Saturday, October 30, 2010

ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில்..

ஆனந்த விகடனில்..


முதன் முறையாக

என் கவிதை:)!


தீபாவளி ஸ்பெஷல் 2-ன்
37-ஆம் பக்கம்
சொல்வனத்தில்..


மிக்க நன்றி ஆனந்த விகடன்!

Monday, October 25, 2010

கேள்விகளைத் தேடி.. பிறழாத பிரவாகம்.. - அகநாழிகை கவிதைகள்
கேள்விகளைத் தேடி..

சிந்தனை வெளியில்
சூறாவளியாய் சுழன்றடித்து
துரத்திய சந்தேகங்களுக்கு
பதில்களைத் தேடித்தேடிப்
பயணித்துக் களைத்தவன்
ஒருபுள்ளியில்
எதைத் தேடுகிறோமென மறந்து
தேடத் தொடங்கினான்
கேள்விகளை!
*** ***


பிறழாத பிரவாகம்

ஆன்மா அழிவற்றதா
அறிந்திடும் ஆவல்
அணையாத் தீயாய்
அடங்காக் கனலாய்

விடை தெரிந்த முழுநிலவு
தான் தேய்வதைத்
தடுத்துக் கொள்ள இயலவில்லை

ரகசியம் புரிந்த ஞாயிறு
உதிக்காமல் ஓர்நாளும்
ஓய்வெடுக்க முடியவில்லை

சுழலும் பூமியுடன்
ஒட்டிக் கொண்டு சுற்றுகின்ற
ஒற்றைத் துகளாய் மனிதன்

பிடிவாதமாய்த் தொடரும் அவன்
இலக்கற்றத் தேடல்களால்

பாதிப்பு ஏதுமின்றி அண்டசாகரம்
கோடானுகோடி கோள்களின் வேகம்
விண்மீன்களின் பிரகாசம்
பிரபஞ்சத்தின் பிரவாகம்.
*** ***
படங்கள்: இணையத்திலிருந்து..


செப்-நவம்பர் 2010 அகநாழிகை பத்திரிகையில்..நன்றி அகநாழிகை!
***Monday, October 18, 2010

யார் அந்தச் சிறுவன்? - உயிரோசை கவிதைஅடிக்கடி கனவில் வந்தான் அந்தச் சிறுவன்
அழகான பெரிய வட்டக் கண்கள்
சிரிக்கும் போது
மேல் வரிசையின் முன்னிரெண்டு பற்கள் மட்டும்
மாட்டுப்பல் போல பெரிசாய்
கொஞ்சமே கொஞ்சம் தூக்கினாற் போல்
ஆனாலும் தெத்துப்பல் என்று சொல்ல முடியாது

கிட்டிப்புள்ளில் கில்லாடி
கோலிக் குண்டைச் சுண்டி விட்டால்
தப்பாது வைத்த குறி
மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல் கிறங்கிச் சுற்றும்
அவன் சாட்டைக்குப் பம்பரம்
காற்றைக் கிழித்து உயர உயரப் பறக்கும்
களத்துமேட்டில் அவன் பிடித்து நிற்கும் காற்றாடி

எனக்குச் சுட்டுப் போட்டாலும்
வராத வித்தைகளை
ஊதித்தள்ளி உவகை தந்தான்

மிகப் பரிச்சயமான முகமாய்
ஆனால் யாரென்று அறிய முடியாமல்
என் கனவுகளை நிறைத்திருந்தான்

ஒருஅதிகாலையில்,
கம்மாக் கரையிலிருந்து கொஞ்சமும் தயங்காமல்
டைவ் அடித்து நீருக்குள் குதித்தவன்
தம் பிடித்து வெளியில் வராமல்
போக்குக் காட்டியபோது
பதைத்து வியர்த்து விழித்தேன்

‘இனி கனவில் வரவே மாட்டானோ’
அழுத்தும் அலுவலக வேலைகளுக்கு நடுவிலும்
அலைக்கழித்தது அவன் சிரித்த முகம்

இரவு இரயிலடியில்
என்னைப் பெயர் சொல்லியழைத்த
ஒரு கிராமத்துப் பெரியவர்
தன்னைத் தூரத்து உறவென்று
அறிமுகம் செய்து கொண்டபோது
ஆச்சரியமாய்ப் பார்த்தேன்

வெள்ளந்தி மனிதர்,
‘சின்னதுல பார்த்ததுதான்
ஆனாலும் செல்லுல சிரிச்சுப் பேசிகிட்டே
எதுக்க நீ வந்தப்ப
முட்டைக் கண்ணும் அந்த
முன்னிரெண்டு மாட்டுப்பல்லும்
காட்டிக் கொடுத்துச்சுப்பா’ என்றார்!
*** *** ***

படம் நன்றி: உயிரோசை

Wednesday, October 13, 2010

விளையாட்டு - அக்டோபர் PiT

பூங்காவில் பூ
போட்டிக்கு..பலூன்கள்

மேலேமேலே.. மேலேமேலே..
ஆடுகின்றன பலூன்கள்
அந்தரத்தில் ஆனந்தமாய்
பிஞ்சுக்கரங்களின் பிடியினிலும்
மழலைக்கண்களின் ஒளியினிலும்
மனம் களித்து உளம் திளைத்து!!!
***


ரெடி.. ஸ்டெடி..
“மீ தி ஃப்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்...”
-வாத்துஅடடா, வட போச்சே...”
-கோழி


விளையாட்டு சூடு பிடிக்க வேண்டாமா? விரைந்து அனுப்புங்கள் உங்கள் படங்களை தேதி பதினைந்துக்குள்!

Sunday, October 10, 2010

முத்துச்சரம் - லேடீஸ் ஸ்பெஷலில்..


'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை, கடந்த ஐந்து மாதங்களாக மாதம் ஒரு பெண்பதிவரின் வலைப்பூவினை அறிமுகப் படுத்தி வருகிறது. நவராத்திரி சிறப்பிதழாக மலர்ந்துள்ள அக்டோபர் இதழில் இடம் பெற்றுள்ளது முத்துச்சரம்:


என் அன்னையர் தினப் பதிவினையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்:நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

என்னைப் பற்றிய விவரங்களை வாங்கி அனுப்பி வைத்த தேனம்மைக்கும் என் நன்றிகள்:)!
*** *** ***

Thursday, October 7, 2010

தோழமை - வல்லமையில்..‘காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’
கடந்து செல்லும் மனிதரில்
எவரேனும் ஒருவர்
கணை தொடுத்த வண்ணமாய்

‘முயன்றுதான் பார்ப்போமே’
முளைவிட்ட பிரயத்தனங்கள்
தளிர்விடும் முன்னே உயிர்விட..
திகைத்து நின்ற வேளையில்

‘ஏன் மாற வேண்டும்?
நீ நீயாகவே இரு
பிடிக்கிறது அதுவே எனக்கு’
காலை வெயிலின் இதமென
கனிவாக நட்பொன்று சொல்ல

சட்டென்று மொட்டவிழ்ந்தாற்போல்
முகிழ்ந்தது மாற்றம்

ஊற்றெடுத்த உற்சாகத்தில்
படபடத்துத் திறந்த மனதினுள்ளிருந்து
அணிவகுத்து மேலெழுந்த
பலநூறு பட்டாம்பூச்சிகளின்
எழில் வண்ண
சிறகோவியங்களில் பிரமித்து

கிளம்பிய கைதட்டல்களில்
வந்தது பெருமிதம்
தோள்நின்ற தோழமையை நினைத்தே.
***

படம்: இணையத்திலிருந்து..

Sunday, October 3, 2010

நாளும் நாம் - உயிரோசை கவிதை


"நான் நாங்கள் தன்மையாம்
நீ நீங்கள் முன்னிலையாம்
அப்போ ‘நாம்’ என்னப்பா?"

"தன்மைப் பன்மை" வந்த பதிலில்
திருப்தியற்ற குழந்தையின்
தீராத குழப்பம் போலவே

சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
சுற்றியலைந்து
தன்னைத் தானே தேடிக் கொண்டே
இருக்கிறது நாளும்
‘நாம்’.
***


படம் நன்றி: உயிரோசை


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin