** திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
** திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 டிசம்பர், 2024

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை - சாந்தி மாரியப்பனின் "நிரம்பும் வெளியின் ருசி"

  

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை 

வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு. 

செவ்வாய், 30 மே, 2023

யாக்கை - திண்ணை இணைய இதழில்..

யாக்கை

வெறித்து நிற்கிறாள்
போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை.
எக்கவலையுமற்றவன் தருந்துயரும்
தனியொருவளாய்த் தாங்கும் 
அன்றாடத்தின் பாரமும் 
அழுத்துகிறது 
உள்ளத்தையும் 
உடலையும்.
ஒவ்வொரு உறுப்பும்
ஓய்வு கேட்டுக் கெஞ்ச

புதன், 4 அக்டோபர், 2017

சிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..

விதைகளைத் தன் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன்.  அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

னிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம். 
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.

திங்கள், 17 நவம்பர், 2014

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. - ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’



ருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை.  அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.

பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை  எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’ - 'குழந்தைமையின் கவித்துவம்' திண்ணை இதழில்..

மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து  எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும்  கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும்  தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்‌ஷ்மி. அந்த உலகத்தின் ஈர மண்ணைக் குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில் அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல்லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.

வியாழன், 8 மார்ச், 2012

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை - வல்லமையில்..


ன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்து கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள்’ என்பதை மறுதலித்துச் சொல்லுகிறார் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் சான்ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

களிர் தினத்தில் தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

  • பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

  • ‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

  • சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

  • சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

  • மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

**

சாதனை அரசிகள்
பக்கங்கள்:80; விலை:ரூ.50
பதிப்பகம்: முத்துசபா
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

*****


8 மார்ச் 2012 வல்லமை (மகளிர் வாரம்) இதழில்.., நன்றி வல்லமை!

18 மார்ச் 2012 திண்ணை இணைய இதழிலும்,நன்றி திண்ணை!

திங்கள், 7 நவம்பர், 2011

‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (திண்ணையில்..)


எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ தொடர் மூலமாக. அதன் பனிரெண்டாவது அத்தியாயத்தின் போது ‘யார் இந்த சுகா’ என வியப்புடன் நான் பகிர்ந்து கொண்ட குறிப்பைத் தொடர்ந்து நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்ததே சொல்வனம் இணைய இதழில் அவர் தொடராக எழுதிப் பிறகு தொகுப்பாக வெளியான “தாயார் சன்னதி”. தபால் மூலமாக தருவித்துக் கொண்டாலும் ஏனோ ‘மூங்கில் மூச்சு’ முடிந்த பின்னரே வாசிக்க வேண்டுமெனத் தோன்றக் காத்திருந்து வாசித்தேன். பகிர்ந்திடும் நேரம் இப்போதுதான் வாய்த்தது.

மூங்கில் மூச்சின் முந்தைய பாகம் என்று சொல்ல முடியாமல் இரண்டும் சம காலத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் பதிவுகளாக. இதிலிருக்கும் எந்த அத்தியாயங்களையுமே அவர் மூங்கில் மூச்சில் பகிர்ந்ததாகத் தெரியவில்லை, விஞ்சை விலாஸ் தவிர்த்து. அதுவும் உணவகங்களைப் பற்றி எழுதுகையில் தவிர்க்க முடியாமல் சேர்த்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.

மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது. என் பிறந்த மண்ணைப் பற்றிய பகிர்வு என்பது கூடுதல் ஈர்ப்பு என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இத்தொடரை நேசிக்கவும் ரசிக்கவும் நெல்லை மண்ணில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது கிஞ்சித்தும் அவசியமில்லை. நெல்லையப்பரும் காந்திமதியும் எம் மண்ணுக்கு அப்பனும் அம்மையும் என்றால் அவரவர் ஊருக்கு அருள் பாலித்திருக்கும் அம்மை அப்பனை இவரது வரிகளில் தரிசிப்பீர்கள். நெல்லை வீதிகளில் ஆசிரியர் நடக்கும் போது, தியேட்டர்களில் படம் பார்க்கும் போது, தன் சமூகத்தின் வழக்கங்களைப் பகிரும் போது, சந்தித்த மக்களைக் கொண்டாடும் போது தன்னிச்சையாக உங்கள் நினைவுகளும் உங்கள் ஊரைச் சுற்றிவரும் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்திரவாதம் தர முடிகிறது.

குஞ்சு போன்றதொரு தோழன் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருப்பார். ஜெயண்ட் வீலில் சின்னப்பையனோடு தெம்பாக ஏறி அமர்ந்து, சுற்ற ஆரம்பித்ததும் வெலவெலத்துப் போன சுந்தரம்பிள்ளை பெரியப்பா; பாம்புக்கு பயந்து உத்திரத்தில் தொங்கி, யாரோ அடித்துப் போட்ட பிறகு அதைத் தெருவழியே தூக்கி நடந்த அம்பி மாமா, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான அன்னண்ணன், ‘வான் நிலா’ பாடலை ரசிக்கும் அம்போத்தி இவர்கள் வேறு பெயர்களில், வேறு உருவங்களில் ஒவ்வொருவர் ஊரிலும் உலவியிருப்பார்கள்.

தாயார் சன்னதி’ என்றதும் காந்திமதி அம்மனைப் பற்றியதாகவே இருக்குமென நான் எண்ணியிருக்க அது ஆசிரியரது தாயாரின் கடைசி தினங்களைப் பற்றியதாக, மருத்துவமனையில் அவர் போலவே பாதிக்கப்பட்டிருந்த சில தாயார்களைப் பற்றியதாக அமைந்திருப்பது நெகிழ்வு. “முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.

பாம்பு என்ற பூச்சி’, விளக்கு வைத்த பின் பாம்பைப் பாம்பு என சொல்லக் கூடாதென்பதை நாங்களும் சிறுவயதில் கடைப்பிடித்திருக்கிறோம்.

ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்.’ உண்மைதான். அத்தனை பல்லும் போனாலும் நெஞ்சு முழுக்க அன்பைச் சுமந்து கொண்டு ஆழ்வாற்குறிச்சியிலிருந்து எங்களைப் பார்க்க வரும் அம்மாவின் பெரியம்மா பெயர் கோமதி என்பதைச் சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தேன் இதை எழுதும்போது. எல்லோருக்கும் அவர் ‘பொக் பொக்’ ஆச்சி. தொட்டிலில் கிடந்த கொள்ளுப் பேரனாகிய என் அண்ணனின் அழுகையை நிறுத்த ‘கொக்கரக்கோ’ எனக் கூவிக் காட்டிய அம்மாவின் ஆச்சியை ‘கொக்கரக்கோ’ ஆச்சி என்றே இன்றளவும் விளிக்கிறோம். ஆசிரியர் காட்டும் பசு ஆச்சி, குட்டை ஆச்சி, மாம்பழத்தாச்சி போன்றோரின் பிரதிபலன் பாரா பாசம், அன்பு இன்றைய உலகில் காணக் கிடைப்பதே அரிது.

இலங்கை வானொலி கேட்ட இனிய நாட்களை மீட்டெடுக்கிறது ‘சில மனிதர்கள், சில பாடல்கள்’. ‘ஆய்புவன்’ இலங்கை ரூபவாஹினி திருநெல்வேலியில் தெரிய ஆரம்பித்த போது அதை மட்டும் நம்பியே வாங்கப்பட்ட டைனோரா, சாலிடேர் டிவி காலங்களுக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து தூர்தர்ஷன் தெரிய ஆரம்பிக்க மொழியே தெரியவில்லையென்றாலும் ஊரே விடாது பார்த்த ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை நினைவு கூர்கின்றது. நமசிவாயம் பிள்ளை கேட்கிறார் “மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டெ இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?

இவர் பரிமாறி இருக்கும் ‘பந்தி’ யைப் பற்றிச் சொன்னால் சுவைக்காது. வாசித்தாலே ருசிக்கும். பரிமாறும் முறை, உணவுகளின் வகை, எந்தெந்த நிகழ்வுகளுக்கு எப்படியாக இருக்க வேண்டும் பந்தி என்பதைப் பற்றிய நுணுக்கமான விவரிப்புக்கள் அற்புதம். மண்ணின் பழக்க வழக்கங்களைச் சிறப்பாகத் தொடரெங்கும் பதிந்திருக்கிறார் தனிப்பட்ட சமூக நெடி படிந்திடாத படியும்.

கட்டுரையில் நடமாடும் மாந்தரை நாம் நேரில் பார்க்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களையும் நினைவிடுக்கிலிருந்து மீட்டெடுத்துத் தந்த விதமும் ரசிப்புக்குரியது, நெற்றியெல்லாம் நீறுமணக்க கழுத்தி ஸ்படிக, ருத்திராட்ச மாலைகளுடன் விஞ்சை விலாஸ் கைலாசம் பிள்ளை தாத்தா எப்படி பத்மினி ஊதுபத்தியை அதன் பாக்கெட்டின் துளையில் செருகி வைத்திருப்பார் என்பது வரை கூர்மையான அவதானிப்பு.

தொடரைத் தாங்கி நிற்கும் தூணாக வட்டார வழக்கு. தெப்பக்குளத்தெரு ரங்கநாதனின் “நேர்ல பாக்க வருதேன்” எனும் மூன்று வார்த்தைகள் எப்படி ஆசிரியரை சந்தோஷப்படுத்தியதோ அதே சந்தோஷம் கிட்டுகிறது ஊர் மக்களுக்கு, முதல் அத்தியாயத்தின் பெயரைப் பார்த்ததுமே. ‘திருநவேலி’! “ஒன் வயசென்ன என் வயசென்னலே” சண்முக அண்ணன் தன்னிலை மறந்து கோபப்பட்டது என்னவோ நாய் ஜாக்கனிடம் என்றாலும் இந்த வார்த்தைகளை உபயோகிக்காத ‘திருநவேலி’ ஆட்கள் மிகக் குறைவு.

இன்று திருமணத் தகவல் மையங்களில் அல்லாடும், இணையத்தில் மேட்ரிமோனியல் சர்வீஸ்களை உள்ளூற அச்சத்துடன் மேய்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை ஏங்க வைப்பவராக ‘துப்பு’ சொல்லும் வீரையன் தாத்தா.

கணவன் பேரைச் சொல்லக் கூடாதெனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆச்சிகள், அக்காக்கள், அத்தைகள், சித்திகள், மதினிகள் வலம் வருகிறார்கள் விதம் விதமாய் ‘முருகன் சாமி பேரு’ சொல்லி.

”நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது” முன்னுரையில் வண்ணதாசன் அவர்கள் சிலாகித்திருப்பது பற்றி மேலும் நான் சொல்ல என்ன இருக்கிறது? உயரத்துக்குக் கொண்டு போகும் அந்த சிலவற்றுள் உரக்கச் சிரிக்க வைப்பவையாக சொக்கப்பனை, ஜெயண்ட் வீல், கரையும் உள்ளம், நட்சத்திரம் பார்த்தல்..

ஹாஸ்யம் என்பது வெகு இயல்பாக எழுத்தோடு ஒன்றி தொகுப்பு நெடுக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள். எப்போது நாம் அதில் காலை வைப்போமென்றே தெரியாது.

குஞ்சுவே தொடரில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாத்திரம். சிறுவனாக இருந்தபோது ஒருநாள் காணாமல் போன குஞ்சு, போலிஸ் படையுடன் ஊரெங்கும் தேடப்படஷாஃப்டர் பள்ளி மைதானத்தில் எம்.ஜி. ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபடுகிறார். பின்னாளில் நண்பர்கள் இதைச் சொல்லி நகைக்கையில் “எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்?” சொல்லி வாய்மூடியவரின் அடுத்த செய்கையும், அவரே சொன்ன அத்தனை கிறுக்குத்தனங்களும் பிட்டுப் பிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன தொகுப்பில். குஞ்சு ’ஒருவேளை கற்பனை பாத்திரமாக இருக்குமோ’ என வண்ணதாசன் அவர்களுக்கு எழுந்த சந்தேகம், ஆரம்ப அத்தியாயங்களில் ஏற்பட்டாலும் போகப்போக அந்தப் பாத்திரப் படைப்பின் இயல்பு கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நம்ப வைக்கிறது. கிண்டலானது நட்பின் நெருக்கத்திலும் உரிமையிலும் செய்யப்பட்டிருக்கும் என்றொரு புரிதல் வருகிறது.

இளம் பிரயாத்து வாழ்வின் முழுமையான நேர்மையான பதிவாக அமைந்திருக்கும் ’தாயார் சன்னதி’ மண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

தொகுப்பில் இடம் பெற்ற படங்களை வரைந்த வள்ளி அவர்களும் பாராட்டுக்குரியவர். அட்டைப்படங்களுடன், நெல்லை மாநகராட்சி ஆர்ச், தேரும் ஜனத்திரளும், காந்திமதி அம்மன் கோபுரத்துடன் கோவில் தெப்பக்குள மண்டபம் போன்றவை தத்ரூபம்.

மூங்கில் மூச்சை வாசித்தவர்கள் தவறவிடக் கூடாததாக இத்தொகுப்பு. இதை வாசித்து ‘மூங்கில் மூச்சை’த் தவறவிட்டவர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் அத்தொகுப்பை விகடன் வெளியீடாக.
***

தாயார் சன்னதி

விலை ரூ:150. அத்தியாயங்கள்: 45. பக்கங்கள்: 256.

வெளியீடு: சொல்வனம் பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** *** ***

6 நவம்பர் 2011 திண்ணை
இதழில்., நன்றி திண்ணை!

***

டிசம்பர் 2012 குங்குமம் தோழி என் ஜன்னலிலும்.., நன்றி குங்குமம் தோழி!

***

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

விட்டு விடுதலை - திண்ணையில்..



சுமக்கிற பிரியங்களை
இறக்கி வைப்பது
இறுதி நொடியில் கூட
இயலுமா தெரியவில்லை.
பிரிகிற ஆன்மா
பேரொளியில் சேரத்
தடையாகுமதுவே
புரியாமலுமில்லை.

காலத்திற்கேற்ப
ஆசைகள் மாறுவதும்
தலைமுறைகள் தாண்டிப்
பாசங்கள் தொடர்வதும்
புகழ்பொருள் மீதான நாட்டங்கள்
போதையாகுவதுமே
சாஸ்வதமாக

மீளும் விருப்பற்று
இறுக்கும் சங்கிலிகளுக்குள்
இருப்பினைப் பத்திரமாக்கி

விட்டு விடுதலை ஆகாமலே
விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.
***

17 ஜூலை 2010 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

361 டிகிரி - காலாண்டு சிற்றிதழ் - ஒரு அறிமுகம்


361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், கனமான அட்டை ரோஹிணி மணியின் சித்திரங்களுடன், ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் நேர்த்தியான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.

அந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:

மலை
மரணச் சடங்கில் அமர்ந்திருக்கும்
என்னைப் போல்
மெளனமாக இருக்கிறது சரி.
உள்ளே
அவ்வளவு கனமாக இருக்கிறது.
மலர்
ஏன் மெளனமாக
இருக்கிறது. உள்ளே
அவ்வளவு
கனமாக இருக்கிறது போலும்.


மேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..

..எழுதிக்கொண்டிருக்கும் எனது
வரிகளுக்கிடையே
மாண்டுபோன அத்தனை எழுத்துக்களும்
தனக்கான இடங்களில் தோன்றிக்கொள்ள

நான் இப்போது
வெற்றுக் கட்டங்களை நிரப்புபவனாகிறேன்.
....
....

எனது தாளில் இப்போது
இங்கொன்றும் அங்கொன்றுமாகச்
சில
எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

அவற்றைக் கூட்டி
ஒரு சில வாக்கியங்களை அமைக்கும்
சாத்தியம் மட்டுமே
கைக்கொண்டவன்
என்னத்தைக் கூறிவிட முடியும்
உங்களிடம்?


ன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:

..நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின்
நிர்மூலங்கள்
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்
இலவ மனம்.
சுற்றத்தாரைப் பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது
ஒற்றைப் பனை..


காலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.

எதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.

சிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:

...ஒரு வாழ்வைப்போலவே
ஒரு பறவையையும்
எதிர்கொள்ளவோ
வரவேற்கவோ
விசாரித்து விருந்தோம்பிக் கொண்டாடவோ
நமக்குத் தெரிவதேயில்லை...

வெறும் நிழலாய்க்
கடந்து சென்றுவிடுகிறது அது

பெயரில்லை
ஊரில்லை
அதற்கோர் கூடுமில்லை.


நேசமித்திரனின் ‘மற்றும்-ஃ’ :

சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...

பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள்
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்...


ம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..

.. ஆரத் தழுவமுடியாத
பெரும் மழையை
அள்ளிக் கொண்டோடுவது எப்படி
என் சிற்றோடையே

அண்ணாந்து வியக்கும்
பெரிய வெளியைப்
பறந்து தீர்ப்பது எப்படி
என் சிறிய பறவையே..


பட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.

ரு இலை அசைவதை
மரத்தைக் கடப்பவர்கள் யாரும்
தலை உயர்த்திப் பார்ப்பது இல்லை.


அற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு!...’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.

...அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்.

ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை... ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”

உண்மைதான், இல்லையா? ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து...

...அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”

அருமை!

மிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்தர இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பலாம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்குச் சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com

ஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
***

முதல் இதழ் கிடைக்குமிடங்கள்:
New BookLands, T.nagar,chennai 17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)
Discovery book palace,K.K.Nagar,Chennai. (Contact Vediappan- 9940446650)

விலை: ரூ.20

31 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில், நன்றி திண்ணை!

புதன், 27 ஜூலை, 2011

செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ - ஒரு பார்வை - திண்ணையில்..


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”. தலைப்பே சற்று அதிர்வைத் தருகிறது இல்லையா? ஞாபகம் அற்றுப் போவது எவருக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது. மூப்பினால் ஆகலாம். ஏதேனும் அழுத்தத்தால் ஆகலாம். பிணியினால் நேரலாம். எப்படியேனும் நாம் வாழ்ந்த வாழ்வு, சந்தித்த மனிதர்கள், நித்தம் கடந்த நிமிடங்கள் என எல்லாமே முற்றிலுமாய் அற்றுப் போகும் ஒரு நாள் வந்தே தீரும். அது எப்படி அமையும்? சர்வ சாதாரணமாகச் சொல்லியதாலேயே தலைப்புக் கவிதை கனம் கூடிப் போய். வாழ்வோடு, சமகால நிகழ்வுகளையும் பதிய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்த அற்புதமான இத்தலைப்பை, நியாயப் படுத்தியிருக்கின்றன தொகுப்பின் 52 கவிதைகளும்.


எழுத்து என்பதே அதுதானே. சிலர் கதைகளாக, கட்டுரைகளாக தமது அடையாளங்களை, தாம் பார்த்த சமூகத்தின் போக்குகளை, எதிர்கொண்ட மானுடர் ஏற்படுத்திய உணர்வுகளை ஆவணப்படுத்திச் செல்லுகிறார்கள். இங்கு செல்வராஜ் ஜெகதீசனுக்கு அது கவிதைகளில் கைகூடி வந்திருக்கிறது வெகு சுலபமாக.


செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் 2008-ல் திண்ணை இணைய தளத்தில் எனக்கு அறிமுகமாயின. தொடர்ந்து நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களிலும் கல்கி, யுகமாயினி, அகநாழிகை, நவீன விருட்சம் போன்ற பல பத்திரிகைகளிலும் பரவலாக எழுதி வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர் அபுதாபியில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.


2008, 2009 என அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அந்தரங்கம்’,‘இன்ன பிறவும்’ என முதலிரண்டு தொகுப்புகளை வெளியிட்டுக் கவிஞரை சிறப்பித்திருக்கிறது அகரம் பதிப்பகம். இது மூன்றாவது. அகநாழிகை வெளியீடு. முன்னுரை மொழிந்திருப்பவர் கவிஞர் கல்யாண்ஜி என்பதுவே போதும் கவிதைகளுக்குக் கட்டியங் கூற.


தொகுப்பிலுள்ள பல கவிதைகள் நான் ஏற்கனவே இணைய இதழ்களிலும், அவரது வலைப்பக்கத்திலும் வாசித்திருந்தாலும் ஒருசேர வாசிக்கையில் அன்றாடங்களைப் பற்றியதான அவரது அவதானிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மறுமுறை” கவிதையில்,

‘நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.



நடைபாதை சித்திரம்” ஒன்றை நம்முள் விரிய வைத்துத் தன் வேதனையைப் பகிருகிறார். ஒரு சாண் வயிற்றுக்காக ஓயாமல் உழைக்கும் கடைநிலை ஊழியரின் வாழ்க்கைப் போராட்டத்தை, ஓடிக்குறைக்க இயலும் தன் வளர்ந்த வயிற்றுடன் ஒப்பிட்டு சமூக இடைவெளியைக் காட்டுகிறார் “வயிறு” கவிதையில். உடல் உழைப்புக்கு உரிய நியாயம் கிடைக்காத உலகமல்லவா இது? எதிர் கேள்வி கேட்காத “கிடை ஆடுகள்” மானுடருக்கு எத்தனை ருசியானவை என மனதை உதற வைக்கிறார். “விளம்பரங்களில்” வகுபட்டுப் பின்னமாகிக் கொண்டிருக்கும் பொழுதுகளைச் சாடுகிறார். “முன் முடிவுகளற்று இருப்பது” குறித்து முழுமூச்சாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.


குழந்தைகளைக் கொண்டாடுகிறார் சில கவிதைகளில். “பெரிய ரப்பர்” ரசிக்க வைக்கிறது. “நண்பர்கள் வட்டம்” கேட்கிற கேள்வி சுய பரிசோதனைக்கு உதவுகிறது. புலால் கடையிலிருந்து “பின் தொடரும் நிழல்” வன் கொடுமையை வாழ்வில் இயல்பானதாக எடுத்துக் கொண்டு விட்ட மனிதரைச் சாடுகிறது.


சிறுகவிதைகளில் ஒன்று,

பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.


‘பறத்தல்’தனை வாழ்தல் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகின்றது எனக்கு. இவர் போல வாழ்வாதாரத்துக்காக ஊரையும் உறவுகளையும் விட்டுப் பிரிந்தவர் தனிமையில் உணரும் வெறுமையை ஆதங்கத்துடன் பேசுவதாகப் படுகிறது. அப்படித் தோன்றக் காரணிகளாக பிரிவின் துயரைப் பேசுகின்றன “ரயில் கவிதைகள்.” தவிரவும் “விமான நிலைய வரவேற்பொன்றில்” ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்ப்பட்டவனிடம் தனையே பொருத்திப் பார்க்கிறாறோ கவிஞர்? அவனை நோக்கித் தவழவிட்டப் புன்னகையைப் பற்றி,

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு’
.


இதுவும் கடந்து போகும்” துவண்டு நிற்போருக்கும், துரோகத்தை பார்த்தோருக்கும், துயரில் தத்தளிப்போருக்கும் உலகெங்கும் பரவலாக வழங்கப்படும் ஆறுதல் மொழி. ஆனால்..,

இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை


என்பது அனுபவித்தவருக்கே புரியுமென்பதாக அமைந்து போன பேருண்மை.


தையும்” எனும் இரண்டாவது கவிதையில்..,

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்களேன்
ஏனைய பிற யாவற்றையும் போல


என கேட்டிருப்பது அவசியமில்லாத தவிப்பாக..! ஏனெனில் தொகுப்பை முடிக்கும் போது நன்றாக உணர முடிகின்றது, கால் நனைக்கும் ஓயாத கடலலைகள் பாதங்களுக்கடியிலிருக்கும் மணலோடு நமையும் இழுப்பது போல், தீராத வாழ்வலைகளால் நமை உள்வாங்கும் கவிதைகளை. ஆயினும் அத்யாவசியமானதாகிறது இக்கவிதை,

இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்


எனும் முந்தைய தன்னடக்க வரிகளால். அவையே ஆழ்கடலினின்று ஆகச் சிறந்த ஒரு நன்முத்தைக் கரை ஒதுக்கிச் சென்று விட்டுள்ளன இத்தொகுப்பாக. பத்திரமாகக் கொண்டு சேர்ப்பித்தச் சிப்பியாக அகநாழிகை பதிப்பகம். கவிஞருக்கும் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
***

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.50
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
புத்தகத்துக்கு அணுகவும் : பொன்.வாசுதேவன் (அகநாழிகை) - 999 454 1010
இணையத்தில் வாங்கிட: [https://www.nhm.in/shop/100-00-0000-081-8.html]
*** ***

24 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தாய் மனசு - திண்ணையில்..

ம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.”

“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”

கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று.

“என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ காக்ராவாமே. அது வாங்கணுமாம்.”

“அதுங்க அப்படித்தான் கண்ணக் கசக்கும். அடம் பண்ணும். எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டம். குடும்ப நெலம புரிய வேண்டாமா? மொதல்ல எதுக்கு இப்ப புதுத் துணி. பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குதானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ண போட்டுக்கச் சொல்லு.”

“வாஸ்தவந்தாம்மா. ஆனா புதுசு கட்டின மாதிரியாகுமா?”

“ஆமா பிசாத்து நீ முன்னூறு ரூவாய்ல வாங்குற புதுச விட மூவாயிர ரூபா ட்ரெஸ்ஸை போட கசக்குதாமா ஒம் பொண்ணுக்கு?”

‘தினம் தினம் மிஞ்சின பிரியாணியும், கறி சோறும் இங்கே கொட்டிக் கொடுத்தாலும், வீட்டில ஒரு வா கஞ்சி வச்சுச் சூடா உறிஞ்சுக் குடிக்கிறதுதாம்மா தேவாமிர்தம்’ நினைத்ததைச் சொல்ல முடியாமல் கமலம் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன். பொட்டைப் பசங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்து வைக்காதே. இன்னிக்கு கஷ்டந்தெரியாம அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேட்கிற மாதிரியேதான் கட்டிக்கிட்டுப் போனபிறகும் இருக்கும்ங்க” பின்னாடியே வந்து சமாதானம் பண்ணுகிற மாதிரி சொல்லிச் சென்றாள் கோதை.

ரண்டு நாட்கள் சென்றிருக்கும். துணிகளை ஒவ்வொன்றாக வாஷிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்த கமலம், வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். நேராக மதிய தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த கோதையின் முன் வந்து நோட்டுக்களை நீட்டினாள்.

“சாரோட சட்டைப் பையில இருந்துச்சும்மா. சலவைக்குக் கூடையில போடும் போதே பாத்து போடுங்கம்மா.”

அசடு வழிய நோட்டுக்களை வாங்கிக் கொண்ட கோதை “நல்ல வேளையா பார்த்தே. மிஷினில் போட்டிருந்தியானா ஆயிரம் ரூவாயும் அரோகரான்னு போயிருக்கும்” என நெளிந்தாள்.

அடுத்த ஒரு மணியில் பம்பரமாய் சுழன்று அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு கமலம் கிளம்புகையில் கோதை அழைத்தாள்.

“இந்தா பிடி முன்னூறு ரூவா. அன்னிக்குக் கேட்டியே..”

“பொண்ணுக்கு துணி வாங்கவா? வேண்டாம்மா. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல வேலைக்காரம்மா லீவு போட்டிருச்சு. நாலஞ்சு நாள் அங்கே செய்யறதா ஒத்துட்டிருக்கேன். கணிசமா தருவாங்க. அதுல சமாளிச்சுப்பேன்.”

“அன்னிக்கு எடக்கு முடக்கா ஏதோ சொல்லிட்டேன்னு ராணியம்மாக்குக் கோவமோ?”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனாப் பாருங்க. இந்த வெள்ளி வந்தா பொண்ணுக்கு பன்னெண்டு முடியுது. அறியா வயசு. ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே. அடம் வளரும்னு நீங்க பாக்கறீங்க. அது கண்ணுல தண்ணி வரப் படாதுன்னு இந்த தாய் மனசு பாக்குது. ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே. போகுது விடுங்க. நாலுநாளு கூடுதலா கஷ்டப்பட்டது, எம்புள்ள கண்ணு மலர்ந்து சிரிக்கயில மறஞ்சு போகும். நீங்க சொன்னாப்ல மாசம் பிறந்தா கைக்கு வர கொஞ்சங் காசாவது உங்க பக்கம் நிக்கட்டும். வரேம்மா.”

‘கடனா இல்லே. அன்பளிப்பாதான் கொடுக்க வந்தேன்’ சொல்லும் திராணி அற்று நின்றிருந்தாள் கோதை.

***

படம் நன்றி: இணையம்

10 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

புதன், 6 ஜூலை, 2011

கடன் அன்பை வளர்க்கும் - திண்ணையில்..


‘வேறு எந்தக் கடனும்
இப்போது இல்லை.’
புதுக் கடனுக்கு
விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர்
கேட்கும் முன்னரே சொன்னான்.
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை
பெருமையுடன் முன் வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ
பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்..
முன் தினம் கடற்கரையில்
கடலை வாங்க
சில்லறை இல்லாத போது
தன் குட்டிப் பையைக்
குலுக்கித்தேடி

எடுத்துத்தந்த
இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***

படம் நன்றி: இணையம்

3 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

புதன், 16 மார்ச், 2011

தொடர்பு எல்லைக்கு அப்பால்..


முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின்
சில்லிப்பை அனுபவித்திருக்கையில்,
சோளத்தைக் காட்டிச்
சிணுங்கியது மழலை

அதன் விரல்பிடித்து நடந்து
மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து
வாங்கித் திரும்பும் வழியில்

சந்தித்தான் எதிர்பாராமல்
ஆருயிர் நண்பனை
ஆண்டுகள் பலகழிந்து.

பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு

கிடைத்தசில நிமிடத்துள்
நீந்தித் திளைத்தார்கள்
மலரும் நினைவுகளில்

"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக

சுட்ட சோளத்தைச்
சுவைத்துக் கொண்டிருந்த
இவன் குழந்தையின் கன்னந்தட்டி
பெயர் கேட்கத் தோன்றாத அவனும்

பச்சைநிற பலூனைத் தக்கவைக்கக்
காற்றோடு போராடிக் கொண்டிருந்த
அவன் குழந்தையின் கேசங்கலைத்து
'என்ன படிக்கறாய்?'
தெரிந்திட ஆர்வம் காட்டாத இவனும்

மின்னஞ்சல் முகவரி
அலைபேசி எண் பரிமாறி
"தொடர்பில் இருப்போம்" உறுதிகூறி
விடைபெற்று நகர்ந்தார்கள்
காலடியில் மிதிபட்டுக்
கலைந்து கொண்டிருந்த
அழகிய சிறு மணல் வீடுகள்
பற்றியக் கவனமின்றி..
சந்தித்த அவ்வினிய தருணத்தின்
அருமை பற்றிய பிரஞ்ஞையுமின்றி.

வீசிக் கொண்டிருந்தது சில்லிப்பாய்
தொடர்ந்து கடற்காற்று.
***

படம்: இணையத்திலிருந்து...

27 டிசம்பர் 2010 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி திண்ணை!

செவ்வாய், 18 ஜனவரி, 2011

பயங்கள்


பூனைக்குப் பயந்து
புதருக்குள் ஒளிந்த
எலியினைக் கண்டு
இரக்கம் கொண்டு
புசுபுசுப் பூனையாகிட
வழங்கினார் ஆசியை
வனத்திலிருந்த முனி.

புதுப்பிறவி எடுத்ததுமே
நடுநடுங்கத் தொடங்கியது
நாயினிடம் மாட்டினால்
என்னாவேன் என்று.
இதென்ன வம்பாயிற்று
சரி, போனால் போகட்டுமென்று
நாயாகும் வரம் தந்தார்.

வாலினை மடக்கி
நாலுகால் பாய்ச்சலில்
நாக்குத்தள்ள மூச்சிரைக்க
ஓடலாயிற்று-
எங்கோ தொலைவில்
உலாத்தும் புலிகள்
கண்ணில் பட்டாலே.

இனியாவது துணிவாக
வாழட்டும் கம்பீரமாக-
பொங்கும் கருணையுடன்
புலியாக்கிப் பார்த்துப்
புளங்காகிதம் அடைந்தார்.
'வேடன் பார்த்தால்
வேறு வினையே
வேண்டாம்'
வெருண்டு நின்றது
விலங்கு இப்போது.

‘புலியாகும் புண்ணியம்
கிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!’
வரங்களைத் திரும்ப
வாங்கிக் கொண்டு
தன் தவத்திலே
மூழ்கிப் போனார் முனி.

*** *** ***

படம்: இணையத்திலிருந்து...

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..


ழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாயமுருகன். வலித்தாலும் உண்மை ஒன்றே அழகென வாழ்வின் நிதர்சனங்களைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க, துறுதுறுப்பான ஒரு இளைஞன் சொல்லச் சொல்ல சுற்றியிருக்கும் அத்தனை சக பயணிகளும் சாமான்ய மனிதர்களும் கவனம் பிசகாமல் கேட்பது போன்றதான உணர்வைத் தருகிறது கோவில் மிருகம் கவிதைத் தொகுப்பு.

இவரது கவிதை, கட்டுரைகளை இணைய இதழ்களில் அவ்வப்போது வாசித்ததுண்டு. ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கையில் கிடைத்த அனுபவம் அலாதியானது. பொதுவாகவே எனக்கு சமூகக் கவிதைகள் மீதும், எளிய, வார்த்தை ஜோடனைகள் அற்ற, வாசித்ததும் மனதில் ஒட்டிக் கொள்கிற கவிதைகள் மீதும் அலாதி நேசம் உண்டு. இவரது கவிதைகளில் என் தேடலின் அடையாளங்களைக் காண முடிகிறது.

சந்தித்த மனிதர்கள், தன்னைக் கடந்து செல்லும் சம்பவங்கள், ஏன் பயணித்த சாலைகளும் இவரது கவிப் பொருளாய் விரிந்துள்ளன.

நகர வாழ்வின் நாகரீகங்களில் விரவி நிற்கும் பாசாங்குகளை பாசாங்கற்ற மொழியிலே பகிர்ந்து கொண்டிருக்கிறார். 58 கவிதைகளிலும் அவரது கூர்ந்த அவதானிப்பு புலனாகி பிரமிக்க வைக்கிறது.

தொலைந்து வரும் ஜீவகாருண்யமே ‘கோவில் மிருகம்’ தலைப்புக் கவிதை. தொடர்ந்து ‘சிங்கம்’, ’உயிர்ப்பு’ ஆகியன. கொன்று விடு கோழிகளை என இவர் விடுக்கும் ‘வேண்டுகோள்’தனில் கொப்பளிக்கிறது கருணை.‘ஊதியம்’ கவிதையில்,
‘புலி வளையம் தாண்டுகிறது
கிளி சீட்டு எடுக்கிறது
குரங்கு கர்ணம் போடுகிறது
கரடி தாயத்து விற்கிறது
யானை காசு கேட்கிறது
மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்.’

பல கவிதைகள் குறியீடுகளாய் அமைந்து வாழ்க்கை மீதான கேள்விகளை சந்தேகங்களை உள்ளடக்கியதாயும் உள்ளன.

‘நான்கும் சுவர்களும்
பெல்ஜியம் கண்ணாடி

என ஆரம்பமாகி தொட்டியின் வசதிகளை சிலாகிக்கும் ‘மீன் தொட்டிகள்’ கவிதையில்,
‘மீன்கள் வளர்க்க
உகந்த தொட்டி என்றான்

எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத்தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது’.


நேயம் அற்றிருப்பதையும் நியாயப்படுத்திக் கொள்கிற மனித மனங்களை நகையாடும் ‘சற்றுமுன் வந்த மின்னஞ்சல்’ ‘இன்று முதல்’ ஆகியவை வாசிப்பவர் மனங்களைக் குறுகுறுக்க வைக்கின்றன:
‘வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று
ஒலித்தது
வேணுகோபால் இறந்துவிட்டான்
உடனே கிளம்பி வா

உண்மையில் வேணுகோபால்
என்று எனக்கு யாரும் இல்லை
இன்று முதல்
அந்தக் கவலையும் தீர்ந்தது’


வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கி வரும் மெகாத் தொடர்களைச் சாடும் ‘தொடரும்’ கவிதையில்,
‘இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்’.

வாழ்வே போலியாகிப் போனதை நையாண்டி செய்கின்றன ‘திருமணமொன்றில்’, ‘பணமா பாசமா’.

உலகம் இப்படியானது இல்லையென உங்களால் சொல்ல முடியுமா? ‘ஒரு விசாரிப்பு’:
'நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்

எப்படி இருக்கிறாய்
எப்படிப் போகிறது கேட்டான்

அப்படியேதான் இருக்கின்றேன்
அப்படியேதான் போகிறதென்றேன்

சுவாரஸ்யமற்றவனாய்
துண்டித்தான் தொடர்பை

அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்.'


தொலைக்காட்சி தொகுப்பாளினியின் ‘நீங்கள் கேட்டவை’:
‘கணவருக்கும் மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடிக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.’

இவரது நெற்றியடிக் கவிதை பாணியே ‘புரியாமை’யாக,
'இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்

புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?'


‘தொலைந்து போனவைகள்’தனில் பழைய நண்பனும் சேருகின்றான்:
'அவன்
புதிதாய் சேர்ந்த வேலை
புதிதாய் வாங்கிய கார்
புதிய மாடல் மொபைல்
புதியாய் கட்டும் வீடு
சமீபத்தில் சென்று வந்த
நாட்டைப் பற்றிய புதிய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
புதிய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்.'

மின்சார ரயிலில் பாடிப் பிழைக்கும் பார்வையற்ற சிறுமி ‘பூங்குழலி’யில் பாடல் காதில் ஒலிப்பது போன்றதானதொரு பிரம்மை.

பேசவிட்டால் முழுத் தொகுதியையும் உங்கள் முன் வைத்துவிடும் அபாயம் இருப்பதால் ‘குடைக்காம்பு’,. ‘தொலைந்த பறவை’ ‘சாலைகள்’, 'சந்திப்புகள்’,’குரல்கள்’, ‘அவசர சிகிச்சை’ , ‘விடுமுறை நாள்’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

கவிதையா, அது என் சுவாரஸ்யத்துக்கு உட்பட்டதல்ல[not my cup of tea] எனக் கடக்கக் கூடியவர்களையும் ஈர்க்கும் வகையில், எவரும் நெருக்கமாக உணரும் வகையில், மறக்க முடியாத கவிதைகளைத் தாங்கி 'கோவில் மிருகம்'. எடுத்து ருசித்தால் உணர்வீர்கள் தேநீரின் கசப்பாய் உள் இறங்கும் உண்மையின் ஸ்வரூபத்தை, எஞ்சி நிற்கும் தித்திப்பாய் நம்முள் அது ஏற்படுத்தும் தீராத தாக்கத்தை.

முப்பத்து மூன்று வயதுக் கவிஞரின் முதல் தொகுப்பு. வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. வாழ்த்துக்கள் விநாயக முருகன்!
***
கோவில் மிருகம்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.40
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
கிடைக்குமிடங்கள்: நியூ புக்லேண்ட்/எனி இந்தியன், தி. நகர், சென்னை

இணையத்தில் பெற:
  1. http://www.udumalai.com
  2. http://ezeebookshop.com
  3. http://discoverybookpalace.com
சென்னை, அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே ‘செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி’ வளாகத்தில் 17 ஜனவரி 2011 வரை நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகப் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடாகியிருக்கும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டால் அரங்கு எண்:274-லிலும் தற்சமயம் கிடைத்து வருகின்றன.
*** *** ***

நன்றி திண்ணை!










புதன், 22 டிசம்பர், 2010

உன்னோடு நீ..


பெருங்கிளையின் சிறுமுனையில்
வீற்றிருக்கிறது தேன்சிட்டு
உற்சாகமாய்

அவ்வப்போது
வண்ண மலர்களுக்குத் தாவி
மதுவருந்தி ஊஞ்சலாடிக் கரணமடித்து
மீண்டும் சிறுமுனை திரும்பி
கூவிக் கொண்டிருக்கிறது
கொஞ்சலாய்

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்

'பார்ப்பவர் பரிகசிப்பார்
பார்த்து பெரியவரே'
ஏளனம் செய்தவனை
இரக்கத்துடன் ஏறிட்டார்

“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

என்னை நீயும் உன்னை நானும்
பார்வையால்.. சொல்லால்.. கூட
தாக்காது இருக்க”

கசிந்து வழிந்தது
பிறப்பின் அர்த்தம்
பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்

அண்டம் நிறைத்தது
வாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்.

சிறகுகள் விரித்து 
வானில் பறக்கிறது தேன்சிட்டு 
உல்லாசமாய்.

அழைத்த அலைபேசியை
அவசரமாய் அணைத்து விட்டு
சிலிர்த்து விரிக்கிறான் சிறகை

முதன்முறையாய்
தன்னைத் தான் சந்திக்க..
தன்னோடு தான் இருக்க..
***


12 டிசம்பர் 2010, திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

படைப்பாளி


தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும்
பனித்துளியைப் பார்த்து வரும்
மேனிச் சிலிர்ப்பும்
தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும்
சொல்லிப் புரிவதில்லை

கவிதையில் கசியும் காதலும்
கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
தார்மீகக் கோபங்களும் வலியும்

அனுபவித்தவருக்கே வாய்க்கும்
முழுமையாய் ரசிக்க
நெருக்கமாய் உணர
தாக்கத்துடன் உள்வாங்க

வருவதில்லையோ ஆதலினாலேயே
ஆதிபகவன் தானே நேரில்
மெய்ப்பொருள் விளக்க?

அடைந்திடு அனுபவத்தில் என
ஒதுங்கிடத் தெரிந்த
ஒப்பற்ற படைப்பாளி!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

2 அக்டோபர் 2010 திண்ணை இணைய இதழில்.. நன்றி திண்ணை!

செவ்வாய், 23 நவம்பர், 2010

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - என் பார்வையில்..


பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த சமயம். சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதை போட்டிக்கு நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வர, அதில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வான நிலாரசிகனின் ‘அப்பா சொன்ன நரிக்கதை’ வித்தியாசமான களத்தாலும், சொன்ன விதத்தாலும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதுவே நான் வாசித்த அவரது முதல் சிறுகதை. 
ஒரு சில நாட்களில் மேற்சொன்ன பரிசு பெற்றக் கதையினையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது அவரது சிறுகதைகளின் தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”. 

திரிசக்தி பதிப்பகத்தின் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்த தோழி ஷைலஜா என்னுடன் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைக் குறிப்பிடுவது கதாசிரியரை கெளரவப் படுத்துவதாக அமையும் என நம்புகிறேன். அன்று பலரது புத்தகங்களையும் வெளியிட சிறப்பு விருந்தினராக வந்திருந்த அஸிஸ்டென்ட் கமிஷனர் திரு. ரவி அவர்கள் விழா மேடையில் வந்தமர்ந்ததும் “யார் அந்த நிலாரசிகன்? எங்கே அவர்? அவரை நான் பார்க்க வேண்டும். உடனடியாக மேடைக்கு வரவும்” என ஒலிபெருக்கியில் அறிவிக்க சலசலத்ததாம் கூட்டம். கூச்சத்துடன் இவர் மேடைக்குச் செல்ல, தொகுப்பின் தலைப்பாக அமைந்த ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ கதையினை மிகவும் சிலாகித்துக் கூறியதோடு நில்லாது “நிலாரசிகன், இன்று முதல் நான் உங்கள் ரசிகன்!” என்றாராம். இது போன்ற ஆத்மார்த்தமான பாராட்டுக்களே எழுத்தாளனை மேலும் செலுத்துகின்ற உந்து சக்தியாக அமைகின்றன என்றால் அது மிகையாகாது.

த்தகு பாராட்டுக்கான அனைத்துச் சிறப்பையும் கொண்டதுதான் முதல் கதையான 'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்'. மிகையற்ற வார்த்தைகளே இவை என வாசித்தால் நிச்சயம் உணர்வீர்கள்.

சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணப்படுகையில் ரயிலில் வாசிக்கவென ஏதேனும் வாங்கும் எண்ணத்தில் பழைய புத்தகக் கடைக்குச் செல்லும் நாயகன், தற்செயலாக காணக் கிடைத்த கிழிந்த டைரியால் ஈர்க்கப்பட்டு அதைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறான். ஏழு வருடங்களுக்கு முந்தைய டைரியின் ஆறுபக்கங்கள் கிழிந்து ஜனவரி ஏழாம் நாளில் தொடங்கி மார்ச் பனிரெண்டு வரைக்குமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முத்தான கையெழுத்தில் எழுத்துப் பிழைகளுடனான அக்குறிப்புகள், மும்பைக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்ட சிறுமியினுடையதாகும். குறிப்புகளை சிறுமியின் பார்வையிலேயே பதிந்திருப்பது உருக்கத்தை அதிகரிக்கிறது.

ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் சமூகம் அச்சிறுமிக்கு இழைத்த கொடுமையின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் மறுபடி தில்லிக்குப் பயணப்படுகிறான் நாயகன். அங்கிருந்து ஜான்ஸிக்கு செல்லும் ரயிலில் அவனோடு பயணிக்கும் இருபது வயது யுவதி மேல்பர்த்தில் இருந்து தவற விடும் டைரியைத் தவிர்க்க முடியாமல் வாசிக்க நேருகையில் நாயகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி வலி குழப்பம் எல்லாம் நம்மையும் தொத்திக் கொள்கிறது.

சிறப்பான ஆரம்பக் கதையே மற்ற கதைகளை விரைந்து வாசிக்கத் தூண்டுதலாய் அமைய, ஒரே நாளில் கீழே வைக்க மனமின்றி மற்ற கதைகளையும் வாசித்து முடித்தேன். நூலில் இடம்பெற்றிருப்பது மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொன்றுமே மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில்.

எதையும் எதிர்பாராத தூய்மையான தாயன்பைப் பேசுகிறது 'ஆலம்'.

அக்கம் பக்கத்து குழந்தைகளை அவரவர் குழந்தைகளைப் போல நேசிக்கும் எவரும் ஒன்றிடுவர் 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு' சிறுகதையுடன். ஒரு இளைஞனுக்கும் கீழ்வீட்டில் வசிக்கும் சிறுமிக்கும் இடையேயான அன்புப் பிணைப்பு அழகான கவிதையாய். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிரமப்படுகையில் அவனிடம் எழும் தவிப்பு, பிசிறற்றப் பிரியங்களால் நிறைந்தது உலகமென்பதை உணர வைக்கிறது சோகத்தின் நடுவேயும்.

நிஜங்களின் பிம்பமான 'வேலியோர பொம்மை மனம்' பெற்றோரைக் கண்ணெதிரே இலங்கை குண்டு வெடிப்பில் பலிகொடுத்த சிறுமி ஜெயரஞ்சனியை பற்றியது. “அநாதை எனும் வக்கிரச்சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது” என்கிறார் ஆசிரியர். ஆம், காது கேளாத வாய் பேச இயலாத குழந்தை அவள். நேசித்த கரடிப் பொம்மை மட்டுமே அப்போதைய ஒரே ஆறுதலாக இருக்க, முள்வேலி முகாமில் தட்டேந்தி நிற்பவளிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறான் ஒரு ராணுவவீரன். பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்ட அவனை ஒரு காலை நேரத்தில், தன் வெள்ளை மனதால்.. அப்பழுக்கற்ற அன்பால்.. வீழ்த்தியது தெரியாமலே தன்வழி நடப்பதாகக் கதை முடிகிறது.

அவள் கை அணைப்பிலிருந்த பிய்ந்த கரடிப் பொம்மையைப் போலவேக் கிழிந்து போகின்ற வாசிப்பவர் மனம், மீண்டும் தன்னிலைக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது.

வை ஒருபுறமிருக்க..,

நான் மிக மிக ரசித்தவை, ரகளையான விவரணைகளுடன் என்னை மிகக் கவர்ந்தவை 'வால்பாண்டி சரித்திரம்', 'சேமியா ஐஸ்' மற்றும் 'தூவல்':)! பால்ய கால நினைவுகளின், அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்தவை முதலிரண்டும். வயதுக்கே உரித்தான குறும்புகளின் மொத்தக் குத்தகைக்காரனாக வரும் சிறுவன் பால்பாண்டி 'வால்' பாண்டியாக மாறிப் போவதுவரை அவனது பார்வையிலேயே அட்டகாசமாக நகருகின்றது முதல் கதை. ‘போர்டிங் ஸ்கூலில் போட்டால்தான் உருப்படுவான்’ என அவன் அப்பா முடிவெடுத்து அழைத்துச் செல்லுகையில் நமக்கு ஏற்படும் பரிதாபம் அதை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் தவிடுபொடியாகி புன்னகைக்க வைக்கிறது.

இதே வாசிப்பின்பம் 'சேமியா ஐஸ்' கதையின் முடிவிலும். சித்தியின் ப்ளாஸ்டிக் செருப்பைக் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கித் தின்ற குற்றத்துக்காக அடிவாங்கி வேப்பமரத்தோடு அந்த மாற்றாந்தாயால் கட்டிப் போடப்படும் சின்னஞ்சிறுவன், இரவெல்லாம் நின்றபடியே தூங்கிப் பட்டினியாகக் கிடப்பது பார்த்து வருகின்ற பச்சாதாபம் தொலைந்து போய், பொங்குகிறது ஒரு 'குபீர்' சிரிப்பு கதையின் கடைசி வாக்கியத்தால்.

அதுவுமில்லாமல் சின்ன வயது நினைவுகளையும் அழகாய் கிளப்பி விட்டது இந்த 'சேமியா ஐஸ்':)! அப்போது எங்கள் வீட்டில் தெருவில் போகும் ஐஸ் எல்லாம் வாங்க விடமாட்டார்கள். காசும் கிடைக்காது. ‘பழைய டப்பா டபரா இரும்புக்கு சேமியா ஐஸேய்...’ என்று கூவியபடி மணியடித்துச் செல்பவரிடம் ஓவல் டின், போர்ன்விட்டா காலி டப்பாக்களைப் போட்டு ரகசியமாய் சேமியா ஐஸ் வாங்கி வந்து அண்ணன்மார்கள் தர, குதில் போன்றதான துணி போடும் பெட்டிக்குள் ஒளிந்திருந்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டிருக்கிறோம் நானும் தங்கைகளும்:))!.

'தூவல்' கதையில் பேனாவின் மீதான நேசத்தைச் சொன்ன விதமும், முடிவைப் படிக்கும் போது ஆரம்ப வரிகளை மறுபடி வாசிக்க வைத்திருப்பதும் கதாசிரியரின் வெற்றி.

சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.

விலை ரூ:70. பக்கங்கள்: 86. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்; லேன்ட் மார்க்; சிடி சென்டர்/ஸ்பென்ஸர் ப்ளாஸா.

இணையத்தில் வாங்கிட இங்கே [http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79 ] செல்லவும்.

இதுவே நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதையடுத்து இவரது நான்காவது கவிதை தொகுப்பு " வெயில் தின்ற மழை " அடுத்த மாதம் 'உயிர்மை' பதிப்பகத்தின் வாயிலாக வெளிவர உள்ளது. சென்னைவாழ் நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் விழாவுக்குச் சென்று சிறப்பியுங்கள். விழா குறித்த அறிவிப்பு அவரது வலைதளத்தில் விரைவில் வெளியாகும்.

மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் இலக்கியத்துக்கு அர்ப்பணித்து வரும் இந்த முப்பது வயது இளைஞர் நிலாரசிகன் மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துவோம்.

இன்று அவரது பிறந்த தினமும்..

எதேச்சையாக அறிய வந்த போது ஏற்பட்டதொரு இனிய திகைப்பு.

பரிசாக எனது முதல் நூல் விமர்சனம்:)!
*** *** ***



  • ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க சுவடுகள் இதழிலும்..

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒற்றைப் பேனாவின் மை




பேரொளியொன்று
வானில் தோன்றிய வேளையில்
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்
எண்ணற்ற நட்சத்திரங்கள்

ஓரொளியிலிருந்து வந்த 

மூலம் அறியாமல்
யார் உயர்வென்று
எங்கெங்கினும் போர்க்களங்கள்

மோதியது போதுமென்று
வாதிட்டு அலுத்துப் போய்
செய்வதறியாது கோள்கள்

உலுக்கக் காத்திருக்கிறது உலகை
ஒற்றைப் பேனாவின் மை
வடிக்கப் போகும் தீர்ப்புகள்

வெட்கப்பட்டு உதித்து
வேதனையுடன் மறைகின்றார்
நித்தம் சூரியசந்திரர்கள்

ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
அத்தனை கடவுளரும் எனும்
புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!

***

: 24 செப்டம்பர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட இருந்த அயோத்தி தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்கு இடைக்காலத் தடை.


படங்கள்: இணையத்திலிருந்து..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin