ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி?
பாமரர் படித்தவர் பாகுபாடின்றி முதுமையில் உழைக்க வேண்டிய கட்டாயம் பெருகி விட்டது தேசத்தில். பெங்களூரில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்காகவே நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தையில் 800 பெரியவர்கள் கலந்து கொள்ள நிர்வாகம், மேற்பார்வை, தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கற்பித்தல், கணக்கியல், காப்பீடு, சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் 300 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது சென்ற வாரம். எழுத்தாளர்கள்,புகைப்படக்காரர்கள் போன்றோருக்கும் வாய்ப்புகளை விரித்துக் காத்திருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் எதிரே பார்க்கவில்லை இந்த தமது முயற்சிக்கு இப்படியொரு வரவேற்பு கிட்டுமென.
ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவர் மனநிலை பொறுத்து மாறுபடுகிறது. சிலருக்கு வயதொத்தவருடன் அரட்டை, நடை, வாசிப்பு, தொலைக்காட்சி என ஏதேனும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில்; சிலருக்கு வீட்டு நிர்வாகத்தில் உதவியாக இருப்பதில்; சிலருக்கு பேரன் பேத்திகளோடு விளையாடிக் கதை சொல்லி நேரம் செலவழிப்பதில். சிலருக்கோ உடலும் மனதும் தெம்பாக இருக்கும்வரை உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.
84வது வயதில் தனது நேரத்தை எப்படி உபயோகமுள்ளதாகச் செலவழிக்க முடியுமென அறியவே அங்கு வந்ததாகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஒரு பெரியவர், ஜம் எனப் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஓவியராக பெங்களூர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல கண்காட்சிகள் நடத்திய 68 வயது பெண்மணி, தன் கற்பனாசக்திக்கு ஏற்ற வகையில் எந்த வேலையானாலும் சரி, தனது வாழ்வாதாரத்துக்கு அது மிக அத்தியாவசியமெனத் தெரிவித்திருந்தார். மற்ற பலரோ வீட்டுக்குத் தெரியாமல் வந்திருந்திருந்ததால் தங்கள் பெயரைக் கூட வெளிப்படுத்த விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்கள்.
“ஒரு வேலைக்கு இளைஞரா, முதியவரா யாரை வைப்பீர்கள் என்றால் பின்னவரையே சொல்வோம். ஏனெனில் பொறுப்புணர்வும் அனுபவமும் நிறைந்த அவர்களுக்கு பயிற்சியே தேவையில்லை” என்கிறார் முதியோருக்கான மருத்துவ சேவையை நல்கும் ஒரு நிறுவனத் தலைவர். அன்று பத்து முதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது இவரது நிறுவனம். ”இந்தியாவின் 87% முதியோருக்கு பென்ஷன் இல்லை. கூடுகிற வயதோடு அதிகரிக்கிற மருத்து செலவுகள் இவர்களை அச்சுறுத்துகின்றன. நிரந்தர வருவாய் இருந்தால் தேவலாமென எண்ணுகிறார்கள். மனரீதியான தெம்புக்கும் இந்த வேலை அவர்களுக்கு உதவுகின்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.
எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.
பெற்றோருக்கு இணையான இடம்
நன்னெறிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவரின் தன்னம்பிக்கையை சிதைத்து, தன்மானத்தை அவமதித்து பிஞ்சு மனங்களிலே மாறாத வடுக்களை ஏற்படுத்தும் அநியாயங்கள் பரவலாகத் தொடருகிறது. சிறுநீர் பருக நிர்ப்பந்தித்தது, கேசங்களை வெட்டியது என சமீபத்திலும் பல சம்பவங்கள். இருவருடங்களுக்கு முன் நான் எழுதிய
பொட்டலம் சிறுகதை நினைவுக்கு வந்து போகிறது. தண்டனைகள் தீவிரமாகப் போவதில்லை. வெறும் சஸ்பென்ஷன்களால் இக்கொடுமைகள் நிற்கப் போவதுமில்லை. கண்டிப்பு அவசியமென்றாலும் கனிவையும் அடிப்படை நேயத்தையும் மறப்பது செய்யும் பணிக்கே களங்கம். தெய்வத்துக்கும் உயரிய ஸ்தானத்தில், பெற்றோருக்கு இணையான இடத்தில் தாம் இருப்பதை இத்தகு ஆசிரியர்கள் உணர்வார்களா? தங்கள் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக மாணவரை இம்சிப்பதை நிறுத்துவார்களா?
‘கேட்பினும் பெரிது கேள்’
க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு கவிதைகளுக்கென்றே வெளிவருகிற இருமாத சிற்றிதழ் “புன்னகை”, கேட்பினும் பெரிது கேள்!
இதன் 60வது சிறப்பிதழில் இடம் பெற்ற 60 கவிஞர்களின் கவிதைகளில் ஒன்றான எனது கவிதை “
ஆயிரமாயிரம் கேள்விகள்” இங்கே. சமீபத்தில்தான் இதழுக்கு சந்தாதாரர் ஆனேன். பலரது சிறந்த கவிதைகள், விமர்சனங்களோடு குறிப்பிட்ட கவிஞரின் சிறப்பிதழாகவும் மலர்ந்து அவர்களைக் கெளரவித்து வருகிறது புன்னகை. இதழ்-70-ல் கவிஞர் கதிர்பாரதி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். புத்தகம் கிடைத்ததும் அடுத்த தூறலில் பகிருகிறேன்.
மார்ச்-ஏப்ரல் 2012 கவிதை இதழ் 68-ல்.. தோழன் அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை’ முன்னிறுத்தி... லதா ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதை வாசிப்பில் கிடைப்பதென்ன?” விமர்சனக் கட்டுரையிலிருந்து:
“
எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு கூட, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டிற்குமே அடிப்படை ஒருவகையில், மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.
24 மணிநேரமும் மனிதனை முட்டாளாக்குவதே குறியாய், அபத்த நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேவைதானா என கேள்வி எழுதுவதில்லை. ஆனால் கவிதை தேவைதானா என்ற கேள்வி மட்டும் வெகு சுலபமாக தொடர்ந்த ரீதியில் கேட்கப்பட்டு வருகிறது. (அரசு நூலகத்துறை தற்காலத்தைய தமிழ் கவிதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லையென்று கேள்வி). கவிதை எழுதுவதில், கவிதை வாசிப்பதில் என்ன கிடைக்கிறது என்பது போன்ற ஆழமான சுற்றாய்வுகளோ, கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வழிவகுப்படாமலேயே இந்த கேள்வி வலம்வந்து கொண்டேயிருக்கிறது..”
**
மே-ஜூன் 2012 கவிதை இதழ் 69-ல்.. நான் இரசித்த கவிதைகளுள் ஒன்று:
ஆளில்லாத வீடு
ஆளில்லாத வீட்டுக்கு
தேடி வந்தது
இம்சையாயிருக்கிறது
உதாசீனமாய் பார்க்கிறது
அக்கம்பக்க
மின்விளக்குத் தூண்கள்
உறுத்தும்
சந்தேகப் பார்வையில்
உள்ளங்கால் முதல் தலைவரை
வாசற்கதவுகள் ஆராய்கின்றன
எதையும் விழுங்கி
ஜீரணிக்கும்
இருளும்
குற்றமாய்ப் பார்த்து உறுமியது
காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில்
ஜன்னல்,மரம்
இன்னும் எவைஎவையோ
நெளிந்து குலுங்கினாலும்
எனக்குள் நடுக்கமெடுக்கிறது
அவமானத்தைக் கூட
சகித்து ஆற்றிக் கொள்ளலாம்
எதிர்கொள்ள முடியவில்லை
இந்த வெறுமையை.
- வசந்த தீபன்
**
புன்னகை இருமாத இதழின் ஆண்டுச் சந்தா ரூ 75.
அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68 பொள்ளாச்சி சாலை,
ஆனை மலை- 642 104.
மின்னஞ்சல்: punnagaikavi@gmail.com
நட்பின் அன்பு
பதிவுலகம் வந்த முதலிரண்டு வருடங்களில் வாரம் ஒரேயொரு பதிவென்றிருந்து, மூன்றாமாண்டு வாரம் இரண்டாக முன்னேறி, எந்தத் திட்டமிடலும் இன்றி முடிகிற போது பதிவு என முடிவெடுத்த நடப்பு வருடத்தில் சராசரியாக வாரம் மூன்றெனப் பதிந்து கொண்டிருப்பது எனக்கு சற்று ஆச்சரியமே. ஏனெனில் முத்துச்சரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த காலத்தில் முடியாத ஒன்று, இன்று
Flickr,
PiT,
அதீதம் ஆகிய தளங்களிலும் இயங்கியபடியே செய்ய இயலுகிறதென்றால் அதற்கான பலம் எங்கிருந்து வருகிறது? உங்களிடமிருந்தே..
நன்றி கவிநயா!
விருதோடு கவிநயா அளித்த ஊக்கம்
இங்கே. அன்பினால் சற்று அதிகப்படியாகி விட்ட பாராட்டு என்றாலும், அவர் சொல்லியிருப்பதை யோசித்துப் பார்த்தால் ‘கவிதை, கட்டுரை, சிறுகதை’ இந்த மூன்றில் மட்டுமே இணையத்தில் இயங்க ஆரம்பித்த என்னை இன்று ஒளிப்படம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, இணைய இதழ் மற்றும் PiT பொறுப்பு எனப் பல பிரிவுகளுக்கு இட்டுச் சென்றது நல்ல நட்புகள் தந்து வருகிற ஊக்கமே.
ஒற்றை இலக்கத்தில் வந்து நிற்கிற தமிழ்மணம் ட்ராஃபிக் ரேங்க் முன்னோ பின்னோ போகலாம். இங்கே பதிகிற வேகம், எண்ணிக்கை குறையலாம். ஆனால் ஏதோ ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன், நட்புகளிடமிருந்து பெறும் பெரும் பலத்தில்:)!
அதீதம் ஃபோட்டோ கார்னர்:
தளிர் நடை - மெர்வின் ஆன்டோ
கண்ணான பூமகன் - நித்தி ஆனந்த்
உள்ளம் கொள்ளை போகுதே - சத்தியா
அன்பின் ரேகைகள் - எழில் இராமலிங்கம்
படத்துளி:
அன்பின் நிழல்..
அடர்த்தியானது!
***