திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துகள்



பிறக்கும் புத்தாண்டில்
நடப்பன நல்லவையாய் இருக்கட்டும்.
இயற்கையின் கருணையில்
நாடும் நானிலமும் செழிக்கட்டும்.
மனிதம் தழைத்து
அன்பும் அமைதியும் நிலவட்டும்.

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

பெண்மை வாழ்கவென..


நாற்பது வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார் அருணா ஷான்பாக். தற்போது 64 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரிகையாளரும் அவரது தோழியுமான பிங்கி விரானியால் இவருக்காகக் கோரப்பட்ட கருணைக் கொலைக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்ட போதுதான் இவருக்கு நேர்ந்த கொடுமை பலகாலம் கழித்து மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்தது. சோஹன்லால் பர்தா வால்மிகி எங்கோ உத்திரபிரதேசத்தில் கல்யாணம் காட்சி பார்த்து புள்ளையும் குட்டியுமாக நன்றாக இருக்கிறான் எனக் கேள்வி. தன் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் அருணா சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றில் இந்த சமூகத்தின் அலட்சியமும், இன்றைய நொடி வரைத் தன்னை மாற்றிக் கொள்ளாத ஆணவமும் கலந்திருக்கிறது.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்கள் : நிறைவுப் பாகம்


பாகம்: 1 [படங்கள் 23 ]
பாகம்: 2 [படங்கள் 18 ]

நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் சென்ற ஊர்வலத்தில் கொட்டு மேளங்கள் மட்டுமே எத்தனை வகை?

நடுநடுவே இடம் பெற்றிருந்தன புராணங்களை, கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் சிலைகளுடனான வாகனங்கள்.

இவற்றோடு ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள் ஆறும், இரு தினங்கள் கழித்து மைசூரிலிருந்து லாரிகளில் கிளம்பியக் காட்சியுடன் தசரா தொடரை நிறைவு செய்கிறேன், 27 படங்களுடன்.

#1

வியாழன், 27 டிசம்பர், 2012

மைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலைஞர்கள் : பாகம் 2


யானைகள் வழிநடத்திய, “ 402_வது மைசூர் தசரா ஊர்வலக் காட்சிகள் - (பாகம் 1)இங்கே.

 “பலமுறை மைசூர் சென்றிருந்தாலும் இந்த விஜயதசமி நாளில் சென்றதும் 402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் யானைகளையும் கலைஞர்களையும் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து போனது.” -'போவோமா ஊர்கோலம்!' குங்குமம் தோழி, என் ஜன்னலில்.. இங்கே.
 
இனி.. பாகம் 2!
படங்கள் பதினெட்டுடன் ஒரு பகிர்வு:

# 1.
சரா ஊர்வலம் அரண்மனையில் தொடங்கி ஏன் பன்னி(Banni)  மண்டபம் சென்று முடிவடைகிறது என்பதற்கும் ஒரு வரலாற்றைச் சொல்லுகிறார்கள் இதிகாசத்திலிருந்து.

புதன், 26 டிசம்பர், 2012

பெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்


14 முதல் 23 டிசம்பர் வரையிலுமாக நடந்து முடிந்தது பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் 2012-ன் புத்தகக் கண்காட்சி.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முதல் மூன்று நாட்களும் “சாகித்யோத்சவ்” எனும் இலக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின் ஆன்டோ பேட்டி

மொபைல் போன் இருந்தால் ஹீரோ ஆகலாம்! :
அட்டைப்படக் கட்டுரையாக..

நன்றி தினகரன் வசந்தம்:)! 
 ***

மூன்றாவது கண்ணாகவேக் கேமராவைப் பாவித்து, தான் ரசித்த விஷயங்களை உலகோடு பகிரும் புகைப்படப் பிரியன் - மெர்வின் ஆன்டோ. நாகர்கோவில் தொழில் நுட்பக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் படித்த கையோடு மனதுக்குப் பிடித்தப் புகைப்படத் தொழிலில் இறங்கியவர்.

உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்பதை போல் என்னிடம் சிலர் கேட்பதுண்டு... ‘நிக்கான் கேமரா சிறந்ததா? கானன் காமெரா சிறந்ததா?’ என்று. நம் பார்வையில் இரண்டும் ஒன்றே. ஆனால், நாம் பழகும் விதத்தில்தான் இருக்கிறது வித்தை. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் க்ரியேடிவிட்டிக்கு எந்தக் கேமரா என்பது முக்கியமே இல்லை.

_ மேலும் வாசியுங்கள்,  மெர்வின் எனக்கு அளித்த பேட்டியை..

அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!

வெள்ளி, 21 டிசம்பர், 2012

ஈரமாய் இருக்கட்டும் தூரிகை - பண்புடன் புகைப்படப் போட்டியில் முதல் பரிசு

நன்றி பண்புடன்!

கட்டற்ற சுதந்திரத்துடன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவென 2005_ஆம் ஆண்டு ஆசிஃப் மீரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் மின்னஞ்சல் குழுமம்‘பண்புடன்’. இணைய இதழாகவும் இயங்கி வந்ததை அறிந்திருப்பீர்கள்.

தண்ணீர்’ என்ற தலைப்பில், குழுமம் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் அனுப்பிய படத்திற்கு முதல் பரிசு அறிவிப்பாகியுள்ளது:)!

திங்கள், 17 டிசம்பர், 2012

தூறல்:10 - பொதிகையில் ‘பொன்னான முதுமை’; இளம் கலைஞர்; நவீன விருட்சம்; குங்குமம்


தினகரன் வசந்தத்தில் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான என் நேர்காணலை வாசித்து விட்டு அவரைப் பொதிகை தொலைக்காட்சியின் ‘பொன்னான முதுமை’ நிகழ்ச்சிக்காகப் பேட்டி காணமுடிவு செய்த தூர்தர்ஷன் இயக்குநர் திரு ஸ்ரீனிவாசன், பத்திரிகையின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு திரு. நடராஜன் அவர்களின் அலைபேசி எண்களை வாங்கிக் கொண்டிருந்தார் சில மாதங்கள் முன்னர்.

சென்ற வாரம் சென்னையிலிருக்கும் திரு நடராஜன் அவர்களின் இல்லத்தில் படப்பிடிப்பு முடிந்தது.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பூவாகிக் காயாகி.. - தோட்டத்தில் மாதுளை

காத்திருந்து.. காத்திருந்து.. எடுக்கவில்லை:)! ஒரே மரத்தில் பல்வேறு பருவங்களில் பூத்துக் காய்த்துக் கிடந்தவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன்:

மாதுளை / Pomegranate (Punica granatum)

#1

#2

வியாழன், 13 டிசம்பர், 2012

குழந்தைத்தனம்தான், ஆயினும் மிக இயல்பானதே - சாமுவேல் டெய்லர் கொலரிட்ஜ் (1)


இரு சிறிய சிறகுகள் எனக்கிருந்தால்
ஒரு புசுபுசுப் பறவையாக நானிருந்தால்
பறந்து உன்னிடம் வந்திடுவேன், என் அன்பே!
தெரிகிறது, இது போன்ற வீணான சிந்தனைகளால்
எந்தப் பிரயோசனமும் இல்லை
நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

RED FRAMES; SBI நூற்றாண்டு; டிசம்பர் PiT.. போட்டிகள் - சென்னை வீக் என்ட் க்ளிக்கர்ஸ் கண்காட்சி


 RED FRAMES வழங்கும் " FRAMES OF MY CITY 2 " :
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏராளமான பரிசுகளுடன் காத்திருக்கிறது உங்கள் படங்களுக்காக ரெட் ஃப்ரேம்ஸ்.

பொதுவான விதிகள்:

நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மல்லிகை மகளில்..- வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல்!

டிசம்பர் 2012, மல்லிகை மகளில்..
நன்றி மல்லிகை மகள்!
***

கானகத்தைச் சுற்றி சுற்றி வருகிறது
எவருக்கும் உரித்தானதற்ற குரல்..
நதியினில் குளித்துப்
பாறைச்சூட்டில் உலர்ந்து
மரக்கிளைகளில் ஊஞ்சலாடி
மலர்களில் உறங்கி
மழையினில் நனைந்து
எல்லோருக்கும் பொதுவான
வாழ்த்தினைச் சுமந்து.

வனங்களை நோக்கி
நகரங்கள் நகர நகர

வியாழன், 6 டிசம்பர், 2012

வாழும் வரை போராடு


“இயற்கையை அவதானியுங்கள், இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; அது உங்களைக் கைவிடாது” - ஃப்ராக் லாயிட் ரைட்

#1. மொட்டும் மலரும் - Red Granadilla 
Common name: Red Passion Flower, Scarlet Passion Flower, Red Granadilla 
Botanical name: Passiflora coccinea Family: Passifloraceae (Passion flower family)


தொகுப்பில் இருக்கும் மலர்களின் பெயர்களை அறிய உதவிய நண்பர்களுக்கு நன்றி! நன்றி!

#2. அரும்புகள்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை


த்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள்.

தெரிந்து விட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக் கொண்டையாக முடிந்தபடியே எழுந்தவள் வீதிக்கு வந்தாள். “சீனு ராசா ஓடியாப்பா” உரத்தக் குரலில் அழைத்தாள். “கருப்பி வந்துட்டாளா பாட்டி? டேய் வாங்கடா” சீனு நண்பர்களையும் அழைக்க, கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் “ஹோ” எனப் பெருங்கூச்சலுடன் மட்டையும் கையுமாக ஓடி வந்தார்கள்.

வியாழன், 29 நவம்பர், 2012

இலையுதிர்காலப் பாடல் – கவிக்குயில் சரோஜினி நாயுடு


மேகங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தது அஸ்தமனம்
கவலையுற்ற இதயத்தில் ஏற்பட்டக் களிப்பைப் போல.

புதன், 28 நவம்பர், 2012

தூங்கும் செம்பருத்தி.. சிரிக்கிற செவ்வந்தி..


#1 செண்டுப் பூ



மாட்டுச் செவ்வந்தி என்றும் அழைக்கப்படுகிற இந்தச் செண்டுப்பூவை அறிவோம்.

தூங்கும் செம்பருத்தியை?

அறிவோமே.. என்பவர்கள் ரசித்திட சில படங்கள்.

தெரியாதே.. என்பவர்களுக்காக கூடவே சில தகவல்கள்.

மெக்ஸிகோவின் வெப்ப மண்டலப் பகுதியில் அதிகம் காணப்படுகிற இப்பூக்கள்  “ Sleeping Hibiscus ” எனப் பரவலாக அறியப்படுகின்றன. மலராத செம்பருத்தியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கிறது.

#2 தூங்குது செம்பருத்தி.. தொந்திரவு செய்யாதீர்..

ஞாயிறு, 25 நவம்பர், 2012

செல்லம் செல்லம் செல்லமே..

நாய் வளர்ப்பவர்களுக்கு பெங்களூர் குடியிருப்புகளில் வாடகைக்கு வீடு கிடையாது. அது குறித்துக் கடைசியில்..

பூனை, நாய்ப் பிரியர்களா நீங்கள்? உங்களுக்காக முதலில் சில படங்கள்!

#1 பொம்மையைப் போல்..

வியாழன், 22 நவம்பர், 2012

இலைகள் பழுக்காத உலகம் - மலைகள் இதழில்..


கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்
பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்
நெஞ்சோடு இருந்தாலும்
நிழற்படங்களாலேயே
நினைவில் பொருத்திப் பார்த்தத்
தந்தையின் முகத்தைக்
கண்டேன் கனவில் நேற்று.

செவ்வாய், 20 நவம்பர், 2012

காரஞ்சிக்கரை மரங்கள் - வேம்பநாட்டுத் தென்னைகள் - நவம்பர் PiT

நவம்பர் மாதப் போட்டித் தலைப்பு: மரங்கள்

அறிவிப்பு இங்கே.   

கலந்து கொள்ள எண்ணி மறந்து போனவர்கள் இன்றைக்குள் படங்களை அனுப்புமாறு நினைவூட்டிடவே கடைசி நேரத்தில் அவசரமாய் இந்தப் பகிர்வு:)!

[முதல் ஆறு மற்றும் படங்கள் 8,10,13 முத்துச்சரத்தில் முன்னர் பகிராதவை.]

 மைசூர் காரஞ்சி ஏரிக் கரை:

#1 ஆலமரம்

#2 மூங்கில் வனம்

#3 ஏரி நடுவே..

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இருளில் ஒளி



1. தடையாய் நிற்கும் பெரிய மலையை அகற்றுவது சிறிய கற்களைச் சுமப்பதிலேயே தொடங்குகிறது.

2. கோபங்களையும் வருத்தங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டே இருப்பதால் வீணாவது நம் சக்தியே.

3. கோபத்தால் ஏற்படும் சங்கடங்கள், கோபத்தை ஏற்படுத்தியக் காரணங்களை விடத் தாங்க முடியாததாகி விடுகின்றன.

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தின அதீதம் ஃபோட்டோ கார்னர்


# அழகிய தமிழ் மகன் 


நான் எடுத்த இப்படத்துடன் ஒளிப்படக் கலைஞர்கள் சுரேஷ்பாபு (கருவாயன்), சத்தியா, ஐயப்பன் கிருஷ்ணன் (ஜீவ்ஸ்), MQ நவ்ஃபல் ஆகியோர் எடுத்த மழலைப் படங்களும்.. அதீதம் ஃபோட்டோ கார்னரில்..

வியாழன், 8 நவம்பர், 2012

402_வது மைசூர் தசரா (Mysore Dasara) ஊர்வலக் காட்சிகள் : பாகம் 1


#1 

உலகப் புகழ் வாய்ந்த மைசூர் தசரா கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவும் கூட. இந்த விஜயதசமி நாளில் மைசூர் சென்றதும்,  402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் முன்னதாகத் திட்டமிடாமலே நிகழ்ந்தன.

# 2
தீயசக்திகளை உண்மை வெல்லும் தினமாக நவராத்திரிப் பண்டிகை முடிந்த பத்தாவது நாளான விஜயதசமி கொண்டாடப்படுவதற்குக் காரணம், அந்த நாளில்தான் அன்னை சாமூண்டீஸ்வரி மகிஷாசுரனை வதம் செய்தாள் எனப் புராணங்கள் சொல்கின்றன. மகிஷாசுரனின் பெயரிலிருந்தே ‘மைசூர்’ நகரின் பெயரும் உதித்ததாக அறியப்படுகிறது.

#3

பாரம்பரியம் மிக்க தசராவின் முக்கிய அம்சம் அரண்மனையில் ஆரம்பித்து மைசூர் நகரின் சாலைகளைச் சுற்றி வருகிற யானைகள் ஊர்வலம். யானைகள் வழிநடத்தக் கலைஞர்கள் ஆடிப்பாடிப் பின் தொடர, பொழுது சாயும் நேரத்தில் தீப்பந்த ஊர்வலத்துடன் நிறைவு பெறுவது வழக்கம். அன்னை சாமுண்டீஸ்வரியின் விக்கிரகத்தை தங்க அம்பாரியில் சுமந்து முன்னே செல்லுகிற பட்டத்து யானையைப் பார்த்துப் பரவசம் அடைவார்கள் மக்கள்.  கடந்த பத்து ஆண்டுகளாகப் பட்டத்து யானையாக இப்பணியை சிறப்புற ஆற்றி வந்த பலராம் வயதின் காரணமாக இந்த முறை அப்பணியை அர்ஜூனாவிடம் ஒப்படைத்து விட்டாலும் விழாவில் அர்ஜூனாவுக்கு அருகே சகல மரியாதையும் அளிக்கப்பட்டு கலந்து கொண்டது பலராமும்.

#4  விழாப்பந்தலுடன்.. 
அரண்மனை வளாகத்தில் மதியம் ஒன்றரை மணி அளவில் நந்தி பூஜை செய்து, ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நின்ற அர்ஜூனாவுக்கு மலர் தூவி, சாமுண்டீஸ்வரி அம்மனையும் மக்கள் நல்வாழ்வுக்காக வழிபட்டு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

டெங்கு.. கவனம்! - அதீதமாய்.. கொஞ்சம்!


கடந்த சில மாதங்களாக டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. விழிப்புணர்வுக்காகப் பரவலாகப் பரிந்துரைப்பட்டு வரும் சில குறிப்புகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது நல்லது.

அறிகுறிகள்:

கொசுக்கடியால் தொற்றிக் கொள்கிற இந்த எலும்பு முறிவுக் காய்ச்சலின் அறிகுறி உடம்பில் தெரிய ஆரம்பிக்க ஐந்து முதல் ஏழுநாட்களாகின்றன.

104 F வரையிலான காய்ச்சல், கண்கள் சிவத்தல், வேகமான நாடித் துடிப்பு, தோல் பிசுபிசுப்பு, நிலை கொள்ளாதத் தவிப்பு ஆகியன அறிகுறிகள். இந்தத் தொற்றினால் குடல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும் வாய்ப்புடன், இரப்பைக் குடலழற்சி (gastroenteritis) ஏற்படவும் கூடும்.

சிகிச்சை:
உடனடியாகக் குடும்ப மருத்துவரை அணுகவும். செல்லத் தாமதமாகும் பட்சத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்த முதலில் பாராசிடமால் எடுக்க வேண்டும்.

திங்கள், 29 அக்டோபர், 2012

கூண்டுப் பறவை - இரவீந்திரநாத் தாகூர் கவிதை (1) - அதீதத்தில்..



செல்லப் பறவை கூண்டில் இருந்தது,
சுதந்திரப் பறவை காட்டில் இருந்தது.
விதியின் கட்டளை..
இருவரும் சந்திக்கும் வேளை வந்தது.

அன்பே வா, பறந்திடுவோம் காட்டுக்கு
அழைத்தது ஏக்கத்துடன் சுதந்திரப் பறவை.
அருகே வா. வாழ்ந்திடலாம் கூண்டுக்குள்ளே
கிசுகிசுத்தது காதோடு கூண்டுப் பறவை.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தீராத ஆச்சரியம் - மலர்கள்

இயற்கையின் மீதான தீராத ஆச்சரியங்களில் ஒன்றாக மலர்களின் வடிவங்களும் வண்ணங்களும். தீயெனப் பற்றிக் கொள்ளும் உற்சாகம் சில வண்ணங்களால். மனம் வருடிச் செல்லும் சிலவற்றின் வண்ணங்கள். நின்று ரசிக்க வைக்கும் சிலவற்றின் வடிவங்கள். தொடருகிறது பூக்களின் தொகுப்பு:)!

#1 ஆதவனின் பிரகாசத்துடன் மஞ்சள் டெய்ஸி


வியாழன், 18 அக்டோபர், 2012

மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூரு? - அதீதம் கடைசிப் பக்கம்

ஆறு மாதங்களுக்கு முன் என் தூறல் பகிர்வொன்றில் பல்பொருள் அங்காடியில் என் தங்கை மகள் கேட்ட கேள்வியைப் பற்றிப் பகிர்ந்திருந்தேன். வாங்கிய சாமான்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் மக்கள் குற்ற உணர்வோ வருத்தமோ இன்றி வாங்கிக் கொள்வதைப் பார்த்து கல்லாவில் இருந்தவரிடம் விலையை ஐம்பது நூறு என ஆக்கிப் பாருங்கள் என்றாள் அன்று. இப்போது கடைகளில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அரசாங்கமே கடைக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்து விட்டதில் ‘பை கொண்டு வந்தா சாமான். இல்லேன்னா கையிலே அள்ளிக்கிட்டுப் போவது மக்களே உங்கள் சமர்த்து’ என சொல்ல ஆரம்பித்து விட்டன கடைகள்.

அதே போல பெங்களூர் சர்ஜாப்பூர் சாலையிலிருக்கும் குடியிருப்பொன்றின் அசோஷியேஷனைச் சேர்ந்த மீரா நாயர், தன்னார்வமுள்ள குடியிருப்புவாசிகளை இணைத்துக் கொண்டு Greenbugs எனும் அமைப்பை ஏற்படுத்தி, சுற்றுச் சூழல் காக்க மாநகராட்சி பரிந்துரைத்த திட்டங்களை மிகத் திறமையாகச் செயல்படுத்திக் காட்டியதற்காக ‘பெங்களூர் ரிசைக்கிளிங் ஹபா 2011’ நிகழ்வில் கர்நாடகா ஹைகோர்ட் நீதிபதி திரு N.K. பாட்டீல் கையால் சிறப்பு விருது பெற்றது குறித்தும் அப்பதிவில் பகிர்ந்திருந்தேன்.

தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியும், வசிப்பவரின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம் என்றவரை பெங்களூர் மாநகராட்சியும் வெகுவாகு பாராட்டியதோடு இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து குடியிருப்புகளும் இம்முறையைப் பின்பற்றக் கேட்டு வந்தது.  வாய் வார்த்தையாகக் கேட்டுக் கொண்டது எதிர்பார்த்த பலனைத் தராததால் இப்போது வேண்டுகோள் எனும் பெயரில் ஆணையே பிறப்பித்து விட்டது மாநகராட்சி.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அடையாளம் (சிறுகதை) - நவீன விருட்சத்தில்..


னக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வரை அந்தப் பெயரால்தானே எல்லோரும் அவனை அழைத்தார்கள்? இப்போது யாருமே அந்தப் பெயரால் அவனைக் கூப்பிடுவதில்லை. ‘உம் பேரு என்ன’, கேட்பதுமில்லை. பாழாய்ப் போன அந்த விபத்தில் ஏற்பட்ட ஊனத்தையும், ஏழ்மைக் கோலத்தையுமே அல்லவா உலகம் அவனுக்கான அடையாளமாக்கி விட்டது!

“மூர்த்தி.”

மெல்ல முணுமுணுத்தான். அவன் பெயர் அவனுக்கே அந்நியமாகத் தோன்றியது. யார் பெயரோ போல, அந்த பெயருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமேயில்லாதது போல ஒலித்தது. அம்மா சின்ன வயதில் தன்னை எப்படி அழைப்பாள் என்பது நினைவுக்கு வரக் கண்ணீர் துளிர்த்தது.

“மூர்த்தீதீஈஈஈ....”

கடைசி எழுத்தை நீட்டி முழக்கி அம்மா முடிக்கும் போது அவளது அன்பும் சேர்ந்தே வெளிப்படும். சின்னதாக அவன் விரலில் ஒரு காயம் பட்டாலும் எப்படித் துடித்துப் போய் விடுவாள். குனிந்து ஊனமான தன் இடது காலைப் பார்த்தான். இந்தக் கதியில் தான் இருப்பதைக் காண நேர்ந்தால் தாங்கியிருப்பாளா? நினைக்கையில் நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

இப்போது அவனுக்கென்று யாருமில்லை. எவரும் அவனிடம் பேசுவது கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், யார் பெயர் சொல்லி அழைக்கப் போகிறார்கள்? எதையேனும் தெரிவிக்க நினைப்பவர்கள் கூட அலட்சியமாக “ஏய்”, “இந்தா...” என்றே அவன் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்புவது வாடிக்கையாகி விட்டது. தங்களுக்குள் ‘பிச்சைக்காரப் பய, நொண்டிப் பய’ என்றும், சிலர் கொஞ்சம் கெளரவமாய் ‘பய’ போடாமல் ‘நொண்டிப் பிச்சைக்காரன்’ என்றும் தன்னைக் குறிப்பிட்டுப்  பேசுவது இவன் காதில் விழாமல் இல்லை.

கூட அமர்ந்து இவன் போலவேக் கையேந்திப் பிழைத்தவர்களும் கூட இவனிடம் அனுசரணையாய் நடப்பதில்லை. இவனது ஊனம் அதிக கருணையை வருவோர் போவோரிடம் பெற்றுத் தருகிறதென ஒருவித வெறுப்பையேக் காட்டி வந்தார்கள். ஒரேடியாக விரட்டி அடிக்காவிட்டாலும் தங்களில் ஒருவனாக ஏற்கவேயில்லை. ‘தள்ளி உக்காரு’ ‘அங்க போ’ ‘இங்க போ’ எனக் கட்டளையிட வேண்டியிருந்த கட்டாயத் தருணங்களில் கூட முகத்துக்கு நேரே கை நீட்டியோ, விரல்களைச் சொடுக்கியோ சொல்வார்களே தவிர அவன் பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள எவருமே விருப்பம் காட்டியிருக்கவில்லை. நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.

ப்படிப் பெயரில்லாமல் காலம் தள்ளி வருவது ஒரு குறையாகவே பட்டதில்லை, நேற்று வரையில்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மார்னிங் க்ளோரி - படிப்படியாக மலர்கின்ற அழகு

#1


Convolvulaceae குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பளீர் வண்ண மலரின் தாவரவியல் பெயர்: Ipomea horsfalliae. கரீபியன் மற்றும் பிரேசிலை பூர்வீகமாகக் கொண்டது.   Lady Doorly's Morning Glory, Cardinal Creeper, and Prince Kuhio Vine (இளவரசர் தன் தோட்டத்தில் விரும்பி விளைவித்ததால்) என்றெல்லாமும் அழைக்கப்படுகிற இம்மலர் இளம்மொட்டுப் பருவத்திலிருந்து விரிகின்ற அழகைக் காட்சியாகத் தருகிறேன் இப்பதிவில்:

#2


இள மொட்டுகள்  ஓரங்குலத்திலும், விரியும் பருவத்தில் பூவின் நிறத்துக்கு மாறி இரண்டு அங்குல அளவிலுமாக இருக்கின்றன.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கைவிடப்பட்டவை / Abandoned - அக்டோபர் PiT போட்டி

#1
கைவிடப்பட்டவை / Abandoned

இதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு. மாதிரிக்கு சில படங்களைப் பார்ப்போம்.

இந்நேரத்தில் ‘காலத்தால் காணாமல் போனவை (மறந்து போனவை)’ என முன்பொரு தலைப்புக் கொடுக்கப்பட்டது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தத் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாகக் காட்சிதர வேண்டும்.

புதன், 10 அக்டோபர், 2012

பேரன்பு - மலைகள் இதழில்..


தனித்த முதுமையொன்று
நிறைந்த வாழ்வு தந்து
பிரிந்த துணையை நினைந்து
நடுங்கும் விரல்களால்
காலச் சங்கலியின்
ஒவ்வொரு கணுவினையும்
கவனமாக எண்ணியபடிப்
பின்னோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்தது.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ரோஜா வார தீம் குயின்

ஃபேஸ்புக் புகைப்படப் பிரியன் குழுமத்தின் 54-வது வார தீம் ஆகிய ரோஜாக்கள் போட்டியில் ‘தீம் குயின்’ ஆகத் தேர்வாகியுள்ளது எனது ரோஜா. தீம் போட்டியில், கடந்த சில வாரங்களாக நடுவர்களால் முத்துக்கள் பத்து தேர்வாக, சக நண்பர்களால் தீம் கிங் தேர்வாகி வந்தது. இந்த முறை இரண்டு குயூன்கள்:)! நான் பதிந்த அடுக்கு ரோஜாவும், கண்மணி சங்கரின் மஞ்சள் ரோஜாவும். தேர்வு செய்த நண்பர்களுக்கு நன்றி:)! முத்துக்கள் பத்தை பதிந்த நண்பர்களுக்கும் கண்மணி சங்கருக்கும் வாழ்த்துகள்!

நன்றி புகைப்படப்பிரியன்:)!

ரோஸ் தீம் முத்துக்கள் பத்தை தேர்வு செய்த திரு Selvan Natesan அவர்களைப் பற்றி நண்பர்களுக்கு அறியத் தந்திருந்தார் மெர்வின் ஆண்டோ: “நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப்பள்ளியில் பி எஸ் சி ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வரும் திரு செல்வன் நடேசன் குடந்தை அரசு நுண்கல்லூரியில் ஓவியம் பயின்று ஒளிபடதுறையில் கடந்த கால் நூற்றாண்டுகளாக தனதார்வத்தை வெளிபடுத்தியவர்.தமிழ் ஹிந்தி ஆங்கிலம் மற்றும் மலையாளம் முன்னணி பத்திரிகைகளில் 950 படங்கள் வந்துள்ளது, பல தேசிய மாநில பரிகளை வென்றவர். 7 ஆவண படங்கள், 15 ஒளிபடக் கண்காட்சிகள் 17 ஒளிப்படக் கட்டுரைகள் ... ஆகியன இவரது அனுபவங்களில் குறிப்பிடத் தக்கன.”

நடுவராகச் செயலாற்றியது சவாலாக இருந்ததென்றும், பல காரணிகளின் அடிப்படையில் முத்துக்கள் பத்தை தேர்ந்தெடுத்தாலும் கலந்து கொண்ட ஒவ்வொரு படத்தையுமே ரசித்ததாகவும் சொன்ன திரு நடேசன், ‘பங்களிக்க வேண்டுமென்கிற ஆர்வமே புகைப்பட பிரியர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.

திங்கள் ஆரம்பித்த தீம் குயினில் தொடங்கி ஏழு நாட்களும் நான் பதிந்த ஏழு படங்கள்.

#1


திங்கள், 8 அக்டோபர், 2012

மகிழ்ச்சி எனும் பரிசு



1. எந்த வேலைக்கும் எதிர்காலம் என்றொன்று கிடையாது.   அது செய்கின்றவரிடத்து. ஒளிமயமாவது செய்திறன் பொறுத்து.

2. விழுந்து எழுதலும் உதவுகிறது எங்கு நிற்கிறோம் என்பதறிய.

3. சந்தேகங்களை சந்தேகிப்போம். நம்பிக்கைகளை நம்புவோம்.

சனி, 6 அக்டோபர், 2012

மழை - கமலா தாஸ் கவிதை (1) - அதீதத்தில்..



களையிழந்த அப்பழைய வீட்டைவிட்டு வந்துவிட்டோம்
நான் வளர்த்த நாய் அங்கு மரித்துப் போனது
அதைப் புதைத்த இடத்தில் நட்ட ரோஜாச் செடி
இரண்டு முறை பூத்திருந்த வேளையில்
மேலும் வேதனையைப் பொறுக்க மாட்டாமல்
வேரோடு அதையும் பிடுங்கி எடுத்து
வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு

புதன், 3 அக்டோபர், 2012

பயணம் (சிறுகதை) - உயிரோசையில்..


பிளாட்ஃபார்மை  நெருக்க நெருங்க அதிகரித்த இரயிலின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்தான் அருண். வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ‘சட்’டென ஆறடி உயரத்தில் ஆஜானுபாவமாகத் தெரிந்த ஒருவனின் முதுகை ஒட்டி நின்று கொண்டான். அவன் கூடவே எளிதாக ஏற முடிந்ததுடன் உடனடியாக உட்கார இருக்கையும் கிடைத்தது. தன் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.  அடித்துப் பிடித்து ஏறி அரக்கப்பரக்க இருக்கை தேடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது ஒரு அற்பப் பெருமிதம் எழுந்தது. ஆனால் அதிக விநாடிகள் நிலைக்கவில்லை. மறுபடியும் குரங்கு மனம் அன்றைய தினம் நடந்தவற்றை அசை போட ஆரம்பித்து விட்டது.

வீடு சென்று சேர ஒரு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரமும் அதையே நினைத்துக் குமைவது நடந்த எதையும் மாற்றிவிடப் போவதில்லை என்பது தெரியாமலும் இல்லை.  இருந்தாலும் மனம் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை பாய்ந்தது. சீராகப் போய்க் கொண்டிருந்தக் கூட்டுத் தொழிலில் இப்படியொரு பின்னடைவை அவன் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை நாளும் பார்ட்னர் ஆகாஷை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாகதான் நம்பியிருந்தான். சென்ற வாரம் நடந்த ஒரு பார்ட்டியில் கூடத் தன் நண்பர்களிடம் ஆகாஷ் மேல் நூறுசதவிகிதம் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பீற்றிக் கொண்டானே. நடந்த கசப்பான நிகழ்வை விட ஆகாஷ் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொடிப்பொடியாகிப் போனதுதான் தாங்க முடியாததாக இருந்தது.

‘ஆகாஷால் எப்படி அப்படிப் பேச முடிந்தது?’ ஆத்திரத்தை விட ஆச்சரியமே மேலோங்கி நின்றது. தன் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தான். தொழில் என வந்து விட்டால் வாடிக்கையாளர்களுக்கு வாக்கு எனும் ஒன்றைக் கொடுத்தேதான் ஆக வேண்டியிருக்கிறது.  அரைகுறை நம்பிக்கையோடு அடித்துப்பேசி கொடுத்து விடுகிற வாக்குகளில் சில, சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போவது எப்போதேனும் நிகழதான் செய்கிறது. ஆகாஷும்தான் அசட்டுத் துணிச்சலுடன் பலமுறை வாக்குக் கொடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் இருவரும் சேர்ந்து சமாளித்துதானே கம்பெனியின் மரியாதையைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்?

றுக்க முடியாது. அவன் சற்று ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்தான். இந்த கஸ்டமர் துரட்டுப் பிடித்தவன், வம்பு வளர்த்து ஆதாயம் பார்ப்பவன். சொன்ன நேரம் பிசகினால் தாம் தூம் என ஆகாசத்துக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறவன். எல்லாம் தெரிந்தும் ஆர்டர் கைநழுவிப் போட்டிக்காரன் கைக்குப் போய்விடக்கூடாதென்றுதானே ஒப்புக் கொள்ள நேர்ந்தது? இப்போது வேறொரு கஸ்டமரின் வேலையைத் தள்ளிப்போட்டால்தான் இதை முடிப்பது சாத்தியம். நடந்தது நடந்து விட்டது. அட்வான்ஸ் வாங்கி விட்டார்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டி நிற்காமல் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைத்தானே பார்க்க வேண்டும்? வழிகளா இல்லை?

கஸ்டமரிடம் மன்னிப்புக் கேட்டு அட்வான்ஸை திருப்பித் தருவதாகச் சொல்லலாம். மறுத்தால் ஆர்டரில் கிடைக்கக் கூடிய இலாபத்தில் சமரசம் செய்ய முன் வரலாம். வேறொருவரிடம் செய்யக் கொடுத்து வாங்கி டெலிவர் செய்யலாம். மற்ற கஸ்டமர்களில் யாரேனும் தங்கள் வேலை தள்ளிப் போவதை ஒப்புக்கொள்வார்களானால் அந்த வேலையில் இருக்கும் பணியாளர்களை இதில் ஈடுபடுத்திடலாம். எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் இரட்டை சம்பளம் என அறிவித்து வேலையை முடிக்கப் பார்க்கலாம். அவர்கள் ஆர்டர் செய்தவை தயாராகும் வரை தற்காலிகமாக ஷோரூமில் இருக்கிற ஃபர்னிச்சர்களை வழங்கி சமாளிக்கக் கேட்டுக் கொள்ளலாம். இப்படி எத்தனையோ இருக்கின்றன. இதில் எதையுமே அலசவோ விவாதிக்கவோ தயாரில்லாதவன் போல் எடுத்த எடுப்பில் சரமாரியாக அவன் மேல் குற்றச்சாட்டுகளை ஆகாஷ் வீசியதில் வெறுத்தே போய் விட்டான்.

ஆகாஷ் அனலாய்க் கக்கிய வார்த்தைகள் கடந்த இரண்டு மணிநேரமாக மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன: “போதும்பா. பிஸினஸுக்கு பிரச்சனைய மட்டுமே கொண்டு வர்ற ஒம்மாதிரி பார்ட்னரோடு காலந்தள்ளுனதெல்லாம் போதும். யாரைக் கேட்டுக்கிட்டு ஒத்துக்கிட்ட? என்ன தைரியத்துல ஒத்துக்கிட்ட? பாடுப்பட்டுப் பாத்துப் பாத்து வளத்த பிஸினஸை குழிதோண்டிப் புதைக்கறதுலயே குறியா இரு.”

 ‘யார்? நானா அவனா? பாவி. என்னக் கழட்டி விடச் சந்தர்ப்பம் பாத்துட்டே இருந்துருக்கான். இதப் புரிஞ்சுக்காத மடையனா இருந்துட்டனே. யோசிக்க யோசிக்கதான அவன் பேச்சுக்குப் பின்னாடியிருக்குற அர்த்தம் பிடிபடுது’

மொபைல் ஒலித்தது. ஆகாஷ்தான். அவன் குரலைக் கேட்க மட்டுமல்ல அவன் பெயர் மிளிர்வதைக் கூட பார்க்கப் பிடிக்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

‘பேசறதெல்லாம் பேசிட்டு என்னத்துக்கு ஃபோன் பண்ற? இன்னும் பேசி என் கோவத்தைக் கிளறதுக்கா? எல்லாம் எனக்குப் புரிஞ்சு போச்சு. ஒனக்கு என்னக் கழட்டி விடணும்ங்கிற நெனப்பு வந்துட்டு. நீ கூப்ட காரணத்துக்காக மொழிதெரியாத ஊருக்கு ஒங்கூடவே வந்து, முழி பிதுங்கித் தொழில் படிச்சு, என் ஆயுசுல அஞ்சு வருசத்தை இந்த பிஸினஸுக்கு மொதலாப் போட்டிருக்கேன். நம்ம உறவு நிலைக்கும்னு நினைச்சதுல வேணா நா முட்டாளா இருந்திருக்கலாம். ஆனா அசட்டுத்தனமா ஒங்கிட்ட அத்தனையையும் தூக்கிக் கொடுத்துட்டு விலகிப் போயிருவேன்னு மட்டும் நினைக்காதே...’

ஆகாஷ் வீசிய அமில வார்த்தைகள் மறந்துபோய், எப்படி அவனைக் கழற்றி விட்டுத் தான்  பிஸினஸை ஆக்கிரமிப்பது எனும் சிந்தனை வந்தது.

‘அவ்ளோ ஈஸியா விட்ற மாட்டேன் ஆகாஷ்...’ தன்னை அறியாமல் முஷ்டியை மடக்கி ஓங்கித் தொடையில் தட்டிக் கொண்டதில் பக்கத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்த வயதான ஆசாமி திடுக்கிட்டு ஒரு கணம் நிமிர்ந்து, கண்ணைத் திறக்காமலே மறுபடி தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்.

ருணின் கவனம் அந்த ஆள் மீது திரும்பியது. அவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.

திங்கள், 1 அக்டோபர், 2012

தூறல்: 9 - திருவாரூர் கல்லூரியில் ‘முத்துச்சரம்’; ஈரோடு ‘சுப்ரீம்’ இதழ்; புகைப்பட பிரியன் ‘தீம் கிங்’

பிப்ரவரி மாதம் உங்களுடன் பகிர்ந்து கொண்டது:

இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு

2011, மார்ச் மாதத்தில் முனைவர் இளங்கோவன் அவர்கள் தனது நண்பர் பேராசிரியர் பட்டாபிராமனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு என்னைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுவதாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து பேராசிரியர் பட்டாபிராமன் கேட்டுக் கொண்ட விவரங்களை அனுப்பி வைத்திருந்தேன். தென்காசியைச் சேர்ந்த இவர் புளியங்குடியில் இருக்கும் மனோ கல்லூரியில் பணியாற்றி வருகிறார். 

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் “இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு” என்பது குறித்தத் தன் ஆய்வின் ஒரு பாகமாக எனது படைப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்ததுடன், ஆய்வு அறிக்கையில் என் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு மற்றும் வலைப்பூ குறித்த விவரங்களைச் சமர்ப்பித்திருந்ததையும், இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது பகிர்ந்திட விரும்புவது:

திருவாரூர் கல்லூரியில் முத்துச்சரம்

21 செப்டம்பர் 2012 அன்று அழைப்பின் பேரில் திருவாரூர் ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரிக்குச் சென்று இணையமும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றியிருக்கிறார் முனைவர். பட்டாபிராமன். வலைப்பூ தொடங்குவது, பதிவிடுவது, திரட்டிகளில் இணைப்பது போன்றனவற்றின் அறிமுகமாகவும் அமைந்த இரண்டரை மணி நேர  உரையில், இணையத்தில் பெண்களின் செயல்பாடு என்பதன் கீழ் உதாரணத்துக்கு ‘முத்துச்சரம்’ வலைப்பூவை எடுத்துக் கொண்டு எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், இணைய இதழ்களில் என் படைப்புகளின் பங்களிப்பு ஆகியன குறித்து விளக்கியதாகக் குறிப்பிட்டார். எப்படி அவற்றைத் தொகுத்து வலைப்பூவை நிர்வகிக்கிறேன் என்பதைக் காட்டித் தந்ததாகவும் சொன்னார்.

மாணவியர் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர் என்றும் எனது புகைப்படத் தொகுப்புகளை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர் என்றும் தெரிவித்தார். இலக்கிய ஆர்வத்துக்கும் பிற திறமைகளுக்கும் இணையத்தில் இருக்கும் வழிமுறைகள் அவர்களுக்குப் புதிதாக இருந்ததாகவும், அவர்களில் ஒரு சிலருக்கு இன்னும் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்றும் ஆச்சரியமாகக் குறிப்பிட்டார். கல்லூரி செய்த ஏற்பாட்டின் மூலமாக விவரங்களை அறிய வந்திருக்கும் இவர்களில் பலர் இணையத்தில் எழுத வருவார்களேயானால் மகிழ்ச்சி.

முனைவர். பட்டாபி ராமன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி.
***


னது “சீற்றம்” கவிதையை வெளியிட்டிருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் “சுப்ரீம்” இதழுக்கு நன்றி!


சீற்றம்

ஆறுவதுசினம்
ரெளத்திரம் பழகு

முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
தேவைகள் சந்திக்கும்
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
அடங்கிய ரகசியமாய்
சீற்றத்தின் சூத்திரம்

சரியான நபரிடத்தில்
சரியான காரணத்துக்கு
சரியான நேரத்தில்
சரியான கோணத்தில்
சரியான அளவிலும்
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

புரிந்தால்
வாழ்வோடு வசப்படும் வானமும்.
 ***


ன்றைய நிலவரப்படி 2127 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஃபேஸ் புக் புகைப்பட பிரியன் குழுமம் 54 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு தீமை அறிவிக்கிறது இங்கே: மன்டே டு சன்டே தீம்ஸ்  .

தீமுக்கு தகுந்தததாக தினம் ஒன்றென வாரம் ஏழுபடங்கள் குறிப்பிட்ட ஆல்பத்தில் பகிர்ந்து வரலாம் உறுப்பினர்கள். உற்சாகமாக அதில் கலந்து கொண்டு வந்தவர்களை மேலும் ஊக்கப் படுத்த கடந்த நான்கு வாரங்களாக பகிரப்பட்டப் படங்களிலிருந்து  “முத்துக்கள் பத்து” தேர்வாகி அறிவிக்கப்படுவதுடன், அதிக உறுப்பினர்களால் விரும்பப்படுகிற படம் ‘தீம் கிங்’ ஆகக் கெளரவிக்கப்படுகிறது.  ‘அலைகள்’ தீமுக்கு நடுவராக செயலாற்றியது சுவாரஸ்யமான அனுபவம். மற்ற சில வாரங்களின் முத்துக்கள் பத்தில் இடம் பெற்ற எனது படங்கள்:


ஊதா theme_ல்:

வட்டம்  theme_ல்:

துளித்துளி மழைத்துளி
துள்ளும் ஒரு துளி


பாலம்  theme_ல்:

உறுதியான பாலம்:)!


இந்த வாரம் என்ன தீம்:)?
 ரோஜா(க்கள்)!

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறது புகைப்பட பிரியன். இந்த (அக்டோபர்) மாதம் முதல் அனைத்து தீம்களிலும் மொத்தமாக அதிக உறுப்பினர்களால் விரும்பப்படுகிற ஒரு படம் (அதாவது தீம் கிங்ஸில் சிறந்த கிங்) “பெஸ்ட் போட்டோக்ராபி டுடே” இதழில் நவம்பர் மாதம் முதல் வெளி வர இருக்கிறது! ஆர்வத்துடன் உறுப்பினர்கள் படம் எடுக்கவும் தீம் போட்டிகளில் கலந்து கொள்ளபவர்களுக்கு ஊக்கம் தரவும் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது புகைப்பட பிரியன்.

இதற்காக  Best Photographytoday  பத்திரிகை குழுமத்திற்கு புகைப்பட பிரியன் சார்பில் நன்றி தெரிவித்திருக்கிறார் மெர்வின் ஆன்டோ. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று உங்கள் திறமைகளைப் பலரறியச் செய்திடுங்கள்!
***


படத்துளி:
அலையில் ஆடும் விருட்சங்கள்

 ***


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin