பென்ஷனர்ஸ் பாரடைஸ் என்பார்கள் ஒருகாலத்தில், இதமான சீதோஷ்ணத்திற்காகவே பெங்களூரை. மெட்ரோவுக்கு, பாலங்களுக்கு, சாலை விரிவாக்கத்திற்கு என என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேலான மரங்களைப் பலி கொடுத்து வளர்ந்து நிற்கிற ஐடி நகரத்து பென்ஷனர் நண்பர் ஒருவர் ‘இந்தக் கோடைக்கு வேற எங்காவது ஓடிப் போயிரலாம்ன்னு இருக்கேன்’ என்றார் போன வாரம். எல்லோருமே கோடை நெருங்க நெருங்க நடுங்க ஆரம்பிச்சிடுறோம் எப்படி சமாளிக்கறதுன்னு. கூடவே சேர்ந்துக்கிற மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடுன்னு நாடு முழுக்க இருக்கு பிரச்சனை. விடுமுறைன்னு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம்னு இருக்கிற அவங்கள அனல் வெயில் தாக்காமப் பாத்துக்கணும். வீட்டிலேயே பூட்ட முடியாம அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டும் போகணும். ஏராளமான திட்டங்களை இப்பவே போட ஆரம்பிச்சிருப்பீங்க. இந்த சமயத்துக்குச் சரியானத் தலைப்பா எனக்குத் தோணுறது என்னென்னு இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு?
கோடை.
இதுதான் தலைப்பு. (போட்டி அறிவிப்பு
இங்கே.)
வெப்பத்தின் தாக்கத்தை, வேண்டியிருக்கும் குளிர்ச்சியை, உல்லாச விடுமுறையை, இப்படி எந்தப் படமானாலும் அடிப்படையில் கோடை என்பதை உணர்த்துகிற விதமா இருக்கணும். உதாரணத்துக்கு கைவசமிருந்த சில படங்களை மாதிரிக்கு இங்கே தந்திருந்தாலும், நீங்க உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு:)! எலுமிச்சஞ்சாறு, நீர்மோரு, பனையோலை விசிறி, தர்பூசணி, குளுகுளுக் கண்ணாடி, உச்சி வெயிலில் பசங்க ஆடும் கிரிக்கெட் என எவ்வளவோ இருக்குதானே!
#1 தவிக்கிற வாய்களுக்கென..
#2 சூப்பர் ட்ரிங்க்
#3 பெருந்தாகம்