பாலபாரதி தன் 'விடுபட்டவை 05 ஜூன் 2008’ பதிவில் தமிழர்களின் அடையாளமாய் திண்ணையைக் குறிப்பிட்டு, மாறி வரும் கலாச்சாரத்தால் மறைந்து வரும் திண்ணையைப் பற்றி எழுதிடுமாறு அனைவரையும் அழைத்து தொடர் பதிவைத் தொடங்கி வைக்க, மலரும் நினைவுகளில் பலரும் திளைத்துப் பதிவிட்டிருந்தாலும் என்னை எழுதத் தூண்டியது, முதன் முதலில் நான் வாசித்த
கயல்விழி முத்துலட்சுமியின் 'லட்சியக் கனவு திண்ணை வச்ச வீடு'ம், அவரைத் தூண்டிய பாலபாரதி,
முரளிக் கண்ணன் ஆகியோரின் பதிவுகளும்தான். இப்பதிவை கயல்விழிக்கோர் கடிதமாகவே வரைய விரும்புகிறேன்.
அன்புள்ள கயல்விழி முத்துலெட்சுமிக்கு,
"திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு" என்ற உங்கள் லட்சியக் கனவோடு ஆரம்பிக்கிறது உங்கள் பதிவு. இவை எல்லாமே நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் உண்டு. அந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மங்காமல் மாறாமல் இருந்தாலும், தங்கள் வர்ணனைகளும் ஏக்கங்களும் அவற்றின் அருமையை மென்மேலும் உணர வைத்தன.
[1. திண்ணை தொடங்கும் வெளிவாசல்]
கயல்விழி! எங்கள் வீடும் ரோட்டை விட உயரமான ஒரு மேடை லெவலில்தான் ஆரம்பிக்கும். வீட்டு வாசலின் இடப்புறத் திண்ணை ஒருவர் மட்டும் அமரும் படியான சாய்வுத் திண்டு கொண்டதாகும். வலப்புறத் திண்ணை சுமார் முப்பத்தைந்து அடிகளுக்கு வீட்டின் நீளத்துக்கு நீண்டு செல்லும். இப்படியாகத் தெருவில் ஐந்தாறு வீடுகள் தொடர்ந்து வாசல் விட்டு வாசல் திண்ணைகளாலேயே இணைக்கப் பட்டிருக்கும்
.
என் வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் அத்தைமார், சித்தப்பா ஊருக்குச் செல்ல ஸ்டேஷனுக்குக் கிளம்புகையில் கார் ரோடிலே செல்ல நாங்கள் காரின் வேகத்துக்கு 'டாட்டா டாட்டா' என்றபடி இந்த
தொடர் திண்ணை மேல் ஓடி கடைசி வீட்டுத் திண்ணை விளிம்பில் சடன் ப்ரேக் போட்டு (கார் அல்ல,நாங்கள்) நிற்போம். 'இனி அடுத்த விடுமுறையில்தானா பார்ப்போம்' என ஏக்கத்துடன் நிற்கும் எங்களைப் பார்த்து தெருமுனையில் கார் திரும்பும் வரை அவர்களும் அதே ஆதங்கத்துடன் கை அசைத்தபடியே செல்வார்கள்.
வாசலின் இரு புறமும் உள்ள சுவற்றில் தெரிகிற மாடப் பிறைகளில் கார்த்திகை மாத மாலைப் பொழுதுகளில் அகல் விளக்கேற்றி வைத்திருப்போம்.
திருவிழா சமயங்களில் அற்புதமாய் அலங்கரிக்கப் பட்ட சப்பரங்கள்(சாமி உலா) நடுநிசி தாண்டி மேளதாளத்துடன் வரும். தெருமுனையில் மேளச் சத்தம் கேட்கும் போதே துள்ளி எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வாசலுக்குச் சென்றால் தெருத் திண்ணைகள் யாவும் நிரம்பியிருக்கும். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என அமர்க்களப்படும். சாமி வீடு தேடி வந்து அருள் பாலித்துச் செல்வார்.
சரி, வீட்டுக்குள் போவோமா கயல்விழி முத்துலெட்சுமி?
படியேறி வீட்டினுள் வந்தால் பெரிய முற்றம் வரும். அதுவே எங்கள் விளையாட்டுக் களமாகத் திகழ்ந்தது. பாண்டி, கண்ணாமூச்சி, தொட்டுப் பிடிச்சு, கல்லா மண்ணா, கலர் கலர் வாட் கலர், ஷட்டில் மட்டுமின்றி அண்ணன்மாருக்கு ஈடுகொடுத்து ஹாக்கி, கில்லி விளையாடுவதிலும் கில்லாடிகளாக இருந்தோம். முற்றத்திலிருந்து இன்னொரு மேடையாக நீங்கள் குறிப்பிட்டிருந்த
உள்திண்ணை. அதன் பிறகு வீடு இரண்டு கட்டாகப் பிரிந்து முறையே நான்கு நான்கு கட்டுகள் கொண்டு கடைசி அறையில் மீண்டும் ஒன்றாக இணையும். அதை அடுத்து
பின்திண்ணை, பிறகு பின்முற்றம். பின்முற்றத்தை ஒட்டி அடுக்களை. அதன் பிறகு ஒரு படி இறங்கினால் மாட்டுத் தொழுவம். இன்னும் ஒரு படி இறங்கினால் நான்கடி உயர ட்ரம்மில் வென்னீர் போடும் அடுப்பு, கிணற்றடி, குளியலறைகள். இவை எல்லாம் தாண்டி பின்வாசல் பின்தெருவில் திறக்கும்.
வீட்டின் இடப் புற வரிசையை தெற்கு வீடு என்றும் வலப் புற வரிசையை வடக்கு வீடு என்றும் குறிப்பிடுவார்கள். வீட்டின் வெளிவாசலுக்கு நேராக பெரிய (அகன்ற) முடுக்கும், முற்றத்திலிருந்து தெற்குவீட்டின் இடப்புறமாகச் சின்ன (சற்றே குறுகிய) முடுக்கும் வீட்டின் பின்திண்ணைக்கு இட்டுச் செல்லும்.
முற்றத்திலிருந்து இரு வீட்டு வாசலுக்கும் நேராக உள்திண்ணையில் ஏறிட இடப் புறமும் வலப் புறமும் படிக்கட்டுக்கள் உண்டு. இத்திண்ணையில் ஐந்து உயரமான வழவழத்தத் தூண்களும் இடமும் வலமும் கடைசித் தூண்கள் அரைத் தூண்களாகவும் (கீழ் வரும் படத்தில் அரைத் தூணைக் காண்க) வடிவமைக்கப் பட்டிருக்கும்.
[2. முற்றத்தில் தெற்கு வீட்டுப் படிக்கட்டில் மத்தாப்புக் கொளுத்தும் சின்ன வயது அண்ணன்மாரு..]
[3. முற்றத்தில் வடக்கு வீட்டுப் படிக்கட்டில் வரிசையாக..]மேலுள்ள படத்தில் வலப்புறம் காணப்படும் நாற்காலியில்தான் என் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பார்கள்.
அவரைச் சந்திக்க வருபவர்கள் இடப்புறம் போடப் பட்டிருந்த நீண்ட பெஞ்சிலே காத்திருப்பர்.
[4. பெரியத்தையுடன் அந்த பெஞ்சிலே..]'திணணை மேல் திண்ணை'யாக விளங்கிய அந்த பெஞ்சுக்கு வேறொரு உபயோகமும் இருந்தது. என் தாத்தா அலுவலகம் சென்றதும் அந்த பெஞ்சை இழுத்து ஒரு பக்கத்தை உள்திண்ணை மேலும் மறுபக்கத்தை முற்றத்திலுமாய் இறக்கி வைத்து சறுக்கு மரம் விளையாடுவோம். மதிய சாப்பாட்டுக்குத் தாத்தா வரும் முன்னர் அது பழைய இடத்துக்குத் திரும்பி விடும். எங்கள் குறும்பு விளையாட்டுக்கள் எதையும் தாத்தா கண்டிப்பதில்லை என்றாலும் கூட அப்படி ஒரு மரியாதையை மனதிலே வளர்த்து விட்டிருந்தார்கள் அம்மாவும் சின்னபெரியம்மாவும்.
சறுக்கு மரம் பற்றிச் சொல்லியாயிற்று. அடுத்து வழுக்கு மரம். என் அண்ணன்மார் இருவருக்கும் அந்த வழுவழுத்தத் தூண்களின் மேல் உச்சி வரைத் தவ்வி தவ்வி ஏறி 'சர்'ரென வழுக்குவது பிடித்தமான விளையாட்டு. சிறுமியரான எங்களுக்கோ வியப்புத் தாங்காது. முயற்சி செய்துதான் பார்ப்போமே என முயன்றால் முதுகில்தான் விழும்..
[5. என் சித்தப்பாவின் தலை தீபாவளிப் படத்தில் தூண்களின் முழுத் தோற்றம்..]முரளிக் கண்ணன் தனது பதிவிலே பொங்கல், தீபாவளி சமயங்களிலே திண்ணையோடான வசந்த காலங்களை நினைவு கூர்ந்திருந்தார். பொங்கலுக்கு முன் தினம் முற்றத்தை அடைக்குமாறு அக்கா சுண்ணாம்புக் கோலமிடும் அழகை உள்திண்ணையில் கூடி நின்று ரசிப்போம். மறுநாள் காலை அம்மா, பெரியம்மா முற்றத்தில் பொங்கலிட உள்திண்ணையிலே காலாட்டியபடி கரும்பு சாப்பிடுவோம்.
உள்திண்ணையின் வலது ஓரத்தில் நாலுக்கு நாலு சதுர அடியில் 'சிறுவீடு'
என்ற கட்டுமானம் நிரந்தரமாக இருக்கும். ஒரு பெரிய ஹால், சாப்பாட்டு அறை, அடுப்பங்கரை ஆகியவை அடங்கிய ஒரு வீட்டின் லே-அவுட்டுக்கான வரைபடம் போலிருக்கும். இன்னும் விளக்கமாய் சொல்வதானால் வரைபடக் கோடு என்பது மூன்றங்குல உயரம் இரண்டங்குல அகலத்திலான ஒரு கட்டுமானமாக இருக்கும். பொங்கலன்றோ மறுநாளோ வீட்டுச் சிறுமியர் அதில் பொங்கலிட வேண்டுமென்பது ஐதீகம். பொங்கலுக்கு முதல் நாள் சிறுவீட்டிலும் காவி அடித்து எங்கள் கை வண்ணத்திலேயே கோலமுமிட வைப்பார்கள். சின்ன சைஸ் காவி அடித்த அடுப்புக் கட்டிகள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் பட்டு வரும். ஆனால் எங்கள் சின்னஞ்சிறு கைகளைப் பொங்கலிட வைத்துச் சிரமப் படுத்த வேண்டாமென அடுப்பில் சிறு பானையேற்றி பால் காய்ச்சி வெல்லம் சேர்க்க வைப்பார்கள்.
[6. சிறுவீட்டுப் பொங்கலிட்டக் களிப்பில் சிறுமியர் நாங்கள்..]பொங்கலன்று பெரிய பெரியப்பா, சித்தப்பா மற்றும் உறவினரெல்லா...ம் குடும்பத்துடன் வந்திருப்பாக.. வாம்மா மின்னல்.. எனக் கூப்பிடும் முன் நாங்கள் காய்ச்சிய பாலை டம்ளர்களில் ஊற்றி ட்ரேயில் வைத்து எங்கள் கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அந்த வயதில் படபடக்கும் நீளப் பட்டுப் பாவாடை தடுக்கிடாமல் பால் அலும்பிடாமல் கவனமாக ட்ரேயை எடுத்துச் செல்வதே ஒரு சவலாக இருக்கும். வழக்கமாக பொங்கலன்று வீட்டுக்கு வாழ்த்த, வாழ்த்துப் பெற வருபவர்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் வீட்டுப் பெரியவர்கள் ஒரு சிறுதொகை பொங்கப்படியாக தருவது வழக்கம். சிறுவீட்டுப் பொங்கப்படி என சிறுமியருக்கு கூடுதலாய் கிடைக்கும் வரும்படி அண்ணன்மார் காதில் புகை கிளப்பும்.
தீபாவளி அன்று, பெரிய பெரியப்பாவின் பிள்ளைகளும் வந்திருக்க அண்ணன்மார் எண்ணிக்கை கூடி விடும். அண்ணன்மார் கூட்டணி முற்றத்தில் அட்டகாசமாய் வெடிவெடிக்க தங்கையர் கூட்டணியோ காதுகளைக் கையால் பொத்திய படி, பாதுகாப்பாய் உள்திண்ணையிலே நின்று கண்டு களிக்கும்.
[7. மகிழ்ச்சி பொங்க மத்தாப்பு பத்திரமாய் திண்ணை மேல் நின்று..]கயல்விழி! உங்கள் பதிவில் காட்டியிருந்தாற் போன்ற அகன்ற ஊஞ்சல் எம் வீட்டில் கிடையாது. ஆனால் முப்பதடிக்கு அகன்ற அந்த உள்திண்ணையின் நடுவில், நீள வாக்கில் வீசி வீசி ஆடும் வகையில், ஒருவர் மட்டுமே அமர்ந்து ஆடுகிற படியான ஊஞ்சல் உத்திரத்திலே கட்டி வைக்கப் பட்டிருக்கும். படையப்பா படத்தில் நீலாம்பரியைப் பார்க்க வரும் படையப்பா உட்கார நாற்காலி தரப் படாது போகையில் ஸ்டைலாக துண்டால் இறக்கி விடுவாரே, அது போலத் தேவைப் படும் போது இறக்கி விடப் படும். இறக்கி விடப் பெரியவர்கள் அருகில் இல்லையெனில், பாசத்தங்கையர் இட்ட ஏவலை ஏற்று முடிக்க அண்ணன்மாரே விடுவிடுவென தூணில் ஏறி ஊஞ்சலை கீழிறக்கி விட்டு உல்லாசமாய் வழுக்கியபடி வந்து தரை சேருவர். பிரதி உபகாரமாய் முதலாட்டம் அவர்களுக்கே. ரெண்டாவது எம்பில் காலால் உத்திரத்தைத் தொட்டுத் திரும்புவர். அதை போல செய்ய முயன்று நாங்கள் 'தொபகடீர்' ஆன அனுபவங்களும் உண்டு.
[8. உள்திண்ணை தூணில் சாய்ந்து முற்றத்தைப் பார்த்தபடி இளம் பிராயத்தில் என் தந்தை]மேலுள்ள படமானது வடக்கு வீட்டின் பாட்டாலை(பாடசாலை)யின் உள்ளிருந்து எடுக்கப் பட்டது. கனமான செட்டிநாட்டு வகைக் கதவும், கூடவே காற்றோட்டத்துக்கான அளிக்கதவும் தெரிகிறது பாருங்கள். அந்தக் கனத்தக் கதவில் குறுக்கு வாக்கிலே 'அடியில் நடுவில் மேலே' என மூன்று மூன்று குமிழ்களுடன் கடைசல் வேலைப்பாட்டுடனான மரச் சட்டங்கள் இருக்கும். [படத்தில் தெரிவது நடுச் சட்டம்]. நாங்கள் கீழ் சட்டத்தில் ஒரு கால் வைத்து ஏறி நடுப்பகுதியைப் பற்றிக் கொண்டு மறு கால் வைத்துத் தரையைத் தள்ளினால் முன்னும் பின்னுமாகப் போவோமே.. அரை வட்டமடிக்கும் ராட்டினம்(மெர்ரி கோ ரவுன்ட்) போல. இப்படியாகக் குழந்தைகள் கூடி வாழ்ந்து, குதூகலத்துக்கும் குறைவில்லாத அந்த நாளில் சிறுவர் பூங்காக்களுக்கும் அம்யூஸ்மெண்ட் பூங்காக்களுக்குமான தேவை கூட இருக்கவில்லை.
வழவழப்பான தூண்கள், ஊஞ்சல் வரிசையில் 'சிகப்பு' சிமென்ட் தரையைப் பற்றி சிலாகித்திருந்தீர்கள், இல்லையா கயல்விழி? எம் வீட்டின் பின் முற்றத்தை ஒட்டிய உள்திண்ணை வழுவழுப்பான 'பச்சை' நிற சிமென்ட் தரையால் ஆனது. இந்தப்
பின்திண்ணையை 'சிமெண்ட் தரை' என்றேதான் அழைப்போம். இங்கும் ஒரு ஒற்றை ஊஞ்சல் உண்டு.
கோடை காலத்தில் வற்றலுக்கு கூழ் காய்ச்சுவது (எனது
கூழ்ச் சறுக்கு பதிவில் குறிப்பிட்டிருப்பேன்) பின் முற்றத்தில்தான். அண்டாவில் காய்ச்சப் படும் கூழின் மேல் படரும் சுவையான கூழாடைக்காக சின்னக் கிண்ணங்களுடன் வரிசையாக பின் திண்ணையில் அமர்ந்திருப்போம். பின் முற்றத்தில்தான் பலகாரம் செய்ய வருபவர்களுக்கும் ஸ்பெஷல் அடுப்பு அமைத்துத் தரப் படும். வல்லநாட்டம்மா என அவர் ஊர் பெயரால் அழைக்கப்பட்ட பெண்மணி முறுக்கு சுற்றுவதில் வல்லவர். எண்ணெய் காய்ந்ததும் முதல் சுற்றில் சுட்டெடுத்துத் தரும் 'வெந்தும் வேகாத' முறுக்குக்காகக் கையில் தட்டுடன், அவர்கள் விறுவிறுவென நேர்த்தியாக முறுக்கு சுற்றும் அழகை வியந்தபடி இப் பின் திண்ணையிலே காத்திருப்போம்.
[9. பெரியம்மாவும் அம்மாவும் 'பின்திண்ணை'யில்..ஒரு பொங்கல் நன்னாளில்..]பின் முற்றம் வழியே எட்டிப் பார்க்கும் முழு நிலாவைக் கண்டதும் யாருக்காவது எட்டிப் பார்த்து விடும் நிலாச் சோற்று ஆசை. மேல் தட்டட்டியில் (மொட்டை மாடியில்) என ப்ளான் பண்ணாத சமயமாயிருக்கும். சரின்னு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்டா ரெடியாகி விடும் இந்த நிலாச்சோறு. பின்(அறை)கட்டு மின் விளக்குகளை அணைத்து விட்டு நிலாக் காயும் சிமென்ட் தரையிலே பெரியம்மாவோ, அம்மாவோ ஒரே சட்டியில் சோற்றைப் பிசைந்து உருட்டிப் போட வட்டமாக அமர்ந்து கவளம் கவளமாக வாங்கி உள்ளே தள்ளுவோம். கோடை கால இரவுகளில் குளிர்ச்சிகாக சுவையான நீத்தண்ணியை (நீருஞ்சோறும்) சின்ன வெங்காயத்தை அவ்வப்போது கடித்தபடி ஒரு உறிஞ்சு உறிஞ்சுவோம். வீட்டின் பின்புற ரோடு தாண்டி இருந்த பிள்ளையார் கோவிலின் பரந்து விரிந்த அரச மரமும், பக்கத்து வீட்டு வேப்ப மரமும் பின் முற்றத்தில் எட்டிப் பார்க்கும். நிலவொளியில் அவை அசைந்தாடுகையில் அதிலுறங்கும் பறவைகள் கூடத் தெரியும்.
எல்லாவற்றையும் சொன்ன நான் மணமேடை எனும் 'மணவட'யைப் பற்றிச் சொல்லா விட்டால் மனசு ஆறாது. முன் முற்றத்தில் அமைந்திருந்த இந்த மணவடயிலேதான் வீட்டின் முதல் திருமணங்கள் (பெரியப்பாமார்,பெரியத்தை ஆகியோரது) நடந்தனவாம். மற்ற சமயங்களில் இது நாங்கள் அமர்ந்து விளையாடும் ஒரு "
சதுரத் திண்ணை"யாக பல சந்தோஷத் தருணங்களின் சாட்சியாக இருந்தது.
[10. இப்படி ஒரு சமர்த்தாய் சண்டையேதுமின்றி இன்டோர் கேம்ஸ்..கண்ணே பட்டுடும் போலில்லே..]
சிறுவர்கள் நாங்கள் இப்படிச் சமர்த்தாய் அமர்ந்து விளையாடப் பயன்பட்ட அது பெரியவர்களுக்கும் கேரம், சைனீஸ்சக்கர்ஸ்,தாயம் போன்ற பல ஆட்டங்களை விளையாடும் தளமாக இருந்தது. பார்வையாளர்கள் நாலா பக்கமும் சூழ்ந்திருந்து ரசிக்க, உற்சாகப் படுத்த வசதியான அமைப்பாகவும் அது விளங்கியது. அப்படி விளையாட்டுக்கள் அமர்க்களப்பட்ட போது நடந்த ஒரு சின்ன சம்பவத்தை விவரிக்க ஆசைப் படுகிறேன், அதுவும் ஒரு தலைமுறை முன்னே போய். என் ஆச்சி (அப்பாவின் தாயார்-அவரது பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்
'ராமலக்ஷ்மி' என) தனது குழந்தைகளுடனும், தனது மைத்துனரின் குழந்தைகளுடனும் ஒரு சமயம் தாயக் கட்டம் ஆடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது பதின்மத்தின் தொடக்கத்திலிருந்த என் அப்பா, தனது முறை வந்தும் கவனியாது இருக்க, ஆச்சி அவரது தோளில் தட்டி 'ஆடு ஆடு' என்றார்களாம். உடனே என் அப்பா 'சட்'டென எழுந்து ஒரு ஆட்டம் (நாட்டியம்) ஆடி அமர, அந்த இடத்தில் எழும்பிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்றாம்.
விளையாட்டுத் தளமாக மட்டுமின்றி இம்மேடை எங்களுக்கு முக்கியமான புகைப்படக் களமாகவும் விளங்கி வந்தது. பல்வேறு காலக் கட்டங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைக் களமாகக் கொண்டு எடுத்த க்ரூப் ஃபோட்டோக்கள் கணக்கிலடங்கா. மேடையில் அமர்ந்து ஒருவரிசை, ஏறி நின்று ஒரு வரிசை,முன்னால் சேர் போட்டு ஒரு வரிசை, தரையில் அமர்ந்து ஒரு வரிசை என கிட்டத் தட்ட 20,25 பேர் அடங்கும் படியான படங்கள் பலவும் இதில் அடங்கும்.
[10. ஒரு பிறந்த தினத்தன்று..]
மேலுள்ள படத்தில், மேடையின் பின் பக்கம் ஒரு எட்டடி தள்ளி வரும் சுவற்றில் எங்களுக்கென்றே எம் தந்தை ஆர்டர் செய்து வாங்கி மாட்டியிருந்த கரும்பலகையைப் பாருங்கள். அப்படியே மறுபக்கம் அபவ் டர்ன் செய்து மாணாக்கர் உட்கார வகுப்பறை ஆகிவிடும் அவ்விடம். பெரும்பாலும் நான்தான் டீச்சர்.
[11. 'சதுரத் திண்ணை'யாக நான் பார்க்கும் 'மணவட' மேலே அக்காவின் கோல மரியாதை..]
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எழுத எடுக்கும் நேரத்தை விட அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வர பிடிக்கின்ற நேரம் அதிகமாகி விடுகிறது.
பிறந்த ஊரை விட்டுப் பெருநகரங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியிருப்போர் பலருக்கும், பால்கனிகள்தான் முற்றத்துக்கும், திண்ணைக்கும் ஓரளவுக்கு மாற்றாக விளங்குவதாய் நான் நினைக்கிறேன். எவ்வாறெனில், வெளி உலகை வாசிக்க உதவிய வெளித் திண்ணை போல உலகைக் பார்க்கவும், மக்களைப் படிக்கவும் பால்கனிகள் உதவுகின்றன. அது போல, முற்றத்திலிருந்து அன்று நாம் ரசித்த முழு நிலாவையும், மின்னும் நட்சத்திரங்களையும், விரிந்த வானையும், மேகக் கூட்டங்களையும் நம் கண்ணுக்கு அவை காட்டுவதோடின்றி மனதுக்கு இதமான மழைச் சாரலையும் நம் கைக்குக் கொண்டு வருகின்றன. ஆகக் கைக்கு கிடைத்தவற்றில் திருப்தி பட்டு வாய்க்கு எட்டாதவற்றிற்காக வருத்தப் படாமல் வாழ்க்கையை வாழத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?
சற்றே
நீண்ட கடிதமாகி விட்டதற்கும், தங்கள் திண்ணை பதிவின் பின்னூட்டதில் நானாகவே வந்து வாக்குக் கொடுத்து வாரங்கள் மூன்று ஓடி விட்ட தாமதத்திற்காகவும் மன்னியுங்கள் கயல்விழி முத்துலெட்சுமி.
இப்படிக்கு,
ராமலக்ஷ்மி.
பி.கு:திண்ணை என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நினைவுகள் கனவுகள். தான் படைத்த திண்ணையிலே நாம் படைக்கும் திண்ணைகளுக்காக இடம் அமைத்துக் காத்திருக்கிறார் பாலபாரதி. யார் யாருக்கு விருப்பமோ, இந்தச் சங்கலியைத் தொடந்து அதை
பாலபாரதியின் திண்ணையிலே பதிந்தும் வைக்குமாறு விண்ணப்பித்து முடிக்கின்றேன்.
***
- தமிழ்மணம் அறிவித்த ‘விருதுகள் 2008’-ல் 'கலாச்சாரம்’ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது இப்பதிவு.
நன்றி விகடன்!