Saturday, March 13, 2010

உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக

நிலாவில் இருக்கிறதாம் நீர்! கண்டுபிடித்த அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு எல்லையே இல்லைதான். செயற்கைகோள்கள், உலகை உள்ளங்கையில் அடக்கிட வலை மற்றும் தொலை அலைபேசிகள், நாளுக்குநாள் அப்டேட் ஆகிக் கொண்டே போகும் எலக்ட்ரானிக் காட்ஜெட்கள், அதிநவீன ஊர்திகள், மருத்துவ முன்னேற்றங்கள் இப்படி எல்லாமே மகத்தான சாதனைகள்தான். ஆனால் இத்தனை பெருமிதத்துக்கும் முதலில் இருக்க வேண்டுமே பூமி?

டைனாசர்களை அனிமேஷன் வித்தைகளாகவே காண வாய்த்திருந்தாலும் அவை வாழ்ந்ததற்கு ஆதாரமாய் இருக்கின்றன எலும்புக்கூடுகள். அசுரபலம் நமக்கென நினைத்து வாழ்ந்த அவையாவும் ஒரு கட்டத்தில் தங்கள் பெரும்பசிக்கு ஏற்ற தீனி கிடைக்காமல்தான் மரித்துப் போயிருந்திருக்கக் கூடும். அப்படித்தான் ஆகி விட்டன இன்று இயற்கையை அழித்தபடி, மிதித்தபடி நான் ஏறி ஏறிச் சென்றடையும் விஞ்ஞான வியப்புகள், பொருளாதார வளர்ச்சிகள்.

அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.

சுத்தமான நீர் வேண்டுமானால் விலை கொடுத்தே வாங்க வேண்டுமென்கிற அவலம் வரும் எனக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னே கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டோம். வந்து விட்டது. மாசடைந்த நீரினால் வாய்க் கொப்பளித்தால் கூட நோய்வர வாய்ப்பிருக்கிறதென கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்? எங்கிருந்து தொடங்கப் போகிறோம்?

தொடங்கலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் வின்சென்ட் அவர்கள் தனது மண், மரம், மழை, மனிதன் வலைப்பூவில்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபத்து இரண்டாம் தேதி உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் என்றும், வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்றும் கூறியுள்ளார்.

அழைப்பினை ஏற்று முத்துலெட்சுமி இட்டிருக்கும் பதிவு இங்கே.

என் பங்குக்கு இந்தப் பதிவு, தண்ணீர் சிக்கனம் குறித்த அனுபவங்களும் புகைப்படங்களுமாக:

குழாயைக் குற்றால அருவியாய்க் கொட்டவிட்டபடி பல்துலக்காதீர்கள். தேவைப்படும் நேரம் மட்டுமே திறவுங்கள்.


ஷவரில்
‘ஊலலல்லா’ என மணிக்கணக்காக உல்லாசக் குளியல் போடாதீர்கள்.

வாஷிங் மெஷினில் முழு லோடு சேர்ந்தால் மட்டுமே போட்டு எடுங்கள். நிறைய தண்ணீர் மிச்சமாகும்.


வாகனங்களைக் குளிர குளிர குளிப்பாட்டினால்தான் பப்பளவெனப் பளபளக்கும் என்பதில்லை. ஹோஸ் பைப் வசதியிருந்தாலும் கூட வாளிநீரில் கழுவும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மற்றவருக்கும் வலியுறுத்துங்கள்.


ஓவர்ஹெட் டாங்குகளை நிரம்பி வழிய விடாதீர்கள். என்வீட்டு பால்கனியிலிருந்து ஜூம் செய்த காட்சியொன்று:

புறாக்கள் குளிக்க இப்படித் தண்ணீரைத் திறந்துவிடுவதால் சிபிச் சக்ரவர்த்திகளாகி விடுவோம் என எண்ணாதீர்கள். அதிலே ரொம்பக் குறிப்பாக இருந்தால் தனியே ஒரு சின்ன டப்பில் நீர் வைத்தாலே போதும். கீழ்வரும் படத்தில் எத்தனை தொட்டிகள் பாருங்கள்!


நாளுக்கு ஏதோவொரு டாங்க் நிரம்பி இப்படிக் கொட்டிக் கொண்டிருப்பதைக் காணநேர்கிறது. உங்கள் வீட்டுத் தொட்டி நிறைவதற்கு எடுக்கும் நேரம் என்ன என்பதைச் சரியாகக் கணக்கிட்டு மோட்டாரைக் குறிப்பிட்ட நேரத்தில் அணைத்து விடப் பழகுங்கள். அல்லது இதற்கென கிடைக்கும் ஆட்டோமேடிக் கண்ட்ரோலரை வாங்கிப் பொறுத்திடுங்கள். [இத்தகவலை பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கும் பதிவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்!]

சிறுதுளி பெருவெள்ளம். தெரிந்துதான் வைத்திருக்கிறது உள்ளம்.ஆனாலும் அசட்டையாகவோ அவசரத்திலோ சரியாகக் குழாயை மூடாமல் விடுபவர் எத்தனை பேர்? ஒருவேளை அது லீக்கேஜ் என உறுதியானால் உடனடியாக ப்ளம்பரை அழைத்து சரிசெய்யுங்கள். ஒரு எலக்ட்ரிகல் பாயிண்டில் சிறுபொறி வந்தால் பதறி எப்படி எமர்ஜென்ஸி என நினைப்பீர்களோ அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுங்கள்.
நான் வசிக்கும் அறுநூறுவீடுகள் கொண்டு பெரிய குடியிருப்பில் 24 மணி நேர தண்ணீர் சப்ளைதான். ஆனால் கோடை காலத்தில் நீரை விலைகொடுத்து வாங்கிதான் சம்புகளை நிரப்புகிறார்கள். அரசாங்கமானாலும் சரி அசோசியேஷன் ஆனாலும் சரி வரிப்பணம் கொடுக்கிறோம், பராமரிப்புப் பணம் கொடுக்கிறோம், தண்ணீரைத் தங்குதடையின்றி தருவது அவர்கள் கடமை நமக்கென்ன ஆயிற்று எனக் கருதாமல், நம் பங்குக்கும் சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தனி வீடுகளில் வசிப்பவர்கள் மழைநீர் சேமிப்புக்கு வழி செய்து கொள்ளுங்கள். மண் தரைகளை கூடுமானவரை சிமிண்ட் தளத்தால் மூடாதீர்கள். நிலத்தடி நீர் வற்றாதிருக்க வழிவகுக்கும். புதிதாக கட்ட ஆரம்பிக்கும் குடியிருப்பெனில் இதை வலியுறுத்திப் பார்க்கலாம் அங்கு வீடு வாங்குபவர்கள்.

புதிதாக எதையும் நான் சொல்லிவிடவில்லைதான். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும் திரும்பத் திரும்ப கண்ணுக்கும் கருத்துக்கும் வருகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனும் எண்ணம் வலுக்கும்தானே?


ண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் தண்ணீராய் இருந்தாலும் கையளவு கூடப் பருகிட உகந்ததாய் இருப்பதில்லை கடல்நீர். எல்லாத் தண்ணீரும் மாசினால் அப்படி தகுதியற்றதாகி, கண்ணீருடன் வருங்கால சந்ததி வருந்தி நிற்க நேரும் அவலம் தவிர்ப்போம்.

சுத்தமான நீரே ஆரோக்கியத்துக்கான அடிநாதம், அண்டத்தின் சுழற்சிக்கான உயிர்நாடி என்பதை உணர்வோம். அனைத்து ஜீவராசிகளும் நலனுடன் வாழ்ந்தால்தானே உலகம் உய்யும்?

ஒவ்வொரு முறை இயற்கை சீறும் போதும் அதை நிந்திப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்ட நாம் சிந்திப்போம். போற்றி, அன்னையவள் தந்த வளங்களைக் காப்போம்.

நதிகளையும் நீர் நிலைகளையும் மாசுப் படுத்துவோர் சிந்திக்க வலைப்பதிவுகள் வாயிலாகக் குரல் எழுப்புவோம். கீழ்வரும் படத்தை தங்கள் வலைப்பக்கங்களில் பதிந்தும் பங்கை ஆற்றிடலாம்!
நன்றி!
***  • இங்கு வலையேற்றிய பிறகு மார்ச் 2010 வெள்ளிநிலா இதழிலும்.

91 comments:

goma said...

ஒரு டாப்பிக் கிடைத்து விட்டால் ராமலஷ்மிக்கு,ஊறவைத்து அலசி துவைத்து பிழிந்து உலர வைப்பதென்றால் தண்ணி பட்ட பாடாயிற்றே......அடுத்தவர்களுக்காக ஒரு சொட்டு கருத்தைக் கூட மீதி வைக்காமல்,.......இது ரொம்ப அநியாயம்...

.நான்இங்கே குடத்தோடு காத்திருக்கிறேன்...

சதங்கா (Sathanga) said...

அருவி மாதிரி மடமட என கொட்டி சிந்திக்க வைத்து விட்டீர்கள் தண்ணீரின் அவசியத்தை.

தமிழ் பிரியன் said...

சேமிதமாகும்\\\

புது வார்த்தை... இப்ப தான் எனக்கு அறிமுகமாகின்றது.

தமிழ் பிரியன் said...

\\\goma said...

ஒரு டாப்பிக் கிடைத்து விட்டால் ராமலஷ்மிக்கு,ஊறவைத்து அலசி துவைத்து பிழிந்து உலர வைப்பதென்றால் தண்ணி பட்ட பாடாயிற்றே......அடுத்தவர்களுக்காக ஒரு சொட்டு கருத்தைக் கூட மீதி வைக்காமல்,.......இது ரொம்ப அநியாயம்...

.நான்இங்கே குடத்தோடு காத்திருக்கிறேன்...\\\

ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

ராமலக்ஷ்மி said...

@ கோமா,

நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் இங்கு முன் வைத்திருக்கும் கருத்துக்கள் நூற்றில் ஒருபங்கு கூட இல்லையே. எல்லோரும் அவரவருக்கு தெரிந்ததைப் பகிர்ந்திடுவோம் வாருங்கள். நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

சதங்கா (Sathanga) said...

//அருவி மாதிரி மடமட என கொட்டி சிந்திக்க வைத்து விட்டீர்கள் தண்ணீரின் அவசியத்தை.//

சிந்திக்க ஆரம்பித்தாலே போதும், செயல்படுத்தத் தொடங்கி விடுவோம். நன்றி சதங்கா!

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்//

சரியாப் போச்சு:)!
-----------------------

***//சேமிதமாகும்\\\

புது வார்த்தை... இப்ப தான் எனக்கு அறிமுகமாகின்றது.//***

ஓ, அது வழக்குத் தமிழ். தவறாகக் கூட இருக்கலாம்:(! திருத்தி விடட்டுமா?

நாடோடி said...

நீர் சேமிப்பின் அவசியத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்.

ராமலக்ஷ்மி said...

@ நாடோடி,

மிக்க நன்றி.

goma said...

எப்பொழுதும் எல்லா கடிதங்களையும் வாசித்த பின் பதில் போடுவீர்கள் இந்த முறைதான் வந்த கடிதங்களுக்கு உடனுக்குடன் மறுமொழி தந்திருக்கிறீர்கள்

I LIKE IT

ராமலக்ஷ்மி said...

@ கோமா,
உடனுக்குடனேயும் தந்துள்ளேன். வழக்கம் என எதுவுமில்லை. கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தே! நன்றி:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உய்ய் உய்ய் விசில்ங்க.. :))

படங்கள் அருமை..

கோமா அம்மா கமெண்ட் கலக்கல்..ரிப்பீட்டேய்.. :)
சதங்கா கமெண்ட்டுக்கும் ஒரு ரிப்பீட்டேய்.. :)

மழை பெஞ்சு ஓஞ்சமாதிரில்ல இருக்கு.. இது புது உவமை .. யாராச்சும் இதுக்கு ரிப்பீட்டேய் போடுங்கப்பா..

ஸ்ரீராம். said...

உண்மை உண்மை என்று அலறுகிறேன்... சில சமயங்களில் சில இடங்களில் தண்ணீர் என்று சொன்னால் போதும்..உபயோகிக்கக் கூட வேண்டாம்!!.அவ்வப்போது எழுதி படித்துக் கொள்ளலாம்.
//"நாளுக்கு ஏதோவொரு டாங்க் நிரம்பி இப்படிக் கொட்டிக் கொண்டிருப்பதைக் காணநேர்கிறது. உங்கள் வீட்டுத் தொட்டி நிறைவதற்கு எடுக்கும் நேரம் என்ன என்பதைச் சரியாகக் கணக்கிட்டு மோட்டாரைக் குறிப்பிட்ட நேரத்தில் அணைத்து விடப் பழகுங்கள்"//

இதற்கு ஒரு Automatic On/Off Controller ஒன்று கிடைக்கிறதே..

படங்கள் அருமை

ராமலக்ஷ்மி said...

@ முத்துலெட்சுமி,

தொடங்கி வைத்த உங்களுக்கு திருப்தி என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி! உற்சாகமாய் எழுப்பிய ‘உய் உய்’க்கும் நன்றிங்க:)!

Chitra said...

ிறுதுளி பெருவெள்ளம். தெரிந்துதான் வைத்திருக்கிறது உள்ளம்.

........சின்ன சின்ன துளியாய் விஷயங்களை சேகரித்து அருமையான பதிவாக தந்து இருக்கிறீர்கள். நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//உண்மை உண்மை என்று அலறுகிறேன்... சில சமயங்களில் சில இடங்களில் தண்ணீர் என்று சொன்னால் போதும்..உபயோகிக்கக் கூட வேண்டாம்!!.அவ்வப்போது எழுதி படித்துக் கொள்ளலாம்.//

ஆமாம்:(!

//இதற்கு ஒரு Automatic On/Off Controller ஒன்று கிடைக்கிறதே..//

தனிவீட்டில் வசிக்காததால் இதுபற்றி எனக்குத் தெரியவில்லை. உங்கள் கருத்தையும் பதிவிலே சேர்த்து விடட்டுமா?

//படங்கள் அருமை//

நன்றி ஸ்ரீராம்!

சந்தனமுல்லை said...

வழக்கம் போல அருமையான கட்டுரை படங்களுடன்...நல்ல டிப்ஸூம் கூட! வாழ்த்துகள் ராமல்ஷ்மி!

goma said...

@ கோமா,
உடனுக்குடனேயும் தந்துள்ளேன். வழக்கம் என எதுவுமில்லை. கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தே! நன்றி:)

இதே போல் என்றைக்கும் நேரம் கிட்ட வாழ்த்துகிறேன்

திருவாரூரிலிருந்து சரவணன் said...

மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கப்படுவது இது வரை எனக்கு தெரியாது. நான் சில காலம் சென்னையில் இருந்த போது காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மட்டுமே தண்ணீர் வரும்.இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் (காலை நாலு மணிக்கு படுத்தாலும் சரி,) ஐந்து மணி ஆனதும் தண்ணீர் நிற்பதற்குள் குளித்து துணி அலசி போட வேண்டும். வீட்டில் என்னுடன் தங்கி இருந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குளிப்பதே அதிகம் என்று நினைப்பார்கள். என்னால் அப்படி இருக்கமுடியாதே.

நான் அங்கே இப்படி அவதிப்பட்டு வந்தால், எங்களிடம் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று குடும்பங்கள் ஒரு குடம் தண்ணி புடிக்க நாலு குடம் நீரை வீணடிப்பார்கள். இதை கண்டிப்பதுதான் எனக்கு வேலை.

எங்கள் பகுதியில் மீண்டும் கட்டி வரும் கோவிலில் பிரசாதத்தை விட கை கழுவ நீரை மிகவும் சிக்கனமாகவே கொடுப்பேன்.அதனாலேயே பலருக்கும் என்னைப் பிடிக்காது.

எங்கள் கல்லூரி ஆண்டு மலருக்காக மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொறியாளரிடம் பேட்டி எடுத்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அதற்கு ஆகும் செலவில் இருந்து தொழில் நுட்பம் வரை எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.விரைவில் அவற்றை மீண்டும் விசாரித்து தொகுத்து வெளியிடுகிறேன்.

யாதவன் said...

Supper message

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நானும் எழுதறேங்க..:)

அம்பிகா said...

இந்த பொறுப்புணர்வும், புரிதலும் தான் மிக அவசியம். நல்ல சீசனல் இடுகை. மிக அவசியமானதும் கூட.

goma said...

வழக்குத் தமிழில் கூட ,நான் சேமிதம் சொன்னதில்லை ,கேட்டதில்லை.

திருத்திவிடுங்கள் முத்துச் சரத்தில் ஒரு முத்துகூட ஒளி மங்கக் கூடாது

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கட்டுரை ராமலட்சுமி மேடம்.

கோமதி அரசு said...

//நம் பங்குக்கும் சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.//

ஆம் ராமலக்ஷ்மி,முதலில் நாம்
கடை பிடிப்போம். நீங்கள் சொன்ன மாதிரி கடை பிடித்து வருகிறேன்.

//சிறு துளி பெருவெள்ளம் தெரிந்து வைத்திருக்கிறது உள்ளம்//

தெரிந்த உள்ளம் சொல்கிறது உலகம் உய்ய வேண்டும் என்று.

அருமையான பதிவு ,அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.

வின்சென்ட். said...

“ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.”

“எல்லாத் தண்ணீரும் மாசினால் அப்படி தகுதியற்றதாகி, கண்ணீருடன் வருங்கால சந்ததி வருந்தி நிற்க நேரும் அவலம் தவிர்ப்போம்”.

கருத்துக்கள் யதார்த்தமானவை.

புகை படங்கள் + வாசகங்கள் அருமையிலும் அருமை.

அமைதிச்சாரல் said...

//தண்ணீரைத் தங்குதடையின்றி தருவது அவர்கள் கடமை நமக்கென்ன ஆயிற்று எனக் கருதாமல், நம் பங்குக்கும் சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.//

உண்மைதான்.. அபார்ட்மெண்ட்களில் தெரிந்தே தண்ணீரை வீணடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் மட்டும் சிக்கனமாக இருந்தால் போதுமா என்ற மனோபாவம் அவர்களுக்கு.

நல்ல புரிதலுள்ள இடுகை.

"உழவன்" "Uzhavan" said...

//ஒரு எலக்ட்ரிகல் பாயிண்டில் சிறுபொறி வந்தால் பதறி எப்படி எமர்ஜென்ஸி என நினைப்பீர்களோ அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுங்கள்//
 
இந்த ஒரு வரி போதும் நாம் தண்ணீரின் மகிமையை உணர. அற்புதமான இடுகை..

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல இடுகை. மழை நீர் சேகரிப்பினால் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. மடிப்பாக்கத்தில் இருக்கும் எங்க வீட்டு கிணற்று நீர்.. அதன் கடினத்தன்மை குறைந்தது.

டேங்கில் சேமித்து வைத்ததால், காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய அவசியமில்லாமல் போயிடுச்சு. என்ன கொதிக்க வச்சு சாப்பிடுவோம்.

மழை நீர் சேகரிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று.

இப்போது இருக்கும் நீர் நிலைகளை பாதுக்கப் படவேண்டும். அட்லீஸ்ட் அதில் குப்பைகளை கொட்டாமல், மாசு அடையாமல் பாதுகாத்தாலே, நாம் வருங்கால சந்ததியருக்கு செய்யும் மிகப் பெரும் உதவி.

அமுதா said...

சமீபத்தில் பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது அங்கு ஒரு சின்ன விழிப்புணர்வு விளம்பரம் காண நேர்ந்தது. மனம் நெகிழ்ந்துவிட்டது. குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து வாளி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஒரு சின்ன குழந்தை வேகமாக ஓடி வந்து குழாயை இறுக்கி மூடுவாள். “உங்களுக்கான தேவை நிறைந்துவிட்டது...எங்களுக்கு?” என்ற கேள்வியுடன் முடிந்த விளம்பரம் மனதை மிகவும் வருத்தியது. எந்த விஷயத்தில் நாம் அடுத்த தலைமுறைக்கு நல்லதை விட்டு செல்கிறோம் என்ற யோசனை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. தண்ணீர் தினம் இந்த கேள்வியை நம்முன் வைக்கின்றது.

கண்ணகி said...

நல்ல இடுகை...ஆனால் அந்தப்புறாக்கள் குளிப்பது கண்கொள்ளாக்காட்சி....

சேட்டைக்காரன் said...

சீரிய சிந்தனை! உங்கள் அக்கறைக்கும், இந்த அருமையான பதிவுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியில் நானும் ஒரு துளியாவேன் என்ற உறுதியும் அனைவருக்கும் அளிக்கிறேன். கண்களைத் திறந்தமைக்கு நன்றிகள்!!

சுசி said...

ரொம்ப நல்ல பதிவு அக்கா..

இங்க இந்த வருஷம் ஸ்னோ ரெக்கார்ட் வச்சிட்டதால எங்கள தண்ணீர் பாவனைய குறைச்சுக்க சொல்லி கேட்டிருக்காங்க..

கண்டிப்பா எல்லாரும் //உலகம் உய்ய..// கவனம் எடுத்துத்தான் ஆகணும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்ல பதிவு.உங்க புகைப்படக்கருவி
நல்ல கருவியா? நீங்க அருமையான போட்டோ கிராபரா? படங்கள் சூப்பர்.
துப்பத்தவள உப்புல பாரு,சீரத்தவள நீர்ல பாருன்னு ஒரு சொலவடையும்,தண்ணிய அதிகமா சிந்துனா காசு அதிகம் போகும்னு நம்பிக்கையும் உண்டு ஊர்ப்பக்கத்துல.தண்ணீர் சிக்கனம் முக்கியமான ஒன்று.

வருண் said...

தண்ணீருக்கு ஒரு தினமா? இப்போதுதான் அறிந்துகொண்டேன் :)

நம்ம மக்கள் "எத்தில் ஆல்கஹாலை"த்தான் தண்ணினு தவறாக சொல்றாங்க, பாவம். அவர்களுக்கு இந்த தண்ணீரின் அருமை தெரியாமல் அறியாமையில் வாழ்வதால்தான் இப்படியெல்லாம் ஒரு ஆர்கானிக் மூலக்கூறுக்கும், இன்னார்கானிச் மூலக்கூறுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

நெறைய நாடுகளில் பயன்படுத்திய தண்ணீரை "ட்ரீட்" செய்து ரீ-சைக்கிள் செய்கிறார்கள். அதனாலதான் அவர்களால் இந்தப் பிரச்சினையை ஈஸியாக தீர்க்க முடிந்தது.

நம்ம நாட்டில் இதையெல்லாம் வெற்றிகரமாக இன்னும் செய்ய முயலவில்லை(முடியவில்லை?) னு நெனைக்கிறேன்.

நம்மைப்பத்தி குறைவாகச் சொன்னால் நமக்கு மூக்கின்மேலே கோபம் வருது. ஸ்லம் டாக் மில்லியனரைப் பார்த்து பொங்கி எழுறோம். வெள்ளைக்காரன் நம்மை மட்டமா நெனைக்கிறான் என்று ரொம்பவே கோபம் வருது. ஆனால் நம்மிடம் பொது நோக்கு, நாட்டு நன்மை என்கிற அக்கறைகள் மிகவும் கம்மியாத்தான் இருக்கு. We are too busy in some worthless issues which are not going to help us in any way! :(

உங்களைப்போல் எல்லோரும் சிந்திக்கனும், நமக்கு பொதுநோக்கு, நம்மிடம் உள்ள குறைகளை அக்கஸப்ட் பண்ணி, சரி செய்யனும்ங்கிற திறந்த மனது வரனும். தண்ணீரை ட்ரீட் செய்து ரி-சைக்கிள் செய்வது போன்ற நல்ல விசயங்களை எல்லோரும் சிந்திக்கனும்நம்ம நாட்டில் செயல்படுத்தனும். Of course we should be careful when consuming water as well.

Thanks for addressing this issue, Ramalakshmi!

BTW, ஆமாங்க, யாரோ மேலே சொன்னதுபோல அந்த புறாக்கள் நீராடுவது கண்கொள்ளா காட்சிதான் :)

விஜய் said...

water is the elixir

அமிர்தத்தை வீணாக்கலாமா ?

அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டிய தருணம்

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

பிரியமுடன்...வசந்த் said...

ஆமா மேடம் இங்க கத்தார்ல ஒருலிட்டர் டீசல் விட ஒரு லிட்டர் தண்ணீரோட விலை ஜாஸ்தி...

அருமையா படங்களோட விளக்கியிருக்கீங்க... கருத்துக்கள அனைவரும் பின் பற்றினால் ஓரளவேனும் தண்ணீர் பற்றாக்குறை தீரும்...

முகுந்த் அம்மா said...

தண்ணீரின் அவசியத்தை விளக்கும் ரொம்ப நல்ல பதிவுங்க. தங்கள் படங்களும் கருத்துகளும் அருமை. தங்கள் சொன்னது போல world water day படத்தை என் வலைபூவிலும் இணைத்துள்ளேன்.

SanjaiGandhi™ said...

அவசியமான பதிவு.. ரொம்ப சிரத்தையான பதிவுக்கு பாராட்டுகள் அக்கா..

கிரி said...

தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி இதைப்போல இடுகை வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் பலரும் படித்து விட்டு இதோடு மறந்து விடுவார்கள் என்பது மனதை வருத்துகிறது.

நீங்கள் கூறியுள்ள தகவல்கள் அனைவரும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும், தண்ணீரின் முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை, சிரமப்பட்டாலும் கூட.

தமிழகத்தில் ஒரு முறை (ஆண்டு மறந்து விட்டது, ஆனால் 2000 ம் ஆண்டுக்கு மேல்) கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்தது, தொடர்ந்து மூன்று வருடங்கள் சரியாக மழை பெய்யவில்லை. அப்போது நான் சென்னையில் இருந்தேன். அப்போது தண்ணீருக்கு சிரமப்பட்டதை போல வாழ்க்கையில் நான் எப்போதும் அனுபவித்ததில்லை. அதில் இருந்து தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி விடுகிறேன்.

தண்ணீரை யார் வீண் செய்வதை பார்த்தாலும் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. பொதுமக்களை விடுங்க..அரசாங்கமே பொறுப்பில்லாமல் இருப்பதை நினைத்தால் வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. அரசியல்வாதிகளுக்கு பணம் இருப்பதால் அவர்களுக்கு தண்ணீர் பிரச்சனை என்ற அவசியம் எக்காலத்திலும் புரிய போவதில்லை..

பணம் இருந்தும் குண்டி கழுவ தண்ணீர் இல்லாத போது தான் எவரும் தண்ணீரின் அவசியத்தை உணருவார்கள், அதுவும் மறுபடியும் தண்ணீர் கிடைத்து விட்டால் வழக்கம்போல இப்படித்தான்..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் .. பழமொழி இதற்கும் பொருந்தும் மக்களாய் பார்த்து உணராவிட்டால் இந்த தண்ணீர் பிரச்னைக்கு ஒரு முடிவு இல்லை.

இந்த சிறந்த இடுகையை அக்கறையுடன் வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

நானானி said...

//அடுத்தவர்களுக்காக ஒரு சொட்டு கருத்தைக் கூட மீதி வைக்காமல்,.......இது ரொம்ப அநியாயம்//

repeattttttttttttatiiii!!!
ATHEY..ATHEYY!

LET ME FINDOUT SOME OTHER POINTS.

கண்மணி/kanmani said...

உண்மைதான் இராமலஷ்மி அங்கங்கே தண்ணீர்ப் பந்தல் வைத்த காலம் போய் கிடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலம்.இன்னமும் நிலைமை மோசமாகலாம்.

ஓவர்ஹெட் டேங்க் வழிவதைத் தடுக்க ஆட்டோமேட்டிக் மிஷின் இருக்கு.எங்க வீட்டிலும் இருக்கு.விலை 3000 ரூபாய் வரும்.
டேங்கில் அளவு குறைந்ததும் மோட்டர் ஸ்விட்ச் தானாகவே ஓடத் தொடங்கும்.டேங்க் நிரம்பியதும் தானாகவே நின்றும் விடும்.
என் கத்தலையும் மீறி [இதுக்கெல்லாமா காசு போட்டு வாங்கனும்]ரங்கமணி செய்த உத்தி.
எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கட்டுரை

அன்புடன் அருணா said...

பெர்ர்ர்ர்ர்ரிய பூங்கொத்து!

ஹுஸைனம்மா said...

நியாயமான ஆதங்கங்கள் அக்கா! ரன்னிங் வாட்டர் எனப்படும் 24-மணிநேர தண்ணீர் சப்ளை கிடைக்க ஆரம்பித்த பிறகுதான் தண்ணீரை வீணாக்கும் செயல்கள் அதிகம் ஆரம்பித்திருக்கின்றன.

சாய்ராம் கோபாலன் said...

Good one. I just keep telling my kids that water will be costlier than gold in couple of years ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லதொரு பதிவு ராமலக்ஷ்மி.! வாழ்த்துகள்.

இது பற்றி சென்ற ஆண்டில் நான் எழுதிய ஒரு பதிவைக்காணலாம்..

http://www.aathi-thamira.com/2009/03/blog-post_25.html

ராமலக்ஷ்மி said...

Chitra said...
//சின்ன சின்ன துளியாய் விஷயங்களை சேகரித்து அருமையான பதிவாக தந்து இருக்கிறீர்கள். நன்றி.//

நன்றி சித்ரா!

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...

//வழக்கம் போல அருமையான கட்டுரை படங்களுடன்...நல்ல டிப்ஸூம் கூட! வாழ்த்துகள் ராமல்ஷ்மி!//

நன்றி சந்தனமுல்லை!

ராமலக்ஷ்மி said...

@ கோமா,
வாழ்த்துக்களுக்கும் திருத்தத்துக்கும் நன்றி. தமிழ் பிரியனுக்கு பதில் தந்த கையோடு திருத்தியும் விட்டேன்!

ராமலக்ஷ்மி said...

திருவாரூரிலிருந்து சரவணன் said...

//மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கப்படுவது இது வரை எனக்கு தெரியாது.//

நானும் இப்போதுதான் அறிந்தேன்.

//எங்கள் பகுதியில் மீண்டும் கட்டி வரும் கோவிலில் பிரசாதத்தை விட கை கழுவ நீரை மிகவும் சிக்கனமாகவே கொடுப்பேன்.அதனாலேயே பலருக்கும் என்னைப் பிடிக்காது.//

அதுபற்றிக் கவலைகொள்ளாமல் பணியினைத் தொடருங்கள்.

//விரைவில் அவற்றை மீண்டும் விசாரித்து தொகுத்து வெளியிடுகிறேன்.//

எதைப் பற்றி எழுதினாலும் ஆழம் வரை சென்று தகவல் சேகரிக்கும் பழக்கமுள்ள உங்களால் மிக நல்ல பதிவினைத் தர முடியும். காத்திருக்கிறோம்.

விரிவான அனுபவப் பகிர்வுக்கும் நன்றி சரவணன்!

ராமலக்ஷ்மி said...

யாதவன் said...

//Supper message//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாதவன்.

ராமலக்ஷ்மி said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//நானும் எழுதறேங்க..:)//

கண்டிப்பா எழுதுங்க:). காத்திருக்கிறோம் வாசிக்க! நன்றி ஷங்கர்!

ராமலக்ஷ்மி said...

அம்பிகா said...

//இந்த பொறுப்புணர்வும், புரிதலும் தான் மிக அவசியம். நல்ல சீசனல் இடுகை. மிக அவசியமானதும் கூட.//

மிக்க நன்றி அம்பிகா!

ராமலக்ஷ்மி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//அருமையான கட்டுரை ராமலட்சுமி மேடம்.//

நன்றி ஸ்டார்ஜன்!

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//ஆம் ராமலக்ஷ்மி,முதலில் நாம்
கடை பிடிப்போம். நீங்கள் சொன்ன மாதிரி கடை பிடித்து வருகிறேன்.//

நிச்சயம் கடைப்பிடிப்போம். மிக்க மகிழ்ச்சிம்மா.

//தெரிந்த உள்ளம் சொல்கிறது உலகம் உய்ய வேண்டும் என்று.

அருமையான பதிவு ,அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.//

நன்றி கோமதிம்மா, இது குறித்த உங்கள் பதிவும் மிக அருமை.

ராமலக்ஷ்மி said...

வின்சென்ட். said...

//“ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.”

“எல்லாத் தண்ணீரும் மாசினால் அப்படி தகுதியற்றதாகி, கண்ணீருடன் வருங்கால சந்ததி வருந்தி நிற்க நேரும் அவலம் தவிர்ப்போம்”.

கருத்துக்கள் யதார்த்தமானவை.

புகை படங்கள் + வாசகங்கள் அருமையிலும் அருமை.//

எனது சிறுபங்காக இந்தப் பதிவு. இன்னும் பலரும் பதிவிடுவதாக இங்கு வாக்களித்திருப்பது மகிழ்வைத் தருகிறது. நம் நோக்கம் நிறைவேறும் என நம்புவோம். தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//உண்மைதான்.. அபார்ட்மெண்ட்களில் தெரிந்தே தண்ணீரை வீணடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் மட்டும் சிக்கனமாக இருந்தால் போதுமா என்ற மனோபாவம் அவர்களுக்கு.//

அதேதான் நான் சொல்ல வந்தது. இதே மனோபாவம்தான் லிஃப்ட் போன்றவற்றை உபயோகிப்பதிலும் காண்பிக்கிறார்கள் பலர்:(!

//நல்ல புரிதலுள்ள இடுகை.//

நன்றி அமைதிச்சாரல்.

ராமலக்ஷ்மி said...

"உழவன்" "Uzhavan" said...

***/ //ஒரு எலக்ட்ரிகல் பாயிண்டில் சிறுபொறி வந்தால் பதறி எப்படி எமர்ஜென்ஸி என நினைப்பீர்களோ அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுங்கள்//

இந்த ஒரு வரி போதும் நாம் தண்ணீரின் மகிமையை உணர. அற்புதமான இடுகை../***

இந்த உணர்வு இருந்தாலே போதும்தானே? பாராட்டுக்கு நன்றி உழவன்!

ராமலக்ஷ்மி said...

இராகவன் நைஜிரியா said...

//மிக நல்ல இடுகை. மழை நீர் சேகரிப்பினால் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. மடிப்பாக்கத்தில் இருக்கும் எங்க வீட்டு கிணற்று நீர்.. அதன் கடினத்தன்மை குறைந்தது.//

அனைவரும் கவனிக்க வேண்டிய கருத்தை சொந்த அனுபத்தில் சொல்லியிருப்பது சிறப்பு.

// அட்லீஸ்ட் அதில் குப்பைகளை கொட்டாமல், மாசு அடையாமல் பாதுகாத்தாலே, நாம் வருங்கால சந்ததியருக்கு செய்யும் மிகப் பெரும் உதவி.//

சரியாகச் சொன்னீர்கள். வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவன்.

ராமலக்ஷ்மி said...

இராகவன் நைஜிரியா said...

//மிக நல்ல இடுகை. மழை நீர் சேகரிப்பினால் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. மடிப்பாக்கத்தில் இருக்கும் எங்க வீட்டு கிணற்று நீர்.. அதன் கடினத்தன்மை குறைந்தது.//

அனைவரும் கவனிக்க வேண்டிய கருத்தை சொந்த அனுபத்தில் சொல்லியிருப்பது சிறப்பு.

// அட்லீஸ்ட் அதில் குப்பைகளை கொட்டாமல், மாசு அடையாமல் பாதுகாத்தாலே, நாம் வருங்கால சந்ததியருக்கு செய்யும் மிகப் பெரும் உதவி.//

சரியாகச் சொன்னீர்கள். வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவன்.

ராமலக்ஷ்மி said...

அமுதா said...

//“உங்களுக்கான தேவை நிறைந்துவிட்டது...எங்களுக்கு?” //

சாட்டையடி. நல்ல பகிர்வு!

//எந்த விஷயத்தில் நாம் அடுத்த தலைமுறைக்கு நல்லதை விட்டு செல்கிறோம் என்ற யோசனை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. தண்ணீர் தினம் இந்த கேள்வியை நம்முன் வைக்கின்றது.//

விடைதேடுவதோடு நின்றிடாமல் செயல்படுத்துவோம் அனைவருமாக. மிக்க நன்றி அமுதா!

ராமலக்ஷ்மி said...

கண்ணகி said...

// நல்ல இடுகை...ஆனால் அந்தப்புறாக்கள் குளிப்பது கண்கொள்ளாக்காட்சி....//

நன்றி கண்ணகி. காருண்யமும் வேண்டும். அதற்காகத்தான் டப்பில் நீர் வழங்கும் யோசனை:)!

ராமலக்ஷ்மி said...

சேட்டைக்காரன் said...

//சீரிய சிந்தனை! உங்கள் அக்கறைக்கும், இந்த அருமையான பதிவுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியில் நானும் ஒரு துளியாவேன் என்ற உறுதியும் அனைவருக்கும் அளிக்கிறேன்.//

காத்திருக்கிறோம் உங்கள் இடுகைக்காக. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

சுசி said...

//ரொம்ப நல்ல பதிவு அக்கா..

இங்க இந்த வருஷம் ஸ்னோ ரெக்கார்ட் வச்சிட்டதால எங்கள தண்ணீர் பாவனைய குறைச்சுக்க சொல்லி கேட்டிருக்காங்க..//

நிச்சயமாய் நீங்க ஒத்துழைப்பீங்க எனத் தெரியும். மற்றவரையும் வலியுறுத்துங்க.

//கண்டிப்பா எல்லாரும் //உலகம் உய்ய..// கவனம் எடுத்துத்தான் ஆகணும்.//

அதேதான். நன்றி சுசி!

ராமலக்ஷ்மி said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//நல்ல பதிவு.உங்க புகைப்படக்கருவி நல்ல கருவியா? நீங்க அருமையான போட்டோ கிராபரா? படங்கள் சூப்பர்.//

நன்றி சாந்தி. நைகான் மற்றும் சோனி காம்பாக்ட் வகை கேமிராக்கள்.
திறமையான நிபுணர் அல்ல. அருமையாக எடுக்க விரும்பும் ஆர்வலர் எனக் கொள்ளலாம்:)! இப்பதிவுகளின் படங்கள் அத்தனை கூர்மையாக இல்லாவிட்டாலும்கூட சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்ல உதவியதாகவே நினைக்கிறேன்.

//துப்பத்தவள உப்புல பாரு,சீரத்தவள நீர்ல பாருன்னு ஒரு சொலவடையும்,தண்ணிய அதிகமா சிந்துனா காசு அதிகம் போகும்னு நம்பிக்கையும் உண்டு ஊர்ப்பக்கத்துல.தண்ணீர் சிக்கனம் முக்கியமான ஒன்று.//

அருமையா சொல்லிவிட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி!

ராமலக்ஷ்மி said...

வருண் said...

//தண்ணீருக்கு ஒரு தினமா? இப்போதுதான் அறிந்துகொண்டேன் :)//

நானும்தான்.

//நம்ம நாட்டில் இதையெல்லாம் வெற்றிகரமாக இன்னும் செய்ய முயலவில்லை(முடியவில்லை?) னு நெனைக்கிறேன்.//

முனைப்புடன் முயன்றால்தானே முடியும்:(?

// We are too busy in some worthless issues which are not going to help us in any way! :(//

இதுதான் உண்மை. விரிவான பகிர்வுக்கு நன்றி வருண்!

//அந்த புறாக்கள் நீராடுவது கண்கொள்ளா காட்சிதான் :)//

உலகம் உய்ய புறாக்களும் வாழணும்தானே? அதற்கும் வழி செய்யலாமென்றே சொல்லியுள்ளேன்:)!

ராமலக்ஷ்மி said...

விஜய் said...

//water is the elixir

அமிர்தத்தை வீணாக்கலாமா ?

அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டிய தருணம்

வாழ்த்துக்கள் சகோதரி //

கருத்துக்கும் வருகைக்கு நன்றி விஜய்.

ராமலக்ஷ்மி said...

பிரியமுடன்...வசந்த் said...

//ஆமா மேடம் இங்க கத்தார்ல ஒருலிட்டர் டீசல் விட ஒரு லிட்டர் தண்ணீரோட விலை ஜாஸ்தி...//

இங்கேயும் அப்படியாகிவிடும் நாம் அக்கறைப்படாமல் இருந்தால்:(!

//அருமையா படங்களோட விளக்கியிருக்கீங்க... கருத்துக்கள அனைவரும் பின் பற்றினால் ஓரளவேனும் தண்ணீர் பற்றாக்குறை தீரும்...//

அதுவேதான் அனைவரின் விருப்பமும். நன்றி வசந்த்!

ராமலக்ஷ்மி said...

முகுந்த் அம்மா said...

//தண்ணீரின் அவசியத்தை விளக்கும் ரொம்ப நல்ல பதிவுங்க. தங்கள் படங்களும் கருத்துகளும் அருமை.//

நன்றி முகுந்த் அம்மா.

//தங்கள் சொன்னது போல world water day படத்தை என் வலைபூவிலும் இணைத்துள்ளேன்.//

பார்த்தேன், படத்தை மட்டுமல்ல நீங்கள் சிரத்தையுடன் வெளியிட்டிருக்கும் “தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்” பதிவினையும். அருமையான கருத்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

SanjaiGandhi™ said...

//அவசியமான பதிவு.. ரொம்ப சிரத்தையான பதிவுக்கு பாராட்டுகள் அக்கா..//

மிக்க நன்றி சஞ்சய்.

ராமலக்ஷ்மி said...

கிரி said...

//பலரும் படித்து விட்டு இதோடு மறந்து விடுவார்கள் என்பது மனதை வருத்துகிறது.//

மறக்கும் முன் செயல்படுத்த ஆரம்பித்தோமானால் அதுவே வழக்கமாகி விடும். அது ஒன்றுதான் வழி.

//சிரமப்பட்டாலும் கூட.//

வருத்தம் தரும் உண்மை:(!

//திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் .. பழமொழி இதற்கும் பொருந்தும் மக்களாய் பார்த்து உணராவிட்டால் இந்த தண்ணீர் பிரச்னைக்கு ஒரு முடிவு இல்லை.

இந்த சிறந்த இடுகையை அக்கறையுடன் வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.//

சரியாகச் சொன்னீர்கள், மக்கள் நாம் உணர்ந்து செயல் படத் தொடங்கினால் அரசும் அக்கறை எடுக்காதா என்பதே ஆதங்கமாக உள்ளது. விரிவான கருத்து மற்றும் அனுபவப் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிரி.

ராமலக்ஷ்மி said...

நானானி said...
//repeattttttttttttatiiii!!!
ATHEY..ATHEYY!//

பதிவில் சொன்னதே:)! எத்தனை முறை யார் வேண்டுமானாலும் இதே கருத்துக்களையும் கூறிடலாம். இன்னும் சிலரின் கவனத்துக்கு அவை செல்ல வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்.

//LET ME FINDOUT SOME OTHER POINTS.//

காத்திருக்கிறோம் உங்கள் பதிவுக்கு. சீக்கிரமே தாருங்கள்! நன்றி நானானி!

ராமலக்ஷ்மி said...

கண்மணி/kanmani said...

//உண்மைதான் இராமலஷ்மி அங்கங்கே தண்ணீர்ப் பந்தல் வைத்த காலம் போய் கிடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலம்.இன்னமும் நிலைமை மோசமாகலாம்.//

அப்படித்தான் தெரிகிறது கண்மணி :(!

//ஓவர்ஹெட் டேங்க் வழிவதைத் தடுக்க ஆட்டோமேட்டிக் மிஷின் இருக்கு.எங்க வீட்டிலும் இருக்கு.விலை 3000 ரூபாய் வரும்.
டேங்கில் அளவு குறைந்ததும் மோட்டர் ஸ்விட்ச் தானாகவே ஓடத் தொடங்கும்.டேங்க் நிரம்பியதும் தானாகவே நின்றும் விடும்.
என் கத்தலையும் மீறி [இதுக்கெல்லாமா காசு போட்டு வாங்கனும்]ரங்கமணி செய்த உத்தி.
எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.//

நல்ல வேலை செய்தார் உங்கள் கணவர்:)! இதுபற்றி விரிவாக விளக்கியதற்கு நன்றி. எப்படி இங்கே அந்த சிலர் இன்னும் இதை வாங்கிப் பொருத்தாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தண்ணீர் தொட்டிப் படம் ஒருவருடம் முன்னே எடுத்தது.

ராமலக்ஷ்மி said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அருமையான கட்டுரை//

மிக்க நன்றி சார்!

ராமலக்ஷ்மி said...

அன்புடன் அருணா said...

//பெர்ர்ர்ர்ர்ரிய பூங்கொத்து!//

மிக்க்க்க நன்றி அருணா:)!

ராமலக்ஷ்மி said...

ஹுஸைனம்மா said...

//நியாயமான ஆதங்கங்கள் அக்கா! ரன்னிங் வாட்டர் எனப்படும் 24-மணிநேர தண்ணீர் சப்ளை கிடைக்க ஆரம்பித்த பிறகுதான் தண்ணீரை வீணாக்கும் செயல்கள் அதிகம் ஆரம்பித்திருக்கின்றன.//

உண்மைதான் ஹுசைனம்மா. கிடைத்த வசதிகள் நீடிக்க என்ன செய்ய வேண்டுமென்கிற சிந்தனை தண்ணீர், மின்சாரம் விஷயங்களில் ரொம்பவும் குறைவுதான்:(!

கருத்துக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

சாய்ராம் கோபாலன் said...

//Good one. I just keep telling my kids that water will be costlier than gold in couple of years ?//

அச்சுறுத்தல் நிஜமாகக் கூடிய அவலம் உள்ளது இப்போதே நாம் விழித்துக் கொள்ளாதிருந்தால்.

நிச்சயம் உங்கள் குழந்தைகள் உணர்ந்து நடப்பார்கள். வாழ்த்துக்கள்! நன்றி சாய்ராம்!

ராமலக்ஷ்மி said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

//நல்லதொரு பதிவு ராமலக்ஷ்மி.! வாழ்த்துகள்.

இது பற்றி சென்ற ஆண்டில் நான் எழுதிய ஒரு பதிவைக்காணலாம்..

http://www.aathi-thamira.com/2009/03/blog-post_25.html//

இந்த ஆண்டுதான் தண்ணீர் தினத்தைப் பற்றியே எனக்குத் தெரியும். தங்கள் ‘நீரின்றி அமையாது உலகு’ பதிவும் மிக அருமை. அதன் சுட்டியையும் வின்சென்ட் அவர்களின் பதிவில் இணைத்து விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி!

ராமலக்ஷ்மி said...

மின்னஞ்சலில்:

//Hi Ramalakshmi,

Congrats!

Your story titled 'உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th March 2010 06:56:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/202798

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழிஷில் வாக்களித்த 21 பேருக்கும், தமிழ்மணம் திரட்டியில் வாக்களித்த 18 பேருக்கும் என் நன்றிகள்!

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. தினசரி டிப்ஸ் தான் என்றாலும் சொன்ன விதம் அருமை.

ராமலக்ஷ்மி said...

விக்னேஷ்வரி said...

//ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. தினசரி டிப்ஸ் தான் என்றாலும் சொன்ன விதம் அருமை.//

தெரியாதவை அல்லதான்:)! ஆனாலும் தினசரி வாழ்விலே தொடங்குவோமே என்றுதான். மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

நீங்க சொன்னதுபோல் தண்ணீர் தினத்துக்கான படத்தை என் பதிவில் இணைத்துவிட்டேன்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...

//நீங்க சொன்னதுபோல் தண்ணீர் தினத்துக்கான படத்தை என் பதிவில் இணைத்துவிட்டேன்.//

நன்றி அமைதிச்சாரல்!

ராமலக்ஷ்மி said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !//

நன்றி சங்கர்! மீண்டும் வருக!

thenammailakshmanan said...

உண்மைதான் ராமலெக்ஷ்மி அவ்வளவையும் நீங்களே சொல்லிட்டா நாங்களெல்லம் என்ன சொல்வது..??

ராமலக்ஷ்மி said...

@ தேனம்மை லெக்ஷ்மணன்,
இன்னும் நிறைய இருக்கிறது. நான் சொல்லியிருப்பது ஒருதுளிதான். கருத்துக்கு நன்றி தேனம்மை:)!

தமிழ் பிரியன் said...

\\\ராமலக்ஷ்மி said...

@ கோமா,
வாழ்த்துக்களுக்கும் திருத்தத்துக்கும் நன்றி. தமிழ் பிரியனுக்கு பதில் தந்த கையோடு திருத்தியும் விட்டேன்!\\\

பாருங்கள்... நாங்க எல்லாம் பதிவை கவனமா வரிக்கு வரி படிக்கிறவங்க... தெரிஞ்சுக்கங்க... ;-))

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
// பாருங்கள்... நாங்க எல்லாம் பதிவை கவனமா வரிக்கு வரி படிக்கிறவங்க... தெரிஞ்சுக்கங்க... ;-))//

நானே ‘இப்போ நம்பிட்டேன்’ என சொல்ல இருந்தேன்:))!

பின்னூட்டங்களையும் வரிக்கு வரி படிக்கிறவங்க என கூடுதலா பாராட்டி ஒரு பூங்கொத்தைக் கொடுக்கிறேன்:)!

இராஜராஜேஸ்வரி said...

கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் தண்ணீராய் இருந்தாலும் கையளவு கூடப் பருகிட உகந்ததாய் இருப்பதில்லை கடல்நீர். எல்லாத் தண்ணீரும் மாசினால் அப்படி தகுதியற்றதாகி, கண்ணீருடன் வருங்கால சந்ததி வருந்தி நிற்க நேரும் அவலம் தவிர்ப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin