பேன். அந்த நாள் மீண்டும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என்கிறார். 8. ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ எனத் தம் வருத்தத்தை அமைதிச்சாரலின் கவிதை நேரத்தில் வந்து தெரிவிக்கின்றன குருவிகள். 9. தங்கள் வீடே குருவிகளின் கூடு என்பதை மகிழ்வுடன் பகிரும் வேர்களைத் தேடி.. முனைவர். இரா. குணசீலன் . ‘குருவிகளும் வாழட்டுமே.. உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு..’ என்று கேட்கிறார். 10. அழகழகான குருவிகளின் படங்களுடன் அவை குறித்தத் தகவல்களையும் அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் மணிராஜ் இராஜராஜேஸ்வரி.
***

திங்கள், 19 மார்ச், 2012

ஜப்பானியக் கவித் துளிகள் - அதீதத்தில்..



1.
சதுப்பு நிலத்தின் நாணல்களுக்குளிருந்து
சோகத்துடன் குரல் எழுப்பியது பறவை
மறப்பது நன்றாகிய ஒன்றை
மறுபடி நினைத்தது விட்டாற்போல.


2.
யாரோ கடந்தார்,
அவரோ என
நினைக்கையில்
நடுச்சாம நிலவை
மூடி மறைக்கிறது முகில்.


3.
அறிமுகமற்ற பெரியவர்
என்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ.
***

மூலம்:
கவிதை 1 - KI NO TSURAYUKI (10th century)
கவிதை 2 - MURASAKI SHIKIBU (Woman poet - 974-1031)
கவிதை 3 - HITOMARO (8th century)

ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth
[One hundred poems from the Japanese - pgs: 86, 56, 24]

3 மார்ச் 2012 அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்த ஜப்பானியக் கவிதைகள்.

படம்: இணையத்திலிருந்து..

வியாழன், 15 மார்ச், 2012

தூறல்: 2 - எங்கள் கையில் இந்தியா

அரசின் மெத்தனம்:

எழுநூற்று இருபது சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பத்து மில்லியன் மக்களுக்கு வீடாக இருக்கிற பெங்களூரில் மொத்தம் இருப்பது பதிமூன்றே தீயணைப்பு நிலையங்கள். பணியாற்றும் படைவீரர் வெறும் நானூறு பேர்களே. மற்ற மாநிலங்களில் எப்படிங்க?

இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் 23 பிப்ரவரி அன்று நடைபெற்ற கால்டன் தீவிபத்து இரண்டாம் வருட நினைவு நாளின் போது வெளிவந்துள்ளது. குறைந்த பட்சம் அறுபது நிலையங்களாக நகரத்துக்குத் தேவை என சென்ற வருடம் ஆய்வு அறிக்கையை மட்டும் அழகாக வெளியிட்டிருக்கிறது அரசு.

ஜன கிரஹா அமைப்பைச் சேர்ந்த ஸ்வாதி இராமநாதன் அரசின் மெத்தனத்தையும் அலட்சியப் போக்கினையும் கண்டித்து அளித்த பேட்டியில் “குடிசைப் பகுதிகளிலும், அதி உயரக் கட்டிடங்களிலும் ஆபத்து எப்போது வருமென்றே சொல்ல முடியாது. அப்படி வருகையில் படையினர் பத்து நிமிடங்களுக்கு உள்ளாக அங்கிருக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாநகரத்தில் 13 நிலையங்களுடன் அது சாத்தியமா?” எனக் கேட்கிறார்.

[இப்படி இவர் சொன்ன மறுநாள் ஏற்பட்ட ரஸல் மார்க்கெட் விபத்தின் போது அந்த அதிகாலை வேளையிலும் படையினர் 1 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.]

கால்டன் விபத்தில் புகையின் நெடி தாளாமல் மாடிகளிலிருந்து குதித்து உயிரிழந்த 9 பேர்களுக்கான நினைவுநாள் கூட்டத்தில், ஒரு நிமிட மெளன அஞ்சலியின் போது எழுந்த விசும்பல்களுக்கு யார் என்ன ஆறுதல் தந்து விட முடியும்? ஆயினும் தம் துயரை மனதோடு சுமந்து கொண்டு இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் "Beyond Carlton" (கால்டனுக்கு அப்பால்) எனும் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை அணுகி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அரசின் மெத்தனம் தொடர்ந்தாலும் அக்கறையுடன் ஒரு அதிகாரி அன்றைய தினத்தில் வழங்கிய ஆலோசனை இது: “புகையின் திணறலில் இருந்து தப்பிக்க தவழ்ந்தோ, அமர்ந்தபடி நகர்ந்தோ செல்ல வேண்டும். ஏனெனில் புகை மேல்பக்கமாக நகரும் தன்மை கொண்டது. மூக்கினை ஈரத்துணியால் மூடிக் கொள்ள வேண்டும்”


உயிரின் மதிப்பு:

மற்றவர் உயிரோடு விளையாடும் உரிமையை யார் தந்தனரோ அரசுக்கு? கால்டன் விபத்தைத் தொடர்ந்து அரசு இப்போது உயர்ந்த கட்டிடங்கள் அலுவலகங்களில் விழிப்புணர்வுக்காக (mock drill) பாதுகாப்பு ஒத்திகைகளைக் கட்டாயமாக்க, பெரும்பாலான அலுவலகங்கள் தனியார்களை அழைத்து இதை நடத்திக் கொள்வதில் ஒரு அர்த்தம் இருக்கவே செய்கிறது. 23 வயதான நளினி தான் வேலை செய்த ஆடை நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த ஒத்திகை நடக்கயிருப்பது கேள்விப்பட்டு, பொதுநல அதிகாரியான தான் செல்வது அவசியம் எனக் கருதி பெங்களூர், பீன்யாவிலிருந்து யஷ்வந்த்பூர் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.

அரசின் தீ மற்றும் அவசரகாலச் சேவைத் துறையினர் நிகழ்த்திய இந்த ஒத்திகையில் தமது ஆட்களை வைத்துச் செய்யாமல் அலுவலகத்தைச் சேர்த்தவர்களை ஒத்திகையில் ஈடுபடுத்தியது முதல் தவறு. தமது ஆட்களென்றால் இன்னும் கவனமாக இருந்திருக்க மாட்டார்களா என்ன? தன் தைரியத்தால் எப்போதும் மற்றவருக்கு முன் மாதிரியாக இருந்து வந்த நளினி தானாக முன்வந்து இதில் கலந்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். மூன்றாம் மாடி அருகே இறங்கிக் கொண்டிருக்கையில் பிடித்திருந்த கயிறு பலம் தாங்காமல் அறுந்து போக தரையில் மோதி விழுந்து சம்பவ இடத்திலேயே காலமாகி விட்டார்.

கயிறு பலம் தாங்குமா என முறையாகப் பரிசோதிக்கப்படாதது ஒரு பக்கமிருக்க “பொதுவாக கீழே நாங்கள் வலையோ, படுக்கையோ விரிப்பது வழக்கம்; இந்த முறை அதைச் செய்யாதது எங்கள் தவறே” எனத் தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவரின் வியாக்கியானம் போன உயிரை மீட்டுக் கொடுக்குமா:(?

“சில நேரங்களில் இப்படி சில அசம்பாவிதங்கள் நடந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்பதில் அடங்கி விடுகிறது அவர்களது வருத்தம். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீதும் புகார் பதிவு செய்யப்படாததுடன், விசாரித்து முடிவெடுப்போம் என்கிற பூசலான அறிக்கை மட்டும் வெளியானது. உயிருக்கான மதிப்பை எவராலும் எதனாலும் ஈடு செய்ய முடியாதென்றாலும் நளினியின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுமா என்பது குறித்தும் அரசுத் தரப்பிலிருந்து உறுதியான தகவல் ஏதும் இல்லை என்கின்றன பத்திரிகைகள்.


உலக நீர் நாள்:
22 மார்ச் 2012 உலக நீர் நாளுக்கான விழிப்புணர்வுப் படம்.

‘மண் மரம் வளம் மனிதன்’ திரு. வின்சென்ட் அவர்கள் இதை அவரவர் வலைப்பக்கங்களில் பதிந்து விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டுகோள் விடுத்துள்ளார். படத்தின் html code-யை இங்கே தந்திருக்கிறார் நம் வசதிக்காக. [நானும் கொடுக்க முயன்றேன். ஆனால் படமாகி விடுகிறது. எனவே அங்கிருந்து பெற்றிடுங்கள்!]

2010-ல் பதிவர்களுக்கு இவர் விடுத்திருந்த அழைப்பின் பேரில் நான் எழுதிய “உலகம் உய்ய.. - தண்ணீர் தினத்துக்காக” !

தொடர்ந்து பலரும் எழுதிய விழிப்புணர்வுப் பதிவுகளின் தொகுப்பு திரு வின்செண்ட் அவர்களின் தளத்தில் இங்கே.

இதை இந்த வருடமும் தொடரலாமே. எழுதாதவர்கள் மேலும் பதிவுகள் இட்டு அதன் சுட்டிகளை தொகுப்பின் பின்னூட்டத்தில் தெரிவித்திடுங்களேன்.


அதீதம் கார்னர்:


வலையோசை 12: ‘அன்புடன் அருணா
வலையோசை 13: பாச மலரின் ‘பெட்டகம்


1 மார்ச், மகளிர் தின ஃபோட்டோ கார்னர்:
1. தாயுமானவள் - திவாகர்
2. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி - பிரேம் ஆனந்த்
3. கலையின் காதலன் - ரஞ்சனி

15 மார்ச், இன்றைய ஃபோட்டோ கார்னர்: மூன்று தலைமுறைகள் by iamaiman

1. ஓய்வற்ற உழைப்பு
2. வண்ணக் கனவுகள்
3. எங்கள் கையில் இந்தியா

பிடித்த படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கியும் ரசித்திடலாம்:)!


தமிழக மின்வெட்டும் ஜான் கென்னடியும் (படத்துளி): ‘இருட்டை சபித்துக் கொண்டிராமல் மெழுகுவர்த்தியை ஏற்றிடப் பார்’ (‘Better to light a candle than curse the darkness’)! இந்தப் பழமொழியோடு சேர்த்து பொதுவாக அதைப் பொதுவில் உபயோகித்தவர்களும் நினைவு கூர்ந்திடப்படுகிறார்கள். உடன் நினைவுக்கு வருபவர் ஜான் கென்னடியாக இருந்தாலும் முதன் முதாலாக இதைப் பொதுவில் கையாண்டவர் பீட்டர் பெனன்சன் எனும் ஆங்கிலேயர்; 1961_ஆம் ஆண்டு மனித உரிமை நாள் விழாவில் தான் ஆற்றிய உரையில்!

வாழ்வியல் தத்துவமாகச் சொல்லப்பட்ட இம்மொழியோடு தமிழக மின்வெட்டை சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அப்பாடீ..., டன் டன்னாக அல்லவா தேவைப்படும் மெழுகுவர்த்திகள்! இலவச மெழுகுவர்த்தி திட்டம் ஏதேனும் அரசின் பரீசிலனையில் இருக்குமா என்பது அம்மாவுக்கே வெளிச்சம்!!!!
***


(அவ்வப்போது தூறும்)

புதன், 14 மார்ச், 2012

உயிர்க் கூடு - பண்புடன் இதழில்..

மலை உச்சியில்
தனித்து நின்ற மரத்தருகே
இன்னொரு மரமாகி நின்றிருந்தான்

மாலைக் கதிரவனின் பொன்னொளியில்
குளித்துக் கொண்டிருந்தன
மரத்தின் பலநூறு இலைகள்.

நன்றி மறக்கும் உறவுகள்
வஞ்சிக்கும் நட்புகள்
ஏமாற்றும் சுற்றங்கள்
எவருடனும் ஒட்ட இயலாமல்
அவன்

காலப் போக்கில்
உதிரப் போகும் இலைகளை
முறித்துக் கொள்ளும்
சாத்தியம் கொண்ட கிளைகளை
கனிந்ததும் கழன்றிடக்
காத்திருக்கும் பழங்களை
உயிர்க் கூட்டில் பாதுகாத்து
மரம்

மனம் அலை பாயச்
சிலையாக நின்றிருந்தான்

அதல பாதாளத்துள்
இறங்கிக் கொண்டிருந்தது
மலைக்கு மறுபக்கம்
அஸ்தமனச் சூரியன்.

கைக்கு வாராப் பேரொளிப் பந்தினை
வேறோர் உலகில்
கையகப் படுத்திவிடும் முடிவுடன்
முனையை நோக்கி நகர்கிறவனைப்
பதட்டத்துடன் பார்க்கிறது மரம்

சாட்சியாகப் பிடிக்காமல்
வேகவேகமாய் இருளில்
கரைந்து கொண்டிருக்கின்றன
சூரிய மிச்சங்கள்

நட்சத்திரங்களற்ற வானில்
ஒற்றைக் கீற்றாய்
வளர்பிறை நிலவின்
வளைந்த புன்னகை;

எதனாலும் தடைபடாத
இயற்கையின் சுழற்சி
மின்னல் வெட்டாய்
உயிர்வரை பாய்ந்து
எழுப்பிய கேள்வியில்
பிரளய அதிர்வை உணர்கிறவன்
திரும்பி நடக்கிறான்

விடைகொடுத்துச் சலசலக்கிறது
மகிழ்ச்சியில் மரம்.
***



படம் நன்றி: MQN

4 மார்ச் 2012 பண்புடன் இணைய இதழில், நன்றி பண்புடன்!

திங்கள், 12 மார்ச், 2012

மீண்டு வந்த ரஸல் மார்க்கெட்டும் பெங்களூர் ஏழை வியாபாரிகளும்

#1
தீ விபத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ரஸல் மார்க்கெட்டை சரியாக இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கச் சென்றிருந்தேன். பெங்களூர் சிவாஜிநகர் பகுதியில் இருக்கும் ரஸல் மார்க்கெட்டை நகரில் பலகாலமாக வசிப்பவர் அறியாமலிருக்க முடியாது. 90-களின் தொடக்கத்தில் பீங்கான் பாத்திரங்கள், சமையலறை சாமான்கள் வாங்க ரஸல் மார்க்கெட்டுக்கு அடுத்து, தேவாலயத்தின் நேர் எதிராக அமைந்த இந்த மைதானத்தைச் சுற்றிய கடைகளுக்கு அடிக்கடி நான் சென்றதுண்டு:
#2
பல்பொருள் அங்காடிகள் பெருகி விட்ட நிலையிலும், அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைக்காத பொருள் இல்லை எனும் வளர்ச்சியினாலும் வாகனம் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் என்பதாலும் அங்கு போவதை அதன் பிறகு என்னைப் போல நிறுத்தி விட்டவர் பலர். ஆயினும் இன்றைக்கும் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக அங்கு செல்லுபவர் இருக்கவே செய்கிறார்கள்.

#3
85 வருடப் பழமை வாய்ந்த 1927-ல் பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் பரம்பரையாக, பலதலைமுறைகளாக வியாபாரம் செய்கிறவர்கள் அநேகம் பேர். காய்கறி, பழங்கள், பூக்கள், விளையாட்டுப் பொருட்கள், துணிமணிகள் விற்கிற 440 சிறு கடைகளை, சூரியன் அதிகம் எட்டிப் பார்க்க முடியாத அகன்ற கட்டிடத்தினுள் கொண்டது. அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கடைகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள் ஏழை வியாபாரிகள். பொதுமக்கள் தவிர்த்து நட்சத்திர ஓட்டல்கள், ஐடி அலுவலகங்களுக்கு உணவு சப்ளை செய்யும் கேன்டீன்கள் மொத்தமாக இங்கேதான் வந்து காய்கறிகளும் பழங்களும் வாங்குவார்கள் என்பதால் தினம் ஆயிரக் கணக்கில் வியாபாரம் நடக்கும்.

#4
25 பிப்ரவரி சனிக்கிழமை அதிகாலை மூன்றரை மணியளவில் கடை எண் 1,2-ல் ஏற்பட்ட மின்கசிவினால் எழுந்த தீ மார்க்கெட் எங்கும் பரவ ஒருமணி நேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறை 28 என்ஜின்கள், 136 பேர் கொண்ட படையுடன் காலை பத்துமணி அளவில் நெருப்பை அணைத்தனர். அதற்குள் 174 கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. வாரயிறுதி விற்பனையை எதிர் நோக்கிக் கடையில் சேகரித்து வைத்திருந்த பொருள் யாவும் சாம்பலாகிட, ஆயிரம் இலட்சங்களில் ஏற்பட்ட கொள் முதலை நஷ்டத்திலும், கடைகள் கருகிப் போனதிலும் கலங்கிப் போய் நின்றிருந்தனர் வியாபாரிகள்.

இத்தனை கஷ்டத்திலும் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக இருந்தது உயிரிழப்பு ஏதுமில்லாதது. தான் தப்பித்தால் போதுமென ஓடி விடுகிற காலத்தில், லாரிகளில் வரும் சரக்குகளை இறக்க மார்க்கெட்டுக்கு வெளியில் வந்திருந்த பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் பாய்ந்து ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் ஓடி ஓடி ஆங்காங்கே தம் கடை வாசல்களில் உறங்கிக் கொண்டிருந்த 150 பேரை எழுப்பி எச்சரித்துக் காப்பாற்றியிருக்கிறார். புண்ணியவான் அவரும் அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்.

#5வியாபாரிகள் எந்த நஷ்ட ஈட்டுக்காகவும் காத்திராமல் பத்து நாட்களுக்குள்ளாக அவரவர் இடங்களில் சோகத்தைத் துடைத்து விட்டு மீண்டும் கடைகளைத் துவங்கி விட்டார்கள். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி வேறு நவீன கட்டிடடம் கட்டி விடுமோ எனும் அச்சம் ஒரு புறம் என்றால் இடித்து விட்டுத் தங்களுக்கே வேறு வியாபார மையம் ஏற்படுத்துவதாக எழுந்திருக்கும் பேச்சையும் இவர்கள் விரும்பவில்லை. ”ரஸல் மார்க்கெட்” இருக்கிற பிரதான இடமும், அதன் பாரம்பரியப் பெயருமே தங்களுக்கு வியாபாரத்தைக் கொண்டு வருகிற காரணிகள் என்பதால் வேறு இடம் ஒதுக்கப்பட்டாலும் தாங்கள் பட்டினிதான் கிடக்க நேருமெனப் பயப்படுகிறார்கள். அரசு வேறு விதமாக முடிவெடுத்து விடக் கூடாதென அத்தனை மந்திரிகளுக்கு நன்றி சொல்லி வாசலில் பேனர் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள் முதல் படத்தில்.

சரியாக இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் நேற்று மதியம் அந்த வழியாக இதற்காகவே சென்றுவந்தேன். அரசியல் பிரச்சனை இருக்கும் நிலையிலும், எனக்கு இருக்கும் மொழிப் பிரச்சனையாலும் வியாபாரிகளைப் படம் எடுக்கவும், கேள்வி கேட்கவும் தயக்கமாக இருக்கவே, வெளியிலிருந்து P&S கேமராவில் எடுத்த படங்களைப் பகிந்துள்ளேன். மார்க்கெட்டுக்கு உள்ளேயும் ஒரு சுற்று போய் வந்தேன். நுழைந்ததும் இடப்பக்கத்தில் அப்போதுதான் பறித்து வந்தது போலான பச்சைப் பசேல் காய்கறி, வண்ணக் கனிகளுடனும்; நேர் வரிசையில் மலர்ச்சியுடனான பூமாலைகளுடனுமாக (புகையால்) கருமை படிந்த கடைகள் நம்பிக்கை வெளிச்சத்தில் இயங்க ஆரம்பித்திருந்தன. அக்னியின் மிச்ச அடையாளங்கள் கட்டிடம் எங்கும் விரவி நிற்கிறது. புதிய கட்டிடம் வேண்டாம், புனரமைப்பு செய்தால் போதுமெனும் இவர்கள் கோரிக்கைக்கு மாநகராட்சி எந்த வாக்குறுதியும் தரவில்லை. ஆலோசித்து முடிவெடுப்பதாகவே சொல்லியுள்ளது. காலம் நல்ல பதில் தரக் காத்திருக்கிறார்கள் ஏழை வியாபாரிகள்.
***

வியாழன், 8 மார்ச், 2012

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை - வல்லமையில்..


ன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்து கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள்’ என்பதை மறுதலித்துச் சொல்லுகிறார் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் சான்ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

களிர் தினத்தில் தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

  • பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

  • ‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

  • சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

  • சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

  • மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

**

சாதனை அரசிகள்
பக்கங்கள்:80; விலை:ரூ.50
பதிப்பகம்: முத்துசபா
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

*****


8 மார்ச் 2012 வல்லமை (மகளிர் வாரம்) இதழில்.., நன்றி வல்லமை!

18 மார்ச் 2012 திண்ணை இணைய இதழிலும்,நன்றி திண்ணை!

புதன், 7 மார்ச், 2012

மனிதனும் மிருகமும் - மார்ச் PiT போட்டி - மாதிரிப் படங்களும் சில குறிப்புகளும்

‘மனிதனும் மிருகமும்’ அதுவும் ‘கருப்பு வெள்ளையில்’ இருக்க வேண்டுமெனக் கட்டம் கட்டி சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார் நடுவர் ஜீவ்ஸ். முதலில், போட்டிப் படங்களை அனுப்பவேண்டிய பிகாஸா வெப் மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கவனிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

Raw mode-ல் எடுக்கையில் எவ்வளவு நுண்ணியமான விவரங்கள் கிடைக்கும் என்பது உட்பட நல்ல பல குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார் நடுவர், போட்டி அறிவிப்புப் பதிவில்.

மேலும் சில குறிப்புகளை நான் எடுத்த சில படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வண்ணப்படங்களை விடவும் ஒரு காட்சியை வலிமையாக வெளிப்படுத்த கருப்பு வெள்ளையே சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாதென எண்ணுகிறேன். நீயா நானா என ஓடிப் பிடித்து விளையாடும் ஒளியும் நிழலும்(light and shade); திறமையான கம்போஸிஷனும், எடுக்கும் முன்னரே காட்சி அமைப்பை உள்வாங்கிடும் ஆற்றலுமே ஒரு நல்ல கருப்பு வெள்ளைப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதில் நோக்கமானது சப்ஜெக்டை அழுத்தமாக வெளிக்கொணருவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காட்சிக்குள் வருகிற அழுத்தமான கோடுகள்(படம் 6-ல் மரங்கள்), தனித்துவமான சப்ஜெக்ட் அவுட்லைன் இவை எளிமையான காட்சியைக் கூட குறிப்பிடத்தக்க படமாக மாற்றிவிடும்.


உங்கள் கேமராவில் கருப்பு வெள்ளையில் எடுக்கிற வசதி இருந்தாலும் கூட வண்ணத்தில் எடுத்து மாற்றுவதால் நம் விருப்பத்திற்கேற்ப மேம்படுத்திடும் சுதந்திரம் கிடைத்திடும் என நடுவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்று. தயவுசெய்து வண்ணப் படத்தை கருப்பு வெள்ளைக்கு மாற்றி அப்படியே போட்டிக்கு அனுப்புவதைத் தவிர்த்திடுங்கள். கான்ட்ராஸ்ட் சரியாக அமையுமாறு ஒளியோடும் நிழலோடும் நீங்களும் விளையாடுங்கள். காட்சி தத்ரூபமாகி நிழல் நிஜமாகும் அதிசயத்தைக் காண்பீர்கள்:)!

# 1.
கருப்பு வெள்ளையாக மாற்றும் நோக்கத்துடனே படம் எடுக்கும் போது அது சிறப்பாக வர வேண்டுமெனில் அப்படத்தில் பரவ இருக்கும் ‘கருமைக்கும் வெண்மைக்கும்’ இடையேயான சாம்பல் வண்ணம் (க்ரே) எப்படி அமையும் என்பதையும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். மேலுள்ள படம் 1-ல் பின்னணியிலிருக்கும் சாம்பல் நிறம் படத்துக்கு எப்படி அழகூட்டுகிறது எனக் கவனியுங்கள்.

# 2


# 3


# 4


# 5


# 6
மேலுள்ள படத்தில் ‘இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை” என அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கும் ஸ்டைலால் மனிதனும் மிருகமும் நம்மைக் கவருகிறார்கள் எளிமையான காட்சியானாலும் கூட. பசும்புல்லால் பரவி நிற்கும் சாம்பல் நிறம், மரங்கள் ஏற்படுத்தும் அழுத்தமான கோடுகள் (strong lines) இவை படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

அதே போல் கீழ்வரும் படங்கள் 7 மற்றும் 8-ல் சப்ஜெக்டின் அவுட்லைன் தனித்துவம் கொடுக்கிறது படங்களுக்கு:

# 7


# 8


எல்லா வண்ணப் புகைப்படங்களுமே கருப்பு வெள்ளையில் மாத்தும் போது அழகா இருக்கனுங்கற அவசியம் இல்லை....காலை மாலை வேளைகளில் படம் எடுப்பது நல்லது” என நடுவர் சொல்லியிருப்பதற்கு சரியான எடுத்துக் காட்டுதான் கீழ்வரும் படம்!!!

# 8
பழுப்புக் குதிரைகள் பளிச்சுன்னு தெரிந்தாற் போல வெள்ளைக் குதிரை தெரியணுமென்றால் பின்னணி சற்று அடர்ந்த மரத்தின் நிழலோடு அமைந்திருக்கலாம். போகவும் உச்சிச் சூரியனின் ஒளி குதிரையின் முகத்தில் ஓவர் எக்ஸ்போஸ் ஆகி அதன் நுண்ணிய விவரங்கள் (படம் ஒன்றிலிருப்பது போல இமைகள்), தோலின் தன்மை இதெல்லாம் தெரியுதா பாருங்க. இல்லை. ஊஹூம், இது போன்ற காட்சி கருப்பு வெள்ளைக்கு சரி வராது. இதுவே அதிகாலை பத்து மணிக்கு முன் , மாலை ஐந்து மணிக்குப் பின் சூரியன் சற்று சாய்வாக இருக்கையில் கிடைக்கும் மிதமான ஒளியில் எடுத்திருந்தால் படம் அருமையான (details) விவரங்களுடன் அமைந்திருக்கும். குதிரையின் நெற்றியில் ஸ்டைலாக சுருண்டு கிடக்கும் முடியை அழகாகக் காட்ட முடிந்திருக்கும்:)!

எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும், எத்தனை சவாலாக இருந்தாலும் உற்சாகமாகக் களம் இறங்கி விடும் நண்பர்களுக்கு ஒரு சபாஷ்! போட்டிக்கு வர ஆரம்பித்து விட்டப் படங்களின் அணிவகுப்பை இங்கே காணலாம். அவ்வப்போது சென்று பார்த்து கருத்துகளை வழங்கி ஊக்கம் தாருங்கள்:)! உங்கள் படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 மார்ச் 2012.
***

சனி, 3 மார்ச், 2012

முப்பதாண்டுகளுக்கு முன் பிறந்தேன் - சீனக் கவிதை - அதீதத்தில்..

முப்பதாண்டுகளுக்கு முன் இப்பூமியில் பிறந்தேன்
ஆயிரம் பத்தாயிரம் மைல்கள் சுற்றித் திரிந்தேன்.
பசும்புல் அடர்ந்து வளரும் நதியோரங்களிலும்,
செம்மண் பறக்கும் எல்லைக்கப்பாலும்.
பயனற்றத் தேடலாகின நிரந்தரவாழ்வுக்காக நான் காய்ச்சிய மருந்துகள்,
புத்தகங்கள் வாசித்தேன், சரித்திரப் பாடல்களைப் பாடினேன்,
இன்று குளிர்ந்த மலையாகிய என் வீட்டுக்கு வந்தேன்
சிற்றோடையில் தலை சாய்த்து ஆறுதல் பெறவும்
சில்லென்ற நீரில் காதுகளைக் கழுவி ஆசுவாசமாகவும்.
***

மூலம்:
Born Thirty Years Ago
By Han Shan, Poet and Monk of Hanshan Temple, China.
(Translated from Chineese to English, by Gary Synder)

படம் நன்றி: இணையம்

13 பிப்ரவரி 2012 அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin