நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது. இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘
பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.
ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..
#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்
தமிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
#2
“அந்தக் காலம்... அது அது அது...”